1
அனுபவங்கள் தீட்டித் தீட்டி
அகமெலாம் ஒளிவீசிட
நில்லாத வாழ்வின் பாடம்
நடத்திடும் தேர்வின் வழியே
பாதைகள் திறந்திடும்போதும்
பயணங்கள் தொடர்ந்திடும்போதும்
ஆசையின் ஊஞ்சலிலே
ஆடிடும் எண்ணமதை
ஏடென்றும் எழுத்தென்றும்
வடித்திடும் காவியத்தில்
நிலைத்திடட்டும் நேசமும் நிம்மதியும்.
2
ஓடி ஒளிந்து தப்பிக்க
நினைக்கும் பொழுதில்
வேட்டையின் குழிக்குள் எதிரொலிக்கும் கன்றின் ஈனக்குரலைத் தேடி
வனத்தை நனைக்கிறது
பிளிறல் பெருகிய தாயின் கண்ணீர்.
3
அசையா பிம்பமென அருகில் உரசிட
குத்தும் ஊசிகளென நிமிரும்
தோல் முடிக்குள் தேகம் விளையாடிட அம்பாரியின் ஆசையில் கால்கள்உயர்ந்திட
ஆசிர்வதிக்க நீளும் தசைக்குழலில் கரங்கள் பிணைந்திட
வனத்தின் வாசத்தைத் துறந்துவிட்டு
வருவோர் போவோரின் வண்ணப்படங்களுக்கு காட்சி கொடுத்தபடி
வாசலில் நிற்கும்
யானையின் கனவில்
அடிக்கடி காட்சி தருகிறார் கடவுள்.
4
கீச்கீச்சென்ற பேச்சுகள்
இலையைத் தழுவும் காற்றின் கைகள்
கிளைக்குக் கிளை
பறவையின் தேடல்கள்
அமர்ந்த மரங்களின் இன்றும் நேற்றும்
அதேபோல இருப்பதில்லை
வானத்தை அளந்துவிட்ட
பறவைகளின் இருத்தலும்
ஒத்திருப்பதில்லை.
ஓயாது பிதற்றும் இந்த மனதில்
ஒட்டிக்கொள்வதில்லை
கிளையின் நிம்மதியும்
பறவையின் வானமும்.
இளையவன் சிவா
கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி ஏழை தாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.