அந்தப் பெரிய வானத்தைக்

கூர்ந்து கவனிக்க வைக்கிறது

சிட்டுக் குருவிகளின் சத்தம்.

*

பிரியாணி பொட்டலங்கள்

வீட்டுக்கு வந்து சேர்ந்தது தான் தாமதம்

வெளியே எட்டிப் பார்க்கும்

செவலை நாய்,

*

வண்டி சாலைக்கு வந்ததும்

குண்டு, குழிகள்

வாழ்க்கைப் பாடத்தை

நன்கு உணர்த்தின,

*

எங்கோத் தூண்டப் படுகிறது

நெருப்பு,

இங்கே தெரிகிறது

கொஞ்சம் வெளிச்சம்,

*

எனதுக் கண்ணீர்

உதவுகிறது

உனது ஓவியத்தை

அழகாக வரைய,

*

கத்தி விற்பனையென்றாலும்

“கத்தி, கத்தி” தான்

விற்க வேண்டியத்திருக்கிறது,

*

இன்று காலில் குத்தும்

நெரிஞ்சில் முள்

செடியாய் இருக்கும் போது

இதே காலில்

மிதிப் பட்டது தான்,

*

கேட்கிற எவனும் பெற்றுக் கொள்கிறான்

லஞ்சம்

*

உள்ளவருக்கேக் கொடுக்கப் படுகிறது

பணம்

*

உடல் நலத்திற்கு ஆரோக்கியமான

சிறு தானியங்கள்

கிடைக்கிறது

“பார்”களில்,

*

அப்புறப் படுத்தப்படுகிறது

கைதியின் அறையில்

சிலந்தி வலை

*

குருவிகள் கட்டி விட்டு

வாழாமல் போன

கூடுகளில்

கொஞ்சம்

தும்பு, பஞ்சு

மட்டுமல்ல

அதன் இதயமும்

இருக்கலாம்

*

என் டையிரின் கடைசிப் பக்கம்

,

இதில் எழுதாமல்

விட்டு விட்ட பெயர்கள்

சில இருக்கலாம்

அதைக் காலம் தான்

தன் நினைவில்

வைத்திருக்கும்

,

இதுவரை நடந்தவற்றை

நான் எழுதி இருக்கிறேன்

இனிமேல் நடப்பவற்றை

நீ மட்டுமே எழுதப் போகிறாய்

,

அட்டை முதல் அட்டை வரை

எல்லாம் உண்மை என்றுச் சொல்லவில்லை

ஆனால்

எல்லாம் பொய்யில்லை

என்பது மட்டும் உண்மை

,

வாழ்க்கை திறந்தப் புத்தகம் என்கிறார்கள்

ஆனாலும்

மறைப்பதற்கு ஏதோ ஒன்று இருக்கத்தான் செய்கிறது

,

இந்த டைரியில் என்னைப்

பற்றியக் குறிப்பு

சிறிதாகவும்,

உன்னைப் பற்றிய

செய்திப் பெரிதாகவும்

இருக்கலாம்

ஆனால்

உன்னைப் பற்றிய

எனது சிந்தனைகளே

பெரிது

,

வாழ்க்கையை வாசிப்பவரைக்

காட்டிலும்

வாழ்க்கையை யோசிப்பவர்களே

இங்கு

அதிகம்

.

ஆகவே நான்

எழுதியிருப்பது

கடல்லல்ல

துளி தான்.

00

இரா. மதிராஜ்

இரா. மதிராஜ் தூத்துக்குடி மாவட்டம் திருநெல்வேலிச் செல்லும் வழியில் உள்ள புதுக்கோட்டைக் கிராமத்தில் பிறந்தவர் கல்லூரிப் படிப்பைக் கீழக்கரையில் முடித்துவிட்டு தற்போது காங்கேயத்தில்

தனியார் நூல் ஆலையில் பணிபுரிகிறார்

ஹைக்கூ பூங்கா,மனம் பேசிய மௌனங்கள், நிலா மகளுக்கு ஒரு தோழி என்று மூன்றுக் கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்

பல்வேறு இதழ்களிலும் சமூக வலைதளங்களிலும் இவருடைய கவிதைகள் மற்றும் சிறுகதைகளை வாசிக்கலாம்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *