பார்வதி சப்பாத்திகளை எண்ணிப் பார்த்தாள்.  பதினைந்து இருந்தன.  வட்டமான ஒரு ஸ்டீல் பாத்திரத்தில் அவற்றை எடுத்து வைத்தாள். அடுப்பின் மேலிருந்த கடாயில் உருளைக்கிழங்கு முழுவதுமாக வெந்துவிட்டதா என்று அவற்றில் ஒன்றை எடுத்துத் தொட்டு, நசுக்கிப் பார்த்துவிட்டு, போதும் என்று அடுப்பை அணைத்துவிட்டாள். மகனும் மகளும் மத்தியானமோ மாலையிலோ சாப்பிட இது போதும்.  இரவு உணவைப் பிறகு தயாரித்துக் கொள்ளலாம்.  இப்போது வேலைக்குக் கிளம்பினால்தான், மூன்று வீடுகளின் வேலையை முடித்துவிட்டு, மதியம் கொஞ்ச நேரம் ஓய்வெடுக்க முடியும்.

டில்லியின் அக்டோபர் மாத இதமான வெய்யிலிலும், அவளுக்கு வேர்த்தது.  அவசர அவசரமாக டிரெங்குப் பெட்டியைத் திறந்தாள். இருக்கிறவற்றில் கொஞ்சம் எடுப்பாகத் தெரிந்த சேலையை எடுத்துக் கட்டிக் கொண்டு முந்தானையால் தலையை மூடிக்கொண்டு, சுவரில் மகள் வைத்திருந்த கண்ணாடியில் முகம்பார்த்து மீண்டும் ஒரு முறை உடைகளைச் சரி செய்து கொண்டு வெளியே கிளம்பினாள்.  இன்னும் கொஞ்ச நேரத்தில் அவளுடைய மகள் வந்துவிடுவாள்.  அந்தக் குறுகிய சந்தில் ஒவ்வொரு வீட்டையும் கடக்கும் போது ஒவ்வொரு வாசனை தூக்கலாக இருந்தது.  எண்ணெயில் வதங்கும் உருளைக்கிழங்கு, வேகிற  முங்ஹ் தால் (பாசிப் பருப்பு), கத்தரிக்காய், பாகற்காய், வெந்து கொண்டிருக்கும் சப்பாத்தி, கடைசியில் ரோட்டுக்கு அருகில் வரும் போது, கழிவுநீர் ஓடையின் நாற்றம். அரசின் அங்கீகாரமில்லாத குடிசைப் பகுதிக்கு அவர்கள் கொடுக்கும் பரிசு.  நீங்கள் இருக்க வேண்டிய இடம் என்று காட்டுகிறார்கள்.  எல்லாம் சட்டத்தின் படி நடக்கிற நாடு இது அல்லவா!  

அரை கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த பலமாடிக் கட்டிடத்துக்குள் பார்வதி நுழைந்தாள்.  அவளுடைய மெலிந்த தேகத்தைக் கண்டு யாரும் அவள் மீது கருணை கொள்வார்கள்.  வாட்ச்மேன் அவளைப் பார்த்துச் சிரித்தான். தினசரி வழக்கம். லிஃப்டில் ஏறி நாலாவது மாடியில் இறங்கி, 429 எண் கதவு வீட்டுக்குப் விரைந்தாள்.  எதிரே வந்த ரேஷ்மா லிஃப்டைப் பிடிக்க ஓடினாள். 

டாக்டரம்மா வீட்டில் இருக்க மாட்டாள்.  காலை ஒன்பது மணிக்கு கோல்மார்க்கெட்டில் இருக்கும் கிளினிக் போய்விடுவாள்.  அவரது கணவர் பாண்டே காலை ஏழு மணிக்கே ஆஸ்பத்திரிக்குப் போய்விடுவார்.  அந்த ஒரு நொடியில் தன் காலிலிருந்த கிழிந்த ரப்பர் செருப்பைப் பார்த்தாள்.  தேய்ந்து தேய்ந்து தாள் மாதிரி ஆகிவிட்டது.  முழுதாகக் கிழியும் வரை அதை உபயோகிக்க வேண்டும். அடுத்த மாதம் வேறொன்று வாங்க வேண்டும். இப்படி போன மாசத்திலிருந்து யோசித்துக் கொண்டிருந்தாள். வாசலில் நின்ற சில நொடிகளில் இவ்வளவுதான் யோசிக்க முடியும்.  பிறகு வேலை வேலை, வேலை.

 பார்வதி அழைப்பு மணியை அழுத்தினாள்.  கதவின் சிறு துவாரம் வழியே பார்ப்பது  டாக்டரின் மகளாகத்தான் இருக்க வேண்டும். பாண்டேயின் மகள் சம்ருதா கதவைத் திறந்து விட்டு, வேகமாக அவளுடைய அறைக்குள் நுழைந்து கொண்டாள்.  அழகிதான்.  ஏதோ படித்துக் கொண்டிருக்கிறாள்.  எப்போது பார்த்தாலும் படித்துக் கொண்டிருக்கிறாள்.  வீட்டில் அவள் வேலை செய்வதைப் பார்த்ததேயில்லை.  வசதியான வீடு.   பார்வதி  தன் மகள் சுனிதாவை நினைத்துக் கொண்டாள்.  ‘வத்தக் குச்சி’ மாதிரி  இருக்கிறாள்.  அம்மாவுக்கு முடிந்த அளவு உதவி செய்வாள். ஆனால், எவ்வளவு நேரம் ஆகிவிட்டாலும் படித்துவிட்டுத்தான் தூங்குவாள். ‘எப்படியாவது படித்து நல்ல வேலைக்குச் சென்றால் தேவலை.  அவளாவது பாத்திரம் தேய்க்கிற, வீடு பெருக்கித் துடைக்கிற வேலை செய்யாமல் இருந்தால் போதும்’.  பத்தாம் வகுப்பில் ஐந்தாவது ஆளாக இருக்கிறாள் என்று அவள் படிக்கும் கவர்மண்ட் ஸ்கூல் டீச்சர் பார்வதியிடம் சொல்லியிருக்கிறாள்.  அவளுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. பார்வதியின் மகன் ரவீஷ் நான்காம் வகுப்பில் படிக்கிறான்.  அவன் இவளை மாதிரிப் படிப்பில் கெட்டி கிடையாது.  விளையாட்டில் ஆர்வம் அதிகம்.

முன்னறையின் குட்டி மேஜைக்கு அடியில் கிடந்த விளக்குமாறை எடுத்து முதல் அறையிலிருந்து வீட்டைப் பெருக்கத் தொடங்கினாள். பெரும்பாலும் வேலை பார்க்கும் இடத்தில் அதிகமாகப் பேசமாட்டாள்.   எதாவது வேண்டுமென்று கேட்கத்தான் பேசுவாள்.  பாத்திரங்களைத் தேய்த்து அடுக்கிவிட்டு வெளியே கிளம்பும் போது பதினொன்று ஆகிவிட்டது. அடுத்து 326 ஆம் நம்பர் வீட்டுக்குப் போக வேண்டும். அதற்கு அப்புறம் 718ஆம் நம்பர் வீடு. மூன்று வீட்டு வேலைகளும் முடித்தால் கொஞ்ச நேரம் வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுக்கலாம்.  இன்றைக்கு மகளுக்கு லீவு.  ‘வீட்டுக்கு வந்திருப்பாளோ?’ பொதுவாக அவளுடைய மகள் எங்கேயும் போகவே மாட்டாள். வீட்டிலேயே இருப்பாள்.  இங்கேதான் கொஞ்சம் பாதுகாப்பாக உணர்வாள்.  ரவுடிகளும், போதை மருந்து விற்பவர்கள், வாங்குகிறவர்கள், எல்லாம் நிறைந்த சேரிப் பகுதியில் இருப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஏழைகளுக்கு வீடு தேவைப்படாது என்றுதான் மற்றவர்கள் நினைக்கிறார்கள். 

சுனிதா இன்றைக்கு ஏதோ அதிசயமாகக் கேட்டாள். ‘என் ஃபிரெண்டு வீட்ல பிறந்தநாள் பார்ட்டி.  ரொம்ப வற்புறுத்திக் கூப்பிடுறாம்மா’.  ‘சரி பார்த்துப் பத்திரமாகப் போய்ட்டுவா’ மனமில்லாமல்தான் சொன்னாள்.  ‘எங்கயும் போகாத பிள்ளை கேட்கிறா.  ஒருநாள் போகட்டுமே! எனக்குப் பிள்ளையாகப் பிறந்து என்னத்தைக் கண்டாள்.  ஆசையாக கேட்கிறாள்’ என்று அரைகுறை முனதுடான் ‘சரி’ என்றாள். ஆனாலும் பார்வதிக்குப் பயமாக இருந்தது.  சுனிதா ஒருநாளும் இப்படித் தனியாகப் போனதில்லை. அவளுக்கும் இப்படிப் போகச் சொல்லிப் பழக்கமில்லை. யார் கூட இருப்பாள்? எப்படிப் போவாள் எப்படித் திரும்பி வருவாள்? பார்வதிக்குப் பதட்டமாக இருந்தது..  வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது நடுநடுவில் மகளை நினைத்துக் கொண்டிருந்தாள்.

             வீட்டுக்கு வந்து சேரும் போது மணி ஒன்றரையாகிவிட்டது. அவளுடைய கணவன் காலையில் பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு செக்டார்-12 போயிருக்கிறான்.  பார்வதி கயிற்றுக் கட்டிலில் சாய்ந்தாள். அப்படியே தூங்கிப் போனாள்.  அசந்து தூங்கிவிட்டாள்.  எழும்போது, நோக்கியா 1100 மணி நாலரை காட்டியது. இன்னும் சுனிதா வரவில்லை.  அது மனதில் ஏதோ புழுப்போல் குடைந்து கொண்டிருந்தது.  வேலைக்கு மீண்டும் அந்த மூன்று வீடுகளுக்கும் போக வேண்டும். சுனிதாவைக் கூப்பிடப் போக நேரமில்லை.  செக்டார்-1 க்குத் தான் போனாள். பக்கத்தில் தான் இருக்கிறது.  வந்து விடுவாள்.  மாலையில் வரவில்லை என்றால் தேடிப் போக வேண்டும். பார்வதி முகத்தைக் கழுவிவிட்டுக் கிளம்பினாள்.

            இரண்டரை மணி நேரம் கழித்துத் திரும்பி வந்த போதும், சுனிதா திரும்பி வந்திருக்கவில்லை.  மணி ஆறரை ஆகிவிட்டது என்று பழைய டைம் பீஸ் கண்ணை உறுத்தியது.  இன்னும் கொஞ்ச நேரத்தில் இருட்டத் தொடங்கிவிடும்.  யாரிடமும் சொல்லத் தோன்றவில்லை.  பக்கத்து வீட்டுப் பெண்களுக்குத் தெரிந்தால் அது பரவி விடும்.  பார்வதி தன் மகளை எங்கெங்கோ அனுப்புகிறாள். கெட்ட பெயராகிவிடும்.  கணவன் வருவதற்கு இன்னும் இரண்டுமணி நேரம் ஆகும்.  அதற்குள் சுனிதா வந்துவிடவேண்டும். அவன் வந்ததும் பதில் சொல்ல முடியாது.  இவளைத்தான் திட்டுவான்.  எங்கே போயிருப்பாள்?  ‘செக்டார்–1’ என்று சொன்னது ஞாபகம் வந்தது.  பொறுமையில்லாமல் கதவைப் பூட்டிவிட்டு ‘செக்டார்–1 க்க்கு அருகிலிருக்கும் குடிசை வீடுகளில் ஒன்றாக இருக்க வேண்டும்.  போய்ப்பார்த்துவிடுவோம்’.

            செக்டார்–1 குடிசைப் பகுதியில் அவளுக்குத் தெரிந்த மனிஸாவின் வீடு இருந்தது. அவளைப் பார்க்கலாம்.  ரோட்டைக் கடந்து போகவே ரொம்ப நேரம் ஆகிவிட்டது.  சாலையைக் கடக்க முடியவில்லை.  கார்களும் பஸ்களும், ஆட்டோக்களும் ஒன்றுக்குப் பின் ஒன்றாக வந்து கொண்டேயிருந்தன.  மனிஸா வீட்டை அடைந்த போது இருட்டி விட்டது. தற்செயலாக வீட்டுக்கு வெளியில் வந்த மனிஸா பார்வதியைப் பார்த்ததும், மகிழ்ச்சியில் கைகளை இறுக்கப் பிடித்துக் கொண்டாள். ‘சும்மாதான் வந்தேன்’ என்று இவள் சொன்னாலும், மனிஸாவுக்குத் தெரியும் இவள் சும்மா வரமாட்டாள். தன் வீட்டு வேலையையும் பார்த்து, வேலைபார்க்கும் மூன்று நான்கு வீடுகளில் பாத்திரம் தேய்ப்பது, கூட்டிப் பெருக்கித் தண்ணீரால் மெழுகித் துடைப்பது. என்று வேலைகளை முடித்துவிட்டு வந்து சமையலும் பண்ணுகிறவளுக்கு ஏது நேரம்?  மனிஸாவும் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறாள். மனிஸாவிடம் சொல்ல வேண்டியதாகிவிட்டது.  ‘சுனிதா யாரோ சஹேலி (தோழி) பபிதாவைப் பார்க்க இங்கே வந்தாள்.  இன்னும் வீடு திரும்பவில்லை.  அதான் தேடி வந்தேன்.’  ‘அவளா?,   அடுத்த வரிசையிலிருக்கும் பபிதா வீட்டுக்குத்தான் போயிருக்க வேண்டும்.  அந்த வரிசை வீடுகளில் பபிதா ஒருத்திதான் ஸ்கூலுக்குப் போகிறாள்’ என்று சொல்லிக் கொண்டே பார்வதியை வேக வேகமாக இழுத்துக் கொண்டு மனிஸா அடுத்த வரிசை வீடுகளுக்குச் சென்றாள். அவளுக்கும் வீட்டில் பல வேலைகள் இருந்தன. 

            பபிதா இருக்கும் குடிசையும் வெளியிலே பூட்டியிருந்தது. இந்த ஜுக்கிக்குள் (குடிசைக்குள்) என்ன இருக்கிறது? பல வீடுகளிலும் பூட்டுக்கள் தொங்கிக் கொண்டுதானிருந்தன.  பார்வதியின் குழப்பம் அதிகமானது. இங்கேதான் போவதாகச் சொல்லிக் கொண்டு போனாள்.   கொஞ்ச நேரம் ‘எங்கே போயிருப்பார்கள் இருவரும்’ என்று யோசித்துக் கொண்டே வேறு ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள் பார்வதியும் மனிஸாவும். ஆனால் மனசுக்குள் பதட்டம் கரும்புகையைப் போல் எழுந்து மூச்சை அடைத்துக் கொண்டிருந்தது.  

            மனிஸா தூரத்தில் போய்க்கொண்டிருந்த ஒரு சிறுவனை ‘ஏய், ஹூலாஸு ஹூலாஸு’ என்று அழைத்தாள்.  ஹூலாஸ் அருகில் வந்தான். பத்து வயதிருக்கும்.  சடை அழுக்காக இருந்தது.  தலையிலும் உடலிலும் புழுதி படித்திருந்தது.  ‘பபிதா எங்கடா போனாள்?’  ‘அவளா, பஸ்ல ஏறி, இன்னொரு பெண்ணுடன், முகம்மதுபூர் போறேன்’ என்று சொன்னாள். நான் பஸ் ஸ்டாண்டில் பார்த்தேன்’ என்று சொல்லிவிட்டு அவனுடைய வீட்டுக்குள் போய்விட்டான். 

            ‘இந்தக் கழுத சொல்லாமக் கொள்ளாம, ஏன் அங்கே போனாள்?’.  என்ன செய்வதென்று தெரியாமல் பார்வதி குழப்பத்துடன் நின்றாள். நடந்து போகிற தூரமல்ல.  அதற்குள் இரண்டு மூன்று பெண்கள் வந்துவிட்டனர்.  ‘என்ன, என்ன விஷேசம்? ஏதாவது பிரச்சனையா?’ பிறகு, பக்கத்து வீட்டு ஆண்களும் வரத் தொடங்கிவிட்டனர்.  மனிசாவின் கணவன் லால்சிங் வந்துவிட்டான்.  லால்சிங் வந்ததும், அவன் ஹூலாசைக் கூப்பிட்டுக் கேட்டான். ‘பிள்ளைகள் முகம்மதுபூர் போயிருக்காங்க, போல இருக்கு.  இவளுக்குத் தெரிஞ்ச பொண்ணு அங்க இருக்கு. அவங்களக் கூப்பிடப் போகணும்’ பதட்டத்தை அதிகப்படுத்த வேண்டாம் என்று நினைத்தான் அவன்.  பார்வதியின் கணவனும் அவனும் பிஹாரில் ஒரே ஊர், சசாரம்.  ‘நான் போய்ப் பார்க்கப் போகிறேன். நீங்களும் வாங்க.  பஸ் வர எவ்வளவு நேரம் ஆகும்னு தெரியாது’.  ஹூலாசையும் சைக்கிளில் ஏற்றிக் கொண்டான். 

            கொஞ்ச நேரத்தில், பார்வதியின் கணவன், தோதாராம், சைக்கிளில் வந்துவிட்டான். ‘உன்னை எங்கயெல்லாம் தேடுவது? ஏழரை ஆகப் போகுது’ அவனுடைய சைக்கிள் கேரியரில் இருந்து அவனுடைய மகன் ரமண் இறங்கிநின்றான்.  மகளைத் தேடி லால்சிங் போனதை பார்வதி சொன்னதும், அந்த இடத்திலேயே

ரமணை இறக்கிவிட்டு, ‘நானும் போய்ப் பார்க்கிறேன்’ என்று தோதாராம், லால் சிங் போன வழியில் போகத் தொடங்கும் போது, பார்வதி ‘நானும் வருகிறேன். எம் பிள்ளைக்கு என்ன ஆச்சோ?’ என்று கண்ணீர் மல்க சைக்கிளின் கேரியரில் ஏறி உட்கார்ந்து கொண்டாள். ‘வந்த உடன் சுனிதாவை இரண்டு சாத்து சாத்தினால் மனம் ஆறிவிடும்.  இளம் வயதுப் பெண்ணை அடிக்கக் கூடாது’ என்றும் அவளுக்குத் தோன்றியது. ஏடா கூடமாக ஏதாவது ஆகிவிடக் கூடாது.  நாளைக்குக் கல்யாணம் முடியும் வரை பொத்திப்ப் பொத்தி வளர்க்க வேண்டும்.  சைக்கிளில் போகும் போது ஏதேதோ நினைத்துக் கொண்டிருந்தாள்.

                                                                       *

            ஏழாம் வகுப்பில் பெயில் ஆனபின்னால் ராஜூ பள்ளிக் கூடம் போவதை நிறுத்தி விட்டான்.  காஜிபூரில் மார்க்கெட்டில் அவனுடைய நண்பன் சோனுவுடன் ஊர் சுற்றிக் கொண்டிருந்தான்.  பதினான்கு பதினைந்து வயதில் வேலை தேடி இருவரும் ஒன்றாக அலைந்தனர்.  பரட்டைத் தலையும், அழுக்கான உடையும் மெலிந்த உடலும் அவர்களின் நிலையை, கடை முதலாளிகளுக்குக் காட்டிக் கொடுத்துவிடும். ‘இரண்டு உருப்படாத பயல்கள்’. தனியாகச் சென்றால், பணிய வைத்து வேலை கொடுத்துவிடலாம். அது ராஜூவுக்கும் சோனுவுக்கும் புரிய வெகு நாள்கள் ஆகிவிட்டது.  ஒரு வழியாகக் கெஞ்சிக் கூத்தாடி ராஜு புதுடில்லி ரயில்வே ஸ்டேஷனுக்கருகில், பஹார்கஞ்சில் ஒரு லாட்ஜில் எடுபிடி வேலையில் சேர்ந்தான். பெரும்பாலான நாட்களில் லாட்ஜில் படுத்து உறங்கிவிடுவான்.  இரவும் பகலும் வாடிக்கையாளர்கள் வந்து கொண்டிருப்பதால் சரியாக உறங்க முடியவில்லை. மின்விளக்குகள் எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் இடத்தில் எப்படித் தூங்குவது?  தூங்கத் தொடங்கினால், யாராவது வாடிக்கையாளர் புதியதாக வந்துவிடுவார். அவரைக் கூட்டிக் கொண்டு அறையில் தங்க வைத்துவிட்டு வரவேண்டும்.

            உல்லாஸ் லாட்ஜில் சும்மா இருக்கும் நேரங்களில், ரிசப்ஷனில் உள்ள டி.வி.யில் எப்போதும் ஹிந்தி திரைப்படங்கள் ஓடிக் கொண்டிருக்கும் டி.வி.யைப் பார்த்துக் கொண்டிருப்பான்.  இடுப்பை வளைத்து ஒடித்து ஆடிக் கொண்டிருக்கும் கதாநாயகிகள அனைவரையும் அவனுக்குப் பிடிக்கும்.  அவன் அரைகுறைத் தூக்க மயக்கத்தில் சாய்ந்திருக்கும் போது அவர்கள் அவனிடம் வந்துவிடுவார்கள். அவன் என்னென்னவோ செய்வான்.  முதலாளி வந்தால், டி.வியைப் பார்த்துக் கொண்டிருக்க விடமாட்டார். அவனை ஏதாவது வேலை சொல்லி இடத்தைக் விட்டுநகரச் செய்துவிடுவார்.  அதற்கப்புறம் அவர் டி.வியைப் பார்த்துக் கொண்டிருப்பார்.    

            அந்த லாட்ஜுக்குக் கீழ்த்தளத்தில் ‘பாதுஷாஹி’ ஹோட்டல் இருந்தது. அன்று மாலை மூன்று மணிக்கு சுனிதா, பபிதா, ஃபரிதா, குஷி நாவரும் வந்து காத்திருந்தனர்.   முனிசிபல் கார்பரேஷன் பள்ளியில்  ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்தவர்கள்.  கொஞ்ச நேரம் கழித்து, பாபி, மனீஷ், வர்தான் மூன்று பையன்களும் வந்தனர்.  சுனிதாவின் வகுப்பில் படிக்கிறவர்கள்.  அவர்களில் சுனிதா மட்டும் நன்றாகப் படிக்கிறவள். சுனிதா நல்ல மார்க் வாங்கிப் பாஸாகிவிட்டதற்குப் பார்ட்டி.  ஆளுக்கு ஐந்து ரூபாய். 

            அவர்கள் மூவரும் ஒரே கோகா கோலாவைப் பகிர்ந்து குடித்து விட்டு ஒவ்வொரு சமோசா சாப்பிட்டனர்.  கொஞ்ச நேரம் எப்போதும் அவர்களைத் திட்டிக் கொண்டிருக்கும் கிளாஸ் டீச்சர் சுனந்தாவை கிண்டல் பண்ணிச் சிரித்துக் கொண்டிருந்தனர். ‘பபிதா அந்த டீச்சர், அதட்டுவதைப் போலச் செய்து காட்டினாள்.  ‘நீங்கள் எல்லாம் பிள்ளைகளா? ஒண்ணாவது உருப்படியா இருக்கா? படிப்பும் கிடையாது. ஒழுக்கமும் கிடையாது’  கிளாஸில் பாதி நேரத்தை வசைபாடியே கழித்துவிடும் கலை அந்த டீச்சருக்கு மட்டும்தான் தெரியும். முனிசிபல் கார்ப்பரேஷன் பள்ளியில் வேறென்ன செய்ய வேண்டும்?’

சுனிதா அதற்கு முன்னால் கோலா குடித்ததில்லை.   முழுவதும் ஒரு பாட்டிலைக் குடித்ததும், ‘ஒரு மாதிரி இருக்கே’ வியப்புடன் சொன்னாள். தலை கனத்தது. தூக்கம் வருவது போலிருந்தது.   ‘முதல் முதலாகக் கோலா குடிக்கிறாய் அல்லவா? அப்படித்தான் இருக்கும்’ என்று மனீஸ் விளக்கம் கொடுத்தான்.  கொஞ்ச நேரத்தில், ஹோட்டலில் ஒரு மூலையில் அவர்கள் உட்கார்ந்திருந்த டேபிளில் சுனிதா தலை சாய்ந்துவிட்டாள். அவளருகில் உட்கார்ந்திருந்த குஷி, ‘என்ன, கோலா குடித்ததும் இப்படி ஆகிவிட்டாய்’ என்று கேட்டாள். அவளுக்கும் கொஞ்சம் தூக்கம் வருவது போலக் கண் அசந்தது. அவளுக்கு ஏதோ புரிவது போலிருந்தது.  கோலாவில் மனீஸ் எதையோ கலந்து கொடுத்திருக்கிறான். யார் கோலா வாங்கிவந்தது என்று யோசித்துப் பார்த்தாள். தலை கிறுகிறுத்தது.  தூங்கிவிடக் கூடாது. தன்னை நம்பி வந்த சுனிதாவை கைவிட்டு விடக் கூடாது என்று உறங்காமல் இருக்கப் போராடிக் கொண்டிருந்தாள். ஆனாலும் அவளால் விழித்திருக்க முடியவில்லை.  கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன.

                                                            *****

            ராஜூ இந்தப் பையன்கள் கூட்டம் வரும் போது பார்த்துக் கொண்டிருந்தான்.  அவனைவிட அவர்கள் நல்ல உடை அணிந்திருந்தார்கள்.  ‘நானும் நன்றாகப் படித்திருந்தால் ஸ்கூல் போய்க் கொண்டிருந்திருக்கலாம். நல்ல உடை அணிந்திருக்கலாம்’.  இப்போது லாட்ஜே கதியென்றாகிவிட்டது.  நான்கு மணிக்கு, 327ஆம் ரூமில் இருந்தவர்களுக்கு மூன்று டீ வாங்கிவர ஹோட்டலுக்கு வரும் போது,  பள்ளிக் கூடத்துப் பையன்களையும் பெண்களையும் கவனித்தான்.  ஆர்.கே. புரத்தில் ஜுக்கி ஜோம்ப்டி (குடிசைப்பகுதி)யில் பார்த்த முகங்களாக இருந்தன. அவன் செக்டார்-4 இல் இருக்கும் சித்தப்பாவைப் பார்க்க அடிக்கடி போவதுண்டு. அதற்கப்புறம் மறந்துவிட்டான்.  ஏழுமணிக்கு 402வது அறைக்காரர் நன்றாகத் தண்ணியடித்துவிட்டு, நடக்க முடியாமல் கதவைத் திறந்து இரண்டு சாப்பாடு வேண்டும் என்று கேட்டார். அதற்காக ஹோட்டலுக்கு வந்தவன், இரண்டு பெண் பிள்ளைகள் மட்டும் ஹோட்டலின் ஒரு மூலையில் தூங்கி வழிந்த முகத்துடன் இருப்பதைப் பார்த்தான்.  பையன்களையோ மற்ற பெண்களையோ காணவில்லை.

            ஹோட்டல் முதலாளியிடம் அவன் மூலை டேபிளில் தூங்கி வழிந்து கொண்டிருக்கும் இரண்டு பெண்களைப் பற்றிச் சொன்ன போதுதான் அவர் பார்த்தார்.  அவர் அந்த டேபிளுக்குச் சென்ற போது ராஜுவும் கூடப் போனான். ‘சாப்பிட்டாச்சா? ரொம்ப நேரமா உட்காந்திருக்கீங்க..’ என்று கேட்ட போது, அவர்கள் இருவரும் பதில் சொல்லும் நிலையில் இல்லை என்று புரிந்தது.  ராஜூ கேட்டான் ‘கூட வந்த பையன்களும் பெண்களும் எங்கே?’.  பதில் கிடைக்கவில்லை.  இரு பெண்களும் மீண்டும் டேபிளில் தலை கவிழ்ந்து கொண்டனர்.  முதலாளி ராம்சரணுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.  ‘கூட வந்த பையனகளும் இரண்டு பெண்களும் வெளியே போயிருக்கக் கூடும்’ என்று ராஜூ சொன்னதும் முதலாளி ‘சரி கொஞ்ச நேரம் காத்திருப்போம்’ என்று கல்லாவில் போய் உட்கார்ந்து கொண்டார்.

            எட்டு மணிக்குப் போலீஸ்காரர்கள் இருவர் ஹோட்டலுக்கு வந்தனர். சுனிதாவையும் குஷியையும் ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டு அவர்கள் போகும் போது மணி ஒன்பதாகிவிட்டது.

                                                                        *

            பார்வதியின் குடிசைக்கு மனீஸ் போன போது யாரும் இல்லை. பக்கத்துவிட்டிலிருந்த பெண்ணிடம் “‘சுனிதாவை, ராம் மனோகர் லோகியா ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறது.  அவளுடைய அம்மாவிடம் சொல்லிவிடுங்கள்’’ என்று சொல்லிவிட்டு சைக்கிளில் ஏறிச் சென்றுவிட்டான்.

            அடுத்த நாள் காலையில் லோகியா ஆஸ்பத்திரியிலிருந்து சுனிதாவின் உடலை வாங்கிய போது, பார்வதி குமுறிக் குமுறி அழுதுகொண்டிருந்தாள். என்ன நடந்தது என்று அவளுக்குத் தெரியவில்லை.  கண்ணீர் விட்டுக்கொண்டிருந்த அவளது கணவனிடம் போலிஸ்காரர்கள் இருவர் ஏதோ பேப்பரில் கையெழுத்து வாங்கிக் கொண்டிருந்தனர். 

                                                                        *

            ஆறு ஆண்டுகளாக, கேஸ் நடந்து கொண்டிருந்தது.  மனீஸும் கோர்ட்டுக்கு வந்து கொண்டிருந்தான்.  வரவர பார்வதிக்கு கோர்ட்டுக்கு வருவது கூடப் பிடிக்காமல் போய்விட்டது.  கொஞ்ச நேரம் வக்கீல்கள் ஏதோ பேசுகிறார்கள், பிறகு அடுத்த தேதி கொடுத்து விடுகிறார்கள்.  மூன்று நீதிபதிகள் மாறிவிட்டார்கள்.  போலீஸ்காரர் ஒருவர் மட்டும் ஒவ்வொரு முறையும், ‘இந்த முறை நீங்கள் கண்டிப்பாக வந்தே ஆக வேண்டும். இல்லையென்றால், அவன் தப்பி விடுவான்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார்.  அவருக்குப் பயந்து போய் பார்வதியும் அவள் கணவனும் கோர்ட்டுக்கு வந்து செல்வதற்கே நானூறு ரூபாய் ஆகிவிடுகிறது. கணவனின் ஒரு நாள் கூலி. அதை போலீஸ்காரரிடம் சொன்ன போது, அவர் ‘கொலைக் குற்றவாளிவாளிக்குத் தண்டனை வாங்கித் தருவது என்றால் எளிதா?’ என்று கேட்டார். 

            பார்வதி மனீஸைப் பார்த்தாள்.  கைகளில் விலங்குடன், போலீஸ்காரர்களுடன் நடந்து போனான்.  நின்று கவனித்தாள். கோர்ட் வளாகத்தின் நின்றிருந்த நீலக் கலர் டிரக்கில் ஏறிக் கொண்டிருந்தான்.  சிறைச்சாலைக்குப் போகிறான். முரட்டுப் பையனாக மனீஸ் முகத்தில் இறுக்கத்துடன் போய்க் கொண்டிருந்தான்.  என்றைக்கு அவனுக்குத் தண்டனை கிடைக்கும் என்று யாருக்கும் தெரியவில்லை. கணவனைப் பார்த்தாள் ‘பேசாமல் இன்று வேலைக்கே போயிருக்கலாம்’ என்று பார்வதியின் கணவன் முனகினான்.  இருவரும் ஆட்டோக்களின் கடலில் நீந்திப் பஸ் ஸ்டாண்டைப் பார்த்து நடந்தனர்.   அங்கிருந்த மனிதக் கூட்டத்தில் யாரும் இவர்களுடைய துயரத்தைப் பற்றிக் கேட்பதாகக் கூட இல்லை.  சாலைகளிலும் பஸ்களிலும் கார்களிலும் சைக்கிள்கள், பைக்குகள் ஸ்கூட்டர்கள்… எல்லாவற்றிலும் கூட்டங் கூட்டமாக மனிதர்கள் அவசரமாக எல்லாத் திசைகளிலும் சென்று கொண்டிருந்தனர்.

            ‘சொந்த ஊருக்கே போய்விடுவோம்’ என்று பார்வதிக்குத் தோன்றும். ஆனால் அங்கே நிலைமை இதைவிட மோசம்  உறவினர்கள் சொந்த பந்தங்கள் இல்லையென்றாலும் இங்கே வருமானம் இருக்கிறது.  அவளுடைய மகள் படித்து நல்ல நிலைமைக்கு வரும் வாய்ப்பு இருந்தது.  ‘இனி அவளை மறந்துவிட்டு, மகனை நல்ல நிலைக்குக் கொண்டு வர வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டாள். இந்த நகரத்தில் எதுவுமே சரியில்லைதான்.  ஆனால் ஏதோ ஒன்று கிராமங்களை விடச் சரியாக இருக்கிறது. அது எது என்று பார்வதி தேடிக் கொண்டிருந்தாள்.

வேலு இராஜகோபால்

இதுவரை சுமார் பதினைந்து கதைகள் இணைய, அச்சுப் பத்திரிக்கைகளில் வெளிவந்திருக்கின்றன. உதாரணமாக, நவீன விருட்சம், அம்ருதா, அமுத சுரபி, மயிர் இணைய இதழ் கல்கி ஆன்லைன்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *