மறுகாத்தரையை புளியமரத்தின் நிழல் பாவிப் பரவியிருந்தது. புளியம்பூவும் பிஞ்சும் பிடித்த சடையாய் சாரஞ்சாரமாக கிளைகளில் தொங்கிநின்றன. மத்தியான வெயில் லேசாம மூடி மறைஞ்சு அடித்துக் கொண்டிருந்தது. பெருத்திறங்கிய மடுவை முட்டி முட்டி எக்குப் போட்டி பாலைக் குடித்துக் கொண்டிருந்து கண்திறக்காத நாய்க்குட்டிகள். 

ரெண்டு குட்டிகளும் வெள்ளையும் கருப்பு பொட்டிட்ட நெத்தி. 

ஆளுகளைக் கண்டதும் விரட்டி விரட்டி குரைத்துக் கொண்டு கடிக்க வந்தது.

வெள்ளைச்சாமி தலையில உருவாமைக் கட்டிக்கொண்டு, அரிவாளோடு வந்தான். குட்டிகள் ரெண்டும் அழகான குட்டிகள். மறுகாத்தரைக்கு வருகிற ஆளுக பூராவும் குட்டிகளை வளக்குறதுக்கு தூக்கிட்டுப் போகலாம் என்று தூக்கினால் தாய் விரட்டி விரட்டி வருகிறது. 

குட்டிகளைத் தூக்கியவர்களெல்லாம் அங்கேயே விட்டுச் சென்றனர். 

வெள்ளச்சாமி வீட்டுக்கும் தோப்புக்குத் தொணையா இருக்க குட்டி வேணும்னு யோசித்துக் கொண்டிருந்தான்.  

பொழுது சாய்ந்திருந்தது. மறுகாத்தரை கண்மாய்க்கரைச் சரிவில் குழி பறித்த கருவைத்தூரருகே  குட்டிகள் ரெண்டும் உள்ளே கிடந்தன. வெள்ளைச்சாமி சுத்தி முத்தி பார்த்தான்.தாய் நாயை கண்ணுக்கு எட்டியமட்டும காணவில்லை. குட்டிகள் வீச் வீச் என்று கத்திக் கொண்டிருந்தது. ரெண்டு குட்டிகளையும் தூக்கி நாருப் பெட்டியில் வச்சுத் தூக்கிக் கொண்டு தலச்சுமையோடு வந்து கொட்டத்தில் இறக்கினான். 

கேப்பையை அள்ளி உலையில் போட்ட அன்னத்தாயி, நாய்க்குட்டிகளின் சத்தத்தைக் கேட்டு கொட்டத்திற்குள் ஓடி வந்தாள். வெள்ளைச்சாமி கூளங்களை அள்ளி போட்டு அதில் மேல் குட்டிகளை படுக்க வைத்தான்.

-ஏய்யய்யா இந்தச் சனியங்கள எதுக்கு தூக்கியாந்தேங்க  இருக்குறதுகள வச்சு பாக்க கெதியில்லாம கெடக்கு. இதுல நாக்குட்டிச் சனியன் வேறயா 

-ஏய் போளா ஓஞ்சோலிய பாத்திட்டு.  ரவயில ஒத்தியிலயே தோப்புக்கு போறோம் வாரோம் இந்த குட்டிகள் இருந்தா கூடவே தொணைக்கு வரும்ல.

-ஆமா நாஞ்சொல்லித்தேன் கேட்கப் போறங்களா  அந்தா செவலைமறைக் காளைக்கு கூளத்தை அள்ளிப் போடுங்க. இப்பத்தேன் தண்ணிக்கு விட்டுட்டு கட்டியிருக்கேன்.  குட்டிக என்னய்யாரம் பால் குடிச்சதுகனு தெரியல. ஏளா அன்னம் இங்க வாளா  பெரியாட்டுல இம்புட்டு பாலக்கறந்து குடுலா. பாவமா இருக்கு. பசியில கத்துதுக. 

பெரிய ஆடு அசப் போட்டுக்கொண்டிருந்தது. வெள்ளாட்டுக் கொச்சை காற்றோடு பரவியது.  அன்னத்தாயி வாடையைக் கண்டததும் பெரிய ஆடு ம்மா ம்ம்ம்அ ம்ம்ஆஆ கத்தியது. நாழிச்செம்போடு போனவள். ஆட்டின் மடுவைத் தடவினாள். பின்னங்கால்களைத் தூக்கி உதைத்தது. வள்ளிக் கொடியும் தட்டாங்கொழையும் கொண்டாந்து போட்டு திங்கவிட்டுக் கொண்டே ஒரு சொம்பு பால் கறந்தாள். 

-ஏய்யய்யா ஏய்யய்யாவ்.. என்னளா கறந்துட்டயா.

-ஆமா கறந்துட்டேன். இதுக்கு மேல கறந்தாளும் குட்டி ஆடுகள் பாவம். 

ஆட்டுப்பாலை குட்டிநாய்களுக்கு பருக்கி பசியமர்த்தினான் வெள்ளைச்சாமி. எறை திங்க போன தாய்நாய் தன் குட்டிகளைத் தேடியலைந்தது. கருவைத்தூரை சுத்தி சுத்தி வந்தது. கருவைத்தூரில் நிலா வெளிச்சம் மட்டும் பளிச்சென்று பூத்திருந்தது. 

ஊரே அசந்து உறங்கிக் கொண்டிருந்தது. கிருதுமாக்கரை சுடுகாட்டில் எலும்புகளை வைத்து பூசை செய்து விட்டு வந்த சாமக்கோடாங்கி. கொடமுடைக்கும் இடத்தில் இருந்து குறி சொல்லி வந்தான். நெல்லு வெளயும் ஊரு. பொன்னு வெளயும் ஊரு. இருபத்தொரு தெய்வம் அறுபத்தொரு சேனை படியளக்கும் ஊரு. ஊருகாக்கும் பெண் தெய்வம். உச்சி வெயிலில் ஒக்கார்ந்திருக்கா. என்று பாடிக்கொண்டு வந்தவன், வெள்ளச்சாமிவீட்டின் முன்நின்று வாயில்லாச் சீவன் பாவம் வம்சத்துக்கும் விடாது என்று பாடியவனை இரண்டு நாய்களும் விரட்டியது. தூ தூ என்று துப்பினான். கிலுக்கை உடுக்கையை காட்டி நாயை விரட்டினான். இரண்டு நாய்களும் வீட்டுக்குள் ஓடி வந்தது. அடுப்படி கதவிடுக்கின் ஓட்டையில் கண்ணை வைத்து பார்த்துக் கொண்டிருந்தாள் அன்னத்தாயி. 

தொளி அடித்துப் போட்டு விதை பாவுவதற்கு தோதாக பண்படுத்தி வைத்திருந்தார் நஞ்சைக்காரர். கொக்குகளும் முக்குளிப்பான்களும் தொளியை உழப்பிக் கொண்டிருந்தது.வெள்ளைச்சாமியின் இரண்டு நாய்களும் பெட்டை நாய்கள். 

இரண்டு பெட்டை நாய்களை நான்கு ஆண் நாய்கள் மேகறைத் தோப்பலிருந்து விரட்டி வர. இரண்டு பெட்டை நாய்களும் தொளிக்குள் விழுந்தது. நஞ்சைக்காரர் புளிச்சிக் கம்பை எடுத்து கெழக்கு வரப்பில் நடந்தார். மேகத்தில் நெடு கோடுகளாய் கிழித்த வெள்ளை படர்ந்திருந்தது. நஞ்சைக்காரர் கத்திக் கொண்டே வந்தார். வரப்புகளை முட்டியது நஞ்சையில் கட்டப்பட்ட தண்ணி.

– ச்சே ச்சே போயித் தொலைங்க.. கார்த்திக மாத்தையில இந்த நாக்கழுதைகள் ஊரவே நாறடிக்குதுக.  ஒங்களுக்கு வேற எடம் இல்லையா…

நஞ்சைக்காரர் எறிந்த எறியில் மூன்று ஆண் நாய்களும் தப்பி ஓடியது. 

வெள்ளைச்சாமியின் பெட்டை நாய்கள் சினையாக இருந்ததால் ஓட முடியவில்லை. கெத்து கெத்தென்று இளைத்துக் கொண்டு மோட்டார் அறைக்குள் ஓடி ஒண்டியது. வெள்ளைச்சாமியின் நாய்களென அடயாளங் கண்டார். மோட்டார் அறையை இறுக்கப் பூட்டிவிட்டு வெள்ளைச்சாமியின் வீட்டிற்கு வந்தார். இரண்டு நாய்களும் உள்ளயே குரைத்துக் கொண்டு கிடந்தன. 

வெள்ளைச்சாமி ஆட்டை ஓட்டிக் கொண்டு வருவதை நஞ்சைக்காரர் மந்தையிலிருந்து பார்த்தார். வெத்தலையைக் கிள்ளி  காம்பை எறிந்துவிட்டு மையத்தில் சுண்ணாம்பைத் தடவினார். வாயில் போயிலை ஊறியது. நாலாக மடித்து வாயிற்குள் தள்ளினார்.  நாக்குச் செவந்து எச்சில் தெறிக்க,

-ஏப்பா வெள்ளைச்சாமி ஒன் நாய்கள் வெளயாடவும் பொழிச்சலுக்கும் ஏன் நாற்றங்கால் தான் கெடச்சுச்சா. தொளியடிச்சுப் போட்டு வெதை பாவி வைச்சிருந்தேன். பூராத்தையும் உழப்பி சப்புச் சகதியா ஆக்கிப்பிருச்சு.

-நம்ம நாய்கள் அங்க வராதுங்க மாமா 

-ஏலே நான் என்ன பொய்யா சொல்றேன்.

நஞ்சைக்காரர் வெள்ளைச்சாமியை மோட்டார் அறைக்கு அழைத்துச் சென்றார். இரண்டு பெட்டை நாட்களும் வயிற்றைத் தள்ளிக்கொண்டு மடி புடைத்தும் மூலையில் கிடந்தன. 

-அடிச்சு கிடுச்சு பிடாதேங்க. செனையா இருக்கு. இனிமேப்பட இப்புடி வராது நான் கட்டி போட்டுவிட்டு வளத்துக்கிடுறேன்.

நஞ்சைக்காரர் கோவத்தை அடக்கிக் கொண்டார்.  இரண்டு நாய்களும் வீட்டை நோக்கி ஓடியது.

ஆடுகளை கண்மாய்க்கரையில் ஏற்றி மடக்கி விட்டுவிட்டு மேகறைத் தோப்பிற்கு வந்தான். வாய்க்காலில் தண்ணி அலம்பி ஓடியது. மைனாக்களின் கூட்டங்கள் தலையை முங்கிக் கொண்டு முங்கி முங்கி குளித்து விளையாடின. குழை முத்திய தென்னையில் நெற்று விழும் சத்தங்களும் கேட்டுக்கொண்டிருந்தன.

வெள்ளைச்சாமி அடித்த சீட்டீயில் மேகறைத்தோப்பில் காவலுக்கு கிடந்த  இரண்டு நாய்களும் கீழத்தோப்பிற்கு பறந்து வந்தன. வாலைத் தெக்கு வடக்கில் ஆட்டிக் கொண்டு எக்குப் போட்டது. அச்சு முறுக்கை நொறுக்கி வீசினான். உருண்டைகளைக் கவ்வியது போலக் கவ்வியது. 

தூக்குச் சட்டியில் கிடந்த பழைய சோற்றையும் மீங்கொழம்பையும் கலந்து வைத்து அதில் விஷத்தையும் ஊற்றினான். சண்டையிட்டுக்கொண்டு தின்றன. வெள்ளைச்சாமி இரண்டு நாய்களையும் தடவிக் கொடுத்து விட்டு வந்தான். வாயில்லாச் சீவன இப்படி சாகவச்சிட்டோம் என்ற குற்ற உணர்வு முகத்தில் இருந்தது. முகம் சோர்ந்து போய் வந்தான். நெற்றியில் கோர்த்த வியர்வையை வழிச்சு வழிச்சு எறிஞ்சான். கால் வேட்டியை தூக்கி தூக்கி முகத்தையும் மூக்கையும் துடைத்தபடி வந்தான்.

அன்னத்தாயி முற்றத்தில் சாணித்தண்ணி தொளிச்சுக் கொண்டிருந்தாள்.

-ஏய்யய்யா  இங்க வாய்யா.. மேற்கு வீட்டுக்காரியும் தெற்கு வீட்டுக்காரியும் இப்பத்தான் வந்து மண்ணை வாரித் தூத்திவிட்டு கத்திட்டு போராளுக. இத்தனை நாளா கறவைக்காரர்கிட்ட சொல்லி விட்டாளுக. 

இன்னைக்கு வாசப்படியேறி வசவுகளைக் கொட்டிட்டு போறாளுக. 

மேற்கு வீட்டுக்காரி வீட்டுல ராத்திரியில பானை சட்டிகள  உருட்டுதாம். 

சோத்தையும் தின்டுவிட்டு வருதாம். இந்தச் சனியங்களுக்கு நாம போடுற தீனி பத்தலயாக்கும். தெற்கு வீட்டுக்காரி  வாசல்ல மோண்டு வச்சுட்டு வந்திருதாம். அவள் வெளக்கமாத்த எடுத்திட்டு வந்துட்டா.  குட்டியா தூக்கியாந்த அன்னைக்கே சொன்னேன் இந்தச் சனியங்க எதுக்கு நமக்குன்னு. இப்ப பாருய்யா.. ஊரு வம்பு இழுத்து வச்சிருக்கு.. 

நாய்களைக் கட்டிப் போட்டு வளங்க. இல்லாட்டி குடும்பமே கம்பி எண்ணுவிங்கனு காதில வாங்க முடியாத வார்த்தைகளால அள்ளி வீசிட்டுப் போறாளுக. நாம என்னத்த பேசுறது. ரெண்டு காதையும் இறுக்கப் பொத்திக்கிட்டேன். 

-ஆமா கறவைக்காரு எங்கிட்டயும் வந்து சொன்னாரு. நம்ம நஞ்சைக்காரு விதை பாவியிருந்த நாற்றங்காலையும் சப்புச் சகதியா ஆக்கிட்டு வந்திருக்குக இந்த ரெண்டு நாய்களும். அவர்கிட்ட மன்னிப்பு கேட்டு வந்தேன்.

 -இந்த மேற்கு வீட்டுக்காரி சாடை போட்டு வைய்யுறதா நானும் கேட்டேன். 

-இந்த நாய்கள கட்டை வெளக்கமாத்தவச்சே அடிக்கனும்னு மேற்கு வீட்டுக்காரி சொல்றா. தெற்கு வீட்டுக்காரி வந்ததும் எதுக்குடி நாய்கள அடிக்குற. அதை வளக்குறவனை கட்டை வெளக்குமாத்துல அடிக்கனும்டி.

முந்தாநாள் துவைச்சு காயப்போட்ட  துணிமணிகளைப் பூராவும் கிழிச்ச எறிஞ்சிறிச்சு. தூமைத் துணியைக் கூட விட்டு வைக்கல,கடிச்சு கிழிச்சிருக்கு. நாய் வளக்குறாங்களாக்கும் நாய். இனிமேப்பட அந்த ரெண்டு நாய்களும் இந்தப் பக்கம் வரட்டும். போடுறபோடுல வளக்குறவனுக்கு வலிக்கனும்.

-ஏம்மா அன்னத்தாயி மேற்கு வீட்டுக்காரிகிட்டயும் தெற்கு வீட்டுக்காரிகிட்டயும் போய் சொல்லு மேகறைத் தோப்புல ரெண்டு நாய்களும் செத்துக் கெடக்குனு. வெள்ளனத்தில தோப்புல போய் பார்க்க சொல்லு.. 

-ஏய்யய்யா ஏய்யய்யாவ் என்னய்யா சொல்லுற ?

-ஆமா . ரெண்டு நாய்களுக்கும் சோத்துல விஷத்தை கலந்து வச்சுட்டு வந்தேன். இன்னய்யாரம் சுருண்டிருக்கும்.

-வாயில்லா சீவன இப்புடிக் கொன்னுபிட்டயேய்யா. பாவம் ரெண்டும் செனையா இருந்துச்சுகளே. அடப்பாவிப்பய மனுசா. 

நாய்களுக்கு கறந்து வைத்த பால் ஆட்டுக் கொட்டத்தில் உறைந்திருந்தது. இரண்டு நாய்களும் நெர சினையோடு உறங்கிக் கொண்டிருக்கிறது. மேகறைத்தோப்புக் காற்று தட்டி எழுப்ப முயற்சி செய்து கொண்டிருக்கிறது. 



++



அய்யனார் ஈடாடி

மதுரை மாவட்டம், மாடக்குளம் அருகிலிருக்கும் தானத்தவம் எனும் கிராமத்தைப்  பூர்வீகமாகக் கொண்டவர். வேதிப் பொறியியல் துறையில் பி.டெக்  பட்டம் பெற்றவர். தற்போது தொழில் முனைவோராக உள்ளார்.

கல்லூரிக் காலத்திலேயே படைப்புகளை எழுதத் தொடங்கியவர். வேளாண் தொழில் குடும்பப் பின்புலமும், தமிழின்  மீதான பற்றாலும், இயற்கையின் கொண்டிருக்கும் அதீதக் காதலாலும் கவிதைகளைப் படைப்புகளாக வடித்தெடுக்கிறார்.

ஆடைகளற்ற ஆசைகளின் நீட்சி எனும் கவிதை நூலை 2022லும் , மதுரை வட்டார கிராமத்து எளிய மக்களின் பாடுகளையும் , வரலாற்று சரித்திரத்தையும்

எனதூர் சரித்திரம் எனும் சிறுகதை நூலாக தொகுத்து 2023ல் வெளியிட்டிருக்கிறார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *