மாலை மெல்ல மெல்ல கருக்கலாகி. வானத்தின் செல்லச் சிணுங்கல்..! சின்னச் சின்னதாக தூறல்கள் போட்டுக்கொண்டிருந்தது.. ஒரு சில துளிகள் விழுந்தவுடனேயே மண் வாசனை மனதை மயக்கியது. மெல்ல மேலெழுந்து வரும் இந்த மண் வாசனையை சுவாசிப்பதில் ஒரு தனி சுகம். புது ரசனை ஏற்பட்டுவிடும். உள்ளிருந்து ஏதேதோ நினைவுகள் அது பாட்டுக்கு கிளர்ந்து எழும். சில பழைய பாடல்களைக் கேட்கும் போது சிறு வயது பிராயத்திற்கும் கடந்த கால நினைவுகளுக்குள்ளும் மனம் போய்விடும் அல்லவா.. அப்படி இந்த மண் வாசனையும் நம்மை காலம் கடத்தும். மிக ஒன்றிப்போய் லயித்து வாசித்துக்கொண்டிருந்த ‘கசாக்கின் இதிகாசம்’ நாவலைலிருந்து மனம் கொஞ்சம் விலகி தூறலை ரசிக்க ஆரம்பித்து விட்டது . காற்றோட்டமாக வாசிக்கலாம் என்று நாவலோடு திண்ணையில் வந்து அமர்திருந்தேன். வாசிப்பு என்பது ஒரு மன நிலை.. மிகக் குறைந்த பட்சம் ஒரு பக்கமாவது வாசிக்கவில்லையென்றால் – வாசிக்க முடியவில்லையென்றால் அந்த நாளே வீணாகி விட்டதாகத் தோன்றும். காற்றில் இருந்த சின்னக் கூதல் இன்னும் இதமாக இருந்தது .
“கசாக்கின் பின்னால் உயர்ந்திருக்கும் செதலி மலையின் பக்கங்களில் காட்டுத் தேன்கூடுகளின் தவிட்டு நிறப் பெரிய அடையாளங்களை ரவி பார்த்தான்…” நாவலின் வரிகளை வாசிக்க வாசிக்க சட்டென்று என் மனம் ஈரேழுகால் புரவியென பின்னோக்கிப் பாய்ந்தது. என்னுடைய இளம் பிராயத்தை நாவலுக்குள் கண்டேன். அது ஒரு மிக ரம்மியமான காலம். எத்தனை கோடி கொடுத்தாலும் அந்தக் காலங்களை திரும்பக் கொண்டு வரமுடியாது. விகல்பம் இல்லாத மனங்கள் ஒன்றித் திரிந்த தளிர் இலைகளில் பனி படர்ந்தும், பசும்புல்களின் மீது கால்கள் பட்டதும் ஜில்லென்று உடம்பெல்லாம் கூதல் மிகுந்தும், குயில்கள் குவித்திரிந்த இனிமையான காலம்.
எங்கள் வீட்டு முன்புறம் பரந்து கிடந்த, நாங்கள் விளையாடித் திரிந்த காலியிடம் மனத்திரையில் விரிந்தது.. பப்படச் செடி என்று சிறுவர்கள் கூறும் ஒருவகை புல் செடி வளர்ந்து கிடக்கும் அந்த இயற்கைப் பிரதேசத்தில் மெல்லிய சிரிப்பை சிந்தியபடி ஜெமீலா ஒய்யாரமாக உட்கார்ந்திருந்தாள். ஜெமீலா . மாநிறத்தவள். பளிச்சென்ற முகத்தில் எடுப்பான மூக்குடன் கண்களில் எப்போதும் கொஞ்சம் காந்தம் இருக்கும். .எனக்கு அப்போது அவள் மிக அழகியவள். .ஏன் நான் அவளிடம் என் காதலை சொல்லவில்லை! என்று என் மனம் ரொம்ப காலம் குறுகுறுத்துக்கொண்டே இருந்தது.
ஆனாலும் நாங்கள் இருவரும் இணை பிரியாத ஜோடி! “வாடீயம்மா வாடீ! வண்டாட்டம் வாடீ! ஆத்தங்கரப் பக்கத்தில காத்திருக்கேன்..வாடீ..” என்கிற இந்தப்பாடல் ரேடியோவில் ஒலிக்கும் போதெல்லாம் அவள் வீட்டில் என்னையும் ஜெமியையும் வைத்து கிண்டலடிப்பார்கள். ஏன் ..எதற்காக எங்களை இப்படிப் பாவிக்கிறார்கள் என்று புரியாத வயதில் நான் வெறுமனே சிரித்துக்கொள்வேன். . அது என்ன பாட்டு என்று கூடத் தெரியாது. ஜெமியும் சிரிப்பாள் கொஞ்சம் வெட்கம் கலந்து. ஒருவேளை இவளைத்தான் எனக்கு கட்டி வைப்பார்களோ என்று ஏதோ ஒன்று எனக்குள் அப்போது ஓடும். பட்டாம் பூச்சி கூட சிறகடித்துப் பறக்கும்! அதனால்தானே இரண்டு வீட்டிலும் எப்போதும் எங்களை இணைத்தே பேசிக்கொண்டிருக்கிறார்கள். கடை கண்ணிக்கு எப்போது அனுப்பினாலும் ஒன்றாகவே அனுப்புகிறார்கள்… அவளுக்குத் துணையாக நான்தான் எப்போதுமோ… என்பது பிற்பாடு எனக்குள் எழுந்த எண்ணம். அதன் பிறகு ”வாடியம்மா ..வாடீ .. வண்டாட்டம் வாடீ… ஆத்தங்கரப் பக்கத்தில காத்திருக்கேன் வாடீ..” பாட்டு ரேடியோவில் ஒலிக்கும் போதெல்லாம் எனக்குள் ஜெமீலா வந்துவிடுவாள் !
பக்கத்து பக்கத்து வீடு என்பதால் தினம் இரவுகளில் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு விடுகதைகள் பேசிக்கழிப்போம். நாங்கள் போடும் விடுகதைகள் எங்கும் கேட்காத, வாசிக்கக் கிடைக்காத விடுகதைகள்! ஆம். அந்த விடுகதைகள் சொந்த சரக்கு! “நீளமாவும் குண்டாவும் இரிக்கும் பச்சை கலர்ல இரிக்கும். பழுத்தா சொவப்பா இரிக்கும், ஆனா சாப்பிடமுடியாது.அது என்ன?” இப்பிடியானது எங்கள் விடுகதைகள்.
இப்படியான சிறுபிள்ளைத்தனமானது எங்களின் விடுகதைப்புதிர் விளையாட்டு. பள்ளிக்கூடம் சென்று வந்ததும் பகலில் சம்சு, ராஜா, ஜொஹராமா, ரியா, ஜான் ஆகியயோருடன் விளையாட்டும், களியுமாக ஆட்டம் பாட்டம் முடிந்து, ஏழு மணிக்கு மேல் எனக்கும் ஜெமிக்குமான நேரம். அப்போது இருவர் மட்டுமே விளையாடும் விடுகதைப்புதிர் விளையாட்டுக்கானது. இதில் வேறு யாருக்கும் அனுமதியில்லை. தப்பித் தவறி வேறு யாரும் வந்துவிட்டால், அன்றைக்கு இந்த விளையாட்டு அறிவிக்கப்பட்டாமலேயே ரத்து செய்யப்பட்டுவிடும்.. இது எங்கள் இருவருக்குள் மட்டுமே இருக்கும் ரகசிய முடிவு !
ரமளான் நோன்பு மாதம் ஆரம்பிக்கும் முன் ஷஃபான் மாசத்திலயே வீடுகளுக்கு வெள்ளையடிக்கும் வைபோகம் ஆரம்பித்துவிடும். முதலில் யாராவது ஒரு வீட்டில் ஆரம்பித்தால் போதும் வரிசையாக ஆரம்பித்து விடுவார்கள். பிறகென்ன எல்லா வீடுகளும் புதுப்பொண்ணு போல பளிச்சுனு ஜொலிக்க ஆரம்பித்துவிடும். ஒரு ஞாயிறு காலை சுண்ணாம்பு வாங்க எங்களை தேர்வு செய்து விடுவார்கள். அன்றும் அப்படித்தான் நானும் ஜெமியும் பைகளுடன் ஜாலியாக கிளம்பினோம். கதைகள் பேசியவாறு.
“என்னங்க.. உங்களத்தா ! எவ்வளவு .நேரமா கூப்பிட்டுட்டு இருக்கேன். காதுல விழாதது மாரி உக்காந்திட்டு இருக்கீங்க.” ரஹீமாவின் குரல் என்னை நிகழ் உலகிற்கு இழுத்து வந்தது. .
ரஹீமாவின் குரலுக்கு கலைந்த நான் கடந்த காலத்திலிருது நிகழ்வுக்கு வந்ததும் பரபரப்பானேன். ரஹீமா கொஞ்ச நேரம் உக்காந்து படிக்க உடமாட்டா! அப்பத்தா ஏதாச்சும் சொல்லுவா. ஒண்ணும் கெடைக்கலையா பக்கத்துல வந்து உக்காந்துட்டு தொண தொணனு எதையாச்சும் பேச ஆரம்பிச்சுருவா.
“இப்பத்தா ஒனக்கு பேசணுமாக்கும்.?” என்று சொல்லிவிட்டால் போச்சு. அவ்வளவுதான்.
‘’என்னிக்காவது பிரீயா இருக்கேன்னு சொல்லியிருக்கீங்களா? எந்நேரமும் புக்கும் கையுமா இருக்கீங்க! இல்லேன்னா செல்ல நோண்டிட்டு இருக்கீங்க. அதுவும் இல்லேன்னா செய்தி பாக்குறேன்னு டிவி முன்னாடி உக்காந்துக்கிறீங்க..? எங்கூட பேசணும்னு என்னிக்காவது உங்களுக்கு தோனியிருக்கா..?” பிடி பிடி என்று பிடித்துக் கொள்வாள் ரஹீமா.
இப்போதெல்லாம் லீவு நாட்களில்தான் கொஞ்சமாவது வாசிக்க நேரம் கிடைக்கிறது. ஒரே சிட்டிங்கில் உட்கார்ந்து சாண்டில்யன், கல்கி, ஜெயகாந்தன், சுஜாதா, பாலகுமாரன் கதைகளையெல்லாம் படித்த காலம் மலையேறிவிட்டது..! கல்யாணமான புதிதில் கூட வாசிக்க நிறைய நேரம் கிடைத்தது. குழந்தைகள் பிறந்து வளர ஆரம்பித்தவுடன், அவர்களுடன் மல்லுகட்டவும், அவர்களுக்காக மல்லுகட்டவுமே நேரம் சரியாக இருக்கிறது! குடும்பஸ்தன் ஆகிவிட்டால் இப்படித்தான் ஓய்வே இல்லாமல் எப்போதும் லொட்டு லொசுக்குனு ஏதாவது வேலை இருந்து கொண்டே இருக்கிறது.!.
“இதா வர்றேன்..” என்றவாறு எழுந்து உள்ளுக்குள் சென்றேன் அடுப்படிக்குள் நுழைய முடியாதவாறு ஏதோ வேலை செய்து கொண்டிருந்தாள் ரஹீமா. எதுவும் பேசாமல் முன்னாடி போய் நின்றேன்.
“எவ்வளவு நேரமா கூப்பிடுறேன்.காதுல விழாம உக்காந்திட்டிருக்கீங்களே..” முகத்தில் கொஞ்சம் கோபம் இருந்தது. இதனால் ரஹீமாவின் சிவந்த முகம் இன்னும் மிக சிவந்திருந்தது. ‘”பேரழகி !” என்று எனக்கு கொஞ்சத் தோன்றியது. இப்பபோய் கொஞ்சினால் அவ்வளவுதான்.
“இப்பத்தா நமக்கு கல்யாணம் ஆயிருக்கு..புது மாப்பிள கொஞ்சுறாரு… போங்கணு…” என்று இதுக்கும் சேர்த்து டோஸ் விழும். எதுக்கு வம்பு. என்று ரசனையை கொஞ்சம் அடக்கி வைத்து பவ்வியமாக நின்றேன். .
“மத்தியானம் உங்ககிட்ட என்ன சொன்னேன்?” இதென்னடா நமக்கு வந்த சோதனை.! ‘மத்தியானம் என்ன சொன்னா..’ என்று குழம்பி மண்டையை லேசாக தட்டினேன். .
“ஆமா..! அப்பிடியே தட்டினதும் பொல பொலனு விழும் பாருங்க. அங்க என்ன இருக்கு? தட்டினா வர்றதுக்கு..?” சிரித்துக்கொண்டே சொன்னாள்.
இந்த எகத்தாளம்தான் ரஹீமாவின் இயல்பு. பலமும் கூட. எதைச் சொன்னாலும் டான் டானென்று பதில் வந்து விழும். கோபப்படாமல் மிக இயல்பாக மற்றவர்களை காயப்படுத்தாமல் பேசுவது ஒரு கலை! சுருக்கென்று தைக்கும்படியாக இருக்கும் பேச்சு.
‘‘ஆங்… ஞாபகம் வந்திரிச்சு. இனிக்காச்சும் மத்தியானம் சீக்கிரம் சாப்பிடச் சொன்னே!” இடுப்பில் கை வைத்தபடி முறைத்தாள்.
‘”ஏங்க! கிண்டல் பண்றீங்களா? மழ வரும் போல இருக்குது. மேல கோதும காயப்போட்டிருக்கேன். கொஞ்சம் எடுத்துட்டு வாங்கணு சொன்னனல்ல…எடுத்துட்டு வந்தீங்களா…..ம்…? எதத்தா ஒழுங்கா செய்றீங்க! புக்க கையில எடுத்துட்டா அப்பறம் ஒங்களுக்கு வேற எதும் ஞாபகம் இருக்காது ! மூணு நாளா காய வச்ச கோதும.. பூரா நெனஞ்சிருக்கும்..”
“அடச்சே ! மறந்தே போச்சு ! அப்பவே ஞாபகப்படுத்தியிருக்கலாமல்ல…. ரஹீ.மா..! “ என்றபடி வெளியே வந்து மாடிக்கு ஓடினேன். மொட்டை மாடியில் துணி விரித்து காயப்போட்டிருந்த கோதுமை மழையில் நனைந்து போயிருந்தது.
வருத்தமாக உணர்ந்தேன். மூணு நாளா காயப்போட்டுட்டு இருக்கா. எல்லாம் வீணாச்சு.. மறுபடி இன்னும் மூணு நாள் காய வைக்கணும். துணியில் அப்படியே சுருட்டி எடுத்துக்கொண்டு வந்தேன்.
புத்தகத்தை கையிலெடுத்து விட்ட இடத்திலிருந்து வாசிக்க ஆரம்பித்தேன். பெரியவனும், சின்னவளும் செல் போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்ததால் வீடு அமைதியாக இருந்தது. வீதி விளையாட்டை ,நண்பர்களுடனான விளையாட்டையெல்லாம் மறந்து செல் போனே குழந்தைகளின் உலகம் ஆகிவிட்ட காலம் இது !
நான் ரஹீமாவை கரம் பிடிக்கும் போது அவளுக்கு பதினெட்டு வயது பூர்த்தியாகவே இல்லை.! பெண்கள் பருவம் ஆனவுடன் திருமணம் செய்து வைக்கும் அன்றைய இஸ்லாமிய கலாச்சார வழக்கப்படி நடந்த நிக்காஹ். அப்போது ரஹீமா செய்யும் சிறு சிறு தவறுகளை மட்டுமல்ல, எதைச் செய்தாலும் கோபமே வராது எனக்கு! எதுவும் அறியாத சிறிய பெண் என்று அவளை உள்ளங்கையில் வைத்து தாங்கினேன்.
என் மனதில் எப்போதாவது ஜெமீலாவின் நினைவு தோன்றும். அது ஆத்மார்த்தமான காதலா என்பது ஒரு புரியாத புதிர் !
சுண்ணாம்பு வாங்கப் போகும்போது எதிர்பாராமல் ஏற்பட்ட அந்த முதல் தொடுதல் பயந்து போய்தான் அலறியடித்து ஓடிவந்து என்னுடன் ஒட்டி நின்றாள் ஜெமி! கொஞ்சம் கட்டிப்பிடித்தபடி என்றாலும், அதன் பிறகு எனக்குள் அவள் மீது ஈர்ப்பு அதிகமானது. அந்த சம்பவத்தின் போது எனக்கு எதுவும் தோன்றவில்லை. நானும் பயந்து நடுங்கிக் கொண்டுதான் இருந்தேன்.! அந்த நடுக்கம் இரண்டு மூன்று நாட்களுக்கு இருந்து கொண்டே இருந்தது. அப்படியொரு நிகழ்வு அது !
நொய்யல் ஆற்றின் கரையை ஒட்டி சுண்ணாம்பு தயாரிக்கும் காளவாய் இருக்கும் இடத்திற்கு வீட்டிலிருந்து கொஞ்ச தூரம் நடக்க வேண்டும். காலையில் நேரமாகவே இருவரும் கிளம்பிவிட்டோம். சுண்ணாம்பு காளவாய்க்கு முன்புறம் அடர்த்தியாக இரண்டு பக்கமும் இரண்டு மூன்று புளிய மரங்கள், அரச மரங்கள்.
ஆத்தோரத்தில் வளர்ந்து நிற்கும் பெரும் விருட்சங்களான அவைகளுக்கு கீழே சூரிய வெளிச்சமே விழாது! அதனால் எப்போதும் அந்தப் பகுதி இருட்டு கவிந்து கிடக்கும். சுண்ணாம்பு வாங்கப் போகிறவர்களைத் தவிர வேறு ஆள் நடமாட்டமே இருக்காது. நானும் ஜெமீலாவும் வழக்கம் போல ஏதேதோ பேசியபடி இறக்கத்தில் இறங்கி நடக்க, எங்களுக்கு முன் ஒரு பெரும் பாம்பு பொத்தென்று மரத்தின் மேலிருந்து கீழே விழுந்தது. ஒரு அடி எடுத்து வைத்திருந்தால் அந்த பெரிய பாம்பு எங்கள் மீதுதான் விழுந்திருக்கும் !
குலை நடுங்க அலறியடித்துக்கொண்டு இருவரும் ஓடிப்போய் சுண்ணாம்புக்காரரின் வீட்டுச் சுவரில் சாய்ந்து நின்று படபடக்கும் நெஞ்சை ஆசுவாசப்படுத்திக் கொள்ள, ஜெமீலாவின் காலில் ஏதோ குறுகுறு என்று ஓடியது போல உணர்ந்து “பே..பே..” என்று இன்னும் கத்தியபடி கால்களை உதறிக்கொண்டு என் பக்கம் ஓடிவந்து கண்களை மூடியபடி என்னை கட்டிப்பிடித்துக் கொண்டாள்..
நானும் பயந்து கத்தியபடி விலகி நகர ஜெமீலாவும் என்னுடனே ஓட்டிக்கொண்டு நகர்ந்து வந்தாள். மீண்டும் கால்களை உதறினாள்.
‘”எ..என்ன ஜெமீ ! எ..என்னாச்சு?” பதட்டமும் பயமுமாக அவள் கால்களை குனிந்து பார்த்தபடி கேட்டேன். .
‘’குறுகுறுனு காலு மேல என்னமோ ஓடுச்சு !”
“அவள் நின்றிருந்த பக்கம் மெல்ல பார்வையை செலுத்தினேன். நீண்ட புளியம் விளாறு ஒண்ணு கிடந்தது.
“ஏ…ஏய் ! புளியங்குச்சிக்குப் போயி இப்பிடி பயப்படுறியே..!” பயம் குறைந்து சின்னதாய் சிரித்தேன். இன்னும் பெரும் மூச்சு குறையவில்லை. ஜெமி என்னை கட்டிக்கொண்டே நின்றிருந்தாள். அப்போதுதான் இந்த நிலையை இருவரும் உணர்ந்தோம்.
ஜெமீலாவின் முதல் பரிசம் எனக்குள் மெல்ல ஒரு பரவசத்தை குறுகுறுப்பை உண்டாக்கியதை உணர்ந்தேன். டக்கென கையை எடுத்துக்கொண்டு கொஞ்சம் நகர்ந்து, ”எதுக்கு என்ன கட்டிப்புடிச்ச?” சிணுங்கியபடி கேட்டாள் ஜெமி.
என்னயிது இவ எம்மேல பழியப் போடுறா.. புரியாமல் விழித்தேன். வீட்டுல போயி எல்லாத்துகிட்டயும் சொல்லிக்குடுத்துருவாளோ..! நா எங்க இவள கட்டிப்புடிச்சேன். அவதானே பயந்து ஓடி வந்து என்ன கட்டிப்புடிச்சா..?
“ஏய்! என்ன எம்மேல பழி போடுற! நீதானே புளியங்குச்சிக்கு பயந்து போயி கத்திக்கிட்டே வந்து என்ன கட்டிப்புடிச்ச..?”
“நானா..! நானொன்னும் உன்ன கட்டிப்புடிக்கல.. பொய் சொல்லாத.. ஜெமியைப் பார்த்தபடி நான் பேசாமல் நின்றேன். சின்னப் புன்னகையுடன் “போடா!” என்றாள்.
‘‘போடாவா..? “
அதற்கு பதில் சொல்லாமல் “எத்தாப் பெரிய பாம்பு ! எப்பிடிப் போச்சு.?’ கண்களை விரித்தபடி கேட்டாள் ஜெமி .
“எந்தப்பக்கம் போச்சுனே பாக்கல. கொஞ்சம் போயிருந்தம்னா நம்ம மேலதா உழுந்துருக்கும். நல்லவேள தப்பிச்சோம்..” பயத்துடன் மரத்தின் மேலே பார்த்தபடி சொன்னேன்.
சுண்ணாம்புக் காளவாய் பக்கம் போகவே பயப்பட்டோம். இன்னும் பாம்பு விழுமோ அவளுக்குள் பெரும் அச்சம் உருவானது.
“பயமாயிரிக்கு. வா போயிரலாம்“ சுண்ணாம்பு வாங்காமலேயே இருவரும் வேகமாக மேட்டை நோக்கி ஓடினோம்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு ஜெமி மீது இன்னும் கூடுதல் ஈர்ப்பு எனக்கு ஏற்பட்டதை உணர்ந்தேன். ஆனால் ஜெமி எதையும் வெளிப்படுத்தாமல் எப்போதும் போலவே இருப்பதாகப்பட்டது. என்ன இவ ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கிறா..!
அதன் பிறகு அவளிடம் சொல்ல எனக்கு நிறைய இருந்தது. எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. ஜெமி எதையாச்சும் சொல்லுவாள் என தினம் எதிர்பார்த்தேன். விடுகதை சொல்லும் இரவுகளில் கூட அவள் எதையும் வெளிபடுத்தவே இல்லை. எனக்கு மிக ஏமாற்றமாக இருந்தது.
ஆனாலும் ஜெமிக்காக நான் ஒரு பெரிய மாளிகை கட்ட ஆரம்பித்தேன்! தினமும் திட்டங்கள் மாறும்! இட்டேரிப் பிரிவுல இருக்கும் துரை தோப்பு போல இல்ல, அதவிட பெரிய தோப்பு மாளிகையை சுத்தியும் இருக்கணும். தோப்புக்கு நடுவுல அந்த பெரிய மாளிக..! வேலைக்கு நெறைய ஆளுங்க. சினிமால வர்ற மாதிரி குதிர வண்டி. அதும் வெள்ளக் குதிரைக.. அப்பறம் என்ன…..ஆங்….. தோப்புக்குள்ளார ஊஞ்சல். பங்களாக்கு முன்னாடியும் ஊஞ்சல் போடணும்.
“சபீ !“ நான் கட்டிக்கொண்டிருந்த அற்புதமான கட்டுமானங்களைக் கலைத்தது ஜெமீலாவின் செல்லக் குரல். அவள் வீட்டு வாசலில் நின்றிருந்தாள். “என்ன..?” என்றபடி டக்கென்று எழுந்து சென்றேன்.
“நா கடைக்குப் போறேன் வர்றியா…?’ அழைப்பு அல்ல அது கட்டளை. “இரு உம்மாட்ட கேட்டுட்டு வர்றேன்..” காசும் பையுமாக வெளியே வந்தேன். . ‘‘என்ன வாங்கணும்.?” ஜெமி கேட்டாள். “பச்சமொளகா, கொத்தமல்லி, அப்பறம் ஆப்பசோடா..” பேருந்து நிறுத்தம் அருகே இருக்கும் சிறிய மளிகைக் கடை நோக்கி நடந்தோம். .
அவளுக்காக நான் கட்டும் மாளிகை பற்றி ஜெமியிடம் சொல்லத் தோன்றியது எப்படிச் சொல்றது? அச்சோ! வேண்டா. ஏதாச்சும் நெனச்சுக்குவா… கட்டிப்புடிச்ச கதயப் பத்தி ஊட்டுல சொல்லீருவளோனு ரெண்டு மூணு நாளா பயந்துட்டு பதட்டமாவே இருந்தேன்.
பாம்பு உழுந்ததை மட்டுமே ஜெமி சொல்லியிருக்கானு தெரிஞ்ச பெறகுதா என் பயம் விலகியது. வாப்பா காதுக்குப் போச்சுனா அவ்வளவுதான்! வாப்பாட்ட யார் அடி வாங்குறது. கண்ணு மூக்கு தெரியாம அந்த அடி அடிப்பாரு.
எனக்கு வாப்பா மீது அவ்வளவு பயம். சின்னத் தப்பு செய்தால் கூட அவருக்கு பொறுக்காது. வாப்பாவின் அடிக்கு பயந்தே வீட்டில் எல்லோரும் சமத்தாக இருப்போம். அப்பவும் சின்னத் தம்பி முபாரக் எதையாவது செய்து வாப்பாவிடம் மாட்டிக் கொள்வான். இலவச இணைப்பாக எனக்கும் சேர்ந்தே அடி விழும்! வாப்பாவின் சுபாவம் அப்படி !
வாப்பாவுக்கு பயந்து அண்ணன் அப்துல்லா எப்போதுமே அடக்கி வாசிப்பான். அண்ணனை அடியொட்டி நானும் அப்படியே பழகிக்கொண்டேன். அதற்கு நேர் மாறாக நடப்பான் தம்பி முபாரக். வேணும்னே ஏதாவது பண்ணுவான். எல்லோருக்கும் அடி வாங்கிக் கொடுப்பதில் சமர்த்தன். சின்னவன் சிராஜ் அப்படி இப்படி என இரண்டு விதமாக பேலன்ஸ் பண்ணி தப்பிக்கப் பார்ப்பான். கடைக்குட்டி என்பதால் வாப்பாவிடம் கொஞ்சம் செல்லம்.. பின்னே தங்கை ரகமத் எதுக்கும் இல்லை.
ஜெமீலா கூட்டாளிகளுடன் ரகமத்தும் விளையாட்டில் கலந்துகொள்வாள். ஜெமீலாவுக்கு இரண்டு அண்ணன்கள், ஒரு தங்கச்சியும். அண்ணன்கள் இரண்டு பேருமே கொஞ்சம் கர்வம் பிடித்தவன்கள் போல நடந்து கொள்வார்கள். என்னுடன் அவ்வளவு சீக்கிரம் பேசமாட்டார்கள். பேசுறதுக்கே காசு கேப்பானுக போல என நினைத்துக் கொள்வேன். அவர்களைக் கண்டாலே எனக்கு பிடிக்காது.
“என்ன ஜெமீ ! ஒன்னோட அண்ணங்க எப்பப் பாத்தாலும் உம்முனுட்டு இப்பிடி இருக்கிறாங்க..!” புகார் சொல்லுவேன்.
“ரண்டு பேரும் எப்பவும் அப்பிடித்தா. சின்ன அண்ணாவச்சும் பரவால்ல. பெரியண்ணா பேசவே பேசாது. அது முசுடு!”
எந்த விளையாட்டிலும் இரண்டு பேரும் கலந்து கொள்ளவே மாட்டார்கள். பெரிய பசங்களின் கூட்டாளிகள் அவர்கள். என் அண்ணனும் அந்த கூட்டணி ஆள்தான்.
பருவ காலங்கள் மாறுவதைப் போல விளையாட்டுகளும் சரியாக பருவம் தவறாமல் வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக மாறிக்கொண்டே இருக்கும். அது எப்படி சொல்லி வைத்தது போல எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி விளையாடுகிறார்கள்! மகா ஆச்சிரியமான விஷயம்! பட்டம் விட்டால் எல்லா இடங்களிலும் சிறுவர்கள் பட்டம் விட்டுக்கொண்டிருப்பார்கள். பம்பரம் விளையாட்டு, கோலி விளையாட்டு, கில்லி தாண்டு என எல்லா விளையாட்டுகளும் மாறி மாறி ஒரே மாதிரி வீதிகள் தோறும் தவறாமல் நடக்கும்.
நான் ஒன்பதாவது படிக்கும்போது இது நடந்தது. இருந்தாற்போல ஜெமி என்னுடன் பேசாமல் இருந்தாள். என்ன காரணம் என்றே தெரியவில்லை. அவதானே நேத்து என்ன பிறாண்டி வச்சா. அதுக்கு நா ஒண்ணுமே சொல்லலயே. கையில் அந்த எரிச்சல் இன்னும் இருக்கு. நீளநீளமாய் காயத்தின் ரத்தக் கோடு கூட இருக்கு. அதுக்கு நாந்தானே அவ கூட பேசாம இரிக்கணும். ஜெமீ மீது அப்போது எனக்கு சரியான கோபம் வந்தது. .
காரணம் கண்டு பிடிக்க எப்படியெல்லாமோ முயற்சித்தேன். அவ பேச வரும்போது நானும் இப்பிடி பதிலுக்கு பேசாம இரிக்கணும் என நினைத்துக் கொள்வேன் . . .
“ஜொஹராமாதா ஒன்னப்பத்தி கோள் சொல்லியிரிக்கா“ ரியா உண்மையை சொல்லிவிட்டாள். என்னப் பத்தி அவ ஏன் கோள் சொல்லணும்.? என்ன சொல்லியிரிப்பா..! நான் குழம்பிக்கொண்டே இருந்தேன். அவ எதச் சொன்னாலும் இவ நம்புவாளா…? ஆற்றாமையால் பொங்கினேன். ஜொஹராமா மீது அப்படியொரு கோபம் வந்தது.
அவளிடம் ‘காய்’ விட்டு பேசுவதை நிறுத்திவிட்டேன். ஆனாலும் ஜொஹரா என்னை விடவில்லை. என் பக்கத்தில் வந்து விளையாட்டு காட்டி என்னை எரிச்சல் ஊட்டிக்கொண்டே இருந்தாள். காய் விட்டால் கோபித்துக் கொண்டு முகத்தைக் கூட பார்க்காமல் விலகித்தான் போவார்கள். இவ ஏன் மறுபடி மறுபடி வந்து ஒட்டுறா! ஜெமீலா பார்க்கும்படி வேண்டும் என்றே நான் ரியாவுடனே விளையாட ஆரம்பித்தேன். அப்போதுதான் ரியா அந்த உண்மையைச் சொன்னாள்.
“எப்பப் பாத்தாலும் நீ ஜெமி கூடயே வெளயாடிட்டு இரிக்கிறனால ஜொஹராமாக்கு பொறாம..! ஒம்மேல சரியான கோவம் அவுளுக்கு. ஒன்ன திட்டிட்டே இரிப்பா..! அதாக்கும் கோள் சொல்லிக் குடுத்திரிக்கா..”
‘’அடிப்பாவி!“ எனக்குள் அப்படியொரு கோபம் வந்தது. . “ஜெமி கூட வெளயாடினா இவுளுக்கு என்னவாம்?” கோபத்துடன் ரியாவிடமே கேட்டேன். . “நீ அவகிட்டயே கேளு..” கமுக்கமாக சிரித்தாள் ரியா. எதுக்கு இவ இப்பிடி சிரிக்குறா..! எதுவும் புரியாமல் முழித்தேன். .
வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தபடி இதையெல்லாம் பார்த்துக்கொண்டே இருந்தாள் ஜெமீலா. ரியா கூட இவனுக்கு அப்பிடியென்ன பேச்சு…! என்னப்பத்திதா பேசுறாங்களோ… ஓடி வந்து என் மண்டையில் நங்க்னு கொட்டத் தோன்றியிருக்கும் போல! அப்போது அவள் பார்வை எனக்கு இப்படித்தான் உணர்த்தியது.
மறுநாள், “ஜொகராமாதா ஒன்னோட சம்சாரமா..?”’ என்று என்னிடம் பட்டும் படாமல் கோபத்துடன் கேட்டுவிட்டு வீட்டுக்குள் ஓடிப்போனாள் ஜெமீலா.
சட்டென்று எனக்கு ஒன்னும் புரியவில்லை. ஜெமி என்ன கேட்டாள். ஜொஹராமா சம்சாரமா…. அப்பிடின்னா..? ஜெமி எதுக்கு இப்பிடி கேக்குறா..! அவள் கேட்ட கேள்வியின் பிடி கிட்டாமல் குழம்பிக்கொண்டே இருந்தேன். .
சம்சாரம் என்றால் பொண்டாட்டி. ஜொஹராமாதா எம் பொண்டாட்டியானு எதுக்கு கேட்டா..? நா எப்ப இத இவ கிட்ட சொன்னன்..? ஜொஹராமாக்குற வேலதா இது. ரியா சொன்னதையெல்லாம் இதனுடன் முடிச்சுப் போட்டுப் பார்த்தேன். ஜெமியுடன் தனியா இரிக்கும் போதெல்லாம் கோவமாவே இரிப்பா ஜொஹரா..!
ஒளிஞ்சு விளையாடும் விளையாட்டின் போது வேண்டும் என்றே வந்து யாருக்கும் தெரியாமல் என்னை கட்டி கட்டிப் பிடிப்பாள். அதுமட்டுமல்ல, நான் தனியாக இருக்கும் போதெல்லாம் வலிய வந்து என்னுடன் சங்கோஜம் இல்லாமல் ஒட்டிக்கொண்டு உட்கார்ந்து தொட்டுதொட்டு விளையாடுவாள். பேசுவாள். எனக்கு என்னவோ போல் இருக்கும். நான் அவள் கையை தட்டித் தட்டி விடுவேன். ‘ஜெமி பார்த்துட்டாள்னா அவ்வளவுதா..’ என்று எனக்குள் பதட்டம் எழும்! ஜெமி என்னுடன் பேசாமல் இருப்பது தெரிந்து எல்லோரும் சேர்ந்து விளையாடும் போதும் ஜொஹரா எப்போதும் என் பக்கமே இருக்க ஆரம்பித்தாள். எனக்கு அப்போது எதுவும் புரியவில்லை. அவளுக்குள் நான் இருப்பதும், என்னை அவள் மிக விரும்பியதும் பிறகுதான் தெரிந்தது.
அப்ப அவதா இப்பிடி ஜெமிகிட்ட நா சொன்னதா பொய் சொல்லியிரிக்கா. அந்த கோவத்துலதா என் கையில ஜெமி பெறண்டி வச்சிருக்கா. அச்சச்சோ..! இப்ப என்ன செய்யிறது… இதுக்கு நா காரணம் இல்லையே…. சொன்னா ஜெமி நம்புவாளா. எப்பிடி அவளிடம் இதச் சொல்றது… எனக்குள் ஒருவித தவிப்பு உருவானது.
அதே நேரம் என்னமோ தப்பு செய்வதாகவும் உள்ளுக்குள் ஒரு பயமும் பதட்டமும் ஏற்பட வாப்பாவின் அடி கண் முன் நிழலாடியது. . . அண்ணன் ஏதோ சொல்லிக் கொடுத்து ஏற்கனவே வாப்பா என்னை கண்டித்திருக்கிறார்.
இந்த ஜொஹராவால பிரச்சன வருமோ ! இவ எல்லாத்து கிட்டயும் சொல்லித் திரிஞ்சானா வாப்பா காதுக்கும் போயிருமே.! அப்பறம் வாப்பா உண்டு இல்லேன்னு ஆக்கிருவாறே ! அவளப் போயி மண்டையில மேடி நல்லத் திட்டணும் போல இருந்தது எனக்கு. ச்சே ! என்ன இப்பிடியொரு புள்ள !
ஜெமியவும், என்னயும் பிரிக்கிறதுக்காவே இப்பிடி பொய் சொல்லிட்டு இரிக்கா.. எனக்குத்தா அவளப் புடிக்கல. அப்பறம் ஏன் என்னயே சுத்தி வருறா..?! நா ஜெமிய நேசிக்கிறது அவுளுக்கு தெரிஞ்சுபோச்சு போல! இப்ப என்ன செய்யிறது ஒன்னும் தெரியாம நான் மருகிக்கொண்டே இருந்தேன். .
ஒருநாள் படிக்கிறதையும் விட்டு விட்டு வாப்பாவின் கண்டிப்பையும் மீறி, ஜெமிக்காக ரொம்ப நேரம் வாசலில் காத்திருந்தேன். இரண்டு நாட்களுக்குப் பிறகுதன் ஜெமியின் தரிசனம் கிடைத்தது. இப்போதெல்லாம் முன்பு போல அவள் பொருட்கள் வாங்க கடைகளுக்கு செல்வதில்லை. அந்த வேலை இப்போது அவள் தங்கைக்கு.
“ஜெமி ! ஏம்ப்பா..என்னாச்சு..?” கெஞ்சும் குரலில் கேட்டேன். . ஜெமி என்னை பார்க்கவே இல்லை. ஜெமி என்பதற்குள் ஓடி வந்து நிற்பவளா.. இவள்..! மிகுந்த ஏமாற்றமாக உணர்ந்தேன். “ஜெமி ! உங்கிட்ட கொஞ்சம் பேசணும்..” மீண்டும் கெஞ்சினேன். .
சிறிது நேரம் முகத்தை உம்மென்று வைத்திருந்து விட்டு வெடுக்கென்று முகத்தை திருப்பிக்கொண்டாள் ஜெமி. என்னுடன் பேச விருப்பம் இல்லாமல் வீட்டுக்குள் ஓடி விடுவாளோ என்று என் மனம் பதைபதைத்தது.
நல்லவேளை. என்னை கோபமாகப் பார்த்துவிட்டு, ”எங்கிட்ட என்ன பேசணும். ஒனக்குத்தா ஜொஹரா இரிக்காளே..!” என்றாள் இளக்காரத் தொணியில். வார்த்தையில் சூடும் இருந்ததை உணர்ந்தேன் நான். .
‘’அவ சொல்றதக் கேட்டுக்கிட்டு நீ எங்கிட்ட கோவிக்கிற ஜெமி ! நா அப்பிடி சொல்லுவனா.? ஜொஹரா பொய் சொல்றானு ஒனக்கு தோணலையாக்கும்..?”
ஜெமி எதுவும் பேசாமல் வானத்தில் பிரகாசித்துக் கொண்டிருந்த பதினாலாம் பிறையை பார்த்தபடி இருந்தாள்.
இந்த பதினாலாம் பக்கத்து நிலா இருவரைப் பற்றியும் எவ்வளவு கதை சொல்லும். இப்படியான ஒரு பதினலாம் பக்கத்து பிறை இரவில்தான் தனிமையில் ஜெமியுடன் மிக கிட்டத்தில் நெருங்கி அமர்ந்து எதுவுமே பேசாமல் விடுகதை எதுவும் போடாமல் மௌனமாக அவள் அழகை மிக நுணுக்கமாக பார்த்து ரசித்து மகிழ்ந்தேன். அப்போது அவளும் என்னுடன் எதுவும் பேசமல் அந்த அழகிய பதினலாம் பக்கத்து வளர் பிறையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
. அவைகளை ஞாபகப்படுத்தத்தான் ஜெமி இப்போது அந்தப் பிறையைப் பார்த்தபடி இரிக்கிறாளோ..! எனக்குள் மகிழ்ச்சியும், வருத்தமும் மாறி மாறி அலைக்கழித்தது. அவளுக்காக நான் கட்டிய கனவு மாளிகையைப் பற்றி இப்போது சொல்லத் தோன்றியது.
அவள் கண்ணெடுக்காமல் இன்னும் பிறையைப் பார்த்தபடியே சுவரோரம் சாய்ந்து அழகிய ஓவியம் போல நின்றிருந்தாள். இப்போது அவள் புத்தம் புது ஜெமியாக எனக்கு அந்த பதினாலாம் பக்கத்து நிலவு போல காட்சியளித்தாள்.! தயங்கியபடி அவளுக்காக சிறுவயது முதல் நான் கட்டிவரும் மாளிகையைப் பற்றி இன்னும் விஸ்தாரமாக கூட்டிச் சொல்லிக் கொண்டே இருந்தேன். .
பிறையிலிருந்து கண்களை அகற்றாமல், ”அப்ப இத்தர நாளா இத ஏன் நீ எங்கிட்ட சொல்லவே இல்ல ? பொய்தானே சொல்ற..?” என்றாள். இத்தனை ஆண்டு காலம் என்னோடு பழகியும் ஜெமி என்னை நம்பவில்லை என்பது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது.
“நெஜமாத்தா ஜெமி.! “ ‘’குரான் மேல சத்தியமா..?” என்றாள் என்னை திரும்பிப் பார்த்தபடி.
‘குரான் மேல சத்தியமா!’ ஜெமியின் கண்கள் கலங்கி இருந்தாலும் அதிலொரு புதிய ஒளி மின்னுவதைப் பார்த்தேன். குரான் மீது மட்டுமல்ல, எதன் மீதும் யார் மீதும் சத்தியம் போடுவது எனக்கு பிடிக்காது. அது எனக்கு உள்ளுக்குள் மிகுந்த பயத்தை ஏற்படுத்தும். பொய் சத்தியமாகி விட்டால் ஏதாவது ஆகிவிடுமோ என்கிற பயம் சிறுவயது முதலே எனக்குள் ஊறிப்போயிருக்கிறது.
“நாந்தா சத்தியமல்லாம் பண்ணமாட்டேன்னு ஒனக்கு தெரியுமே ஜெமி?”
என் கண்களை நேருக்கு நேர் பார்த்தாள். சுடர் விட்டுப் பிரகாசிக்கும் ஜெமியின் அந்த கண்களை என்னால் எதிர் கொள்ள முடியவில்லை! மெல்ல தலை குனிந்தேன். .
மெல்ல தலை நிமிர்ந்து “என்ன நம்பமாட்டேங்கிற இல்ல ஜெமி !” என்றேன். கலங்கிய கண்களுடன் . .
யாரோ வரும் சத்தம் கேட்டு, நான் திரும்பிப் பார்ப்பதற்குள் ஜெமி விருட்டென வீட்டுக்குள் ஓடிப்போனாள்.
அதன் பிறகு முன்பு போல ஜெமி வெளியே வருவதே இல்லை. விளையாடவும் வராமல் திண்ணையில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பாள். நான் ஒன்பதிலிருந்து பாஸ் ஆகி பத்தாம் வகுப்புக்கு சென்றதும் வாப்பா சொன்ன அறிவுரை ஒண்ணே ஒண்ணுதான்.
‘’சபீ! ஏனோ தானோனு படிச்சிட்டு இரிக்காதே. நம்ம குடும்பத்துல எஸ்.எல்.சி. ல யாருமே பாஸ் ஆனதே இல்ல. இத ஞாபகம் வச்சுட்டு படி. நம்ம குடும்பத்துலயே ஹாரூனோட மகன்தா எஸ்.எல்.சி.ல மொத ஆளா பாஸ் பண்ணியிரிக்கானு நீயி பேரெடுக்கணும்…என்ன..?”
சந்தோஷம் பொங்க “சரிங்க வாப்பா..” என்றேன். உள்ளுக்குள் பதட்டம் எழுந்தது.
இதனால் நானும் வெளியே தலை காட்ட முடியாமல் போனது. எந்நேரமும் படிப்பு படிப்பு படிப்புதான். ஜெமியை பார்ப்பது மட்டுமல்ல, அவளைப் பற்றிய நினைவுகளும் கூட தடைபட்டது. அவளைப் பார்க்க மனம் துடிக்கும். நான் வெளியே வரும்போது அவள் வரமாட்டாள். அவள் வெளியே வந்து நிற்கும் போது நான் மும்முரமாக படித்துக்கொண்டோ, எழுதிக்கொண்டோ இருப்பேன்.
பத்தாவது சென்றதும் என் நடை உடையெல்லாம் மாறிப்போனது. பெல்ஸ் பேண்டும், இறுக்கமான சட்டையும் என ஆளே மாறிப்போனேன். நிறைய முடி வளர்த்து ஹிப்பி கட் பண்ண மிக விரும்பினேன். பள்ளியில் நண்பர்கள் சிலர் இப்படி ஸ்டைலாக முடி வெட்டியிருந்தார்கள். கணக்கு வாத்தியார்தான் திட்டுவார். வீட்டில் வாப்பா என்னைத் திட்டினார். முடி கொஞ்சம் வளர்வதற்குள் காசைக் கொடுத்து உடனே முடியை வெட்டி வரச் சொல்லிவிடுவார். தலை முடியை வளர்த்து ஹிப்பி கட் செய்யும் ஆசை மட்டும் கடைசிவரை நிறைவேறவே இல்லை!
என் ஸ்டெயிலை ஜெமி பார்க்க வேண்டும் என மிக விரும்பினேன். . ஆனால் அவள் என் மாற்றத்தைக் கண்டு கொள்ளாததில் அது பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லாததில் மிகுந்த ஏமாற்றமும் வருத்தமும் அடைந்தேன்.
சிறு வயதில் நான் புது உடை உடுக்கும் போதெல்லாம், ”எப்ப எடுத்தது சபி! நல்லாரிருக்குது..” என்றோ, “கலர் நல்லாரிக்குது..” என்றோ ஏதாச்சும் சொல்லி பாராட்டுவாள்.
ஒரு ஞாயிறு அன்று ஜெமி வீட்டில் ஒரே கூட்டமாக இருந்தது. அதுவும் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. உம்மாவிடம் விசாரித்தேன். ஜெமிக்கு சீர் என்றது உம்மா. ஜெமிக்கு சீர் என்றால் அவள் பெரிய மனுஷி ஆகிவிட்டாளா..! எனக்குள் என்னன்னவோ எண்ணங்கள் ஓடியது.
அதன் பிறகு சில மாதங்கள் அவளைப் பார்க்கவே முடியாமல் போனது. நான் பள்ளிக்கூடத்திலிருந்து வரும்போது வாசலில் ஜெமி நிற்பது தெரியும். சந்து முனையிலிருந்தே பார்த்துவிடுவேன். ஆவலுடன் வேகமாக வருவேன். அவளைப் பார்த்து ஒரு சிறு புன்னகையாவது செய்து பதில் புன்னகையையும் பெற வேண்டும் என மனதில் ஆசை பொங்கிக் கொண்டிருக்கும். ஒரு வார்த்தையாவது பேசி விட வேண்டும் என எவ்வளவோ முயற்சித்தேன்.
பார்த்தும் பார்க்காதது போல சென்று விடுவாளோ.. அல்லது எதேச்சையாக வீட்டுக்குள் சென்று விடுகிறாளோ தெரியாது. நான் வீட்டை நெருங்குவதற்குள் ஜெமி வீட்டினுள் சென்றிருப்பாள். இப்படி ஏமாற்றமும் வருத்தமுமாக நாட்கள் ஓடிக்கொண்டிருந்தது.
இதற்கிடையில் என்னை கவர ஜொஹரா முயற்சி செய்து கொண்டே இருந்தாள். இவள் இன்னும் பெரியவள் ஆகவில்லையா? அல்லது ஆகிவிட்டாளா.. இவள் மட்டும் எப்பவும் போலவே வெளியில் சகஜமாக வந்து விளையாடிக்கொண்டே கொண்டிருக்கிறாளே! ஜொஹராவை காணும்போதெல்லாம் எனக்குள் இப்படித்தான் எண்ணங்கள் ஓடும். சில சமயம் என்னைத் தேடி வீட்டுக்கே வந்துவிடுவாள்!
. என்னைக் கண்டதும் வெட்கம் கலந்த சிரிப்பை உதிர்ப்பாள் ஜொஹரா. கண்களில் பளிச்சென்று ஒரு மின்னல் அடித்து., புருவங்களை அசைத்து கண்களாலே பேசுவாள். கண்டு கொள்ளாமல் சென்றுவிடுவேன். அவளைக் காணும் போதேல்லாம் எனக்கு கோபம் பற்றிக்கொண்டு வரும் இவளால்தானே எல்லாம் பாழானது..! என் ஜெமியின் இத்தனை ஆண்டுகால அன்பும், நேசமும், பாசமும் மாயமாகிப் போச்சே.!
ஜெமி மீதும் கோபம் வரும். ஒரு தடவை கூட எங்கிட்ட பேசத் தோணாம இருக்காளே..! பார்க்கக் கூட வராம இருக்காளே..! என்ன காரணமாக இருக்கும்? ஒருவேளை என்னைப் பிடிக்காமல் போய்விட்டதோ. ஒருவேளை !நான் அழகில்லையோ.. கண்ணாடி முன் நின்று என் அழகை ஆராய ஆரம்பித்தேன். .
ஏற்கனவே ஒரு முறை பேச்சுவாக்கில் அவள் மாமி பையனைப் பற்றி என்னிடம் சொன்ன போது, முகம் மாறிப் போனேன். எனக்குள் கொஞ்சம் கோபமும் பொறாமையும் எழுந்து அடங்கியது! சும்மா அறிமுகத்துடன் சொல்லி நிறுத்தியிருந்தால் நான் இப்படி கோபப்பட்டிருக்கமாட்டேன்.
“ஆளு பாக்க ஜம்முனு இரிப்பான். அவுங்க ஊட்டுக்குப் போனா எனக்கு என்னுமெல்லாம் வாங்கித் தருவான் தெரியுமா?” அப்போது அவள் கண்கள் ஆச்சிரியத்துடன் மிக விரியும்! எங்க மாமி கூட, ‘ளா ஜெமி ! ஒனக்குற ஆளாக்கும் இவன்..! பாரு பொண்டாட்டிய இப்பவே எப்பிடிப் பாக்குறான்னு’ சொல்லும்…” என்று சந்தோஷத்துடன் சொல்லுவாள்.
ஒருவேளை ஜெமி அந்த மாமி மகனையே இப்போது நேசிக்கவும் விரும்பவும் செய்கிறாளோ..! அதனால்தான் என்னை உதாசீனம் செய்கிறாளோ..? எனக்குள் இப்படியாக எண்ணங்கள் ஓட ஆரம்பித்தது.
வகுப்பு நண்பர்கள் சிலர் அடிக்கடி காதலைப் பற்றி பேச ஆரம்பித்தார்கள்…! கேட்கவே எனக்கு கூச்சமாக இருந்தது. பக்கத்து வீட்டுப் பெண். சொந்தக்காரப் பெண் என்று சாப்பாட்டு இடைவேளையில் கதை விட்டுக்கொண்டே இருப்பார்கள். என்னிடம் “உன் ஆள் யார்டா?” என்று கேட்க ஆரம்பித்தார்கள் . .
“சபி ! என்னடா ஒண்ணுமே பேசமாட்டேங்கிற..? ஒனக்கு யாருமில்லையா..?” என்று கேட்டு இளக்காரமாக சிரிப்பார்கள்.
இதென்னடா வாம்பப் போச்சுனு, “ச்சே..சே..! நானெல்லாம் ரொம்ப நல்ல பையனாக்கும்.!” என்று ஆரம்பத்தில் என் இமேஜை பாதுகாப்பதில் குறியாக இருந்தேன். ஆனால் அவர்கள் வீர தீர சாகச செயல்களைப் போல அவர்களின் உடான்ஸ் காதலைப் பற்றி பீலா விட்டு சொல்லும்போது இதெல்லாம் ஜுஜுபி ! என்னோட உண்மை காதலை சொல்லாமல் விட்டால் சரியாகாது என்று நண்பர்கள் வியந்து பாராட்டும் அளவுக்கு ஜெமியுடனான எனது காதல் கதைகளை சொல்ல ஆரம்பித்தேன். இந்தப் பூனையும் பால் குடிக்குமா ? என்று வியந்து போய் கேட்பார்கள். .
. எஸ்.எல்.சி தேர்வில் வெற்றி பெற்று வாப்பாவின் குடும்ப வகையறாவிலே யாரும் செய்யாத சாதனையை செய்து பேர் வாங்கியது மட்டுமல்ல, வாப்பாவின் நீண்ட கால கனவையும் நிறைவேற்றி அவருக்கு பெருமையையும் தேடித்தந்தேன்.
இப்படி நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை! திடீரென ஜெமீலாவுக்கு நிக்காஹ் நடந்தது! மாப்பிளை அவள் ஏற்கனவே சொல்லியிருந்த அவளின் மாமி மகன் அல்ல! வேற ஆள். அதுவும் என் சின்னம்மா வழியில் சொந்தம். எனக்கு அதிர்ச்சியாக மட்டுமல்ல வருத்தமாகவும் இருந்தது.
இதில் என்னுடைய தப்பும் அதிகம் இருப்பதை மிக உணர்ந்தேன். காதலிக்க பயம்! அவளிடம் காதலை சொல்லவும் பயம்! நான் ஜெமியுடன் பழகியது அவளை விரும்பியது எல்லாம் காதலில் பட்டதா? யோசித்தேன். என் மீது மிகுந்த அன்பு இருக்கும் பட்சத்தில் ஜெமி என்னிடம் அதை வெளிப்படுத்துவாள் என மிக நம்பியிருந்தேன். மிக எதிர்பார்த்திருந்தேன். அந்த சிறுவயது அன்பும் நேசமும் பருவ வயதில் குறைந்து விட்டதே! எங்களுக்குள் இருந்தது வெறும் பருவ வயது ஈர்ப்பு மட்டும்தானா..?
நான் காதலை சொல்லியிருந்தாலும் அவள் எனக்காக காத்திருந்திருப்பாளா..? அவள் வீட்டில்தான் விடுவார்களா..? என் அண்ணன் திருமணமே இன்னும் நடக்கவில்லை! இன்னும் அவன் படித்து முடித்து அதன் பிறகு வேலை கிடைத்து.. அதற்கப்பறம்தான் எனக்கு. அதுவரை அவளை அவள் வீட்டில் சும்மா வச்சிருப்பார்களா ? .
சிறுவயது முதலே எனக்காக ஜெமி என்று இருவரது வீட்டிலும் பெற்றோர்கள் பேசி சிரித்து கிண்டல் செய்ததெல்லாம் இப்போது எனக்குள் ஓடியது. எல்லாம் சும்மா பேச்சுக்காக சின்ன வயசு உலுலா…! அவள் மனதில் என்ன இருந்தது என்பது கடைசி வரை தெரியாமல் போனதுதான் எனக்கு மிக வருத்தமாக இருந்தது. .
சில நாட்களுக்கு வருத்தம் இருந்து கொண்டே இருந்தது. புதுப்பெண்ணாக மறுவீட்டு அழைப்புக்கு அவள் வீட்டுக்கு கணவனுடன் வந்த போது ஜெமியை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவளை இனி பார்க்கவேகூடாது என நினைத்திருந்தேன். வீட்டினுள் சென்றுவிடு சபி என்றது மனம். அதையும் மீறி நின்றுகொண்டே இருந்தேன். முன்னைவிட பளிச்சென்று ஜொலித்த ஜெமியை பார்க்க, வாசலில் நின்றிருந்த என்னை அவளும் மெல்ல ஏறெடுத்துப் பார்த்ததை உணர்ந்தேன்.
அப்போது அவள் கண்களில் ஏதோ ஒரு செய்தி அல்லது சின்னத் தவிப்பு இருந்ததப்பட்டது எனக்கு! இது பிரமையா நிஜமா என்று குழம்பிப்போனேன் உள்ளுக்குள் ஏதோ உடைந்து நொறுங்கிய உணர்வு ஏற்பட,நகர்ந்து சென்று விட்டேன்.
‘இன்னாருக்கு இன்னார் என்று வல்ல இறைவன் ஏற்கனவே தீர்மானித்த படிதான் நடக்கும். அதை யாராலும் மாற்றவே முடியாது.’ என்று ஆறுதல் அடைந்து கொண்டேன். மெல்ல மெல்ல அவள் நினைவுகளிலிருந்து மனம் மீண்டது.
பிளஸ் ஒன் பிளஸ் டூ முடித்து வாப்பா சொன்னபடி இஞ்சினியரிங்க் காலேஜில் சேர்ந்தேன். படிப்பு முடித்த கையோடு நல்ல இடத்தில் உடனடியாக வேலையும் கிடைத்தது. அண்ணன் திருமணம் நடந்து, தங்கைக்கும் நல்ல இடத்தில் மாப்பிளை அமைந்ததில் மன நிறைவு கொண்டேன்.
உம்மாவின் ஆசைப்படி உறவுக்கார பெண்ணான ரஹீமாவை பெண் பார்க்கப் போனோம். மிகச்சின்னப் பெண்ணாக ஜெமியைப் போலவே இருந்த ரஹீமாவை பார்த்தவுடனே எனக்கு பிடித்துப் போனது. ரொம்பவும் சின்னப் பெண்ணாக அழகாக இருக்கிறாளே என்று அப்போதே ரஹீமா மீது கூடுதலாக அன்பு எனக்குள் சுரந்தது.
திருமணமான புதிதில் நான் பணி முடித்து தாமதமாக வரும்போது படுக்கையின் குறுக்கு வாக்கில் கீழ் பகுதியில் பூனைக்குட்டி போல் சுருண்டு தூங்கிக் கொண்டிருப்பாள் ரஹீமா! பார்க்க பாவமாக இருக்கும். அவளை எழுப்பி விடாமல் சத்தமில்லாமல் பேண்ட், ஷர்ட்களை கலைந்து லுங்கிக்கு மாறி, கை கால் முகம் கழுவி வந்து உம்மாவிடம் கேட்டு இரவு உணவை சாப்பிடுவேன் . சில சமயம் நானே எடுத்துப் போட்டு சாப்பிடுவேன். .
தூக்கக் கலக்கத்தில் திடுபுடுவென எழுந்து ஓடிவந்து, ”என்னங்க நீங்க ! என்ன கூப்புட்டு உடலாமல்ல….? அடுப்படிக்கு வந்து நீங்களே போட்டு சாப்புடுறீங்க..?” வருந்தி சங்கடப்படுவாள் ரஹீமா.
‘’நம்ம ஊட்டுல நானே போட்டு சப்புடறதுல என்ன தப்பு ரஹீ..! நீயி சுருண்டு படுத்து தூங்கிட்டிருந்தே பாவமா இருந்துச்சு. அதா கூப்புடல. அதென்ன இப்பிடி சுருண்டு படுத்து தூங்குறே. பெட்டுல நல்லா நேராப் படுத்து தூங்க வேண்டியதுதானே ?”
“சும்மா வந்து படுத்தனா அப்பிடியே தூங்கிட்டேன். இனி இப்பிடிப் படுக்க மாட்டங்க..” “நா ஒண்ணும் உன்ன படுக்க வேண்டாம்னு சொல்லலையே..” ‘’சரி. இப்பிடி தெரியாம தூங்கிட்டனா நீங்க வந்ததும் என்ன கூப்பிட்டு உடுங்க .நீங்களா வந்து இனி இப்பிடி போட்டு சாப்புடக்கூடாது கிட்டியா? ஆமா நா சொல்லிட்டேன்..”
அவன் திருமணத்திற்குப் பிறகு ஜெமி அவள் பிறந்த வீட்டுக்கு வரும்போது ரஹீமாவுடன் வந்து பேசி இருவருக்கும் பழக்கமானது. அப்போது நானும் ஜெமியை அருகில் நேருக்கு நேர் பார்க்கும்படியான வாய்ப்பு அமையும்.
அவளைப் பார்க்கும் போதெல்லாம் ஏதோ சொல்லத் துடிக்கும் ஒரு தவிப்பு ஜெமியின் கண்களில் இருப்பதை நான் மிக உணர்வேன். .ஆனால் அவள் எதுவுமே பேசமாட்டாள். எப்போதாவது “எப்பிடி இரிக்கே சபீ?” என்று மெல்லக் கேட்பாள். எனக்குள் பரவசம் பொங்கி வழியும். சின்னப் புன்னகையுடன் மெல்ல தலையாட்டுவேன். .
அதன் பிறகு தனியாக வீடு மாறி வந்து பல வருடங்களுக்குப் பிறகு ஒரு உறவினர் வீட்டு திருமணத்தில் ஜெமியை பார்த்தேன். எதிர் பாராத சந்திப்பு. “சபி!” என்று சட்டென்று என் முதுகில் தட்டினாள் ஜெமி. நான் இதை எதிர்பார்க்கவே இல்லை! ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்தேன். அவள் முகத்தில் ஒரு பரவசம் மின்னி மறைந்தது! அந்த கண்களில் அதே தவிப்பும் ஈர்ப்பும் இன்னும் இருப்பதை உணர்ந்தேன். ரஹீமா கூட ஆச்சரியப்பட்டு ஜெமியைப் பார்த்தாள்
என்னைப் பற்றி குடும்பத்தைப் பற்றி நலம் விசாரிப்பு என கொஞ்ச நேரம் நின்று பேசினாள் ஜெமி. எனக்கு மிக ஆச்சிரியமாக இருந்தது. அவள் திரும்பிச் செல்லும் போது பார்த்துக்கொண்டே நின்றேன்.. அவள் கண்களில் இருந்த அந்த மினுக்கத்தில் கொஞ்சம் கலக்கம் இருந்ததை உணர்ந்தேன். சிறிது தூரம் சென்ற ஜெமி உள்ளே நுழையும் முன், திரும்பி என்னைப் பார்த்து விட்டுச் செல்ல, எனக்குள் அந்த பழைய ஜெமியும் நானும்! அப்போது எனக்குள் “ஆத்தங்கரை பக்கத்துல காத்திருக்கேன் வாடீ..” பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது!
வீடு வந்ததும் ரஹீமா என்னிடம் கேட்டாள். ”என்னங்க ஜெமியக்கா, இன்னிக்கு உங்கள முதுகுல தட்டிக் கூப்புட்டுப் பேசுது?”
கொஞ்சம் அதிர்ச்சியடைந்தவனாக ‘’அதான் எனக்கே ஆச்சரியமா இருக்கு ரஹீமா!“ என்றேன்.
எனக்குள் ஜெமி வரும்போதெல்லாம் ஜொஹராமாவும் ஓரமாக வந்து போவாள். அப்போது ‘பாவம் ஜொஹராமா…எப்படியிருக்கிறாளோ !’ என்று எனக்கு தோன்றும்.
ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்.
இயற்பெயர் . H. நஸீர். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் (TWAD Board) வரைவு அலுவலராக ( Draughting Officer ) பணி புரிந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளேன். அதன் பிறகு ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் என்கிற பெயரில் கணையாழியில் (1988) எழுத ஆரம்பித்து 35 ஆண்டுகளாக எழுதி வருகிறேன்.