நடுகல் இணைய இதழுக்கென்று தனிப்பட்ட முறையில் யாரிடமும் அலைபேசியில் பேசி படைப்பு வேண்டும் என்று நான் கேட்பதில்லை. நடுகல் இணைய இதழ் குழுவில் மட்டும் தேதி 20 ஆகிவிட்டால் 26-ம் தேதிக்குள் படைப்புகள் அனுப்புங்கள் என்று கேட்டு பதிவிடுவேன். முன்பாகவே படைப்புகள் வந்தவண்ணமேதான் இருக்கும். நடுகல்லில் தொடர்ந்து எழுதுபவர்களின் படைப்புகள் அந்தசமயத்தில் வராமல் இருக்கும். பதிவைப்பார்த்தபிறகு எப்படியேனும் படைப்பை அனுப்பிவிடுகிறார்கள். வந்த படைப்புகளில் தேர்ந்தெடுக்க கறாராக இருக்கலாமென்றாலும் ஒரு சிறுகதைக்குள் ஏதேனும் ஒரு புதிய விசயத்தையோ.. அல்லது சொல்முறையிலோ எந்த தவறுமின்றி மிக எளிதாக கதைகள் வந்து சேர்வதால் அதை ஒதுக்குவதுமில்லை. புதிதாக சிறுகதை முயற்சி செய்பவர்கள் போகப்போக அவர்களே சரிப்படுத்திக் கொள்வார்கள் என்கிற நம்பிக்கை தான்.

படைப்புகள் புதிதாக நடுகல்லுக்கு அனுப்புபவர்கள் தங்களைப்பற்றியான சிறுகுறிப்பும் அவரது புகைப்படமும் கேட்கிறேன். அப்படி நடப்பதில்லை. முதலாக படைப்பு வந்து சேர்ந்துவிடுகிறது. நான் தனியே புகைப்படத்தையும் குறிப்பையும் கேட்கிறேன். பார்த்தவர்கள் அனுப்புகிறார்கள். பார்க்காதவர்கள் அனுப்புவதில்லை. அந்தமுறையில் சில கதைகள் நல்லமுறையிலிருந்தும் வெளியிட முடியாமல் போய்விட்டது.

அடுத்து ஒருபடைப்பை இணைய இதழுக்கு அனுப்பியவர்கள் 20 நாட்கள் கூட காத்திருப்பதில்லை. அதே படைப்பை வேறு இணைய இதழுக்கும் அனுப்பி விடுகிறார்கள். எதேச்சையாக நான் எனக்கு வந்த படைப்பை வாசகசாலை இணைய இதழில் கண்டேன். அதை கவனித்திராமல் இருந்திருந்தால் இந்த இதழிலும் அந்தப்படைப்பு வெளிவந்திருக்கும். இதற்காக ஒவ்வொரு இணையதளமாக நான் போய் செக் செய்து கொண்டிருப்பதற்கும் நேரமில்லை. அப்படி இனிமேல் நண்பர்கள் வாயிலாகவோ அல்லது நானே கண்டாலோ அந்த எழுத்தாளர் மேல் காண்டை கூட்டிக்கொள்வேன். ஒரு இதழாக இங்கே நடத்த வந்து கோபதாபங்களை சேர்த்திக்கொண்டு செல்லத்தான் வழி வகுக்கிறார்கள். ஒவ்வொரு எழுத்தாளருக்கும் தங்கள் படைப்பு தங்கம் தான். அந்தத்தங்கம் ஒரே நேரத்தில் பல இடங்களில் அரங்கேறனுமென்றால் எப்படி? அடிப்படை நாகரிகம் வேண்டுமல்லவா!

போகட்டும்! இந்த இதழில் கவிஞர்களின் எண்ணிக்கை அதிகமாய் இருக்கிறது. இருக்கட்டும். கவிதை எழுதுவதில் ஆர்வமுள்ளவர்கள் கவிதைகளை மட்டும் வாசிக்கிறார்கள். அவர்கள் கதைகளை வாசிப்பதில்லை. கதை எழுதுபவர்கள் கவிதைகள் பக்கம் செல்வதில்லை. இது தமிழ் இலக்கியத்தில் பலகாலமாய் உள்ள விஷயம் தான்.

சும்மாவுக்கேனும் ஒரு பழைய கதையை என் ஸ்டைலில் மாற்றி யோசித்ததால் வந்த கதை இது. இதில் வரும் அரசனாமலை எனக்கும் ஒன்னரைகிலோ மீட்டர் மேற்கே தள்ளி நிற்கிறது. தலைப்பாக கடவுளும் சாரதாவும்- அப்படின்னு வச்சிக்கலாம்.

சாரதா வீட்டுல அவ ஒருத்தி தான் பார்த்துக்கங்க. அம்மா, அப்பாவெல்லாம் இறந்துட்டாங்க. சாரதா ஒருநாளு அரசனாமலை கரட்டுக்குள்ள விறகு வெட்டீட்டு வரலாம்னு போயி வெட்டுனா. ஒரு கத்தை விறகு வெட்டி கட்டு கட்டி வெச்சுட்டு, உச்சிவெய்யிலா இருக்கேன்னு கொஞ்சம் தூரத்துல இருந்த பாறைக்குழிக்குப்போயி முகம் கழுவினா. அப்ப பார்த்து இடுப்புல வச்சிருந்த நோக்கியா பட்டன் போனு பாறைத் தண்ணிக்குள்ளார வுழுந்திருச்சி. கையை வுட்டு தேடுறா. ஆனா போனு கெடைக்கல. ரொம்ப சோகமா, ‘போனு போச்சே.. போனுக்கு நா இனி என்னா பண்டுவேன் கடவுளே?’ அப்படின்னு சொல்லிட்டு கிலுவை மரத்து நெழல்ல உக்கோர்ந்தா. அழுவாச்சி அழுவாச்சியா வருது.

அப்ப கடவுளு தண்ணிக்குள்ளார இருந்து வெளிய வந்து ‘சாரதா.. ஏன் வருத்தம்? முசுக்கு முசுக்குனு அழுவுறியே!’ அப்படினாரு.

‘என்னோட போனு பாறைக்குழியில வுழுந்திருச்சு சாமி! அதான் கவலையில இருக்கேன்!’ அப்பிடின்னா!

கடவுளு தண்ணிக்குள்ளார ஒரு முங்கு போட்டு மேல வந்து அவளுக்கு ரெட்மீ டச் போனை காட்டுனாரு! ‘இதுவா உன்னோட போனு?’ அப்படின்னாரு. சாரதா ‘இது இல்லீங்க சாமி’ அப்படின்னா.

கடவுளு அவளுக்கு ஒரு சாம்சங் டச் போனை காட்டுனாரு! ‘இதுவா பாரு’ அப்படின்னாரு. ‘இதுவும் இல்லீங்க சாமி!’ அப்பிடின்னா.

கடவுளு அவளுக்கு ஒரு ஐபேடு காட்டுனாரு! ‘இதாத்தான் இருக்கும்.. இதுவா?’ அப்படின்னாரு. ‘இதும் இல்லீங்க சாமி’ அப்பிடின்னா.

அப்புறம் தான் கடவுளு அவளோட நோக்கியா பட்டன் போனை எடுத்துக்காட்டினாரு. பார்த்ததீம் அவ முகத்துல மகிழ்ச்சி. ‘சாமி.. இதான் என்னோட போனு!’ன்னு கத்திச்சொன்னா சாரதா.

”உன்னோட நேர்மையை நான் பாராட்டுறேன்.. இந்த நாலு போனையும் வெச்சுக்கோ நீயே!” அப்படின்னு அவகிட்டயே நாலண்ணத்தையும் (பொள்ளாச்சி பக்கம் பேச்சு வழக்கு) குடுத்துட்டு போயிட்டாரு.

அப்புறம் ஒரு நாலு வருசத்துல ஒறவுச்சனம் அவளுக்கு கலியாணம் பண்ணி வச்சாங்க. அமைதியான புருசன். ரெண்டுபேரும் சந்தோசமா இருந்தாங்க. ஈரோடு மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு புருஷனோட போனாள் சாரதா. செரியான கூட்டம் அங்க. கூட்டத்துல புருசனை தவற வுட்டுட்டா சாரதா. சோகமா உக்கோந்துட்டா ஒரு ஓரமா!

அப்ப கடவுளு வந்து விசாரிச்சாரு சாரதா கிட்ட. இவளும் புருசன் காணாமப்போயிட்டான் சாமீன்னு அழுதா.

கடவுளு பார்த்துட்டு தளபதி விஜய்யை அவ முன்னாடி கொண்டாந்து நிக்க வச்சாரு. ‘இவரா உன் புருசன்னு பார்த்துச்சொல்லு!’ அப்படினாரு. ‘ஆமா சாமி இவரேதான்’ அப்புடின்னுட்டா சாரதா. கடவுளுக்கோ அதிர்ச்சி. நல்லபிள்ளையாச்சே சாரதா.

“பொய் சொல்லக்கூடாது சாரதா.. நிசமா இவருதான் உன்னோட கணவரா?’’ அப்படின்னாரு.

“ஆமாஞ்சாமி! இல்லைன்னு சொன்னா அடுத்து அஜித்தை கொண்டாந்து நிப்பாட்டுவீங்க, அப்புறம் அமிதாப்பச்சனை கொண்டாந்து நிப்பாட்டுவீங்க.. கடைசியா என் புருசனை கொண்டாந்து நிப்பாட்டுவீங்க. நான் என் புருசனைத்தான் உண்மையா சொல்லுவேன். ஆனா நீங்க நாலுபேரோடையும் போய் வாழுன்னு தாட்டி உட்டுருவீங்க! ஒரு மனுசி எப்பிடிங்கசாமி நாலு பேர்த்தோட குப்பை கொட்ட முடியும்?” அப்படின்னா சாரதா.

தொடர்ந்து நடுகல் இணைய இதழில் படைப்புகள் வாயிலாக பங்குபெறுங்கள்!

                                                                                                              அன்போடே என்றும்,

                                                                                                                      வா.மு.கோமு

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *