@
நீ வீசிவிட்டுச் சென்ற
வார்த்தைகளை ஏந்தியபடி
நட்சத்திரங்களென நகர்கிறேன்
பகலைப் புதைத்து
இருளைப் பரப்பும் வெறுப்பின் மனதை விதைத்துவிட்ட தருணத்தில்
வெளிகளைப் புறக்கணித்து
வழியற்றுத் திரிகிறேன்.
@
சொற்களைத் தேடி
பூக்களிடம் யாசிக்கிறேன்
புன்னகையைப் பரிசளித்தது பூ
பட்டாம்பூச்சியிடம்
வார்த்தைகளைக் கேட்டேன்
நிறங்களில் ஆகாயத்தை எட்டவைக்கிறது.
சொற்களைத் தேடி காற்றிடம் நிற்கிறேன்
உயிர்ப்பின் மூச்சை ஒப்படைத்து வெளியை வட்டமிடுகிறது
பேசிப்பழக வானத்திடம்
எழுத்தை வேண்டுகிறேன்
வெளிச்சப் பகலையும்
விண்மீன் ஒளிர்ப்பையும்
விரித்துக் காட்டுகிறது.
சொற்களின் கவனத்தை
அஃறிணைகள் கற்றுத்தர
வார்த்தைகளைப் பிடித்தபடி
உரையாடத் தொடங்குகையில்
எல்லா சொற்களுக்கும்
இல்லாத அர்த்தங்களைக் கூறி
உள்ளே கிடந்த பண்புகளை
வெளியேற்றி விடுகின்றன உயர்திணைகள்.
@
வரையத் துடிக்கும் மகளின் கரத்தில்
தயாரானது தூரிகை
தேடும் விழிகளுக்குள் பிடிபடாத
வனத்தின் வண்ணங்களை கையிலேந்தியபடி
விரியும் ஓவியத்தில் தும்பிக்கையை உயர்த்தி
பிளிறத் தொடங்கியது வனம்.
**
1.
வனமதிரப் பிளிறும்
யானையின் கண்களுக்குள்
பளபளக்கிறது
ஆசி வாங்க வரிசையில் நிற்கும்
சிறுமியின் கையில்
ஒற்றை நாணயம்.
மகளதிகாரம்
வார்த்தைகளில் கொஞ்சி
பாவங்களில் கெஞ்சி
குழந்தையாய் மாறி
சர்க்கஸ் காட்டியும்
கண் அசைவிலும் சலனம் காட்டாது கம்பீரமாய் வீற்றிருக்கிறாள்
அம்மாவின் மடியெனும்
சிம்மாசனத்தில் மகள்.
இளையவன் சிவா
கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி ஏழை தாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.