வா.மு.கோமு

நிஜந்தன் தோழன் நல்ல வாசிப்பாளன்.

“எப்போ போன்ல கூப்பிட்டாலும் எடுக்கறீங்க.. சரி வச்சிடவான்னு நான் கேட்கிறப்பத்தான் சரின்னு சொல்றீங்க! ஒரு நாள் உங்க வீட்டுக்கு வரணும். பேசணும்!”

’பிறழ்’ நாவலை வாசிக்க வோர்டு ஃபைலாக அனுப்பினான். ஒரே நாளில் வாசித்துவிட்டு, ‘ரொம்ப அவசரமா எழுதினாப்ல இருக்கு.. பல விசயங்கள் நிதானமா சொன்னாத்தான் இங்க சிலருக்கு புரியும். தாவித்தாவி போறாப்ல இருக்கு. மீண்டும் சரி பண்ணனும்’ என்றேன். ‘போக இது பத்தாயிரம் வார்த்தைகளை கூட எட்டலை.. அதனால இது நீள் கதையாத்தான் பார்க்கணும். அல்லது குறுநாவல்னு வச்சிக்கலாம். ஆனா சேர்த்தி எழுதவேண்டிய இடங்கள் நிறைய இருக்கு!’ என்றேன்.

”பேசாம தொடரா நடுகல் இணைய இதழ்ல கொண்டு வருவோமா?” என்று நிஜந்தன் கேட்கையில் ‘அது ரொம்ப நல்ல விஷயம்.. முதல்ல ஒரு ரெண்டாயிரம் வார்த்தைகள் உனக்கே திருப்தி வர்றப்ப எனக்கு அனுப்பு’ என்றேன்.

பின் என்ன நினைத்தானோ திடீரென எதிர் வெளியீட்டில் நாவல் வரப்போவதாக அறிவிப்பைக் கண்டு ஆச்சாரியமானேன். பெங்களூர் ரயிலில் மருத்துவமனைக்கு செல்கையிலெல்லாம் எப்படி என் ஞாபகம் வருமோ தெரியாது.. அழைக்கையில்.. மருத்துவமனை போயிட்டு இருக்கேன்! என்றே சொல்வான்.

பிறழ் நாவலை எனக்கு அனுப்ப முகவரி கேட்டான். ‘அதைத்தான் நான் வோர்டு ஃபைலில் வாசித்துவிட்டேனே!’ என்று ஒருமுறை சொன்னேன். ‘ஓ.. அப்படிங்களா? உங்களுக்கு அனுப்பின ஞாபகம் எனக்கு இல்லங்க’ என்றான்.

மீண்டும் இருபது நாட்களுக்கும் முன்பாக வாட்சப்பில் என்னுடைய முகவரியை அனுப்பும்படி கேட்டிருந்தான். அப்போது நான் மருத்துவமனையில் கிடந்தேன். புத்தகம் அனுப்புவதற்காகத்தான் இருக்குமென நானாக நினைத்துக்கொண்டேன். நான் மருத்துவமனையிலிருந்து வெளிவந்து இரண்டு நாட்களாயிற்று. இன்று காலையில் முகநூலில் நான் பார்த்த முதல் செய்தி நிஜந்தன் தோழன் மறைந்துவிட்டான் என்று.

நிஜந்தன் நம் நடுகல் இணைய இதழில் மகிழ்ச்சியாக குறுங்கதைகள் எழுதத்துவங்கினான். இப்போதுதான் எழுதத்துவங்கியவனை காலம் அவசரமாய் தனக்கவன் தேவையென எடுத்துக்கொண்டது.

போய்வா நிஜந்தா!

நீ சென்ற பிறகு தான் இந்தமாத இதழ் உனக்கு இரங்கலை தெரிவித்து வரவேண்டும் என்றே இருந்திருக்கும் போல!

000

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *