நான் சமீபத்தில் வரும் எல்லா புதிய நூல்களையும் வாசிக்க ஆசை கொள்கிறேன். அப்படித்தான் ஈரோடு கண்காட்சி எனக்கு உதவுகிறது. வாங்கிட ஆசை கொண்டு ஸ்டால்களில் நுழைகிறேன். எழுத்தாளனாகிய எனக்கு பத்து சதவிகிதத்திலிருந்து அடுத்த கட்டமாக இருவது சதவிகிதம் மட்டுமே தருவேன் என அடம் பிடிக்கிறார்கள்! அதுவும் எனையறிந்த பதிப்பகத்தார்கள் மட்டும். சரிங்! எனக்கு அந்த இருவது சதவிகிதம் கூட வேணாம்.. நான் வாசிப்பாளன். எனக்கு புத்தக பின்னட்டையில் போட்ட விலையிலேயே பில் போடுங்க! நான் ஒங்களை ஏதேனுமாக மாற்றிட வரவில்லை.. வாசித்து வாசித்து.. என் மனநிலையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளும் ஆசையில் வந்திருக்கிறேன்!

எனக்கு என்னத்துக்காக.. கழிவு சதவிகிதங்களை அங்கே விற்பனை செய்யுமிடத்தில் தருகிறீர்கள்? ஒன்றும் வேணாம்! ஏற்கனவே பதிப்புத்துறை காலியாகிக்கொண்டிருக்கிறது! ஒவ்வொரு கண்காட்சி இடங்களிலும் அதிசியமாக பேருந்து வைத்து பள்ளிப்பிள்ளைகளை கொண்டுவந்து இறக்குகிறார்கள்! அவர்கள் வெறுமனே கூட்ட நெரிசலில் அரங்கை நிரப்புகிறார்கள். ஓடி வந்து, ‘அண்ணே இந்த புக்கு எனக்கு ஆவுமா?’ என்று மனுஷ் கவிதை தொகுப்பை சுமக்க மாட்டாமல் தூக்கியெடுத்து வந்து கேட்கிறார்கள்! பதில் சொல்ல முடியாமல் பேந்தப்பேந்த முழிக்கிறேன்! ’பாரதியார் கவிதை குடுங்கண்ணா!’ என்று உயிர்மை அரங்கில் கேட்கிறார்கள்.

பேசாமல் குழந்தைகளுக்காக தனியே பேருந்துகளை ஓட்டிப்போய் தனியே கண்காட்சி வைத்து கொண்டாடலாம்! அதுதான் சரியாகவும் படுகிறது. அல்லது குழந்தைகளுக்கான அரங்குகளை கண்காட்சியில் தனித்து அமைத்திடலாம்.

புத்தக விற்பனை எப்படியோ வருடம் தவறாமல் குறைகிறது! வெறும் கூகிள் எழுத்துகள் தொகுப்பாக்கப்பட்டு விற்பனைக்கு கிடத்தப்படுகின்றன. உயிர்ப்பான புத்தகங்கள் பெட்டிகளுக்குள் பதுங்கிவிட்டன.

எனக்கென்று இருப்பவர்கள் நிலையும் இதுவே! தமிழினி வசந்தகுமார் தடுமாறுகிறார் கண்காச்சி சாலைகளில்.. என்றால் நிச்சயம் எதுவோ இங்கே நடக்கத்தான் போகிறது! ‘எடுத்துட்டு போ கோமு!’ என்று ஒரு வார்த்தையை அவர் சொல்வார். அடுத்து ‘இருக்கிறதை குடுத்துட்டு போ கோமு’ என்கிறார். இந்த வாழ்க்கை என்னை வாழ அழைத்துக்கொண்டேயிருக்கிறது.. என்று நான் அடிக்கடி சொல்ல இதுவும் ஒரு காரணம்.

எனக்கு வாசிப்பு என்பது கொடுப்பினை. பைசா இல்லைன்னாலும் வாசிப்பேன். நீங்கள் யாருமில்லைனாலும் இந்த கிராமத்தில் வாசித்துக்கொண்டே தான் கிடப்பேன். புதிய எழுத்தாளர்களின் புதிய கொத்துக்களை புதிய பதிப்பகங்கள் வெளியிடுகின்றன. அவைகளை நான் வாசிக்க போராடுகிறேன். எதாச்சிம் எனக்கு பிடித்தமாக இருந்திடுமென!

இந்த நேரத்தில் என் முன்னோர் எழுத்துக்களையும் வாசிக்கிறேன். இதில் பெருமாள்முருகன் எழுத்துக்கள் இருக்கிறது! கொங்கு மண்ணின் வாழ்க்கைச்சூழலை அப்பட்டமாக சொல்லும் எழுத்து அவருடையது.

சமீபமாக அவரின் மாதொருபாகன் நாவலை வாசித்தேன். ரொம்ப காலமாக என்னிடம் கிடப்பில் கிடந்தது தான். அப்போதிருந்தே அந்த நாவலைப்பற்றியான சரியான பார்வையை யாரும் முன்வைக்கவில்லை. அப்படி வந்திருந்தாலும் அது சரியானதுமல்ல! தொடர்ந்து…

பெருமாள்முருகனின் ’ஆளண்டாப் பட்சி’ நாவலை மிக ஆர்வமுடன் வாசிக்கத்துவங்கினேன். கிட்டத்தட்ட பல பக்கங்கள் ஒரு நிலத்தை வாங்குவதை நோக்கி இருவரின் பயணத்தை பேசுகிறது. 2 மாடுகள் இழுத்துச்செல்லும் வண்டியில் இருவரும் செல்ல, அவர்கள் வாயிலாக குடும்ப நிகழ்வுகள், ஊர் நிகழ்வுகள் பல பேசப்படுகிறது.

சொத்துப்பிரிவினையால் அண்ணன்கள் தம்பிகளுக்குள் இருந்த பாசம் என்கிற ஒன்றும் காணாமலாகிவிடுவது இந்த மண்ணில் சகஜமான விசயமாக இருக்கிறது. கொஞ்சம் மரியாதை கொடுத்து ஒதுங்குபவனை முற்றிலுமாக முடக்கிவிடவும் தலைப்படுவார்கள். இந்த ஊரும், சொந்தங்களுமே வேண்டாமென ஒதுக்கிவிட்டு, நிலம் தேடி பயணிக்கும் நாயகன் நமக்கெல்லாம் ஒரு தூண்டுகோளாகவும் செயல்படுகிறான்.

நிலத்தைப்பிடித்த பின்பாக நாயகனின் பார்வை மாறுபடுவதை அவ்வளவு அழகாகச் சொல்கிறார்.

ஏன் இந்த நாவல் பிடித்தது? என்றால்.. எனக்கு ஒட்டுறவான பல விசயங்கள் இந்த நாவலில் தகவலாக சொல்லப்படுகின்றன. உதாரணமாக சந்தை என்று வைத்தால்.. முந்தைய காலத்தில் மாடுகளுக்கு தவுடு புண்ணாக்கு கரைசலை ஒரு ரூவாய்க்கும், மாடுகளுக்கான தீனி வகையறாவாக நான்கு தட்டுக்கட்டை ஒரு ரூவாய்க்கும் விற்றிருக்கிறார்கள். நிச்சயம் இது கொங்கு மண்ணில் அழகுற நடந்தேறியிருக்கும். நான் கண்கொண்டு காணலையென்றாலும் அடுத்து அவர் சொல்லும் விசயங்களை கண்ணுற்றிருக்கிறேன்.

சந்தைக்கு வரும் மாட்டு வண்டிகள் இராக்காலங்களில் பயணிக்கும் பொழுது வண்டியின் அடிப்புறத்தில் சீமெண்ணெய் விளக்கு எரியும்! சிறாராய் இருக்கையில் கூட்டு வண்டியாகட்டும், ரெட்டெ மாட்டு வண்டியாகட்டும்.. தொங்கித்தூறியாடி கொஞ்சம் தூரம் பசங்கள் வருவதை விளையாட்டாய் செய்வோம். வண்டிக்காரன் வணடியை நிறுத்தி சப்தமிட்டால் ஓடிவிடுவோம்! மீண்டும் வண்டி கிளம்புகையில் ஓடி வந்து பின்புறத்தில் தொங்குவோம்!

எனக்குப்படிக்க உகந்ததாய் இருக்கும் புத்தகங்களை நான் வாசிக்கிறேன். அதுவும் மண் என்கிற ஒட்டுறவாய் இருந்தால் அதிகப்படி ஆர்வத்தை கூட்டிக்கொள்கிறேன்.

வாங்கிய நிலத்தை சீர்படுத்தும் முயற்சியில் இருவரும் இறங்குகிறார்கள். நாயகனின் பாப்பா காட்டுக்குள் நுழைகிறாள். பாறைகளும் நிலமுமாக இருக்கும் காட்டினுள் ஒற்ரைப்பூ பூத்தது போல பாப்பாவின் வரவு இருக்கிறது. தன் வயதுக்குண்டான விளையாட்டுகள் ஏதுமின்றி பொறுப்பு கூடியவளாக காட்டப்படுகிறாள். பின்பாக ஆயாக்கிழவி காட்டினுள் இறங்குகிறாள். நாவல் முழுக்கவும் மண்வாசனை நுழைந்துவிட்டது. ஆயாக்கிழவி காடுமுழுக்கக்கிடக்கும் கற்களை பனைமட்டைகொண்டு கூட்டிக்குவிக்கிறாள். செந்தேள் கடியும் படுகிறாள். இந்த நாவல் திடீரென முடிந்துவிட்டது ஏமாற்றமாகவே இருந்தது. மிகப்பெரிதாய் வரவேண்டிய நாவல் தான்.

கண்மணிகுணசேகரன் நாவல்களில் பெண்கள் அதிகமாய் வருவார்கள். அதிகமாய் பேசுவார்கள். அவரிடமும் நிலக்காட்சி அற்புதமாய் நாவலில் விரியும். பெருமாள்முருகன் நாவல்களில் பெண்கள் தொட்டுக்கொள்ளும் ஊறுகாய் போல வருவார்கள். அதிகம் பேச பயப்படுவார்கள். இருவரிடமும் ஒரு ஒற்றுமையை காணமுடிகிறது. கதை சொல்லும் முறை அவ்வளவு நிதானமாக இருக்கும்.

சந்தேகமாக, ’இப்படியான பழைய கிராமிய வாழ்க்கை இன்றைய வாசகர்கள் ஆர்வமாய் வாசிக்கிறார்களா? காலம் மாறிவிட்டதே!’ என்று நண்பரிடம் கேட்டேன். ‘அண்ணா நீங்க சொல்றாப்ல நிறைய புத்தகங்கள் இன்னிக்கி வருதுங்ணா, ஆனா இந்த புத்தகங்கள் தான் காலத்துக்கும் நிக்கும்!’ என்றார். ‘அப்படின்னா பெருமாள்முருகன் தனக்கு தெரிந்த வாழ்க்கை முறையை மட்டும் தான் சொல்றாரு.. புதிய முயற்சியா செய்யுறதில்லேங்கறீங்க!’ ‘ஆமாங்கண்ணா!’ என்று முடித்துக்கொண்டார்.

நடுகல் அச்சிதழுங்களா? கதை அனுப்பலாங்களா? என்று சிலர் இப்போது கேட்கிறார்கள். அச்சிதழாக வந்துகொண்டிருக்கையில் இப்படியான கேள்விகளை நான் சந்திக்கவேயில்லை. ‘நடுகல், அச்சிதழ் இல்லீங்கொ!’ என்று சொல்லவும் சங்கடமாயிருக்கிறது. இன்னும் கொஞ்ச காலம் இந்த சங்கடம் என்னிடமிருக்கலாம்.

இந்த இதழில் பல புதிய எழுத்தாளர்கள் படைப்புகள் எழுதியிருக்கிறார்கள். மூத்தவர்களின் படைப்புகள் வரும் இதழ்களில் இடம்பெறும்.

அன்போடே என்றும்

வா.மு.கோமு.

வா.மு.கோமு

வா.மு.கோமு என்ற பெயரில் எழுதிவரும் வா.மு.கோமகன் ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலைக்கும் மேற்கே 12 கிலோ மீட்டரில் இருக்கும் வாய்ப்பாடி என்கிற கிராமத்தை சேர்ந்தவர். 91ல் திருப்பூரிலிருந்து நடுகல் என்கிற சிற்றிதழை கொண்டு வந்தவர். சமீபமாக நடுகல் இதழ் மீண்டும் காலாண்டு இதழாக வெளிவருகிறது. 91ல் இலக்கியகளம் இறங்கியவரின் சிறுகதைகள் பல்வேறு சிற்றிதழ்களில் வெளியாகத்துவங்கின. மனதில் நினைத்தவற்றை எழுத்தில் சொல்ல சிறிதும் தயக்கம் காட்டாத எழுத்தாளர் என்ற பெயரை கூடிய சீக்கிரமே பெற்றவர். கள்ளி, சாந்தாமணியும் இன்னபிற காதல் காதல் கதைகளும், எட்றா வண்டியெ, மங்கலத்து தேவதைகள், 57 சினேகிதிகள் சினேகித்த புதினம், மரப்பல்லி, சகுந்தலா வந்தாள், நாயுருவி, சயனம், ரெண்டாவது டேபிளுக்கு காரப்பொரி, தானாவதி, ராட்சசி, குடும்ப நாவல்.. ஆட்டக்காவடி, கள்ளி -2, நெருஞ்சி என்கிற நாவல்களை வெளியிட்டுள்ளார். கொங்கு வாழ்வியலை அப்பட்டமாக காட்டும் எழுத்துக்குச் சொந்தக்காரர்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *