எல்லோருக்கும் வணக்கம். நடுகல் இணைய இதழாக துவங்குகையில் இந்த ‘உங்களோடு’ பகுதியை தொடர்ந்து எழுதவேண்டும் எனத்தான் நினைத்தேன். ஒன்றிரண்டு இதழ்கள் தாண்டியதுமே இந்தப்பகுதியை நிறுத்திவிட்டேன். எப்போதேனும் ஏதேனும் தோன்றினால் மீண்டும் பேசிக்கொள்ளலாம் என்ற கணக்கில் தான் விட்டது.
முதலாக தொடர்ந்து நடுகல் இதழில் பங்கெடுத்து வரும் அனைத்து படைப்பாளர்களுக்கும் நன்றி. இதழ் பற்றி பரவலான பேச்சு இருப்பதை சில சமயங்களில் நான் கேட்டிருந்தேன். படைப்புகளை மிக அதிகமாக இந்த இதழ் தாங்கி, குறித்த தேதியில் சரியாய் வந்துவிடுகிறது என்பதில் அதுவும் ஒன்று. ஒவ்வொரு இதழிலும் கதைகள் பல இடம்பெறுகின்றன. அவற்றில் ஒன்றிரண்டு கதைகள் கவனம் பெறுகின்றன. ஒரு சிறுகதை தொகுப்பில் மூன்று கதைகள் பேசப்பட்டாலே அந்தத்தொகுப்பு வெற்றி பெற்ற தொகுப்பு தான். அதைப்போலத்தான் இணைய இதழும்.
நடுகல் இணைய இதழின் சிறப்பம்சமாய் இருப்பது சிறுவர்களுக்கான படைப்புகளுக்கு முன்னுரிமை கொடுப்பது. எப்படியும் நான்கு படைப்புகளுக்கு குறைவில்லாமல் சிறுவர் படைப்புகள் வந்துவிடுகிறது. புத்தக விமர்சனம் எளிமையாகவேனும் ஒன்றிரண்டு வந்துவிடுகிறது. கவிதைகள் அனைத்து இணைய தளங்கள் போன்றே ஏழு, எட்டு கவிஞர்கள் இடம்பெறுகிறார்கள். சிறுகதைகள் கவிதைகளை விட அதிகம் இடம்பெறுகின்றன.
இதழாக வருகையிலும் கட்டுரைகளுக்கு பஞ்சம் இருந்தது. அது இணைய இதழாக வந்தபின்னும் தொடர்கிறது. காரணம் நானே! யாரிடமும் படைப்பு அனுப்பித்தாருங்கள் என்று நான் கேட்பதில்லை. நடுகல் மெயிலுக்கு வந்து சேரும் படைப்புகளை மட்டும் எடுத்துக்கொள்கிறேன். ஒரு படைப்பு தேர்வாகவில்லை என்ற போது மெயிலில் தகவல் சொல்கிறேன். எதனால்? என்று கேட்பார்கள். பதில் சொல்வதில்லை. பதிலாக நடுகல் இணைய இதழை வாசியுங்கள்! என்கிறேன்.
புதிய படைப்பாளிகள் மாதம் தோறும் வருகிறார்கள். இதழை வாசித்துவிட்டு வருகிறார்களா? ஒவ்வொருமுறையும் புகைப்படம் மற்றும் சுயவிபரக்குறிப்பு அனுப்புங்கள் என்று கேட்கிறேன். ‘தேர்வானதால் தான் கேட்கிறேன்!’ என்றும் நினைத்துக்கொள்கிறார்கள். படைப்பு வந்து மெயிலில் கண்டதுமே புகைப்படம், சுயவிபரம் கேட்கிறேன்.
இந்த இதழுக்கு குறுங்கதைகள் என்று ஷாராஜ் அனுப்பவும்.. நானும் எழுதினாலென்ன? என்று எந்த திட்டமிடலுமில்லாமல் மளாரென மூன்று எழுதிவிட்டு போதுமென நிறுத்திக்கொண்டேன். இது ஒருவேளை சரியான வடிவமாய் இருக்கலாமென நினைக்கிறேன். தொடர்வதில் எனக்கு விருப்பமில்லை. ஒரு முயற்சிதான். சரியான தீம் கிடைத்து அதை குறுங்கதையாக ஆக்கினால் நல்லது தான். சரியான தீம் கிடைக்கையில் அதை சிறுகதையாக்குவதை விட்டுவிட்டு குறுங்கதைக்கு ஏன் முயற்சிக்கணும்? கேள்வி இருக்கிறது.
தொடர் என்று நடுகல்லில் எழுதும் படைப்பாளிகளுக்கு வாழ்த்துக்கள். எல்லாம் அடுத்தகட்ட வளர்ச்சி தான்.
நடுகல் இணைய இதழ் குழுவில் விமர்சனம், கவிதை என தொடர்ந்து இயங்கும் நண்பர்களுக்கு நன்றி. ஓரளவு சுறுசுறுப்பான பக்கமாக அது இயங்குகிறது. அதன் பதிவேற்றம், நண்பர்களை இணைப்பது போன்ற பணிகளைச்செய்யும் நண்பர்களுக்கும் நன்றி! நடுகல் இணைய இதழில் வெளிவந்த சிறுகதைகளைப்பற்றியான சிறிய அளவிலான விமர்சனங்கள் கூட வாசிக்க மகிழ்வாய் இருக்கிறது. ஒவ்வொரு கதைகளையும் முதலில் வாசித்து தேர்வு செய்கையில் அவற்றின்மீது எனக்கும் ஒரு விமர்சனம் இருக்கிறது. அந்தக்கதையின் வெற்றியே தேர்வாகி இதழில் வெளிவருவதில் விமர்சனத்தோடு அடங்கிவிடுகிறது.
நடுகல் இலக்கியம் சார்ந்த இணைய இதழா? என்ற கேள்வியை வைத்தோமானால் அப்படி எண்ணித்தான் துவங்கப்பட்டது. ஆனால் அப்படி கறாராய் செயல்பட இங்கே முடியாது என்பதை மூன்று மாதங்களிலேயே தெரிந்துகொண்டேன். ஒரு நல்லகதையானது அதற்குரிய தகுதியை இணையத்தில் அடைந்துவிடுமா? என்கிற கேள்வியும் இதழ் ஆரம்பிக்கையில் இருந்தது. போகப்போக அதுவும் சாத்தியம் என்று சிலபல கதைகள் நிரூபணம் செய்து காட்டின.
நடுகல்லுக்கு வரும் கதைகளில் புதியவர்கள் அனுப்பும் கதைகளில்.. யார் யார் பேசிக்கொள்கிறார்கள்? என்று கண்டறியவே முடியாதவண்ணம் சேர்ந்தே இருக்கும். மேலோட்டமாய் வாசிக்கையில் நல்லகதைதான் என்று உணருகையில் நானே பேச்சுக்களை பிரித்து குறிகளை இடுகிறேன். நேர விரயம் தான். இருந்தும் செய்கிறேன். ஒருசிறுகதை ஆரம்பிக்கையில் அழகாக ஆரம்பித்து எதை நோக்கிச்செல்ல வேண்டுமோ அந்தப்பாதையிலிருந்து விலகி வேறொரு சப்பையான முடிவையும் அடைகின்றன. தெரிந்தே எழுதுகிறார்களா? தெரியவில்லை.
எனக்கு வாசிக்க ஓரளவு திருப்தியான படைப்பு என்று நினைத்தால் இதழில் வந்துவிடுகிறது. ஒவ்வொருமுறையும் அதை நான் செய்வதில்லை. அனுப்புகையில் ஒரு கதை எப்படியிருந்தது.. எப்படி இப்படியான வடிவத்திற்கு மாறியது? இதைப்பற்றி யோசிக்காமல் வழக்கம் போல இயங்கும் படைப்பாளியின் கதைகளை ஒதுக்கிவிடுகிறேன்.
கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி தவறுகளை களைய முயற்சிக்கிறேன் என்று வேடிக்கையாய் சொல்லலாம். முடிந்த அளவு தவறுகள் இல்லாமல் வெளிக்கொண்டுவரவே முயற்சிக்கிறேன். மீறி வந்திருந்தாலும் ஒன்றிரண்டு இருக்கலாமென நினைக்கிறேன். ஆனால் அதிகம் இருக்காது. ’அவல் அவனுக்கு சாப்பாடு கொண்டு வந்தால்.’ என்று வந்துவிடுகிறது. ’ள்’ என்று இரு இடங்களிலும் மாற்றிவிட்டு பார்க்கையில் தான் பெண்ணே அந்த இடத்திற்கு வருகிறாள்.
இணைய இதழ் சொன்ன தேதியில் தவறாமல் வெளிவந்துவிட வேண்டும். அவசரமாய் வந்த படைப்புகளை பதிவேற்றுதல் கூடாது. இணைய எழுத்தாளர்கள் அவசரமாய் எழுதி மறுவாசிப்பு செய்யாமல் அப்படியே அனுப்பிவிடுகிறார்கள் ஒரு நம்பிக்கையில். இதனால் இணைய இதழுக்கும் நல்லபெயர் போய்விடும். என்னால் முடிந்த அளவு இப்போது வரை மிகச்சரியாகவே நடுகல் இதழ் இணையத்தில் வந்துகொண்டிருக்கிறது என்று நம்புகிறேன்.
,
அன்போடே என்றும்
உங்கள்
வா.மு.கோமு.