ஒரே வாசிப்பில் முடித்துவிடக் கூடியதுதான் கயலின் உயிரளபெடை கவிதைத் தொகுப்பு. ஆனால் வாசித்த மறுகணம் பெரிய பாரமாகவோ, தவிப்பின் செறிவான  மொழி வெளிப்பாடாகவோ தோன்றிவிடுவதை மறுக்க முடிவதில்லை. கவிதைக்கான மொழியைக் கைக்கொண்டுவிடுகிற மனம் அதை கவிதையாக எழுத முனையும் நெகிழ்வை தன்னியல்பாக அடைந்துவிடுவதை இந்தத் தொகுப்பில் காணமுடிகிறது.

இரண்டாயிரத்துக்குப் பிறகான பெண் கவிஞர்களில் ஒரு பொதுத் தன்மை காணப்பட்டது. ஏன் சங்க காலம் தொட்டே அகம் சார் கவிதைகளில் காமம் ஒரு குறியீடாக வெளிப்பட்டது என்றாலும் அது ஊடலின் பிரிவையோ, கூடலின் ரசிப்பையோ சொன்னாலும் அதில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஓர் உடைப்பு காணப்பட்டது. இது உள் நசுங்களுக்கு எதிரான வெடிப்பாக இருந்தது. பெண் தன்னை வெளிப்படுத்தத் தொடங்கினாள். அது ஆளும் ஆண் வர்க்கத்திற்கு எதிரான ஒரு திருப்பலாக இருந்ததை யாரும் விரும்பவில்லை. சொல்லக் கூடாதது என்ற சமூகக் கட்டமைப்பை உடைக்கும் கலகமாகத்தான் இருந்தது.

பெரும்பாலும் காமம் சார்ந்த ஒரு பெண் மனதின் வெடிப்பு எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. அப்படி எந்த வெடிப்பாகவும் தன்னைக் காட்டிக் கொள்ளாத கயலின் கவிதைகள் மேலோட்டமாக வெளிப்படும் ஒரு கணத்தின் உணர்வு மேலிடலாக இருந்தாலும் அதன் மையம் வெறும் தவிப்பாக இல்லாமல், அதில் தனக்கான சமூகப் பார்வையாக  மாற்றும் மடை மாற்றமே கயலை வெற்றி கொள்ளச் செய்கிறது. அல்லது வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது. பிரிவின் வேதனையை மட்டுமே பேசும் கயலின் உயிரளபெடை காமத்தை இரண்டாமிடத்தில் வைக்கிறது. காமத்தின் திறவு கோலான முத்தத்தை பிரதானப்படுத்துகிறது. அதுவே சொல்லலுக்கு அப்பால் திரண்டு நிற்கிறது.

சில்வியா பிளாத், அன்னா அக்மதோவா போன்ற உலகக் கவிஞர்களின் கவிதைகள் தன்னிலைக் கவிதைகளாக எழுதப்பட்டவை. வெறும் காதலையோ, தனது துயரார்ந்த வேதனையோ தனித்துவத்துடன் வெளிப்படுத்தின. ஆனால் கயலின் தன்னிலை உணர்வுகள் தனது தன்னிலையை, தவிப்பை, ஏக்கத்தை தனது சொந்த நிலத்தின் நுட்பங்கள் ஏந்தி, அதை ஒரு பொது வெளிக் கவிதையாக மறைத்து வைத்திருப்பது அரிதான ஒன்றாகத் தெரிகின்றது.

ஒரு கவிதை இப்படி முடிகிறது,

இன்று

குறுந்தகவலில் நீ விதைத்த கொஞ்சல் சொல்லொன்று

ஆதிவாசிகளுக்குத் திரும்ப அளிக்கப்பட்ட நிலத்தின் கருணை,

தரை மணக்கக் கிடைக்கும் மரமல்லி வாசமென

இக்கவிதையில் மணப்பதும் அந்த ஒரு சொல்லே

போதும்.

இங்கே கொஞ்சலுக்கு பதிலீடு செய்யப்படும் ஆதிவாசி பற்றிய தகவல் கவிதையை தன்னிலைக் கவிதையிலிருந்து உரித்தெடுக்கப்பட்ட்து வியப்பாக இருக்கிறது.

அதேபோல மற்றொரு கவிதை இப்படி முடிகிறது,

திறந்தே கிடக்குமிக் கண்களை இறுதியாய் மூடும் எவரும்

நொடிகளுக்கு முன் பிறந்த சிசுவின் தலை தாங்கும்

செவிலியின் பிரியத்துடன் இருங்களேன்.

எப்படிப்பட்ட பேரன்பு? மரணத்தின் மீதான ஈர்ப்பு நம் ஆழ்மனதில் ஓர் இச்சையாக இருக்கிறது. அது மரணத்தின்பால் பேரன்பும் மதிப்பும் வைத்திருக்கும் தன்னியல்பாகிறது. சிசுவைத் தாங்கும் செவிலி முதலில் மரணத்தையே தாங்குகிறாள். பிறகு அதற்கு உயிர் கொடுக்கிறாள்.

மற்றுமொரு கவிதை,

கண்டு கொள்ளாத தனது இணை, கடைசியாக வெளிப்படுத்தும் மன்னிப்பை,

ஊடலுடன் உன்னை கண்டு கொள்ளாதிருந்த

இரண்டாம் நொடி தழற் பூவெனும் விழிகள் நிறைத்துச்

சொன்னாய்

‘’கண்ணம்மா வேலைடா’’

ஒற்றைப் பொரி வீசிப் போனாய்

இக்கவிதைக் குளத்தின் சொல்லெலாம்

துள்ளும் கயலாக.

சற்று யோசித்தால் ஒற்றை பொரி வீசுவது அந்தக் காதலன் அல்ல. அதை வீசுவது நவீன இயந்திர கணமாக்கப்பட்ட உலக முதலாளித்துவம். அந்த ஒற்றைப் பொரிக்கு கயல்கள் துள்ளுவது இயல்பான ஒன்றா என்ன?

கவிஞரின் சொற் சிக்கனமும் சொல்லாட்சியும் ஆச்சர்யப்பட வைப்பவையாக இருக்கின்றன.

ஒரு மரத்தை மரம் என்று சொல்வதில்லை, அதை இப்படித்தான் கயலால் சொல்ல முடிகிறது,

சிறுகடல் பொங்கி அடர்வனத்துள்

நுழைந்ததுவாய்க் கண்கள் மினுக்க,

நாவால் சுழற்றி ஒலி ருசிக்கும் சர்ப்பம் புரள்வதொத்த

கிளைகளுடைய கடம்ப மரத்தில் சாய்ந்திருக்கிறாய்.

பிரிவை சொல்லும்போது, நாம் நம்மைவிட்டோ, அல்லது வேறு ஏதோ ஒன்றை விட்டோ விலகியபடியே இருக்கிறோம். இது மதிப்பீடுகளால், பார்வைகளால் மாறுபடும் சக மனிதனின் ஆளுகைக்கு ஆட்பட்டுக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது. இது ஒருவகையான மனித வெற்றிடம்தான். ஒன்றை ஒன்று காலி செய்வது.

அந்தக் கவிதை,

நடுங்கும் விரல்களுடன்

பிள்ளை முகம் நோக்கி நீளும்

தாயின் கையடையும்

பாசத்தின் ஈரமற்ற அந்நியச் செலாவணி,

பின்யாமப் புரளலில் உன் தோள் தேடுமென்

அனிச்சைக் கைகளுக்கு தினம் அகப்படும் வெற்றிடம்.

கயலிடம் எப்போதும் இருப்பது ஒரு வெற்றிடம். அது ஓர் ஏக்கம். அந்த வெற்றிடம் ஓர் அசை பற்றாக்குறையுடையதாக, அளபெடையாகத் தன்னை நீட்டிக் கொள்கிறது. அந்த நீட்டல் உயிர் நீட்டலாக இருக்கிறது. அது உயிரளபெடை. ஃபிராய்டின் கூற்றுப்படி, நம்முடைய இச்சைகளை சமூக அங்கீகாரம் பெறக்கூடிய செயல்களாக மாற்றுகிற ஓர் உன்னதமான செயல்பாடின் மூலம்தான் மனித நாகரிகம் வாழ்ந்து கொண்டு வருகிறது. இது தொலைந்துவிட்ட ஒன்றை மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சி. ஆசையினால் தூண்டப்படும் நாம், சமுதாய, அரசியல் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற மனநிலையில் ஓர் அதிருப்தி உடையவர்களாக, புதிய வழிமுறைகளைத் தேடுபவர்களாக இருக்கிறோம். கயலின் அதிருப்தி அன்பு, நிபந்தனையற்ற அன்பு. அது எல்லா வெற்றிடத்தையும் தானே இட்டு நிரப்பிக் கொள்கிறது.

இரண்டு கவிதைகள்

பேரன்புடனுன் கால்களைப் பின்னிப் படர்ந்திருந்த என்னைக்

கிழங்கு அகழ்தலின் கவனத்துடன்

கெல்லிப் பறித்து வீசியதைக்

காலமெனலாம் நீ.

மரணமென்கிறேன் நான்.

இரண்டுமொன்று என்கிறது நம் காதல்.

தொலைத்துத் தலை முழுகிய

உன் நினைவுகளை

மறு கரையில் கவனமாய்க்

கண்டெடுத்துக் கையளித்தபடி இருக்கிறது

காலம்.

(24-01-2021 சேலத்தில் நடந்த எழுத்துக்களம் நிகழ்வில் வாசிக்கப்பட்டது)

சாகிப்கிரான்

சேலத்துக்காரர். `வண்ணச் சிதைவு’ `அரோரா’ இரண்டு தொகுப்புகள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து புத்தக விமர்சனங்கள், கவிதைகள் எழுதிவருகிறார். சேலத்தில் ‘தக்கை’ எனும் இலக்கிய அமைப்பை நடத்திவருகிறார்.

மற்ற பதிவுகள்
Sorry no related post found

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *