இலட்சுமண பிரகாசம் கவிதைகள்

1.

கடற் கவிதை.

I

அருகில் கடல் விரிந்துகிடக்கிறது

நான்

கடலின் கரையிலிருந்து விலகியிருக்கிறேன்.

கடலின் கரையிலிருந்தும்

வானக் கடலின் கரையிலிருந்தும்.

II

உரத்த சத்தமெழுப்புகிறது இந்த கடல்

நான்

கடலின் கரையிலிருந்து விலகியிருந்தும்

ஆழ்கடல் மௌனத்தின் அருகில் இருக்கிறேன்.

III

பரந்த கடலின் நீலம் கண்டு மருள்கிறேன்

ஆ!

அத்தனை நீலம்! அத்தனை நீலம்!

IV

மடங்கி விழும் அலைகள்

எப்போது ஆழிப்பேரலையாய் மாறுமோ?

எனக்கான இசையை இரவின் போது ஆழ்கடல் பாடுகிறது.

எனக்கும் அதற்குமான மொழியென்பது

ஜனனத்திற்கும் மரணத்திற்கும் இடையில் நிகழும் விளையாட்டு போன்றது.

V

இரவில் கடலின் பாடலை அருகில் சென்று கேள்

கடல் நான் உனது காதலியென்று சொல்லும்.

முத்தமிட்டு உனது காதலை வெளிப்படுத்து.

உண்மையின் ஆழத்திலிருந்து உனக்கான பரிசை கொடுப்பாள்.

அது கற்பனையிலும் அகப்படாதது.

VI

எனது பார்வைக்கு கடலும் வானமும் ஒரு புள்ளியில்

சந்திக்கின்றன.

மறுபுள்ளியில் கடல் தன் கடல் அலைகளையும்,

வானம் தன் வான் அலைகளையும் பிரதிபலிக்கின்றன.

அங்கே பறவையொன்று பறக்கிறது கடலையும், வானையும்

தனது சிறகுகளால் அளைந்தபடி.

இதில் எது கடலின் அலை, எது வானின் அலை?

VII

கரையொதுங்கும் சங்குகள்

ஆழ்கடலின் கவிதையை அல்லது அதன் துயர கீதத்தை பாடுகின்றன

நான்

கரையில் நின்றபடி அலையில் எனது கால்களை நனைக்கிறேன்

எனது காதலை, நினைவுகளை, சொற்களை, புலம்பல்களை, கண்ணீரை

கடல் ஆழத்திற்கு கொண்டு செல்கிறது.

கடல் கன்னி இளமையின் அழகுடன்

துயரங்களை மௌன கீதமாக

இரவு வேளைகளில் பாடுகிறாள் ஆறுதலுக்காக.

துயர் மிகு வாழ்வின்

காதலை, நினைவுகளை, சொற்களை, புலம்பல்களை, கண்ணீரை

ஏழேழ் தலைமுறை கேட்கக் கூடுமென..

                                *****

1.

நீங்கள் ஏன் திருமணம் செய்யவில்லை

பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னுமா என்றார்.

ஆமாம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றே பதிலளித்தேன்.

எப்படிப்பட்ட பெண்ணை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என கேட்டார்

நல்ல பெண்ணாக பார்த்துக் கொண்டிருப்பதாக அமைதியாக பதிலளித்தேன்

இன்முகத்தோடு ஆண் வெட்கம் வழிய வழிய

எப்போது திருமணம் செய்வதாக எண்ணம் என்றார்

கூடிய விரைவில் நடக்குமென நம்புவதாக பதிலளித்தேன்

இதை அவர் புன்னகையோடு ரசித்து கேட்டார்.

நான், எனது பணி, சொந்த ஊர் இன்ன பிற விவரங்களை கேட்டறிந்த பின்

(பேச்சிலர்களுக்கு) திருமணமாகாதவருக்கு நாங்கள் வீடு கொடுப்பதில்லை

என்ற தனது விதி முறைகளை எடுத்தியம்பினார் இயல்பான நடையோடு.

சரியென்று

அவரிடம் வணக்கம் கூறி விடைபெற்றேன்.

‘டூ லெட் ‘ அட்டை அத்தனை கவர்ச்சியற்று வெள்ளை நிறத்தில் எழுதப்பட்டிருந்தது.

2.

இன்டிகேட்டர் விழுந்த திசையில்

வாகனத்தை செலுத்தினேன்.

பள்ளம் வெள்ளத்தால் உண்டாகியிருந்தது.

மழையை சபித்துப் பிரயோசனம் இல்லை.

அடுத்ததாக ஒரு சிவப்பு விளக்கு எரியும்.

வாகனத்தை மெதுவாக நிறுத்தி

காத்திருக்க வேண்டும்.

ஒலி எழுப்பவும் தயாராக இருக்க வேண்டும்.

மீண்டும்

இன்டிகேட்டர் எந்த திசையில் விழ வேண்டுமென

இப்போதே முடிவு செய்து வைத்திருக்க வேண்டும்.

சாலையின் நெரிசலில்

பயணம் எளிதாக அமைய

சாலையோர காளியை கும்பிட்டு

தைரியத்தை இருத்திக் கொள்கிறேன்.

சாலையில் இன்னும் இரத்த வாடை பீய்ச்சி அடிக்கிறது.

000

இலட்சுமண பிரகாசம்

சொந்த ஊர் : சேலம் மாவட்டம் தலைவாசல். தற்போது புவனகிரி அருகே அரசு பள்ளியில் முதுகலைப் பட்டதாரியாக பணியாற்றி வருகிறார். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் என தொடர்ந்து எழுதியும், இலக்கிய கூட்டங்களையும் நடத்தி வருகிறார்.

2019 ம் ஆண்டு கஸல்களைப்பாடும் யாரோ ஒருவன் – இந்த நூலுக்காக கலை இலக்கிய மேடை விருது கிடைத்தது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *