நடுகல் இணைய இதழ் வெளிவரத்துவங்கிய அக்டோபர் 2023 மாதத்திலிருந்து குறிப்பிடத்தகுந்த இதழாக வாசகர்கள் மத்தியில் கவனம் பெற்றிருப்பது மகிழ்ச்சியான விசயம் தான். இணைய இதழாக பணி செய்வதற்கும், முன்பு அச்சிதழாக பணிசெய்ததற்கும் வித்தியாசங்கள் நிரம்பவுள்ளன. எல்லாமும் ஒன்றுதானே! என்று நினைக்கவே முடியாதுதான். அச்சிதழாக நடத்துகையில் புதிய எழுத்தாளர்களுக்கே முன்னுரிமை கொடுத்தது நடுகல். ஒரு எழுத்தாளரின் ஆரம்பகட்ட கதையானது பல விசயங்களை அப்போதே நமக்குச் சொல்லிவிடும். இந்த சிறுகதையை எழுதியவர் தொடர்ந்து எழுதுவாரா? அப்படி எழுதுகையில் அவர் எழுத்து இன்னமும் வளர்ச்சியடையுமா? எல்லாமும் தெரிந்துவிடும். ஆனால் அச்சிதழில் இடப்பற்றாக்குறை இருந்தது. அதுதான் உண்மை. போக புதிய படைப்பாளிகளை எழுத வைத்தே அச்சிதழை நாம் நடத்திவிடவும் முடியாது. இதழுக்கென்று ஒரு தர நிர்ணயத்தை வாசகர்கள் உருவாக்கி வைத்துவிட்டு தள்ளிநின்று வேடிக்கையாய் ரசிப்பார்கள்.
இணைய இதழாக வருகையில் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை. அதற்காக இருந்துவிட்டுப் போகட்டுமே இதுவும்! என்று படைப்பை ஏற்றிவிடவும் முடியாது. பரந்துபட்ட வாசகர்களை சென்றடையும் இடமாக இணையம் இருப்பதால் வகை வகையான படைப்புகளை வெளியிடலாம். சிற்றிதழ் வாசகர்களுக்கு உகந்ததாக இருக்க வேண்டும் என்பதற்காகவே வர்ணங்கள் இன்றி ஓவியங்கள் இங்கே இடம்பெறுகிறது. போக வாசிப்பாளர்கள் அலைபேசியிலோ, லேப்டாப்பிலோ வாசிக்க நுழைகையில் மிக எளிதாக இதழ் வாசகரின் பார்வைக்கு வந்திடல் வேண்டும். நடுகல் இணைய இதழுக்கென்று படைப்பாளர்கள் உருவாகிடும் வாய்ப்பும் தெளிவாகவே தெரிகிறது. தொடர்ந்து மற்ற இணைய இதழ்களிலும் புதிய படைப்பாளிகள் அனைவரும் எழுதுங்கள்.
கதைகள் வந்தன, கவிதைகள் வந்தன, கட்டுரைகள் வந்தன.. என்று அப்படியே இணையத்தில் ஏற்றிவிடவும் முடியாதுதான். அலைபேசியிலேயே எழுதும் எழுத்தாளர்கள் அனுப்பும் படைப்புகளை வாசிக்கவே பீதியடைகிறேன். எங்கே பாரா முடிகிறது? யார் பேசுகிறார்கள்? யார் பதில் சொல்கிறார்கள்? என்று மிக சிரமப்பட்டு கண்டறிந்து அவர்களின் உரையாடல்களை பிரித்து இறக்கி.. அப்பாஸ்டவி குறிகளையும் நானே இடவேண்டி ஆகிறது.
எந்தவொரு படைப்பையும் வாசிக்கத் துவங்கியதுமே என் கையானது தவறுகளை திருத்தத்துவங்கிவிடுகிறது. அப்படி ஆயிரத்துக்கும் அதிகமான வார்த்தைகளை திருத்தி முடிகையில் கதையின் சாரம்சமும், முடிவும் .. நம் இதழுக்கு ஒத்துவருமா? என்ற கேள்வியில் நிற்கிறது. நேரமும் எடுத்துக்கொள்கிறது. இருந்தும் விருப்பத்தின்பேரில் இந்தப்பணியைச் செய்கிறேன். அப்படி திருத்தி வெளிவந்த கதையை எழுதிய படைப்பாளிகள் இங்கே வாசித்துப்பார்க்க வேண்டும். தன் தவறுகளை மேற்கொண்டு வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே நடுகல்லின் விருப்பமாக இருக்கிறது.
பலர் கடைசி நேரத்தில் படைப்பை கொடுத்தாகனுமே என்று அவசரத்தில் டைப்பிங் செய்கிறார்கள். பிறகு அதை திரும்பப்படிப்பதுமில்லை போலிருக்கிறது. இம்மாதிரியான பிரச்சனைகள் அனைத்தும் போகப்போக சரியாவிடுமென நம்புகிறேன். இணையத்தில் விதம் விதமான இதழ்கள் வந்துகொண்டு இருக்கின்றன. ஒவ்வொன்றும் தனக்கான தனித்துவத்துடன் இயங்குகின்றன. நடுகல்லும் தனித்துவத்தை முதல் இதழிலிருந்தே செய்யத்துவங்கிவிட்டது. பலர் வாசகர்கள் ஆடியோ வாயிலாக படைப்புகளை கேட்கும் வசதி இருப்பதை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். சிலர் அந்த வசதியை விரும்புகிறார்கள். அதை அவர்கள் பேருந்துப்பயணத்தில் பயன்படுத்துவதாகவும், இரவில் படுக்கையிலிருக்கையில் பயன்படுத்துவதாகவும் கூறினார்கள். எல்லாமும் நல்லதே தான்.
எழுத்தாளர் தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது (2023) இந்தவருடம் கிடைத்திருக்கிறது. அவரது எழுத்துக்களின் ரசிகன் என்கிற வகையிலும், எங்கள் கொங்குமண்ணின் எழுத்தாளர் என்பதிலும் நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். அவருக்கு நடுகல் இதழ் குழுவும், நானும் மனம் நிரம்பிய மகிழ்வு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். அவரது படைப்புகளில் ஆழமும் வீச்சும் ஒருங்கே அமையப்பெற்ற படைப்பு ’நீர்வழிப் படூஉம்’ நாவல். தேவிபாரதியின் எழுத்துக்கள் விளிம்புநிலை மனிதர்களையே தொடர்ந்து பேசுகிறது. அவருக்குத் தெரிந்த கிராமிய மனிதர்களின் வாழ்க்கையை தொடர்ந்து எழுதுகிறார். மீண்டும் தமிழுக்கு சில படைப்புகளை அவர் கொடுக்க.. காலமும், மனநிலையும் அவருக்கு ஒத்துழைக்க வேண்டும்.
எப்பொழுதும் சாகித்ய அகாடமி விருது கிடைத்த பிறகுதான் பலர் இவருக்கு கொடுத்ததற்கு அவருக்குக் கொடுத்திருக்கலாம். ஏன் அவருக்கு கொடுக்கவில்லை? இப்படியெல்லாம் காட்சிகள் அரங்கேறுவதை நாம் கண்டிருக்கிறோம். இந்தமுறை விருது அறிவிப்பு வரும் முன்பாகவே இணையத்தில் தகவல் கசிந்துவிட்டது. இதை முன்னிட்டு முன்பாக விருதுபெற்ற படைப்பாளி, இரண்டாமிடம் வந்த எழுத்தாளருக்கு தரவேண்டுமென கூறினார். அது எப்படி? என்று இணையம் முழுக்கவும் பரபரப்பு சூழ்ந்துகொண்டது.
எழுத்தாளரும் நண்பருமான கே.என் செந்தில் மூலமாக பலர் களமிறங்கி வாழ்த்துக்களை வரிசையாக முகநூல் முழுவதும் இடஆரம்பித்துவிட்டார்கள். இந்தவிசயம் தெரியாமல் காலைநேரத்தில் பைப்பில் தண்ணீர் வருகிறதென குடம் குடமாய் அடியேன் கொண்டுபோய் என் செடிவகைகளுக்கு உயிரூட்டும் முனைப்பில் இயங்கிக்கொண்டிருந்தேன். எல்லாமும் முடிந்து வீட்டினுள் வருகையில் நண்பர் தேவிபாரதியின் அழைப்பு. பதறிக்கையாய் பேசினார் என்னிடம். எனக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை.
”விருது அறிவிச்சிட்டதா போட்டிருக்காங்க கோமு.. நான் முகநூல் பக்கம் வர்றதில்ல. ஆனா சாகித்ய அகாடமியிலயிருந்து எனக்கு யாரும் சொல்லலை!” என்று பேசிக்கொண்டே சென்றார். ‘விருது எங்கேயும் போகாதுங்க! அது உங்களுக்குத்தான். நீங்க பதட்டப்படாதீங்க! அமைதியா இருங்க! நான் இன்னும் முகநூலை பார்க்கலை.. பார்த்துட்டு கூப்பிடுறேன்!’ என்று சொல்லி வைத்துவிட்டேன். பின்பாக நான் பார்க்கையில் வரிசையாக வாழ்த்துச் செய்திகளைத்தான் முகநூல் முழுக்கவும் பார்த்தேன். நானும் கூட முகநூலில் ‘நீர்வழிப் படூஉம்’ நாவல் வந்த புதிதில் நடுகல் அச்சிதழில் குமாரநந்தன் எழுதிய விமர்சனத்தை பதிவிட்டேன்.
எல்லாமும் ஒருமணி நேரம் தான். திடீரென கமெண்ட் பகுதியில் கே.என். செந்திலின் பதிவு வந்தது. ‘இந்தப்போஸ்ட்டை நீக்குங்கள். இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார். ‘இது விமர்சனம் மட்டும் தான்’ என மறுபதிவில் அவருக்கு பதில் கூறினேன். பார்த்தால் எல்லா இடங்களிலும் அதே வார்த்தையை பதிவிட்டுவிட்டு அவரும் அறிவிப்பு வரும்வரை பதறிக்கையோடு இருந்திருக்கிறார். அதற்காக விருது அறிவிப்பு தேவிபாரதிக்கே என்று வந்தபிறகு நிம்மதியான பதிவொன்றையும் வெளியிட்டிருந்தார் அவர். எழுதத்துவங்கினால் ஒரு சுவாரஸ்யமான சிறுகதையே எழுதலாம் போல!
பத்துவருடமிருக்கலாம் அந்த திரைப்படம் வெளிவந்து. மனநல காப்பகம் ஒன்றின் எல்லா வியாதியஸ்தர்களும் முகப்பு கேட்டை நோக்கி கூட்டமாய் ஓடிக்கொண்டிருப்பார்கள். அதில் ஒருவரை காப்பகத்தினுள் நுழைபவர் நிறுத்தி, ‘எங்க எல்லோரும் இப்படி ஓடுறாங்க?’ என்பார். அதற்கு நோயாளி சொல்வார்.. ‘முட்டாப்பயலுக! கேட்டுக்கிட்ட சோறு போடறாங்கன்னு நாந்தான் சும்மா சொன்னேன்.. எல்லோரும் கேட்டுக்கு ஓடுறாங்க!’ என்பார். ‘சரி நீ ஏன் ஓடுறே?’ என்று கேட்டதற்கு.. ‘ஒருவேளை குடுத்துட்டாங்கன்னா?!!’ என்பார். காட்சி மட்டும் ஞாபகத்தில் இருக்கிறது. என்னபடம்? யார் நடிகர்? என்பதெல்லாம் அழிரப்பரால் யாரோ அழித்துவிட்டார்கள் போல!
அடுத்த வருடம் சாகித்ய அகாடமி விருது கவிதை எழுதுபவருக்குத்தான். அது மனுஷ்யபுத்திரனுக்குத்தான். நடுகல் சொல்லிவிட்டது! (கசிந்த தகவல்) எழுத்தாளர்கள் பதிவிடுவார்கள் வரிசையாக…
- அவரை விட்டுட்டு மிச்சம் ஒன்பது பேருக்கும் குடுங்க!
- அதுல மூனாவது ஆளுக்கு குடுங்க! இல்லின்னா நாலாவது ஆளுக்கு!
- மனுஷ்யபுத்திரனுக்கு கிட்டுவதால் சாகித்ய அகாடமி நெஞ்சு நிமிர்த்தி நிற்கிறது!
நானும் அந்த திரைக்காட்சிபோல ஓடுகையில் நிறுத்துபவர் ‘எங்க எல்லாரும் ஓடுறாங்க?’ என்பார். ‘சும்மாநாச்சிக்கிம் சொன்னேன்.. பரிசு வாங்க ஓடுறாங்க!’ ‘ஆமா நீ ஏன் ஓடுறே?’ ‘ஒருவேளை குடுத்துட்டாங்கன்னா?!’
அன்போடே என்றும்
வா.மு.கோமு