வேகமெடுக்கும் வாழ்க்கை

முன்பெல்லாம் உறவினர்கள் யாராவது

இறந்து விட்டால்

உடனே பக்கத்து ஊருக்கு சொல்லி அனுப்ப

ஆள் அனுப்பினோம்

இப்போதோ

வாட்ஸ் அப் பேஸ்புக்

என்னும் சமூக வலைதளங்கள்

தான் அந்த வேலையை செய்கிறது

நீர் மாலை எடுக்க ஊர்க் கிணறுக்கு சென்று

தண்ணீர் எடுத்தோம்

இப்போதோ

ஊர் கிணறுகளும் இல்லை

நீர் மாலை ஊர்வலங்களும் இல்லை

தண்ணீரை விலைக்கு வாங்கி

தலைக்கு மட்டும் தெளித்து

நீர்மாலை சடங்குகள் நிறைவேறுகிறது,

பூதவுடலை சுமக்க

வாடாச்சி மரங்களை வெட்டி

பாடைக் கட்டுவார்கள்

பாடை சுமக்க வாட்ட,சாட்டமான இளைஞர்களும் வருவார்கள்

பாடைகளும் கட்டுவதில்லை

வாடாச்சி மரங்களும் இல்லை

பூத உடலை தூக்கிக்கொண்டு இடுகாட்டுக்கு செல்லும் வழியில்

வரும்

ஒவ்வொரு முச்சந்திகளிலும்

கோவிந்தா கோஷங்கள் எழுப்பிய வண்ணம்

பாடை முன்னும் பின்னும் மூன்று முறை வலம் வரும்

இப்போது

குட்டி யானை வாகனங்களின் உபயத்தால்

மூன்று முறை

ரிவர்ஸ் கியர் மட்டும் போடப்படுகிறது

ஊர் கடைசி வரை வரும்

இறுதி ஊர்வலங்களில் கூட

கூட்டம் என்னவோ கொஞ்சம் நஞ்சம் தான்

நல்லதுக்கு பார்க்கிற முடிகிறக் கூட்டம்,

கெட்டதுக்கு ஒன்றும் பார்க்க முடிவதில்லை,

சந்தனப் பேழை

பேருந்தின் கூட்ட நெரிசலில்

நின்று பயணித்துக்

கொண்டிருக்கும் போது 

அந்த கருப்பு ஜீன்ஸ் இல்

ஒரு பிஞ்சுக் காலின்

முத்ததை உணர்கிறேன்,

அந்த வானகத்து

தேவதை பூமி வந்து

பத்து மாதகளுக்குள்

இருக்கலாம்,

அவள் தகப்பனின் மடியில்

மல்லாக்கப் படுத்துக் கொண்டே

விட்டம் பார்க்கிறாள்,

அவள் கண்களின் வெளிச்சம்

பார்ப்பவர்களுக்கு ஒரு

புதிய நம்பிக்கையைக்

கொடுக்கிறது,

ஆடி வரும் பேருந்தில்

அடிக்கடி அவள் திரும்பி

வடக்கும், தெற்க்கும்

மாறி, மாறி தான்

உடல் இதழ்களால்

கை, கால்களை

அசைத்த வண்ணம்

இரு வேறு திசைகளை

கட்டிப் பிடிக்க முயல்கிறாள்

அவளால் பிஞ்சுக் கை விரல்களைக்

கொண்டு அவள் கால்களைப்

பிடித்து எளிதில்

விளையாட முடிகிறது,

அவளுடன் பயணித்த

சிலர் கீழே

இறங்கையில்

புதிய உலகிற்க்கு

சென்றிருக்கலாம்,

பட்டாம்பூச்சி நினைவுகள்

பள்ளிக்குச் செல்லும் முன்புக்

காலை உணவாகப் பழையச் சோற்றுக்குத் தொட்டுக்கிட

 விறகடுப்பில் சாலைக் கருவாடை சுடும் போது

அவசரத்தில் நெருப்புக்குள் விழுந்த கருவாடுகள் தீயில் கருகிப் போவது உண்டு

புது பம்பரம் வாங்கிய உடனே

கொல்லாசாரியின் பட்டறைக்குப் போய் 

அதில் உள்ள ஆணியை பிடுங்கி விட்டு, மற்றப் பம்பரத்தைப் பதம் பார்க்கும் யாக்கர் ஆணியை பொருத்துவது உண்டு,

ஓரே ஒரு பூப் போட்ட

கோலிக் காய்

வாங்கிட்டு வந்து

அதை அடிக் கோலிக்காய் ஆக்கி

கால் சட்டை பை நிறைய

கோலிக்காய்கள் நிரப்பியதுண்டு,

சாலையோர தேநீர் கடையைச்

சுற்றிக் கிடக்கும்

சிகரெட் அட்டைகளைப் பொறுக்கி

பணம் விளையாட்டு,

விளையாடும் போது,

அடுக்கி வைத்த அட்டைகளை

உடைந்துப் போன

ஒரு மொசைக் கல்லில்

ஓரே சீவலில் அடிக்கட்டை வரைக்கும்

மண்னோடு மண்ணாக வெட்டி

எறிவதுண்டு,

லட்சாதிபதியாக்காமல்

ஏமாற்றி விட்ட

லாட்டரி சீட்டுகளை

அடுக்கி ரப்பர் பாயிண்ட் போட்டு

நாலு பேரைக் கூப்பிட்டுக் கொடுத்து

வங்கி மேலாளர் ஆனதுண்டு,

இப்போதோ

தொலைத்த பால்யத்தை

இன்னும் செரிக்காமல் 

வீட்டின்

கதவுகளை சாத்திக் கொண்டு

கைப்பேசியில்

காவலிருக்கிறேன்,

இரா. மதிராஜ்,

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டைக் கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்டவர் , இயந்திரப் பொறியலில் பட்டையப் படிப்பையும், வணிக ஆள் முறையியலில் முதுகலை பட்டமும் பெற்றவர்,தற்போது காங்கேயத்தில் தனியார் நூல் ஆலையில் உற்பத்தி மேலாளராகப் பணிபுரிகிறார், தமிழ் இதழ்களில் கவிதை மற்றும் சிறுகதைகள் எழுதி வருகிறார்,இதுவரை ஹைக்கூ பூங்கா மற்றும் மனம் பேசிய மௌனங்கள் என்ற இரண்டுக் கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டு உள்ளார், சமூக வலைத்தளங்களில் இவரது கவிதைகளைப் வாசிக்கலாம்,

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *