நிர்மல்
இத்தனை எண்ணங்கள் எங்கிருந்து வருகிறது? இவையெல்லாவற்றையும் என்ன செய்வது? என உதயணன் தடுமாறிக் கொண்டிருந்தான். அம்மா, அப்பா, வாசவதத்தை, வெர்ஜினியாவின் டைசன்ஸ் கார்ணரில் உள்ள அந்த அடுக்குமாடி அப்பார்ட்மெண்ட், கோவிந்தராசன், வேலை, இலையே இல்லாமால் பூக்களால் நிரம்பிய மரங்கள், பெய்து ஒய்ந்திருந்த மழை, மழைக்குப் பின் தெருவில் விளையாடும் குழந்தைகளின் இரைச்சல் என அவன் மனம் நிரம்பி வழிந்தது. மிகத் தனிமையாக உணர்ந்தான். உதயணனுக்கு கோவிந்தராசனிடம் பேச வேண்டிய நிர்பந்தம். பால்கனியில் மரங்களை பார்த்துக் கொண்டு ஒரு இருக்கையில் கோவிந்தராசன் அமர்ந்திருந்தான்.
மூன்று நாள் முன்பே உதயணன் அமெரிக்காவில் காலடி எடுத்து வைத்திருந்தான். உதயணன் வந்த அன்று கோவிந்தராசன் வீட்டில் இல்லை. “பணி” என்ற காரணம் கோவிந்தராசனை நியூயார்க் நகரத்துக்குக் கொண்டு சென்றிருந்தது. ஏர்போர்ட்டில் இருந்து வீட்டுக்கு வந்த உதயணனை கோவிந்தராசனின் அடுக்குமாடிக் குடியிருப்பு, தனது வெற்றிடத்தின் வாய் விரித்தபடி விழுங்கிக் கொண்டது.
“அமெரிக்காவுக்கு நல்வரவு” என உதயணன் தனக்குத்தானே சொல்லிக் கொண்டான் சொன்ன குரல் வெற்று வீட்டின் சுவர்களில் மோதி திரும்பி வந்து அவனையே தாக்கியது. வரவேற்பு இப்படித்தானா? தானே தன்னை வரவேற்பது? எதிரொலி மட்டுமே பதில் சொன்னது.
இப்படி கோவிந்தராசன் வீட்டில் உதயணனை தங்க ஏற்பாடு செய்தது உதயணனின் அப்பா.
கோவிந்தராசன் அப்பா உதயணன் அப்பாவிடம் வேலை பார்த்ததாக உதயணன் அம்மா சொல்வார். உதயணன் அப்பா தான் கோவிந்தராசன் அப்பாவிடம் வேலை பார்த்ததாகச் சொல்வார். இரண்டு வார்த்தைகளும் உண்மை போல் ஒலித்தன. இரண்டும் ஒரே நேரத்தில் உண்மையாக இருக்க முடியாது என்பது தெரிந்தும் இருவரும் தங்கள் வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு விடவில்லை. அவர்கள் ஒரு லேத் பட்டறை வைத்திருந்தார்கள். அதில் யார் யாருக்கு வேலை செய்தால் என்ன என்ற நிலைதான் இருந்தமையால் அது பூதாகரமாக வெடிக்கவில்லை.
ஒரே பட்டறையில் இருவருடைய அப்பாக்களும் வேலை செய்தார்கள் என உதயணன் அறிந்திருந்தான். சின்னப்பட்டறை. பெல் நிறுவனத்தில் இருந்து உதிர்ந்து வரும் வேலை. யார் எஜமான், யார் வேலையாள் என்பது தெளிவாக இல்லாமல் இருப்பதே உதயணனுக்கு வாய்த்திருந்தது. பட்டறைக்கு எஜமானும், வேலையாளும் இருக்க வாய்ப்பே இல்லை என உதயணன் நம்பிய காலமது.
அப்போதெல்லாம் என்றாவது கோவிந்தராசன் உதயணன் வீட்டுக்கு வருவான். 12ம் வகுப்பில் பள்ளியில் முதல் மாணவன் என ஆன பொழுது இனிப்பு கொடுக்க வந்தான், அமெரிக்கா போகையில் சொல்லி விட்டுப் போக வந்தான்.
ஊருக்கு வெளியே இருந்த கோவிந்தராசன் வீட்டுக்கு உதயணனை அனுமதிக்க மாட்டார்கள். அப்பா மட்டுமே போய் வருவார். கோவிந்தராசன் வரும் பொழுதெல்லாம் உதயணன் அப்பாவும் அம்மாவும் மாறுவார்கள். அவன் வரும் போதெல்லாம் உதயணன் அம்மா, அப்பாவின் குரல் மெல்லும், முகம் சுருங்கும். கோவிந்தராசன் கிளம்பிய பின்னர் வீடு மீண்டும் அதன் இயல்புக்குத் திரும்பும்.
உதயணனுக்கு கோவிந்தராசன் வீட்டுக்கு ஒரே ஒரு முறை போனது நினைவுக்கு இருந்தது, உதயணன் கல்லூரி முடிக்கப் போகையில் அவனுக்கு வேலைக்கு உதவிக் கேட்டு அப்பா, அம்மா புடை சூழ சென்றான். பெரிய அழகிய வீட்டை அப்பொழுதுதான் கட்டியிருந்தார்கள். கோவிந்தராசன் அண்ணன் என்பீல்ட் புல்லட் வைத்திருந்தான். ஒரு கதாநாயகனைப் போல உடை உடுத்தியிருந்தான். வேலையும் வாங்கிக் கொடுத்தான். அந்த வேலை அவனை அமெரிக்காவுக்கு அழைத்து வந்தது.
அன்று அவனுடைய தலையாய பிரச்சனை வாசவதத்தை. காதலி. அவள் வேறு சமூகம், வேறு மொழி. உதயணன் அம்மாவின் எதிர்ப்பு வார்த்தைகளாக மட்டும் வரவில்லை. அது அவனுக்கு முழுக்க புரியவில்லை. அவனுக்கும் ஆர்வமில்லை. அது வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் குடி கொண்டிருந்தது. சாப்பாட்டுச் சோற்றில் கூட கசப்பாகக் கலந்திருந்தது. உதயணன் அப்பாவோ மனைவி அமைதியாக இருந்தால் போதும், வேறு எதுவும் வேண்டாம் என்பவர். காலை உணவு, மாலை சிற்றுண்டி, சினிமா, அரசியல், சீட்டு, சிக்னேச்சர் விஸ்கி இவைதான் அவர் உலகம். அம்மா குதிக்காமலிருந்தால் அவருக்கு வாழ்க்கை சரி. எனக்குத் தொழிலில் சிக்கல், உனக்குக் கல்யாணத்தில் சிக்கல், என்னால் எதுவும் செய்ய முடியாதென கை விரித்து விட்டார்.
வாசவதத்தை தெளிவாக இருந்தாள். “இன்னும் ஒரு வருடம். அதற்குள் கல்யாணம் நடக்க வேண்டும். உன்னோடு என்றால் நல்லது. இல்லையென்றால் வேறு யாரோடாவது. எனக்குக் கல்யாணம் நடக்கும். நீ மாப்பிள்ளையா இல்லையா என்பதை நீ முடிவு செய்து கொள்.”
அவள் வாட்ஸ் அப் செய்திகளில் தினமும் எண்கள் தோன்றின. 365. அடுத்த நாள் 364. பின்னர் 363. எண்கள் குறைந்து கொண்டே வந்தன. காலம் வேகமெடுத்தது. ஒவ்வொரு எண்ணும் அவன் நெஞ்சில் வந்து குந்தியது. கனமானது. 100 எட்டியபோது பயம் வந்தது. 60 எட்டியபோது அமெரிக்கா வந்து விட்டான். கடுமையாக அலுவலத்தில் அரசியல் செய்து, உருண்டு, பிரண்டு அமெரிக்கா வந்தான். அதற்கும் கோவிந்தராசனே காரணமானான்.
அரபிக்கடல், அட்லாண்டிக் கடல் இரண்டும் கடந்து அம்மாவின் “இல்லை” வர முடியாது என நம்பினான். கடல்களுக்கு அவ்வளவு ஆழம் இருக்கும். அவ்வளவு தூரம் இருக்கும். இங்கே வேலை பார்த்து, இங்கேயே திருமணம் செய்து கொண்டு, வாசவதத்தையை கூட்டி வந்து விட்டால் , எல்லாம் முடிந்தது. கடல்களுக்கு இடையில் வாழ்க்கை நடக்கும்.
நடக்க வேண்டியதை தொடர கோவிந்தராசன் வேண்டும். நியுயார்க் சென்று இருந்த கோவிந்தராசன் திரும்ப வந்து சில மணி நேரமே ஆகின்றது. வந்த உடன் மாடிக்கு சென்று தன் அறைக்கதவினை சாத்திக் கொண்டான். மாடியில் இருந்து கீழே வந்ததும் பால்கனிக்கு போய் விட்டான். முன்னறையில் அமர்ந்திருந்த கோவிந்தராசனிடம் ஒன்றுமே பேசவில்லை. அவன் பயணம், ஊர் நலம் எதுவுமே கேட்கவில்லை. ஒரு முறை வா என தலை அசைத்தான். கோவிந்தராசன் பால்கனியில் இருந்தாலும் கடல்களுக்கு அப்பால் இருப்பது போல தூரமாகவே இருந்தான்.
பால்கனியில் அமர்ந்திருந்த கோவிந்தராசன் கையில் லகாவூலின் 16 விஸ்கி கோப்பையில் ஊற்றப்பட்டிருந்தது. அதன் பொன் நிறம் மாலை வெளிச்சத்தில் ஜொலித்தது. கோப்பையை உதடுகளுக்கு நெருக்கமாக எடுத்து வந்து, பட்டும் படாமலும் நிறுத்தி, மெதுவாக அருந்தினான். மேப்பிள் மலர்கள் மரங்களில் நிரம்பி வழிந்தன. அதையே பருகினான் என ஐயுறும் அளவுக்கு அவன் கண்கள் அதில் முழுக்க பதிந்து இருந்தது.
உதயணன் பால்கனியின் நுழைவாயிலில் நின்று கொண்டிருந்தான். கோவிந்தராசனிடம் இருந்து உரையாடலுக்கு அழைப்பு வரும் எனக் காத்திருந்தான். அழைப்பு வரவில்லை. கோவிந்தராசன் திரும்பவே இல்லை.
அருகில் கணினி திறந்து இருந்தது. அதில் வயலின் இசை ஓடிக் கொண்டிருந்தது. அந்த இசை கோவிந்தராசனையும் உதயணனையும் இடையே ஒரு சுவர் போல நின்றது.
“என்னங்க பாட்டு கேட்கறிங்களா?” என உதயணன் சுவரை உடைக்க முயன்றான்.
“ம்…”
அடுத்த சிப்பை அருந்திய கோவிந்தராசன், ஒரு மர்ல்பரோ சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டான். சிகரெட்டின் வெள்ளை நுனி நெருப்பில் கருகி எரிந்து புகையென கோவிந்தராசனுள் சென்று வெளிவந்தது.
உதயணன் நெஞ்சில் 60 என்னும் எண் குந்தி அமர்ந்திருந்தது. 60 நாள் மட்டுமே. கோவிந்தராசன் இவனுடைய ப்ராஜக்ட் தலைவர். அவன் மனம் வைத்தால் மூன்று வருடம் இங்கே வேலை. விடுப்பு கொடுத்தால் இந்தியா போய் திருமணம். எல்லாமே அவன் கையில்.
“எனக்கும் கிடார் மியூசிக் பிடிக்குங்க…” கோவிந்தராசனின் கவனத்தில் நுழைய பால்கனிக்குள் இருந்த இசையை பற்றி நிற்க முயன்றான்.
வார்த்தைகள் காற்றில் மிதந்து எங்கோ போய் விழுந்தன. கோவிந்தராசன் திரும்பவில்லை. அவன் முகத்தில் புன்னகை ஓன்று தோன்றி மறைந்தது. வசந்தகாலத்தில் பூக்கள் காற்றில் சமயத்தில் உதிரும். அது போல ஒன்று உதிர்ந்தது,.
“சரி, ட்ரிங் சாப்பிடறியா… சிங்கிள் மால்ட் விஸ்கி. ஸ்வீட் டேஸ்ட்…” கோவிந்தராசன் சிரித்துக் கொண்டே உதயணனுக்கு இடம் அளித்தான். சுவர் அவன் சிரிப்பில் உருமாறி உட்கார்ந்து உரையாடும் இடமாகி இருந்தது.
உதயணன் கோவிந்தராசனின் சிரிப்பினை முதல் முறையாக கண்டான். அந்த சிரிப்பில் ஏதோ கசப்பு கலந்திருந்தது. ஸ்வீட் டேஸ்ட் என்கிறான், ஆனால் அவன் முகத்தில் மதுரம் இல்லை என உதயணன் நினைத்துக் கொண்டான்.
“பியர் சாப்பிடுவேன்… இதெல்லாம் சாப்பிடறது இல்லை…” உதயணன் மரியாதையைக் குரலில் ஓர் அவுன்ஸ் சேர்த்துக் கொண்டான்.
“மேலே என் அறைக்குப் போனால் அங்கே ஒரு ப்ரிட்ஜ் இருக்கும்… போய் எடுத்துக் கொண்டு வா…” கோவிந்தராசன் வழி காட்டினான்.
உதயணன் எழுந்தான். படிகளில் ஏறினான். கோவிந்தராசன் வீடு. அவன் அறை. அவன் பொருள்கள். எல்லாம் அன்னியமாக இருந்தது. அவரது வீடு என்றாலும், அவனுக்கு இது ஒரு பயணிகள் விடுதி மாதிரி இருந்தது.
மேல் தளத்தில் கோவிந்தராசன் அறை திறந்து இருந்தது. சுவரில் படங்கள். அவரும் ஒரு பெண்ணும். வாட்டர் ஸ்கூட்டரில். ஸ்கைடைவிங்கில். சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பெண் இப்போது இல்லை. படங்கள் மட்டும் சுவரில் தொங்கின.
ப்ரிட்ஜில் இருந்து பியர் பாட்டிலை எடுத்துக் கொண்டான். கீழே இறங்கினான்.
கோவிந்தராசன் ஐந்து வருடமாக இந்தியா வரவில்லை. ஏதோ காரணம் இங்கேயே தங்கிக் கொண்டான். ஊருக்கு வருவதே இல்லை. அமெரிக்காவில் வீடு வாங்கி இருக்கிறான், கார் வாங்கி இருக்கிறான், வேலையில் உயர்ந்து இருக்கிறான் இவை எல்லாம் உதயணன் இங்கே வந்த பின்னரே தெரிந்தது.
ஐந்து வருடம். ஏன்? அந்தக் கேள்வி உதயணன் மனதில் வந்து நெருடியது. ஆனால் கேட்க முடியவில்லை. பால்கனிக்கு வந்தான்
கோவிந்தராசனை பார்த்தான். மூடியிருந்த கண்கள் கலங்கி இருந்தன. ஈரம் விழிகளில் தேங்கி நின்றது. உதயணன் வாய் திறக்க முயன்றது. வார்த்தைகள் வரவில்லை. இசை ஓடிக் கொண்டிருந்தது. உள்ளேயே சுழன்று கொண்டிருந்தன.
கோவிந்தராசன் முகம் களைத்திருந்தது, கசப்பினை உண்டவர் போல முகம் சுளித்திருந்தது. ஆனால் அதன் சுவையிலேயே மூழ்கி இருந்ததும் தெரிந்தது. உதயணன் பாட்டிலை திறக்கும் சப்தத்தில் கோவிந்தராசன் கண்ணைத் திறந்தான்.
கோவிந்தராசன் இனிப்பு எனச் சொன்ன விஸ்கி, பாடல் எல்லாமும் அவரில் கசப்பாய், விஷமாய் எதையோ பொங்க விடுகின்றதோ எனக் குழப்பம் வந்தது. இல்லாத ஒன்று வரப்போவதில்லை. கசப்பு விஸ்கியில் உள்ளதா, இசையில் உள்ளதா, கோவிந்தராஜனில் உள்ளதா என கண்டுப்பிடிக்க உதயணன் முயன்று தோல்வியுற்றான். அன்று அதற்கு மேல் உதயணன் பேசவில்லை.
அடுத்த ஒரு வாரம் கோவிந்தராசனை பார்க்கவே முடியவில்லை. இருவரும் ஒரே வீட்டில் இருந்தார்கள். ஆனால் வெவ்வேறு நேரங்களில் வாழ்ந்தார்கள். உதயணன் வேலை இரவு முழுதும் நீண்டது. அவன் அலுவலகத்திலிருந்து கிளம்பும்போது, கோவிந்தராசன் அறையில் வேலையில் இருப்பதைப் பார்க்க முடிந்தது. ஒளி கதவின் கீழ் இருந்து வெளியே வந்தது. அவ்வளவுதான்.
ஞாயிறு காலை உதயணன் தூங்கி எழுந்து பன்னிரண்டு மணிக்குக் கீழே இறங்கினான்.
உணவு மேஜையில் சாம்பார், ரசம், தயிரோடு முழு உணவும் அவனுக்காகக் காத்திருந்தது. கோவிந்தராசன் சமையலை முடித்து பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தான்.
“சாப்பிட்டிங்களா கோவிந்தன்…” என உதயணன் பசி கேள்வியாக வந்தது.
“நான் சாப்பிட்டேன். நீ சாப்பிடு. இன்றைக்கு வீட்டுச் சாப்பாடு… நமது ஊர் சாப்பாடு…”
“பார்த்ததும் அழுகையே வந்திடுச்சு. விமானத்திலிருந்து இறங்கிய பின்பு ஒரு வாரமாக ஒரே ப்ரட், பாஸ்தா,பருப்புப் பொடி சாதமென நாக்கே காஞ்சு போய் இருந்தது..”
“நியாயம்தானே…அப்பா, அம்மாவை மிஸ் பண்ணறியா…”
“ஆமாம் அண்ணா….பெரிசாக…”
“சாப்பிடு..” என சொல்லி விட்டு கோவிந்தராசன் வரவேற்பறை சென்று அமர்ந்தான்.
“கோவிந்தன்… உங்ககிட்ட ஒரு உதவி கேட்கனும்..,” உதயணன் தயக்கத்தின் பின் நின்று குரல் வழியே எட்டிப் பார்த்தான்.
“சொல்லு…” கோவிந்தராசன் குரலில் மேலாளருக்கான தொனி இருந்தது.
கோவிந்தன் எனச் சொல்லக் குரலெடுத்தான், அது முறையாகத் தெரியவில்லை. “அண்ணா…” என்றான் உதயணன்.
கோவிந்தராசன் ஒன்றும் சொல்லாமல் பேசு என்பதைப் போலப் பார்த்தான்.
“அண்ணா… ஊரில் ஒரு சிக்கல்… ஊருக்குத் திரும்பப் போய் அம்மா, அப்பா உடன் இருக்க முடியாது. எனக்கு ஆன்சைட் வேலை இந்த ப்ரோஜக்ட் முடியும் வரை கிடைக்குமா? அட்லீஸ்ட் இன்னமும் ஒரு வருடம்..” மிக நேரிடையாகச் சொன்னது பெரிய பதற்றத்தினைக் கொடுத்தது. இப்படி சொல்லியிருக்கனுமா எனத் தோன்றியது. இதையெல்லாம் சொல்லக் கூடாது எனச் சொல்லி வீட்டைக் காலி செய்யச் சொல்வாரா எனக் குழப்பம் வந்தது.
கோவிந்தராசன் ஒன்றும் சொல்லாமல் சோபாவில் சாய்ந்து உட்கார்ந்தான்.
“உதயா, நம்ம ப்ரோஜக்டில் 60 நபர்கள் இருக்கின்றார்கள். உனக்கு மட்டும் நான் அப்படிச் செய்ய முடியுமா என்ன? அது நான் எடுக்கும் முடிவா என்ன?” குரலில் மேலாளர் மறைந்து கனிவு இருந்தது.
“இல்லை அண்ணா…நான் அப்படிக் கேட்கவில்லை, முடிந்தால் ஒரு வாய்ப்பு…தவறாக நினைக்காதீர்கள்…” குரல் உடையக்கூடாது எனப் போராடினான்.
“என்ன பிரச்சனை…”
“கல்யாணம் அண்ணா. அம்மா, அப்பா சமூகச் சிக்கல் ஆக்குகின்றார்கள்…”
“இதெல்லாம் ஊரில் இருப்பதுதானே…”
“ஆமாம் அண்ணா. ஓரிரு வருஷங்கள் கிடைத்தால் சரி செய்து விடுவேன். ஆனால் பெண் வீட்டில் இன்னமும் இரண்டு மாதத்தில் கல்யாணம் செய்து கொள்ளாவிட்டால் பெண்ணுக்கு வேறு கல்யாணம் என்கின்றார்கள்”
“ம்..பெண் சம்மதம் இல்லாமல் ஒன்றும் நடக்காது… காலம் மாறி போச்சு..”
“அப்படி இல்லை அண்ணா. சொன்னதே பெண்தான். கல்யாணம் இல்லாவிட்டால் காதல் ப்ரேக் அப் ஆகிவிடும்….”
“ஓ….சிக்கல்தான். பார்ப்போம்…” சொல்லி விட்டு அமைதியானான கோவிந்தராசன் முகத்தில் யோசனையொன்று ஓடிக் கொண்டிருந்தது. பின்னர் யோசனை பாடலாகி ஏதோ முணுமுணுப்பாக ஒரு பாடலைப் பாடி தொடையில் பாடல் ஒன்றைத் தாளம் போட்டுக் கொண்டிருந்தான்.
உதயணனுக்கு அடுத்துச் சொல்லச் சொல் இல்லாமல் அவன் முகத்தினைப் பார்த்துக் கொண்டே இருந்தான்.
“எங்க அப்பாகிட்டே சொல்லி உங்க வீட்டில் பேசச் சொல்லட்டுமா?….” கோவிந்தன் கேட்டான்.
“அம்மாதான் அண்ணா பிரச்சனை…வாசவதத்தை வேற சமூகம்…அவர்களுக்குச் சொத்து, பத்தும் கம்மி…”
“அப்படியா… நான் எதிர்பார்க்கவில்லை… நான் படிக்கும் போதெல்லாம் உங்கள் அப்பாதான் சமூகம் ,அந்தஸ்து பார்ப்பார். என்னிடமும், என் அப்பாவிடமும் எதையாவது சொல்லிக் கொண்டே இருப்பார். உன் அம்மா அப்படியில்லையே. என்னிடம் ஆசையாக இருப்பார்.”
“அது அப்ப அண்ணா, நம்ம இரண்டு குடும்பமும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதானே இருந்துச்சு…இதெல்லாம்…” கொஞ்சம் இடைவெளி விட்டான். “அப்பாவுக்கு நீங்கள் எனக்கு வேலை வாங்கிக் கொடுத்ததும் சந்தோஷத்தில் அழுகையே வந்திடுச்சு. உடைஞ்சிட்டாரு, அவரோட பெருமை பேசும் குணமெல்லாம் கரைஞ்சிடுச்சி… ஆனால் அம்மாவுக்கு அதுக்கு பிறகுதான் போட்டி, பொருமல் அதிகமா… தான் பெரிய சமூகம், மற்றவரெல்லாம் சின்ன சமூகமென்றால்லாம்…” எனச் சொல்லி விட்டுப் பின் நோக்கி நகர்ந்து அமர்ந்து தலை குனிந்து அமர்ந்திருந்தான்.
கோவிந்தராசன் “ஏதேதோ கணக்கு…நான் ஏதோ எல்லாவற்றையும் புரிஞ்சிக்கிட்டேன் என நினைச்சேன்” சொல்லி நிதானித்து கண் பார்வையை வெற்றுச் சுவரை நோக்கி வெறிக்க திருப்பி கொஞ்ச நேரம் உறைந்து அமர்ந்தான். பிறகு இரு கரங்களையும் இறுக்கப் பிணைத்து முன் நகர்ந்து “ உங்க அம்மாகிட்ட போன் செய்து சொல்லு…நான் சமைச்சு என் கையால்தான் நீ சாப்பிடறேனு…” சொல்லும் பொழுதே மெல்லிய கோடாக கிண்டல் இருந்தது.
“அதையும் குழப்புவாங்க அண்ணா…நீ சமைக்காதே..அவரே உனக்குச் சமைக்கட்டும்…நீ உட்கார்ந்து சாப்பிடு என சொல்லுவாங்க” என உதயணன் தயக்கத்துடன் சொன்னான்.
கோவிந்தராசன் மௌனமானான். கண்கள் சிவந்து, விரல்கள் மடிந்து முட்டியை இறுக்கினான். அடுத்த நொடி அது தளர்ந்தது. வாய்விட்டுச் சிரிக்க ஆரம்பித்தான். உதயணன் சேர்ந்து கொண்டான். பலமான சிரிப்பில் தலை இடமும், வலமுமாக நகர, உயிரும், உணர்வும் இல்லாமல் அவரை தாங்கிப்பிடித்திருந்த சோபாவை தட்டி , தட்டலின் அதிர்வெனச் சிரிப்பை மாற்றி அதில் ஒட்ட வைத்தான்.
சிரித்து முடித்த பின்னர் “கஷ்டம்டா தம்பி…” கோவிந்தராசன் முகத்தில் புன்முறுவல் நின்றது. “உனக்கு இதெல்லாம் தோனலையா…உனக்கு சமூகப் பெருமை எல்லாம் இல்லையா என்ன?” என்றான்.
“அது என்னவென புரியாத வயதில் இருந்துச்சு?”
“அப்புறம்…”
“இப்ப இதெல்லாம் கேட்டால் ஒரு விதத்தில் எரிச்சல்தான் மிஞ்சுது, இதெல்லாம் நிரந்தரமா அண்ணா…நான் படித்த கல்லூரியில் 100 வேற வேற சமூகம், நான் வேலை செய்யும் அலுவலகத்தில் ஐந்து அல்லது ஆறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் வேலை செய்கின்றார்கள். நான் நூறு பேரை நம்பியிருக்கிறேன், என் திறமையில் நூறு பேருக்கு வேலை செய்யறேன். இதிலே நான் எப்படி இதையெல்லாம் தலையில் ஏற்றிக் கொள்வது… அதைத்தவிர நான் நேசிக்கும் பெண் வேறு மொழி, வேறு சமூகம். இதில் நான் எங்கெண்ணா? எனக்கு எல்லாருமே வேணும், எனக்கு வேற வழியே இல்லை…”
“டேய் தம்பி…. இப்படியெல்லாம் நான் யோசித்தது இல்லை. இதே டாப்பிக்கை மார்க்சியம், லிபரேசன் தியாலாஜி, லகான், தெரிதா…என நண்பர்களுடன் பேசுவோம்…நீ சொல்வது எனக்குப் புதுசு”
“அதெல்லாம் யாரு அண்ணா…” உதயணன் திடுக்கிட்டான். புதிதாக அண்ணன் நிறைய ஆட்களைச் சொல்வது அவனுக்குக் குழப்பம் வந்தது.
“நீ புத்தகம் படிப்பியா…”
“நல்லா படிப்பேன் அண்ணா… காலேஜில் 90 பர்செண்ட் அண்ணா…அப்புறமும் எல்லா சர்டிபிகேஷனும் செய்திருக்கேன்…: உதயணனுக்கு குழப்பம் அகலவில்லை. அண்ணன் ஆன்சைட்டில் வைத்துக் கொள்ள நேர்முகத் தேர்வு செய்கின்றாரோ எனச் சந்தேகம் வந்தது.
“அண்ணா…இண்டர்வ்யூ செய்யறதுனா இரண்டு நாள் டைம் கொடுங்க… படிச்சிட்டு வந்திடறேன்.. “ உதயணன் குரலில் தயக்கமும், கொஞ்சம் பதற்றம் கலந்த கெஞ்சலும் கூடியது. பரிட்சைகள் எப்பொழுதும் வெல்லப்பட வேண்டிய யுத்தமென அவனுக்கு நம்பிக்கை உண்டு.
அந்த நம்பிக்கையின் எதிர்வினை ஒரு நொடி திகைப்பென கோவிந்தராசன் முகத்தில் வந்து , சின்ன சிரிப்பாக மாறி, ஆமோதிப்பான தலை அசைப்பென முடிந்தது..
“அண்ணி இல்லையா அண்ணா?, மாடியில் ஸ்கைடைவிங் போட்டோ இருந்தது”.
“அந்த அண்ணிக்கு நான் அண்ணன் இல்லை. அவர்களுக்குக் கல்யாணம் ஆகி குழந்தையெல்லாம் இருக்கின்றது…” சொல்லி விட்டு சோபாவிலிருந்து எழுந்து கொண்டான். அங்கிருந்து கிளம்பி மாடியில் இருக்கும் அவர் பால்கனியை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
பால்கனி விளிம்பில் இருந்து திரும்பி, “என்னடா தம்பி பண்ண போறோம்… எப்படி மேனேஜ் செய்ய போறோம்…” என குரல் காற்றின் அசைவில் நகரும் உதிரும் பூக்கள் போல ஆயின. பின்னர் அமைதியானான். வெளியே இலைகள் அற்ற மரத்தில் நிரம்பியிருந்த பூக்களைப் பார்த்தான். “ஆனால் தம்பி… பிரச்சனைகள் எங்கே இருக்கின்றன? நம் கண்களுக்குத் தெரியாத போது அவை இல்லையா? இருக்கின்றனவா? நாம் பார்த்ததும்தான் அவை உருவாகின்றனவா?…”
உதயணன் மிரளும் விழிகளோடு நின்றிருந்தான். கோவிந்தராசன் சொன்னதை முழுக்க புரிந்துக் கொள்ள முயன்றான். அடுக்கடுக்கான கேள்விகளின் சாரமென்ன? பதில் சொல்ல வேண்டுமாவென தடுமாற்றம் கொண்டான். “அண்ணா…” என சொல்லி எழுந்து நின்றான்.
உதயணன் பதற்றம் நிறைந்த அமைதியை அறைக்குள் உணர்ந்தான். அமைதி வயிற்றினை கலக்கி ஓசையாகவே எழுந்தது. “சாம்பார் செய்வது போல ரெசிப்பியை தூக்கிக் கொண்டு பிரச்சனைகள் வருவதில்லையே…”என அமைதியைக் கலைக்கச் சொன்னான். சொன்னதை எப்படி தொடர்வது என யோசிக்க ஆரம்பித்தான்.
ஏற்கனவே உள்ள பிரச்சனைகள் கவனத்தில் இருந்து காணாமல் போகலாம், தேயலாம், வேறொன்றாக ஆகலாம். அது சரி. ஆனால் இல்லாத ஒன்று திடீரென தோன்றுமா? என்ன உள்ளது அழியுமா, இல்லாதது தோன்றுமா? உதயணன் தன்னுள் வெடித்த எண்ணங்களின் கனத்தினை சுமக்க முடியாமல் கால்கள் தொய்வதை உணர்ந்து மெல்ல அமர்ந்தான்.
“ம்…” விட்டத்தினைப் பார்த்து கோவிந்தராசன் சொன்னான். இவனுக்காகக் காத்திருந்தான்.
“துணிஞ்சு நடப்பதை முழுக்க எடுத்து ஒரு பருக்கை விடாமல் விழுங்கி, செரிச்சு, தெம்பா மாத்திக்கிட்டு என்ன நடந்தாலும் சமாளிக்க முடியும்னா…அதை விட்டு கஷ்டத்தில் பயந்தால் தூக்கம் வர மாட்டேங்குது, ஜங்க் நிறையச் சாப்பிட தோனுது, கை கால் உதறு…” உதயணன் ஏதேதோ சொல்லிக் கொண்டே போனான். அதிகம் பேசுவதாக உணர்ந்து நிறுத்தினான்.
“விஷத்தையும் செரிக்கனும்டா…தம்பி…ஒரு துளி விடக் கூடாது…ஆனால்…” எதையோ சொல்ல வந்து முணுமுணுத்துக் கொண்டே கோவிந்தராசன் பால்கனி நோக்கிச் சென்றான்.
கோவிந்தராசன் அகன்றதும், நேர்முகத்தேர்வு குழப்பத்தில் உதயணன் ஆழ்ந்தான். கையில் இருந்த தொலைப்பேசியை எடுத்து அதில் இன்ஸ்டாக்ராமில் வாசவதத்தையை தேடி எடுத்து யோசிக்க ஆரம்பித்தான்.
அதற்குப் பின்பு இரண்டு, மூன்று வாரம் கோவிந்தராசனிடம் அதிகம் பேசவில்லை. வேலை மூழ்க அடித்தது. அலுவலகத்தில் புதிய நண்பர்கள் சம்பாதித்தான், கோவிந்தராசன் வீட்டிலிருந்து கொண்டு வெளியே வீடு பார்க்க ஆரம்பித்து இருந்தான். கார் உரிமம் வாங்கினான். கார் வாங்கத் தேட ஆரம்பித்தான். ஒரே வீட்டில் இருந்தாலும் கோவிந்தராசனை பார்க்கவே முடியவில்லை. ஞாயிற்றுக் கிழமையும் கோவிந்தராசன் வீட்டில் இல்லை, இவனுக்குச் சாப்பாடு மட்டும் மேசையில் இருந்தது.
அலுவலகத்தில் ஒருநாள் அலுவலக அறைக்கு வருமாறு கோவிந்தராசனிடம் இருந்து அழைப்பு வந்தது. நியூயார்க் அலுவலகத்தில் நடக்கும் முக்கிய சந்திப்புக்குச் தன்னுடன் சேர்ந்து வருமாறு உத்தரவிட்டான்.
அந்த உத்தரவுக்கு பிறகு ஜூன் மாதம் கல்யாணம் வைத்துக் கொள்ளலாம் என வாசவதத்தையின் ஆணையின் பெயரில் முடிவு செய்தான். நியூயார்க் ப்ராஜக்ட் மீட்டிங்க் அவனை அந்த ப்ரோஜக்டில் நீண்ட நாள் வைத்திருக்கும் எனத் தெளிவு கொண்டான். கோவிந்தராசனிடம் விடுப்புக்கு விண்ணப்பம் அனுப்பி நகத்தினைக் கடித்துக் கொண்டு காத்திருந்தான். அது அனுமதி ஆகி வர மகிழ்ச்சிக் கொண்டான்.
நியூயார்க் மீட்டிங் செல்லும் வழியில் கோவிந்தராசன் தொலைப்பேசி வழியேயான முழு அலுவலக சந்திப்பில் இருந்தான். பேசினாலும் வேலையைத் தவிர வேறு எதுவும் பேசவில்லை.
நியூயார்க் நகரில் நுழைந்து அலுவலக சந்திப்பு அறையில் அமர்ந்த பொழுதுதான் அந்நகரில் அவர்களது வாடிக்கையாளர் அணியின் தலைவியாக இருந்த பெண்தான் கோவிந்தராசனுடன் ஸ்கைடைவிங் செய்த பெண் எனக் கண்டான். கோவிந்தராசன் உடலில் நடுக்கம் இருப்பதைப் பார்த்தான். அந்தப் பெண் இயல்பாக இருந்தாள். வேலையை முடிப்பதில் முழுக் கவனம் கொண்டிருந்தாள். கோவிந்தராசனிடம் “ஹௌ ஆர் யூ” எனக் கேட்பதைத் தவிரத் தெரிந்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை.
திரும்ப வருகையில் கோவிந்தராசன் தலையைப் பிடித்துக் கொண்டே அமர்ந்து இருந்தான். தலைவலி மாத்திரை ஒன்றினை எடுத்து உதயணன் கொடுத்தான். ஒன்றும் பேசாமல் மாத்திரையை வாங்கிக் கொண்ட கோவிந்தராசன் கையில் உள்ள மாத்திரையை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“நான் செல்ப் கண்ட்ரோல் உள்ளவன்டா” கோவிந்தராசன் குரல் நடுங்கியது. கேட்கின்றாரா? சொல்கின்றாரா? என உதயணன் உற்றுப்பார்த்தான்.
“விடுங்க அண்ணா, பரவாயில்லை… தூங்குங்க…”
“நியுயார்க் வேண்டாம். இனி கிழக்கு கடற்கரையிலேயே நான் இருக்க கூடாது. இதை விட்டு வேறு இடம் போகனும். வேற கம்பனியில் வேலை வாங்கனும்… மேற்குக் கடற்கரைக்கு போகனும்…”
“ம்…இடம் மாறினால் மாறுமா?”
“நீ என்ன செய்யறே?….” என கேட்கையில் கோவிந்தராசன் காரிருள் படிந்த சாலையின் மீது பார்வையை அழுத்தி ஒட்டியிருந்தான்.
ஸ்டிரியங்கை பற்றிக் கொண்டிருந்த உதயணன் கரங்கள் அந்த சொல்லின் பாரம் சுமந்து நடுங்கியது. சாலையில் பதிந்திருந்த அவன் கண்கள் கோவிந்தராசனை திரும்பிப் பார்த்தன. “உச்…” என தலையை மறுப்பாக தலை ஆட்டினான். அவன் மறுப்பினை கோவிந்தராசன் பார்த்ததாக தெரியவில்லை.
இருவரும் சாலையில், காரின் வேகத்தோடு லயித்திருந்தார்கள். ஓரிடத்தில் பெரிய ட்ரக் ஓன்று அவர்கள் முன் வெட்டிச் சென்றது. அந்த வெட்டிச் சென்ற வேகத்தினை நோக்கி உதயணன் “உச்…” என தலையை மறுப்பாக தலை ஆட்டினான். கோவிந்தராசன் அவனை கவனித்தான்.
“அவ்வளவு பெரிய ட்ரக் என்ன அவசரமோ?…” என கோவிந்தராசன் குரலில் கோபம் கூடச் சொன்னான்.
“அந்த ட்ரக் ஓட்டுபவன் யாரை பார்க்க இத்தனை அவசரப்படுகின்றானா…வேகமே சிக்கல் ஆகலாம்…” உதயணன் சலிப்புடன் சொன்னான்.
“அவளை நிறைய பிடிக்கும்… நேரா பார்க்கையில் கஷ்டமாக இருக்கின்றது.” கோவிந்தராசன் குரலில் உடைவு இருந்தது.
“அவங்களுக்கு வேற சாய்ஸ் இருக்கே அண்ணா…அவங்க அந்த சாய்ஸ் எடுத்திட்டாங்க. அப்பறம் அதை மதிக்கனும்…”
கோவிந்தராசன் நகத்தினை கடிக்க ஆரம்பித்தான். “அப்படியில்லைடா…” என எதையோ சொல்ல ஆரம்பித்து எண்ணத்தின் வேகத்தில் சொற்களை கட்ட இயலாமல் தவித்தான். கார்கதவினை உடைப்பதை போல் ஓங்கிக் குத்தினான்.
“அதில்லை…உங்க உணர்வு இயற்கை, ஆனால் அடுத்ததை பார்க்கனும்…நீங்களும் வேற கல்யாணம்…” உதயணன் கோவிந்தராசனை உரையாடலுக்குள் இழுத்து வந்தான். கார்க்கதவு ஒன்றும் ஆக கூடாது என அவனுள் கவலை வந்தது.
“அதுதாண்டா ஐந்து வருஷமாக ஊருக்கு வரலை… அவளைத் தவிர வேற யாரையும் நினைக்கவே முடியவில்லை…அப்பா,அம்மா கல்யாணம் செய்து கொள்ள கட்டாயம் செய்யறாங்க…தொந்தரவு…இங்கேயே இருந்தால்…”
“அவங்க சொல்லறது சரி. அரேஞ்ச் மேரேஜ் செஞ்சுக்கங்க. உங்க தகுதிக்கு ஊரில் ஈசியாக பெண் கிடைக்கும். உங்களுக்குக் கல்யாணம் ஆகனும்னா. நீங்க நல்ல கணவராக இருப்பிங்க…”
“என்னால அதை நினைக்க முடியவில்லை…என்னால தேடி தேடி போய் கல்யாணம் செய்ய முடியுமா எனக் கவலை இருக்குடா..”
“கரெக்ட்தான். உங்களால் அதையெல்லாம் மேனேஜ் செய்ய முடியாது. அதை அப்பா, அம்மாவிடம் சொல்லுங்க,அவங்க ஊரில் பெண் பார்ப்பது, அலைவது எல்லாம் செய்வார்கள்.”
“எனக்கு அதில் உடன்பாடில்லை… நீயே லவ் மேரேஜ் செய்யற! எனக்கு அரேஞ்ட் மேரேஜ் சொல்லறே… அரேஞ்ச்ட் மேரேஜ்னு ஊரில் சொன்னால் எங்க சமூகத்துக்கு உள்ளேதான் அப்பா,அம்மா பார்ப்பாங்க”
“அப்புறம் ஆகாயத்தில் இருந்து அப்சரஸையா கூட்டி வருவாங்க. அவங்க சோசியல் சர்க்கிளில் இருந்துதானே கூட்டி வருவாங்க….”
“டேய்…”
“தூங்குங்க அண்ணா” என உதயணன் சொன்னான்.
கண்ணை மூடிக் கொண்டு கோவிந்தராசன் சாய்ந்தான்.
உதயணன் திட்டமிட்டபடியே ஆனி மாத ,முகூர்த்த நாளொன்றில் வாசவதத்தையை திருமணம் செய்து கொண்டு அமெரிக்கா கூட்டி வந்து விட்டான். தன் ஊருக்கே போகவில்லை. திருமணம் நடந்ததே வீட்டுக்குத் தெரியாமல் பார்த்துக் கொண்டான். மகன் காதல் திருமணப் பேச்சை நிறுத்தி அமெரிக்காவில் அமைதி கொண்டதாக எண்ணி உதயணன் அம்மாவும் மகிழ்ச்சி கொண்டார். உதயணன் அப்பா மனைவி அமைதி கொண்டதால் தானும் அதில் தொட்டுக் கொண்டு சுவைத்து மகிழ்ச்சியைக் கண்டார். நியூயார்க்கில் இருந்து வந்த ஒரே மாதத்தில் டெக்ஸாசில் வேலை வாங்கிக் கொண்டு கோவிந்தராசன் இடமாற்றம் கண்டான். இவ்வாறாக அனைவரும் அவரவர் யதாஸ்தானத்தில் நிறைவைக் கண்டு கொண்டனர்.
இதெல்லாம் நடந்து ஆறுமாதம் கழித்து மார்கழி மாதத்தில் உதயணன் நியூயார்க்கின் குளிர்காலத்தில் ராக்கர்பெல்லர் மையத்தில் ஐஸ்ரிங்க் பார்க்க வாசவதத்தையை அழைத்துச் செல்கையில் கோவிந்தராசனை கண்டான்.
டிசம்பரின் குளிர்கால விடுமுறை. நியூயார்க் நகரம் கிறிஸ்மஸ் விளக்குகளால் ஜொலித்தது. ராக்கர்பெல்லர் செண்டரின் மாபெரும் கிறிஸ்மஸ் மரம் வானை நோக்கி நின்றது. ஆயிரக்கணக்கான வண்ண விளக்குகள் இருளில் மின்னின. மரத்தைச் சுற்றி மனிதர்கள் கூட்டம். கைகளில் ஹாட் சாக்லெட் கப்கள். கழுத்தில் மப்லர்கள். கன்னங்களில் குளிர் சிவப்பு.
உதயணன் வாசவதத்தையின் கையை பிடித்துக் கொண்டு நின்றான். அவள் கையில் கையுறை இருந்தும் குளிர் இருப்பது தெரிந்தது. இந்தியாவில் வளர்ந்த கை. சென்னையின் சூடு பழக்கப்பட்ட சருமம். இப்போது நியூயார்க் குளிரில் நடுங்குகிறது.
“அழகா இருக்கு…” வாசவதத்தை கிறிஸ்மஸ் மரத்தைப் பார்த்துக் கொண்டே சொன்னாள். அவள் கன்னடம் கலந்த தமிழ்க் குரலில் குழந்தைகளுக்கு உள்ள மகிழ்ச்சி. உதயணன் அவளை பார்த்தான். அவள் கண்கள் விரிந்து, உதடுகள் ஆச்சரியத்தில் திறந்து, உடல் குளிரில் மெல்ல நடுங்கிக் கொண்டிருந்தாள்.
இந்த முகத்திற்காக அம்மாவிடம் பொய் சொல்ல வேண்டியதாயிற்று என உதயணனிடம் எண்ணம் வந்தது. வாட்ஸ்அப்பில் காலையில் அம்மா செய்தி அனுப்பியிருந்தாள். “இந்த வாரம் பேசலையே…” வீடியோ கால் செய்ய வேண்டும். பேச வேண்டும்.“ தவிர்த்து இருந்தான். நியுயார்க் ஹோட்டல் அறையில் வாசவத்தையோடு இருக்கையில் எப்படிப் பேசுவது?
எல்லாம் தெரிந்து விடும்.
அதனால் இன்னமும் தொலைப்பேசியை எடுக்கவில்லை. “பிஸியாக இருக்கின்றேன்” எனத் தட்டெச்சு செய்து அனுப்பினான். பொய். குளிர்கால விடுமுறை. மனைவியுடன் நியூயார்க் புதுவருடக் கொண்டாட்டத்திற்குப் பயணம் வந்துள்ளான்.
“உங்க அம்மாவுக்கு போன் பண்ணணுமில்ல…” வாசவதத்தை சொன்னாள்.
“ம்…”
“நம்ம சொல்லித்தானே ஆகனும்…”
“சொல்லலாம்…சொல்லனும்…”
மீண்டும் பொய். இந்தியாவில் இப்போது காலை. அம்மா காபி போட்டிருப்பாளோ? அப்பா பேப்பர் படித்துக் கொண்டிருப்பாரோ?”
அமெரிக்கா வந்ததற்குக் காரணம் இதுதானே? அம்மா, அப்பா சமூக கணக்குகளிலிருந்து தப்பிப்பது. அரபிக்கடல், அட்லான்டிக் கடல் கடந்து அம்மா வரமாட்டாள் என்று நினைத்தது. வந்து விட்டாள். தொலைப்பேசியில். வாட்ஸ்அப்பில். எண்ணங்களில்.
அந்த நேரம் வாசவதத்தையின் தொலைபேசி ரிங் ஆனது. “என் அம்மா…” என்று சொல்லி எடுத்துக் கொண்டாள். “ஹலோ அம்மா!… நாங்க நல்லாம் இருக்கோம்… இப்ப ராக்கர்பெல்லர் செண்டர்ல இருக்கோம்… கிறிஸ்மஸ் ட்ரீ பார்க்க வந்தோம்… ரொம்ப அழகா இருக்கு அம்மா… நீங்க எப்படி இருக்கீங்க?… அப்பா?… தம்பி?…”
அவள் குரலில் சகஜம். அவள் குடும்பத்திடம் பொய் இல்லை. மறைப்பு இல்லை. அவள் அம்மா அவளை ஆசீர்வதித்தாள். அவள் அப்பா அவளுக்கு வாழ்த்து சொன்னார். அவள் தம்பி சேட்டையாக ஏதோ கேட்டான். அவள் சிரித்தாள்.
உதயணன் அவளைப் பார்த்துக் கொண்டு நின்றான். இவ்வளவு எளிமையாக இருக்கலாம். பொய் இல்லாமல். ஆனால் முடியவில்லை.
எதுவரை இப்படி?
வாசவதத்தை தொலைப்பேசியைக் கீழே இறக்கினாள். “அம்மா உங்களுக்கு ஹாய் சொன்னாங்க…”
உதயணன் தலை ஆட்டினான். வாசவதத்தையின் அம்மா அவனை மாப்பிள்ளை என்று அழைக்கிறாள். அன்பாகப் பேசுகிறாள். ஆனால் உதயணன் அம்மா வாசவதத்தையை பார்த்ததே இல்லை. அவள் பெயரைக் கேட்டதே இல்லை.
“குளிரா இருக்கா?” என்று கேட்டான்.
“கொஞ்சம்… ஆனா பரவாயில்லை… ஐஸ் ரிங்க் போலாமா…”
கீழே ஐஸ் ரிங்கில் மனிதர்கள் சறுக்கி விளையாடினார்கள். விழுந்தார்கள். எழுந்தார்கள். சிரித்தார்கள். உறைந்த நீரின் மேல் நடனம். குளிரில் உல்லாசம்.
அந்த நேரத்தில் கூட்டத்தில் பெரிய கோட்டுடன் கையில் ஐஸ்க்ரீம் வைத்துக் கொண்டு நடந்து வரும் கோவிந்தராசனை உதயணன் கண்டான்.
“அண்ணா…” என ஒரு நிமிடம் உரக்கக் கத்தி விட்டான். வாசவதத்தை திடுக்கிட்டது போல அங்கு நிறைய ஆட்கள் திடுக்கிட்டார்கள்.
விரைந்து ஓடி சென்று கோவிந்தராசன் கைகளைப் பற்றிக் கொண்டான். “நலமா அண்ணா…” என மூச்சிரைக்கக் கேட்டான்.
“உதயா… எப்படி இருக்கே…அம்மா, அப்பா நலமா? மனைவி நலமா?” கோவிந்தராசன் முகம் ஐஸ்க்ரீம் சாப்பிடவிடாமல் பற்றிக் கொண்டிருக்கும் உதயணனின் பிடியைப் பார்த்துக் கொண்டே மலர்ந்தது.
“இது வாசவதத்தை…” என உதயணன் கோவிந்தராசனுக்கு வாசவத்தையை அறிமுகம் செய்து வைத்தான்.
“நல்லாயிருக்கியாம்மா? உன்னைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. எங்கள் தமிழ் மரபில் கௌசாம்பி நாட்டு மன்னன் உதயணனும், உஜ்ஜயினி இளவரசி வாசவதத்தையும் காவிய காதலர்கள். உங்களால் அவர்களை நேரில் சந்திக்கின்றேன்” எனக் கோவிந்தராசன் சிரித்தான்.
வாசவதத்தை “ஓ. அப்படியா!!! நன்றிங்க. எனக்கு கன்னடம் மட்டுமே தெரியும், தமிழ் வாசிக்கத் தெரியாது” என்றாள்.
“அதனால் என்னம்மா…இரு, நான் ஒருவரை அறிமுகம் செய்கின்றேன்…” எனச் சொல்லித் திரும்பி அவன் முதுகுக்குப் பின்னால் நின்றிருந்த பெண்ணை முன்னுக்கு இழுத்து நிறுத்தினான்.
“இவங்க என் மனைவி…உதயணனுக்கு இவரை முன்னரே தெரிந்து இருக்க வாய்ப்புண்டு. நம்ம ஊர்தான்..ஐப்பசியில் கல்யாணம் முடிந்தது!.” கோவிந்தராசன் அறிமுகம் செய்தான்.
“அண்ணா… நீங்க பத்திரிக்கை வைக்கலையே தவிர, ஊர் செய்தி வராமலா போகுது. அம்மா,அப்பா இருவரும் உங்கள் கல்யாணத்துக்கு வந்தாங்களே. அவங்க சொன்னாங்க” எனச் சொல்லி விட்டு கோவிந்தராசன் மனைவியை பார்த்துத் திரும்பி “வணக்கங்க…” என்றான்.
அழகிய மூக்கும், உதடுகளும் கொண்ட அந்த பெண், அவளது ஜாக்கெட், தலைக்குல்லாய், கழுத்து மப்ளர் எல்லாம் தாண்டி வெட்கம் ததும்ப கண்ணாடிக்கு பின்னுள்ள தன் கண்களை உதயணன் மீதும், வாசவதத்தை மீதும் திருப்பி பதில் வணக்கம் சொன்னாள்.
“என்னை தெரியுதுங்களா…நான் வடக்குத் தெருவுல மளிகைக்கடைக்கு எதிர்வீட்டில் காசியம்மாள் இருக்காங்களே, அவங்க பையன்…அந்த மஞ்சள் கலர் பெயிண்ட் அடிச்ச வீடு“ என உதயணன் கரம் குவித்து வணங்கினான்.
“தெரியும். உங்களைப் பற்றி இவர் சொல்லியிருக்கிறார்…” கோவிந்தராசன் மனைவி வெட்கப்பட்டாள்.
“திருமண வாழ்த்துக்கள்… டெக்ஸாஸ் நல்ல வார்ம் ஆக இருக்கும். இங்க நியூயார்க் நிறைய குளிருல்ல…” வாசவதத்தை அவளிடம் பொதுவாக கேட்டாள்.
“எனக்கு நியூயார்க் பார்க்கவேண்டும் எனக் கல்லூரி படிக்கையில் இருந்தே ஆசை… 12 வருட ஆசை. எத்தனை சினிமாவில் பார்த்துள்ளேன். அதுதான் இவர் கூட்டி வந்திருக்கிறார். அமெரிக்கா உள்ளே எங்கள் முதல் பயணம், ஒவ்வொரு சீசனிலும் நியூயார்க் பார்க்க வேண்டுமெனத் திட்டம் உள்ளது…” என வெட்கமும், பெருமையும் கலந்த குரலில் படபடவென பொரிந்தாள்.
“கல்யாண வாழ்க்கை எப்படியண்ணா இருக்கு…ஸ்பைடர்மேன் மாதிரி நியூயார்க்கில் அண்ணியோடு பறப்பது எப்படி உள்ளது?” கிண்டல் தொனியில் உதயணன் சொன்னான்.
“அம்மா, அப்பா பார்த்துச் செய்த கல்யாணம், ஆனாலும் love looks not with the eyes, but with the mind, and therefore is winged cupid painted blind…நான் இப்பொழுது முழுக் குருடன்” கோவிந்தராசன் சொல்கையில் அவன் குரலிலும் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பெல்லாம் இருப்பதை உதயணன் கண்டான்.
“ஷேக்ஸ்பியர் ராக்கர்பெல்லர் செண்டரில் இருக்கார்..” வாசவத்தை சொன்னாள்.
“ஓ உனக்கு தெரியுதே…அவனுக்கு புரியாது…” என கோவிந்தராசன் சிரித்தான்.
கொஞ்சம் நேரம் பேசிய பின்னர் திருமணப் பத்திரிக்கை அனுப்ப முடியாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டு கோவிந்தராசனும் அவர் மனைவியும் ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக் கொண்டே விடைபெற்று நடந்து போனார்கள். உதயணன் பார்த்துக் கொண்டிருக்கையில் நியூயார்க்கின் கொண்டாட மனநிலையில் கோவிந்தராசன் தம்பதியினர் கரைந்து போனார்கள்.
தன் பார்வையில் விடாமல் அவர்களை பற்றிக் கொண்டு நின்றிருந்த உதயணனை, வாசவதத்தையின் கரங்கள் தன்னிச்சையாக அவளை நோக்கி இழுத்தது. திரும்பிய உதயணன் அவளை உற்று நோக்கினான்.
அவள் “வா…” என்றாள்.
அந்த அழைப்பின் பின் மார்புக்குள் எங்கிருந்தோ ஒரு சூடு எழுந்தது. அம்மாவின் குரல், அப்பாவின் அமைதி, வீட்டின் வாசல், கோவிந்தராசன், பொய் எல்லாம் ஒன்றாகக் கிளம்பி வந்து தொண்டையில் முட்டிக் கொண்டது. அந்த முட்டலில் ஒரு சொல் உருவாகிக் கொண்டிருந்தது.
“நீ…” எனத் துவங்கினான். அவள் காத்திருந்தாள்.
மூச்சை ஆழமாக இழுத்தான். குளிர் நுரையீரலுக்குள் நுழைந்தது. அந்த சூடு, அந்தக் கசப்பு, அந்தச் சொல்லின் முனை, மூச்சோடு மேலே எழுந்தது.
ஒரு கணம் அது விஷமாய் நாவில் திரண்டது. அவன் உதடுகளை மூடிக் கொண்டான். விஷத்தினை தொண்டையில் நிறுத்தினான்.
அதற்குப் பின் வரும் சொல் கசப்பாக இருக்கும் என அவன் அறிந்தான்.விஷத்தில் ஊறிய கசப்பும் தன்னில் உண்டென கண்டான்.
அந்த விஷமும், கசப்பும், நியூயார்கின் விடுமுறைக் கால ஜனத்திரளும், பெரும் கட்டிடங்களும், வண்ண விளக்குகளும், குளிரும், ஐஸ் ரிங்கில் நகரும் பதட்டமும், மகிழ்வும், கோவிந்தராசனும், அம்மாவும், வாசவதத்தையும் கொண்டாடமாய் வேறு வேறல்ல என ஆகி ஒன்றினைந்து அவனுள் செரிக்கப்பட்டு, செரிப்பின் வெப்பத்தில் சாம்பலாகி, முழுமையாக ஏற்கப்பட்ட அக்கணத்தில், நெஞ்சம் விரிந்தது.
மீண்டும் மூச்சை வெளியேற்றினான். வெண்மையான நீராவி குளிரில் கரைந்து போனது.
சாம்பல் குளிர்காலத்தின் பனி நிலத்தில் படிவது போல அவன் சித்தம், புத்தி, மனமெங்கும் பரவியது, அதில் சொல்லெடுத்தான். “நீ.. வா” என அவள் கரம் பற்றினான். பனி நோக்கி முதல் அடி எடுத்து வைத்தான்.
00

நிர்மல்
அமெரிக்காவில் வெர்ஜினியா மாகாணத்தில் பொறியாளராகப் பணிபுரிகின்றார். கதைகள் சொல்வனம், வல்லினம், வாசகசாலை ஆகிய இதழ்களில் வெளியாகி உள்ளது.

