1

எல்லா வருத்தங்களையும்

அட்டைப் பெட்டியில்

அடைத்தபடி சுமக்கிறேன்

இடையூறுகளை சேகரித்தும்

துரோகங்களை மென்றபடியும்

கவலையின் கண்ணீரை

அணை கட்டியும்

எல்லையற்ற வானமும்

எதுவுமற்ற மனமுமென

நடக்கத் துவங்குகிறேன்.

காலத்தின் அழுத்தங்களில்

அனுபவத்தை ஏந்தியபடி

எடையிழக்கும் சுமைகளை

உள்வாங்கியபடி

வீங்கத் தொடங்குகிறது

மூளை.

வெறி கொண்டலையும்

வீம்பின் வெஞ்சினமென

மதி கெட்டொழியும்

மதுவின் ஆதிக்கமென

உட்புகுந்து கொல்லும்

ஆற்றாமையின் விளையாட்டென

சுற்றிவரும் என்னுள்

பெருகும் ஆனந்தத்தையும்

இழந்தபடி அலையும்

நரம்புகளுக்குள்

ஊடுவி நிற்கிறது நாளையின் நிம்மதி.

2

நான் கூடு கட்டப் பார்க்கிறேன்

நீ வீடு கட்டப் பார்க்கிறாய்

நிலத்தில் வேரூன்றும்

உனக்கான மனதில்

வானத்தை அளக்கத் துடிக்கும்

எனக்கான இறகுகள்‌

கட்டி வைக்கப் படுகையில்

நிம்மதியும் நிலைப்பாடும்

கணிக்கத் தெரியாத

காலநிலையைப் போல

ஊஞ்சலாடுகிறது

உனக்கும் எனக்குமான நேசம்

3

எடுத்து வராத சீட்டைத் தேடி

அலையும் மறதியில்

அவரவர் மருந்துகளுக்காக

அரசு மருத்துவமனையில்

காத்திருக்கும்

கிழவனுக்கும் கிழவிக்கும்

ஆறுதல் தருகிறது

ஆலமரக் காற்று.

4

பிறந்த நாள் திருமண நாள் என

விழாக்களின் பொழுதுகளில்

ஆசியின் வழியே

ஆரம்பித்து வைப்பார்

கொண்டாட்டத்தை.

இம்முறை ஆசி பெறமுடியாத

பிறந்தநாளில்

உம்மை இழந்துவிட்டதன் வலியில்

கூடுதலாய் ஒரு செடி நடுகிறேன்

தோட்டத்தில்.

மரமாகி எம்மை

ஆசிர்வதிப்பாய் தந்தையே.

++

இளையவன் சிவா

கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி ஏழை தாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.  மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *