மீண்டும் என் தொட்டிலுக்கு….

1.

முன்பு என் அழுகையை நிறுத்த

தாலாட்டுப் பாடித் தூங்க வைத்தீர்கள்

இப்போது

என்னை அழ வைத்து விட்டு

நீங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறீர்கள்,

2.

வீட்டில் அழைப்பு மணி செயல்படாமல் இருக்கும் போது

அம்மா என்றே அழைக்க வேண்டும் என்று ஆசையாய் இருப்பீர்கள்,

3.

நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளுக்காய் ஜீவனைக் கொடுக்கிறான்

ஒரு நல்லத் தாயோ

ஜீவனுடன்,ஆவியையும் சேர்த்துக் கொடுக்கிறாள்,

4.

வாயில்லா ஜீவன்களை நான்

கண்டும் காணாமல் போகிறேன்

அஃறிணை என்பதற்காய் அல்ல,

அவை

அம்மா என்றழைக்கும் போது

நான் தனிமையே உணர்வதால் தான்,

5.

என் இதயமென்னும் அடுப்பில்

உங்களைப் பற்றிய நினைவுகளையே

விறகுகள் ஆக்கி வெளிச்சமேற்றிக்

கொண்டிருக்கிறேன்,

6.

இப்போதும் மணல் தரையைப் பார்த்தால்

மிதியடிகளைக் கழட்டி விட்டு

வெறும் கால்களில் நடக்கிறேன்,

உங்கள் காலடிப் பட்ட

என் தாய் மண்

என் உடலில் மீண்டும் ஒருமுறை

ஓட்ட வேண்டும் என்பதால்,

7.

கண்ணீரின் முதல் துளி

உப்பாய்க் கரிப்பது

இன்னும் கடல் போன்ற சோகம்

கண்களுக்குள் இருக்கிறது

என்பதை உலகுக்கு சொல்வதற்க்கு தான்,

8.

மீண்டும் ஒருமுறை என் தொட்டிலுக்கு

மணிக் கட்டுகிறேன்

அதன் ஓசையைக் கேட்டாளாவது

நீங்கள் வருவீர்களா ?

அம்மா…

000

பார்வை

கொஞ்சம் பழங்கள்,

இனிப்புக் காரங்கள்,

கரும்புச்சாறு,

நிலக்கடலை,

என ஷாப்பிங் முடிந்து வெளியே வரும் போது

பேருந்துகள் வெளியேச் செல்லும்

பாதை ஓரத்தில்

அந்த புதியப் பேருந்து நிலையத்தில்

கேட்கிறது

ஒரு பழைய பாடலின் வரிகள்

“நீ தானே புன்னகை மன்னன்” என்று

விழிகளுக்கு இன்னும்

ஒளி கிடைக்காவிட்டாலும்

குரல் வழியாய் பார்த்துக்

கொண்டுதான் இருக்கிறது

சமூகத்தை

இவர்களது கண்கள்

மாற்றுத்திறனாளிகள் அல்ல

மற்றும் ஓர் திறனை

கூடுதலாகக் கொண்டவர்கள்

இவர்கள் வாழ்க்கை வலித்தாலும்

இவர்கள் வரிகள் யாரையும் காயப்படுத்துவதில்லை,

அவர்கள் முன்பிருக்கும்

உண்டியல் நிறையும்

வேகத்தை வைத்து

கணக்கிடப்படுகிறது

சமூகம் தன் மீது கொண்ட

பார்வையை….

000

ஈகை

மளிகைப் பொருட்களை

வீட்டுக்கு வாங்கி வந்தவுடன்

பொட்டலங்களை உடைத்து டப்பாக்களில் கொட்டுகிறேன்

நிலக்கடலையில் சிறிது கீழே விழுந்தது

துவரம் பருப்பில் சிறிது கீழே விழுந்தது

பொட்டுக்கடலையிலும் ஒன்று,இரண்டு

சர்க்கரையிலும் சொல்ல வேண்டாம்

காசு செலவழித்து இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வாங்கிட்டு வந்து

டப்பாவில் கூட சரியாகக்

கொட்ட முடியவில்லை

என்று வருத்தப் படும்போது

தரையைக் கூட்டி வெளியேக் கொட்டியதும்

சிறிது நேரத்தில்

பல்லுயிரிகள் தின்று கொண்டிருந்தது, ஒருவேளை உணவாய்

திறமைகள்

வெற்றிப் பெறுவதற்கு

மாத்திரம் போதும்,

உலகம் இயங்குவதற்குப் போதாது

000

இரா. மதிராஜ்

தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடியில் இருந்து  திருநெல்வேலி செல்லும் வழியில் உள்ள புதுக்கோட்டைக் கிராமத்தில் பிறந்து, கீழக்கரையில் கல்லூரிப் படிப்பை முடித்து தற்போது காங்கேயத்தில் உள்ளத்  தனியார் நூல் ஆலையில் பணிபுரிகிறேன், தமிழ் இதழ்களில் கவிதை மற்றும் சிறுகதைகள் எழுதி வருகிறேன், இது வரை கொலுசு மற்றும் காற்றுவெளி போன்ற இலக்கிய மாத இதழ்களில் எனது சிறுகதைகள் வெளி வந்திருக்கிறது, அனைத்து தமிழ் எழுத்தாளர்களின் படைப்பையும் வாசிக்கவும், நேசிக்கவும் செய்கிறேன் .

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *