கிரிக்கெட் போட்டிகள் நடக்கும்போது அவ்வபோது பொழுது போக்கிற்காக பார்த்துக் கொண்டிருந்த தீபாவிற்கு மட்டையாட்டத்தின்மேல் ஆர்வம் வரத் தொடங்கியது. ஒரு நாள் தீபா தனது கல்லூரி வளாகத்தில் தோழிகளுடன் நடந்து கொண்டிருந்தபோது இந்தப் பக்கமாக மட்டையாட்டம் நடந்து கொண்டிருந்ததைக் கவனித்தாள். சரி… இந்த விளையாட்டில் அப்படி என்னதான் இருக்கிறது என்று தன் தோழிகள் புடைசூழ பார்வையாளர்கள் பகுதியில் வந்து அமர்ந்தாள்.

இப்படியாக சில நாட்களில் கல்லூரி ஓய்வின்போது கிரிக்கெட் விளையாட்டைப் பார்க்க ஆரம்பித்தவளுக்கு அதன்மீது ஒரு ஆர்வம் வந்தது. அந்த ஆர்வத்தைக் கொடுத்தது சுதாகரின் நேர்த்தியான பேட்டிங்கும், ஆட்டத்தில் இருந்த விறுவிறுப்புதான் என்றாலது மிகையில்லை.

கல்லூரிப் படிப்பை முடித்த நிலையில் சுதாகர் முழு நேர மட்டைப் பந்தாட்ட வீரனாக உருவாகிக் கொண்டிருந்தான். அவனது திறமையை அவனது கல்லூரி நிர்வாகமும் அவனது பெற்றோர்களும் உணர்ந்திருந்ததால் அவனுக்கு ஆதரவாகவே இருந்தனர். உற்சாகப்படுத்தினர். கல்லூரியில் படிக்கும்போது விளையாட்டுத் துறை தலைவராக இருந்த ஆசிரியர், சுதாகர் சிறந்த கிரிக்கெட் வீரனாக வர வாய்ப்புகள் அதிகம். சிறப்பாகப் பயிற்சிகள் எடுத்தால் சர்வதேச போட்டிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்புகள் நிச்சயம் கிடைக்கும் என்று நம்பிக்கை கொடுத்திருந்தார்.

அந்த நம்பிக்கை வீண்போகவில்லை. இன்றுவரை அவனை வெகு தூரத்திற்கு உயர்த்திக் கொண்டு வந்திருக்கிறது. இதோ… இன்று நடக்கும் போட்டியும் இதனையடுத்து இன்னொரு நாள் நடக்கும் போட்டியும்கூட ஐ.பி.எல் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பினைப் பெற்றுத் தரக்கூடிய போட்டிகள்தான். இதில் தனது திறமையைக் காட்டினால் அவனுக்கு ஒரு சிறப்பான எதிர்காலம் அமையலாம்.

தொடர்ந்து உள்ளூர்ப் போட்டிகள் தீபா படிக்கும் கல்லூரியான காரணம்பேட்டை கல்லூரி மைதானத்திலேயே நடந்ததால் சுதாகரை தீபா அவ்வப்போது சந்தித்து வந்தாள். தீபா பி.எஸ்.சி. இறுதியாண்டு படித்து வருகிறாள். சுதாகர் திருப்பூரைச் சேர்ந்தவன் என்பதாலும் தீபா பல்லடத்தைச் சேர்ந்தவள் என்பதாலும் இருவருக்கும் கிரிக்கெட் மூலம் நல்ல நட்பு உருவாகியிருந்தது. காரணம்பேட்டை, திருப்பூர் கோயம்புத்தூர் மாநகரங்களுக்கும் நடுவில் இருப்பதால் போக்குவரத்திற்கும் வசதியானது. தீபா படிக்கும் கல்லூரி விளையாட்டு மைதானம் பெரியதாக இருப்பதால் அங்கேதான் கிரிக்கெட் போட்டிகள் அதிகம் நடக்கும்.

மாவட்ட அளவிலான போட்டி ”கோவை க்ரீன் ஹில்ஸ்” அணியுடன் ஒன்று இன்றும் நடக்க இருக்கின்றது. நடக்கும் இந்தப் போட்டியில் நம் அணி வெற்றி பெற வேண்டும். இதை அடுத்து இன்னொரு நாள் நடக்கும் போட்டியிலும் நம் அணி வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் நமது அணியான ”திருப்பூர் காட்டன் கிளப்” அணி மாநிலங்களுக்கு இடையிலான போட்டியில் கலந்து கொண்டு விளையாடும் வாய்ப்பைப் பெறும். அதனை மனதில் எண்ணியபடியே சுதாகர் களத்தில் இறங்குகிறான்.

அப்போது, சுதாகர் கையில் புது கிரிக்கெட் மட்டை இருந்தது. இதாவது ராசியானதாக இருக்குமா என்ற சிந்தனை மனதில் ஓடியபடியே இருந்தது. ராசியானதாக இருந்தே ஆகவேண்டும். ஒரு நட்பால் கிடைத்த மட்டை இது நமக்கு நிறைய ஓட்டங்களையும் நல்ல பெயரையும் பெற்றுத் தரும் என்று நம்பினான். அந்த நேரத்தில், வெளி உலகையோ அருகில் இருக்கும் விளையாட்டு வீரர்களையோ முற்றிலுமாக மறந்தான்.

எதிரே நிற்கும் நடுவரைப் பற்றிக் கவலை இல்லை. அவர், அவருக்குத் தெரிந்த முடிவைத்தான் சொல்வார். ஆனால் இந்த எதிரணி “கோவை க்ரீன் ஹில்ஸ்” அணி பவுலர்தான் இப்போதைக்கு எதிரியாகவும் பிரச்சனையாகவும் இருக்கிறான். இப்போதைக்கு மட்டுமல்ல. சில காலமாகவே. பலமுறை இந்த எதிரணி பவுலர் ஜம்புவிடம் அவுட்டாகி விட்டோம். இந்த முறை ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றாக வேண்டும். தனது அணியின் வெற்றிக்கு எனது பங்கு மிகவும் அவசியமானது என்றதொரு வெறியுடன் மட்டையை தரையில் அடித்து அடித்து பந்தை எதிர்பார்ததபடி நின்றான்.

ஜம்பு வேகப் பந்து வீச்சாளன். அவனது பந்துக்கு இரையாகமல் போனவர் யாருமில்லை. சுதாகரும்தான். இப்போது இந்த புது மட்டையால் அந்த வரலாற்றை மாற்றியமைத்தே ஆக வேண்டும் என்று சுதாகர் சபதம் செய்து கொண்டான். பல நேரங்களில் இப்படித்தன் நம்பிக்கை கொள்ள வேண்டியதிருக்கிறது. தன் திறமையைக் காட்டிலும் கையில் இருக்கும் ஆயுதஙகள் அல்லது பொருட்கள்மேல் நம்பிக்கை வைக்க வேண்டியதாகிவிடுகிறது.

ஜம்பு ஓடிவந்து பந்தை எறிகிறான். அது நூற்று நாற்பது கிலோமீட்டர் வேகத்தில் வருகிறது. சுதாகருக்கு பந்து மட்டுமே தெரிகிறது. ஜம்பு தெரியவில்லை. ஒரு சில நொடிக்குள் நெருங்கிய பந்து வீசுபவரின் திசை நோக்கியே மட்டையால் திருப்பி விடுகிறான் சுதாகர். நல்ல வேளையாக ஜம்பு மண்டையை பிளந்து இருக்கும். அவன் சுதாரித்துக் கொண்டதால் தப்பித்தான். அவனுக்கும் நடுவருக்கும் இடையே பந்து பாய்ந்து சென்று எல்லைக் கோட்டை எட்டியது. நான்கு ஓட்டங்கள் கிடைக்க., உற்சாகத்தில் துள்ளிக் குதித்தான் சுதாகர்.

”திருப்பூர் காட்டன் கிளப்” அணியின் துவக்க ஆட்டக்காரன் சுதாகர். சுழல் பந்து வீச்சாளனும் கூட. ஆனால், பந்து வீச எப்போதாவதுதான் வாய்ப்புக் கிடைக்கும். முக்கியமான வீச்சாளர்கள் எல்லாம் சுருண்டுபோய் எதிரணியிடம் மண்டியிடுகையில் இவனுக்கு வாய்ப்புக் கிடைக்கும். இவன் பந்து வீச்சால் பல நேரங்களில் அதிர்ஸ்டவசமாக எதிரணியினர் வெற்றி பெற்றுவிடுவது உண்டு. அதனால்தான் பந்தை அடிக்கும் வாய்ப்பு மட்டுமே எப்போதுமே கிடைக்கும். பீல்டிங் செய்யும் நேரங்களில் பவுண்டரி லைனில் இருந்து விக்கட் கீப்பருக்கு வீசுவதுதான் அதிகப்படியான வேலையாக இருக்கும்.

மட்டையை மனதார வேண்டிக் கொண்டு அடுத்த பந்துக்குக் காத்திருக்கும்போதுதான்… தீபாவின் நினைவு வந்தது. அட்டா… இந்த மட்டைமேல் இருந்த அபார நம்பிக்கையால் தீபாவை மறந்துவிட்டோமே என்று நினைத்து ஒரு கணம் தன்னைத்தானே கடிந்து கொண்டான். இது முக்கியமான போட்டியாக இருப்பதால் அடுத்த பந்துகளில் என்ன செய்ய வேண்டும்? தீபாவின் மனதில் இடம் பிடிக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? பந்தை அடித்து நொறுக்கிவிட வேண்டும். தீபாவிற்கு நான்கும் ஆறுமாக அடித்துப் பரிசாக்க வேண்டும் என்று மனதில் உறுதி எடுத்துக் கொண்டான்.

புது மட்டையே நமஹ! தீபாவே நமஹ!!”

இப்போது ஜம்பு பந்து வீச்சில் மாற்றம் செய்கிறான். சுதாகரின் வலது கால் பக்கமாகவே வீசியவன் திடீரென்று இடது கால் பக்கமாக வீச முடிவு செய்து ஓடி வருகிறான். சுதாகர் சாதாரண ஆளா என்ன? பந்து வீச்சில் மாற்றம் செய்வான் என்று கணித்துக் கொண்டு காத்திருக்கிறான். ஒருசில நொடிகளில் பந்து வர… அதை வந்த திசையிலேயே மீண்டும் திருப்ப… இப்போது பந்து ஜம்புவின் தலைக்கு மேல் பறக்கிறது. அந்த நேரத்தில் ஆர்வக் கோளாறோ அல்லது பயத்தினாலோ என்னவோ நடுவர் எகிறிக் குதித்து பந்தைப் பிடிக்க முயற்சி செய்துவிடுகிறார். அப்போது, ஒரு அற்புதமான சிக்சர் கிடைக்கலாம்.

அந்த நேரத்தில் பந்து பார்வையாளர்கள் மத்தியில் விழும்போது ஒரு ஆச்சரியம் நடந்துவிடுகிறது. யாருமே எதிர்பார்த்திடாத வகையில் தீபாவே பந்தைப் பிடித்து விடுகிறாள். கூட்டம் மட்டுமல்ல ஆட்டக் களமே கதிகலங்கிப் போய்விடுகிறது.  சுதாகர் மட்டையை தீபாவை நோக்கி உயர்த்துகிறான். அவளோ… பந்து வீச்சாளர்போல் கைகளை சுழற்றி மைதானத்திற்குள் பந்தை வீசுகிறாள். பந்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஜம்புவின் அருகில் பந்து வந்து விழ, மேலும் கடுப்பாகிப் போகிறான் ஜம்பு.

“டேய் சுதாகர் நீங்க ரெண்டு பேரும் வெளையாட நானாடா கெடைச்சேன்… நான்சென்ஸ்” என்று சுதாகரை நோக்கி கடிந்து பேசிக் கொண்டே அவனருகில் வருகிறான்.

“அடேய் இது உனக்குக் கொடுத்த முதல் அடிடா. இனிதாண்டா இருக்கு வாணவேடிக்கையே… அடுத்த பந்தை, இன்னொரு சிக்சர் அடிக்கிற மாதிரி போடுடா… அந்தப் பந்தை பாரிவையாளர் மத்தியில இருக்குற தீபா கேட்ச் பிடிக்கிறாப்பல வீசுடா” என்று சொல்லிச் சிரித்தபடியே நெஞ்சை உயர்த்திக் கொண்டு ஜம்புவின் நெஞ்சுக்கு எதிராக நிற்கிறான் சுதாகர்.

இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நடுவர்கள் இருவரும், இதற்கும்மேல் இவர்களுக்குள் பிரச்சனை முற்றிவிடக் கூடாதென்ற எண்ணத்தில் ஓடி வந்து சமாதானம் செய்கிறார்கள்.

பிறகு ஆட்டம் தொடர்கிறது. ஜம்புவின் ஓவர்களில் வெறும் பதினெட்டே பந்துகளில் நாற்பது ஓட்டங்களை எடுத்துவிடுகிறான் சுதாகர். இதனால் கோபமுற்ற ஜம்புவின் அணித் தலைவன், இதிலும் இன்னொரு போட்டியிலும் ஜெயித்தே ஆகவேண்டும் என்ற பதற்றமும் தொற்றிக் கொள்ள., அடுத்தடுத்த ஓவர்களை வேறு வீச்சாளர்களுக்கு வழங்கி விடுகிறான். இதனால் ஜம்புவிற்கு பந்து வீசும் வாய்ப்பு இந்த ஆட்டத்தில் பறிபோய்விடுகிறது. சுதாகரை வீழ்த்த வேண்டும் என்ற அவனது கனவும் கலைந்து போகிறது. இதனால் ஜம்பு மனமுடைந்த நிலையில் ஃபீல்டிங் செய்து கொண்டிருக்கிறான்.

இப்போதும் விட்டானா சுதாகர்! ஜம்பு நிற்கும் திசை நோக்கியே சாத்து சாத்தென்று பந்தை விளாசினான். அவன் ஓடி ஓடி ஓய்ந்து போனதைக் கண்ட அந்த அணித் தலைவன் வேறு ஒரு இடத்திற்கு ஜம்புவை மாற்றி நிற்க வைத்தான். அவனுடைய போதாத காலமோ என்னமோ… அவன் நிற்கும் இடத்திற்கு அருகில்தான் தீபா அமர்ந்திருந்தாள்.

“டேய் சுதா [சுதாகர்]… அடிச்சு தூள் கெளப்பு. நான் வாங்கிக் கொடுத்த பேட் உனக்கு ராசியான பேட்டாத்தாண்டா இருக்கு”. தீபா கத்தியது சுதாருக்குக் கேட்டதோ இல்லையோ ஜம்புவிற்கு நன்றாகவே கேட்டது.

அப்போது, தீபா அருகில் உட்கார்ந்திருந்த ஒரு இளைஞன்

”தீபா சரியான நேரத்தில நீ ஒரு வீரனுக்கு சரியான உதவியத்தா செஞ்சிருக்கே”  என்று அவள் முதுகில் தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.

”அடியே தீபா… ஓ உன்னோட லவ்வுதான் சுதாகர இப்படி ஆட்டி வைக்குதோ?” என்று தீபாவை முறைத்துப் பார்த்துவிட்டு ஜம்பு ஆட்டத்தில் கவனம் செலுத்தினான். ஆனால், தீபாவை ஜம்பு முறைத்துப் பார்த்ததை தீபாவின் அருகில் அமர்ந்திருந்த இளைஞன் சரியாக கவனிக்கவில்லை. 2222அந்த இளைஞன் செல்லில் வந்த அவசர அழைப்பில் பேசிக் கொண்டிருந்தான்.

ஆனாலும், இன்றைக்கு இந்த நாளும் இந்த ஆட்டமும் தனக்கு பெரும் சோதனையாகவே அமைந்து போனதாய் நினைத்தான் ஜம்பு.. அதே நேரம் இருபது ஓவர்கள் முடியும் தருவாயில் சுதாகர் ஐம்பது ஓட்டங்களை எடுத்து உற்சாக வெள்ளத்தில் மிதந்தான். இது ஜம்புவிற்கு பெருத்த அவமானமானதாகவும் தோன்றியது.

இருபது ஓவர் கொண்ட போட்டியில் முதலில் ஆடத் துவங்கிய ”திருப்பூர் காட்டன் கிளப்” அணியானது சுதாகரின் அபார பேட்டிங்கால் நூற்று அறுபது ரன்களை எட்டியிருந்தது.

இதில் வேடிக்கை என்னவென்றால் சுதாகரும் ஜம்புவும் இருவரும் கீரியும் பாம்பும் போல இருப்பது நல்லது என்று நினைத்த இரண்டு அணித்த தலைவர்களும் அவர்களை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டனர் என்பது வேறு விஷயம். சுதாகர் ஆட்டத்தில் ரன் மழை பொழியும் என்று இவன் அணித் தலைவன் நினைப்பான். ஜம்புவின் வீச்சில் விக்கெட் மழை பொழியும் என்று அவன் அணித் தலைவன் நினைப்பான்.  இதனால் மாவட்ட அளவிலான போட்டிகளில் இரு அணியிலும் இவர்கள் இருவரும் இருந்தே ஆக வேண்டும் என்ற எழுதாத விதி இருந்தது. இதனால் இந்த அணிகள் கலந்து கொள்ளும் போட்டிகளில் எல்லாம் அனல் பறக்கும் என்பது உள்ளூர் ரசிகர்களுக்கும் தெரியும். இந்த உள்ளூர் ரசிகர்களில் தீபாவும் ஒருத்தி.

இன்றைய போட்டியும் இதற்கு அடுத்து நடக்க இருக்கும் போட்டியும், சுதாகரின் கிரிக்கெட் விளையாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் போட்டியாக இருக்கப் போகிறது. இந்தப் போட்டியில் தனது திறமையைக் காட்டி நிரூபித்துவிட்டால் இந்திய அளவிலான போட்டிகளில், ஏன் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில்கூட கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைக்கலாம். அதனால் அவன் சிறப்பாக விளையாட வேண்டும். வெற்றிபெறவேண்டும் என்ற எண்ணத்தில் புதிய பேட் ஒன்றை வாங்கி பரிசளித்திருந்தாள் தீபா. அந்த மட்டை நன்றாகவே வேலை செய்தது. ரன் மழையும் குவிந்தது.

அந்த நேரத்தில் தீபாவுடன் அமர்ந்திருந்த அந்த நண்பனுக்கு அவசரமான ஒரு தொலைபேசி அழைப்பு வரவே அவன் தீபாவிடம் சொல்லிவிட்டு உடனடியாக மைதானத்தைவிட்டு வெளியேறினான்.

அப்போது சுதாகருக்கு பந்து வீசப்படுகிறது. நன்றாக  நிதானித்துக் கணித்து மட்டையை ஒரு சுழற்றுச் சுழற்றுகிறான். பந்து வானை நோக்கிப் பறக்கிறது. மேற்கு வானில் சூரியன் இருக்கும் நேரமாதலால் பந்து மின்னிக் கொண்டு வெள்ளிக் கோள்போல் பறந்து போகிறது. பீல்டர்கள் எல்லோரும் வாயைப் பிளந்தபடி பார்த்துக் கொண்டிருக்க மெதுவாகக் கீழிறங்கிய பந்து தீபாவின் தலைக்கு மேல் வருகிறது. அவள் சுதாரிப்பதற்குள் வந்து… நச்சென்று நடு மண்டையில் விழுந்து தெறித்து ஓடுகிறது.

பார்வையாளர்கள் எல்லோரும் கத்திக் கொண்டு தீபாவின் பக்கமாக ஓடுகின்றனர். சுதாகரும் மட்டையை வீசியெறிந்துவிட்டு ஓடுகிறான். அவனுடன் சில வீரர்களும் அவனுடன் ஓடுகின்றனர். பக்கத்தில் இருந்த தோழிகள் தீபாவின் தலையைத் தேய்த்து விடுகின்றனர். ஆனாலும் அதற்குள்ளாக தலையில் ஒரு பந்து உருவாகிவிடுகிறது. அந்த அளவிற்கு வீக்கம்.  நண்பர்கள் வைத்திருந்த பவர் ஸ்ப்ரேயரை வாங்கி சுதாகர் அவள் தலையில் அடித்து விடுகிறான். சுதாகரை தீபாவின் தோழிகள் எல்லோரும் ஏக வசனத்தில் திட்டித் தீர்க்கின்றனர்.

“சாரி தீபா ஐ எம் வெரி சாரி. தெரியாம நடந்துட்டுது. ஸ்ப்ரே பண்ணியிருக்கேன். சீக்கிரம் வீக்கம் கொறஞ்சிடும். இருந்தாலும் பக்கத்தில் இருக்கும் ஆஸ்பத்ரிக்குப் போய் ஒரு ஸ்கேன் பார்த்திடலாம்” படபடப்புடனும் பயத்துடனும் பேசினான் சுதாகர்.

ஆனால் அவன் என்ன சொன்னான் என்பது புரியவில்லை. அதுவரை அமைதியாக இருந்த தீபா, தலையைத் தடவிப் பார்த்தபிறகு இப்படி வீங்கிவிட்டதே என்று பதறியவள் ’ஓ’வென்று அலறிவிட்டாள். பக்கத்தில் இருந்த தோழிகள் ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்க தீபாவின் நெருங்கிய தோழி ஜென்சி தனது ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு வந்தாள். வந்தவள்…

“போடா லூசு. எனக்கு அப்பவே தெரியும். நீ இந்த வேலையச் செய்வேன்னு. ஆள் பார்த்து அடிக்கிறியாடா நீ” என்று சுதாகரைத் திட்டிவிட்டாள்.

“தீபா வாங்கித் தந்த பேட்டில ரன் மழை பொழிஞ்சு கிஃப்ட் கொடுப்பான்னு பார்த்தா… இவன் என்னடானா தீபாவோட தலைக்கே பந்து வீசி காயத்த பரிசாக் கொடுத்திட்டான்” இது தீபாவின் இன்னொரு தோழியின் கண்டனம்.

’நல்ல வேளையாக, தீபாவோட ஆண் நண்பன் இப்போ இங்கே இல்லை. இருந்திருந்தால் பெரிய பிரச்சனை ஆகியிருக்கும்’ என்று ஜென்சி மனதிற்குள் தனக்குள் பேசிக் கொண்டாள். தீபாவை பின் இருக்கையில் உட்காரவைத்து  அவளுடைய ஸ்கூட்டரில் சர்ரென்று பறந்துவிட்டாள். அவளுடன் சில தோழிகளும் பறந்தனர்.

ஜென்சி சொன்னது எதுவுமே புரியாமல் விழித்துக் கொண்டிருந்தான் சுதாகர். அதற்குள் இவனுடன் இருந்த நண்பர்கள்., இவனைக் கேலி செய்ய ஆரம்பித்தனர். பந்து விசிய நண்பன் கேட்டான்…

“மச்சா… பிளேன் பண்ணியே அடிச்சியாடா?” என்று.

“என்டா நாயே…  வேகமா வந்த பந்த நான் அலேக்கா தட்டிவிட்டேன். அது பறந்து போச்சு. இவ தலையில விழும்னு எனக்கெப்படிடா தெரியும்?” கைகளை விரித்தபடியே கொஞ்சம் டென்சனுடன் சொன்னான்.

“சரி சரி. போ போ. எந்த ஆஸ்பத்ரிக்குப் போறாங்கன்னு விசாரிடா.  நீ கண்டுக்காம விட்டுட்டா, தீபா அப்பா அம்மா உன் மண்டைய பொளந்திடுவாங்க” என்று சொல்லிச் சிரித்தான் விக்கட் கீப்பராக இருந்தவன்.

“டேய் வாங்கடா நாமும்  பாலோ பண்ணுவோம். என்ன தனியா விட்டுடாதீங்கடா” என்று சுதாகர் கெஞ்சிக் கொண்டிருக்க.,

அவன் நண்பர்கள் ஆளுக்கொரு பைக்கை எடுத்துக் கொண்டு தீபா போகும் வழியில் சென்றனர். தீபா குழுவினர் எந்த மருத்துவமனைக்குச் செல்கிறார்கள் என்பதெல்லாம் ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் இந்தக் கல்லூரிக்கு மிக அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்குத்தான் சென்றிருப்பார்கள் என்ற நம்பிக்கையில் அங்கு சென்று பார்த்தனர். ஆனால், அப்படி யாரும் வரவில்லையென்று மருத்துவமனையில் சொல்லிவிட்டார்கள்.

பிறகு ஒரு சிறிய மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கும் இல்லை. ஆள் மாற்றி மாற்றி தீபாவிற்கு அவள் தோழிகளுக்கும் போன் செய்து பார்த்தனர். யாரும் எடுக்கவில்லை. இதனால் பதற்றமடைந்த சுதாகருக்கு இப்போது மண்டை வீங்க ஆரம்பித்திருந்தது. லேசாகத் தலை வலித்தது. இதன் பின் விளைவுகள் எப்படியாக இருக்குமென்று கவலை கொண்டான். தலையில் அடிபட்டு அவளுக்கு ஏதாவது பிரச்சனை வந்துவிடக் கூடாதே என்று கடவுளை வேண்டிக் கொண்டே சென்றான். கிரிக்கெட் பந்து தலையில் மோதி உயிரை பறி கொடுத்த சம்பவங்களும் உண்டு என்பது நினைவிற்கு வந்து போனது. தீபாவின் பெற்றோர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறோம் என்பது தெரியவில்லையே என்று பதறிய சுதாகருக்கு அழுகையாகவும் வந்தது. 

தீபாவை அழைத்துக் கொண்டு அவள் தோழிகள் எல்லாம் சூலூருக்கு அருகில் இருக்கும் ஒரு மருத்துவ மனைக்குச் சென்றுவிட்டனர். பத்து கிலோ மீட்டர் தொலைவை ஐந்தே நிமிடங்களில் கடந்திருக்கின்றனர். அவ்வளவு வேகம். அந்த மருத்துவமனைக்குள் ஜாமர் கருவி இருந்திருக்கிறது. அதனால்தான் அவர்கள் கைப்பேசிகள் வேலை செய்யவில்லை. ஆனால், அதே சமயம் தீபாவுக்கு ஏற்பட்ட நிலைமையை தீபாவின் நண்பனுக்கு போனில் சொல்லி விட்டார்கள். அவன் வெளியில் முக்கியமான வேளையில் இருந்ததால் தீபாவைப் பார்க்க வரவில்லை.மேலும் தீபாவை நன்றாகக் கவனித்துக் கொள்ளும்படி சொல்லியிருந்தான்.

“எவளாவது ஒருத்தியாவது போன் பண்ணிச் சொன்னாளா? இங்க அவனவன்பாடு திண்டாட்டாமா இருக்கிறது எவளுக்குப் புரியும்?” என்று தலையைப் பிடித்துக் கொண்டு ஒரு டீக்கடையில் உட்கார்ந்துவிட்டனர் சுதாகர் உட்பட அவனுடன் வந்த நண்பர்கள் எல்லோரும். அந்த நேரம் பார்த்து ஒரு ஆம்புலன்ஸ் அலறிக் கொண்டு எங்கோ விரைந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் சுதாகருக்கும் இன்னும் கலக்கமானது.

இரண்டு மணி நேரத்திற்குள்ளாக தீபாவுக்கு சிகிச்சை முடிந்து திரும்பும்போது இவர்கள் கூல் டிரிங்க்சும் டீயும் குடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டாள் ஜென்சி. இவர்கள் இருக்கும் பக்கமாக வண்டியைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டு சுதாகரை நோக்கி விரைந்தாள்.

“பாய்ஸ்… என்னடா இங்க பார்ட்டியா நடக்குது? நாங்க எல்லோரும் லோ லோன்னு ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியா சுத்திக்கிட்டு இருக்கோம். நீங்க கூல் டிரிங்கஸ் குடிச்சிட்டு இருக்கீங்களோ? தீபாவுக்கு எதாச்சும் ஒன்னுன்னா யாருடா பதில் சொல்றது?” என்றாள் ஜென்சி கோபத்துடன்.

அவள் கோபத்தைப் பார்த்த சுதாகரின் நண்பர்களுக்குப் பயம் பிடித்துக் கொண்டது. தீபாவுக்கு ஏதாவது விபரீதமாக ஆகிவிட்டதோ என்று. சுதாகரும் அவனது நண்பர்களும் நடந்ததை எல்லாம் விளக்கமாகச் சொல்லியும் அவள் உட்பட யாரும் செவி சாய்க்கவில்லை.

“சாரிங்க. நாங்களும்…” என்று சுதாகர் சொல்ல வாயெடுத்தான்.

“நீ ஆணியும் புடுங்க வேண்டாம். மொதல்ல ஆஸ்பத்திரிச் செலவு ரெண்டாயிரம், பெட்ரோல் செலவு எங்க மூனு வண்டிக்கும் சேர்த்து ஆறுநூறு எடுங்க. நாளைக்கு எங்க வீட்டுல பெட்ரோலுக்குக் காசு கேட்டா நடந்து போங்கன்னு சொல்லிடுவாங்க. காச எடுங்கடா” என்று ஜென்சி சத்தம் போட்டுச் சொன்னாள்.

ஆளாளுக்குக் கையில் காலில் இருந்த ஐந்து பத்தையெல்லாம் சுதாகரின் நண்பர்கள் அடித்துப் பிடித்து எடுத்துக் கொடுத்தனர். சிலர் சட்டைப் பையை தடவிப் பார்த்துக் கொண்டு நின்றனர். தன்னிடம் இருந்த காசை ஏற்கெனவே கடைக்காரரிடம் கொடுத்துவிட்டதால் நிராயுதபாணியாக நின்றான் சுதாகர். அவனைப் பார்க்கவே பாவமாக இருந்தது. தீபாவின் அனுதாபப் பார்வையை அந்த நேரத்தில் கவனித்த சுதாகருக்கு சங்கடமாகப் போய்விட்டது. 

ஆனாலும், சுதாகருக்கு ஒரு சந்தேகம் வந்தது. தீபாவின் தலையில் கட்டுப் போட்ட ஆடையாளமே தெரியவில்லை. அவள் தலையில் அடிபடவேயில்லையோ என்று நினைத்தான். அவன் அப்படி நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில்…

“என்ன பார்க்கிறே மேன்… ஒரு கட்டையோ பிளாஸ்திரியையோ காணலையேன்னுதானே பார்க்கிறே” என்றாள் சுதாகரின் அருகில் வந்த தீபா.

“அதான்…” இழுத்தான் சுதாகர்.

“செப்டிக் ஊசி போட்டுவிட்டாங்க. ஸ்கேன் ரிப்போர்ட் சாயுங்காலம் வருமாம். நீ என்ன பண்றீனா… அந்த ரிப்போட்ட போய் வாங்கிட்டு வந்து எங்கிட்ட கொடுத்திடு… என்ன?” கொஞ்சம் கோபத்துடனும் கொஞ்சம் நக்கலுடனும் சொன்னாள் தீபா.

அவள் சொன்னதைக் கேட்ட பெண்கள் எல்லாம் விழுந்து விழுந்து சிரித்தனர். அவர்களுடன் விக்கெட் கீப்பரும் சேர்ந்து சிரித்தான். இதைப் பார்த்த சுதாகர்  கோபத்துடன் ஒரு முறை முறைக்க அவன் தலையைத் திருப்பிக் கொண்டான்.

“சரி. சரி. அலைஞ்சு திரிஞ்சி ஒரே டயர்டா இருக்கு. ரெண்டு லிட்டர் பாட்டில் பொவாண்டோ ரெண்டு பாட்டில் வாங்குங்க கிரிக்கெட் கீப்பர்” என்றாள் ஜென்சி. அவன் தலையைத் தடவிக் கொண்டே பிரிட்ஜை நோக்கிச் சென்றான்.

அதே நேரம் சுதாகர் தீபாவின் அருகில் தயங்கித் தயங்கிச் சென்று நின்றான். எந்த அளவிற்கு தலையில் அடிபட்டிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளும் எண்ணத்தில் எதிரே நின்றான். அவளோ அவன் எண்ணத்தைப் புரிந்து கொண்டு தலையைத் தாழ்த்திக் காண்பித்தாள். நன்றாகவே வீக்கம் இருந்தது. அடிபட்ட இடத்தைத் தடவி விட்டடுமா என்று பார்வையால் கேட்டான். அவளும் தலையசைத்தாள்.

அந்தப் போட்டி தீபா அடிபட்டதால் பாதியிலேயே  நின்று விடுகின்றது. சில மாதங்களுக்கு பிறகு, கடைசியாக இன்னொரு போட்டி அதே மைதானத்தில் நடக்கிறது. இந்தப் போட்டியில் சுதாகர் அணி ஃபீல்டிங் செய்யத் தயாராகிறது. இப்போது ஆடும் மட்டையர் சிறந்த ஆட்டக்காரர். அவரை அவ்வளவு எளிதில் வீழ்த்திவிட முடியாது. துடுப்புப் போட்டு நங்கூரம் பாய்ச்சி நிற்பதில் கில்லாடி. சுதாகரின் பந்தெல்லாம் தனக்கு அல்வா சாப்பிடுவது போல என்று அசால்டாக நினைத்துக் கொண்டு பந்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறான். அவன் வேறு யாருமல்ல… ஜம்பு.

சுதாகர் பந்து வீசுகிறான். இந்தச் சூழலை நினைத்த இரு நடுவர்களுக்கும் கொஞ்சம் கலக்கம்தான். ஏதாவது தகராறு செய்து கொள்வார்களோ என்று. ஏனென்றால் பல முறை இவர்களுக்குள் வார்த்தைப் போர் முற்றியிருக்கிறது. சில நேரங்களில் டீ சர்ட்டைப் பிடித்து இழுத்து மூக்கோடு மூக்கை உரசிக் கொண்டு சூடு பறக்க முறைத்துக் கொண்ட சமாச்சாரங்கள்  உண்டு.

முதல் பந்திலேயே  நான்கு ஓட்டங்களை எடுக்கிறான் ஜம்பு. அடுத்த பந்தில் இரண்டு. மூன்றாவது பந்தில் ஒரு சிக்ஸ்! அவ்வளவுதான் அவனது தலைவன் வந்து சுதாகரை திட்டித்தீர்த்துவிட்டு, பந்தை மாற்றி வீசு என்று யோசனையும் சொல்கிறான். அதன்படியே விசுகிறான்.

”இந்த முறை ஒரு ஆறு எடுத்து அதை உன் காதலிக்கு என் பரிசாக அனுப்புகிறேன் பாரடா” என்ற வெறியுடன் வாயில் முனுமுனுத்துக் கொண்டே காத்திருக்கிறான் ஜம்பு.

வேகமாக வந்து… சட்டென்று பந்தின் வேகத்தைக் குறைத்து வீசுகிறான் சுதாகர். பேட்ஸ்மேன் அதைத் தூக்கி அடிக்க… வானில் பறக்கிறது.  நான்கு வினாடிகளுக்குப் பிறகு சுதாகரின் தலைக்கு மேல் வருக்கிறது. சுதாகர் அப்படியே பந்தைப் பார்த்து நின்று கைகளை உயர்த்துகிறான். கைகளில் அழகாக வந்து விழுந்திட ஜம்புவின் விக்கெட் கிடைக்கிறது ஒரு அல்வா போல.

கூட்டம் ஆரவாரம் செய்கிறது. தீபா துள்ளிக் குதித்து கைகளைத் தட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறாள். அவளைப் பார்த்து சுதாகரும்  நன்றி சொல்லும் விதமாக பதிலுக்கு கையை உயர்த்திக் காட்டுகிறான். அவளும் அவனை உற்சாகப் படுத்துகிறாள். இதையெல்லாம் ஒரு சில நொடிகளில் பார்த்துவிட்டு மனம் வெதும்பிய ஜம்பு சுதாகரை அடிக்காத குறையாக மட்டையை நிலத்தில் அடித்துக் கொண்டே பெவிலியன் திரும்புகிறான்.

அடுத்து, புதிய பேட்ஸ்மேனுக்கு பந்துவீசத் தயாராகிறான் சுதாகர். சுதாகர் மிதமான வேகத்தில்தான் பந்தை எறிவான் என்று நினைத்து மட்டையைத் தூக்கிய பேட்ஸ்மேனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சுதாகரிடம் இருந்து நூற்றுப் பத்துக் கிலோமீட்டர் வேகத்தில் பந்து சுழன்று வந்து பேட்ஸ்மேனின் வலது காலை பதம் பார்க்கிறது. விக்கெட்டைத் தடுத்து நின்ற காரணத்தால் அந்த மட்டையரும் ஆட்டம் இழக்கிறார். இப்போது ஃபீல்டர்கள் மட்டுமல்ல… மைதானத்தில் இருப்பவர்களும் உற்று நோக்க ஆரம்பிக்கின்றனர். சுதாகார் இன்னொரு விக்கெட் எடுத்தால் ஹாட்ரிக்.

அடுத்ததாக,  “கோவை க்ரீன் கிளப்” அணியின் தலவைனே களம் காண வருகிறான். தொன்னூறே கிலோமீட்டர் வேகத்தில் ஆடி அசைந்து சுழன்று வந்து விழுந்த பந்தை அடிக்க நினைக்கையில், பந்து நிலத்தில் விழுந்து திசை மாறி மட்டைக்கும் காலிற்கும் நடுவில் புகுந்துபோய் நடு விக்கெட்டைத் தூக்கி விசுகிறது. அப்படிப் பறந்த ஸ்டெம்பை விக்கெட் கீப்பர் கேட்ச் பிடிக்கிறான்.

இந்தக் கூத்தைப் பார்த்த பார்வையாளர்கள் எல்லாம் கைகொட்டிச் சிரிக்கிறார்கள். அந்த மட்டையாளரும் நடையக்காட்ட… ஹாட்ரிக் சாதனை சுதாகருக்குக் கிடைக்கிறது. அணித்தலைவன் உட்பட எல்லோரும் வந்து சுதாகரை ஆரத் தழுவி தட்டிக் கொடுத்து உற்சாகப் படுத்துகிறார்கள்.

போட்டி வெகு சீக்கிரமே முடிந்து “திருப்பூர் காட்டன் கிளப்” பெரிய வெற்றியை ருசிக்கிறது. சுதாகர் ஆட்ட நாயகன் ஆகிறான். மாநில அளவிலான சர்வதேச போட்டிகளில் விளையாடும் வாய்ப்பும் பிரகாசமாகிறது. இதையெல்லாம் கண்ட தீபாவின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிவதைப் பார்த்தவன், இந்த வெற்றியை உனக்குப் பரிசளிக்கிறேன் என்று பார்வையால் சொல்கிறான். அவளும் தலையசைக்கிறாள். தீபாவுடன் அமர்ந்திருந்த இளைஞனும் கை தட்டி ஆர்ப்பரிக்கிறான்.

அப்போது “அந்த விளையாட்டு” முடிந்ததும், தீபாவுடன் வந்திருந்த இளைஞன் சுதாகருக்கு வாழ்த்துத் தெரிவிக்க தீபாவுடன் மைதானத்திற்குள் இறங்கி வருகின்றான்.

“தீபாவுக்கு ஒரு பெஸ்ட் ஃப்ரண்டா இருக்கீங்க. உங்களப் பத்தி அடிக்கடி தீபா பேசுவா. இப்போ சூப்பரா ஆடி எல்லோர் மனசிலும் இடம் பிடிச்சிட்டீங்க சுதாகர். உங்க ஆட்டம் எனக்கே பிடிச்சிருக்குன்னா பார்த்துக்குங்களேன். தீபாவ நாந்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். அடுத்த மாசம் நடக்கிற கல்யாணத்துக்கு உங்க டீமே வரணும்” என்று அவன் சுதாகரின் கைகளைப் பற்றிக் கொண்டு சொன்னான்.

தீபாவுடன் வந்தவன் ஜம்புவைப் போல் இன்னோரு வில்லனா என்று நினைத்து சிறிது குழப்பமடைகிறான்… சுதாகர், கோப்பையை கையில் ஏந்திக் கொண்டே. தீபா தன் வருங்காலக் கணவனின் கைகளைப் பிணைத்துக் கொண்டு மைதானத்தைவிட்டு வெளியேறுகிறாள். சுதாகர் கையில் இருந்த கோப்பையை ஜம்புவை அழைத்து அவன் கைகளில் கொடுக்கிறான். ஜம்புவும் சுதாகரைப் பாராட்டுகிறான்.

விளையாட்டும் வாழ்க்கையும் ஏமாற்றுவதில் ஒன்றுதான் என்று அமைதியான சுதாகர்., தன் மனதில் காதலியாக சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்தவள் இப்போது ஒரு தொலைதூரத்தில் நிற்கும் தோழியாக மாறுவது தன் வாழ்க்கையில் மட்டும்தான் என்று நினைத்தவன் தீபா வாங்கிக் கொடுத்த புது மட்டையுடன் ஒரு ஓரத்தில் இருந்த பெஞ்சில் போய் உட்கார்ந்தான்.

000

ரத்தினமூர்த்தி

ஆவாரங்காடு, தாகநதி, குமரன் சாலை ஆகிய நாவல்களும், ஆத்மாவின் சுவாசங்கள், காட்டு மல்லி, அடர்வனம், விசாலம் ஆகிய கவிதை தொகுதிகளும், அப்பாச்வின் நிழல் என்கிற சிறுகதை தொகுப்பும் முன்பாக வெளியிட்டவர். திருப்பூரில் வசிக்கிறார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *