1
இரவைக் கடித்து
பகலைத் துப்பும்
வான் வாய்க்குள்
ஒளிந்துகொள்கிறது
விண்மீன்கள்.
புசித்துப் புசித்து
வளரும் நிலவுக்கு
முழுமையையும் பரிசளித்து
பிடுங்கிக்கொள்கிறது பூமி.
நகர்வோ நிலைப்போ
அமைதியின் பிடிக்குள்
ஒப்படைத்துக் கிடந்தால்
நானும் உன்னைப்போல்
துறந்து விடுவேன் என்னை.
2
நான் பார்த்த நான்
நான் பார்த்துப் பார்த்து
பழகிய
எனக்குள்
நான் தேடும் நான் இல்லை.
எனைப் பார்த்துப் பார்த்து
பழகிய
நான் எனக்குள் தேடுவதில்லை
என்னை இழந்துவிட்ட என்னை.
நானாக
இருப்பு வைத்தவை
எனக்குள் நிலைக்காதபோது
என்னை நிலைக்கவைக்கும்
எவற்றை இருப்பு வைப்பது எனக்குள்.
நான் சொல்லும் நான்
என்னையே வினாக்குள்
விழ வைக்கையில்
எனக்குள் எழும் வினாவுக்கு
விடையே தேடுவதில்லை
நான் தொலைத்த நான்.
நானே எனக்கான எதிரியாக
மாறுகையில்
நானே எனக்கான
சொற்களைக் கலைத்துவிடுகையில்
நானே எனக்கான நகர்தலில்
அகழிகளைத் தோண்டுகையில்
யாருக்கான சூரியனை
விதைக்கப்போகிறது
என்னை அலறவிடும் நான்.
3
வீட்டருகில் வளர்ந்து நிற்கும்
அரளிச்செடியின் பூவெங்கும்
விரிய விரிய
எட்டிப் பார்க்காத பூச்சிகளைத்தேடி
அலையத் துவங்குகிறது
இலையின் மெழுகு.
மலரும் வருந்தும்படி
அவ்வப்போது உரசிப் போகும்
நாயின் உடலெங்கும்
தன்னை அப்பிக் கொண்டு
தெருவை வேடிக்கை பார்க்கக் கிளம்பிவிடும்
செடியின் மணமென
நகரத் துவங்குகிறது
அவளைத் துறந்து
அலையும் மனம்.
4
தொலைவில் நகரும்
நதியின் போக்கில்
நனையும் கால்களுக்குள்
களைப்பைப் போக்கும்
வித்தைகள் முளைக்கட்டுமென
விரைகின்றன கால்கள்.
மனக்களைப்பைப் போக்கிட
மௌனத்தைச் சரணடைந்தபின்
உடல் களைப்பில்
உள்ளத்தை நுழைக்கும்
சீடனுக்குள் ஒளிரத் தவறும்
ஞானத்தைப் போலவே
தேடிக் கிடக்கிறது
வாழ்வின் பாதையில்
ஒழுங்கற்ற மனம்.
00

இளையவன் சிவா
கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி ஏழை தாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.