வேகத்தடைகள்

வரிசையாக ஒவ்வென்றாய்

மேல் கீழ் இடது வலது

உள் வெளி சரிபார்த்து அடுக்கி வைக்கிறேன்

திடீரெனப் புயலாய் வருகிறார்கள்

எல்லாவற்றையும் களைத்துப்போட்டுவிடுகிறார்கள்

மீண்டும்

அடுக்கி வைப்பதற்குள்

வாழ்வின் வேரில் பூச்சிபிடித்துவிடுகிறது

ஒவ்வொரு இலையாய் உதிர்ந்து

கிளைகள் பட்டுப்போய்விடுகின்றன 

000

நான் யார்

இப்போழ்தைக்கு 74 கிலோ எடை

புதுவையில் இருக்கிறேன்

முன்பக்கம் முடி உதிர்ந்த சிறு வழுக்கைத்தலை

வளர தொடங்கியிருக்கும் சிறிய தொந்தி

அவ்வப்பொழுது திக்கிப்பேசும் குரல்

தோல் பழுத்த மஞ்சள் நிற இலையின் நிறம்

பிறந்ததிலிருந்து 28 ஆண்டுகளின் நினைவுகளைச் சுமப்பவன்

மேலும் ஒவ்வொரு நாளும்

நினைவுகள் வழி

காணும் காட்சிகளின் ஈர்ப்பு வழி

வாழ்வின் ஒவ்வொரு நாளிலும் வாழ்பவன்

000

அன்பிற்காக உழைத்தல்

ஒன்று கொடுத்தால்

இரண்டு கொடுப்பது

இரண்டு கொடுத்தால்

நான்கு கொடுப்பது      

நான்கு கொடுத்தால்

எட்டு கொடுப்பது

எட்டு கொடுத்தால்

பதினாறு கொடுப்பது

கொடுக்கக் கொடுக்கக் கொடுப்பது

பெற பெற திருப்பியளிப்பது

நிலம் நனைத்து ஊற்றெடுக்கும்

மழையெனக் கொடுப்பது

வாங்கிய கடனென வட்டியுடன்

கேட்கும் முன்பே திருப்பியளிப்பது

000

பசி

தேட வேண்டும் என்றானபிறகு

யாரிடம் வழி கேட்டாலென்ன

யாரைச் சந்தேகித்தாலென்ன

எங்கு இளைப்பாறினாலென்ன

எங்குத் தோண்டினாலென்ன

எங்குச் சென்றாலென்ன

எப்படி பேசினாலென்ன

எப்படி ஓடினாலென்ன

எவ்வளவு நேரம் காத்திருந்தாலென்ன

பசிக்குக் காத்திருப்பவனின் வயிறென

எப்பொழுதும் வேண்டியதெல்லாம் பதில்களும்

தேடும் பொருளும்தான்

000

நெரிசல்களால் குறுகும் பாதை

நான் மட்டுமே

காடுகளில் பாலை வனங்களில்

அலைந்து திரிய தொடங்கினேன்

எல்லோரும் அவரவர் பாதையில்

வேக வேகமாகச் செல்கின்றனர்

நான் மட்டும்

இவர்கள் பாதையில் சில பல நேரம்

அவர்கள் பாதையில் சில பல நேரம்

இவர்கள் வீட்டில் சில பல நேரம்

அவர்கள் வீட்டில் சில பல நேரம்

இவர்கள் வாகனங்களில் சில பல நேரம்

அவர்கள் வாகனங்களில் சில பல நேரம்

இவர்கள் வெளிச்சத்தில் சில பல நேரம்

அவர்கள் வெளிச்சத்தில் சில பல நேரம்

திரும்பிப் பார்த்தேன்

என் பாதையில் சுவடுகளே இல்லை

இன்னும் சிறிது தூரம் சென்றுபார்த்தேன்

என் பாதையெங்கும்

யார் யாரோவின் பாதைகள் இருக்கின்றன

000

உலகை உட்செரித்தல்

எது நடந்தால்

எங்கிருந்தால்

எப்பொழுதாயிருந்தால்

என்ன இருந்தால்

எப்படி இருந்தால்

யார் உடனிருந்தால் என்ன

உயிரோடிருக்க வேண்டும்

இதற்குப் பிறகும்

இனியும்

உயிரோடிருக்க வேண்டும்

எல்லாவற்றையும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்

கிணறு வெட்டி ஊற்றுக்கண் கண்டெடுத்து

நீர் நிரப்புவதாய்

அகத்தின் நிலத்தில் அவ்வப்பொழுது

கிணறு வெட்டி பலம் நிரப்பி

உலகை ஒரு நூறு முறை வலம்வர வேண்டும்

000

இரா.இராகுலன்

செஞ்சியை அடுத்த மேல்மலையனூர் பகுதியைச் சேர்ந்தவர்.தமிழை விருப்பக் கல்வியாகத் தேர்வு செய்து இளங்கலைத் தமிழ் படிக்கும் காலத்தில் கடவுளின் கடவுள் என்ற கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார். முதுகலைத் தமிழ் படிக்கும் பொழுது பாதியில் நிறுத்தப்பட்ட ஓவியம் என்ற தலைப்பில் மற்றுமொரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டவர்.சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் படிப்பை முடித்து தற்பொழுது புதுவைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு வருகிறார்.தளம்,உயிர் எழுத்து,காற்றுவெளி, கொலுசு,கீற்று,பேசும் புதிய சக்தி என இதழ்களில் கவிதை எழுதி வருபவர்…

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *