எல்லோருக்கும் வணக்கம்!

மாதத்தின் எல்லா நாட்களும் மெயிலில் ஒன்றிரண்டு படைப்புகள் வந்துகொண்டுதான் இருக்கிறது. சில பி.டி.எப் என வருகின்றன. சில படைப்புகள் யார் எழுதியதென தெரிவிக்காமல் மொட்டைத்தாசன் குட்டையில் விழுந்தாப்லயும் வருகிறது. அனுப்பிய மெயிலில் ராமசாமி என்றிருப்பதாக வைத்துக்கொண்டால் அவர் புனைப்பெயரில்கூட எழுதலாம். அல்லது எனக்கு ‘ஜீம்பூம்பா’ மந்திரம் தெரியுமென அவர்கள் நினைத்திருக்கலாம். (ஏலே! கவிதையெ பாத்தாவெ தெரியாதாலே? நாமதா எழுதி அனுப்பியிருப்பம்னு? தமிழ்நாட்லெ என்னெத்தவுத்து யாருலே இப்புடி மணியாட்டம் கவிதெ எழுதிருவாய்ங்கெ?) இந்தமுறையும் படைப்பு நன்றாக இருந்தமையால் எடுத்து சேகரிப்பில் வைத்திருந்தேன். அவர்களிடம் புகைப்படமும், சுயவிபரக்குறிப்பும் கேட்டிருந்தேன். பத்து நாட்களுக்கும் மேலாகியும் எந்த பதிலுமில்லை. 

நடுகல் பதிப்பக வெளியீடாக ஆர்.ஷண்முகசுந்தரம் அவர்களுடைய வெளியில் இதுவரை வராத, அதுவா? இதுவா?, காணாச்சுனை, புதுப்புனல் மூன்றையும் ஒரே புத்தகமாக வசதி கருதி கொண்டு வந்தோம். நிதானமான ஓட்டம் தான். சின்ன சோர்வு வந்ததென்னவோ நிஜம் தான் என்றாலும் மெதுவாய் செல்லும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. அடுத்ததாக அவரது சிறுகதை தொகுப்பு ஒன்றும், மொழிபெயர்ப்பு கதைகள் அடங்கிய மற்றொரு தொகுப்பையும் ஒரே தொகுப்பாக நடுகல் இந்த மாதம் கொண்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவு வேண்டும் தான். சிக்காத பொருளுக்கு என்று ஒரு மதிப்பு இருக்கிறது. குறைவான வாசகர்கள் வாசித்தாலே போதுமானது தான். மற்றபடி அகலக்கால் வைக்கவும் விருப்பமில்லை.

சென்ற மாத இதழில் வெளிவந்த இவரது மொழிபெயர்ப்பில் ‘மிருகம்’ கதை பலராலும் பாராட்டப்பட்டது மகிழ்ச்சி. இந்த இதழிலும் அண்ணாரது மொழிபெயர்ப்பில் ‘போஸ்டாபீஸ்’ என்கிற குஜராத்தி கதை வெளியாகியிருக்கிறது. தொகுப்பாக வரவிருப்பதால் மேற்கொண்டு இவரது மொழிபெயர்ப்பு கதைகள் இனி நடுகல் இதழில் வெளிவராது.

நடுகல் புத்தகப்பதிப்பு மற்றும் nadukal.in இணையத்திலும் மாதா மாதம் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருப்பதால் என் எழுத்துப்பணிகளும் சற்று தொய்வுதான். இருந்தும் களமாட வந்திருக்கிறோம். இதுவும் பணிதானே! கொங்கு மண்ணின் மூத்த கிராமிய எழுத்தாளருக்கு நடுகல் செலுத்தும் ராயல் சல்யூட்டாக வைத்துக்கொள்வோம்.

’எதற்காக எழுதுகிறேன்?’ என்கிற கேள்விக்கான பதிலாய் ஆர்.ஷண்முகசுந்தரம் கூறுகையில். “நான் பிறந்து வளர்ந்த கொங்கு நாட்டு கிராமத்தையும், அங்கு நான் பழகிய கிராம மக்களையும் உள்ளது உள்ளபடி எழுத்தில் சித்தரிப்பது என்ற பேரார்வம் எனக்குள் துளிர்த்தது. அந்த ஜனங்களின் விருப்பங்கள், துயர்கள், வேடிக்கை விமரிசைகளை வனப்புடன் தீட்டிவிட திட்டமிட்டேன். ஒவ்வொரு சிறிய காரியத்தையும் நுட்பமாக கவனித்தேன். கவனிப்பது என்ன? என் இதயத்தில் வீற்றிருந்த வடிவுகளுக்கு உயிர் கொடுத்தேன்” என்கிறார்.

மொழிபெயர்ப்புக் கலை குறித்து :

”என் அனுபவம் மட்டுமல்ல. மொழிபெயர்க்கும் ஒவ்வொருவரின் அனுபவமும் இந்தக் கலையில் சற்று சிரமம் மிக்கது தான். தமிழில் எழுதிவிட்டால் மட்டும் அது தமிழாகிவிடாது. மொழிபெயர்ப்பும் ஆகிவிடாது”

’’மூல ஆசிரியரின் உள்ளக் கிடக்கை இன்னதென இனம் காணும் பண்பு இன்றியமையாதது. மூல ஆசிரியரே மொழிபெயர்க்கப்படும் மொழியில் எழுதுவாரானால் எப்படி எழுதுவாரோ அப்படி எழுத வேண்டும். கூடிய அளவுக்கு இருமொழிப் பண்புகளையும், வாழ்க்கை, இலக்கிய மரபுகளையும் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும். எந்த அளவுக்கு நம் மொழி இடம் கொடுக்குமோ அந்த அளவுக்கு எழுதும் பக்குவம் வரவேண்டும். முதலில் எழுதும்போதே தப்பும் தவறும் இல்லாமல், அடித்தல், திருத்தல் இன்றி எழுதும் பக்குவம் கைவரப் பெற்றால் தான் சிந்தனைப் போக்கில் ஒருமையும் ஒழுங்கும் உண்டாகும்”

முதலாக கதைகளை தேர்ந்தெடுப்பதில் கூட ஆர்.ஷண்முகசுந்தரத்திற்கு பக்குவம் இருந்திருக்கிறது என்பது இந்தத் தொகுப்பில் உள்ள குறைவான கதைகள் நிரூபணம் செய்கின்றன. உருது, வங்காளி, ஹிந்தி, குஜராத்தி என்று கதைகள் ஒவ்வொன்றை தேர்ந்தெடுத்தவர் வங்காளியில் மட்டும் மூன்று கதைகளை இணைத்திருக்கிறார்.

மீண்டும் சிரமத்திற்கிடையிலும் நடுகல் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராது பயணிக்கிறது!

அன்போடே என்றும்

வா.மு.கோமு 1-5-2025

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *