உலகமே உருளுது! என்னால சுழலுது!

அரளிச்செடி ஒன்றின் இலையின் அடியில் முட்டை வைத்துக் கொண்டிருந்த பட்டாம்பூச்சி, மரத்தின் கீழே சாணத்தை உருட்டி ஓடிக்கொண்டிருந்த சாணி வண்டைப் பார்த்து,

“நானும் இரண்டு மூன்று நாட்களாகப் பார்க்கிறேன் தினமும் இதே வழியாக சாணியை உருட்டிக்கொண்டு சென்று கொண்டே இருக்கிறாயே, உனக்கு வேறு வேலையே இல்லையா?” கேட்டது.

“நானும் இரண்டு மூன்று நாட்களாக இந்த வழியாகப் போகும் போது உன்னைப் பார்க்கிறேன். நீ ஒவ்வொரு செடியாகச் சென்று அமர்ந்து அமர்ந்து எழுந்து பறக்கிறாய், உனக்கு வேறு வேலையே இல்லையா?” என்று கேட்டது சாணி வண்டு.

“பார்த்தாயா!  உனக்குத் திமிரை.  காட்டை உருவாக்கிக் கொண்டிருக்கும் என்னைப் பார்த்து இப்படிக் கேட்கிறாய்” என்று வண்டியின் அருகில் வந்து கூறிவிட்டு  மூக்கைப் பொத்தியபடி  முகத்தை ஒரு பக்கமாக திருப்பிக் கொண்டு போய் ரோஜா பூவின் மீது அமர்ந்தது.

“இதெல்லாம் நம்புகிற மாதிரி இருக்கா? நீ ஒரு சின்னப் பூச்சி நீ பொய் புளுகாதே” என்று உருட்டிக்கொண்டு வந்த உருண்டையின் மீது ஏறி கால் மேல் கால் போட்டுப் படுத்தபடி கூறியது வண்டு.

“கேவலம் விலங்குகளின் கழிவை  உருட்டித் திண்ணும் உனக்கு இவ்வளவு திமிரா?” என்று கூறிவிட்டு விரென்று பறந்து வெறொரு பூவின் நடுவில் வசதியாக அமர்ந்தது பட்டாம்பூச்சி.கோபம் கொண்ட சாணி வண்டு,

“சாணியை நாங்கள் உருட்டவில்லை என்றால் இந்த உலகமே உருளாது தெரியுமா? நீங்கள் இருக்க முடியாது. இந்தக் காடு இருக்க முடியாது. இந்த உலகத்தில் உள்ள யாருமே இருக்க முடியாது’ என்று கால்களை ஆட்டி அப்படியே கூறியது சாணி வண்டு.

“சீ! தூர போ! நாத்தம் நாத்தம் உன்னோட யாருமே பேச மாட்டாங்க. நான் நின்று பேசினேன் பாரு! இது என்னோட தப்பு! 

“ஏன்டா யானைக்கு கொம்பு வெள்ளையா இருக்குதுன்னு ஒரு நாள் யானை கிட்ட கேட்டாங்களாம். யானை சொல்லுச்சா நிலாவை வளைச்சு கொம்பாக்கி வச்சிருக்கேன் அப்படின்னு. அந்தக் கதையா இருக்கே உன்னோட கதை. இவங்க இல்லைனா உலகமே இருக்காதாமா போ! போ! கிளம்பு! கிளம்பு!” என்று கூறி பறக்க முயன்றது பட்டாம்பூச்சி.

“நில்லு! நில்லு! முழுசா கேட்காம போற,  நீங்க இந்த காடு உருவாகக் காரணம் என்று சொன்னா நம்பனும். ஆனா, நாங்க இல்லாம இந்த உலகம் சுழலாதுன்னு சொன்னா நீங்க நம்ப மாட்டிங்களோ! நாங்க ஒரு நாட்டையே அழிவிலிருந்து காப்பாற்றி இருக்கிறோம் தெரியுமா?” என்று  சாணி வண்டு கூறியவுடன் பறந்து சென்று கொண்டிருந்த பட்டாம்பூச்சி வேகமாக திரும்பி வந்து,

“என்ன என்ன என்ன சொல்லு சொல்லு கேட்கிறேன். எந்த நாட்டை நீங்க காப்பாத்தினீங்களாமா?” என்று  மூக்கை பொத்திக் கொண்டே பறந்தபடி கேட்டது பட்டாம்பூச்சி.

“ஐம்பது ஆறுபது வருஷங்களுக்கு முன்னாடி ஆஸ்திரேலியாவில் விலங்குகளோட எண்ணிக்கை அதிகமாகி அதோட சாணம் அதிகமாயிருச்சு அப்போ!”

“நிறுத்து! நிறுத்து! நீங்கள் எல்லாம் போயித்தான் உருட்டி உருட்டி நம்ம நாட்டுக்கு எடுத்துட்டு வந்தீங்களா?” என்று கூறிவிட்டு  வண்டை சுற்றி சுற்றி பறந்து ஹா.. ஹா.. என்று சிரித்தது பட்டாம்பூச்சி.

“கிண்டல் பண்ணாத நான் சொல்றதை கேளு. அந்த சாணத்தை உருட்டி  மண்ணுக்கு அடியில் கொண்டு செல்ல வண்டுகள் குறைவாக இருந்ததுனால சாணம் மலை போல் குவிந்து விட்டதாம். அவங்களுக்கு என்ன பண்றதுனே தெரியலையாம். அப்புறம் ஒரு அறிஞர் தான் ஒரு ஆராய்ச்சி பண்ணி வேற வேற நாட்டிலிருந்து எங்கள் இடத்தை சார்ந்தவர்களை அழைத்து அங்க கொண்டு போய் விட்டாங்களாம். அதுக்கு அப்புறம் அந்த பிரச்சனை தீர்ந்துதாமா தெரியுமா? இப்பச் சொல்லு அந்த நாட்டை அழிவிலிருந்து காப்பாத்துனது யாரு? நாங்க தானே” என்று தன்னுடைய இறக்கைகளை ஆட்டி ஆட்டிக் கேட்டது சாணி வண்டு.

“ஓ சாணி அதிகமானா உலகம் அழிஞ்சிடுமா?” என்று  கிண்டலாகக் கேட்டது பட்டாம்பூச்சி.

“ஆமா இதை பத்தி தெரிஞ்ச யார்கிட்டயாவது நீ போய் கேளு, நீ சின்ன பாப்பா  உனக்கு ஒன்னும் தெரியாது” என்றது சாணி வண்டு.

“ஐம்பது அறுபது வருஷத்துக்கு முன்னாடி நடந்தது உனக்கு மட்டும் எப்படி தெரியும்? என்ன கதை உடுறியா”

“இந்தக காடு எங்களால தான் உருவாகுதுன்னு நீங்க சொன்னீங்களே, இதை யார் சொன்னாங்க உங்களுக்கு?”

“எனக்கு எங்க அம்மாதான் சொன்னாங்க” என்றது பட்டாம்பூச்சி

“எனக்கும் என்னோட அம்மாதான் சொன்னாங்க. என் அம்மாவுக்கு அவங்க அம்மா சொன்னாங்களாம். காலம் காலமா எங்களப் பத்தின வரலாறை எல்லாம் எங்க கிட்ட சொல்லுவாங்க. ஒரு இனத்தின் வரலாறு மிக முக்கியம் இல்லையா? எங்களுடைய கதைகளை தலைமுறை தலைமுறையாகக் கடத்திக்கொண்டே வராங்க. இது எங்களோட பெருமை. இத நாங்க எப்படி மறக்க முடியும். அதனால நான் என் குழந்தைகளிடம் இந்தக் கதையைச் சொல்லித்தான் வளர்க்கிறேன் தெரியுமா?” என்றது முன்னங்கால்களை ஆட்டியபடி சாணி வண்டு.

“ஓஹோ அப்படியா? மன்னிச்சுக்கோ, நீ சாணி உருட்டிக் கொண்டு இருந்ததுனால நான் தப்பா நினைச்சுட்டேன். அது சரி  உங்களால் தான் உலகமே உருளுதுன்னு சொன்னியே அது எப்படி?” அப்படின்னு கேட்டுச்சு பட்டாம்பூச்சி.

“எப்படின்னா நாங்க இந்த உருண்டைய உருட்டி உருட்டி மண்ணுக்கு அடியில கொண்டு போய் வைக்கிறோம். அதைத்தான் நாங்க உணவா எடுத்துக்கிறோம். அது ஒரு உரமா பயன்படுது.  சாணத்தில் இருக்கிற மீத்தேன் வாயு அளவு குறைந்து பூமி வெப்பமடைவது குறையுது. நாங்க  பூமியில் போடுகின்ற துளைகளால் பூமிக்குக் காற்றோட்டம் கிடைக்கிறது. இதனால செடிகள் நல்லா வளருது. பூச்சிக்கொல்லி ஆகவும் உரமாகவும் கூட நாங்க உருட்டிய சாணியை பயன்படுத்துறாங்க. நாங்கள் என்றால்  நாங்கள் மட்டுமல்ல எங்களைப் போன்ற ஒவ்வொரு உயிரினமும் இந்த பூமி சுழலக் காரணமாக இருக்கிறது” என்றது சாணி உருண்டை.

“ஒருவர் செய்கின்ற வேலையை வைத்து எடை போடக்  கூடாது. அதோட விளைவுகளைத் தான் பார்க்கணும் என்பதை உங்களிடம் இருந்து தெரிந்து கொண்டேன். மன்னிச்சுக்கோங்க. இனிமேல் யாரையும் நான் தப்பாக நினைக்க மாட்டேன்” என்றது பட்டாம்பூச்சி.

“என்ன செய்யறது பார்க்கப் பளப்பளன்னு இருக்கிற பறவைகளையும் பூச்சிகளையும் விலங்குகளையும் தான் கொண்டாடுறாங்க. நாங்க எவ்வளவு உழைத்தாலும் எங்களுக்கு எந்த ஒரு மரியாதையும் கிடைக்கிறது இல்லை!  எங்களை யாரும் புகழ்றதும் இல்லை! ஆனா நாங்க அதையெல்லாம் எதிர்பார்க்கிறது இல்லை.  ஒவ்வொருத்தரும் நம்மைப் புகழனும் என்று நினைக்காம அவங்க அவங்க வேலையை செஞ்சாவே போதும்னு நான் நினைக்கிறேன்” என்று கூறியது சாணி வண்டு.

“சரி சரி என் குழந்தைகள் எழுந்திரிச்சு இருப்பாங்க, நான் வரேன்” என்று சொல்லி உயரப் பறக்கும் முன் சாணி வண்டியிடம்  வந்து ஹைஃபை அடித்தபடி பறந்து சென்றது பட்டாம்பூச்சி.

“உலகமே உருளுது!

என்னால சுழலுது!

டண்டன டண்டன!

டண்டன டண்டன!”

என்று பாடியபடி சாணியை உருட்டிக்கொண்டே சென்றது சாணி வண்டு.

++

சரிதா ஜோ

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சரிதா ஜோ தமிழிலும் உளவியலிலும் முதுகலை பட்டமும் கல்வியியலில் நிறைஞர் பட்டமும் பெற்றவர். கதை சொல்லியாக தமிழ் இலக்கியத்திற்குள் பயணத்தை தொடங்கிய இவர் ஏராளமான சிறார் புத்தகங்கள் எழுதியுள்ளார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *