கதை: 1
“கவுர்மென்ட் பேசாம கள்ளுக்கடயத் தொறக்கலாம்” நூத்தி நாப்பத்தஞ்சு ரூவா ரம் பாட்டலைத் தட்டித் திருகித் தொறந்தவாறு கந்தசாமி சொன்னான்.
”மாப்ள கள்ளுலயிம் கஞ்சா, மாத்திரையின்னு கண்டத கலக்கறானுக” கந்தசாமி தரப்போகின்ற நைன்ட்டிக்கு காத்திருந்த குப்புச்சாமி சொன்னான்.
”அதுக்கு மூடிக்கிட்டு இந்தக் கெரகத்தையே மண்டலாம்ங்குற” எதிர்டேபிளில் தண்ணிக்கு விண்ணப்பித்துக் கிடைக்காத ஆத்திரத்தில் ராவாகச் சரக்கை உள்ளே விட்ட கந்தசாமி, சிறு தொண்டைக் கமறலுடன் சிரித்தான்.
“நைன்ட்டி போதுமா மாப்ள” பின்னைக் காலனித்துவச் சோகத்துடன் குப்பன் கேட்டான்.
”பொருளாதாரச் சீர்குலைவு மாப்ள என்ன பண்டறது” பாக்கெட்டைத் தடவினான் கந்தன் பரிதாபமாக.
”உங்காளுக்கு போனப் போட்டு நூத்தம்பது ஜிபே பண்ணச் சொல்லு மாப்ள” பின்னவீனத்துவ ஐடியாவைப் பிட்டு வைத்தான் குப்புச்சாமி.
லேசா மப்பேறவும் கேப்ரியல் கார்ஸியா மார்க்வேஸ் அழகியலுடன் சிரித்தவாறே பொட்டியை எடுத்துத் தட்டி, எதிர்முனையிலிருந்த அம்மிணியிடம் சூழலைச்சொன்னான் கந்தசாமி சுருக்கமாக.
அவள் காஃப்கா வீட்டுக் கரப்பாம்பூச்சி மாதிரி ஏதோ கரகரத்தாள். லேசுப்பட்டவளா அவள். குறத்திமுடுக்கிலிருந்து கடந்த நூற்றாண்டு அவசரமாகப் புலம் பெயர்ந்தவளாயிற்றே “சல்லிப்பய புள்ள, எம் மூத்தரத்த ஒரு பீர் பாட்டல் நெறக்கா பேஞ்சு வச்சிருக்கேன் வந்து குடிச்சிட்டுப் போ நாயி நீ கெட்ட கேட்டுக்கு ஜிபேல நொட்டுவாங்க” என்றாள். சட்டென அமானுஷ்ய நிலைக்கு முகம் மாறிய கந்தசாமி,
”இதெல்லாம் வேலைக்கி ஆவாது மாப்ள, பொழுதோட கரூர்காரன்ட்ட மீட்டர் வட்டிக்கி வாங்கியாச்சியிம் சரக்கடிக்கலாம். இப்ப பொட்டாட்ட வீடு போயிச் சேர்லாம்” என்று செத்துப் போன யதார்த்தத்தை உயிர்ப்பித்தவன் மாதிரி வண்டியை முடுக்கிவிட்டு ஏறி உட்கார்ந்து சிட்டாகப் பறந்தான்.
ஒருவழியாக கந்தசாமியைத் தாட்டிவிட்ட சந்தோஷத்தில் தனது அண்டராயருக்குள் பதுக்கி வைத்திருந்த ஐநூறு ரூவாத்தாளை கைவிட்டு எடுத்த குப்பன் ’மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப் தான்” என்று பாடிக்கொண்டே தனியனாக டாஸ்மாக் பாருக்குள் நுழைந்தான்.
”போதை என்பது ஒரு பாம்பு விஷம் தான், சேர்ந்து குடிச்சா அது சோஷலிசம் தான்” மிஷ்கின் படப் பாடல் சத்தமாக ஒலித்தது. அங்கே ஒரு டேபிளில் அமர்ந்திருந்த. அகிராகுரோசோவா, அருகிலிருந்தவரிடம் எனக்கு ஒவ்வொண்ணும் மூணுமூணாத் தெரியிது” என்று முனுமுனுத்தார்.
000
கதை 2
இரண்டு நவீன இலக்கியப் பிசாசுகள் ஒரு டாஸ்மாக் பாரில் சந்தித்துக் கொண்டன. ஆஃப் சரக்கு வாங்கி ஆளுக்கொரு பெக் வீதம் அருந்தியவாறு உரையாடலைத் தொடங்கின.
”பாரதி குடித்தான் செத்தான்”
”ஆனால் உருப்படியாகக் கவிதைகள் எழுதிவைத்து விட்டுத்தான் செத்தான்”
”புதுமைப்பித்தன் குடிக்கவில்லை. ஆனாலும் அல்பாயுசில் செத்தார்”
‘’அவருக்கு காசநோய் இருந்தது. அது முற்றிப் போய் செத்தார்’’
”முட்டை சாப்பிட்டிருந்தால் பிழைத்திருப்பார்’’
“அவித்த முட்டைகளைச் சாப்பிடுவது கஷ்டம்”
‘’அந்தக் காலத்தில் ஆஃப் பாயில் இல்லை”
“இருந்திருந்தாலும் அவர் சாப்பிட்டிருக்க மாட்டார்”
“ஏன்?”
”அவர் பிள்ளைமார் சமூகம்”
“என்றால் என்ன. அவர்தான் பிள்ளைமார்னா ரெண்டு கொம்பா மொளச்சிருக்குன்னு ஒரு கதையில் கேட்டாரே?”
”நாசகாரக் கும்பல்”
”ஆனாலும் தலைவன் சிறுகதையில் மேதைமை காட்டிவிட்டுப் போனான்”
”போய்ச் சேர்ந்தான் புதுமைப்பித்தன் வந்து நின்றான் விக்கிரமாதித்தன் “
”அதை வேறு யாராவது சொல்லியிருக்க வேண்டும். விக்கிரமாதித்தனே சொல்லிக் கொண்டதுதான் தமாஷ்”
”விக்கிரமாதித்தன் குடிப்பதை நிறுத்திக்கொண்டார் ”
”ஏதோ ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தம் மாதிரில்ல சொல்கிறாய்?”
“அட போப்பா.. ஒருமாதம் போல காச்சல்ல படுத்துட்டேன், எதுவும் எழுதவில்லை வாசிக்கவுமில்லை. சமீபத்திய இலக்கியப் போக்குகள் எப்படி இருக்கிறதாம்?”
“இலக்கியப் போக்கு கிடக்கட்டும் கழுதை. எனக்கு வா.மு.கோமுவின் வயிற்றுப்போக்கு பற்றித்தான் கவலை”
“மறுக்காவுமா?”
“அமலாக்கத்துறை ரெய்டு மாதிரி இது அடிக்கடி நடப்பதுதான்’’
“பொறவால போவுதுன்னு உயிர்மைல கதை வந்துருக்கு”
”விசியமங்கலம் பாய் கடைல குடல்கறி வறுவல் சாப்பிடுவதை கோமு நிறுத்திக்கொண்டார்”.
”யார் எதை நிறுத்தினாலும் உனக்குத்தான் முதல்ல தகவல் வரும் போல”
“அந்த குடல் வறுவலை மறுபடியும் சோத்துல பிசைந்து சாப்பிட்டால் அவருடைய குடல் சுத்தமாகிவிடும்”
”கரெக்ட் குடலைக் குடலால் தான் அடிக்க வேண்டும்’’
”சரக்கு தீர்ந்திருச்சு”
“யாருக்கு?”
‘தமிழ் எழுத்தாளர்கள் கொள்ளப் பேருக்கு.. அதை விடு பாட்டல் காலி”
”போதுமே.. ஆளுக்கு கோட்டர் சாப்ட்ருக்கோம்”
”இல்லப்பா கொஞ்சமாச்சி நெதானம் தவறோணும். அதுமில்லாட்டி குடிச்சு என்ன பிரயோசனம்?”
“வீட்டுக்குப் போனா செருப்ல போடோணும்”
”பாத்துக்கலாம். ஒரே ஒரு கோட்டர் வாங்கு”
”டப்பு லேது மனவாடு”
”உன் வாசகன் ஒருத்தன் இருப்பானே”
”ஆரு.. கவுண்டச்சிவலசு கருப்புச்சாமிய சொல்றியா?”
“அட ஆமா. கேட்டவுன்னியிம் லவக்குன்னு போடுவானல்ல”
“போன வாரந்தா ஜநூறு போட்டு வுட்டாப்ல”
”அட.. இப்பக்கேளு. ஒரு நாவல் போயிட்டிருக்கு கருப்பா பத்து அத்தியாயம் முடிஞ்சிருச்சு திடீல்னு ஒரு மனத்தடைன்னு சொல்லு. புரிஞ்சுக்குவாப்ல”
”போனவாரம் இதைய சொல்லித்தான் ஐநூறு வாங்குனேன்”
”அப்டியா.. செரி வுடு… இப்ப பெரிய உளச்சிக்கல்.. தற்கொலை பண்ணிக்கலாம்னு நெனச்சு தண்டவாளத்துல நடந்துட்டிருக்கேன் கருப்பான்னு சொல்லு. அமவுன்ட்டு பெருசா வுழுக வாய்ப்பிருக்கு.. அடடே சொல்லி முடிக்கறதுக்கு மின்ன மெசேஜ் தட்டியுட்டுட்ட போல.. ம்.. மீண்டும் ஒரு வசந்தத்துக்காக இருவரும் காத்திருப்போம்.”
”குற்றமும் தண்டனையும்ல இருந்து ஒரு பீஸ் எடுத்து ஸ்கிரீன் ப்ளே பண்ணிட்டு இருக்கேன் பங்கு”
”அட.. சொல்லவே இல்ல, ம்.. விரைவில் கோலிவுட் என்ட்ரி.. வாழ்த்துகள்..”
”ஆமாப்பா, எதுனா சினிமால வொர்க் அவுட் ஆனாத்தான் இந்த பணத்தட்டுப்பாடு தீரும்”
“குற்றமும் தண்டனையும்ல இருந்து ஏற்கனவே நம்மாளுங்க நெறையா சுட்ருப்பானுங்களே”
“இல்ல இல்ல.. க்ரைம் அன்ட் பனிஷ்மென்ட். தஸ்தாயேவ்ஸ்கி அது இதுன்னு சும்மாவாச்சும் பேசுவானுங்க. எவுனும் நாவல முழுசா படிச்சிருக்கமாட்டானுங்க”
“ஆமா. எஸ்.ராமகிருஷ்ணன் கூட அந்த நாவலப் பத்திபேசி அது ஒரு புஸ்தகமாக்கூட வந்துமிருக்கு”
“கரெக்ட்.. அதக்கூட படிச்சிருக்கமாட்டானுங்க. எவனாச்சி அசிஸ்டண்ட் டைரக்டர் படிச்சுட்டு சொன்னா அதைய சீனா மாத்திக்குவானுங்க”
(இந்த இடைவெளியில் கவுண்டச்சிவலசார் ஆயிரம் ரூபாய் ஜிபே பண்ணி ‘தற்கொலை எண்ணத்தை தவிர்க்கவும் தலைவா’ன்னு கண்ணீர் மல்க ஒரு மெசேஜ் விட்டிருந்தார். ஆஃப் சரக்கும் முட்டைப்பொடிமாஸும் டேபிளுக்கு வந்திருந்தது. ’’கருப்ச்சாமியை போன்ற கருத்தான வாசகன் உள்ளவரை எழுத்தாளனுக்குச் சாவேது..வேது.. து…” என்றவாறு சரக்கை இரண்டு டம்ளர்களில் பகிர்ந்தது பங்காளிப் பிசாசு)
“என்ன பங்கு உன் கை நடுங்குது?”
“விஷால் கை நடுங்குனா தமிழ்நாடே விசனப்படுது. நம்ம கை நடுங்குனா ஒரு நாய் கூட கண்டுக்காது”
”ஆமா தஸ்தாயேவ் விஸ்கி கிட்ட பெர்மிசன் வாங்கிட்டியா பங்கு?”
”எதுக்கு”
“குற்றமும் தண்டனையும் ஸ்கிரீன் ப்ளே பண்றேன்னியே”
”ம்..போனமாசம் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் போயிருந்தப்ப தஸ்தாயேவ் பிராந்திய ஒரு சூதாட்ட கிளப்ல மீட் பண்ணி அக்ரிமெண்ட் போட்டுட்டேன். போடா லூசு, அந்தாளு செத்து ஒன்னேமுக்கால் நூற்றாண்டு ஆச்சு”
”அந்த ரஸ்கோல் நிகோவ் கேரக்டருக்கு யாரைப் போடலாம்னு யோசிச்சிருக்கே?”
”தமிழ்ல அந்த கேரக்டருக்குப் பேரு எருவாமட்டி. டி,ஆர்., எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, புரோட்டா சூரி, மொட்ட தண்டபாணி, பிரேம்ஜி, பவர் ஸ்டார் இவுங்க எல்லாங் கலந்த ஒரு கலவையான மூஞ்சியா வேணும், தேடிட்டிருக்கேன்”
”அதுக்கு நீ ஒரு டைனோசர் முஞ்சியத்தான் கிராபிக்ஸ் பண்ண வேண்டியிருக்கும். செரி பங்கு.. ஒண்ணொரு ஆஃப் சொல்லு இத்தோட முடிச்சுக்கலாம்”
“போடாங்… வாயில வந்துரும் ஆமா… ஆஃப்புமில்ல கீப்புமில்ல. மூடிட்டு வீடு போய்ச் சேரு”
”கருப்பன் அனுப்புன பணத்துல இன்னியும் ஐநூறு மிச்சமிருக்குமே?”
”இருக்குது. அதுக்கும் வாங்கி மண்டீட்டு மட்டையாகலாம்னு பாக்குறயாக்கும்? அந்த ஐநாறுக்கு அரக்கிலோ வெள்ளாட்டுக் கறி எடுத்துட்டு வீட்டுக்குப் போனாத்தான மின்சாரம் ஷாக் அடிக்காம இருக்கும்”
”அட ஆட்டுக்கறி எதுக்கு பங்கு.. கொலஸ்ட்ராலு.. அதுக்கு ஒரு கிலோவா கோழிக்கறி எடுத்துட்டுப் போ.. பாக்கி முன்னூறுப் பக்கம் இருக்குமல்ல. ஆஃப் மானிட்டரோ மென்ஸ் கிளப்போ வாங்கு. ஆளுக்கொரு கோட்டர் சாத்துவோம். சும்மா கிச்சுன்னு இருக்கும். அதுக்கு மேல கோழிக்கறிய கடுச்சீன்னா ஒரு சாமம் விடியால வரைக்கும் மப்பு இருக்கும்”
“நல்ல ஐடியாவாத்தான் இரிக்கி. இந்தா நீபோயி ஒரு ஆஃப் எடு. மத்தத பெறகு பாத்துக்கலாம்”
000
கீரனூர் ஜாகிர்ராஜா
கடந்த 30 ஆண்டுகளாக தமிழ் நவீன இலக்கியச் சூழலில் இயங்கிவரும் கொங்கு மண்டலம் சார்ந்த முக்கியமான படைப்பாளி. 10 நாவல்கள், 5 சிறுகதைத் தொகுப்புகள், 6 கட்டுரைத் தொகுப்புகள், 7 தொகை நூல்கள் என தமிழுக்குத் தனது வளமான பங்களிப்பை வழங்கியவர். தொடர்ந்து முழுநேர எழுத்தாளராக இயங்கி வரும் கீரனூர் ஜாகிர்ராஜா தஞ்சையில் வசிக்கிறார். கனடா இலக்கியத் தோட்டம் விருது, தி இந்து நாளிதழ் வழங்கிய Lit for life விருது, ஆனந்த விகடன் வழங்கிய இரண்டு விருதுகள் உள்ளிட்ட பல சிறப்புகள் பெற்றவர். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் வருகை தரு இலக்கிய ஆளுமை யாகத் தமிழ்நாடு அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பணியாற்றியவர்.