இப்படி ஆகும் என்று கதிரேசன் நினைக்கவே இல்லை. ஏதோ பேசப்போய் எதெதோ பேசி, எதுவும் சாதகமாக முடியாமல் இன்னும் விரிசலைப் பெரிதாக்கும் விதத்தில் போய் முடிந்ததில் அவனுக்கு பெரும் வருத்தம். மற்றவர்கள் இப்படித்தான் பேசுவார்கள் என்று அவனுக்குத் தெரியும் என்பதால் அவர்கள் பேசியதில் அவனுக்கு வருத்தமில்லை என்றாலும் அத்தான் பேசியதில் பெரும் வருத்தம் உண்டானது. மனசு உடைந்து போய்த்தான்  அங்கிருந்து எழுந்து வந்தான்.

எதையுமே பேசித்தான் தீர்த்துக் கொள்ள வேண்டும். மனசுக்குள்ள வச்சிக்கிட்டு, முகத்தைத் தூக்கிக்கிட்டு போறாதால எதுவும் நிகழ்ந்து விடாது என அப்பா எப்போதும் சொல்வார். நீ அப்பாமாரிடா என அம்மா கூட அடிக்கடி சொல்வாள். அப்பாமாரி என்பதால் இந்த விசயத்தைப் பேசித் தீர்த்துக் கொள்வோம் என்று நினைத்தானா என்றால் அப்படியொன்றும் இல்லை, அவன் எப்போதுமே எதையும் பேசித் தீர்த்துக் கொள்ள முடியும் என்று நினைப்பவன், அப்படித்தான் பேசித் தீர்த்திருக்கிறான் பல விஷயங்களை உறவுகளிடமும் நட்புக்களிடமும்… உடன் பிறந்தோரிடம் மட்டும் அவனால் எதையும் அவ்வளவு எளிதில் தீர்த்துக் கொள்ள முடிவதில்லை. இருந்தாலும் முயற்சிப்போம் என்று போனவன்தான் மனம் நொந்து எழுந்து வர வேண்டியதாகிவிட்டது.

கருப்பையா டீக்கடையில் வண்டியை நிறுத்திவிட்டு, ‘அண்ணே ஸ்ட்ராங்கா ஒரு டீக்குடுண்ணே…. சரியான தலவலியா இருக்கு’ என்றவன், வாஷ்பேசினில் இரு கைகளாலும் தண்ணீரைப் பிடித்து முகத்தில் அடித்துக் கழுவினான். அத்தான் பேசியது மனசு ஆறவே இல்லை. எவ்வளவு அழுத்தமாய் முகத்தில் அடித்துக் கழுவினாலும் மனசு ஆறவில்லை. தீரா வலி நெற்றிப் பொட்டில் கூடு கட்டி நின்றது. ஒரு பெருமூச்சோடு பெஞ்சில் அமர்ந்தான்.

ஊருக்குத் திரும்பும் விளக்கு ரோட்டின் இடப்புறம் இருந்த சொந்தக் கேப்பைக் கொல்லையில் பதினைந்து இருபது வருடங்களுக்கு முன் கருப்பையா சின்னதாய் ஒரு டீக்கடை வைத்தபோது அந்த இடம் மொட்டக்காடு. அப்படி ஒண்ணும் அள்ளிக் கொட்டும் வருமானம் இல்லை என்றாலும் அந்தப் பக்கமிருக்கும் நாலைந்து கிராமங்களுக்கு அந்த இடம்தான் பேருந்து நிலையம். வயல்வேலை, கட்டிட வேலை மற்றும் நகரத்துக் கடைகளில் வேலை பார்க்கப் போகும் எல்லாரும் கூடும், கடந்து போகும் இடம் அதுவாகத்தான் இருந்தது.

பத்து வருடங்களுக்கு முன் மெயின் ரோட்டுக்கு அந்தப் பக்கமாய் கிடந்த இடத்தை அந்த ஏரியாவில் மிகப்பெரிய தொழிலதிபரான பொன்னுப்பிள்ளை வாங்கி, இன்சினியரிங் கல்லூரி ஆரம்பித்தபின் அந்த ஏரியாவே மாறிவிட்டது. கருப்பையா கூட தனது இடத்தில் கீழே மூன்று கடைகளும், மேல் பசங்க தங்குவதற்கு அறைகளும்,கட்டிடத்துக்கு பின்னே அதை ஒட்டித் தனது வீடெனக் கட்டிக் கொண்டார். மளிகைக் கடை, டீக்கடைகள், பூக்கடை, ஜெராக்ஸ், கூல் ட்ரிங்க்ஸ், பெட்டிக்கடைகள் என ஏராளமாய் முளைக்க ஆரம்பித்தன.

இப்போது அந்தப் பகுதியில் வீடுகளும் பெரிய பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளுமாய் ஏரியா ரொம்பவே மாறிப் போய்விட்டது. கருப்பையாவின் கடையில் டீ, காபி, ஸ்நாக்ஸ், மத்தியானத்துக்கு மட்டும் சாப்பாடு என்றளவில் இருந்தாலும் அங்கிருக்கும் மற்ற கடைகளைவிட அவரின் கடையில்தான் பசங்க கூட்டம் அதிகமிருக்கும். அவரின் கை சுத்தமும் பக்குவமும் அப்படி. நல்ல உழைப்பாளி. யாரையும் கடிந்து பேசிப் பார்க்க முடியாது. கணக்கு வைத்து சாப்பிடும் பசங்களில் சிலர் பணத்தைக் கொடுத்துக் கணக்கு முடிக்காமல் போனால் கூட அதைப் பற்றிப் பேச மாட்டார். பாவம் புள்ள சாப்பிடத்தானே செஞ்சான். சாப்பாடுதானே போட்டோம். நாம நல்லாயிருப்போம் என்பார். அப்படித்தான் நல்லாயிருந்தார். ரெண்டு பெண்பிள்ளைகளையும் கட்டிக் கொடுத்துவிட்டார். பையன் நல்ல வேலையில் இருக்கிறான். நம்ம கடையை யாருக்கிட்டயாச்சும் விட்டுடலாமப்பா என்று மகன் கேட்கும் போதெல்லாம் வீட்டுல இருந்து என்ன செய்ய என்ற கேள்வியால் மடக்கிவிடுவார். உழைத்தவன் உட்கார்ந்தா உயிர் போயிரும்ப்பா என அடிக்கடி சொல்வார்.

‘என்ன கதிரு… உனக்கும் கலைக்கும் இடையிலான பிரச்சினை சரியாயிருச்சா..?’ எனக் கேட்டபடி டீப்பையில் தேயிலையை மாற்றிச் சுடுதண்ணியை லேசாக ஊற்றி பாய்லரில் சொருகி வைத்தார். பாய்லரின் கீழே கணன்று கொண்டிருந்த நெருப்பை சற்றே ஆட்டி, சாம்பல் நீக்கினார். அதில் கொஞ்சம் கரித் துண்டுகளை அள்ளிப் போட்டார்.

கதிரவனுக்குச் சொந்தக்காரர்தான்… இந்த விளக்கு ரோட்டில் இருந்து மூன்று கிலோ மீட்டரில் இருக்கும் காளாப்பூர்தான் இருவருக்கும். அப்போது அது கிராமம். விவசாயம் இருந்த ஊர். இப்போது விவசாய நிலங்களெல்லாம் வீடுகளாகிவிட்டன. வீடுகளும் விளக்கு ரோட்டு வரை வந்துவிட பேருந்து கூட அந்த ஊர் தாண்டி பக்கத்து ஊர் வரை போய்த் திரும்புகிறது.

சின்னவன் கலையரசனுக்குக் கொடுத்த பூர்வீக வீட்டில்தான் ஆரம்பத்தில் கதிரவன் இருந்தான், பின்னர் மனம் ஒத்துப் போகாதபோது  காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் விலங்கியல்துறையில் ஆசிரியராய் இருந்ததால் அந்தப் பக்கமாய் வாடகை வீடு பாத்துப் போய்விடலாம் என்று மனைவி சொல்ல, சில வருடங்கள் அந்தப் பக்கம் ஒத்திக்கு இருந்தான்.

நாலைந்து வருடத்துக்கு முன் தங்கள் இருவருக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்ட, கருப்பையாவின் கடைக்குப் பின்னே போகும் பாதையின் இறுதியில் கிடந்த தனது  இடத்தில் வீடு கட்டி ஊரை ஒட்டி வந்துவிட்டான். நகரத்தின் பரபரப்பும் கிராமத்தின் சப்தங்களும் இல்லாத ஓரிடத்தில் இருப்பது சுகமானதாக இருந்தது. கல்லூரியும் கூட மூன்று கிலோ மீட்டருக்குள் இருந்ததால் அவர்களுக்குப் பெரிய வித்தியாசம் எதுவும் தெரியவில்லை. அதுபோக அந்தப் பகுதியில் வீடுகள் வளர வளர, மண் பாதையாய் இருந்தது தார் ரோடுகளாய் மாறி, அந்த ரோடு நேதாஜி ரோடானது.

கலையரசன் அதே காரைக்குடியில் தாசில்தார் அலுவலகத்தில் வேலை பார்ப்பதால் நகரின் மையப்பகுதியில் இடம் வாங்கி வீடு கட்டிக் கொண்டான்.

பூர்வீக ஊர் என்பது அவர்கள் பிறந்த வீடு இருக்கும் வரைதான். அது போச்சுன்னா அந்த மண்ணோட நமக்கான உறவு போச்சு. அதை நீயாச்சும் எதாச்சும் விலை வச்சி வாங்கி பராமத்துப் பாத்து வையிடான்னு பெரியப்பா சொன்னப்ப, எங்கேப்பா எல்லாப் பக்கமும் பேச்சு வார்த்தை அடச்சிப் போச்சு. இனி நாங் கேக்கப் போயி அதுல எதாச்சும் பிரச்சனை வரும் என்று சொன்னாலும் மனசு கேட்காமல் ஒருநாள் தம்பிக்குப் போன் பண்ணிக் கேட்டான், ஆனால் சின்னவன் கொடுக்க விரும்பவில்லை. தான் இடித்துவிட்டு கட்டப் போவதாகச் சொன்னான், இதுவரை அதைச் செய்யவும் இல்லை. சமீபத்தில் அவன் அந்தப் பக்கம் போனபோது வீட்டுச் சுவரில் சிமெண்ட் பெயர்ந்து விழ ஆரம்பித்திருப்பதைக் காண முடிந்தது.

தனக்குப் பூர்வீக வீட்டில் இடமில்லை என்றானபின் அந்த மண்ணிலாவது இருக்கும் வாய்ப்பைக் கடவுள் கொடுத்தானே எனக் கதிரவனுக்கு மனசுக்குள் மகிழ்ந்தாலும் அத்தனை பேர் விளையாண்டு வளர்ந்த வீடு. எத்தனை சந்தோசங்களை, எத்தனை துக்கங்களைச் சுமந்த வீடு. அது அப்படிக் கிடப்பதை நினைக்கும் போது அவனுக்கு வருத்தமாக இருந்தது. வருந்திப் பயன்..?

‘எப்படிண்ணே சரியாகும். அதெல்லாம் இப்பத் தீராது… சுத்தியிருக்கவுக தீரவும் விடமாட்டாக’ வெறுப்பாய்ச் சொன்னான்.

‘ஏம்ப்பா வீட்டுல மூத்த புள்ள நீயி… உங்க குடும்பத்துல நல்லது கெட்டது எல்லாத்தையும் பொறுப்பாப் பாத்தவன் நீயி… உங்கப்பாரு அடிக்கடி சொல்வாரு. கதிருமாரி ஒரு புள்ளய எனக்குக் கொடுத்த கடவுளுக்குத்தான் நன்றி சொல்லணும்ன்னு. அவரோட சொற்ப சம்பாத்தியத்துல ரெண்டு பொட்டப்புள்ளயள கரையேத்தியிருக்க முடியுமா…? இல்ல இன்னக்கி தாசில்தார் ஆபிசில உந்தம்பி வேல பாத்திருக்க முடியுமா..? நீ எப்படிப்பட்டவன்னு தெரிஞ்சிம் முறுக்கிக்கிட்டு நிக்கிறான்னா…’

‘அப்பா அப்படிச் சொன்னாரு. இப்பக் கூடப் பொறந்ததுக நீ இருக்கதுக்குச் செத்துப்போன்னு சொல்லாமச் சொல்றானுங்க’ என்றபடி அன்றைய பேப்பரில் கண்களை மேயவிட்டான்.

‘ஏம்ப்பா இப்படிச் சொல்றே. உன்னோட மனசுக்கு எவன் என்ன சொன்னாலும் நல்லதே நடக்கும்’ என்றபடி கிளாஸில் இருந்த சுடு தண்ணீரை ஊற்றிவிட்டு சீனி  போட்டு, காய்ந்து கொண்டிருந்த பாலில் ஆடை விலக்கி, கரண்டியால் மோந்து ஊற்றி டிக்காசனை விட்டு ‘சர்ர்ர்ர்ர்…. சர்ர்ர்ர்’ரென ஆற்றி, டிக்காசன் பையைத் தூக்கி மேலவுல ஒரு ஆட்டு ஆட்டினார்.

‘எல்லாம் காலம்ண்ணே….  என்னத்தச் சொல்ல… ஒருவேளை பெத்தவுக இருந்திருந்தா இன்னக்கி எம்பக்கத்துல நின்னிருப்பாக. அதுக்கும் கொடுப்பினை இல்லாமப் போச்சு. அடுத்தடுத்துப் போய் சேர்ந்துட்டாங்க. இப்ப யாருமில்லாத அநாதயிண்ணே…’ வருத்தமாய்ச் சொன்னான். மனசுக்குள் அத்தான் பேசியது சுற்றிச் சுற்றி வந்தது.

‘ம்… விடு எல்லாரும் ஒரு நா வருவாக.’ என்றபடி டீயை அவன் முன்னே வைத்தார்.

‘என்னத்தண்ணே வந்து…. தங்கச்சிகளும் ஏனோ தானோன்னுதான் பேசுதுக. இவனுக்கிட்ட ரொம்ப நெருங்கக் கூடாதுன்னு அதுக நெனப்பு. அப்படி நான் என்ன செஞ்சேன்னு எனக்கும் தெரியல… சொல்லப் போன இன்னைக்கி நெலமக்கி கூடப் பொறந்த ரத்த சொந்தங்கள் வெறுக்கிற அநாதைதாண்ணே நான்’ டீயை உறிஞ்சினான். தொண்டையில் இருந்து சூடு மெல்ல மெல்ல வயிற்றை நோக்கி இறங்கியது ஆசுவாசமாக இருந்தது.

‘ஏய் ஏம்ப்பா இப்படிப் பேசுறே. உனக்கென்ன இப்போ…. உங்குணத்துக்கு சொந்த பந்தம் அத்துக்கிட்டுப் போனாலும் உறவா நாங்கள்லாம் இல்லயா என்ன. மேல இருக்கவனுக்கு எல்லாந் தெரியுமப்பா. உன்னோட மாமமச்சினுங்க இருக்கும் போது உனக்கென்ன கவலயின்னேன். உனக்கு ஒண்ணுன்னா உன்னோட மச்சினனுங்க எறங்கி வேல பாக்க மாட்டானுங்களா… சின்னவன் ஏதாவது கொடச்சல் குடுத்துக்கிட்டு இருந்து அதை நீ அவங்கக்கிட்டச் சொன்னியன்னா வண்டி வண்டியா ஆளுகளக் கொண்டாந்து இறக்கி ஒரு கை பாத்துற மாட்டானுங்க. அரசியல் செல்வாக்கு உள்ள குடும்பமுல்ல அது’.

‘அட ஏண்ணே… அவுக செல்வாக்கு அவுகளோட… அதுக்காக அத நாம அடிதடிக்குப் பயன்படுத்தணுமா என்ன.. அது போக அடிச்சிக்கிட்டு நிக்கிறதுக்கா இந்தப் பொறப்புப் பொறந்தோம். கூடப் பொறந்ததுகதான் பாசமத்துப் போச்சுகன்னா நாமளும் அதே செய்யிறதா. நல்லா இருந்துட்டுப் போகட்டும்ண்ணே. அதுபோக அவனாரு… எந்தம்பிதானே… அவன் நல்லாயிருந்தா என்னக்காச்சும் ஒருநா எங்கண்ண படிக்க வச்சிச்சி நா நல்லாயிருக்கேன்னு யார்க்கிட்டயாச்சும் சொல்லாமயா போவான்” என்றபடி எழுந்து டீக்கான காசைக் கொடுத்துவிட்டுக் கிளம்பினான்.

வண்டியை எடுத்தவனுக்கு இன்னும் மனவலி தீரவில்லை.

தனது வீட்டுக்குப் பக்கத்தில் கிடக்கிற இடத்தை, குடும்பத்துப் பரம எதிரி, அப்பாவைக் கை நீட்டி அடித்த பரமசிவம் மகனுக்குக் கொடுக்கப் போறானாம் என்ற பேச்சு வந்த போது புலம்பித் தீர்த்தான். அப்பாவை அடிச்சவனுக்கு கொடுக்கலாமா..? வேற யார்க்கிட்ட வேணுமின்னாலும் விக்கலாமுல்ல…? அவன் நம்ம வீட்டுக்குப் பக்கத்துல வந்தா நமக்கும் அவனுக்கும் எப்பவும் பிரச்சினையாத்தான் இருக்கும்… அதை யோசிச்சானா…? இந்த அத்தானாச்சும் எடுத்துச் சொல்லலாமுல்ல…? என்று மனைவியிடம் புலம்பியவனை ‘அது அவுக இடம்… யாருக்கோ கொடுக்குறாக. நமக்கென்ன… டவுனுக்குள்ள எல்லாம் பக்கத்து வீட்டுல யார் இருக்கான்னு பாத்தா வாழுறாக. நமக்கும் அவுகளுக்கும் பேச்சில்லாதப்போ அவுககிட்ட நாம எதுக்குப் போயி நிக்கப் போறோம். புலம்பாம வேலையைப் பாருங்க’ என்றாள்.

அவ சொல்றதும் சரிதான், அடிச்சவன் போயிச் சேர்ந்துட்டான். அவனோட மகனுக்குத்தானே கொடுக்கிறான் என்றாலும், ஒரு தகராறில் பரமசிவம் அப்பாவை கை நீட்டி அடித்து எட்டி மிதித்தபோது பக்கத்தில் நின்றவன் அவன் என்ற வகையில் அவனுக்கு வலித்தது. எப்படி இருந்தாலும் ரெண்டு குடும்பத்துக்கும் பேச்சுவார்த்தை அத்துப் போன, எதிலும் கூடாத நிலையில் இவன் இப்படிச் செய்யலாமா என யோசித்தான். அந்த யோசனையே இன்று காலை அவன் வீடு தேடிப் போகவும் வைத்தது.

இவன் பேசப் போன நேரம் அத்தானும் வந்திருந்தார். இவனை வாங்க கதிர் என்றார்.

இவனுடன் முகம் கொடுத்துப் பேசக் கூட கலையரன் விரும்பவில்லை, ‘அத்தான் என்னவாம் ஒருநாளுமில்லாத திருநாளா வந்திருக்காவ. வீடெல்லாம் கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டேன். பக்கத்து இடத்தை விட்டுக் கொடுன்னு வந்திருந்தா அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லன்னு சொல்லிருங்க’ என்றான் எதிரியிடம் பேசுபவனைப் போல. தாசில்தார் அலுவலகம் அவனை நன்றாக பேச வைத்திருப்பதை நினைத்து சிரித்துக் கொண்டான்.

‘இங்கேருங்க கதிர்… அவன்தான் உங்க கூட உறவே வேண்டான்னு இருக்கான். பின்ன எதுக்கு நீங்க அடிக்கடி இங்க வர்றீங்க… பிடிக்கலைன்னா ஒதுங்கி இருங்க. அதுதான் உறவுக்கு நல்லது’

‘அத்தான் நான் எதையும் கேட்டு வரல. என்னோட சம்பாத்தியமும் நிலபுலமும் எனக்குப் போதும். என்னோட மகளுக்கு வேணுங்கிறது எங்கிட்ட நிறையவே இருக்கு. அந்த இடத்தை பரமசிவம் மகனுக்கு விக்கப் போறதா பேச்சு வந்துச்சு. அதான் அது மட்டும் வேண்டான்னு சொல்ல வந்தேன்’

‘நான் யாருக்கோ கொடுப்பேன். இவரு யாரு கொடு கொடுக்க வேணான்னு சொல்ல’

‘நான் யாரா…? இந்தக் குடும்பத்துக்காக உழைச்சவன்.’

‘இங்கேருங்க கதிர்… வீட்டுல மூத்தபுள்ளயின்னா குடும்பத்துக்காக உழைக்கத்தான் செய்வாக. அதெல்லாம் பேசிக்கிட்டு, கணக்குப் பாத்துக்கிட்டு இருக்கமுடியாது. இடம் விக்கிறது அவரு விருப்பம். இதுல நீங்க எதுக்கு ஊடால.’ அத்தானும் அவன் பக்கமாய்தான் நின்றார்.

‘அத்தான்…’

‘வாத்தியாரு வேலைய காலேசுல மட்டும் பாருங்க… எல்லா இடத்துலயும் பாத்தியன்னா பிரச்சினைதான் வரும். அதுபோக நீங்க பொண்டாட்டி பேச்சைக் கேட்டுக்கிட்டு எல்லாரையும் விட்டு ஒதுங்கிப் பொயிட்டிய. உங்க தம்பி மொத்தமாவே விலகிட்டாரு. ஆனா நாங்க உறவு விட்டுப் போயிறக் கூடாதுன்னு இழுத்துப் பாக்குறோம். நீங்க ஒட்டி வராம வெட்டிக்கிட்டுத்தான் நிக்கிறிய. இப்ப நான் இங்க வரலன்னா உங்க தம்பி கேவலமாப் பேசிட்டாருன்னு ஊரே சொல்லி வருவீக. போங்க, அவரு சொத்து அவரு விக்கிறாரு… எதுக்கு வீணாவுல…’ அத்தான் வேகமாகப் பேசியதும் அவனுக்கும் கோபம் தலைக்கேறியது.

‘என்னத்தான் சொன்னிய… நான் அத்துக்கிட்டுப் போறேன்னா… அந்த வீட்டுல இருந்தவனை திடீர்ன்னு காலி பண்ணச் சொன்னது இவன். அதுல கூட நீங்க எதுவும் பேச வரலை. எல்லா நல்லது கெட்டதுலயும் என்னய ஒதுக்குனது இவன். நீங்கள்ல்லாம் கூடித்தான் இருந்தீங்க. நாங்கதான் ஒதுங்கி நின்னோம். இதுவரைக்கும் உங்களுக்கோ, என்னோட தங்கச்சிங்களுக்கோ மரியாதை இல்லாம எதாச்சும் செஞ்சிருப்பேனா. ஆனா அதுக கூட ஒப்புக்குத்தான் பேசுதுக. நீங்களும் சரி, சின்னவரும் சரி அவனுக்கு கொடுக்கிற மதிப்புல இம்மியளவு கூட கொடுக்கிறதில்லைன்னு எனக்குத் தெரியும். அது எதுனாலயின்னும் தெரியும். இருந்தும் உங்க பேச்சுக்கு இதுவரை மறு பேச்சுப் பேசியதில்லை. ஆனா இப்ப நீங்களே என்னயக் குற்றவாளிக் கூண்டுல நிப்பாட்டுறிய… அப்படி நான் உங்களுக்கெல்லாம் என்ன செஞ்சேன்னு சத்தியமாத் தெரியல. இன்னவரைக்கும் நீங்கள்லாம் நல்லாயிருக்கணும்ன்னுதான் நினைக்கிறேன். இனிமேலும் நினைப்பேன். உங்க வாயால எல்லாரையும் அத்துவிட்டுட்டுப் பொயிட்டேன்னு சொல்லாதீங்க. வேண்டாம். உங்க மேல எனக்கு மரியாதை இருக்கு’ வேகமாகச் சொன்னவன் அதன் பின் அங்கு நிற்கவில்லை.

நினைவுகளின் பின்னே கண்ணீர் கன்னத்தில் இறங்கியது.

இந்த உலகத்தில் யாரையும் புரிஞ்சிக்க முடியிறதில்லை. என்ன சண்டை..? எதுக்குச் சண்டை..? ஏன் பேசலை..? எதுக்கு இத்தனை கோபம்..? எல்லாரும் தப்புச் செய்யிறவனை நல்லவன்னு சொல்றாங்களே அது ஏன்..? என எதுக்குமே விடை தெரியலை. ஆனா உறவுகள் ஒதுங்கிப் போயிருச்சு. நான் ஒதுக்கப்பட்டிருக்கிறேன். கருப்பையாண்ண சொன்னமாரி என்னைக்காச்சும் எல்லாரும் வருவாக. மறுபடியும் கூடும்போது சின்ன வயசுல, இந்த ஒதுக்கலுக்கு முன்னே ஒரு சந்தோசம் இருந்துச்சே அது திரும்பக் கிடைக்குமா…?

குழப்ப எண்ணங்களுடன் வண்டியை நிறுத்தினான்.

பக்கத்து இடத்தை யாரையோ கூட்டிக் கொண்டு வந்து காட்டிக் கொண்டிருந்தான் பரமசிவம் மகன்.

வலித்தது என்றாலும் வழியில்லை என்பதால், வலிகளைச் சுமந்திருக்கும் மனசுக்குள் அதைக் கடத்த விரும்பவில்லை, கடந்து சென்றான்.

வாசலில் நின்ற வேப்பமரத்தில் இருந்த காகம் கரைந்தது.

‘காக்கா கத்துது… யாரோ சொந்தக்கார வரப்போறாங்க’ என அம்மா சொல்வது ஞாபகத்தில் வர, உறவுகள் உதறிவிட்டவனை யார் தேடி வரப் போகிறார்கள் என நினைத்துக் கொண்டே, சிரித்துக் கொண்டே படியேறினான்.

மனைவி வீட்டுக்கு வந்திருந்த தம்பி மனைவியுடன் மகிழ்வாய்  பேசிக் கொண்டிருந்தாள். உறவுக்கொடி ஏதாவது ஒரு பக்கத்தில் பற்றிக் கொள்ளத்தான் செய்யும் , மொத்தமாய் அத்து விழாது என தனக்குள் சொல்லிக் கொண்டு கால்களைக் கழுவினான்.

மொத்தமும் கரைந்து ஓடியது.

++

பரிவை சே.குமார்

இதுவரை எதிர்சேவை, வேரும் விழுதுகளும்,  திருவிழா, பரிவை படைப்புகள், வாத்தியார், காளையன், சாக்காடு என்கிற புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. எதிர் சேவைக்கு தஞ்சை பிரகாஷ் வளரும் எழுத்தாளர் விருது , கேலக்ஸி மண்ணின் எழுத்தாளர்களுக்கான பாண்டியன் பொற்கிழி விருது பெற்றிருக்கிறார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *