உச்சி மலையில்

அதன் உயரத்தைவிடவும்   உயர்த்தி நீங்கள் என்னை

சிலுவையில் ஏற்றியப்பின் எனக்கும்

ஏழாவது வானத்தில் இருக்கும் இறைவனுக்கும்

இடையேயான தூரம் சற்று குறைந்தது நன்றி

+++

தொலைத்தூரத்தில் எனக்காக துடித்தழும் ஒரு குரல் கேட்கிறது

அது என்னை கடவுளாக்குகிறது

+++

நான் கடவுளாக ஆக்கப்பட வேண்டுமென்று உயிர்த்தெழவில்லை

என் இறுதி தாகத்திற்கு நீர்கொண்டு வந்த

கைகளை முத்தமிட்டு நன்றி சொல்லவே வந்தேன் சத்தியமாக

+++

எனக்கான அடிகளில்

சிலவற்றை

தன் தலையில் வாங்கிக்கொண்டது ஆணிகள்

நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன் அவைகளுக்கு

***

நான் பாக்கியவான்

இறந்தப் பின்பும் விழித்திருக்கும்

என் கண்கள் முழுதும் சிரித்த முகங்கள்.

***

இன்னொருமுறை கூட உயிர்த்தெழுகிறேன் பாவம்

அந்த ஆட்டுக்குட்டியை மட்டும் விட்டுவிடுங்கள்.

***

எல்லாவற்றுக்கும் பிறகு

எப்போதாவது நீங்கள்

சஞ்சலப்படக்கூடும்

வேண்டவே வேண்டாம்

என்னுடைய இந்தப் பிறவி சிதைவுக்கானதுதான்.

***

 உங்களின் சந்தோஷத்திற்காக இன்னொருமுறை கூட

சிலுவையில் ஏறுவேன்

என் அன்பர்கள் அல்லவா நீங்கள்.

***

உங்களின் மீது கோபமோ

வெறுப்போ சாபமோ இப்படி எதுவுமில்லை

எனக்கு இப்போது இருப்பதெல்லாம்

கைகளை விரித்து எப்போதும்போல்

தன்னை அணைப்பதற்காக நிற்கிறேன் என்று நினைத்து

ஓடி வந்த ஆட்டுக்குட்டியை ஏமாற்றிவிட்டோமே

என்ற குற்ற உணர்ச்சி மட்டும்தான்.

***

என் மீது அதீத அன்பும் வெறுப்பும் கொண்டவர்கள்

ஒன்றுக்கூடி உள்ளனர் எப்போதும்

நான் யாரையும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்கப்போவதில்லை.

***

காலங்கள் உருண்டோடிவிட்டன

கருணையையும் அன்பையும் மட்டுமே

போதிக்கின்றவர்களின் வீட்டின் புகைப்படத்தில் கூட 

இன்னுமும் சிலுவையில்தான் அறையப்பட்டுள்ளேன்.

000

ரிஸ்வான் ராஜா

சொந்த ஊர் முத்துப்பேட்டை. துபாயில் தபால் நிலையத்தில் வேலை செய்கிறார். தேர்ந்த வாசகர்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *