வா.மு.கோமு
000
இந்த உலகம் உங்களை வாழ அழைத்துக்கொண்டே இருக்கிறது!
நீங்கள் ஜெயில் சென்றிருக்கிறீர்களா? நான் திருட்டு வி சி டி விற்று உள்ளே கிடந்து வெளியில் வந்தவன்! நீங்கள் காசநோயில் 7 வருடம் துன்புற்றிருக்கிறீர்களா? அடியேன் அதையும் சந்தித்து வெளிவந்தவன்! நீங்கள் திருமணம் முடிக்கையில் உனக்கு பிள்ளை பிறக்காதென சாபம் பெற்றிருக்கிறீர்களா? இப்படியெல்லாம் உங்களை வாழ்க்கை அலைக்கழித்தாலும் நீ என்னவாக ஆவாய்? என்கிற கேள்வி உங்களிடமிருந்தால் நிச்சயம் அதன் பாதையில் நடைபோடுவீர்கள்.
மனிதனாக ஒருவன் எத்தனை தொழில்களை செய்யலாம்? 90 என பழைய ஓலைச்சுவடி சொல்கிறது! அப்படிப்பார்த்தால் நான் 1989 லிருந்து பல தொழில்கள் செய்தேன்! என்ன? ஆச்சரியம் வேண்டாம்.. கூலிக்கி இருந்தேன்! லேத் மிசினில் வேலை என மூன்று மாதம் ஓடிற்று! எழுத்தும் கூடவே ஓடிற்று! லேத் மிசின் ஓனரை காதோடு அப்பினேன்! அப்பிடித்தான் வரலாற்றுப்பொருள் முதல்வாதம் எனை வளர்த்திற்று. இதுக்கும் அதுக்கும் என்னாடா சம்பந்தம்? கேட்கலாம் நீங்கள்! கொஞ்சம் அட்வான்ஸ் எடுத்துக்கிட்டேன்!
உலக வாழ்க்கையில் பாதியை கடந்த இந்த நேரத்தில் நான் இன்னமும் வாசிக்கிறேன்! என்ன இழவுக்காக? கேள்வி என்னை குடையும் சமயத்தில் போட்டி என எல்லோரும் நடத்துகையில் சந்தோசமாய் இந்த வயதில் கலந்து கொள்கிறேன். சென்ற வருடம் மணப்பாறையில் பெற்ற 5000 பரிசுக்காக நான் அனுப்பிய புத்தகங்கள் கணக்கே 2000 வரும்! கூட கொரியர் சார்ஜை சேர்த்திக்கங்க! பரிசுக்காக நான் நண்பரை அழைத்துக்கொண்டு சென்று வந்த செலவு 3000. செமல்ல! இதைத்தான் நான் திரும்பச் சொல்கிறேன்.. “இந்த வாழ்க்கை உங்களை வாழ அழைத்துகொண்டே இருக்கிறது!” என!
நடுகல் 1991-ல் ஆரம்பிக்கப்பட்ட குற்றிதழ். அப்போது நான் ட்ரெடில் ப்ரஸில் கூலிக்கி சென்றவன். 13 என இதழ் எண் போடப்பட்டு அதுவரை நடாத்தினேன். போதுமென விட்டு அப்பாவை இழந்து வாழ்க்கை ஓடிற்று! அப்பாவின் சேகரிப்பில் இருந்த புத்தகங்களை பெருவையிலிருந்து ஆட்டோ வரவழைத்து எடைக்கு போட்டு அனுப்பினேன்! என்னால் செய்ய இயலும். பின்பாக இறக்கை எனும் இதழ் ஆரம்பித்தேன். அதில் உங்களோடு என்கிற இதே மாதிரியான முகப்பில் நான் பேசுவதை எல்லோரும் ரசித்தார்கள். அதற்காகவே குற்றிதழ் விற்றுத்தீர்ந்தன!
இந்த லூசு மயிரான்கள் .. இப்படி சொல்வதை விட ஓரான் பாமூக்குகள் எனை இசுக்காப்படுத்தி நடுகல் நடத்துவோமென தூண்டி, மீண்டும் இதழாக செழித்து கொழித்தது. எவனும் படைப்புகள் தரலை. குடும்பம் குட்டி என வாழ்க்கை அவர்களையும் ஆட்டிப்படைக்கிறது! நான் யாரோடும் கோபித்துக்கொள்பவனல்ல! நடுகல் முகப்பு உரைகள் எவனுக்கும் பிடிக்கலை. முகப்புரை என்றால் இறக்கை இதழில் எழுதியது போல .. சக எழுத்தாளர்களை நக்கலடிப்பது! சுந்தரராமசாமிக்கு மூஞ்சியில் இரண்டு கண்ணாடி வேண்டுமென சக தோழமை ஆர்ட்டிஸ்டிடம் பேசி வாங்கி வெளியிட்டவன் நான்.
கிய்யா.. புய்யா! நடுகல் இதழ் நண்பர்களின் ஒத்துழைப்புடன் 14 இதழ்கள் வரை சிறப்பாக வெளிவந்தது! மீதம் இரண்டு இதழ்கள் படைப்பாள பெருந்தகைகளிடம் முகநூலில் அறிவித்துக் கேட்காமல் வெளிவந்து எனைச் சோர்வடையச் செய்துவிட்டது! ஆமாம்.. எப்ப நீங்க ஆன்லைனுக்கு வந்து உலவம் பூராம் பார்வைக்கி வருவீங்க? என்ற கேள்வியை சந்தித்துக்கொண்டே வந்தேன்! இங்க புத்தகமாக்கலில் சிக்கல் வருகையில் நான் அங்கே வருவேன் என சொல்லி அப்படியே வந்து சேர்திருக்கிறேன். வாசகப்பறப்பு இங்கே அதிகமுள்ளதா? அவர்களெல்லாம் யார்? அவர்களெல்லாம் வாசிப்பாளர்களாக இருக்க வேணும்! வாசியுங்கள்!
இப்படி பேசிட்டதால நடுகல் அச்சிதழ் அரோகராவா? கேட்கலாம் நீங்கள்! அது ஏன் தடுமாறியது என்பதற்கு பல பதில்கள் இருக்கின்றன. அவற்றை நான் இங்கே சொல்ல ஆசைப்பட்டாலும் .. என்ன மயிரு? சொன்னா என்ன? சொல்றேன்! புத்தக அடக்கவிலை 12000. வைத்துக்கொண்டால் இதழில் எழுதிய கவிஞ்சர்களுக்கு பிரதி அனுப்புகிறேன் 40 ஊவா கொரியர் செலவுடன். அவர்கள் பெருந்தகைகள் என்றெனக்குத்தெரியும். பிச்சைக்காசு 100 ஊவாவேனும் எனக்கு அனுப்பலை. போக முதுபெரும் எழுத்தாள உள்ளங்களுக்கு தொடர்ந்து இதழ் கொரியர் அனுப்பப்பட்டது! அவர்கள் தயாராய் வைத்திருந்தார்கள் எந்த நேரமும் தங்களின் தொங்கிய பொருளை. நான் வாய்ப்பாடியிலிருந்து வாயைத்திறந்துகொண்டு வாழப்பாடிவரை இங்கிருந்தே குனிந்தபடி சென்றேனும் அதை கண்கொண்டு ரசித்து … வரவேணும்! இந்த வாழ்க்கை உங்களை கொடுமைகளுக்கு உட்படுத்தினாலும் நீங்கள் நம்பணும்! நான் நம்பினேன்! எத்தனை தொழில்கள் செய்தாலும் அவைகள் நாசமடைந்தாலும் நான் எழுத்திலிருந்து விடைபெறவில்லை! அது என் அப்பனின் ஜீன்! என் பையனுக்கு ஒரு புத்தகத்தை கூட நான் கண்ணில் காட்டவில்லை. அவனுக்கு ஒரு குழந்தைகள் புத்தகமோ.. ஒரு காமிக்ஸ் புத்தகமோ வாங்கித்தரவில்லை! அவன் வாழ்க்கை இன்றைய காலகட்டத்தில் அவன் பார்த்துப்பான் என்கிற நம்பிக்கைதான்.
பரிசுகளுக்கு இத்தனை காலம் கழிந்து நான் படைப்புகள் அனுப்புவது என் பணத்தேவைக்காகத்தான்! நான் கம்பெனி வாட்ச்மேனாக சென்றிடுவேனோ.. மாசம் கூடி 10000 சம்பளம் பெற்று சோறு உண்பேனோ? பயமாயிருக்கிறது! இலக்கியம் வேறு பல்லைக்கிஞ்சிக்கொண்டே எனைப்பார்த்து செருப்பையும் தூக்குகிறது! எல்லாமும் நடக்கும் தான். எதையும் தாங்கிட இதயம் வேணும்!
இந்த மின்னிதழ் உங்களை நம்பி ஆரம்பிக்கப்பட்டதல்ல! கையெழுத்தில் எழுதி 100 பிரதிகள் ஜெராக்ஸ் போட்டு போஸ்டலில் விலையேதுமின்றி அனுப்பி இலக்கியத்தை புய்த்தியவன் நான்! அன்றெல்லாம் போஸ்டலில் ஒரு கார்டு வீடு வந்து சேர்ந்தால் அதைக்கண்டு மகிழ்ந்தவன். என்ன மயிருக்கு இன்னமும் உயிரோடிருக்கிறேனென்றால் இங்கே நான் இன்னமும் எதையோ செய்துவிட்டுத்தான் கிளம்புவேனென்ற அழைப்பொன்று இருக்கிறது போல! வாங்கடி வாங்க!
அன்று வல்லிக்கண்ணன் கடிதத்திலிருந்து தஞ்சை ப்ரகாஷ் கடிதம் வரை அட்டெப்பொட்டியில் சேகரித்து பனிக்காலத்தில் தண்ணி வார்க்க தீயைப்பற்ற வைக்க பயன்படுத்தினேன்! இப்படித்தான் வாழ்க்கையிருக்கும்! என் அப்பன் அந்தக்காலத்தில் எல்லா சிற்றிதழ்களுக்கும் சந்தாக்கட்டி, எல்லா எழுத்தாளன்களின் கடிதங்களையும் பொட்டியில் அடுக்கி வைத்திருந்தான்! எல்லாமும் தீக்குத்தாண்டி! எதுவும் யாரையும் காப்பாற்றப்போவதில்லை!
புத்தகங்களை வாசிக்காமல் செல்பில் வாங்கி அடுக்கி வைத்திருந்த ஆட்கள் காணாமல் மண்ணுக்குள் புதைந்துவிட்டார்கள். இந்தக்காலம் பேடிலும், லேப்பிலும் வாசிக்க ஆரம்பித்துவிட்டது! இங்கே மயிரை சிலுப்பிக்கொண்டு நடுகல் இதழும் இறங்கிவிட்டது! உங்கள் விமர்சனங்கள் என்னை அல்ல.. எழுதும் புதிய எழுத்தாளர்களை ஊக்குவிக்கும்! எனக்கெல்லாம் யாரும் விமர்சனம் செய்யனுமென நினைத்து எந்தக்கதையையும் நான் இதுவரை எழுதியதில்லை. என் காலம் என்னோடு போகட்டும். மக்களே! உங்களோடு இணைந்து உங்களுக்காக! வாருங்கள் ஒட்டுக்காச்சேர்ந்து கும்மியடிப்போம்!
ஓலையக்கா கொண்டையிலே.. ஒரு கூடை தாழம்பூ!
அன்போடே என்றும்
வா.மு.கோமு
000