ஆரஞ்சு நிறம்.
அ)
–
ஒரு சூரியனுக்கும் மற்றொரு சூரியனுக்கும் இடையில்
ஒரு சின்னஞ்சிறிய பட்டாம் பூச்சி பறக்கிறது.
கடல் அலையின் பாடல் தவழ்ந்து தவழ்ந்து கரையைச் சேர்கிறது.
யாருமற்ற இரவு காமத்தில் தவிக்கிறது
ஆறுதலான தழுவலுக்காக
பகலெல்லாம் தனித்தலைந்து திரிந்த நாயொன்று
பளிச்சிடும் நிலவையே
உற்றுப் பார்க்கிறது.
மதில் மேல் அமர்ந்த பூனை உறக்கமற்று விழித்திருக்கிறது
வீட்டின் முன்பக்க நிலம் வெறும் நிலமாக காட்சியளிக்கிறது
பலத்த காற்று வீசியும்
தூறலுக்கு துளியும் அறிகுறியில்லை
மற்றொரு சூரியன் கீழைக் கடலில் முளைக்கிறது
அடிவானத்துப் பறவையின் பாடல் கனவில் கேட்கிறது
வேசியின் சரசப் பேச்சு
பாலியல் வேட்கைக்கு.
கால்மேல் கால் உரச
இதழ்கள் சுவைக்காமல்
அவசரத்திற்குப் புணரும் மனித மிருகம்
சட்டெனத் தன் சுக்கிலத்தை உமிழ்தபின் ஊர்ந்து செல்கிறது.
ஆ)
–
அசூயையாக இருக்கிறது
உள்ளுறுப்பு வேர்க்கிறது
பொதுஇடத்தில் உடல் நெளிகிறது புளுவாக
கவட்டையை சொரிந்து கொள்ளமுடியாத நிலை
வைத்த கண் வாங்காமல் யாரோ நோட்டமிடுகிறார்களா
என பார்வையிடல்
அத்தனை கசகசப்பிலும் மார்கச்சையில் இருந்து ஒழுகி வரும் வேர்வை.
ஆசூயைக்கு அப்பால் ஒரு கை பிருஷ்டத்தைத் தடவுகிறது.
துர்கந்தமான நெடி
ஆரஞ்சு நிற பீரியெட்ஸ்
கசகசத்த வெக்கை.
இ)
–
கூரைக்கும் வானுக்கும் இடையில்
தன்னைத் தானே கடந்து செல்கிறது பறவை.
பருந்தின் ஆகாய வட்டம்
கெழுத்தியின் மீது விழுகிறது
உப்புப் பொடி தூவப்பட்ட நாவல் பழம்
நாக்கை சப்புகொட்டச் செய்கிறது
தூரப் போவென
இடக்கையால் விரட்டினேன்
பழங்கிழட்டுச் சூரியனை
மினுக்கம் காட்டிக் கொண்டு
துருதுருவென முதுகில் ஏறி நின்று
சேட்டை செய்கிறது
பால்யம்
ஒரு பூனையாக.
ஈ)
–
மசமசத்து பெய்கிறது வெயில்
ஆடுபுலி கட்டம் சும்மா கிடக்கிறது
ஆனாலும்,சோழி உருளுது
மகாபாரத கூத்துக்கான ஒத்திகை
நாளெல்லாம் நடக்குது.
நெஞ்செரிக்குது நாட்டுச்சாராயம்
கூத்தியா வீட்டு மீன்குழம்பு தனி ருசி.
நடுராத்திரியில் திரௌபதி வேசம்
துகிலுரிதல் வேளையில்
பெருங்குரலெடுத்து சபதம் போடும் பாட்டு
சில நாட்களில்
பகல் நேரத்திலும் சலிக்காத போகம்
ரம்மி சீட்டு
ஒரு ஜோக்கர்
கொலசாமிக்கொரு சுருட்டும் நாட்டுச்சாராயமும் படையல்.
வக்காளி
ஆட்டம் நம்ம கையில
கருப்பேறிய வாயில் வெத்திலைச் சிரிப்பு.
+++
இலட்சுமண பிரகாசம்
சொந்த ஊர் : சேலம் மாவட்டம் தலைவாசல். தற்போது புவனகிரி அருகே அரசு பள்ளியில் முதுகலைப் பட்டதாரியாக பணியாற்றி வருகிறார். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் என தொடர்ந்து எழுதியும், இலக்கிய கூட்டங்களையும் நடத்தி வருகிறார்.
2019 ம் ஆண்டு கஸல்களைப்பாடும் யாரோ ஒருவன் – இந்த நூலுக்காக கலை இலக்கிய மேடை விருது கிடைத்தது.