ஜாஸ் மஹால் என்று பெயரிடப்பட்டிருந்தது அந்த ஹால். நீண்ட நாட்களாக கயிறுகள் கட்டைகளோடு சாரங்கள் பக்கவாட்டில் தொங்கிக்கொண்டிருக்க முன்புறம் கட்டிடம் மூடுமளவுக்கு பச்சைநிற ஊடுருவுத் திரைச் சீலை தொங்கவிட்டிருந்தார்கள். திரையை விலக்கும்வரை அது வாடகைக்கு விடப்போகும் விஷேசங்களுக்கான கட்டிடமென்றே ஊகிக்கமுடியவில்லை. திரும்புகிற பக்கமெல்லாம் பெரிய பெரிய வீடுகளைப் பார்க்க முடிகிறது. இது வீடுதானா என்று யோசித்துக்கூட பார்க்கமுடியாத கட்டிடங்கள் உருவாகி குறுகிய தெருக்களில் கம்பீரத்தில் திளைக்கின்றன. அப்படிப் பார்த்தால் இந்த ஹாலையும் சந்தேகத்தின் பெயரிலேயே பலநாட்கள் கடந்துபோனதுண்டு. பிரதான சாலையை எளிதாக நெருங்கிவிடும் அணுக்கத்தில் ஹால் கட்டப்பட்டிருந்தது. எனக்குத் தெரிந்து நிறைய ஹால்கள் மெயின்ரோட்டைவிட்டு இறங்கினால்போதும் பிடித்துவிடலாமென்கிற வேகத்திலேயே வளர்ந்துவிடுகின்றன. நாளைக்கு என்ன விஷேசமென்று முகப்பை ஒட்டி சாலையைப் பார்த்து வைக்கப்பட்டிருந்த ஃப்ளக்ஸை வைத்துத் தெரிந்துகொண்டேன். வேறென்ன திருமணம்தான். நுழைவில் மரப்பெஞ்சில் ஆண்கள் ஒன்றிரண்டுபேர் அமர்ந்திருக்க உறவினர் பெண்கள் வாசலில் கோலமிட்டபடி வரவேற்றுக்கொண்டிருந்தார்கள். உள்ளுக்குள்ளிருந்து பன்னீர் ரோஜாவின் வாசனையும் அகில் புகையும் கலந்து வருவது போலிருந்தது. ஒரு கணம் உள்ளே எட்டிப்பார்க்கலாமாயென்று தோன்றாமலில்லை. ஏனோ வைபவங்கள் நடக்குமிடத்திற்கு தனித்த வாசனையும் பிரியாவிடைகொடுக்கும் அழைப்புமிருக்கிறது. கோலத்தைக் கடக்கிறபோது ஒதுங்கியே போனேன். வேடிக்கை பார்க்க கொஞ்சம் விலகல் தேவை. வேகமாகச் செல்லவேண்டும் ஒரு கொரியர் அனுப்பிவிட்டு வேறொரு வேலையுமிருக்கிறது. உடன் யாரும் வரவில்லை. தனியாகவே போகிறேன். ஹாலைக் கடந்து இரண்டு தள்ளுவண்டிகள். ஒன்றில் பலகாரங்களின் விற்பனையோடு சிறிய பெட்டிக்கடை. இன்னொன்று மாமிச வாசனை தூக்கலாக கடை திறக்க ஆயத்தமாகிக்கொண்டிருந்தது. மாமிசக்காரன் ஒரு பார்வை பார்த்து திரும்பிவிட்டான். இரவுக்கும் மாலைக்குமிடையில் வருகிற பொழுதில் மாமிசங்களுக்கும் மசாலாக்களுக்கும் தீராப்பசியைப் போக்கவேண்டிய நிர்பந்தமிருக்கிறது. வயிறுகளைக் கிள்ளியெடுக்கக்கூடிய பொறித்தல்களுமிருக்கிறது. சிவக்கச்சிவக்க மண்டிய எண்ணெயில் ஊறிய மாமிசத்துண்டுகளை கண்ணாடிப்பெட்டிக்குள் வைத்து வருவோர் போவோர்களை சுண்டியிழுக்கும் தந்திரம் படைத்தவர்களாயிருக்கிறார்கள் தள்ளுவண்டி தாதாக்கள்.
இடதுபுறமாகச் செல்லவேண்டும். வாகாக ஒரு ஆட்டோ பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்தது. கன்னத்தில் கைவைத்தபடி பயணிகளை ஏறவிட்டுப் பார்த்துக்கொண்டிருந்த ட்ரைவர் என்னைப் பார்த்ததும் அவர் போகிற திசையைச் சுட்டி என்னையும் கூர்ந்து கேட்டார். ஆமாமென்றவள் அதன்பின்னரே நடையில் வேகத்தைக் கூட்டினேன். சில எட்டுகளில் பிடிக்கவேண்டியதுதான் என்றாலும் ஆட்டோக்காரன் சமிஞை காட்டிவிட்டால் அதன்பிறகு எங்கிருந்து வந்து தொற்றிக்கொள்கிறதோ நடக்கிற நடைக்கு நாணயம். ஆட்டோவில் இடமில்லாததைப் போலிருந்தது. ஒருவரையொருவர் இடுப்புகளை நெரித்து உள்ளிருத்துக்கொண்டு வரிசையை ஒழுங்குபடுத்தி இறங்கும் முனையில் இடத்தை ஒதுக்கிவிட்டார்கள். ஏறி எனது இடுப்பையும் இடத்திற்கேற்றவாறு நெளித்துக்கொண்டேன். நெளிகிறபொது கீழ்வரிசையில் காலருகே அமர்ந்திருந்தவளின் சேலைத்தலைப்பில் கையோ காலோ ஏதோவொன்றுபட சாரி என்றேன் ஸ்டைலாக. பல வருடங்களுக்குப் பிறகு இந்த சாரி எப்படி இவ்வளவு நளினமாக உச்சரிக்கப்பட்டதென்று தெரியவில்லை. ஆனால் பரவாயில்லையென்கிற அவளது சிரிப்பில் சாரி கரைந்து போனது .எதிரே மேல்வரிசையில் புர்காக்களை அணிந்த பெண்கள் அடுத்தடுத்து அமர்ந்திருந்தார்கள். ஒருத்தி பிச்சிப்பூக்களை தொடுத்தபடி காட்சியளித்தாள். அவளால் எப்படி மேடுபள்ளங்களை பூக்கட்டுகிற நூலால் சுழிவில்லாமல் கடக்கமுடிகிறதென்று தெரியவில்லை. ஆனால் அவளது வேலைப்பாட்டில் தரமிருந்தது. எங்கும் எதிலும் அவளது கவனம் சிதறடிக்கப்படவில்லை. ஆட்டோ அடுத்து இறங்கப்போகிற நிறுத்தத்திற்கு சீராக விரைந்துகொண்டிருந்தது.
பரவை வந்ததும் ஆட்டோவிலிருந்து இறங்கிக்கொண்டேன். இடப்புறத்திலிருந்து வலதுபுறம் மாறிக்கொண்டேன். ப்ரொஃபஷ்னல் கொரியர் அங்குதானிருக்கிறது.கொண்டுவந்த பார்சலைக் கொடுத்துவிட்டு அதை ஒட்டித்தர அனுமதித்தேன். கடைக்காரரும் டேப்பைச் சுற்ற ஆரம்பித்தார். முகவரிகளுக்காக பார்சலின் நடுவில் அகன்ற சதுரத் திறப்பொன்றை விட்டுவிட்டு இரண்டுபுறமும் டேப்பால் தூண்களிட்டுவைத்தார். அது ஏதோ க்ராண்ட் ஓபனிங்கிற்கு அழைப்பு விடுப்பதற்கு வைக்கப்பட்ட அலங்கரிக்கப்பட்ட அறிவிப்புப் பலகை போலிருந்தது. முகவரிகளை உரிய இடங்களில் பதித்ததும் கடைக்காரர் பில் போடுவதற்குக் காத்திருந்தபோது,
“நீங்கதான் இத எழுதுனதா?”
“ஆமா”
“இதுக்க முன்ன வீட்லர்ந்து கொரியர் அனுப்ப வந்திருக்காங்க பாத்ருக்கேன் “
படித்தவர்களுக்கும் படிக்காதவர்களுக்கு ஒரு வேறுபாடிருக்கிறது. அது அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட இடத்தில் உட்கார்கிற தோரணை. பரபரப்பான சாலையோரம் கடைமுன்பு போடப்பட்டிருக்கும் பார்சல்களுக்கான டேபிளின் இடதோரப் ப்ளாஸ்டிக் சேரில் இன்டலக்சுவலாக அமர்ந்திருந்தேன். இன்னொருவர் நமக்காக வேலை செய்துகொண்டிருக்கும்போது வேடிக்கை இருக்கிறதோ இல்லையோ அங்கு ஒரு காத்திருப்பு அபூர்வமாக நிகழ்ந்துவிடுகிறது. அந்தக் காத்திருப்பில் மனமும் உடலும் எப்படி ஒன்றி வார்க்கப்படுகிறதோ தெரியாது. ஆனால் அது அபூர்வநிலை. வார்ப்புநிலையிலிருந்து ஒரு கலைப்பிற்குத் தன்னைத் தயார்படுத்திக்கொள்ளும் நிஜ உலகிற்கு நிதானமாகவே வரமுடிகிறது. கடைக்காரரைப் பற்றி யோசித்தேன். எப்படி இவரால் கொண்டுவந்திருக்கும் பார்சலினுள் என்ன இருக்கிறதென்று உறுதியாகச் சொல்லமுடிகிறது. கொரியர் கடைக்குப் பக்கத்தில் வத்தல்கள் விற்கும் கடையொன்றை வைத்திருக்கிறார் பெரியவர். கொரியர் அலுவலகம் மகனுடையது. ஒருமுறை பார்த்திருக்கிறேன். அப்போது கடையில் ஆள் இல்லை. யாருக்கோ அழைத்து வரச்சொல்கிறபோது கவனித்தேன். பார்சலுக்கான பில் விபரங்கள் கேட்டுத்தெரிந்துகொண்டிருந்தார். அதோடு சற்று தேரத்திற்கெல்லாம் கடை உரிமையாளரான மகனும் அங்கு வந்து சேர்ந்திருந்தார்.
உரச்சாக்குப் பைகள் ஒவ்வொன்றும் தலையற்ற முண்டங்களாக கழுத்தைத் திறந்திருந்தன.ஒன்றில் மிதுக்கு வத்தல், ஒன்றில் கத்தரிக்காய், ஒன்றில் சுண்டக்காய், ஒன்றில் சீனிஅவரை. வத்தல்களைப் பார்த்தபிறகு வந்தவேலையும் முடிந்து கிளம்பிவிட்டேன். மீண்டும் ஆட்டோவிற்குக் காத்திருந்தால் ஏதோ நினைவாக கடையை ஏறிட்டேன். பெரியவர் என்னதென்று கேட்க முனைந்தார். ஒன்றுமில்லையென திரும்பிக்கொண்டேன். நடைமேடையைவிட்டுக் கீழிறங்கிக்கொண்டேன். ஆட்டோவிலேறியதும் தன்னந்தனிமை சூழத்தொடங்கியது. ஆட்டோ மதுரை பெரியார் பேருந்து நிலையத்தை நோக்கிப் பயணமாகியது. ஆட்டோ நேராக பழைய பெரியார் பேருந்து நிலையத்திற்கு சாலை வளையுமிடத்தில் இடதுபுறமாக போக்குவரத்தை ஒழுங்கு செய்யும் காவலர் இருப்புப் பகுதியில் நின்றது. நான் போகவேண்டிய வீதியைக் கடந்து சற்று தூரமாகவே வந்துவிட்டேன். மேலப்பெருமாள் மேஸ்த்திரி வீதி திரும்புமிடத்தில் பழக்கடையில் ஜூஸ் குடித்தால் தேவலாமென்றிருந்தது. திட்டமிட்டு வந்த காரியத்திற்கு சிறிது தெம்பும் வேண்டும்.
1843 ,மேஸ்திரி வீதி தீர்ப்பு வந்தபின்னர் மாவட்ட ஆட்சியருக்கு உதவியாக துணைநிலை ஆய்வாளர் மாரட் என்பவர் நியமிக்கப்பட்டார். பிளாக்பர்னுக்கும் மாரட்டுக்கும் பெருமாள்பிள்ளை என்பவர் உதவியாக இருந்தார். வீதிகள் அமைக்கும் பணிக்கு மேஸ்திரிகள் நியமிக்கப்பட்டார்கள். பெருமாள் பிள்ளை வீதிகள் அமைக்க உதவியதால் அவருடைய பெயரிலும் வீதிகள் அமைக்கப்பட்டன. மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி ,வடக்குபெருமாள் மேஸ்திரி வீதி, கீழப்பெருமாள் மேஸ்திரி வீதி என உருவாக்கப்பட்டது.
பழக்கடையில் ஏறுகிறபோதே ஜூஸைத் தேர்வுசெய்து பில்கவுண்ட்டரில் பணம் செலுத்தினேன். ஆரஞ்சு ஜூஸ் என்றால் பசியைக் கட்டுப்படுத்தும். ஒருமுறை போத்தீஸில் தீபாவளிக்குத் துணியெடுக்கப் போயிருந்தபோது எல்லோரும் அவரவர் பங்கிற்கு பழச்சாறுகளை ஆர்டர் செய்ய எனக்கு ஆரஞ்சு ஜூஸ் சொல்லியிருந்தேன். அரைநாள் ஓடியிருக்கும் போத்தீஸில். பசிக்கவேயில்லை.
ஸ்ட்ரா இல்லாமல் கொடுத்தார் பழச்சாறைத் தயாரித்தவர். பிறகு கடை உரிமையாளரிடம் கேட்டு வாங்கிக் குடித்துக்கொண்டிருந்தபோதுதான் கவனித்தேன். கடையில் ஜூஸ் வாங்கியவர்களெல்லாம் ஸ்ட்ரா இல்லாமல் பரபரப்பான சாலையைப் பார்த்தபடி கண்களை க்ளாஸின் விளிம்பிற்கு மேல் திறந்தவாறு உறிஞ்சிக்கொண்டிருந்தார்கள். நான்குபேர் இருக்குமிடத்தில் நானொன்றும் புதுமையாக எதுவும் கேட்டுவிடவில்லையென்றுபட்டது. வலதுபுறமாகப் பார்த்தால் செருப்புத் தைக்கிறவர் பெண்ணின் பிங்க் நிறத் தோல்செருப்பை தைத்துத்துக்கொண்டிருந்தார். செருப்பைக் கொடுத்தவள் பராக்கு பார்த்தபடி தனக்கும் அதற்கும் தொடர்பில்லாதவளாக நின்றிருந்தாள். எல்லோருக்கும் அந்தச் சாலையின் மீது அப்படி எதற்குத்தான் கண்கள்?! ஒரு கணம் கூட தன்னைச் சுற்றி நடக்கிறதை நின்று வேடிக்கை பார்க்கும் எண்ணம் சுதந்திரம் யாருக்குமில்லை. எங்கோ போகிறார்கள் வருகிறார்கள். தானும் அதே பாதையில் போகிறேனென்கிற கணக்கில் ஒருவருக்கும் வேடிக்கைக்கான அர்த்தம் பிடிபடவில்லை. சொல்லப்போனால் பிடிக்கவில்லை. செருப்புத் தைப்பவரைக் கடந்துசெல்ல மனமில்லை.
வழக்கமாகச் சென்னை சில்க்ஸ் செல்லும் மேற்கு மாரட் வீதி வழியில் நடக்கத் தொடங்கினேன். மாரட் வீதிகள் பிளாக்பர்னின் உதவியாளராக நியமிக்கப்பட்ட மாரட் என்பவரின் பெயரால் உருவாக்கப்பட்ட வீதிகள் என்பதை வாசகர்கள் நான் சொல்லித் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. புதிதாக இவ்வழியிலும் போக்குவரத்து துரிதமாகியிருக்கிறது.முன்பானால் இவ்வழியில் நடப்பவர்கள் மட்டுமே.அதோடு வழியின் இடதுபுறம் மாலைக்கடைகள், பேக் தைப்பவர், துரித உணவுக்கடைகள், மசாலாக்கள், சிவக்கத் தொங்கிக்கொண்டிருக்கும் முழுக்கோழிகள், வலதுபுறமென்றால் வரிசையாகத் தங்கும் விடுதிகள், இடையில் மதுரை மீனாட்சி மஹால் .அந்த ஹாலில் திருமணங்கள் மற்றும் அவ்வப்போது இலக்கியக் கூட்டங்கள் நடப்பதுண்டு. எதிர்வருகிற பேருந்துகளையும் மகிழுந்துகளையும் கடந்து முன்னேறுவது அசாதாரணமாகயிருந்தது. இதில் கீழே துப்பிக்கிடக்கிற எச்சில்களையும் கவனமாகப் பார்த்து தாண்டிச் செல்லவேண்டும். டவுன்ஹால் வீதி பிரியுமிடத்திலும் இப்போது போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் காவலர்கள்.
சென்னைசில்க்ஸ் போகவேண்டுமென்றால் போகிற வழியில் அந்த பெரிய பேக் கடையை மீனாட்சிபவனைக் கடந்து போவது இதர பழசான நடைமுறைகளோடு ஒன்றாகிப்போன வழக்கங்களுள் ஒன்றெனப்படுவது. சலிப்புத் தட்டாமல் திரும்பத்திரும்ப ஓரிடத்திற்குப் போகிறொமென்றால் போகிற வழியில் எவ்வித நகர்வுகளுக்கும் மாற்றங்களுக்கும் உள்ளாகாத கட்டிடங்களை என்னதான் செய்வது. பாத்திரம் துலக்கும் எந்தவிதமான நூதன தூய்மைப்படுத்தும் காரணியை வைத்தும் கழுவிக் கவிழ்த்துவிட முடியாது. பேக் கடைக்கு முன்பமர்ந்து கண்தெரியாதவர்கள் பிச்சையெடுத்துக்கொண்டிருப்பார்கள். அவர்களிடமிருந்து ஏதாவது வாசனை வருகிறதாயென்று அனிச்சையாகத் தோன்றக்கூடிய நாசியை அழித்துவிடமுடியாது. ஆனால் பாடல் ஒலிக்கும். சிலநேரங்களில் நிதானித்துக் கடப்பேன். உண்மையில் அவர்களது குரல்தானா ஒரு பாடலுக்கு இவ்வளவு இனிமை சேர்க்கிறதென்று. இன்றும் அதே பாடகர்கள்.அவர்கள் ஆண் பெண். இருவரும் அமர்ந்திருந்தார்கள். இருவரையும் கடக்க முயல்வதற்குள் ஆண்பாடகர் அவருக்கு எதிர்ப்புறமாக நடந்துசெல்லும் ஒருவரையழைத்து நலம் விசாரித்தபடியிருக்கிறார். நானாவது அவரது இருப்பிற்கு அருகே நடக்கிறேன். நலம் விசாரிக்கப்பட்டவரோ எங்களிருவருக்கும் எதிரே வலப்புற ஓரத்தை ஒட்டி நடந்துசெல்கிறார். இம்முறை உண்மையில் இவரால் எப்படி தனக்குத் தெரிந்தவரை சிறிது தொலைவிலும் துல்லியமாக அழைத்துப் பேசமுடிகிறதென்று நின்றுதான் போனேன். சென்னைசில்க்ஸ் கடையிருக்கும் பிரதான வளைவில் திரும்பினேன். வலப்புறம் தொடங்குகிறபோதே அசைவ உணவுக்கடைகள். அசைவ உணவுகளின் தூக்கல் மசாலாக்கள். இரண்டு மூன்று கடைகள் வரிசையாகயிருக்கும். அவற்றில் ஒன்றில் ஒருமுறை இரவு உணவிற்கு தோழர்களோடு அமர்ந்திருந்தேன். கறிதோசையை என்னவென்றே தெரியாமல் ஆர்டர் செய்துவிட்டுக் காத்திருந்த காத்திருப்பு சொல்லி மாளாது. அரைமணி நேரமாகியிருக்கும். இரவு பத்தரை மணியாகிவிட்டால் வயிற்றுக்குள் இருக்கும் அலாரத்திற்கெல்லாம் மதிப்பே கிடையாது. மூளைக்குள் பெண்டுலம் விழத் தொடங்கி ஆடிக்கொண்டிருக்கும். அதுவும் இடம் வலமென்றெல்லாம் இல்லாமல் ஒரே திசையில். காற்றடிக்கும் திசைக்கு எதிர்ப்புறம் என்ன நிலையோ அதுவே.
தோசை வார்த்து வருவதற்குள் சர்வரையழைத்து வேண்டாமென்றேன். அவரோ அரைவயிறு நிறைந்தவராக,
“ந்தா வந்துரும்”
ஆளையே காணவில்லை. பிறகென்ன அது வந்து ருசித்துச் சாப்பிட்டபிறகே கிளம்பினோம். அன்றிலிருந்துதான் கறிதோசை மீது அலாதிப் பிரியம்.அதன்பிறகு ஒருமுறை மீன்கறிதொசை ஆர்டர்செய்து சாப்பிடமுடியாமலே போனதொரு கதை.
அப்படியே இந்தத் தெருவில் நடந்தால் சபரீஸ் ஓட்டல் வரும்.விலையும் பரவாயில்லை. உணவும், வாடிக்கையாளர்களை கவனிக்கும் விதமும் தரமானதாகவேயிருக்கும். எப்பொழுதெல்லாம் சென்னைசில்க்ஸ் வருகிறோமோ சபரீஸ் பெஸ்ட் சாய்ஸ். யோசிக்காமல் சட்டென்று முடிவெடுக்கச் சொல்லும் சாப்பிட்ட நிறைவு.
சென்னை சில்க்ஸை நெருங்கிவிட்டேன். குமரன்ஸ்ரீ தங்கமாளிகைக்கு கீழேயே நுழைவிருக்கிறது. இடதுபுறமாக ஜவுளிக்கடை நுழைவும் வலதுபுறமாக நகைக்கடை நுழைவும் திறக்கப்பட்டிருக்கும். கடைக்குள் ஆசுவாசமாக நுழைய வாசலில் வரவேற்பாளர்கள் பெண்களாக நிற்க அவர்களிடம் மூக்குத்தி செக்ஷன் விசாரித்தேன்.
“இங்க குத்துவாங்கல்ல
இங்க வாங்குனா இங்க குத்துவாங்க
இங்கதான் குத்தப்போறேன்.”
பதிலிறுத்தியவள் ஒருமுறை கூர்மையாகப் பார்த்துவிட்டு சந்தேகமாய்த் திரும்பினாள். இன்னொரு பக்கமும் குத்தப்போவதாகச் சொல்லிவிட்டு அவர்களிடமி்ருந்து நழுவி முதல் தளத்திற்கு ஏறத் தொடங்கிவிட்டேன்.
முதல் தளத்தில் வெள்ளி செக்ஷனையடுத்து மூக்குத்தி பாக்கனுமென்று விற்பனைப் பிரதிநிதியொருவரிடம் கேட்டவாறு டிஸ்பிளேகளுக்கு முன்பு போடப்பட்ட இருக்கையில் அமர்ந்தேன். டைமண்ட்… என்று இழுத்தவர்களை என் பக்கமே இழுத்துவந்தேன். மூக்குத்தி ட்ரேயையெடுத்துக் காண்பித்தார்கள். முதலில் கண்ணில்பட்டது முத்து மூக்குத்திதான். என்னவோ சின்னதாக எடுப்பாக உறுத்தியபடியேயிருந்தது. ஏதேதோ பேச்சுக்கொடுத்தார்கள். அவர்கள் முன்பு உண்மையைப் போட்டு உடைத்தேன். இரண்டாவது மூக்குத்திக் குத்திக்கொள்ளப்போவதாக. ஒரு பெண்,
“ட்ரெடிஷனல ஃபாலோ பன்றீங்களா மேடம்?”
“அப்டியில்ல தொடர்ந்து பயங்கரமா ஆச… குத்திக்கனும்னு…”
முகம் முழுக்க மலர்ந்து திருவாயருளி முடிப்பதற்குள்,
“கல்யாணமாயிடுச்சா?”
“இன்னும் இல்ல”
“இன்ட்ரஸ்ட்டா இருக்கீங்க…குத்திட்டு வந்து காட்டிட்டு போங்க”
பல்வரிசைகள் தெரிய முறுவலித்தாள். அவளும் கூர்ந்து ஒரு பார்வையைப் பதியவைத்திருந்தாள். மூக்குத்தியை வாங்கிவிட்டு நேராக ஆசாரியிடம் அழைத்துச் சென்றாள் ஒருத்தி. லேசாக பயம் தட்டியது. வலிக்குமோ?!
ஏதோ பில் வேலையாக நின்றிருத்தவர் அவருக்கென்று ஒதுக்கப்பட்ட சிறு ரகசியப்பகுதியை வந்தடைந்தார். முன்பே போய் அமர்ந்திருந்தேன் விற்பனைப் பிரதிநிதியோடு. அவளிடம் ஓரிரு முறைகள் பயத்தை வெகுளியாக வெளிப்படுத்தியவாறு முறுவலித்தேன். எனக்கு அப்போது அவளது சப்போர்ட் வேண்டும்.
நினைத்தது போலில்லை. ஆசாரி மூக்குக் குத்தும் ஊசியில் ஜெல் போன்ற எதையோ தடவினார். அதோடு மூக்குத்தியைச் செருகிக் குத்திவிட்டார். குத்தியதே தெரியவில்லை. வலி இருப்பது போலுமில்லை. இல்லாதது போலுமில்லை. மதமதத்ததுபோன்ற உணர்வு.
“உங்களால முடிஞ்சது ஏதாவது குடுத்துட்டுப் போங்க”
வாய்க்குள்ளேயே முனகியபடியிருந்தார். யோசித்தவாறே,ஃப்ரீ தானே?!. சரி நூற்றியொன்றைக் கொடுப்போமென்று சமாதானமானேன். காசைக் கொடுத்துவிட்டு கீழே அமர்ந்திருந்தவளிடம்,
“நீங்க குத்தலயா ரெண்டு பக்கம்மே குத்தல?!”
துணைக்கு அவளையும் சேர்த்துக்கொள்ள விரும்பினேன்.
“அது…இன்ட்ரஸ்ட் இல்ல…இப்டியே விட்டாச்சு”
அம்மாஞ்சியாகத் தெரிந்தாள். முகத்தில் வயது ஏறிப்போனதற்கான முதிர்வுப் புள்ளிகள் தெரிந்தன.
கடையைவிட்டு வெளியேற நுழைவில் மீண்டும் அதே பெண்கள்.
“மேடம் குத்தீட்டிங்களா…சூப்பர் மேடம்…”
இன்னொருத்தி
“வித்யாசமா இருக்கு..வளையம் மாதிரி வாங்கிப்போட்டுக்கங்க”
முதலாமவள்
“ஏன் நீ வாங்கித் தர்றியா”
இருவருக்குள்ளும் விவாதம் ஓடிக்கொண்டிருக்க,படிகளைவிட்டு மெல்லக் கழன்றபடி நடக்க ஆரம்பித்தேன். எதிர்ப்படுவர்களின் முகங்களில் எந்த மாற்றங்களும் விளைவுகளுமில்லை. யாரும் என்னைப் பார்த்ததுபோன்று தெரியவுமில்லை. யார் என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் நினைக்கவில்லை. குறைந்தபட்சம் யாராவது கவனித்து ஏதாவது பாவிக்கிறார்களாயென்றுதான் நடந்தபடியே வந்தேன். ஒருவர் கண்ணிலும் படவில்லை.
*****
இன்னொரு நாள் முதன்முதலாக இரட்டை மூக்குத்திகளுடன் ஜனகை மாரியம்மன் கோயிலுக்குச் செல்ல பேருந்திற்காக நிறுத்தத்தில் காத்துக்கொண்டிருந்தேன். அப்போது மின்கம்பத்தை சரிபார்த்துக்கொண்டிருந்தவர்களில் ஒருவர் தொடர்ச்சியாகப் பார்வைகளைச் செலுத்தியபடியிருந்தார். நிறுத்ததில் எல்லோருமே பார்த்தபடி விளைவுகளோடான முகங்களோடிருந்தார்கள். வழக்கமாக பேசியல் செய்துவிடுபவள் தன் பிள்ளைகளை ஸ்கூட்டியில் ஏற்றிக்கொண்டு எதேச்சையாகப் பார்த்து கைகாட்டியபடி விரைந்தாள்.அவள் பார்த்திருக்க வாய்ப்பில்லை. உறுத்தலாகப் பட்டது. யார் கவனிப்பதையும் பொருட்படுத்தாமல் ஊசலாடிபடியே காத்துக்கொண்டிருந்தேன்.

க.சி.அம்பிகாவர்ஷினி.
“தேக்குமரப் பூக்களாலான மீச்சிறு மேகமூட்டம்”, “இந்த இரவு ஒரு சிறிய நூலகம்” ஆகிய கவிதைத் தொகுப்புகளும் “சிதைமுகம்” எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளியாகியுள்ளது.