காடுகளை   நம்முன்னோர்   காத்த   தாலே

            காலத்தில்   பருவமழை   பெய்த  தன்று

நாடுகளுக்   குள்ளேயும்   மரம்வ   ளர்த்து

            நல்லபடி   சூழ்நிலையைப்   பாது   காத்தார்

வீடுகளின்   பின்புறத்தில்   தோட்டம்   வைத்து

            விளைவித்தார்   தூய்மையான   காற்றை   யங்கே

பாடுபட்டு   பயிர்வளர்த்தார்   வயல்க  ளெல்லாம்

            பசுமையொடு   குலுங்கியது   செழிப்பைத்   தந்தே !

,

சீர்போல   இயற்தைதந்த   ஆற்றை   யெல்லாம்

            சிதையாமல்   கரையமைத்துச்   சிறப்பாய்க்   காத்தே

ஊர்தோறும்   ஏரிவெட்டி   மழைநீர்   தேக்கி

            உயர்நோக்கில்  நிலத்தடிநீர்   பெருக   வைத்தார்

ஊர்ந்துவரும்   எறும்புக்கும்   அரிசிக்   கோல

            உணவளித்துக்   குருவிகளும்   கூடு   கட்டப்

பார்த்ததனை  வீட்டிற்குள்   பாது   காத்துப்

            பரிவுடனே   பிறவுயிரைப்   பேணி   நின்றார் !

,

முன்னோர்கள்    நமக்களித்த   செல்வம்   தன்னை

            முறையாக   நாம்காத்துப்   பேணி   டாமல்

தன்னலத்தால்    வயல்களினை   மனைக   ளாக்கித்

            தாறுமாறாய்த்   தொழிற்சாலை   கட்டி   வைத்துப்

பொன்முட்டை   தந்தகாட்டின்  மரங்கள்   வெட்டிப்

            பொட்டலாக்கிச்   சுற்றுச்சூழல்   மாசு   செய்து

நன்நதியில்   கழிவுநீரைக்   கலக்க  வைத்து

            நறுங்காறறில்   புகைகலந்து   நஞ்சாய்  செய்தோம் !

,

ஏரிநீரைத்   தூர்த்துவிட்டு   நிலத்து  நீரை

            எந்திரத்தால்   தினமுறிஞ்சி   காலி   செய்தோம்

வாரிதியை   அசுத்தமாக்கி   வானில்   ஓசோன்

            வளையத்தை   ஓட்டையாக்கி   வெப்பம்   செய்தோம்

வேரினைப்போல்   உள்ளதைநாம்   காக்கா   விட்டால்

            வெறும்மண்தான்   நம்முடைய   சந்த   திக்கு

காரிருளில்   பூமித்தான்   மூழ்க்கிப்   போகக்

            கண்ணிழந்த   பிள்ளைகளாய்   ஆவர்   நாளை !

000

பாவலர் கருமலைத்தமிழாழன்

இயற்பெயர் கி.நரேந்திரன். சொந்த ஊர் கிருட்டிணகிரி (கருமலை) இதுவரை 27 கவிதை நூல்களும் பல விருதுகளும் பெற்றிருக்கிறார்.

மற்ற பதிவுகள்
Sorry no related post found

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *