எல்லோருக்கும் வணக்கம்!
இதழ் என்றால் முகப்பில் ஆசிரியர் கூற்று இருக்க வேண்டும் என்பது சம்பிரதாயமான அரங்கேற்றம் தான். கடந்த மாதத்தில் நடந்துமுடிந்த அரசியல் நிகழ்வுகளிலிருந்து திரைக்காவியங்கள் வரை சொல்லிக்கொண்டு போவதற்கு விஷயங்கள் இருக்கின்றன. முடிந்த அளவு முகநூலிலேயே நாம் அவைகளைப்பற்றி கொஞ்சமேனும் அறிந்துகொள்கிறோம். நாம் இணைய இதழ்களிலோ, புத்தகமாகவோ வாசிக்கும் வாசிப்பாளர்களாகவும், அதைப்பற்றி சிந்திப்பவர்களாகவும், படைப்பாளர்களாகவும் இருக்கிறோம்.
புத்தக வாசிப்பாளர்கள் அனைவருமே விமர்சகர்களாக அந்தப்புத்தகம் பற்றி நான்கு விஷயங்கள் சொல்லலாமென நினைப்பதில்லை. மனதில் சிலர் எழுத வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்கான கால அவகாசம் இந்த வாழ்வில் அவர்களுக்கு அமைவதுமில்லை. படைப்பு எழுதுபவர்கள் பலர் புத்தக விமர்சனம் செய்வதற்கு முயற்சிப்பதில்லை. ‘கதை ஒன்னு முடிவானான்னு பத்து நாளா இழுத்துட்டே இருக்குங்க! இதுல படிச்ச புத்தகத்தை பத்தி எழுத எங்கீங்க நேரமிருக்குது எனக்கு?’ என்கிறார்கள். இவர்கள் சொல்வனவெல்லாம் உண்மைதான்.
இருந்தும் எப்படியேனும் முகநூல் வாயிலாக நூறு வார்த்தைகளிலேனும் நாம் ஒரு புத்தகத்தைப்பற்றி எப்படியேனும் அறிந்து கொள்கிறோம். வாசிப்பாளர்கள் தங்களால் வாசிக்க உகந்த படைப்பை மட்டுமே வாங்கி வாசிக்கிறார்கள். சமையல் குறிப்பிலிருந்து வாஸ்த்து, ஆன்மீகம், சினிமா, சோதிடம், தன்முன்னேற்றம், பயணம் என பல வகைகளில் புத்தகங்கள் கொட்டிக்கிடக்கின்றன. அந்தந்த வகைகளுக்கென வாசிப்பாளர்கள் இருக்கிறார்கள். இலக்கியம் வாசிக்க என்று மட்டுமே இவைகளைக் காட்டிலும் அதிக வாசிப்பாளர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு இருக்கும் பிரச்சனை நேரமின்மைதான்.
நிச்சயமாக இன்றைய காலகட்டத்தில் வாழ்க்கையோடு போராடுவதற்கே கண்ணாமுழி பிதுங்குகிறது என்றே முந்தைய வாசிப்பாளர்கள் சொல்கிறார்கள். போக இது ஓய்வேனா என்று புதிய வாசகர்களும் வாசிக்க படையெடுத்து வந்துவிடுகிறார்கள். அந்த புதிய வாசகர்களை நோக்கித்தான் பழைய எழுத்தாளர்களின் மொத்தப்படைப்புகள் சார்ந்த தொகுதிகள் வருவதாக யோசிக்கிறேன்.
இப்படித்தான் வாசிப்பாளர்களை நம்பி ஆர்.ஷண்முகசுந்தரம் அவர்களின் வெளியில் கண்ணுக்குச்சிக்காத நாவல்களை ஒரே தொகுதியில் மூன்றை கொண்டு வந்தது நடுகல். அது கொங்கு வட்டார நாவல். கிட்டாப் பொருளுக்கு சந்தையில் மதிப்பிருக்கும் என்றும்.. என்றே நினைத்து இந்தப்பணியை நடுகல் செய்தது. வழக்கம் போல நடுகல் வாசிப்பாளர்களுக்கு மட்டுமே சென்று அமைதியாகிவிட்டது. இவரது சிறுகதை தொகுதியும் மொழிபெயர்ப்பு கதைகளும் அடங்கிய ஒரே தொகுதியாக அடுத்த பணியில் ஆர்வமாய் இறங்கி ஃபைலை அப்படியே வைத்துவிட்டேன். கையிலெடுத்த பணியை எந்த நேரத்திலும் நான் கைவிடுவதில்லை. கொஞ்சம் தாமதமாகவேனும் கொண்டுவந்துவிடுவேன் என்று நம்புகிறேன். அவரது மொழிபெயர்ப்பில் வந்த சிறுகதை ’மிருகம்’ இந்த மாத இதழில் வெளிவந்திருக்கிறது கிளாசிக் வரிசையில். வாசிப்போர் அவரது தொகுதி வெளி வரவேண்டிய அவசியத்தை உணருவார்கள்.
இந்த இதழுக்கென நான் நான்கு கதைகளை எழுதியிருக்கிறேன். இப்போதும் கூட ஆயிரம் வார்த்தைகளிலேனும் முடித்துவிடலாமென ஒருமணி நேரமாக ‘லொட்டு லொட்டு.. லொட லொட’வென தட்டினேன். ஆயிரம் வார்த்தைகள் வந்துவிட்டது. ஆனால் கதை பாதியில் தான் நிற்கிறது. ஏற்கனவே எழுதியவைகள் நான்கும் வெளியில் பத்திரிக்கையில் மளாரெனக் கேட்டார்களென ’சர்’ரென பறந்துவிட்டன. நடுகல் படைப்பாளிகளோடு கலந்து கொள்ளவேண்டுமென்ற எண்ணத்தில் ஆர்வமாய்த்தான் இருந்தேன். சரி.. முகப்புப்பகுதியான உங்களோடு பகுதியையாச்சிம் முடிப்போமென இதில் நிற்கிறேன்.
இந்த இதழில் அய்யனார் ஈடாடி, இலட்சுமண பிரகாசம், தயாஜி, இளையவன் சிவா ஆகியோர் தாங்கள் வாசித்த புத்தகங்களைப்பற்றி எழுதியுள்ளார்கள். புதிதாய் மணி மீனாட்சிசுந்தரம் வந்திருக்கிறார். இதழில் வெளிவரும் தொடர்கள் இப்போது தான் ஒரு நேர்கோட்டுப்பாதையில் பயணம் செய்ய வந்திருக்கின்றன. டீன் கபூர் சென்ற மாதத்திலேயே ஆர்வத்தில் இதழில் வந்த முழுக்கதையையும் முகநூலில் அன்றே வெளியிட்டு மகிழ்ந்தார். நான் அப்போது எதுவும் சொல்லவில்லை. இன்றும் அப்படியே செய்தார். ஆர்வங்கள்.. ஒவ்வொருவருக்கும் விதம் விதம் தான். நான் ஒருவிதமாக கமெண்ட் செய்தேன். அவர் ஒருவிதமாக நன்றி போட்டுப் போய்விட்டார்.
கார்த்திக் வாசன் முதலாக நடுகல்லில் சிறுகதை வடிவில் வந்திருக்கிறார். முடிவு நம்மளாட்டமே பண்றாப்லைன்னு ஆச்சரியம் தான். சு.விஜய் கொடுத்த கதையானது பரிசுப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெறும் வடிவில் இருந்தது. சமீப காலங்களில் (3 வருடமாக) நான் என் பிடிவாதங்களிலிருந்து விடுபட்டு போட்டி என்றால் கலந்து கொள்ள கிளம்பிடுகையில் இம்மாதிரியான விசயங்கள் அமைப்பாளர்களால் பெரிதும் விரும்பப்படுமென்பதை உணர்ந்ததால் சொல்கிறேன். ஆரவ் அவர்கள் எழுதிய சிறுகதையில் கிட்டத்தட்ட திருமணம் தள்ளிப்போன பெண்ணுக்கு கடைசியாய் மாப்பிள்ளை அமைகிறார். மகிழ்ச்சி! ஆனாலும் முடிவில் இரண்டு வரியில் ஒரு இக்கு வைக்கிறார். இந்த இக்குவும் எனக்கு பிடித்திருக்கிறது.
ஒரு இதழாக நடுகல் இயங்குகையில் அனைத்துப்பணிகளையும் நானே கவனிப்பதால் எப்படியும் மாதம் பதினைந்து கதைகளுக்கும் மேலாக வாசிக்கிறேன். அதில் என்னை மகிழ்ச்சிப்படுத்த ஐந்தாறு கதைகள் வந்துவிடுகின்றன. வாசிப்பின் மகிழ்ச்சி எனக்கு முன்பே கிட்டிவிடுகிறது. நல்ல கொடுப்பினைக்காரன் தான்! தொடர்வோம்!
அன்போடே என்றும்
வா.மு.கோமு 1-4-2025
என்னுடைய கதையைப் பற்றி உங்களின் எழுத்துக்களில் குறிப்பிட்டது மிக்க மகிழ்ச்சி ஐயா😊