எடுத்துட்டம்னா கீழ வைக்க முடியாதுங்!

தான் வாழும் பகுதியின் சுற்றுச்சூழலை உள்வாங்கி, தான் சந்திக்கும் மனிதர்களின் போக்குகளை உள்வாங்கி, வளர்ச்சியடையும் ஊரின் பழைய தொன்மங்களை மறக்க இயலாத ஆத்மாவாகவும் தனக்குள்ளேயே முனகிக்கொண்டு ஞாபகங்களின் சுவடுகளை எங்கேனும் கொட்டித்தீர்ப்பவனை கலைஞன் என்று சமகாலத்தில் சிலரேனும் பாராட்டுகிறார்கள். தான் வாழும் சமூகத்தைச் சார்ந்தே உயிர்வாழும் கலைஞன் மனதில் எண்ணற்ற கற்பனைகளும், ஆசைகளும் உயிர்த்துடிப்போடு இருக்கின்றன. வாழ்க்கைச்சூழலோ அவனுக்கு நேர்மாறாய்த் தான் இருக்கிறது. வாழவும் செய்ய வேண்டும்.. கூடவே சமயம் கிட்டும் போதெல்லாம் ஆழ்மன ஏக்கங்கங்களை பதிவாக்கவும் வேண்டும்.

கலைஞன் பொதுவெளியில் சாதிக்காரனாகவும் வாழவேண்டிய நிர்ப்பந்தம் உச்சபட்ச கொடுமைகளில் ஒன்று. கலைஞனுக்கென்று சுற்றம், ஊர் இருக்கிறது. அதில் சாதிய பாகுபாடுகளும் இருக்கிறது. மேன்மைகளும், கீழ்த்தரங்களும் இணைந்தது தான் சமூகம். எல்லாக்காலத்திலும் இது இருந்துகொண்டேதான் இருக்கிறது. காலவளர்ச்சியில் அதுவும் தன்னை வளர்த்திக்கொண்டே வந்துவிட்டது. கலைஞனின் கோபமோ, தாபமோ கூட நிரந்தரமாய் இருப்பதில்லை. எல்லாமே அப்போதைக்கு அப்போதுதான். சென்ற தலைமுறை எழுத்துக்களோடு இன்றைய தலைமுறையின் எழுத்து ஒத்திசைந்து போவதில்லை.

இலக்கியம் என்பதற்கான வரைமுறைகள் சென்ற தலைமுறையினரிடம் நீண்ட காலம் இருந்துவந்தது. எல்லாம் வழக்கொழிந்து போய்விட்ட காலத்தில் இருக்கிறோம். ஒவ்வொரு துறையிலிருந்தும் புதிய புதிய எழுத்தாளர்கள் வருவதை காண்கிறோம். எழுத்துக்களில் சமூக அக்கறை வேண்டும் என்றார்கள் முன்பாக. அதுவெல்லாம் அவசியமேயில்லை என்றாகிவிட்டது. இன்றைய சில கலைஞர்கள் சாதி, இனவாத, மதவாத ஆளுகைக்கு உட்பட்டவர்களாகவும் தங்களை பிரகடனப்படுத்திக்கொள்ளவும் தயக்கம் காட்டுவதில்லை. எழுதுவதெல்லாம் இலக்கியம் என்கிற கூட்டத்தினிடையே பதிப்பாளர்களும் ‘அந்த 40 பிரதிகளுக்காகத்தானே!’ என்றே களமிறங்கிவிட்டார்கள்.

இப்படியான கால வளர்ச்சியில் உண்மையாகவே உயிரோட்டமுடன் எழுதும் கவியோவியத்தமிழன் மாதிரியான படைப்பாளிகளின் படைப்புகள் காலவெள்ளத்தில் திசை தெரியாமல் அடித்துப்போய்விட்டால் நஷ்டம் வாசிப்பாளர்களுக்குத்தான். புனைக்கதை குறித்தான எந்த மட்டையும் உணராத படைப்புகளும், படைப்பாக்க முயற்சியே இல்லாத படைப்புகளும்.. பெரும் படைப்பென்று கவர்ச்சியாக வெளிவந்துகொண்டிருக்கிற காலத்தில் கவியோவியத்தமிழனின் தொகுப்பு நினைவோட்டக் கதைகளாயும், கிராமிய மக்களின் அன்றாடவாழ்க்கை முறையை மிகமிகச்சாதாரணமாய் படம் பிடித்துக்காட்டி நிறைவாய் வந்திருக்கிறது ‘விதிமுறைகளற்ற ஆட்டங்கள்’ தொகுப்பு.

தொகுப்பை வாசித்து முடித்ததும் நமக்கெல்லாம் தோன்றுவது ஒன்று தான். ‘இந்தச்சமூகம் இப்படியெல்லாம் மாற்றத்துக்கு உள்ளாகிவிட்டதே! மழையை இழந்ததற்கும், கிணறுகள் வரண்டு போனதற்கும், பூச்சி பொட்டுகள் காணக்கிடைக்காமல் போனதற்கும் நாம்தானே காரணம்! ஆமாம்! ஆனால் இந்த மாற்றம் எவ்விதமாகவோ சிறுகச்சிறுக நடந்தேறி இன்று நம்மிடையே முழுதாய் ஆக்ரமித்து விட்டதே!’ இவரது கதையில் வரும் குரல் போல..’இன்னைக்கி நம்ம கோயில் மோல்டிங்ல பங்களா கணக்கா இருக்கு. பல்லிங்க எப்படி இங்கே வாழும்? சயனம் உங்களுக்கு எங்கிருந்து சொல்லும்? மறுக்காவும் மண்சுவர் எழுப்பி, சோளத்தட்டையில் கூரை மேய்ஞ்சி பழைய கோயிலா மாத்தணும்’ – மீண்டும் கூரை மேய்வது என்கிற விஷயம் நடைமுறைக்கு சாத்தியமாகாதுதான். ஆனால் பல்லி சயனம் சொன்னால் தான் திருவிழா நடத்தணும் என்கிற பழைய சம்பிரதாய முறையில் குறி கேட்க அமர்ந்திருக்கும் கூட்டம் அங்கிருக்கிறதே!

சாதாரணமானவர்கள் ஊரையும் அங்கு வாழும் மனிதர்களையும் பார்க்கும் பார்வைக்கும், ஒரு கலைஞன் அதே மனிதர்களையும் ஊரையும் பார்க்கும் பார்வைக்கும் வித்தியாசம் இருக்கிறது. ’எலிக்கறி’ கதையானது நடுகல் இதழில் வெளியானது என்கிற குறிப்பு இருந்தது. எனக்கு மறதி சமீப காலங்களில் அதிகரித்துவிட்டது. இருந்தும் மீண்டும் புதியதான ஒரு சிறுகதையை வாசிப்பதான மனநிலையில் வாசித்தேன். வயல்களில் எலித்தொல்லைக்காக கம்பி போட்டு கரண்ட் வைப்பது இந்தப்பகுதிகளில் இல்லை. காலையில் மடிந்த எலிகளை சாக்கில் அள்ளிப்போட்டுக்கொண்டு சொந்தபந்தங்களுக்கெல்லாம் கொடுத்துவிட்டு வீடு செல்லும் அண்ணன் தம்பிகள் மனம் முழுக்க நிரம்பியிருந்தார்கள்.

எனக்குப்பின்னான தலைமுறை வேட்டையை கிராமங்களில் மறந்துவிட்டது. அவர்கள் கைகளில் அலைபேசிகள் முளைத்துவிட்டன. வேட்டை ஒவ்வொருவருக்குள்ளும் ஆர்வத்தையும், சோர்வையும் கூட மனதில் தராது. முருகன் மூன்று எலிகளை வில்லால் தட்டி லேப்பினான் என்றால் பொன்னானும் நான்கைந்தை தட்டிலேப்பிவிடும் ஆர்வத்தை வேட்டை உருவாக்கும். வேட்டைக்குச் செல்லும் நாய்களுக்குக்குள் கூட போட்டிகள் இருக்கும். காடு மேடெல்லாம் அலைந்து திரிந்தாலும் பசி தெரியாது. வேட்டை மும்மரத்தில் பசியாவது ஒன்றாவது! ‘எலிக்கறி’ கதையானது சம்பவங்களின் கோர்வையாயும், தகவல் களஞ்சியமாகவும் இறுதிவரை சென்றாலும் ஒரு சிறுகதையாக மாறுவது கதையின் இறுதிப்பகுதியில் தான். இப்படி சில கதைகள் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன.

’காலத்தின் ஒப்பனைகள்’ சிறுகதையானது பழனியப்பன் என்கிற நாடகக்கலைஞனின் இறப்பைச்சொல்லி துவங்குகிறது. பின்பாக அவரது திருமணமாகா வாழ்வை சொல்லிச்செல்லும் கதையானது அவரது காதலையும் அழகுறச் சொல்கிறது. அரிதாரப்பெட்டி சுடுகாட்டில் அவரது குழிமேட்டுக்கு சற்றுத்தள்ளி திறந்த நிலையில் கிடக்கிறது. கலைக்காக வாழ்ந்தவனின் உயிரே அந்தப்பெட்டியில் தான் இருக்கும். வாழ்ந்தவன் போய்விட்டான்.. பெட்டியும் யாருக்கும் தேவையில்லை! சிறுகதையாக வடிவ நேர்த்தியிலும், சொல்முறையிலும் வெற்றிபெற்ற கதை இது.

இவரது அனைத்துக்கதைகளிலுமே உள்ளே வரும் ஆட்களை வாசகர்களுக்கு அறிமுகம் செய்விக்கும் தன்மை இருக்கிறது. ‘பெருங்காற்று’ கதையில் தன்னை ஏமாற்றுக்காரனிடம் இழந்த பெண் திடீரென கோவிலில் தோன்றி கடவுளிடம் புலம்புகிறாள். அவளுக்கு அறிமுகம் தேவையில்லை என்பதாகவும்..கதைசொல்லி முடிவெடுத்திருக்கலாம். நன்றாக வந்திருக்க வேண்டிய சிறுகதை இடறி நிற்கிறது. இங்கே ‘காமப்பிழை’ என்கிற கதை தொகுப்பில் ஏன் சேர்க்கப்பட்டது? என்று வாசித்தவுடனே யோசித்தேன். அப்படியொன்றும் அது மற்ற கதைகளைப்போல நீள் கதையுமல்ல. அப்படியொன்றும் மிகச்சிறப்பான கதையுமல்ல. இந்தக்கதை ஏனோ தொகுப்பில் தனித்து பிடிமானமில்லாமல் தொக்கி நிற்கிறது.

பேருந்து பயணத்தில் ஒருவனுக்கு நேர்ந்த அனுபவத்தை சொல்லும் சம்பவமாக ‘பயணவழிக் குறிப்பு’ கதை அமைந்திருக்கிறது. குடிகாரன் போதையில் என்னவென்ன சமுதாய சீர்திருத்தங்களை கொண்டு வந்தால் இந்த நாடு உருப்படும்! என்கிற வகையில் இன்னமும் அந்தக் குடிகாரரை அதிகம் பேச விட்டிருக்கலாம். ரகளையான கதையாக வந்திருக்கும். முடிவில் அவர் ஷீட்டில் மலம், மூத்திரம் பெய்து பீஸ் போய்விட்டார் என்று சொல்லி முடிகிறது. சம்பவம் உண்மையாகவே நடந்திருக்கலாம். படைப்பாளியின் கையில் இது வேறுவிதமாய் உருமாறியிருக்கலாம்.

’பெரிய காரியம்’ கதையானது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு பெயரிட்டு ஏதேனுமொரு ஆட்டின் மீது குடும்பமே அதீத பாசம் வைத்து வளர்க்கும் கதை. அந்த ஆடானது தனக்கான சலுகையை உணர்ந்து அதிகமான உரிமையையும் வீட்டினுள் எடுத்துக்கொள்ளும். அந்தவிதமாய் வளர்க்கப்படும் ஆட்டை குடும்ப சூழ்நிலை காரணமாக (மாடும்) விற்கவேண்டிய நிலையை விவரித்த… கோயில் திருவிழாவுக்கு சாமிக்கு வெட்டி விருந்து படைக்கையில் அழும் குடும்பமென.. சில கதைகளை முன்பாக வாசித்திருக்கிறோம். இந்தக்கதையில் அப்படியான நிகழ்வுகளை புறங்கையால் ஒதுக்கிவிட்டு வேறுவிதமான முடிவை நோக்கி சென்று முடிந்தது. ரசிக்க முடிந்த கதை.

ஆறுமுகம் என்கிற மனிதர் ஊரில் வாழ்ந்தார். திடீரென காணாமலும் போகிறார். மனநிலை கோளாறு உள்ளவராகவும், சுறுசுறுப்பானவராகவும், இனிமையானவராகவும் அவர் காண்பிக்கப்படுகிறார். ஒருமுறை காணாமல் போகையில் வேற்றூரில் அவர் போல பிணம் கிடக்கிறதென பார்த்து சடங்கும் நடந்துவிடுகிறது. பிற்பாடு ஊருக்குள் மீண்டும் அவர் முளைக்கிறார். ’எங்கே சென்றிருந்தாய்?’ என்கிற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லக்கூடிய நபருமல்ல அவர். கொரனா சமயத்தில் மீண்டும் காணாமலாகிறார். ‘சித்தர்கள், மகான்கள், துறவிகள் ஒருபோதும் சாக மாட்டார்கள். காணாமல் தான் போவார்கள்!’ என்கிற கருத்தை அப்பா சொல்ல கதை முடிவுக்கு வருகிறது. இந்தக்கதை குறுநாவலுக்குண்டான விஷயங்களை தன்னகத்தே கொண்டிருந்தது.

‘போட்டிக்கு அனுப்பாத கதை’ சிறுகதையும் தொகுப்பில் தொக்கித்தான் நிற்கிறது. தொக்கி நிற்கிறது என்று நான் சொல்வது தொகுப்பின் மற்ற கதைகளுக்கு இணையாய் ஜோடி சேர்ந்து நிற்க அந்தக்கதையால் முடியவில்லை என்பதே! எல்லாக்கதைகளும் நன்றாக இருக்க வேண்டும் என்றால் எப்படி? தொகுப்பென்றால் எல்லாமும் கலந்து தானிருக்குமே! சொல்லலாம். ஆசிரியரது ‘முதல் தொகுதி ‘ஊடாடும் வாழ்வு’ வெளிவந்து பதினைந்து வருடங்களாகிவிட்டது. ஊடாடும் வாழ்வு தொகுதியில் மணி மணியான கதைகளை படித்த ஞாபகம். அதிலிருந்தும் சிறப்பானவற்றை எடுத்து சேர்த்திருக்கலாம். பெயருள்ள பதிப்பகத்திலிருந்து வரும் புத்தகம் இதுவரை ஆசிரியர் கண்டறியாத புதிய வாசகர்களின் பார்வைக்குச் செல்லும். அவர்களுக்கு ஆசிரியரைப்பற்றி எதுவும் தெரியாது. ஆசிரியரின் கதைகள் தான் அவர்களிடம் நின்று பேசும்.

’வழுக்கையன் கிணறு’ கதையானது அழிந்து விட்ட சொரப்புருடை கொண்டு நீச்சல் பழகும் சிறுவர்களை சொல்கிறது. அடியாழத்தில் முக்குளித்து மண்ணை கையில் எடுத்து வந்து சக நண்பர்களிடம் பெருமையாய் காட்டும் வீரனுக்கு அதனாலேயே காது செவிடாய் போன செய்தியையும் சொல்கிறது. ஊர்ப் பெரியதனம் மனைவி சப்தமெழுப்பாமல் மதிய நேரத்தில் வந்து குளித்துப்போவதை சொல்கிறது. கதை முழுதுமே வழுக்கையன் கிணற்றைச்சுற்றியே நகருகிறது. கால நகர்வில் வழுக்கையன் கிணறு வற்றிப்போகிறது. ஆழ்துளை குழாய் அமைத்து வசதி படைத்தவர்கள் தங்கள் தோட்டங்களை காப்பாற்ற முயற்சிக்கிறார்கள். வசதி இல்லாதப்பட்டவரின் கிணறு வற்றிப்போகிறது. மழையை எதிர்பார்த்து வானம் பார்க்கும் குறுவிவசாயிகள். அப்பா என்கிற மனிதர் தொகுப்பில் எல்லா கதைகளிலும் ஒரு குறியீடாகவே பயணம் செய்கிறார். கிணற்றில் தவறி விழுந்து தலையில் அடிபட்டு இறந்த அப்பாவினைக்காட்டி கதை முடிகிறது.

சோகமான முடிவுகளை முடிந்த அளவு கதைகளின் இறுதியில் வைப்பதை ஆசிரியர் தொடர்ந்து செய்கிறார். அல்லது அதில் தான் சாமார்த்தியம் இருப்பதாய் நம்பிச் செய்கிறாரோ என்கிற எண்ணமும் எனக்கு இந்தக்கதையை தாண்டுகையில் தோன்றியது. நடுகல் அச்சிதழாக வருகையில் வெளிவந்த கதை. தனிக்கதையாக இதழ் வாயிலாக வாசிக்கையில் சோக முடிவுகள் தெரிவதில்லை. தொகுப்பாக வரிசையாக வாசிக்கையில் ஒரு பொதுக்குணம் வெளிப்படுகிறது.

’அவர்களின் சண்டை’ கதையும் அட்டகாசமான புதுமண தம்பதிகளைப்பற்றி சொல்கிறது. தினமும் அவர்கள் வீட்டில் நடத்தும் சண்டை தான் மற்றவர்களுக்கான காட்சி. யாரும் இடையில் நுழைந்து தடுக்கவும் முடியாது. பின்பாக அவர்கள் இணக்கமாய் கொஞ்சிக் குழாவியும் கொள்கிறார்கள். வாழ்க்கை அப்படித்தான். சிலர் அதன் போக்கிலேயே வாழத்தான் செய்கிறார்கள். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப்பற்றியான கவலைகள் அற்றவர்கள் அவர்கள். ஊருக்காக நடித்து வாழ்பவர்களல்ல அவர்கள். தங்களுக்காக வாழ்பவர்கள். வருடங்கள் கழிந்து குழந்தை ஒன்று அவள் வயிற்றில் உருவானதுமே அந்த வீடு அமைதியாகிறது. ஊருக்கே அது அதிசயம் தான். அங்கேயே கதை முடிந்தது. ஆசிரியர் கணவனை காசத்தில் கொல்கிறார். தொடர்ந்து கர்ப்பவதியையும் கொல்கிறார். வாசக மனதில் துக்கமெதுவும் தோன்றச்செய்யாத முடிவு.

‘வன நீட்சி’ என்கிற கதை தொகுப்பின் மிகச் சிறந்த கதை. வெளிநாட்டு கம்பெனிகளால் இயற்கை வளம் அழிக்கப்படுவதை பேசும் கதை. சாதாரண வாசகனுக்கும் புரியும் விதமாய் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். இதிலும் மலையில் பச்சிலை பறித்து வந்து வைத்தியம் செய்யும் அப்பா வருகிறார். பச்சிலைகள் கிடைக்காத காலத்தை அவர் வெறுக்கிறார். அவருக்கு மூலிகைச் செடிகளின் அழிவுக்கான காரணம் விளங்கவில்லை. ஊராருக்குமே தாங்கள் செய்யும் பணியின் கொடூரம் புரியவில்லை. எல்லாம் புரியவருகையில் மலையின் வளம் காலி. மழையும் காலி.

’கண்காணிப்பு’ சிறுகதை குடிகாரகாரனை கணவனாய் அடைந்த சாதாரண பெண்ணின் கோபம் எப்படியாய் உருமாறி நிற்கும்.. என்பதற்கான அடையாளம். சுருக்கமாய்ச் சொல்லப்பட்ட அழுத்தமான கதை. கதையினுள் ஒரு வாழ்க்கையே ஒளிந்து கண்ணாமூச்சி காட்டி நிற்கிறது.

’நல்ல சோறு’ கதையானது நண்பரின் மனைவி பசி நேரத்தில் கணவரின் நண்பர்களுக்கு ஆக்கிப்போட்ட கதையை சொல்கிறது. அதே பெண்ணின் இறப்புக்குச் சென்ற கதை சொல்லி ’அன்று ஆக்கிப்போட்ட உணவுக்கு இணையான சாப்பாடு இன்று வரை இல்லை தாயே!’ என்று சொல்லி தழுதழுக்கிறது. கதைக்கான களன்களை தேர்ந்தெடுப்பதில் மிக சாமார்த்தியசாலியாக ஆசிரியர் இருக்கிறார். எவ்விதம் வாசகருக்கு சொல்லிச்செல்ல வேண்டும் என்பதில் தெளிவாகவே இருக்கிறார்.

‘சுழல்’ சிறுகதை இளைஞனின் காம ஆசையை நேர்த்தியாக சொல்கிறது. அவனுக்குள் இருக்கும் படபடப்பை வாசகனுக்குள்ளும் நகர்த்திவிட முடிந்த அளவு முயற்சிக்கிறார் ஆசிரியர். கதைசொல்லி தேடிப்போகும் ஆர்வத்தையும்.. பாதையையுமே விவரிக்கிறார். சீக்கிரம் போய்ச் சேருடா! என்று வாசகர்களே சொல்லுமளவு நீட்டிக்கிறார். அந்தப்பெண்ணோ திருமணமான தன் மாமனின் சூழ்ச்சியால் கர்ப்பமாகி குழந்தை ஈன்றவள். ஊரில் அவளுக்கு எந்த மதிப்பும் கிடையாது. அவள் குடும்பத்துக்கே கிடையாது. இளைஞனுக்கு அது ஒரு வாய்ப்பு. அந்தப்பெண்ணின் அலைபேசி அழைப்புகூட ஒன்றுமறியாத பெண்ணின் அழைப்பாக இருக்கிறது. முடிவு ஆசிரியரின் சாமார்த்தியம் தான். வாசகர்களுக்கு அது அதிர்ச்சி தான். எழுதிய ஆசிரியரும் கதையை முடித்தபிறகு இரண்டு நாட்களேனும் அதிர்வில் இருந்திருப்பார்.

‘விதிமுறைகளற்ற ஆட்டங்கள்’ தொகுப்பின் தலைப்புக்கதை நடுகல்லில் வெளிவந்த கதை. இதுவும் வேட்டைக்காரனின் கதை தான். எலி, அணில், பறவைகள் என்று வேட்டையாடுபவன் ஊர் பெரியதனத்தின் பெண்ணையும் வேட்டையாடுகிறான். அது புதிய ரசனையான வேட்டை தான். கதை அங்கேயே முடிந்தது.

‘கடவுளின் பிரார்த்தனை’ கதையானது குடும்பக்கதை. தன் பிள்ளைகள் ஆசைப்பட்ட கறிக்கொழம்பு உணவை சாப்பிட வைக்க இன்று எப்படியேனும் வாங்கிப்போய்விடவேண்டுமென்ற தகப்பனின் ஆசைகள் நிராசையாகிறது. ப்ளக்ஸ் காலத்தில் வாழும் சாதாரண எழுத்துப் பெயிண்டரின் கதை. மனைவியின் தயவால் பிள்ளைகள் சாப்பிடும் அழகை பார்த்தபடி படுத்திருக்கும் கதை சொல்லியை காட்டி முடிகிறது.

இறுதிக்கதையாக ‘பேசா சயனம்’ கிராமத்தில் கோயில் திருவிழா பற்றி ஊரே கோயிலின் முகப்பிலமர்ந்து முடிவெடுக்கும் கதை. பழைய சம்பிரதாயங்களை மாற்றினால் தான் திருவிழா நடக்கும் என்பதைச் சொல்லும் கதை. இதில் அகோரி போல் தோற்றமளிக்கும் இரு சாமியார்கள் கோவில் திருவிழா நடைபெறுவதற்காக சொன்ன வழிமுறைகள் அட்டகாசம்! ரசித்தேன்.

கவியோவியத்தமிழன் தொடர்ந்து வேகமாய் இந்த இலக்கியச் சூழலில் இயங்காதவர் தான். வாழ்க்கைச்சூழல் படைப்பாளியை மிக எளிதாக முடங்கச் செய்துவிடும். இருந்தும் கலைத்தாகம் அவரை விட்டால் தானே! இந்தத் தொகுப்பு பேசப்படுகையில் அவர் சுறுசுறுப்பாக நேரம் ஒதுக்கி இயங்கச் செய்யும் சம்பவம் நடந்தால் எனக்கு மகிழ்ச்சியே!

-விதிமுறைகளற்ற ஆட்டங்கள் (சிறுகதைகள்) வெளியீடு – Be4 BOOKS. விலை :- 230.

வா.மு.கோமு

‘வாழ்க்கை நம்மை வாழவே அழைக்கிறது!’ என்கிற வார்த்தையை அடிக்கடி நண்பர்களிடம் சொல்பவரான இவருக்கு அதை ஏன் அடிக்கடி சொல்லிக்கொள்கிறோமெனவும் சுத்தமாக தெரியாது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *