(GOAL)
Greatest of All Love
அன்று ஞாயிற்றுக் கிழமை…
வழமையாக பரபரப்பாக இயங்கும் நகரின் பிரதான சாலைகள் யாவும் இளங்காலைப் பனியைப் போர்த்திக் கொண்ட பச்சைக் குழந்தையைப் போல் படுத்துக் கொண்டிருந்தது.
பள்ளிக் குழந்தையை தட்டி எழுப்பும் பெற்றோரைப் போல், கத்தி எழுப்பும் கடிகார மணிகள் இன்று கேட்பாரற்று கத்தியது, அதன் தலையில் ஓங்கிக் குட்டி அதனை தடுத்து நிறுத்தினான் முகிலன்.
தனியார் வங்கி ஒன்றில் நிர்வாக அலுவலராக பணியாற்றும் முகிலனுக்கு.
இன்று…
அவன் வாழ்வில் என்றுமே! மறக்க முடியாத நாள், ஆனால் அவன் அதைப் பற்றி அறியாதவன்போல் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறான், கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை இந்நாளை நினைத்து உள்ளம் உருகிக் கொண்டிருந்தான்.
இன்று…
அவனது கண்ணியத்திற்குரிய காதலி கயலுக்கு கல்யாணம்…
‘கயல்’..
தன் மூச்சுக் காற்றோடு அவன் நேசித்த முன்னாள் காதலி, தன் விழிகள் படர்ந்த திசை முழுதும் அவளின் பிம்பத்தைக் கண்டவன், இன்று அவள் இன்னொருவனின் கரம் பிடிக்கப் போகும் நாளறிந்தும் துக்கம் ஏதுமின்றி ஆழ துயில் கொண்டிருக்கிறான்.
ஒரு வருடத்திற்கு முன்னால்…
கடற்கரைப் பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காக காத்திருக்கும் போதுதான் தனது பருந்து கண்களால் அவளைக் காண்கிறான், கண்டபோழ்தில் இதயத்தில் பற்றிக் கொள்பவர் வெகுசிலரே! அந்த வெகுசிலரில் சிறப்பான முதல்வளாய் அவள் தெரிந்தாள்.
தூரத்தில் தெரியும் கடலலைகளை காற்றில் பறக்கும் அவள் கூந்தல் கட்டிப்போட்டது, கடலிலிருந்து துள்ளி வந்த ஒரு மீன் அவள் கண்குழிக்குள் விழுந்து கண்களானதோ! என எண்ணத் தோன்றியது.
பச்சை வண்ண சேலை உடுத்திய அவள், கடற்கரையோர வானவில்லாய் கண்களில் விழுந்தாள், வீசும் காற்றெங்கும் அவள் வாசமே! விஞ்சி நின்றது, மொத்தத்தில் அவள் ஓர் கடலோர கவிதையாய் தெரிந்தாள் அவன் கண்களுக்கு.
எல்லா இளைஞனின் உள்ளத்துள் குடியிருக்கும் ஓர் யுவமங்கைப் போல், அவனுக்குள் குடியிருந்த ஓர் கனவுப் பதுமையாய் காட்சி தந்தாள் அவள்.
யார் இவளோ..!!!.
ஏன் என்னிதயம் இவளைக் கண்டதும் பட்டென பற்றிக் கொண்டது, ஓர் இனம்புரியாத இனிய உணர்வுகள் அவனுள் பீறிட்டு எழுந்தன.
இனி…
ஒவ்வொரு தினமும் அவளுக்காக எழுந்தான், அவளுக்காக நறுமணம் பூசிக் கொண்டான்,அவளுக்காக அழகானான், தன்னை அவளுக்காகவே மாற்றலானான்.
இது எத்தனை நாள் தொடர்வது…
பிடித்த ஒன்றை நாம் விரும்பி விட்டால் அதனை வாங்கிப் போவோம் அல்லவா, அப்படித்தான் அவனுக்குள்ளும்…
ஆனால்…
அவள் எப்படிப் பட்டவள்?, அவளின் குணமென்ன?, ஒருவேளை இத்துனை புறஅழகை தன் புறத்தே கொண்டுள்ளவளின், இதயம் பூவின் மென்மையைக் கொண்டிருக்குமா?, இல்லை புயலின் வீரியம் கொண்டிருக்குமா?, புரிந்து கொள்ள வேண்டாமா!!!! என எண்ணினான்..
அந்தப் புண்ணியவதியைப் பற்றியறிய புறப்படலானான்..
இன்று…
அவன் கண்ட காட்சி …
அவனுக்குள் ஆயிரமாயிரம் ஆபரணங்கள் பூட்டியது, அவள் பற்றிய அவன் மதிப்பீடுகள், வானில் பறந்து திரியும் விண்மீன்களின் ரெக்கைகளைப் போல விரிந்து உள்ளமெங்கும் படர்ந்தன.
அங்கே!…
வழக்கமாக வரும் பேருந்து நிறுத்தத்தில் அவள் நின்று கொண்டிருக்கும்போது கையில் சிறு குழந்தையுடன் யாசகம் கேட்டு வந்த பெண்ணொருத்தி தான் யாசித்து பெற்ற உணவுப் பொட்டலத்தைப் பிரித்து அவளருகே அமர்ந்து தன் பிள்ளைக்கு ஊட்டிக் கொண்டிருந்ததையே பாச விழிகளோடு பார்த்து கொண்டிருந்தவள் சட்டென அப்பிள்ளைக்கு புரையேறியதைக் கண்டு துடித்துப் போனாள்,
உடனே தனது கைப்பைக்குள் இருந்த தண்ணீர் பாட்டிலைக் கொடுத்து குழந்தைக்கு கொடுக்கச் செய்தாள், பிறகு ஆசுவாசமாக குழந்தை நீரருந்துவதையே பார்த்துக் கொண்டிருந்தவள், தன் விழியோரம் துளிர்விட்ட கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அருகே இருந்த பெட்டிக் கடையில் சிறிது திண் பண்டங்களும் அப்பெண்ணிற்கு உணவும் வாங்கித் தந்து மகிழ்வுற்றாள்,
இதனையே தூரமாய் நின்று கவனித்துக் கொண்டிருந்த முகிலனிடம், பூவைப் போல் அவளிடம் தெறித்து விழுந்த இந்த மனித நேயச் செயல்கள் அவளைப் பற்றிய நல் அபிப்ராயங்களை அள்ளித் தெளித்தது..
0O0
ஒரு திங்கள் கிழமை…
காலை பத்து மணிக்கு சுறுசுறுப்பாக அலுவல் பணியில் ஈடுபட்டிருந்தவனின் கண்கள் எதேச்சையாக வாசலை நோக்கியது…
அங்கே!..
அவனின் கனவுலக கடற்கரை தேவதை வந்து கொண்டிருந்தாள்…
வந்தவள் கைகளில் ஒரு பாட்டியை கைப் பிடித்தவாறே! வந்து கொண்டிருந்தாள். அதைக் கண்டதும் முகிலனின் கண்களில் ஆயிரம் மின்னல்கள் மின்னி மறைந்தன, மனதுக்குள் ஆகாய தாமரை பூத்தது…
இவள் எதற்காக இங்கு வந்து இருக்கிறாள்?..அந்த பாட்டி யாராக இருக்கும்?.. அவளின் பாட்டியா?, வேறு யாரையும் பார்க்க வந்து இருக்கிறாளா?, இப்படியாக மனதுக்குள் ஆயிரம் கேள்விகளை இடைவிடாது அவனது இதயம் கேட்டுக் கொண்டே துடித்தது, எப்படியாயினும் அவளுக்கு உதவ வேண்டும் என ஆழ்மனது துள்ளியது.
சீட்டை விட்டு எழுந்தவனை சுயகவுரவம் தடுத்தது, பிறர் ஓர் அழகுப் பெண்ணைக் கண்டதும் தான் வழிவதாக எண்ணி விடக் கூடாதே!, கையைப் பிசைந்தவாறே! மீண்டும் அமர்ந்தான்…
இருக்கையில் அமர்ந்தபடியே ஓரப் பார்வையால் அவளின் செயல்களை நோட்டமிட்டான்..
வங்கியின் வாசலை அடைந்தவள்…
அங்கு இருந்த வங்கிக் காவலாளியிடம் ஏதோ! கேட்டுக் கொண்டிருந்தாள்..
அந்த காவலாளியோ! அங்கு பணி புரியும் வேறொரு பெண்ணைக் கைகாட்டி ஏதோ கூறிக் கொண்டிருந்தார்…
இப்போது! அவனுக்கு காவலாளியின்மேல் எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது..
என்ன மனுஷன் இந்த ஆள் இந்த தருணத்திற்காக காத்து கிடக்கும் என்னிடம் அனுப்பாமல் வேறொரு பெண்ணிடம் அனுப்புகிறாரே என கோபமாய் சபித்துக் கொண்டான்..
நேரே! கைப் பிடித்து வந்த பாட்டியை வங்கிக்குள் கிடந்த ஒரு இருக்கையில் அமர வைத்துவிட்டு காவலாளி சுட்டிக் காட்டிய பெண்ணிடம் சென்றவள் ஏதோ கேட்க..!..
அப்பெண்!.. படுபிஷியாக இயங்கிக் கொண்டிருந்தவள் அவளை ஏறெடுத்து பார்க்காமல், சட்டென முகிலன் அமர்ந்து இருக்கும் இருக்கையை கைகாட்டி அவளை அனுப்பி வைத்தாள்..
இதைக் கவனித்துவிட்ட முகிலனின் மனதுக்குள் மத்தாப்பு பற்றிக் கொண்டது, தென்றல் தன்னை நோக்கி வருவதைப் போல் சிலிர்த்துப் போகலானான். தனை நோக்கி வருபவள் தன்னிடம் என்ன கேட்கப் போகிறாளோ?..
அவளுக்கு தாம் எப்படி உதவப் போகிறோம்! என எதிர்பார்ப்பில் திக்கு முக்காடினான்..
ஆம் அது நடந்தே! விட்டது …
படுவேகமாய் துடித்த அவன் இதய ஓசையிடையே அந்த ஓசை கேட்டு விட்டது…
எக்ஸ்கியுஸ் மீ சார்…!
கிளியின் கொஞ்சலாக அவனது செவிக்குள் இறங்கிய அந்த வார்த்தைகள் இதயத்துக்குள் இறங்கி இனித்தது, இதுவரை தூரமாக நின்று அவளை ரசித்தவன்…
இப்போது முதன்முறையாக அவளருகே அவன் இருந்தும் அவளை ரசிப்பதற்குப் பதில் கண்கள் கூச்சத்தால் நெளிந்தது. சற்று சிரமப் பட்டு அவனிடமிருந்து வார்த்தைகள் வந்து விழுந்தன…
எஸ்…
ஹவ் குட் ஐ ஹெல்ப் யூ மேம்…ஒருவழியாக சொல்லிவிட்டான்…
அவள் இப்போது தொடர்ந்தாள்…
“சார், இந்த பாட்டிக்கு முதியோர் உதவித் தொகை வருதாம் அத எப்படி வாங்குவதுன்னு இவங்களுக்கு தெரியலை கொஞ்சம் சொல்ல முடியுங்களா சார்”…
அவளிடமிருந்து வந்த ஒரு வார்த்தைக்கே திகைத்துப் போனவன், இத்தனை அடுக்குகளாக அவளிடமிருந்து வார்த்தைகள் வந்து விழுந்ததும், உள்ளம் தாண்டவமாடியது ..
கொஞ்ச நேரம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் இப்போது சற்று சுதாரித்துக் கொண்டு, லேசாக புன்னகைத்தவாறே!
“ஓ ஸ்யூர் மேம்”.
“பாட்டி உங்க பாட்டிங்களா” என்றான்.
“இல்ல சார்…இவங்க யாருன்னு தெரியாது சார்”.
“காலேஜ்க்கு போய்க் கொண்டிருந்தேன் திடீர்னு வந்து உதவி கேட்டாங்க அதான் அழைச்சிட்டு வந்தேன்” இதைக் கேட்டதும் முன்பு அவள்மேல் இருந்த நல் அபிப்ராயங்கள் அவனுக்குள் மேலும் இரட்டிப்பாகியது.
என்ன ஒரு மனித நேயம்..!! மனசின் பெரும் பகுதியை இப்போது அவளது மதிப்பீடே ஆக்கிரமித்து இருந்தது.
“திஸ் ஈஸ் கிரேட் மேம்”…என்றான்.
“தேன்க் யூ சார்..இட்ஸ் பிளசர் பார் மீ சார்” என்றாள்…மெல்லிய புன்னகையுடன்..
அவளுடன் உரையாடும் நேரம் இன்னும் இன்னும் கிடைக்காதா! என ஆவல் மேலோங்க.
“நீங்க எந்த காலேஜ்ல படிக்கிறீங்க”…
இதைக் கேட்டதும் அவள் சிரித்தாள், அவன் ஒன்றும் புரியாதவன்போல் விழிக்க அவள் தொடர்ந்தாள்….
“சார் நான் காலேஜ்ல’லாம் படிச்சு ரொம்ப நாள் ஆச்சு”, அவன் இப்போது மேலும் குழப்பமாகி…
“இப்போதானே சொன்னீங்க காலேஜ் போய்க்கிட்டு இருந்தேன்னு”.
“ஓ அதுவா! சார் காலேஜ் படிக்க மட்டுமில்ல, பாடம் நடத்தவும் போலாமில்ல”…
“எஸ்…நான் காலேஜ்ல லெக்சரரா இருக்கேன் சார்”, இப்போது அவனது கண்கள் விரிந்து அவள் மேல் கவுரவம் கூடியது..
“ஓ நல்லாவே பாடம் எடுக்குறீங்க மேடம்”.
“தேங்க்ஸ் சார்”..
சம்பிரதாயமாக கேட்பதைப் போல் அவள் பெயரைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் இருந்தான் இருப்பினும் அவள் தப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாதே என்ற பயத்தில் இப்படிக் கேட்டான்..
“உங்க பேரைத் தெரிஞ்சுக்கலாமா மேம்!”
“எங்க பேங்க்ல உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கா மேம்.”
“எஸ் சார் என் பெயர் கயல்விழி”.
“எனக்கு இங்க அக்கவுன்ட்லாம் இல்ல சார், தப்பா எடுத்துக்காதீங்க சார் …ஒரு கேள்வி கேக்கலாமா?”
என்ன கேட்கப் போறாளோ!..என தயங்கி அவளைப் பார்த்தான்.
“ஒண்ணுமில்ல உங்க பேங்க்ல அக்கவுண்ட் இருந்தாத்தான் நீங்க உதவுவீங்களா?”
சடாரென அவளிடம் இந்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை உடனே! சுதாரித்துக் கொண்டு ..
“சே சே…அப்டிலாம் இல்லங்க சும்மா தெரிஞ்சிக்கத்தான் கேட்டேன், ஏன்னா பாட்டிக்கு இங்க அக்கவுண்ட் ஓபன் பண்ணனும் அப்பத்தான் அவங்களுக்கு உதவித் தொகை அவங்களோட அக்கவுண்ட் மூலமா கிடைக்கும் அதான் உங்களுக்கு அக்கவுண்ட் இருந்தா அவுங்களுக்கு ஜாமீன் போடலாமேன்னு கேட்டேன்”
“பரவால்ல… அவுங்களுக்கு நானே ஜாமீன் போட்டுக்கறேன்”
அவள் சிரித்துக் கொண்டே தனது மீன் விழிகளில் நன்றி தொனிக்க …
“தேங்க்ஸ் சார்” என்றாள், அவளது இந்த வார்த்தைக்காகவே மீண்டும் மீண்டும் அவளுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் போலிருந்தது அவனுக்கு…
கொஞ்ச நேரத்தில் எல்லா பார்மாலிட்டிகளும் முடித்து ஒரு அப்ளிகேஷனை அவள் கையில் கொடுத்து ..
“இதுல பாட்டிக்கிட்ட ஒரு கையெழுத்து வாங்கி தாங்க” என்று தன் சட்டைப் பைக்குள் இருந்த பேனாவைத் தந்தான்..
ஓகே சார்… என அவனிடமிருந்து பேனாவை வாங்கி சென்றவள், பாட்டியிடம் சென்றாள்..
“பாட்டி நான் காட்டுற இடத்துல கையெழுத்து போடுங்க”.. என்றவள்..
தனது இரு கைகளிலும் பேப்பர் இருந்ததால் பேனாவை மூடி இருந்த மூடியை தனது பற்களால் கவ்வி இழுத்து திறந்து அந்த மூடியை தன் இதழ்களுக்கிடையில் தாங்கிக் கொண்டாள்…
இதனை கவனித்துவிட்ட முகிலன் உருகிப் போனான்..
அந்த பேனா மூடியாக கொஞ்ச நேரம் நான் இருக்கக் கூடாதா? என ஏங்கித் தவித்தது அவனது இதயம்…
இனி என் வாழ்நாளில் இந்த பேனாதான் மிகச் சிறந்த பொருளாய் இருக்கும் என சொல்லிக் கொண்டான்…
ஒருவழியாக தட்டுத் தடுமாறி பாட்டி கையொப்பமிட்டதும் மீண்டும் தனது கிளி போன்ற இதழ்களில் கொத்திக் கொண்டிருந்த மூடியை பேனாவின் மீது திணித்து மூடி மீண்டும் கைகளில் தஞ்சமாக்கினாள். சட்டென ஏதோ நினைத்தவளாக முகிலனைப் பார்த்தாள் ..
இப்போது முகிலன் அவளைப் பார்க்காததுபோல் தலையை கணினியின்மீது கவனம் செலுத்துபவன்போல் பாவனை செய்தான். சட்டென பேனா மூடியை தனது புடவை நுனியில் துடைத்துக் கொண்டு அவனிடம் வந்தவள்..
“சார் இந்தாங்க பாட்டி கையெழுத்து போட்டுட்டாங்க சார்”…என்றாள்…
“ஓ பரவாயில்லையே ரொம்ப சீக்கிரம் போட்டுட்டாங்களே!” என்றவன். தொடர்ந்து விவரிக்கலானான்…
“ஓகே!, கொஞ்ச நேரம் இருங்க, பாட்டியோட அக்கவுண்ட் நம்பரும் பாஸ் புத்தகமும் தரேன், இந்த அக்கவுண்ட் நம்பர பாட்டி எங்க முதியோர் உதவித்தொகைக்கு அப்ளை பண்ணினாங்களோ! அங்க கொண்டுபோய் காட்டச் சொல்லுங்க.”
“அவங்க அத நோட் பண்ணிக்குவாங்க, அத்தோட பாட்டிய ஒவ்வொரு மாசமும் ரெண்டாம்தேதி இங்க வந்து வாங்கிக்க சொல்லுங்க”. என்று அனைத்தையும் சொல்லி முடித்தான்.
முகமெல்லாம் பூரிப்பாக அனைத்தையும் அவள் கேட்டுக் கொண்டிருந்து விட்டு அவளின் இதழ்களோடு அவளது கண்களும் சிரித்தன….
“தேன்க் யூ சோ மச் சார்”..
“இதுவரைக்கும் எங்களுக்கு பொறுமையா இவ்வளவு உதவுனதுக்கு எப்டி நன்றி சொல்றதுன்னே தெரியல சார்”
“யூ ஆர் வெல்கம்.. இட்ஸ் மை டூட்டி டு ஹெல்ப் அவர் கஸ்டமர்”
இப்போது அவனது உள்ளம் அவள் தன்னை விட்டு போகக் கூடாதே! என ஏங்கியது…
இப்படியே! அவள் என்னிடம் பேசிக் கொண்டே இருக்கக்கூடாதா? என தவித்தது..
“ நான் வரேன் சார்!” என்றவாறே! அவன் கொடுத்த படிவங்களை சரிபார்த்தாள்…
கொஞ்சநேரம் பார்த்துக் கொண்டிருந்தவள்..
திடீரென! கண்கள் விரிய ஆச்சரிய ரேகைகள் முகமெல்லாம் படர, அவனிடம் சட்டென திரும்பி….
“சார்.ர்.ர்.ர்………”
“எஸ்” சொல்லுங்க என்றான்….
“சார் இதிலே! ஐநூறு ரூபாய்க்கு பாட்டி பேருக்கு கிரெடிட் போட்டு பே ஸ்லிப் கொடுத்து இருக்கீங்க”…..
“ ஆனா, நாங்க பணமே! கொடுக்கலையே சார்”… என்றாள் கண்கள் அகல…
“எஸ் மேம்… அக்கவுண்ட் ஓபன் பண்ணும்போது குறைந்தது நூறு ரூபாயாவது கட்டித்தான் ஓபன் பண்ணனும் அது அக்கவுண்ட்ல கிரெடிட் ஆகிடும்.” ..
“ஆ…னா…. நாங்கதான் பணம் கட்டலையே பின்னே!…எப்டி”…
“ஓ..அதுவா!.. பரவாயில்லைங்க.. பாட்டிக்காக நானே கட்டிட்டேன்”..
“அய்யோ..சார் ..உங்களுக்கு எதுக்கு சார் …நானே கட்றேன்”…
என்று தனது கைப்பைக்குள் தேடினாள்..
“எக்ஸ் க்யூஸ் மீ..மேம்.. ஏன் பாட்டிக்கு நாங்கல்லாம் உதவக் கூடாதா?”..
“நீங்க ஒரு பேத்தியா.. பாட்டிக்கு உதவும்போது நானேன் ஒரு பேரனா உதவக் கூடாதா?..”..
“அய்யய்யோ.. நான் அப்டி சொல்லல சார்…”
“வீணா” ஒங்களுக்கு சிரமம் வேண்டாமேன்னுட்டு…” என இழுத்தாள்..
“அதெல்லாம் ஒன்னுமில்லைங்க… எனக்கும் பாட்டின்னு சொல்லிக்க யாரும் இல்லைங்க இவங்கள என்னோட பாட்டியா நெனச்சுக்கரனே! அத ஏன் தடுக்கறீங்க..ப்ளீஸ்”…
அவளுக்கு கண்கள் பனித்தது, வார்த்தைகள் வரவில்லை…
“யூ ஆர் ரியல்லி கிரேட் சார்..தேன்க் யூ சோ மச்…சார்”..
“அதெல்லாம் ஒன்னும் வேணாங்க”…
அவ்ளோ பெர்சால்லாம் எதுவும் சொல்ல வேணாம்”.. என்றான்..
“ஓகே சார் நான் கெளம்பறேன்”..
“ஓகே தேன்க் யூ மேம், நைஸ் டு மீட் யூ…” என்றான்…
“மீ டூ” … என்று கிளம்ப நினைத்தவள்..
சட்டென அவன் பக்கம் திரும்பி…
“சார் இந்த மேம் எல்லாம் கூப்பிட வேணாம் சார் சும்மா கயல்’னே நீங்க கூப்பிடலாம்,”,,என்றாள்..
“அப்போ! நீங்க மட்டும் என்னை சார்’னு கூப்பிடறீங்களே”… என்றதும் அவள் கலகலவென சிரித்தாள்..
“நான் சும்மா மரியாதைக்காகத்தான் கூப்பிட்டேன்..”
ஓகே! உங்க பேரைத் தெரிஞ்சுக்கலாமா? என்றாள்..
இதற்காகவே காத்து கிடந்தவன் போல
“முகிலன்.. நீங்க முகில்’னு கூட கூப்பிட்டுக்கலாம்..”என்றான்…
“அப்டியா, ஓகே! முகில் நான் வரேன்! மீண்டும் சந்திப்போம்.”
என்று அவள் சொன்னதுதான் தாமதம் அவனது உடலில் மின்சாரம் பாய்ந்தது..
பின்னே! மின்சாரப் பூவின் இதழில் இருந்து அவன் பெயர் ஒலித்து மறைந்தது அல்லவா!..
அந்த மின்சாரப் பூ.. அவனது கண்களை விட்டும் சிறிதாகி மறையும் வரை பார்த்துக் கொண்டே இருந்தான்..
பின்னர் அவனது காதருகே!
“ப்ப்ப்பப்ப்ப்பா” என ஓர் சத்தம் திடீரென முளைத்ததும்…
திடுக்கிட்டு திரும்பினான்..
அவனது தோளைத் தொட்டவாரே அவனது பின்னால் நின்று கொண்டிருந்தான்..
நண்பன் தொல்காப்பியன்..
“டே! என்னடா! நனைஞ்சிருக்கே! ஏதாச்சும் இங்கே! உனக்கு மட்டும் மழை பெஞ்சுதா! என நக்கலாக அவனை சீண்டினான்!..
வெட்கத்தால் தலை குனிந்து சிரித்தான் முகிலன்…
“அடடா! இப்டி ஒரு பையன் வெட்கப்படுறத! நான் புற நானூறுல கூட படிச்சதில்லைடா!”..
“என்னா! ஒரு அக்மார்க் தமிழ் வெட்கம்பா! உன்னிடமிருந்து”..
“இப்போ மட்டும் கம்பன் உசிரோட இருந்திருந்தா உன்னோட வெட்கத்த வெச்சே! ஒரு இதிகாசம் படைச்சிருப்பான்டா!”…
முகிலனின் முகம் சிவந்தது..
“டே!.. போதுண்டா!.. என்ன விட்டுடுடா!! முடிலடா!… உனக்கு ஏன் தொல்காப்பியன்’னு பேரு வெச்சாங்கன்னும் இப்பத்தாண்டா புரியுது..”
தொல்காப்பியன் சிரித்துக் கொண்டே! கேட்டான்..
“டே! மச்சான்!. இவ்ளோ நேரம் இங்க என்னடா நடந்துச்சி..”
“ஏதோ! ஒரு சீரியல் பாத்தா மாதிரில்ல இருந்துச்சி”..
யாருடா! அவ!.“ முகிலன் கடுப்பானான்….
“டே!. அவ, இவ’ன்னு ஒருமைல பேசாதடா! …
அவனை ஒருமாதிரியாக பார்த்துக் கொண்டே தொல்காப்பியன் கேட்டான்..
“பார்ரா! அப்றம்.. பின்னே! யாருடா! மச்சான்..உன்னோட அவுன்ங் ங் ங் க….
என வேண்டுமென்றே இழுத்தான்…
“அதில்லடா மச்சான்…யாரா இருந்தாலும் கொஞ்சம் ரெஸ்பெக்டா பேசணும் இல்லையா!”
“நம்ம கிட்ட வர்ர கஸ்டமர்ஸ இப்டிதான் ஒருமைல பேசுறதா!?..என்று கண்ணடித்தான்..
“ஓகே சாரிடாப்பா!.. இப்பவாவது சொல்லேன் யாரு அவுங்ங்ங்க’ன்னு..” என்றான் தொல்காப்பியன்…
“மச்சான் சத்தியமா அவங்க யாருன்னு எனக்கு தெரியாதுடா”.
“டேய்! என்ன கதையா உடுற! ஒன்னரை மணிநேரமா ஒரு பொண்ண ஒக்கார வெச்சு கதை பேசி வேண்டிய உதவியெல்லாம் செஞ்சு கொடுத்து அனுப்பிருக்க இப்போ தெரியாதுன்னா! சொல்ற உன்ன!..”
என்று முகிலனின் குரல்வளையை பிடித்து லேசாக நெரித்தான்..
அதே நேரம், முகிலன் கத்தினான்…
“டே! நெசமாத்தான் சொல்றேண்டா!” கைய எடுடா! கொஞ்சம் வெலாவாரியா சொல்றேன்..” என கத்தினான்..
“அப்டி வா வழிக்கு இப்ப சொல்லுடா”… என்ன விஷயம்..
முகிலன் ஆரம்பித்தான்…
“மச்சான் கொஞ்ச நாளைக்கு முன்னாலதாண்டா அவங்கள தற்செயலா நம்ம மெரினால பஸ்சுக்கு நிக்கிறப்போ பாத்தேன், பாத்த நாள் முதலா என் விழிய விட்டு அவங்க அகலவே இல்லடா.”
என்று முன்பு நடந்த சம்பவங்களை அவனிடம் விவரித்தான்…
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த தொல்காப்பியன்..
“ஏண்டா..ராஸ்கல்.. உன் வீட்டு பாத்ரூம்ல தண்ணி வரலன்னாக்கூட வந்து ஒன்னு விடாம சொல்ற நீ இத எங்கிட்ட இத்தன நாளா சொல்லாம விட்டுட்டெல்ல, உன் ஒருதலைக் காதல் வெளங்காம போகட்டும்னு”.. சாபமிட்டான்..
“டே! மச்சான் சாரிடா.. மொதல்ல இது சத்தியமா என்னண்ணே தெரியாம எப்டிடா உங்கிட்ட எப்டிடா இத சொல்றது அதான் சொல்லலடா”. என்றான் கெஞ்சியவாறே!..
“சரி!.. விடு கழுத மன்னிப்போம்.. மறப்போம்..நமக்குள்ள எதுக்கு இதெல்லாம்..”
“சரி இப்போ!அடுத்த கட்டம் என்னன்னு கொஞ்சம் சொல்லேன்”..
“இது வெரி இன்ரஸ்டிங்கா இருக்கும்னு தோனுது மச்சான்”..
“ஏண்டா!.. இடியட்.. என்னோட தவிப்பு உனக்கு இன்ரஸ்டிங்கா இருக்கா?, அயோக்கிய பயலே! ஓடிப்போடா!..” என்றான்.
“ கூல் மச்சான்.. இப்பத்தாண்டா உனக்கு இந்த நண்பனோட உதவிகள் நெறைய தேவைப்படும்”..என்றான் கூலாக தொல்காப்பியன்..
“எஸ்டா மச்சான்..நிச்சயமா உன்னோட உதவிகள் எனக்கு நெறைய எனக்கு தேவைப்ப்படும்னே தோணுதுடா, இனி சத்தியமா அவங்கள இனிமே பார்ப்பேனான்னு கூட தெரியல”.
“இருந்தாலும் உள்ளுக்குள்ள ஏதோ ஒன்னு மட்டும் சொல்லிக்கிட்டே இருக்குடா நிச்சயமா பார்ப்பேன்னு”..
“ஓஹோ”…
“அந்த ஏதோ ஒன்னுனு சொன்னியே அது என்னாப்பா”. என்று மீண்டும் குதர்க்கமாக சீண்டினான் தொல்காப்பியன்.
“மச்சான் வெளையாடாதடா எம் மனசுக்குள்ள சீரியஸா சந்திப்ப எதிபார்த்துக்கிட்டு இருக்குடா”..
“ஓகேடா கூல்ல்ல்ல்… மச்சி.. இனிமே அப்டித்தான்”…
“இனிமே மவனே உனக்கு உறக்கங்கிறதே இனி கொஞ்ச காலத்துக்கு இருக்கப் போறதில்ல தெரிஞ்சுக்கோ”..
“டேய்ய்… நீ என்னடா சொல்ற… ஏண்டா”… அரற்றினான் முகிலன்..
“பின்ன… வரக்கூடாத வியாதில்ல வந்திருக்கு உனக்கு”…
“இதுக்குப் பேரு தாண்டா மச்சான் காதலு..கருமாந்திரம்னு.. கண்ட கதையும் சொல்லுவாங்கே!”..
“அதுதான் இப்போ உன்னைய புடிச்சிருக்கு, இத ஏன் வியாதின்னு சொல்ராங்கன்னா?”.
“இது வந்து தொலைச்சா பசிக்காது… தூக்கம் வராது.. எப்பவும் மந்திரிச்சி உட்டவன மாதிரியே அலைவானுங்க..கண்டதுக்கும் கண்ணாடி முன்னாடி நிப்பானுங்க, அதனாலதான் இதுக்குப் பேரு வியாதி”…
“ஓஹோ…என்னென்னெவோ இதுல பி ஹெச் டி வாங்கினவனாட்டம் சொல்றே!”
“பின்ன.. இருக்காதா? இந்த கருமாந்திரம்தான் பலமுறை என்ன தீண்டி இருக்கே!, இருந்தாலும் நீ ரொம்ப லேட்டுடா மச்சான், இந்த விஷயத்துல நான் உனக்கு சீனியர்”..
“அதனால மறக்காம அப்பப்ப சில டிப்ஸ் தரேன், அப்டியே உன் சேலரில ஒரு லம்ப்சம் அமவுண்ட நமக்கு தட்டி உடனும் சரியா?, டீலா!… நோ டீலா!..என்று சத்தமாக சிரித்தான்..
“மவனே உனக்கு வந்த வாழ்வா இது, சரி இந்த விஷயத்துல அனுபவிச்சவனா இருக்கறதால வேற வழி இல்ல நானும் கேட்டுத் தொலைக்கிறேன்”..
“டீல்ல்ல்” ……….என கத்தினான்…
“அப்டிவா வழிக்கு..உன்ன மாதிரி ஆளுங்க எல்லாம் கடனா கேட்டா ஒத்த பைசா கூட தரமாட்டீங்கடா ஆனா இதுமாதிரி விஷயத்துக்கெல்லாம்..அள்ளி விடுவீங்க பாரு..பிரண்ட விட உங்களுக்குள்லாம் பிகருதாண்டா முக்கியமா போச்சு”…என நக்கலடித்தான் தொல்காப்ஸ்..
“எல்லாம் உனக்கு நேரம்டி நீ இதுவும் பேசுவ இன்னமும் பேசுவ”..என கடிந்தான் முகிலன்..
“டேய் இன்னிலேருந்து நான் உனது காதல் டீச்சர் மரியாதையா பேசுடா?”..
“ஓகேங்க.. ஆபீசர்ர்ர்ர்… சரிங்ங்ங் ஆபீசர்ர்ர்ர்”… என்று பணிந்தான் முகில்..
திடீரென தொல்காப்ஸ் பக்கம் திரும்பியவன்…
“டேய்…மச்சான் இனி அவங்கள நான் சந்திப்பனான்னு தெரியலடா, இப்ப மாதிரி ஒரு சம்பவம் இனி நடக்குமோ! என்னவோ! தெரியலையே, என கவலைதோய்ந்த முகத்தோடு வினவினான் முகில்..
“ டேய்!!!. என்னடா இப்பவே!”…
கண்களில் தெறித்து துளிர்த்த ஏக்கத்தை மறைக்க முயற்சித்து சிறிதாய் சிரிப்பையுதிர்த்தான் முகில்..
“ஓகேடா மச்சான்ஸ் இனி தொட்டுவிடும்தூரம்தான் எல்லாமே நினைத்துக்கொள் நாங் கெளம்பறேன் பை..பை..டேக் கேர்டா” ..
ஆபீஸ் முடிந்து ஐந்தரை மணிக்கு தமது ஹோண்டாவை ஸ்டார்ட் செய்து கிளம்ப தயாரானான் அவனது சட்டைப்பையில் கயலின் முத்தம் வாங்கிய பேனாவின் மூடி அவனது நெஞ்சை மூடியிருக்கும் சட்டைப்பக்கத்தை தடவியபடி அமர்ந்துகொண்டது..
0O0
சில நாட்கள் வெறுமனே நகர்ந்த பின்னர்…
அலுவலக பணிகள் முடிந்தபின் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தான் முகிலன்..
தற்செயலாக அவனது பார்வை சாலையோரம் நின்றபடியே கையசைத்து ஒவ்வொரு டூவீலறில் செல்வோரிடமும் லிப்ஃட் கேட்டுக் கொண்டிருந்த எழுபது வயது மதிக்கத்தக்க பெரியவர் மீது படிந்தது..
கையிலிருக்கும் பையின் கனமும், பயண களைப்பும் காண்போர் கண்களுக்கு அவரைக் கருணைப்படுத்தியது.
கியரை நியூட்ரலில் விட்டபடியே அவர் நிற்கும் இடத்திற்கே சென்று வண்டியை நிறுத்தினான் முகிலன்.
“எங்க சார் போகணும்?, வண்டில ஏறிக்கங்க”.. என்றபடியே அவரது கையிலிருக்கும் பையை வாங்கி பெட்ரோல் டேங்கில் இருத்தியபடி அவர் வண்டியில் இலகுவாக என்ற வழிவகை செய்து கொடுத்தான்.
“ரொம்ப நன்றிங்க தம்பி, ஒரு பத்து வண்டியாவது கைநீட்டி நிறுத்த சொல்லி இருப்பேன் யாருமே கண்டுக்கலைங்க., கையில ஒண்ணுமில்லைன்னானும் பொடிநடையா போயிருப்பேனுங்க இது அம்மாங்கனமா கனக்குது”.. என்றபடியே பைக்கில் ஏறி அமர்ந்து கொண்டார் பெரியவர்..
“அப்டியா!” என ஆச்சரிய ரேகையை தெளித்தவாறே! “
“ஆமாங்க சார் மனிதாபிமானம் இப்போ மலிவாதானே போயிடுச்சி. எல்லாருக்கும் அவசரமா போவனும் அதானே நியதியா இருக்கு”, என பதிலளித்தவாறே முன்னால் இருந்த பையை இருவருக்கும் இடையில் இருத்தி பிடித்துக் கொள்ளச்செய்தான் .
அவர் பாதுகாப்பாக அமர்ந்திருப்பதை இறுதி செய்துவிட்டு வண்டியின் கியரை குதிங்காலால் ஒத்தடம் வைத்தான்..வண்டி புறப்பட தயாரானதுமே பெரியவர் பேச ஆரம்பித்தார்..
வண்டி இரண்டு கிலோமீட்டர் தொலைவை அடைந்ததும் நினைவு வந்தவனாக அவரிடம் கேட்டான்
“கேக்க மறந்துட்டேனே எங்கங்க சார் நீங்க போவனும்”.
“தோ! வந்துடுச்சே தம்பி அடுத்த ஸ்டாப்புதான் ஆண்டிப்பந்தல்..”
“மெயின் ரோட்டுலயே நிறுத்திடுங்க தம்பி நான் ஊருக்குள்ள நடந்தே போய்க்கிறேன்”..
“இவ்ளோ வெயிட்டான பைய கைல வெச்சிக்கிட்டு எப்டி நடப்பீங்க, ஒன்னும் பிரச்சின இல்ல வீடு வரைக்கும் வந்தே விடுறேன்”..
“ஏந்தம்பி ஒங்களுக்கு வீண் செரமம், இம்மாந்தூரம் கொண்டுவந்து வுட்டதே பெரிய விஷயமாச்சே” என ஒப்புக்கு வினவினார், அவருக்கும் அது தேவையாகவே இருந்தது இல்லையெனில் இரண்டு தெருக்களை கடந்து இந்த பையை தூக்கிச் செல்வது மிகவும் சிரமம்தான்..
பைக் ஆண்டிப்பந்தலை அடைந்ததும் அவர் கைகாட்டும் திசையில் ஊருக்குள் அவரை சுமந்தபடியே பயணித்தது..
இரண்டு தெருக்களை கடந்ததும் மீண்டும் அவர் கைகாட்டிய சிறிய அரசுதவி பெற்று கட்டப்பட்ட பசுமை வீட்டின்முன் பவ்யமாய் நின்றது..
“ரொம்ப தேங்க்ஸ் தம்பி, சிரமத்துக்கு மன்னிக்கணும்”. என இறங்கியவரிடமிருந்து பையை வாங்கி தமக்கு முன்னால் வைத்துக் கொண்டு அவரை இறங்கப் பணித்தான் ..
“இருங்க சார் நானே கொண்டு வந்து வீட்டு வாசல்ல வைக்கிறேன்”. என்றவனை அவசரமாக மறுத்துவிட்டு..
அவசரமாய் வீட்டுக்குள் அழைத்தார்..
“யம்மாடி கயலு கொஞ்சம் இங்க வாம்மா” என்றவரின் குரல் அவனுக்குள் இனிய ராகமிசைத்து கண்கள் வாசலைப்பார்த்து மின்னியது.
ஏனெனில் அந்த ‘கயல்’ எனும் வார்த்தை அவனது ‘தையலின் பெயரென்பதை இதயம் ஏதோ நினைவூட்டியது, கண்கொட்ட வாசலை பார்த்தபடி அவனும் எதிர்நோக்கினான்…
அவன் பார்வைக்குள் வந்து விழுந்தது வாசல் நிலையை தாண்டி வர எத்தனிக்கும் அவர் அழைத்த பெண்ணுக்குரிய நிழல்.
நிலையைத் தாண்டி படிகளில் கால்வைத்ததுமே தந்தையின் அருகே நிற்பவனைக் கண்டு பார்வைகளை அகல விரித்தபடி இதழோரம் சிரிப்பை சிதறவிட்டபடியே அருகே வந்தாள் அவள்..
ஆம்!.. பெயரைக் கேட்டதும் முகிலின் மனம் நினைத்த கண்ட போழ்தில் இருந்து அவனது விழிகளை விட்டு என்றுமே மறந்திருக்காத அதே கயல்..
கயல்விழி ..
“முகில்ல்ல்ல்ல் .. நீங்களா?. எப்டி இருக்கீங்க…சாரி! ..பாத்து கொஞ்ச நாளாயுடுச்சுல்ல” ..!..
அவன் மீண்டுமொருமுறை சந்தித்து மகிழ.. குழையும் பேச்சின் குழைவை செவிக்கு கொடுத்து மகிழ விரும்பிய குரல்கள் ஒரு பெரிய திருப்பமாய் அவனுக்கு கிடைத்திருப்பதில் மனம் தித்திப்பிலிருந்து விடுபட நாழிகையானது..
“ஹாய்ய்ய்ய்ய் கயல் நீங்களா?”. என திக்கித் திணறி வந்தது அவனிடமிருந்து வார்த்தைகள்..
“ஓ வாட் எ சர்ப்ரைஸ் ஐ டிடின்ட் எக்ஸ்பெக்ட் திஸ்…. நீங்க எப்டி இங்க”.
இவர்களின் உரையாடல்களை கேட்டு திகைத்து நின்ற பெரியவர்!.. ஒன்னும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தார், இந்த உரையாடலுக்கிடையில் அவரைக் கவனித்த கயல்..
“பை த பை இவ்ருதான் என்னோட அப்பா! வெங்கடேசன் ரிட்டயர்டு ஹெட்மாஸ்ட்டர்”..என அவனுக்கு அறிமுகம் செய்துவிட்டு..
“அப்பா. நான் அன்னக்கி பேங்குல நடந்தத உங்கள்ட்ட சொல்லல.. அந்த மிஸ்டர். முகில் இவ்ருதாம்பா”..
வெங்கடேசனின் கண்கள் விரிந்து இதழ்கள் பல்திறந்து புன்னகைத்தன ..
“அப்டியாம்மா! ஹல்லோ! முகில்.. அன்னக்கி பேங்குல நடந்த சம்பவத்துக்கு அப்றம் உங்கள பத்திதான் அன்னக்கி ஃபுல்லா எம்பொண்ணு சொல்லிட்டுருந்தா?”..
“உங்கள இப்டி திடுதிப்பென சந்திப்பேன்னு நினைக்கவே இல்ல, ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா!”
உடனே மகள் பக்கம் திரும்பிய வெங்கடேசன் ..
“நீ சொன்னது நூத்துக்கு நூறு நெசம்மா! தம்பியின் இரக்ககுணம் ரெம்ப பெருசுதான்னு இன்னக்கி நேரடியாவே நான் பாத்துட்டேன், முக்கா மணிநேரமா வேகாத வெயில்ல இந்த மூட்டைய கையில வெச்சிக்கிட்டு வண்டியில போறவங்கள்ட்டல்லாம் லிஃப்ட் கேட்டேன், ஆனா ஒரு வயசானவன்னுகூட பாக்காம ஒருத்தவங்களும் நின்ன பாடில்ல தோ! தம்பி மட்டுந்தான் வண்டிய நிறுத்தி பையையும் என்கிட்டருந்து வாங்கி பொறுமையா ஏத்திக்கிட்டு வந்ததோட வூடு வரைக்கும் கொண்டுவந்து வுட்டாரு”.
“இப்ப நீ சொன்ன விசயத்தோட பொருத்திப் பாத்தேன் தம்பிக்கு உண்மையிலேயே பெரிய மனசுதாம்மா”.. என மகளிடம் முன்பு கேட்டதை ஆமோதித்துக் கொண்டிருந்தார்.
“தம்பி உள்ள வாங்க கொஞ்சம் காஃபி சாப்ட்டு போலாம்”..
வெங்கடேசன் சொல்லும் வார்த்தைகள் அனைத்தையும் கேட்டு தித்திப்பாக இனித்தது அவனது செவிகள். அதோடு கூடுதலாக அவர் கயலின் அப்பாவாக வேறு இருப்பது இன்னும் அவனது உள்ளத்தில் ஆனந்த ராகம் மீட்டியது போலிருந்தது அவனுக்கு.
“ஓ பரவால்ல சார்… ரொம்ப நன்றி சார், இன்னொரு நாளக்கி நான் வர்றேன்னே!”..
“ஏன் என்னோட காஃபி சாப்ட அவ்ளோ பயமா? நான் நல்லாத்தான் காஃபி போடுவேனாக்கும் பயப்படவேணாம்”. என கேட்டு கயல் சிரிக்க..
கூடவே வெங்கடேசனும் “ஆமாமா! சும்மா வாங்க தம்பி” என்றார் சிரித்துக் கொண்டே…
“இல்ல இப்ப வேணாம் சார் வூட்டுல தேடுவாங்க நாழியாயிட்டுது நாம் போவனும், கண்டிப்பா இன்னொரு மொற வர்றேனே”. என கூச்சமுடன் சொன்னான்.
“ஏன் உங்க வீட்டுக்காரங்க கோச்சுப்பாங்களா?” என மீண்டும் சிரித்தார்.
“சார் எனக்கு இன்னும் கல்யாணமே ஆவல சார், வீட்டுல தேடுவாங்கன்னு சொன்னது அம்மாவ”.
“ஓ அப்டியா! சரி விடுங்க தம்பி தெரியாம கேட்டுப்புட்டேன் கல்யாணம்னு சொன்ன உடனே இப்டி பதறுறீங்க”. என வெங்கடேசன் சொன்னவுடன் கூடவே கயலும் சேர்ந்து சிரித்தாள்..
முகில் என்ன சொல்வதென்று தெரியாமல் நெளிந்தான்..
“சரி தம்பி இப்ப என்ன சொன்னாலும் நீங்க காஃபி சாப்ட போறதில்ல, மறுபடியும் நாம சந்திப்போம்னு தோணுது அப்ப பாத்துக்கலாம் வாங்க”.. என்று சொல்லி வழியனுப்ப கயலும் அதனை ஆமோதித்து கண்ணசைத்து…
“ஓகே முகில் இன்னொருமுற அம்மாவையும் அழைச்சுக்கிட்டே சாவகாசமா வாங்களேன் அவங்களையும் பாத்த மாதிரி இருக்குமே!” என்றாள் கயல்.
“ஓ ஸ்யூர் கயல் கண்டிப்பா வர்றேன் ஸாரி உங்களோட சுவீட்டான காஃபிய குடிக்க நேரம் கெடைக்கல ஆனா கண்டிப்பா அடுத்தமொற கெடைக்கும்னு தோணுது, பை வர்றேன் சி யூ நெஸ்ட் டைம்”.
“அப்ப வர்றேன் சார்” என பைக்கை ஸ்டார்ட் செய்து புறப்பட தயாரானான்..
“ஓகே போய் வாங்க” என இருவரும் கோரசாக சொல்லி கையசைத்தனர்..
உண்மையில் போக மனமின்றி அங்கிருந்து நகர்ந்தான், உள்ளுக்குள் அவள் கரம்தழுவி தரும் காஃபியை குடிக்க அவனுக்கு பேராவல் இருந்தது அதோடு அவளிடம் இன்னும் நிறைய பேசிக்கொண்டிருக்கவும் உள்ளம் தவித்தது ஆனால் கூடவே அப்பாவும் இருக்கிறாரே என்ன செய்வது?. அதனால்தான் அம்மாவை காரணமாக்கி அரைமனதோடு நழுவ தயாரானான். இதில் அவன் பற்றிய மதிப்பீடுகளை அவர்களுக்கு உணர்த்தும் குறியீடும் அடங்கி இருப்பது அவனுக்கு மட்டுமே தெரியும்.
இதயத்தை ஆயிரம் பட்டாம்பூச்சிகள் தழுவுவதைப்போல் அத்தனை இன்பமாய் இருந்தது அவனுக்கு இன்று நடந்த சம்பவங்கள் கடந்த வங்கி சம்பவங்களைக் காட்டிலும் அசைபோட ஏராளம் நினைவுகளைத் தருவித்தது இப்போது அவளது அப்பாவிடமும் கூடுதலாக நல்ல பிம்பம் கிடைத்திருப்பது அவனது ஆசைகள் அனுகூலமாவதற்கான முன்னோட்டமாகவே கருதி வண்டியின் முடுக்கத்தை மெல்ல நகர்த்தினான், அவன் செல்லும் சாலையோரமெல்லாம் போன்சாய் மரங்கள் பூக்களை தூவி அவனது இதய டூயட்டுக்கு இசை மீட்டுவது போன்றிருந்தது, உடலுக்குள் ரசாயன மாற்றங்கள் நிகழ்ந்தது போன்றதொரு பிரக்ஞை படர்ந்தது.
வீட்டை அடைந்ததும் அவன் முகத்தில் தெரியும் பொலிவைப் பார்த்ததும் அம்மாவின் புருவங்கள் ஆச்சரியத்தை தெளித்தது ..
“என்னடா, மொகம் முழுக்க ஒரே செழிப்பா இருக்கு” எனும் அம்மாவின் கேள்விக்கு “ஏம்மா! சந்தோஷப்படக்கூடாதா? என்றபடியே அம்மாவின் கன்னத்தை தொட்டுக் கிள்ளியபடியே நகர்ந்தான்.
அம்மா இரவு உணவாக தோசையை அவனது தட்டில் எடுத்து வைத்தபடியே கேட்டாள்..
“அப்புறம் சொல்லுடா இன்னக்கி சாயங்காலம் ரொம்ப சந்தோசமா வந்தியே யாரடா அந்தப்பொண்ணு”. அம்மாவின் கேள்வி அவனை நெளிய வைத்தது “என்னம்மா சொல்றீங்க”..
“சும்மா சொல்லுடா! உன்னைய பெத்தவ நானு எனக்குத்தெரியாதா புள்ளையோட மனநிலைமைய பத்தி”..
அம்மாவிடமிருந்து துளிர்த்து விழுந்த வார்த்தைகளில் அவன் சற்று வழுக்கித்தான் போனான் பின்னே! இத்தனை இலகுவாக மனக்காதல் காரியம் கைகூடுமென்று!, எந்த காதலைத்தான் குடும்பத்தினர் சுலபத்தில் ஏற்றிருக்கின்றனர்…
இன்று அம்மாவிடமிருந்தே தெறித்து விழும் வார்த்தைகளில் திக்குமுக்காடி கடந்த ஒவ்வொன்றையும் கடகடவென வார்த்தைகளில் ஒப்புவித்தான்..
“நீ சொல்றதெல்லாம் பாத்தா எனக்கே அந்தப்பொண்ண பாக்கணும்னு தோணுதுடா, சரி உங்கப்பாகிட்ட ஒரு வார்த்த சொல்லிட்டு எப்போ அவுங்க வீட்டுக்கு முறைப்படி பொண்ணு கேட்டு போவலாம்னு சொல்லு”..
உடனே பதறியபடியே அதனை மறுத்தான் முகிலன்..
“அய்யோ! இப்ப வேணாம்மா அவங்க ஏதும் தப்பா நெனச்சுடப்போறாங்க!.. இப்டியே கொஞ்சகாலம் போவட்டுமே! நானே ஒங்களுக்கு சொல்றேன் என்ன!”..
“என்னமோ போடா! ஒன்னோட விருப்பம்”.. என அவனை ஆச்சரியமாகப் பார்த்தபடி அங்கிருந்து நகர்ந்தாள் அம்மா..
O0O
சில நாட்கள் நகர்ந்து சென்றது..
அன்றொருநாள் வங்கியில் அமர்ந்து மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தவனின் விழிகள் வாசலைப்பார்த்து ஆச்சரியத்தை அள்ளித்தெளித்தது..
அங்கே!
அடர்மஞ்சள் நிறப்புடவையில் இதழ்களில் புன்னகை தவழ இவன் இருக்கையில் இருக்கிறானா?, என எட்டிப்பார்த்தபடியே உள்ளே வந்தாள் கயல்விழி..
அவளைக்கண்ட மறுநொடியில் தாம் அலுவலகத்தில் அமர்ந்திருக்கிறோம் என்ற நினைவு அவனது இதயத்தை விட்டு வெகுதூரம் சென்றிருந்தது ..
வேகமாக ஓட்டமும், நடையுமாக வாசலை அடைந்தவன் இதழ்முழுதும் புன்னகை தவழ அவரை வரவேற்றபோதுதான் கவனித்தான்.
அங்கே! கயலின் அப்பா வெங்கடேசனும் கையில் ஒரு பளபளக்கும் பாலித்தீன் பையை ஏந்தியவாறே சிறிது தூரத்தில் நின்று கொண்டிருந்தார்..
சற்று குழப்பமான மனநிலையுடன் முகிலனின் கண்கள் விரிந்த நிலையில் அவரை வரவேற்றது…
“அட, அப்பாவும் வந்திருக்காரா?, வாங்க சார்.. எப்டி இருக்கீங்க..என்ன ரெண்டு பேருமா சேந்து வந்திருக்கீங்க.. ஏதும் விசேஷமா?” என சிறுநகையுடன் சிரித்தபடியே கேட்டான்..
“ஆமா தம்பி! விசேசமில்லாமயா வந்திருப்போம்”… என கூறியவாறே வந்து முகிலனின் கரத்தினை பிடித்துக் கொண்டார்.
“என்ன சார் சொல்றீங்க” என்றான் முகிலன்
“ஆமாங்க, தம்பி எல்லாம் பொண்ணோட கல்யாணமா விஷயமாத் தான்” என கயல்விழியைப் பார்த்தபடியே முகிலனிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
வெட்கம் தாளாது தலையைக் கீழே குனிந்தபடி புறநானூற்றுப் பெண்ணைப்போல் தரையில் பெருவிரலால் கோலம் போடத் துவங்கினாள் கயல், என்னதான் நவீனயுக மங்கையானாலும் நாணம் என்ற ஒன்று வரும்போது வில்லைப்போலல்லவா வளைந்து விடுகிறார்கள் பெண்கள்..
இதனைக் கேட்டதும் ஆயிரம் தாமரை மொட்டுக்கள் அவனது இதயத்திற்குள் மலர்ந்து நிற்பதைப்போலொரு உணர்வு அவனை ஆட்கொண்டது மட்டுமல்லாமல் நாயகராவின் நீர்வீழ்ச்சி அவனது தலைக்குமேல் வந்து கொட்டுவதைப்போன்று மனம் ஆனந்த சயனத்தில் திளைத்திருந்தன..
இப்போது கயலின் வெட்கம் முகிலனையும் தொற்றிக் கொண்டது, முதன் முறையாக கயலைப் பார்க்க வெட்கம் கொண்டான்..
“சார் வீட்டிற்கு வரலாமே” என்றான்.
“அதனாலென்ன தம்பி தாராளமாக வரலாம் அதுக்கு முன்ன உங்கள இங்க பாத்து பேசணும்னு எம்பொண்ணு சொன்னுச்சு”, அதான் முதல்ல உங்கள இங்க பாக்க வரணும்னு வந்தோம்” என கூற
இப்போது முகிலனின் கூச்சம் பன்மடங்கு பெருகி உள்ளுக்குள் வழிந்தோட குளிர்ந்த நீர்ப்படலமென வியர்வைத் திட்டுக்கள் உடல் முழுதும் பரவிட நின்றான்..
தனது கைகளை தமது கைப்பைக்குள் விட்டு துழாவி ஓரத்தில் மஞ்சள் தேய்க்கப்பட்டிருந்த ஒரு காகிதத்தை அவனது கரங்களுக்குள் திணித்தார்..
குழப்பத்துடன் வாங்கிய அவனது கரங்களில் குடிபுகுந்து சிரித்தது அது..
ஆம், அது திருமணப் பத்திரிக்கை பல நாட்களாக அவள் பெயருடன் பொருத்திப் பார்த்து பொருத்தம் பார்த்துக்கொண்டிருந்த அந்த கனவு காகிதம் இப்போது அவனது கரங்களில்..
கண்கள் கூசிய நிலையில் அதனைத் திறந்தபோது ..
அவனது பலநாள் கனவுகள் பாதாளத்தில் விழுந்தது போன்றதொரு உணர்வு, சற்று முன்பு வரை அவனது தலைக்குமேல் கொட்டிய நயாகரா இப்போது பெருத்த வெள்ளமாகி அவனை மூழ்கடித்து மூச்சு முட்டச் செய்தது., ஆயிரம் தாமரை மொட்டுக்கள் மலர்ந்த இதயம் இப்போது ஆயிரம் வாலா பட்டாசாய் வெடித்து தூள் தூளாகியது..
கரங்களில் தவழும் கயலின் கல்யாண பத்திரிகையில் அவள் பெயரருகே எத்தனை நாட்கள் தமது பெயரைப் பொருத்திப் பார்த்து பரவசம் அடைந்திருப்பான். ஆனால் தற்போது அந்த இடத்தில் வேறொருவரின் பெயர்..
டாக்டர். மோகன். MBBS. MD. எனும் அந்தப்பெயர், இந்த நொடிப்பொழுதிலிருந்து அவன் வெறுக்கும் பெயரானது,
நொடிப்பொழுதுகளில் நொறுங்கிய அவனது பழங்கனவை எண்ணி கண்கள் கலக்கமுற்றது.., மனவெளிக்குள் மாய ரூபமொன்று கண்ணாமூச்சியாடியது, அமைதியாய் வாசித்த அவனது செவிகளில்..
“என்ன தம்பி, இப்பவே பத்திரிக்கைய வாசிக்க ஆரம்பிச்சாச்சா” என்ற வெங்கடேசனின் குரல் நிகழ் களத்திற்குள் அவனைப் பிடித்து நிறுத்தியது.
“மாப்புள பெங்களூரு அப்பல்லோவுல சீனியர் டாக்டரா இருக்காராம், இங்க திருவாரூரு தான் சொந்த ஊரு, பொண்ண காலேஜ்ல பாத்துட்டு புடிச்சி இருந்ததால வந்து கேட்டாங்க, எம் பொண்ணுக்கும் புடிச்சிருந்ததால அப்பவே பேசி முடிச்சிட்டோம் வர்ற ஏப்ரல் 16’ந் தேதி கல்யாணம் பின்னாள்ல வீட்டுக்கு வந்து சொல்றேன் அம்மாவையும் அழச்சிட்டு வந்திடுங்க தம்பி” என்றவர்.
கயலிடம் திரும்பி “யம்மாடி கயலு இப்டியே வெட்கப்பட்டுக்கிட்டு நின்னா எப்புடி, உன்னோட நண்பர்கிட்ட நீயும் ஒரு வார்த்த சொல்லிடும்மா” என்று சொல்லி மெலிதாய் சிரித்தார்.
தற்போது வெட்கமும் கூச்சமும் இதழ்களில் வழிந்தோட வாய் திறந்தாள் கயல்..
“முகில், கல்யாணத்தன்னிக்கி நேரத்தோடயே வந்திடுங்க, பிளீஸ் உங்கள மணமேடைல இருந்தாலும் எதிர்பார்ப்பேன்”. என சொல்லியபடியே மெலிதாய் சிரித்து அவனுக்கு அழைப்பு விடுத்து தந்தையுடன் கிளம்ப தயாரானாள் ..
எப்போதும் அவளது குரலைக் கேட்டவுடன் இனிக்கும் இதயம் இன்று சுரனையற்று நின்றது, அவளது பேச்சினை உள்வாங்க ஆர்ப்பரிக்கும் செவிகள் சுரமற்று செத்த நிலையில் மிதந்தது..
ஏற்கனவே உடல் பலமிழந்த நிலையில் இருதயமும் ஒருசேர சேர்ந்து கொண்டு அவளது அழைப்பை உள்வாங்கி சம்பிரதாயமான சிரிப்பையுதிர்த்து வழியனுப்பி வைத்தது..
அவர்கள் அங்கிருந்து நகர்ந்த நிலையில் வெங்கடேசன் சார் சொன்னதில் அந்த “எம்பொண்ணுக்கும் பிடிச்சிருந்ததால” எனும் வார்த்தை மட்டும் அவனது செவிகளில் ஒலித்து இதயத்தில் கரைந்த வண்ணமிருந்தது..
“ஏன் கயல்., என்னை உன் மனம் நினைக்காமல் போனது, என்னை உனது நண்பனாக மட்டுமே நினைத்திருந்தாயா?” என அவன் மனம் சொல்லிக் கொண்டிருந்த நிலையில்…
முன்பு அம்மாவிடம் முதன்முதலில் விஷயத்தை கூறியபோது.. “வாயேன் இப்பவே அவங்க வீட்டுல போயி பாத்து சொல்லிட்டு வரலாம்” என அவள் சொன்ன வார்த்தைகளும் உள்மனதில் தைத்தது …
“ஒருவேள அப்பவே அம்மாவை அழச்சிட்டுப் போயி பேசி இருந்தா இன்னக்கி அந்த கல்யாண பத்திரிக்கையில மோகனுக்கு பதிலா எம்பேரு இருந்திருக்குமோ?, நாமதான் தாமதிச்சி தலையில மண்ணள்ளி போட்டுட்டமோ?, என குழம்பிய நிலையில் நின்றான்…
“சேச்சே…நான் மட்டும் அவள விரும்பி என்ன பிரயோசனம், ஆனா அவ என்ன அப்டி நினைக்கலியே வெறும் ஃபிரண்டால்ல நெனச்சிருக்கா? நாம அப்டி அம்மாவோட போயி பேசிருந்தா என்னய தப்பால்ல நெனச்சிருப்பா?” என குருதியுடன் குழைந்து உள்ளமும் கொதித்தது.
தலையைப் பிடித்தவாறே வங்கிப் படிக்கட்டுகளில் அமர்ந்தவனின் தோளில் ஒரு கை வந்து அமர்ந்தது.
தொல்காப்ஸ் நின்றிருந்தான்.
“என்னடா மச்சான் ஒன்னோட ஆளு அப்பாவோட வந்துட்டுப் போறா….என அவனைப் பார்த்தவாறே… ‘ங்க” என்பதை மட்டும் வேண்டுமென்றே தனியாக இழுத்து, “அப்போ, ஒன்னோட ஆசையும் காதலும் சக்ஸஸா படவா சொல்லவே இல்ல” என்று சமயம் தெரியாமல் வேறு நக்கலடித்து கேட்டான்.
சடாரென திரும்பி அவனை முறைத்தபடியே சோக கண்களில் நீர்த்துளி மின்னிட தோளை பிடித்திருந்த அவனது கரங்களை விலக்கி அவனது கரங்களில் அவர்கள் கொடுத்திருந்த பத்திரிக்கையை திணித்தான் முகிலன்.
அதனை வாங்கிப் படித்த தொல்காப்ஸின் விழிகள் மேல்நோக்கி விரிந்தது..
“ஐ….யாம் சாரிடா.. மச்சான். நான் இத எதிர்பாக்கல..வெரி சாரி”..
“இப்ப என்னடா மச்சான் செய்யலாம்”.என தோள்களில் தட்டிக் கொடுத்தவாறே அவனுடன் சேர்ந்து படிக்கட்டுகளில் அமர்ந்தான்.
“என்ன செய்யச் சொல்றே! எல்லாம் விதிடா?” என்றபடியே..
“மச்சான் தலைய வலிக்குதுடா! வாடா போயி கொஞ்சமா காஃபி சாப்பிட்டு வரலாம்”.. என அவனை அழைத்துச் சென்றான்.
o0o
கயலின் கல்யாண தினத்தன்று…
தொல்காப்பியன் பதட்டமுடன் எழுப்பினாலும் எவ்வித ஆர்ப்பாட்டமின்றியும் படுக்கையிலிருந்து எழுந்தமர்ந்தான் முகிலன்.
“ஏண்டா! சம்பந்தப்பட்ட நானே! சாதாரணமா இருக்கேன், நீ ஏண்டா இப்டி பதட்டமாவுற!, இரு குளிச்சிட்டு வர்றேன் ரெண்டு பேருமா சேந்து கல்யாணத்துக்கு போலாம், ஒருவேள கயல் நம்மள எதிர்பாக்கலாம்” என்றபடியே எழுந்தவனிடம்.
“ஏண்டா! பத்திரிக்கை கொடுக்க வந்த அன்னக்கி அப்டி சோகமா இருந்த!, இப்ப என்னடான்னா ஒன்னுமே இல்லாதமாதிரி என்னைய ஏன் பதட்டமாவுறன்னு கேக்கறே நெஜமாவே உனக்கு எந்த ஃபீலிங்க்ஸும் இல்லையாடா மச்சி”..என்றான்..
“டேய்! மனசுக்குள்ள ரொம்ப வருத்தம்தான் இப்ப என்ன ஒடனே போயி கல்யாணத்த நிறுத்தத் சொல்றியா?”.
“டேய் சீசீ…நான் அப்டி சொல்லலடா!, இவ்ளோ வருத்தம்னு சொல்றே பின்ன எப்டிடா போயி அந்த கல்யாணத்த மனசார பாப்ப, நீ இருக்க வேண்டிய இடத்துல இன்னொருத்தன பாத்து மனசு சங்கடப்படாதா?”
“மச்சான்…ஒன்னு சொல்றேன் கேக்குறியா? எனக்கு இப்ப துளிகூட வருத்தம் இல்லடா!” என்றவனை ஆச்சரியமாக பார்த்தான் தொல்காப்ஸ்..
“என்ன அப்டி பாக்குற” என கேட்டபடியே தொடர்ந்தான் முகிலன்..
“மச்சான்… நாம விரும்புற பொண்ணு நம்மகூட எப்டியும் இருந்திடனும், வாழ்ந்திடனும் அப்டினு நெனைக்கிறதுகூட நம்மளோட சுயநலந்தாண்டா”
“ஏன்னு கேளு மச்சி…காதல்ங்கிறது நாம காதலிக்கிற பொண்ணு நல்லா இருக்கணும்னு நெனக்கிறதுல தொடங்குது ஏன்னா! நம்மளோட மனசுக்கு அவள புடிச்சதுனாலத்தானே காதலிக்கத் தொடங்குரோம், அத்தோட அவ வாழ்க்கையும் சுபீட்சமா நம்மளோட அமையனும் அவள சந்தோஷமா கண்கலங்காம அவ விரும்புற எல்லாத்தையும் கொடுத்து அழகு பாக்கணும்னுட்டு நெனக்கிறோம் இல்லயா! அதுதானே நாம அந்தப்பொண்ணு மேல வெச்சிருக்கற உண்மையான காதலா அமைய முடியும்”..
“அப்டி பாக்கப்போனா! என்னோட மூச்சுக்காத்த விட அதிகமா நேசிச்ச என்னோட கயலு!, அவ எங்கிருந்தாலும் நல்லா இருக்கணும், அவ விரும்பற வாழ்வு அவளுக்கு கெடைக்கணும்னு நெனக்கிறேண்டா! அவளுக்கு என்னவிட எல்லா விதத்திலும் மோகன் கரெக்ட்டா இருப்பாருன்னு நம்புறேண்டா!”.
“அத எப்டிடா மச்சான் இவ்ளோ பர்ஃபெக்டா சொல்ற” என்றான் ஆச்சரியமாக தொல்காப்ஸ்.
“அன்னக்கி நாம ரெண்டும் காஃபி சாப்டுட்டு பேசிட்டுப் போனபிறகு எனக்குப் பிடிச்சவளோட வாழப்போற அந்த புண்ணியவான் எப்படி இருக்கான்னு தெரிஞ்சிக்க ஆசப்பட்டு தெரிஞ்சிக்கப்போனேன், ஆஸ்பத்திரியில விசாரிச்சப்பத்தான் தெரிஞ்சுது, அவர மாதிரி ஒரு தங்கமான மனுசன பாக்க முடியாதுன்னுட்டு”…
“அவரு டாக்டர் மட்டுமில்லடா கயல் விரும்பற நற்குணமும், சமூக அக்கறையும் நெறையவே அவருகிட்ட இருக்குடா மச்சான்”
“எப்படி சொல்றேன்னு கேளு அவரோட அம்மா பேருல ஒரு அறக்கட்டள ஆரம்பிச்சி நாடி வர்ற பல ஏழைங்களுக்கு இலவசமா மருத்துவமும் பாக்குறாரு, அத்தோட அப்பாவோட இதுவரைக்கும் தனியா வாழ்ந்த கயலுக்கு அங்க மோகன் மேல பாசத்தை பொழியற பெரிய கூட்டு குடும்பமும் இருக்கு”
“எங்கயோ! ரோட்டுல பாக்குற மனுஷங்களோடலாம் இரக்கம் காட்டி அன்பு செலுத்துற கயலுக்கும் இது மாதிரி ஒரு பொருத்தம் அமையுறதுதானே சரியா இருக்கும்”.
“அங்க என்னோட மனசுக்கு பிடிச்ச கயலு நல்லா வாழணும்டா… நல்லா வாழ்வா! அதப் பாத்து நான் காலத்துக்கும் சந்தோஷப்படணும் அதுல என்னோட காதல் வாழ்ந்துடும்டா அது போதுமெனக்கு”.
“தோ! இரு வரேன், இந்த சந்தோஷமான நாளுல அவளோட சந்தோஷத்த பாக்க எம் மனசு ரொம்ப ஆசைப்படுது” என குளியலறை நோக்கி சென்றவனை நிறுத்தி கட்டியணைத்து…
“தான் ஒருதலையா காதலிச்சாலும், தன்னவிட்டுட்டு வேற யாரையும் தன்னோட காதலி கைப்பிடிச்சு வாழ்ந்திடக்கூடாதுன்னு இல்லாத பொல்லாதத சொல்லி மெரட்டி அவ வாழ்க்கைய கெடுக்குற.. ஏன் சமயத்துல அவள கொலகூட செய்யத் துணியிற பொல்லாத காதலனுங்க வாழுற காலத்துல தனக்குப் பிடிச்சவள ஒசந்த எடத்துல ஒக்கார வெச்சி அழகு பாக்கணும்னு நெனக்கிரப்பாரு உன்னோட காதலின் ஆன்மா பலம் பொருந்தியதுடா மச்சான்”.
“இது தாண்டா ‘GOAL’ ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் லவ்”
என அவனின் காதுகளில் கிசுகிசுத்தான் தொல்காப்பியன்.
000
பாகை இறையடியான்
நிலத்தின் பல்வேறு சமூக கலப்புகளுக்குள் கலந்திருக்கும் நிகழ்வுகளின் தொகுப்பாய், மானுட வம்சத்தின் பல்வேறு நிகழ் கலவைகளை ஒரு கலசத்திற்குள் கடைந்தெடுத்து அதில் என் மொழியாடலில் சொற்கூட்டி, சுவை கலந்து தங்கள் கண்ணுக்குள் பரிமாறி நெஞ்சுக்குள் செரிமானமின்றி நிறைந்து நிற்க படைப்புகளை பரிமாறுகிறேன்.
இயற்பெயர் அப்துல் ரஹ்மான் தந்தை பெயர் பஷீர் அஹமது (ஆசிரியர்) நாகை மாவட்டம் பாக்கம் கோட்டூர் எனும் சிற்றூரில் பிறந்தேன். தமிழ்மேலும், பிறந்த தலத்தின் மேலும் கொண்ட பிரியத்தினால் எனது பெயரை தமிழ்ப் படுத்தியும், எமது ஊரின் பெயரை சுருக்கியும் பாகை. இறையடியான் எனும் பெயரில் சமூக வலைத்தளங்களிலும், இதர மின்னிதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறேன்.