“அப்பா அம்மா கிட்ட சொல்லுங்கப்பா. இந்த வாரம் தமிழ் படம் போடுறாங்க. ப்ளீஸ் பா, ப்ளீஸ் பா” என்று அப்பாவின் முன்பு நின்று குதித்தபடியே கேட்டுக் கொண்டிருந்தாள் இளவரசி.
“மொதல்ல ஜங்கு ஜங்குன்னு குதிக்கிறது நிறுத்து. நீ திங்கற சோறு குதிக்கிறதுக்கே பத்தாது. எப்ப பாரு குதிச்சுக்கிட்டே. எங்காச்சி திங்கற சோறு உடம்புல ஒட்டி இருக்குதா. நரம்பாட்ட இருக்கிற. நாயித்துக்கெழமை போறதுக்கு உங்க அம்மா பேயாட்டம் ஆடுவா. நாங் கேக்க மாட்டேன் போ. நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை தானே. நாளைக்குப் போயி பாத்துக்கோ”
“போங்க அப்ப, அப்பா ப்ளீஸ் பா மேரி, ராதிகா, ஜோசப், மேனகா, வேலு, சுந்தர் எல்லாரும் போறாங்கப்பா”.
அந்த நேரம் கஸ்தூரி வரும் சத்தம் கேட்டு இருவரும் அமைதியானார்கள்.
”என்ன அப்பனும் பிள்ளையும் பேசிகிட்டு இருந்தீங்க. அப்படி என்ன செதம்பர ரவசியம் நா வந்ததையும் நிறுத்திட்டீங்க? நாளைக்கு ஞாயித்துக்கெழமை பெருந்தர சந்தைக்கு போவீங்க. ஏதாச்சு வாங்கியாரச் சொல்லி கேட்டுகிட்டு இருக்கிறாளா? எப்ப பாரு இதே பொழப்பு. சங்கு சங்கு என்று குதிச்சுக்கிட்டு. ஏதாச்சி கேக்க வேண்டியது. இந்த வெவரம் கெட்ட மனுஷனும் வாங்கிட்டு வந்து கொடுத்திட வேண்டியது. காசு என்ன மரத்திலேயா காய்க்குது” என்று முனகியவாரே கையில் கொண்டு வந்த விறகை வலது கையில் இருந்து இடது கைக்கு மாற்றியபடி உள்ளே சென்றார் கஸ்தூரி.
சந்தானத்திற்கும் கஸ்தூரிக்கும் திருமணம் ஆகி 12 வருடங்கள் முடிந்தது. இளவரசி, மல்லிகா என்ற இரண்டு பெண் குழந்தைகள். கஸ்தூரி வருவதற்கு முன்பு விவசாயம் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார் சந்தானம். இப்போது கைத்தறியும் போட்டு இருக்கிறார். அதோடு ஆடு மாடுகளையும் சேர்த்து வளர்த்துக் கொண்டிருந்தார்கள். இதில் 70 சதவீத வேலை கஸ்தூரியுடையது. கஸ்தூரி ஒரு பாட்டாளி. இளவரசிக்கு 8 வயசு மல்லிகாவிற்கு 10 வயது இவர்களோடு சந்தானத்தின் அப்பா மாணிக்கமும் இருந்தார்.
“அப்பா நீங்க மட்டும் அம்மாகிட்ட கேட்டு சம்மதம் வாங்கி தரல பொட்டி கடைக்கு போயி அம்மாவுக்கு தெரியாம சிகரெட் வாங்கிட்டு வந்து தரமாட்டேன். அம்மாட்ட சொல்லிடுவேன்” என்று மிரட்ட ஆரம்பித்தாள் இளவரசி.
இளவரசிக்கு எந்த நேரத்தில் கெஞ்ச வேண்டும். எந்த நேரத்தில் கொஞ்ச வேண்டும். எந்த நேரத்தில் மிரட்ட வேண்டும் என்று தெரியும். எவ்வளவோ கெஞ்சி பார்த்தும் அடிபணியாத அப்பாவிடம் மிரட்டுவது தான் ஒரே வழி என்று மிரட்ட ஆரம்பித்தாள்.
“ஏய் வாயாடி, பாத்தியா என்னவே பிளாக் மெயில் பண்றே. சரி சரி அம்மா கிட்டச் சொல்லிடாதே. நான் எப்படியாச்சு கேட்டுட்டு வந்து சொல்றேன்” என்றார் சந்தானம்.
“அப்பா இப்பவே மணி 12 ஆவது. ஒரு மணிக்கு போட்டுருவாங்கப்பா” என்று கத்தினாள் இளவரசி.
“செரி செரி கத்தாதே, இங்கியே இரு” என்று குசு குசுவென்று கூறிவிட்டு வீட்டிற்குள் சென்றார் சந்தானம்.
வெளியில் இருந்து என்ன நடக்கிறது என்பதை எட்டி எட்டி பார்த்து கொண்டு இருந்தார்கள் மல்லிகாவும் இளவரசியும்.
உள்ளே சென்ற சந்தானம் “கஸ்தூரி, இளவரசியும் மல்லிகாவும் ரேடியோ ரூமுக்கு படம் பார்க்க போகணும்னு கேக்குறாங்க” என்று சொன்னது தான் தாமதம்.
“நீங்க செல்லம் கொடுத்து கொடுத்தா ரெண்டு பேரையும் கெடுத்து குட்டிச்சுவராக்கி வச்சிருக்கீங்க. இங்க எத்தனை வேலை இருக்குது! மாட்டுக்கு புண்ணாக்கரைக்கனும், தொண்டு பட்டியலில் கட்டி இருக்கிற ஆடுகள அவுத்து மேய்க்கணும், கழுநீர் தண்ணி எடுக்க போகணும். நான் ஒருத்தியே எத்தனை வேலை செய்ய முடியும்? நீங்களும் மேக்க கெளம்பி போயிடுவீங்க. என்னமோ கலெக்டர் ஆபீஸ் வேலை மாதிரி. போயி அங்க நாயம் பேசிட்டு நான் எல்லா வேலையும் முடிச்சு வீடு வந்து சேரும்போது வந்து சேருவீங்க”
“இன்னைக்கு வேணா நான் மேக்கப் போவுல. நானும் உன் கூடமாட ஒத்தாசைக்கு வாரேன்” என்றார் சந்தானம்.
”அவள் சொன்னதுக்கெல்லாம் தலையாட்டி இருந்தோம்னா புடிவாத எச்சாயி போயிரு. அதுவும் அந்த எலவரசி இருக்கிறாளே ஒரு காசுக்கு ஆவ மாட்டா. என்ன சொன்னாலும் புடிவாதம். இந்தப் புடிவாதம் அவளை எங்க கொண்டு போய் நிறுத்தும்னு தெரியல. நீங்க ஒரு பக்கம். உங்க அப்பனொரு பக்கம். அவளுக்கு செல்லம் கொடுத்தே கெடுக்குறீங்க”
“அட இப்ப என்ன கேட்டுப்புட்டே. மத்தியானம் போயிட்டு சாயங்காலம் வந்துடுவாங்க. பாவம் புள்ளைங்க லீவு வுட்டா எத்தனை வேலை செய்றாங்க சொல்லு. இந்த தெருவுல யாராச்சு என் பிள்ளைகளாட்ட வேலை செய்றாங்களா? உன்னை பார்த்தா பயந்துட்டு கிடக்குறோம் நாங்க”
”ரொம்பத்தே வக்காலத்து வாங்கறீங்க. சந்தடி சாக்குல எனக்கு கொடுமைக்காரி மாதிரி சொல்றீங்களே. அப்படியே பயந்துட்டு கெடக்குறீங்களாக்கும்”
“அப்படி சொல்லல. கொஞ்சம் பயந்தே. மத்தபடி உன்னை மாதிரி ஆரு வருவாங்க. எத்தனை வேலை செய்யுற” என்று அப்படியே குரலை இறக்கினார் சந்தானம்.
என்ன பேசினாலும் கடைசியில் இரு வார்த்தை புகழ்ந்து விட்டால் கஸ்தூரி கொஞ்சம் அடங்கி விடுவாள் என்று இத்தனை வருட வாழ்க்கையில் சந்தானம் கற்று வைத்திருந்தார்.
“இருட்டுறதுக்குள்ள வூடு வந்து சேந்துரனும்னு சொல்லிருங்க.” என்று கூறிவிட்டு அடுப்பில் புகைந்து கொண்டிருந்த நெருப்பை ஊது குழல் வைத்து ஊதினார்.
மல்லிகாவும் இளவரசியும் அப்பாவின் கால்களை வந்து கட்டிக் கொண்டார்கள்.
”செரி செரி வுடுங்க. நான் தோட்டத்துக்குப் போயி தண்ணி வாத்துட்டு வரேன்” என்று அங்கிருந்து நகர்ந்தார். சற்று தூரம் நடந்து விட்டு, “இருட்டு உழுவறதுக்குள்ள வந்துருங்க. பத்திரமா போயிட்டு வாங்க” என்று கூறிவிட்டு சென்றார்.
மல்லிகா அரிசிச் சாக்கு ரெண்டு எடுத்துக் கொண்டு செவ்வாய்க்கிழமை சந்தையில் வாங்கி வைத்திருந்த நவுத்துப்போன பொறியை பிளாஸ்டிக் பேப்பரில் எடுத்து போட்டு முடிந்து வைத்துக் கொண்டாள். இருவரும் கிளம்பத் தயாரான போது வெளியே வந்த கஸ்தூரி, “மல்லிகா எதுக்கு சாக்குப் பையி? சாகுப்பைய உள்ள போட்டுட்டு போங்க” என்று கூறிவிட்டு மைகோதியை எடுத்து தலையை சிக்கெடுக்க ஆரம்பித்தார்.
“அம்மா சாக்குபை இல்லைனா மண்ணுல தான் உட்காரணும்”
“மண்ணுல உக்காந்தா உங்கள ஒன்னும் கரையான் அரிச்சு தின்னு போடாது”
“அதுக்கு இல்லம்மா, துணி எல்லாம் அழுக்காயிருமா” என்று துணியை நீவியப்படியே கேட்டாள் இளவரசி.
“ஆகா இப்ப மட்டும் உங்க துணியில ஒரு அழுக்கு கூட இல்லப்பாரு. ஊர்ல இருக்குற அத்தனை புழுதியும் உங்க துணியிலதே இருக்குது. போன வாரம் நாயித்துக் கெழம சாக்குப்பையே எடுத்துட்டுப் போயி தொலைச்சு போட்டு வந்தீங்க. என்ன ஞாபகம் இல்லையா? காசு மரத்தில காய்க்குதா? சத்தம் இல்லாத போய்டுங்க. இல்லைனா படமும் பார்க்க வேண்டா. கிடமும் பார்க்க வேண்டா. வூட்டுக்குள்ள போங்க ஆமா சொல்லிட்டேன்” என்று சத்தம் போட்டுவிட்டு வேக வேகமாக மைகோதியை தலை முடிக்குள் விட்டு சீக்க எடுத்தார் கஸ்தூரி.
“அட மல்லிகா நமக்கு சாக்கு பையா முக்கியம்?” என்று குசு குசு என்று மல்லிகாவின் காதுக்குள் கூறிவிட்டு, அம்மாவின் முகத்தையே பார்த்தாள் இளவரசி. சாக்கு பையை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு வேகமேகமாக வெளியே வந்தாள் மல்லிகா.
அப்போதுதான் தோட்டத்து வேலைகளை முடித்துவிட்டு இடது தோளில் மம்பட்டியையும் வலது தோளில் துண்டையும் போட்டபடி உள்ளே வந்தார் மாணிக்கம்.
“ஷ்ஷப்பா என்னா வெயிலு” என்று கூறியபடியே தோளில் இருந்த துண்டை எடுத்து முகத்தைத் துடைத்துவிட்டு திண்ணையில் வந்து அமர்ந்தார்.
மல்லிகாவையும் இளவரசியையும் பார்த்து,
“ராசாத்திகளா எங்க கிளம்பிட்டீங்க ரெண்டு பேரும்? முகத்துல இத்தனை சிரிப்பு நாம் பாத்து நம்ப நாளாச்சே” என்று கேட்டார்.
“தாத்தா நாங்க ரேடியோ ரூம்க்கு படம் பாக்கப் போறோம்” என்று சிரித்தபடியே கூறினாள் மல்லிகா.
“எப்பவுமே ஞாயித்துக்கெழமை தானே போடுவாங்க?”
“அதுவா ரெண்டு மூணு மாசத்துக்கு ஒரு தடவை சனிக்கெழமை மத்தியானம் தமிழ் படம் போடுவாங்க. இந்த வாரம் ரெண்டு படம்” என்று சொல்லிவிட்டு மகிழ்ச்சியில் குதித்தாள் இளவரசி.
“அடடா அப்படியா! எந்தங்கம் எப்படி மூச்சு விடாம பேசுது. மருமகளே நீ வேணா பாரு என்ற பேத்தி எட்டு ஜில்லாவுக்கு எளவரசியா வரப்போறா. அதுக்கு தான் அவளுக்கு எளவரசினு பேர் வச்சிருக்கேன்” என்று கூறி மீசை முறுக்கி விட்டுக் கொண்டே இளவரசியைத் தூக்கி முத்தமிட்டார்.
“நீங்கதே அவள மெச்சிக்கணும்” என்று கஸ்தூரி சொல்லிக் கொண்டிருக்கும்போதே வாசலில் இருந்து, ’எளவரசி வரியா?’ என்று குரல் கேட்டது. மேரி சாக்குப் பையை இக்கத்தில் அடக்கி கொண்டு நின்றிருந்தாள். பக்கத்தில் ஜோசப்.
’வந்துட்டோம் வந்துட்டோம்’ என்று கத்தியபடி கிளம்பினார்கள் இளவரசியும் மல்லிகாவும். “எலவரசி நில்லு” என்றார் தாத்தா. “என்ன தாத்தா?” என்று அவிழ்த்து கொண்டிருந்த பாவாடையில் மீண்டும் ஒரு முடிச்சைப் போட்டபடியே கேட்டாள் இளவரசி.
“உங்க ரெண்டு பேருக்கும் சாக்குபை வேண்டாமா? மண்ணுலயா உட்காரப் போறீங்க?” என்று கேட்டார் மாணிக்கம். மல்லிகாவும் இளவரசியும் கஸ்தூரியின் முகத்தையே பார்த்தார்கள்.
“மாமா அதுக போன தடவையே தொலைச்சுட்டு வந்துட்டாங்க. மண்ணுல தானே எப்பவும் விளையாடுறாங்க. ஒக்காந்து இருந்தா என்ன தேஞ்சா போயிடுவாங்க” என்று கூறிவிட்டு மைகோதியால் முடியை சிக்கு எடுத்துக் கொண்டிருந்தார் கஸ்தூரி. “தாத்தா போன தடவை நானும் எளவரசியும் படத்துக்கு இடையில ஒண்ணுக்கு போயிட்டு வர்றதுக்குள்ள தாரோ தூக்கிட்டுப் போயிட்டாங்க” என்று ஒழுகிய மூக்குச் சளியைப் புறங்கையால் துடைத்தபடியே கூறினாள் மல்லிகா.
“எருமை எருமை ஊழ மூக்கி, ஊழ மூக்கு சிந்தி வீசறத வுட்டுட்டு பொறங்கையால தொடைக்கிறியே” என்று கத்திக்கொண்டே மைகோதியை ஜன்னலில் வைத்துவிட்டு முந்தானையால் மூக்கை சிந்தி துடைத்து விட்டார். துடைத்து முடித்து மல்லிகாவின் முதுகில் இரண்டு தட்டு தட்டினார். அடி வாங்கிய வலி ஒரு புறம். வந்திருந்த நண்பர்கள் முன்பு ஊழமூக்கி என்று திட்டப்பட்ட அவமானம் ஒருபுறம். ரெண்டும் சேர்ந்து அழுகை முட்டிக் கொண்டு வந்தது. எங்கே அழுதால் மீண்டும் அடி விழுமோ என்று அழுகையை அடக்கிக் கொண்டாள் மல்லிகா. மல்லிகாவின் முகத்தை பார்த்த மாணிக்கம் “நீ அழுவாத சாமி. அம்மா கெடக்குது. என்ற பேத்திகளுக்கு இல்லாத சாக்கா? போய் எடுத்துட்டு வாங்க சாமி” என்று கூறினார்.
அம்மாவின் முகத்தை பார்த்தபடியே மல்லிகாவும் இளவரசியும் நின்று கொண்டிருந்தார்கள்.
“எப்பப் பாத்தாலும் அவுகளுக்கு மேல் போட்டுட்டு வர்றதே பொழப்பாப் போச்சு. எடுத்துகிட்டு போங்க, ஆனா தொலைச்சிட்டு மட்டும் வந்தீங்க. உண்டு இல்லைன்னு பண்ணிடுவேன்” என்று தாத்தாவின் முகத்தை பார்த்தபடியே விரித்து தலை முடியை அள்ளி முடிந்தபடி உள்ளே சென்றார் கஸ்தூரி.
”எட்டு சில்லாவுக்கும் எளவரசியாக்கும் என்ற பேத்தி மண்ணுல ஒக்காரனுமா என்ற ராசாத்தி” என்று இளவரசியைப் பார்த்து செல்லம் கொஞ்சினார்.
”அவதான் எட்டுச் சில்லாவுகு எளவரசியாக்கும் அப்ப நானு இல்லையா” என்று முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு மாணிக்கத்தைப் பார்த்துக் கேட்டாள் மல்லிகா.
“அட என் தங்கமே! நீயும் எளவரசி தான்” என்று மல்லிகாவை வாரி அணைத்துக் கொண்டார் மாணிக்கம்.
மல்லிகாவும் எடுத்து வந்த சாக்குப்பையே வலதுபுற இயக்கத்தில் வைத்துக் கொண்டு ரேடியோ ரூம் நோக்கி கிளம்பினார்கள்.
அவர்கள் வீட்டில் இருந்து ரேடியோ ரூம் கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் தூரம்.
“எளவரசி ஏ எப்ப பார்த்தாலும் உங்க அம்மா உர்ருன்னே இருக்குது” என்று கேட்டான் ஜோசப்.
“அதுவா பிரம்மா படைக்கிறப்போ கோவமா இருந்தாராமா”
“அதாரு பிரம்மா?”
“அட அது தெரியாத உனக்கு? அதுதான் நம்மள எல்லாம் படைச்ச சாமி”
“உனக்கு தாரு சொன்னா?”
“எங்க அப்பா தான்”
“எங்க அம்மா ஜீசஸ் தான் படச்சாருன்னு சொன்னாங்க”
“அட உங்கள உங்க சாமி படச்சிருக்கும். எங்க சாமி எங்களப் படைச்சிருக்கும். எங்க சாமியே எத்தனை வேலையைத்தான் செய்யும்? அதனால உங்க சாமிகிட்ட கொஞ்சம் கொடுத்திருச்சு போல இருக்குது” என்று சொன்னாள் மல்லிகா.
“ஆனா, எங்க அப்பா ஒன்னு சொன்னாரு தெரியுமா?” என்று மேரியைப் பார்த்து கேட்டாள் இளவரசி.
“என்ன சொன்னாரு? சொன்னாதானே தெரியும்?”
“பிரம்மா ரொம்ப சந்தோஷமா இருக்கிறப்போ என்னையும் மல்லிகாவையும் படைச்சிட்டாருன்னு சொன்னாரு. அதனாலதான் நாங்க சிரிச்சுக்கிட்டே இருக்குறோமாமா. அம்புட்டு அழகாவும் இருக்கிறோமாமா” என்றாள் இளவரசி. உடனே ஜோசப்பும் மேரியும் மல்லிகாவையும் இளவரசியையும் மேலிருந்து கீழ் வரை பார்த்தார்கள்.
பரட்டைத் தலை போனா போகுது என்று வைக்கப்பட்டிருந்த கொஞ்சூண்டு எண்ணெய். கருப்பு நிறமும் இல்லாமல் சிவப்பு நிறமும் இல்லாமல் ஒரு மாநிறம். அழுக்குப் படிந்து கலர் போன பாவாடை சட்டை. கை கால்கள் முகம் உட்பட புழுதி படியாத இடமில்லை. இருவரின் சட்டையிலும் இரண்டு மூன்று பட்டன்கள் இல்லை. மல்லிகாவாவது பின்னூசி குத்தியிருந்தாள் இளவரசி அதுவும் இல்லை. மேலே திறந்த வாக்கில் இருந்தது.
கீழ் முனையில் ஒரு முடிச்சு போட்டு இருந்தாள். பாவாடையில் நாடா இல்லை. பாவாடையில் இரண்டு முடிச்சுப் போட்டு வைத்திருந்தாள். கொஞ்சம் எக்கினால் முடிச்சு அவிழ்ந்து பாவாடை கீழே விழுந்து விடும். எப்போதும் பாவாடையில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.
“அப்படி பார்க்கிறீங்க” என்று முறைத்தபடி கேட்டாள் இளவரசி.
“இல்ல அழகுன்னு சொன்னிங்களே அதான் பார்த்தேன்” என்றான் ஜோசப்.
“இப்படி எல்லாம் பேசினீங்க அப்புறம் பார்த்துக்கோங்க. நாளைக்கு மண்டபத்து கோயலுக்குப் பொறத்திக்காண்ட வெளையாட வந்தீங்கன்னா உங்களை விளையாட்டுக்குச் சேர்த்துக்க மாட்டோம்” என்று கண்ணாமுழியை உருட்டி உருட்டிக் கூறினாள் இளவரசி.
“செரி செரி, சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன். உன்னை மாதிரி ஆராச்சி வருவாங்களா? இப்ப ஏதாச்சு வெளையாடிட்டே போலாமா?” என்று கேட்டாள் மேரி.
“விளையாடலாமே! என்றாள் இளவரசி.
“வேண்டாம். வேண்டாம். வெளையாட்டெல்லாம் வேண்டாம். சும்மா நம்ம பேசிட்டே போலாம்” என்றான் ஜோசப்.
“ஏன் வெளையாடினா என்ன?”என்று கேட்டாள் மல்லிகா.
“வெளையாடலாம் ஆனா வெளையாட்டுல தோத்துப் போயிட்டான்னா அப்புறம் சண்டைக்கு வருவா எளவரசி. தோத்தத ஒதுக்கவே மாட்டா. நானெல்லாம் வரலப்பா. கடைசியில் சண்டையில தான் போய் முடியும். அப்புறம் சண்டை போட்டா அழுவா. உடனே மல்லிகா வந்து அவளுக்கு அழுது ஏதாச்சு மூச்சு நின்னுச்சுனா அப்புறம் நீங்க தான் பொறுப்பு அப்படின்னு சொல்லுவா. இதெல்லாம் தேவையா. சும்மா பேசிக்கிட்டே போகலாம்”
இளவரசி ஐந்து வயது இருக்கும் பொழுது அவளுடைய பெரியப்பா மகன் முரளி அவளை பாவு சுத்தும் ஆலையில் வைத்து சுத்தி விட கிறுகிறுப்பு வந்து இளவரசி கீழே விழுந்தவுடன் பயத்தில் அவள் அழ ஆரம்பித்தாள். எவ்வளவு சமாதானம் பண்ணியும் அழுகையை நிறுத்த முடியவில்லை. எக்கி எக்கி அழுதாள். அவளுக்கு மூச்சு வாங்கியது. சற்று நேரத்தில் மூச்சு நின்று விட்டது. பிறகு ஹாஸ்பிடல் கொண்டு சென்று தான் அவளுக்கு மூச்சே வந்தது.
இது காக்கா மூச்சு ஒரு குறிப்பிட்ட வயசுக்கு மேல வராது. ரொம்ப நேரம் அழுதா இப்படி ஆயிடும். கொஞ்ச நாளைக்கு ரொம்ப அழவிட்றாதீங்க. அப்புறம் ஏதாச்சு ஆனா நான் ஒன்னும் சொல்ல முடியாது” என்று டாக்டர் கூறிவிட்டார்.
அன்றிலிருந்து வீட்டிலும் சரி விளையாடும் இடத்தில் சரி இளவரசி அழ ஆரம்பித்தாலே பயந்து விடுவார்கள்.
அழ ஆரம்பித்த உடனேயே, “ஏதாச்சும் மூச்சு நின்னா அப்புறம் நீங்க தான் பொறுப்பு என்று மல்லிகா கூறுவாள்” உடனே அனைவரும் அவளை சமாதானப்படுத்த அவள் சொல்வதையே கேட்டுக்கொள்வார்கள். இப்படித்தான் இளவரசி பெரும் பிடிவாதக்காரியாக ஆனாள் என்றும் கூறலாம்.
“இல்ல, இல்ல, நான் அழுக மாட்டேன். சண்டைப் போட மாட்டேன். வெளையாடலாம் வெளையாடலாம். லாரி பஸ் வெளையாட்டு வெளையாடலாம்” என்றாள் இளவரசி.
ஒரு வழியாகச் சமாதானமாகி விளையாட ஆரம்பித்தார்கள். அவர்கள் நடந்து சென்று கொண்டிருப்பது தேசிய நெடுஞ்சாலை. எந்நேரமும் பஸ்ஸும் லாரியும் காரும் வாகனங்கள் சர்வ சதா காலமும் சர்சர்ரென்று சென்று கொண்டே இருக்கும்.
எனக்கு சோத்தாங்கை பக்கம். நானும் மேரியும் ஒரு டீம். நீயும் மல்லிகாவும் ஒரு டீம்ல இருந்துக்கோங்க. உங்களுக்கு ஒரட்டாங்கைப் பக்கம் வரது சரியா?”
வலது புறம் வந்த வாகனங்களை இளவரசி அணியும் இடதுபுறம் வந்த வாகனங்களை ஜோசப் அணியும் எண்ணிக் கொண்டே வந்தார்கள். ரேடியோ ரூம் அடையும் தருணத்தில் இளவரசி அணி 90 வாகனங்ளையும் ஜோசப் அணி 88 வாகனங்களையும் எண்ணி இருந்தார்கள். இன்னும் கொஞ்ச தூரத்தில் ரேடியோ ரூமை அடைந்து விடுவார்கள். “இதோடு விளையாட்டை நிறுத்திக் கொள்ளலாம்” என்று கூறினாள் இளவரசி. “இல்லை இல்லை ரேடியோ ரூமின் வாசல் வரை சென்று தான் நிறுத்த வேண்டும்” என்றான் ஜோசப்.
“முடிச்சுக்கலாம்” என்றாள் மீண்டும் இளவரசி.
“ரேடியோ ரூம் வரைக்கும் அப்படின்னு தானே சொன்னோம். இதெல்லாம் பொய்யாட்டம். அழுக்குனி ஆட்டம். இப்படி எல்லாம் பேசக்கூடாது” என்றான் ஜோசப்.
மல்லிகாவும் ஜோசப்போடு சேர்ந்து பேச அழுதாலும் சப்போர்ட்டுக்கு ஆள் இல்லை சப்போர்ட் பண்ற ஆளு எதிர் டீம்ல இருக்குது என்று யோசித்து விட்டு வேறு வழியில்லாமல் இளவரசி ஒத்துக்கொண்டாள்.
ரேடியோ ரூமை அடைந்த பொழுது ஜோசப் அணிக்கு 97 வாகனங்களும் இளவரசி அணிக்கு 95 வாகனங்களும் வந்ததன. “இன்னும் கொஞ்ச நேரம் பார்க்கலாம்” என்றாள் இளவரசி.
“இல்லை இல்லை வாசl வந்தாச்சு முடிச்சுக்கலாம்” என்றான் ஜோசப். இளவரசிக்கு வந்த கோபத்தில் ஜோசபை முறைத்துக் கொண்டே இருந்தாள்.
“நாங்க தான் ஜெயிச்சோம். நாங்க தான் ஜெயிச்சோம். தோத்தாங்கோழி எளவரசி தோத்தாங்கோழி தோத்தாங்கோழி மேரி தோத்தாங்கோழி” என்று கூறிக் கொண்டே ரேடியோ ரூமுக்குள் சென்று விட்டான் ஜோசப். கோபத்தோடு உள்ளே சென்று சாக்கை விரித்துப் போட்டு அமர்ந்தாள் இளவரசி. படம் முடியும் வரை இளவரசி யாருடனும் பேசவில்லை. தொணந்தொணவென்று பேசிக்கொண்டே இருக்கும் இளவரசி அன்று பேசாமல் இருந்தது மல்லிகாவுக்கு என்னவோ போல் இருந்தது. பாவம் இளவரசியே ஜெயிச்சி இருக்கலாம் நினைத்துக் கொண்டாள். எவ்வளவோ பேசிப் பார்த்தாள் ஆனால் அவளுடனும் பேசவில்லை. படம் முடிந்து வெளியே வரும்போது இளவரசி மல்லிகாவை திரும்பி பார்த்தாள். மல்லிகாவின் கையில் சாக்குப்பை இல்லை.
“மல்லிகா சாக்குப்பை எங்க?” என்று கோபத்தோடு முறைத்துக் கொண்டே கேட்டாள் இளவரசி.
“நான் எங்க எடுத்தே? நீ எடுத்து இருப்பேன்னு நினைச்சே” என்று இளவரசையை பார்த்து சொல்ல, “போச்சு முடிஞ்சோம்” என்று சத்தம் போட்டுக் கொண்டே ரேடியோ ரூமுக்குள் இருவரும் ஓடினார்கள்.
-வளரும்
சரிதா ஜோ
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சரிதா ஜோ தமிழிலும் உளவியலிலும் முதுகலை பட்டமும் கல்வியியலில் நிறைஞர் பட்டமும் பெற்றவர். கதை சொல்லியாக தமிழ் இலக்கியத்திற்குள் பயணத்தை தொடங்கிய இவர் ஏராளமான சிறார் புத்தகங்கள் எழுதியுள்ளார்.