இலட்சுமணப் பிரகாசம் கவிதைகள்.

1.

காயாக இருக்கும் போதே பறிக்கப்பட்ட பப்பாளி

பழமென பழுப்பதற்கு மற்றுமொரு நாளுக்காக காத்திருக்கிறது

உலையில் போடப்பட்ட அரிசி பதத்தில் வெந்து கொண்டிருக்கிறது

தொடுகறியாக வேலியில் விளைந்த பாகற்காய்

எஞ்சியிருக்கும் நெல்லை குத்தியெடுக்க மழைபெய்யாதிருக்க வேண்டும்

சடங்காகி நின்றவளுக்கு முலைக்காம்பில் பாரம் கவிந்திருப்பதான பயம் தொற்றிக்கொள்கிறது

வயல்எலிகளின் வளையில் சாரைப்பாம்பு இரைதேடி ஊர்கிறது

உழுத வயலில் மாலைநேர வெயில் மயிலென நடனமிடுகிறது.

அன்றைய நாளில் தான் கூரை மீது அடைக்கலமான சேவல்

விடியற்பொழுதில் காணாமல் போயிருந்தது.

அது நேர்த்திக் கடனுக்கான காவச்சேவல் என்பதை

களவுக் கரங்களறிந்திருக்கப் போவதில்லை.

2.

சோளம் ஒடிக்க சோடிப் பெண்டுகளோடு சென்றவள்

புருஷனில்லா இளம்பெண் கருவுற்ற கதையைப் பேசிப் பொழுது கழித்தாள்

சூலாடு ஈத்துக்கு நிற்கையில் யோனியின் வாயிலிருந்து விழும் குட்டிக்காக காத்திருத்தல்

அரவை மில் சத்தம் வீதியை ஆக்கிரமித்துக் கொள்கிறது

கோணிப்பையை அகல விரித்து நெல்லை மூட்டைப் பிடிக்கின்ற பொழுதில்

உச்சியில் நிற்கும் சூரியன்

செவ்வரளியில் அமர்ந்து படபடக்கும் புலிநிறச் சிறகுள்ள பட்டாம் பூச்சி

குலை தள்ளிய வாழையை அறுவடை வரை கண்காணித்தல்

வேப்ப முத்துக்கள் விழும் மரத்தினடியில் தவிட்டுக் குருவிகளின் கிறீச்சிடல்

வெடித்த இலவம் பஞ்சுகள் காற்றில் பறத்தல்.

3.

மரக்கால் நிறைய நெல்அளந்து வைக்கப்பட்டுள்ளது

செழுமை தரும் நிலத்திற்கும் தெய்வத்திற்கும் படையலிட

களத்தில் இரைந்து கிடக்கும் நெல்மணிகள் மழையில் நனைகின்றன

பத்தாயத்தில் சேமித்த பச்சை நெல்லின் வாசம் மூக்கிலேறுகிறது

பச்சை நெல்லில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஈரத்திற்கும் போதையுண்டு

அறுவடை நிலத்தில் குருவிகளின் பாட்டு

அடுத்த விதைப்புக்கு ஆழஉழுவதற்கும் பதப்படுத்தலுக்கும் தயாரகிறது புஞ்சை நிலம்.

ஒரு பாட்டம் மழை நெஞ்சிலிருந்து பெய்கிறது.

4

புழுதி படிந்த வாசல் சுவர் இடிந்த பின்னும் நிலைத்திருக்கிறது

நிலைக் கதவு மட்டும் எஞ்சியிருந்த வீட்டில்

வேய்ந்த கூரை பொத்தல் பொத்தலாக கிடக்க.

சில்வண்டின் ஒலி உள்ளிருந்து ஒலிக்கிறது

நிலவின் ஒளி சன்னலின் வழி எளிதாக வந்து செல்கிறது இரவுகளில்

இன்னும் மிச்சமிருக்கின்றன எஞ்சிய சொற்களின், வாழ்வின்,

மானுடச் சுவடுகளின், ஈரங்களின் நெடி

மக்கிப் போன கசடுகளில் ஏதோவொன்றின்

பழுத்த ரேகைகள்.

5.

கடுதாசி சொருகி வைக்கப்பட்ட தாழ்வாரம் மழையில் நனைகையில்

எழுத்துகள் சேதமுற்றாலும் சொற்களின் பொருளமைதி கெடுவதில்லை

செல்லரித்த காகிதங்கள் எழுத்துகளை வாசிப்பதற்கு வாசகனை இழுக்க முயல்கிறது

லாந்தர் வெளிச்சம் கொண்டு எழுதப்பட்ட லிபி

மைக்கூடு துளி மசியோடு காலம் தாவித்தாவி வருகிறது

பரனில் போட்டுவைத்த பழங்காவியம் பூச்சிகளுக்கு இரையாகிறது

எத்தனையாவது பக்கத்தில் என்ன நடக்கும் என்பது எழுத்தும் வாசகனும் கூட அறியாதது.

ஒரு முடிவிலா கண்ணா மூச்சி விளையாட்டு அது.

6.

ஒரு தீக்குச்சியுரசும் சத்தம் துள்ளியமாக விழுகிறது

விளக்கு, மெழுவர்த்தி, அல்லது சருகுக் குவியல்களுக்காக.

விலகியோடும் இருளில் யானையின் பிம்பம் தோன்றி மறைகிறது.

தகிக்கும் கொடுந் தாகத்தைத் தணிப்பதற்கு

என் காலடியருகில் ஒரு அமைதி வெள்ளம் ஊற்றெடுக்கிறது.

7.

சிதறு தேங்காய்க்கென தேர்கையில் காய் பதமெப்படியென சோதித்தல்

தேநீரில் சர்க்கரை போதுமாவென ஒரு மிடறு அருந்திச் சுவைத்தல்

நீச்சல் தெரியாத போதும் கிணற்றில் தலைகீழாய் சொறால் போட்டுவிட எண்ணுபவன்

கள்ளத்தனமாக பெண்களின் முலைகளை வருட எண்ணுபவன்

கடவுளின் சந்நிதானத்தில் பழமென காட்சியளித்தல்

மேலும் நமைச்சல்களைப் பொறுத்தல்,

சிரங்குப் புண்ணில் சொரிய சொரிய இன்பம் துய்த்தல்.

8.

குளிருக்கு இதமான தழுவல், மெல்லிய புன்னகை

கண்களில் தெளிவும் குழப்பமற்ற பேச்சும் நீளும் இரவுப் பொழுதை வரவேற்கிறது.

திரியைத் தூண்டத் தூண்ட துலங்கும் வெளிச்சம்

மலையிலிருந்து நீண்ட தூரத்தில் போய் எதிரொலிக்கும் உள்மன ஓசை

செம்பருத்தியின் மொக்குகளில் பனித் துளிகள்

மலர்வதற்கு முன்பு எழும் மலரின் வாசனை

இதழின் சிவப்பை மகரந்தங்களை துள்ளியமாக வரைதல்.

9.

பொம்மையை தனது தோழியாகவும், சகோதரியாகவும் பாவித்தவள்

அதற்கு சடைகளையும், பொட்டுமிட்டு அழகு பார்க்கிறாள்

அவளுடைய கரங்களில் தவழ்ந்த பொம்மையை கொஞ்சுகிறாள்

தன்னுடைய வயதும் அவளது வயதும் ஒன்று போல

அவளை தன் சிறிய கண்களால் இமைகளை இமைத்து இமைத்து பார்க்கிறது.

பதின்மத்தில் அவள் இழக்கத் தொடங்கிய குழந்தைமை

மீளவே யில்லை

அதன் பிறகு அவள் பொம்மைகளோடு விளையாடவில்லை.

முதுமையின் தொடக்கத்தில்

ஒவ்வொரு குழந்தையின் கைகளிலும் பொம்மைகளைப் பார்க்கிறாள்.

வேடிக்கையாகப் புன்னகைத்துவிட்டு நகர்கிறாள்.

மீண்டும் நிகழாத ஒன்றின் ஏகத்தோடு.

10.

ஊஞ்சலுக்காக கயிறுகள் கட்டப்பட்ட கிளை

முறிந்து விழுகிறது

காயம்பட்ட தழும்பு போல் மனதில் நிழலாடுகிறது

இளமை

தடமின்றி அழிந்து போன கிணறுகள் முளைத்தெழுகிறன்றன கனவில்

செம்பருத்திப் பூத்த இடத்தில்.

000

இலட்சுமண பிரகாசம்

சொந்த ஊர் : சேலம் மாவட்டம் தலைவாசல். தற்போது புவனகிரி அருகே அரசு பள்ளியில் முதுகலைப் பட்டதாரியாக பணியாற்றி வருகிறார். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் என தொடர்ந்து எழுதியும், இலக்கிய கூட்டங்களையும் நடத்தி வருகிறார். ‘மிருகத்தின் வாடை’ என்கிற கவிதைத்தொகுதி நடுகல் வெளியீடாக சென்ற ஆண்டு இறுதியில் வெளிவந்துள்ளது.

2019 ம் ஆண்டு கஸல்களைப்பாடும் யாரோ ஒருவன் – இந்த நூலுக்காக கலை இலக்கிய மேடை விருது கிடைத்தது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *