எட்டு ஜில்லாவுக்கே இளவரசி – 13

சாளையின் ஓலையில் இருந்து ‘சலசல’வென்று சத்தம் கேட்டு அனைவரும் திரும்பி பார்த்தார்கள். அந்த சாளையில் இருந்து இரண்டு பெரிய பாம்புகள் ‘பொத்’ என்று கீழே விழுந்தன. அதைப் பார்த்த அனைவரும் வேகமாக சாளையை விட்டு வெளியே ஓடி வந்தார்கள். “என்ன இவ்வளவு பெரிய பாம்பா இருக்கு? நான் இதுவரைக்கும் பாம்பை பார்த்ததே இல்லை” என்றாள் விஜயா. “நானும் தான் பார்த்ததில்லை. ஆனா படத்துல பார்த்திருக்கிறேன்.  படத்துல பாம்பு வந்து பழிவாங்கும் தெரியுமா?” என்றான் ஜோசப்.

“சரி வாங்க போயிடலாம் நம்மளக் கொத்திட போகுது” என்றாள் சுபா.  “அப்போ அந்தப் போசி. போசி இல்லாம ஊட்டுக்குப் போனா அம்மா கொன்னோபோடும்” என்றாள் விஜயா. “பாம்பு ரெண்டும் அங்க இருக்குது இப்போ போசிய எப்புடிப போய் எடுத்துட்டு வர்றது?” என்றான் சுந்தர்.  “ஆமாம் நாளைக்கு எடுத்துக்கலாம் வா” என்றாள் மேரி. 

பாம்புகள் இரண்டும் பின்னிப்பிணைந்து உருண்டு கொண்டிருந்தன.

“ரெண்டு பாம்புகளும் எப்புடி சண்டப் போடுது பாரு!” என்றான் சுந்தர்

“நீங்க போறதுன்னா போங்க. போசி இல்லாம நான் வரமாட்டேன். போசி இல்லாம போன எங்க அம்மா தொலைச்சு போடுந் தொலச்சு. உங்களுக்கெல்லாம் போசி எடுத்துட்டு வந்து பொங்க வச்சுக் குடுத்ததுக்கு நான்தான் எங்க அம்மா கிட்ட அடி வாங்கோணும். போங்க போங்க நீங்க ஆரும் இருக்க வேண்டாம். நான் பாம்பு போனதுக்கு அப்புறம் போசிய எடுத்துக்கிட்டு வந்துடறேன்” என்று கோபமாகக் கூறினாள்.

“ஆமா விஜயா சொல்றது சரியா தான் இருக்குது. நாளைக்கு யாராவது தூக்கிட்டு போயிட்டா என்ன பண்றது? சரி இப்ப எப்படி எடுக்கிறது?” என்று சொல்லிக் கொண்டே ஒரு பெரிய கல்லு ஒன்றை எடுத்து உருண்டு கொண்டிருந்த பாம்பின் மீது தூக்கி எறிந்தாள் இளவரசி. ஒரு பாம்பின் தலையில் விழுந்தது அந்தக் கல். இன்னொரு பாம்பு ஓடி விட்டது. அடிபட்ட பாம்பு ஓட முடியாமல் நெளித்துக் கொண்டிருந்தது. “வாங்க வாங்க போசிய எடுத்துட்டு போயிறலாம்” என்று சாளைக்குள் சென்று போசியை எடுத்துக்கொண்டு வேகமாக ஓடினார்கள்.

“இளவரசி  நீ பெரிய தப்பு பண்ணிட்டே. எதுக்கு பாம்பு மேல கல்லைத் தூக்கிப் போட்ட?”

 “ஏய் பாம்ப அடிக்காம எப்படிடா போசிய எடுக்கிறது? போசி இல்லாம போனா விஜயாவை அவங்க அம்மா அடிக்கும். அப்புறம் அடுத்த தடவை பொங்கலும் வைக்க முடியாது. கூட்டாஞ்சோறும் பண்ண முடியாது அதுதான் கல்லத் தூக்கிப் போட்டேன்.  பாம்புதான் நம்மள கடிக்கலியே. ஓடி வந்துட்டோம்ல. அப்புறம் என்ன ஏன் பயந்துட்டுக் கெடக்குற?” என்று கேட்டாள் இளவரசி.

“ஆமா எலவரசி நீ சொல்றது சரிதான். ஜோசப் சரியான பயந்தாங்கோலி. ஊட்டுலையே ராத்திரி இருட்டா இருக்கிற ரூமுக்குள்ள போக மாட்டான். நான் தான் அவனுக்குத் துணைக்குப் போகோணும். என்னைய விட வயசுல மூத்த வந்தே ஆனா சரியான பயந்தாங்கோலி” என்று கூறிவிட்டு வாயின் மீது கையை வைத்துப் பொத்திக் கொண்டு “பயந்தாங்கோலி பயந்தாங்கோலி” என்று ஜோசப்பைப் பார்த்துக் கூறிச் சிரித்தாள் மேரி.

“நான் ஒன்னும் பயந்தாங்கோலி இல்லை. பாம்ப அடிச்சா என்ன ஆகும் தெரியுமா?” என்று கேட்டான் ஜோசப்.

“பாம்ப அடிச்சா பாம்பு செத்துப் போயிரும். இல்லைனா தப்பிச்சு காயத்தோடு ஓடிடும். வேற என்ன ஆகும்?” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள் விஜயா.

“பாம்பு செத்துப் போச்சுன்னா அது என்ன பாம்புன்னு பாக்கணும். அது ஒரு வேலை சாமி பாம்பா இருந்ததுன்னா, அந்தப் பாம்பை நெய் போட்டு  வெள்ளை கலர் துணியை போட்டு தீப்பத்த வச்சு எரிப்பாங்க” என்றான் ஜோசப்.

“உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டாள் சுபா.

“போன மாசம் நாங்க எங்க பாட்டி ஊருக்கு போயிருந்தப்போ, பாட்டி ஊட்டுக்குப் பக்கத்து ஊட்டுல இருக்கற வேலன் மாமா அவங்க ஊட்டுக்கு பக்கத்துல வந்த ஒரு பாம்ப அடிச்சு இப்படித் தான் பண்ணுனாரு”

“ஆமா ஆமா நானும் தான் பாத்தேன் இப்படித்தான் பண்ணுனாங்க” என்றாள் மேரி. “ஐயோ  அப்படி எரிக்கலைன்னா என்ன ஆகும்?” என்று பதறியபடி கேட்டாள் இளவரசி.

“உனக்குப் பாவம் புடிச்சுக்கும்”

“அப்ப எனக்குப் பாவம் பிடிச்சுக்குமா” என்று கேட்டு அழ ஆரம்பித்தாள் இளவரசி. 

“அழாதே எலவரசி. நீ இதுக்கே அழுதினா, நான் இன்னொன்னு சொன்னா நீ என்ன ஆவேன்னு தெரியலையே?” என்று கூறிவிட்டு இளவரசியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் ஜோசப்.

“இளவரசி அவன் சொல்றதெல்லாம் ஒண்ணுமே உண்மை இல்ல. நீ ஒன்னும் பயப்படாத. அப்படி எல்லாம் ஒரு பாவமும் புடிக்காது. எங்க அப்பச்சி  காடு தோட்டத்துக்குப் போகும்போது எத்தன பாம்ப அடிச்சிருக்காரு அவருக்கெல்லாம் ஒண்ணுமே ஆனது இல்லை. அவருக்கு பாவமும் புடிக்கல. ஒன்னும் புடிக்கல. நீ பயப்படாதே” என்றான் சுந்தர்.

“எனக்கெல்லாம்  ஒன்னும் தெரியாதுப்பா. வேலு மாமா பாம்ப அடிச்சிட்டு  சொன்னதைத்தான் நான் சொன்னேன்” என்றான் ஜோசப்.

“சரி இன்னொன்னு என்னமோ சொன்னா பயந்துக்குவான்னு சொன்னியே அது என்னது?” என்று கேட்டாள் விஜயா.

“பாம்பு படம் பாத்திருக்கீங்களா?” “என்ன படம்?”

“நான் ஒரு படம் பார்த்தேன். அந்தப் படத்துப் பேரு தெரியல. அந்தப் படத்துல பாம்பு தன்னோட புருஷனைக் பாம்பை கொன்னவங்களைப்     பழிவாங்கும் தெரியுமா?”

“அச்சச்சோ அப்ப என்னையும் பாம்பும் கொத்திடுமா?” என்று கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே கேட்டாள் இளவரசி

“அது எனக்குத் தெரியாது. ஆனா அந்தப் படத்துல அப்படித்தான் வந்துச்சு”

“ஏய் படத்தில் எடுக்கறது எல்லாம் சும்மா. நீ அதை நம்பிட்டு இருக்கியா?” என்றாள் சுபா.

“படத்துல சும்மா எடுக்க மாட்டாங்க. எங்க அம்மா கூடச் சொல்லி இருக்குது. பாம்பு பழி வாங்கும்னு. என்றான் ஜோசப்.

“அச்சச்சோ எலவரசி அப்ப நீ நல்லா மாட்டிக்கிட்ட. பாம்பு உன்னை கொத்தப் போகுது!”  என்றாள் சுபா.

இளவரசிக்கு பயம் தொற்றிக் கொண்டது ஒருவேளை பாம்பு கொத்தி விடுமோ! தப்புச் செஞ்சுட்டமோ! பாம்பை அடிச்சி இருக்கக் கூடாதோ என்று நினைத்துக் கொண்டே இருந்தாள்.

அவளைச் சுற்றி ஏராளமான பாம்புகள் என் அண்ணன நீ கொன்னுட்டே! என் தம்பிய நீ  கொன்னுட்டே!  என் மாமான நீ  கொன்னுட்டே! என் சித்தப்பாவ நீ கொன்னுட்டே!  உன்னைப் நான் பழி வாங்க போறோம் என்று ஒவ்வொரு பாம்பும் இவளை பார்த்து சத்தமாக வாயிலிருந்து விஷத்தை உமிழ்ந்த படி பேசியது.  அந்த நேரத்தில் “எல்லாம் தள்ளிக்கோங்க என் புருஷனை நீ கொன்னுட்ட உன்ன சும்மா உட  மாட்டேன்” என்று வெள்ளைப் புடவை உடுத்திய பாம்பு ஒன்று வந்து அவள் முன் நின்றது.  “நீ எங்க போனாலும் விடமாட்டேன். உன் சாவு என்கையில்”  என்று கூறிவிட்டு வாயிலிருந்து நெருப்பை உமிழ்ந்தது.  பாம்புகளுக்கு நடுவில் பயத்தோடு நின்று கொண்டிருந்தாள் இளவரசி.  எல்லா பாம்புகளையும் தள்ளி விட்டுவிட்டு வேகமாக ஓடி,  நடுக்காட்டிற்குள் நின்றாள். மூச்சு வாங்கியது. அங்கே ஒரு பாம்பு பறந்து வந்து அவள் முன் நின்றது. வெள்ளை உடை உடுத்திய அதே பாம்பு. அது ‘எங்க போனாலும் விடமாட்டேன்னு சொன்னேன்ல தப்பிக்கலாம்னு பார்க்கிறாயா?” என்று  கேட்டுவிட்டு வாயை நன்றாகத் திறந்து அவளை முழுங்கியது.  ஐயோ என்ன முழுங்கிடாதே என்ன முழுங்கிடாதே என்று கத்திக்கொண்டே எழுந்தாள் இளவரசி. பக்கத்தில் படுத்து இருந்த இளவரசியின் அம்மா “என்ன ஆச்சு? என்ன கனாக்கீது கண்டியா?” கேட்டார்.

“ஆமாம்மா. நேத்து நாங்க வெளையாடப் போனப்ப அங்க ஒரு பாம்ப நான் அடிச்சு போட்டேன். அந்தப் பாம்பு செத்துருச்சா  உசுரோட இருக்குதான்னு தெரியல. ஆனா அது கூட இருந்த  இன்னொரு பாம்பு நான் அந்தப் பாம்ப அடிச்சதப் பார்த்துருச்சு. அந்த பாம்பு என்னோட கனவுல வந்து என்ன முடிஞ்சிடுச்சு அம்மா. அம்மா பாம்பு பழி வாங்குமா”

“யார் சொன்னது?”

“ஜோசப் தான் சொன்னான். ஒரு படத்துல பாம்பு பழிவாங்குச்சாம்மா”

“அதெல்லாம் சும்மா சொல்றது பாம்பு பழியும் வாங்காது  ஒன்னும் வாங்காது” என்று கூறிவிட்டு சாமி படத்தின் முன் இருந்த திருநீரை எடுத்துக் கொண்டு வந்து இளவரசியின் நெற்றியில் வைத்துவிட்டுவிட்டு “பயப்படாத சாமியக் கும்பிட்டுட்டுப் படு சாமி எல்லாத்தையும் பாத்துக்கும்” என்று கூறிவிட்டு திரும்பிப் படுத்துக் கொண்டார்.

தூங்கினால் திரும்பவும் கனவில் பாம்பு வந்து விடுமோ என்ற பயத்தில் இரவு முழுவதும் தூங்காமல் விழித்துக் கொண்டே இருந்தாள்.

ஒரு வாரம் கழித்து ஞாயிற்றுக்கிழமை விளையாடுவதற்காக தோட்டத்திற்கு செல்லலாம் என்று அனைவரும் கிளம்பினார்கள். இளவரசி பயத்தில் நான் வரமாட்டேன் என்றாள்.

“நீ இல்லாம எப்படி இளவரசி போடுவது சரி இந்த வாரம் நம்ம இந்த கள்ளிக்காட்டுக்கு  போய் விளையாடலாம்” என்று கூறினான் சுந்தர். ஊரின் எல்லையில் இருந்த கள்ளிச் செடிகள் நிறைந்திருந்த ஒரு காட்டிற்குள் சென்றார்கள். நிறைய கள்ளிப்பழங்கள் இருந்தன. அதை பறித்து அதில் இருந்த முல்லை கல்லில் தேய்த்து விட்டு அதன் தோலை உரித்து கள்ளிப்பழத்தைச் சாப்பிட்டார்கள்.  என்னதான் உரசினாலும் ஆங்காங்கு இருந்த சிறு முட்கள் வாயிலும் உதட்டிலும் குத்தின. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அனைவரும் கள்ளிப் பழத்தைச் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள்.  “இந்தக் கள்ளிப்பழத்தோட ருசி வேறு எதிலுமே வரதில்ல” என்று சொல்லிக் கொண்டே ஒரு பழத்தை உரித்து வாயில் போட்டான் சுந்தர்.  ஆமா ஆமா “ருசி மட்டுமில்ல. பாரு என் உதடுடெல்லாம் எப்படி லிப்ஸ்டிக் போட்ட மாதிரி சிவந்துருச்சுன்னு” என்றாள் இளவரசி. அந்த நேரத்தில் ஒரு கள்ளிச்செடியின் மீது ஓணான் ஒன்று ஓடியது.  “அங்க பாரு ஒடக்காயி. வாடி..வா நீதானே ராமருக்குத் தண்ணி குடுக்க மாட்டேன்னு சொல்லிட்டே?” என்று கூறிக்கொண்டு கல்லைத் தூக்கி  ஓணான் மீது போட்டான் சுந்தர். 

“ஏய் கொல்லாதீங்கடா பாவம் பாம்பாவது நம்மள கொத்தும் ஒடக்க என்ன பண்ணுது? அது பாட்டுக்கு அது போகுது” என்றாள் விஜயா.

“ஆமாண்டா அதென்ன ராமருக்குத் தண்ணி கொடுக்கலன்னு என்னமோ சொன்ன?”

“அதுவா, அது ஒரு தடவை ராமர் தண்ணி கேட்டாராமா ஒடக்காயி ராமருக்குத் தண்ணி கொடுக்கலையாமா. அதனால எங்க ஒடக்காயப்  பாத்தாலும் நான் அடிச்சிடுவேன்” என்றான் சுந்தர். 

“அப்படின்னு யார் சொன்னா உனக்கு?”

“எங்க தாத்தாதான் சொன்னாரு”

“அப்ப சரியாத்தான் இருக்கும் அடிங்க நானும் அடிக்கிறேன்” என்று மேரி  கூறினாள். எல்லோரும் கல்லெடுத்துப் போட்டு அடித்தார்கள்.

அதன் பிறகு ஓணான் இறந்தவுடன் ஒரு கயிற்றில் கட்டி ஊர்வலம் எடுத்துச் சென்றார்கள்.

“எலவரசி அங்க பாரு!” என்று கத்தினாள் விஜயா. எல்லோரும் அந்த இடத்தைப் பார்த்தார்கள்.

அப்போது கள்ளிச்செடியிலிருந்து…

-வளரும்

சரிதா ஜோ

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சரிதா ஜோ தமிழிலும் உளவியலிலும் முதுகலை பட்டமும் கல்வியியலில் நிறைஞர் பட்டமும் பெற்றவர். கதை சொல்லியாக தமிழ் இலக்கியத்திற்குள் பயணத்தை தொடங்கிய இவர் ஏராளமான சிறார் புத்தகங்கள் எழுதியுள்ளார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *