இளவரசி வீட்டிற்குச் சென்றதிலிருந்து  நடந்தது ஒன்று விடாமல் கூறிக்கொண்டே இருந்தாள்.  தான் வாங்கிய பரிசை விட பேருந்தில் அவள் தைரியமாகச் செய்த அந்தச் செயலை பெரும் சாகசம் செய்ததாக எண்ணி அனைவரிடமும்  கூறிக் கொண்டே இருந்தாள்.

இளவரசி தனக்குக் கிடைத்த  பரிசை எடுத்துக் கொண்டு பெரியம்மாவைப் பார்க்கப் புறப்பட்டாள்.

பெரியம்மா  காட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். ஓடிச் சென்று பரிசை பெரியம்மாவின் கையில் கொடுத்து விட்டு ஒரே மூச்சில் நடந்த அத்தனையும் கூறிவிட்டாள் இளவரசி. “இன்னும் இன்னும் நிறைய போட்டிகளில் போய் ஜெயிச்சு இப்படி நெறைய பரிசு வாங்கணும். ஆனா நீ பஸ்ல நடந்ததுல எனக்கு ஒரு வருத்தம் எளவரசி”

“என்ன வருத்தம் பெரியம்மா?”

“நீ ஓங்கி ஒரு அடி உட்டு இருக்கோணும்”

“இனிமேலு இப்படி ஏதாச்சும் நடந்துச்சுன்னா அடி என்ன ஒதைய உட்றேன் பெரியம்மா”

“அப்படி போடு! எப்பவுமே தைரியமாக இருக்கோனும்” என்று கூறினார் பெரியம்மா. 

இளவரசிக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.  பெரியம்மா அங்கிருக்கும் தன் ஆடுகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு பெயர் வைத்திருப்பார். அங்கிருக்கும் மரங்களுக்கும் செடி கொடிகளுக்கு பெண்களின் பெயர் வைத்திருந்தார்.

” எல்லாமே பொம்பளைங்க பேரா வச்சிருக்க. இந்த மரத்துல ஒரு மரம் கூட ஆம்பள மரம் இருக்காதா?” என்று ஒரு முறை இளவரசி கேட்டாள்.

“எளவரசி காலங்காலமா  கதைனா அது ஆம்பளைங்கள பத்தின கதையா தான் இருக்கும். ஆரம்பத்துல ராசா கதைய சொன்னாங்க. அதுக்கப்புறம் இப்போ எழுதிட்டு வர்ற கதை கூட ஆம்பளைங்கள மையமாக வச்சு எழுதுற கதைதா.  கதையில மட்டும் இல்ல நெசத்துலயும் ஆம்பளைங்க ராசாங்கந்தே”

“நீங்க சொல்ற கதைல ஆம்பளைங்க ராசாங்கம் இருந்ததில்லையே?”

“இருக்காது. நாஞ்சொல்ற கதையில பொம்பளைங்க ராசாங்கமா தான் இருக்கும்.

அப்படியே இருந்தாலும் கூறுகெட்ட ஆம்பளையாத்தான் இருப்பானுங்கற மாதிரி மாத்திடுவேன். மரம் ஆம்பளையா பொம்பளையானு தெரியாது. செடி ஆம்பளையா பொம்பளையானு தெரியாது. என்னப் பொறுத்த வரைக்கும் எல்லாமே பொம்பளைங்கதே.

ஆதி காலத்துல எல்லாம் பொம்பளைங்க தான் ரசாங்கம் பண்ணாங்களாம் அதெல்லாம் ஒரு பெரிய வரலாறு”

“அது என்ன வரலாறு பெரியம்மா? அந்தக் கதையையும் சொல்லுங்களேன்”

“மேகம் கருத்து மழ வர மாதிரி இருக்குது. அது பெரிய கத அடுத்த தடவை வரும்போது சொல்றேன்”

‘200 வருஷங்களுக்கு முன்னாடி நடந்த கதை இது. கோகிலானு ஒரு அழகான பொண்ணு இருந்தா. அவள அவங்க அம்மாவுக்கும் அவ்வளவு புடிக்கும். அவங்க அண்ணனுக்கு அதைவிடப் புடிக்கும். அப்பா கிடையாது.  ஊட்ல எந்த நேரமும் கோகிலா கோகிலானு அவளச் செல்லம் கொஞ்சிக்கிட்டே இருப்பாங்க. அண்ணன் பேரு ராமுத்தச்சன் மரத்துல அலங்கார விளக்குகள் செய்யறதுல அவன் கெட்டிக்காரன்.

 அந்த ஊரு  இளவரசனுக்கு கண்ணாலம் ஏற்பாடச்சு. ராசா ஊட்டுக் கண்ணாலம்னா எப்படி இருக்கும்?”

“ரொம்ப ஆடம்பரமா இருக்கும் அப்படித்தானே பெரியம்மா”

ஆமா விதவிதமான அலங்கார விளக்குகள் அரண்மனை முழுசும் வைக்கிறதுன்னு முடிவாச்சு. அந்த வேலைய ராமு தச்சன் கிட்ட ஒப்படைச்சாங்க.

பௌர்ணமி அன்னைக்கு கண்ணாலம்.  பௌர்ணமி நெருங்கிட்டே இருந்துச்சு. அலங்கார விளக்குகள் செய்யற தச்சரோட வீட்டுக்கு இளவரசன் திடீர்னு வந்தாரு.

அங்க செஞ்சு வெச்சிருந்த விளக்குகளை எல்லாம் பாத்த இளவரசன்  அங்க துள்ளிக் குதிச்சு விளையாடிக்கிட்டு இருந்த கோகிலாவையும் பாத்தான்.

அங்கிருந்து கிளம்பி போன உடனே தன்னோட காவலாளிகளை அனுப்பி கோகிலாவ உடனே தன்னோட அரண்மனைக்கும் அனுப்பி வைக்கணும்னு கட்டளையிட்டார்.

“எதுக்குப் பெரியம்மா?”

அந்தக் காலத்தில் எல்லாம் ராஜாக்களுக்கும் இளவரசர்களுக்கும் யாரு பிடிக்குதோ அவங்கள அவங்க அரண்மனைக்குக் கூட்டிட்டுப் போயிருவாங்க”

“கூட்டிட்டுப் போய் கல்யாணம் பண்ணிக்குவாங்களா?”

“கண்ணாலம் எல்லாம் பண்ணிக்க மாட்டாங்க. அவங்களுக்கு புடிச்சாலும் புடிக்கலனாலும் அவங்க அரண்மனையில் காலம் முழுவதும் இவங்க வாழனும்”

” அவங்களுக்கு புடிச்சாலும் புடிக்கலைன்னாலும் கூடவே இருக்கணுமா?”

“ஆமா, ஆனா ராமுத்தச்சனுக்கு தன்னோட தங்கச்சியை இப்படி அனுப்பி வைக்கிறது பிடிக்கல. கோகிலாவோட அம்மாவுக்கும் அது பிடிக்கல. இது நடந்ததெல்லாம் கோகிலாவுக்கு தெரியாது. இவங்க ரெண்டு பேரும்  ராத்திரி முழுசும் பேசிக்கிட்டாங்க. என்ன பண்ணலாம்னு யோசனை பண்ணாங்க”

“ராத்திரி எல்லாம் தன்னந்தனி ஆளா கண் முழிச்சு ஒரு பெரிய குழி ஒன்னு தோண்டி நிறைய கம்ப அதுக்குள்ள கொட்டி நிரப்பி வச்சான் ராமுத்தச்சன்”

“எதுக்கு பெரியம்மா?”

“சொல்றேன் கேளு காலையில ஒரு பலகையப் போட்டு மூடி வச்சுட்டு தன்னோட தங்கச்சியக் கூப்பிட்டான். பலகைக்கு மேல கோகிலா வந்து நின்னா உடனேயும் பலகைய வேகமா எடுத்து விட்டான். அந்த கம்புக்குள்ள பொத்துன்னு விழுந்தா கோகிலா. அவளுக்கு என்ன நடக்குதுன்னு தெரியல. அம்மா அண்ணா அப்படின்னு கத்த ஆரம்பிச்சா.

பெத்த அருமை என்ன?

 எனக்குப் பேரு வச்ச நேர்த்தி என்ன?

வளத்த அருமை என்ன?

என்ன வெச்சிருந்த நேர்த்தி என்ன?”

என்று அழுகையோடு பாட்டை பாடி முடித்து கண்ணீரை துடைத்தார் பெரியம்மா.

மீண்டும் கதையைத் தொடர்ந்தார்.

“அப்படின்னு கத்திட்டு பீதியோட மெரண்டு போயி அலறி அழுது குழிக்குள்ளையே செத்துப் போனா”

“அச்சச்சோ”….

-வளரும்.

சரிதா ஜோ

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சரிதா ஜோ தமிழிலும் உளவியலிலும் முதுகலை பட்டமும் கல்வியியலில் நிறைஞர் பட்டமும் பெற்றவர். கதை சொல்லியாக தமிழ் இலக்கியத்திற்குள் பயணத்தை தொடங்கிய இவர் ஏராளமான சிறார் புத்தகங்கள் எழுதியுள்ளார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *