நெருங்கிய நண்பர்களின் மறைவு மனநிலையை குலைத்துவிடுகிறது. சென்னிமலை மருத்துவமனையில் இருவாரங்கள் படுத்திருந்த கதிர்வேலை அறை எண் சொல்லி தேடிப்போய் பார்க்கையில் அவரது இருதங்கைகளும் அங்கிருந்தார்கள். சின்னத்தங்கை எனைக்கண்டதும் அழுகையை கட்டுப்படுத்த இயலாமல் அழுதார். மருத்துவமனை தாதி.. ‘அவருக்கு ஒன்னும் ஆகாதும்மா அழாதீங்க!’ என்று சொல்லிவிட்டு, ’சீக்கிரமாய் இந்த பயன்படாத மருந்துப்புட்டிகளை மெடிகலில் கொடுத்துவிட்டு.. பதிலாய் டாக்டர் எழுதிய புதிய மருந்துகளை வாங்கிட்டு போங்க!’ என்று சொல்லிச்சென்றார். நான் படுக்கையிலிருந்த நண்பரை உற்றுப்பார்த்தேன். அவரும் தனது அகன்ற விழிகளால் எனைக்கண்டார். ஒரு நிமிடம் அவர் என்னை கடைசியாக உற்றுப்பார்க்கிறாறோ.. என்றே நினைத்தேன்.

அவரது இடதுகை விரல்களில் துண்டுக்கயிறு கட்டப்பட்டிருந்தது. பெரிய தங்கை அவரது நெஞ்சை நீவி விட்டபடியிருந்தார். மூக்குத்துவாரம் வழியே டியூப் சென்றது. ’கையை விட்டால் அதை பிய்த்துவிடுவார்.. சாப்பிட அமர்கையில் இதில் கட்டிவிடுவோம்! இன்னிக்கி வீட்டுக்கு கூட்டிட்டு போகச் சொலிட்டாங்க!’ என்றார். கதிர்வேலிடமிருந்து கரக்புரக் என்ற ஓசைமட்டும் தொண்டைக்குழியிலிருந்து வந்துகொண்டிருந்தது.

அவருக்கு நினைவில்லை. இடது காலைமட்டும் அசைத்தார். வெகுநேரம் அங்கிருக்கமுடியவில்லை. என்னை அப்போதே வெறுமை தாக்கிவிட்டது. சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்து வந்துவிட்டேன். ஆகப்போவது ஒன்றுமில்லை.

அடுத்தநாள் மாலையில் அவர் இறப்புச்செய்தியை தேவிபாரதி பதிவைக்கண்டு தெரிந்தேன். இறுதிக்காரியங்களுக்கு செல்ல முடியாமல் உறவில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்து பத்திரிக்கை கொடுத்துக்கொண்டிருப்பதால் செல்லக்கூடாதென வீட்டில் சொல்லிவிட்டார்கள்.

கதிர்வேல் என்று என் அலைபேசியில் ஐந்தாறு நண்பர்கள் இருக்கிறார்கள். ஊர்ப்பெயரை சேர்த்தினதால் அழைப்பது யாரென தெரிந்துகொள்வேன். ஓவியர் கதிர் என்று நண்பரை பதிவுசெய்திருந்தேன். பலவருடங்கள் முன்பாக இறக்கை என்னும் இதழை நானும் ஹரிகிருஷ்ணனும் நடத்திவந்தோம். அந்த சமயத்தில் முதலாக இவரிடம் ஓவியங்களை வீடுசென்று பெற்று வந்து இதழில் இடம்பெறச்செய்தேன். அப்போது காலச்சுவடு பதிப்பகத்தில் பணியாற்றினார். காலச்சுவடு இதழிலும் ஒருசில ஓவியங்கள் வந்துள்ளன். தேவிபாரதியை நேராக அறிமுகப்படுத்தியவர் கதிர்வேல். இருவரும் மிகநீண்டகால நண்பர்கள்.

தேவிபாரதிக்கு உடல்நிலை சரியில்லாத சமயத்தில் தகவலை எனக்குக்கொடுக்க நான் புறப்பட்டுச்சென்று, இவரையும் அழைத்துக்கொண்டு சென்று பார்த்துவந்தேன். கதிர்வேலை நண்பர் க.சீ. சிவக்குமார் இறப்புக்கு அழைத்துச்சென்றேன். திண்டுக்கல், சேலம் என நான் அழைக்கும் இடமெல்லாம் கூடவே ஒரு மூத்த அண்ணனைப்போல வந்தவர்.

இலக்கியம்பேச ஆள் இல்லாமல் அடிக்கடி சென்னிமலை சென்று சந்தித்து எழுதப்போகும் கதை பற்றியும், நாவல் பற்றியும் நான் பேசுகையில் ‘அப்புடியா கோமு?’ என்று விழிகளை உயர்த்தி அவர் கேட்கையில் கூடவே சேர்த்தி பயங்கரமாய் எதாவது சொல்வேன். ‘இதை மொதல்ல எழுது கோமு! பயங்கரமா வரும்போல இருக்கு!’ என்று தூண்டுகோலாய் இருப்பார். நடுகல் வெளியீட்டு விழா என்றால் தவறாமல் ஒவ்வொரு வருடமும் வந்து சேர்ந்து விடுவார்.

இந்தவருடம் ஆகஸ்டில் நிகழ்ச்சி நடக்கையில் கதிர்வேல் என்கிற பெயர்கொண்ட இருவர் வரமாட்டார்கள். உடுமலையிலிருந்து நண்பராக நடுகல் குழுவில் வந்திணைந்த ஆடை வடிவமைப்பாளர் கதிர்வேலும் சமீபத்தில் காலமாகி விட்டார். இருவருக்கும் ஒரே பிரச்சனை தான். ஆடை வடிவமைப்பாளருக்கு சக்கரை இருந்தது மிக தாமதமாக கண்டுபிடிக்கப்பட்டது. சக்கரையிருந்தால் வலி தெரியாதாமே?

நடுகல் இதழுக்காக ஒருமுறை கதிர்வேலின் ஓவியங்களை பயன்படுத்தினேன். இந்த இதழில் சிறார் கதைகளைத்தவிர்ந்து கதிர்வேல் அவர்களின் ஓவியங்களை பயன்படுத்தியுள்ளேன். அவரது ஆத்மா சாந்திபெறட்டும். நாமெல்லாம் ஒருநாள் நிச்சயம் இங்கிருந்து விடைபெறத்தான் செய்வோம் என்கிற உண்மை எல்லோரையுமே பயம்கொள்ள வைக்கிறது. ஆனால் அந்த உண்மை மாறாது.

கதிர்வேலுக்கான இரங்கல் கூட்டத்தை ஈரோட்டில் நடத்தி முடித்திருக்கிறார்கள். அவர்களுக்கு எனது பாசம் என்றுமிருக்கும். இருக்கும் உடல் நிலைமையில் மாலை நேரத்தில் 35 கி.மீ பைக்கில் சென்று இரவு திரும்புவது இப்போதைக்கி எனக்கு நலக்கேடு. மாத்திரைவில்லைகள் செய்யும் பணியது. கதிர்வேல் என்னை எல்லா இடத்திற்கும் கூட்டிச்செல்லும் நண்பராகவும் இருந்தார். அவரே இன்றில்லை. இவரைவிட சின்னவயதில் இறந்துபோன பல வாசிப்பு நண்பர்களை இப்போது நினைவில் கொள்கிறேன். வால்பையன் என்கிற அருணிடமிருந்து இது ஆரம்பித்து முடிவில்லாமல் செல்கிறது.

கடந்த இருமாதங்களாகவே நான் படைப்பு என்று ஒரு எழுத்தும் எழுதவில்லை. இருந்தும் இரண்டு சிறுகதை தொகுப்புகள் எனைத்தேடி வந்திருந்தன. அவற்றை ஒரே நாளில் வாசித்து எனக்குத்தெரிந்தவகையில் புத்தகங்களைப்பற்றி பேசியிருக்கிறேன் இந்த இதழில். வாசிப்பு இன்று வலைதளத்தில் தொடர்ந்து இயங்குகிறது. வலைதள வாசிப்பாளர்கள் ‘அட கதையின்னா இதானா?’ என்று தமக்குத்தெரிந்த விசயங்களை சிறுகதை வடிவில் எழுத வந்திருக்கிறார்கள். அவர்கள் பழைய இலக்கியங்களை வாசிக்கணும். வாசிப்பு இணைய எழுத்துகளால் மட்டுமே ஒரு புதிய படைப்பாளியை உருவாக்கிட முடியாது. கண்ணுப்போயிடும். அவர்களின் ஆர்வத்தை மதிக்கிறேன். ஆனால் உண்மையான எழுத்து எது என்பதை எழுதவரும் புதிய படைப்பாளிகள் தாங்கள் எழுதி முடித்த கதையை திரும்ப ஒருமுறை வாசித்துவிட்டு இணைய இதழின் முகவரிக்கு அனுப்புங்கள். அப்போது உங்களுக்கே புரிந்துவிடும் என நம்புகிறேன் உங்கள் கதையின் தரம் பற்றி. நிச்சயமாக தமிழ் எழுத்துருக்கள் பற்றி.

தன் கதை இதழில் வந்திருக்கும் மகிழ்ச்சியை அவர்கள் கொண்டாடுவதைவிட.. அடுத்த படைப்பாளிகள் இதழில் எவ்விதமாக எழுதி வெளிப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் கவனித்து வாசியுங்கள். கிட்டத்தட்ட ஒவ்வொரு இதழிலும் பத்து என்கிற எண்ணிக்கையில் கதைகள் பிரசிரமாகியிருக்கின்றன. நேரமிருப்பின் வாசியுங்கள். இது ஆறாவது இதழ். அடுத்த இதழிலிருந்து படைப்புகள் தேர்வில் கவனம் அதிகம் எடுத்துக்கொள்வேன். நிச்சயம் நடுகல் இதழ் இணையதளத்தில் முத்திரை ஒன்றை பதிக்குமென நம்புகிறேன். அனைவருக்கும் நன்றிகள்.

அன்போடே என்றும்

வா.மு.கோமு.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *