“அலெக்ஸா, ப்ளே ரஞ்சிதமே சாங்“ என கோபி சொல்லி முடிக்கும் முன், “அலெக்ஸா, ப்ளே லியோ சாங்” என்று சாய் குரல் கொடுக்க, ஒரு நவீன தொழில்நுட்பக் கருவியையே ஸ்தம்பிக்கச் செய்து, குழப்பி விட்டார்கள் சகோதரர்கள் இருவரும்.
“என்ன சத்தம் அங்க?“ அம்மா ஷாலினி.
“அலெக்ஸா, ப்ளே அவனிதனிலே பிறந்து”
“அலெக்ஸா, ப்ளே சங்கத்தில் பாடாத கவிதை”
ரெண்டு பேரும் அம்மாக்கு பிடிச்ச சாங் கேக்கறாங்களாம் !
எந்தப் பாடலும் இசைக்கவில்லை. அவர்கள் காட்டுக் கத்தல் தான் காதைக் கிழித்தது.
“கோபி… பேரப் பாரு… கோபி 65“
“போடா சாயி… சாயாத ஈ”
ஷாலினி ஹாலுக்கு வந்து, டி.வி யை அணைத்து வைத்தாள்.
”உங்க ரெண்டு பேர் சண்டையை தீர்க்கறதுக்கு தனியா ஒரு கோர்ட் போடணும். டேய், வாலுங்களா, நா என் சித்தப்பாவைப் பாக்க ஹாஸ்பிடல் கிளம்பிட்டு இருக்கேன். நா வர வரைக்கும் கொஞ்சம் அமைதியா இருங்கடா”
“சரிம்மா, எனக்குப் ப்ளே ஸ்டேஷன் எடுத்துக் கொடுத்துட்டுப் போ” கோபி.
“எனக்குத் தான் ப்ளே ஸ்டேஷன்” சாயி.
“ரெண்டு பேரும் மாத்தி மாத்தி விளையாடுங்க! சண்டை போட்டா எடுத்துத் தரவே மாட்டேன்.”
”சரிம்மா”
“அப்புறம், அம்புஜம் ஃபூட்ஸ்ல கோபிக்குப் புடிச்ச மசால் தோசையும், சாயி, உனக்குப் புடிச்ச வெங்காய அடையும் ஆர்டர் பண்ணி இருக்கேன். அப்பா, ஆஃபீஸ் விட்டு வரும் போது வாங்கிட்டு வந்துடுவார். சாப்பிடுங்க”
ஷாலினி, சமையலறைக்குச் சென்று அவர்களுக்காகப் பால் எடுத்து வரச் சென்றாள்.
அந்த நேரத்தைப் பயன்படுத்தி கோபி, உள் அறையில் அம்மா ஹேண்ட்பேக்கில் இருந்த அம்மாவின் கைபேசியை எடுத்து, அம்புஜம் ஃபூட்ஸ் நம்பருக்கு “வெங்காய அடை கேன்ஸல்” எனத் தட்டி அனுப்பிவிட்டான்.
சத்தம் கேட்காமல் இருக்க சைலண்ட் மோடில் போட்டுவிட்டுத்தான் செய்தி அனுப்பினான். ஆனால், அம்மா வரும் ஓசை கேட்டதால், கைபேசியை டக்கென மேசையில் வைத்துவிட்டு வந்து விட்டான்.
“ஹேண்ட்பேக்கில வச்சிட்டேன் நினைச்சேன் !” என்றபடி, ஷாலினி மீண்டும் போனைத் தன் கைப்பையில் வைத்தாள்.
போகிற வழியில் இஸ்திரிக்குத் துணிகளைக் கொடுக்கலாம் என நினைத்து துணிகளை எடுக்க பால்கனி பக்கம் வந்தாள்.
கோபிக்குத் தோன்றிய அதே குயுக்தி யோசனை சாய்க்கும் !
மெல்லச் சென்று அம்மா கைபேசியை எடுத்து, அம்புஜம் ஃபூட்ஸுக்கு, “ மசால் தோசை வேண்டாம்” என்று தட்டச்சினான்.
திரும்ப கைபேசியை ஹேண்ட்பேக்கில் வைத்ததாக அவன் நினைத்தான். அது, கைப்பையைத் தாண்டி இருந்த ஒரு டேபிள் ஹோல்டரில் கச்சிதமாக அமர்ந்தது.
ஷாலினி புறப்பட்டு விட்டாள். கோபிக்கும் சாய்க்கும் நிறைய அறிவுரைகள்! கண்டிஷன்கள்! அத்தனைக்கும் “அம்மா, ஓகேம்மா” என்று சொன்ன மகன்கள், அம்மா தலை நகர்ந்ததும் அறுந்த வால்களாக ஆட்டம் போட்டார்கள்.
”ஏய், சிக்ஸிடி ஃபைவ், உன்ன செவண்டி ஃபைவ் ஆக்கறேண்டா இன்னிக்கி“
“நீ ! உன்ன நா என்ன பண்ணுவேன் தெரியுமா ? சாஞ்ச ஈ ஆக்கிடுவேன்”
ஃப்ரிட்ஜில் இருந்து ஐஸ் கட்டிகளை எடுத்து ஒருவரையொருவர் அடித்துக் கொண்டனர்.
ப்ளே ஸ்டேஷன் விளையாட சண்டை என… வீடு கலவர பூமியாக மாறியிருந்தது.
அவர்கள் எதிபார்த்ததை விட அப்பா சீக்கிரம் வந்து விட்டார்.
அவர் கையில் உணவு பார்சல்!
அது அம்புஜம் ஃபூட்ஸ் பார்சல் தான்!
“நீங்க சாப்டுங்கடா, நா கொஞ்சம் பக்கத்தில போயிட்டு வந்திடறேன்.” அப்பா.
தனக்கு வெங்காய அடை இருக்கும், அந்தப் பயலுக்கு மசாலா தோசை இருக்காது என உள்ளுக்குள் மகிழ்ந்தபடி சாய்நாத்தும், அதே உணர்ச்சிப் பெருக்கில் கோபிநாத்தும்…
பார்சலைப் பிரித்துப் பார்த்தால்…
அரிசி உப்புமாவும் வெங்காயச் சட்னியும் தான் இருவருக்கும்!
பசி வயிற்றைக் கிள்ளியதால், இஞ்சி தின்ற குரங்கு போல முகத்தை வைத்துக் கொண்டு, உப்புமாவைச் சாப்பிட ஆரம்பித்தனர்.
ஷாலினியும் வந்துவிட்டாள்.
“நீங்க ஏண்டா உப்புமா சாப்பிடுறீங்க?”
“அப்பா அதான் கொடுத்தாரு”
“அவர் ஒரு இம்சை”
உடை மாற்ற உள்ளே சென்றவள் பத்ரகாளியாக வந்தாள்.
தனக்கும் கணவருக்கும் அரிசி உப்புமா ஆர்டர் செய்திருந்தாள் ஷாலினி.
அரிசி உப்புமா மட்டும் போதுமா? வெங்காய அடை, மசால் தோசை கேன்சல் கன்ஃப்ர்மா என அம்புஜம்மா குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.
கைபேசியோ சைலண்ட் மோடில், மேசை மேலேயே அல்லவா இருக்கிறது.
‘யாருடா என் போனை எடுத்தது? சைலண்ட்ல வச்சு… ம் யாரு?”
இரண்டு நாத்துகளும் காற்றில் ஆடும் நாற்றுகளாய் பயத்தில் நெளிந்தனர்.
உப்புமாவுக்குப் பின் உதை நிச்சயம் என நினைத்து, தூக்கம் வருவது போல அல்லது வயிற்றுவலி போல நடிக்கலாமா என யோசித்துக் கொண்டிருந்தனர்.
ஆனால், ஷாலினி, “என்னடா நீங்க ! உங்க வயசு தான் சித்தப்பா பேரன்களுக்கு! எப்படி ஒரு ஹெல்ப் பண்றாங்க தெரியுமா“ என்று சொல்லியபடி கண்களில் கண்ணீர் ததும்ப, அவர்களைக் கடிந்து ஒரு வார்த்தை கூட திட்டாமல், அறைக்குச் சென்று படுத்தாள்.
பின்னாலேயே ஓடினார்கள் இருவரும் !
”இனிமே நாங்க எந்த பிரச்னையும் பண்ண மாட்டோம்மா ! சமத்தா இருப்போம்! அழாதம்மா!“ என்று சொல்லி, அவள் கண்ணீரைத் துடைத்தனர்.
உப்புமாவுக்குப் பின் உதை அல்ல… உறுதிமொழி !
கமலா முரளி
கமலா முரளி எனும் பெயரில் தமிழில் கதை, கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புப் படைப்புகளை எழுதி வரும்,இவரது இயற்பெயர் திருமதி.கே.வி.கமலசுந்தரம் ஆகும்.
ஆங்கில இலக்கியம் மற்றும் கல்வியியலில் முதுகலைப்பட்டம் பெற்ற கமலா முரளி,சென்னை, பெரம்பூர்,விவேகானந்தா பள்ளியில் சில வருடங்கள் பணியாற்றிய பின், கேந்திரிய வித்யாலயா சங்கதனில் ஆங்கில ஆசிரியையாகப் பணியேற்றார். சென்னை, மேக்ஸ்முல்லர்பவன், ஜெர்மன் கல்வியகம், கேந்திரிய வித்யாலயாவுடன் இணைந்து அளித்த திட்டத்தின் கீழ் ஜெர்மன் மொழி பயின்று, ஜெர்மனி, மேன்ஹெய்ம் நகரில் ஜெர்மன் பயின்றார்.கேந்திரிய வித்யாலயாவின் தேசிய அளவிலான “சீர்மிகு ஆசிரியர்” விருதினை 2009 ஆண்டு பெற்றார்.
கமலா முரளியின்,கதை கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழியாக்கப் படைப்புகள் தினசரி, மஞ்சரி, கலைமகள்,குவிகம் மின்னிதழ் நமது உரத்த சிந்தனை, மலர்வனம், பூஞ்சிட்டு சிறார் மின்னிதழ், இந்து தமிழ்திசையின் மாயாபஜார் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன. அவரது “மங்கை எனும் மந்திர தீபம்” (“எ லேடி வித் த மேஜிக் லேம்ப்”)எனும் மொழிபெயர்ப்பு நூல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இவர் எழுதிய, “இந்துமதி கல்யாணம் எப்போ ?” என்ற சிறுகதைத் தொகுப்பு சமீபத்தில் வெளிவந்துள்ளது.