பெரியவர் சுள்ளிமேட்டு ராமசாமி பிறந்தபொழுதே கையில் பெளண்டன் பேனாவைப்பிடித்தபடி பிறந்தார் என்ற கருத்து சிலகாலம் முன்பாக இங்கே நிலவி வந்தது. ஆனால் அடியேன் பிறக்கையிலும் கையில் பால்பாய்ண்ட் பேனாவோடு பிறந்தமையால் என் தந்தையார் தன் குலத்திற்கு இன்னுமொரு சாபக்கேடு வந்துவிட்டது என்று மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தார் என என் தாயார் சமீப காலங்களில் அடிக்கடி வருவோர் போவோரிடமெல்லாம் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்.போக நான் பிறந்த நாளன்று அன்று அவர் அளவுக்கு அதிகமாக பனங்கள் குடித்து கொண்டாடியதாகவும், சாராயம் கிட்டினால் இன்னும் உச்சமாக இருக்குமேயென விற்பனையாளனைத்தேடி காடுமேடு, வேலி, வரப்பெல்லாம் திரிந்தாரெனவும் முன்பாகவே அறிந்திருக்கிறேன்.

தவிர என் கையில் இருந்த பால்பாய்ண்ட் பேனாவில் பிங்க் வர்ண இங்க் இருந்ததாகவும்.. அது பெரியவர் சுள்ளிமேட்டு ராமசாமியின் பெளண்டன் பேனாவில் மிஸ்ஸிங் என்றும் அடுத்தவர்களுக்கு மகிழ்ச்சியாய்க்கூறி தன் வெறும் வயிற்றை நிரப்பிக் கொண்டாரெனவும் என் தந்தையாரைப்பற்றி புதுப்புது கட்டுக்கதைகள் உருவாகத்துவங்கியிருக்கின்றன இப்போது.

இப்போது பேனாவுக்கே வேலை இல்லாத தட்டெழுத்துக்கு வந்து விட்டேன்! அந்தப் பால்பாய்ண்ட் பேனா இப்போது எங்கே? என்பவர்களுக்கு.. அதை என் வீட்டு டைகர் சாப்பிட்டு விழுங்கி விட்ட தகவலையும் சொல்லிவிடுகிறேன்! -இப்போது

இப்படியான ஒரு சரித்திரக்கதையை சுருக்கமாய் சொல்லி முடித்துமாகி விட்டது!

நடுகல் ஜனவரி இதழ் பற்றி சில அலைபேசித்தகவல்கள் எனக்கு இணையத்தில் இதழ் வெளிவந்த இரண்டு, மூன்று நாட்களுக்கு குட்டியாய், நீட்டமாய் வரவும் மகிழ்ச்சியாய் இருந்தது. குறிப்பாக கவிதைத்தேர்வில் கவனமில்லாமை குறித்து சிலர் பேசினர். அது உண்மைதான். நான் கவிஞனல்ல என்பதை 100 விசுக்கா சொல்லிவிட்டேன். அவற்றை ஆழமாய் வாசித்து உணர்ந்துகொள்ள என்னால் முடிவதில்லை. வாசித்தால் எனக்குப்புரியவில்லை என்றால் சிறப்பான கவிதையாக அது இருக்கவேணுமென நினைத்துக்கொள்கிறேன். ஜனவரி இதழில்  கவிதைகள் போல பாவனைசெய்து சிலபல வந்துள்ளன. அதற்கான மற்றவர்களின் கண்டனங்களை ஏற்றுக்கொள்கிறேன்.

இப்போதுதான் மீண்டும் ஆழ்ந்து வாசித்தேன். எதோ கவிதையாக இருக்கிறது என்கிறமாதிரிதான். படைப்பு வெளியாகிவிட்டது. மற்றபடி அந்தமுறை அவ்வளவுதான். இந்த இதழுக்கான கவிதைத்தேர்விலிருந்து நான் விலகிக்கொண்டு.. வேறு நண்பர்கள் ஒரு ரவுண்டு பார்த்து முடிவெடுக்க வைப்போமென நினைத்தேன். நோவு நொடியென்று ஓடியதால் இம்முறை கவனமாக நானே கவிதை வாசிப்பில் அமர்ந்தேன்.

அடுத்தமுறை நடுகல் இதழுக்கு கவிதை அனுப்புகையில் கவனமாய் செயல்படுங்கள். மற்றபடி கதைகள் விசயத்தில் எல்லாமே சிறப்பாகவே இருக்கின்றன என்பதை அவர்களே சொல்கிறார்கள். எல்லாருக்கும் திருப்தியான இணைய இதழாக நடுகல் இருக்க வேண்டுமெனில் இன்னமும் ஒரு இதழ் தான். அப்போது ஆறு இதழ்கள் கணக்காகிவிடும். மிகத்திருப்தியாகவும், சரியான பாதையையும் அப்போது நடுகல் கண்டறிந்திருக்கும்.

சிறுகதைகளில் எளிமை எல்லோராலும் விரும்பப்படுகிறது. பூடகமான சொற்களுடன் கூடிய சிறுகதைகள் குறிப்பிட்ட வாசகர்கள் மத்தியில் மட்டுமே புழங்கிக் கொண்டு அந்தச் சுற்றோடு மட்டுமே நின்றுவிடுகின்றன. குறிப்பிட்ட வாசகர்களை மட்டுமே சென்றடைந்தால் போதுமானது என்று தீவிரமாக சிறுகதை முயற்சியில் இன்றும் பலர் இருக்கிறார்கள். அவர்கள் எளிய கதைகளை வாசிப்பதேயில்லை.

ரொம்ப பயங்கரமான கதைகள் மொழிபெயர்ப்பு வாயிலாக நமக்கு கிடைத்து விடுகின்றன. நம் முயற்சி அதைவிட பயங்கரமாய் இருக்க வேண்டும். இருந்தும் அப்படியொன்றும் கவனத்திற்கு அந்தக் கதை உடனடியாக வந்து விடுவதில்லை. சிறுகதையைப் பற்றி யாரும் இங்கு விவாதிப்பதுமில்லை. ஒருகதை நன்றாக இருந்தால் அந்த எழுத்தாளனின் எல்லாக் கதைகளும் சிறப்பானது என்று எப்படிக் கூற முடியும்? எழுதப்படும் ஒவ்வொரு கதையும் அவனுக்கு சிறப்பான கதைகள் தான்.

நடுகல் இதழுக்கு வந்துசேரும் கதைகளை வாசிக்கையில் எல்லாமே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. புதிதாக எழுதவந்தவர்கள் புதுப்புது களங்களில் எழுத முயற்சிசெய்து வெற்றியும் பெறுகிறார்கள்.

என் எழுத்து பற்றி பேசினால்.. எந்த தீவிரமான விசயத்தையும் கொஞ்சம் குஜாலாக சொல்வதைத்தான் விரும்புகிறேன். அதனால் தீவிரம் குறைந்து விசயம் எளிமையாக்கப்படுகிறது. எளிமையாக்கப்பட்டவைகள் எல்லோராலும் விரும்பப்படும். எந்தக் கதைகளையும் நான் முன்கூட்டியே திட்டமிட்டு எழுதத் துவங்குவதில்லை. ஒரு காதலைச் சொல்ல கதைக்குள் காதலர்களை நடமாட விடுகிறேன் என்றால் எழுதி முடிக்கையில் தான் எனக்கே அவர்கள் சேர்ந்தார்களா? அல்லது பாதியிலேயே விடைபெற்றுப் போய் விட்டார்களா? என்பது தெரிய வரும். எதுவாக கூட்டிச்செல்கிறதோ அதுதான் அந்த சிறுகதையின் முடிவு. ஒருசில கதைகளையே முன்கூட்டி திட்டமிடுகிறேன். அவைகளும் கூட மாறிப்போன சம்பவங்களும் உண்டு. மனதில் திட்டமிட்ட ஒரு கதையை இரண்டு வருடம் கழித்துக்கூட எழுதி முடித்திருக்கிறேன். திட்டமிட்டவுடனே கூட எழுதி முடித்துமிருக்கிறேன்.

சிறுகதைகளுக்கென சில கட்டுக்கோப்புகள் உண்டு. வடிவங்களில்தான் அவைகள் வித்தியாசப்படுகின்றன. நீள்கதை, குறுங்கதை, நிமிடக்கதை என பலவடிவங்களில் இங்கு சிறுகதைகள் எழுதப்படுகின்றன. எல்லாமே வடிவ வித்தியாசங்கள் தான். இந்த இதழில் நீள்கதைகள் ஒன்றிரண்டு இடம்பெற்றுள்ளன.

எனது சில கதைகள் குங்குமத்தில் ஒருபக்க கதைகளாக வந்துள்ளன. எல்லாமே முயற்சிகள் தான். ஒருமுறை மூன்றுகதைகள் ஒரே இதழில் பிரசுரித்திருந்தார்கள். தொடர்ந்து ஒருபக்க கதைகள் மட்டுமே எழுதும் எழுத்தாளர்கள் அன்று நிறைய இருந்தார்கள். அவர்களில் ஒருவர் அனைவரின் சார்பாகவும் அலைபேசியில் என்னிடம் பேசினார். “சார் நீங்கெல்லாம் இப்படி எழுத வந்துட்டா நாங்கெல்லாம் என்ன சார் பண்ணுறது?” “சும்மா ஒரு முயற்சிங்க நண்பரே! தொடர்ந்தெல்லாம் எழுதமாட்டேன் பயப்படாதீங்க!” என்றதும் ‘நன்றி’ சொன்னார்.

***

குங்குமம் 10-12-2012 ல் வந்த 1 பக்க சிறுகதை :

சுப்புலட்சுமிக்கு கையும் ஓடவில்லை. காலும் தான். இப்படி மாப்பிள்ளை வீட்டார் திடீரென இன்றே பெண் பார்க்க வருவதாக தகவல் சொல்வார்கள் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை.

அவசரமாக வீட்டை பூட்டிக்கொண்டு தன் ஸ்கூட்டியில் கிளம்பினாள். மனது படபடப்பாய் இருந்தது. மாப்பிள்ளை பெங்களூருவில் சாப்ட்வேர் எஞ்சினியர். சரியான ஜோடிப்பொருத்தம் வேறு. அவர்கள் வரும் நேரத்திலெதுவும் தப்பாக ஆகிவிடக்கூடாது. நகரின் பிரபலமான பியூட்டி பார்லர் முன் ஸ்கூட்டியை நிறுத்திய சுப்புலட்சுமி, அவசரமாக உள்ளே நுழைந்து அரை மணி நேரத்தில் முகத்தை பளபளப்பாக்கிக் கொண்டு வீட்டுக்குப் பறந்தாள்.

நீல வர்ணத்தில் காட்டன் சுடிதார் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அணிந்து கொண்டாள். மல்லிகை மணம் வீசும் செண்ட்டை ஸ்பிரே செய்து கொண்டாள். கண்ணாடி முன் நின்று ஒருமுறை தன்னை பார்த்தாள். உதட்டின் மீது லைட்டாக லிப்ஸ்டிக் பூசும் நேரத்தில் முன்வாசல் காலிங்பெல் அடித்தது.

சுப்புலட்சுமி புன்னகை முகத்துடன் வந்தவர்களை வரவேற்று சோபாவில் அமர வைத்தாள். கிருஷ்ணா ஸ்வீட்ஸில் வாங்கி வந்த பலகாரங்களை தட்டில் வைத்து எடுத்துப் போய் புன்னகை மாறாமல் அவர்கள் முன் வைத்தாள்.

“சீக்கிரம் பெண்ணை வரச்சொல்லுங்க.. பார்த்துட்டு நாங்க அவசரமா போகணும்” என்றார் மாப்பிள்ளையின் அப்பா.

“பேத்தி காலேஜ் போயிருக்கா..இப்ப வர்ற நேரம் தான்”, என்றாள் சுப்புலட்சுமி.

***

ஜனவரி மாதத்தில் ஒருநாள் மின்சாரம் இல்லை என்பது 9 மணிக்கு அதுபோனதுமே தெரிந்துவிட்டது. வாசிக்க நண்பர் மூட்டையாய் கட்டிக்கொடுத்த மாதநாவல்களை பிரித்து பெண்கள் எழுதிய நாவல்களாய் படிக்க ஆரம்பித்து 7 நாவல்களை முடித்துவிட்டேன். எல்லா நாவல்களிலும் காலேஜில் நாயகனும் நாயகியும் வாசிக்க சென்று கொண்டிருக்கிறார்கள்! நாயகி நாயகனை கன்னத்தில்கையாலோ, மிதியடியாலோ அடிக்கிறாள். (ரிசல்ட்முன்பேதெரிந்துவிடுகிறது)  மீதம் கிடக்கும் புதியபெண் எழுத்தாளர்களின் புதியநாவல்களை வாசிக்காமல் விடமாட்டேன் எனவும், அடுத்தநாளை அதற்காக பயன்படுத்தப்போகிறேன் எனவும் சபதமிட்டேன். அதாவது எத்தனை பெண்கள் நாயகனை காலேஜில் போட்டுத் தாக்கினாலும்! ஆனால் அடுத்தநாள் சோலி சுரட்டுக்கு போய்விட்டேன்.

மறுக்கா ஒரு விசயம்! நானும் இப்படிக்கா காலேஜில் ஒருகதை நடப்பதாய் எழுதத்துவங்குவேன். என் நாயகியானவள் நாயகனை ஹார்டு பைண்டிங் புத்தகத்தால் பொட்டீரென அடிப்பாள் நிச்சயமாக. நாயகனுக்கு கை முறிந்துவிடுகிறது என்று வைத்துக்கொள்ளலாமென இருக்கிறேன். ஆஸ்பத்திரி சிகிச்சைக்கி யாரு காசு தர்றது? என் நாயகன் தான் சாமத்தில் வொர்க்‌ஷாபில் பணிசெய்து அங்கேயே படுத்துறங்கி.. காலையில் ஊர்முழுக்க பேப்பர் போட்டு கிடைக்கும் சொற்ப வருமானத்தில் படிக்கவரும் அனாதிப்பயலாயிற்றே!

மாத நாவல்களில் தேவியின் கண்மணி, தரணி, வெண்ணிலா, கொலுசு, மதுமிதா, குடும்ப நாவல் என்று வகை வகையாய் இப்போது வந்து கொண்டு இருக்கின்றன. நான் வாசித்துக் கொண்டிருந்த ஆரம்ப காலகட்டத்தில் க்ரைம் நாவலின் முதல் புத்தகத்தை வடகோவையில் ஒரு பெட்டிக்கடையில் வாங்கினேன். அப்போது தான் எனக்கு ராஜேஷ்குமார் என்றொரு எழுத்தாளர் இருப்பது தெரியும். ஆண்டு 1989. அவர் ஊர் கோவை என்று அந்த வருடம் முழுக்க தெரியாது. பிகேபி, சுபா, அனுராதாரமணன், பிடி சாமி, ராஜேந்திரகுமார் என்று வகை வகையாய் ஆரம்பகாலங்களில் படித்து நானும் டிடெக்டிவ் ஏஜென்சி கதைகளை ஒருகுயர் நோட்டில் எழுதிக் கொண்டிருந்தேன். என் அப்போதைய தோழிகள் ஆளுக்கொரு நோட்டுகளை சுட்டு விட்டார்கள். ஆனால் எல்லோரின் ஆசியும் இன்னமும் என் கூடவே இருக்கிறது! ஆனால் அதே சமயத்தில் நான் அசோகமித்தரனையும் அஸ்வகோசையும் வாசித்துக் கொண்டிருந்தேன். அது தான் இப்போது அடிக்கடி என்னை குலாப்ஸ் ஆக்கி விடுகிறது.

நன்றி நண்பர்களே! படைப்புகளை வாசிக்கச்செல்லுங்கள்! பிடித்த படைப்பெனில் கீழே கமெண்ட் பகுதியில் நாலு வரி எழுதுங்கள் உங்களின் பார்வையை! அது எழுதிய எழுத்தாளரை உற்சாகப்படுத்தும் பணியைச் செவ்வனே செய்யும்.

                                                  அன்போடே என்றும்..

                                                    வா.மு.கோமு

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *