கூட்டத்தை தள்ளிக்கொண்டு இருவரும் உள்ளே ஓடினார்கள். அவர்கள் அமர்ந்திருந்த இடம் காலியாக இருந்தது. அங்கே போடப்பட்டிருந்த சாக்குப்பை அந்த இடத்தில் இல்லை. இருவரின் இதயங்களும் வேகமாக படபடவென்று அடித்தன. அது படார் என்று வெடித்து விடும் நிலையில் இருந்தது.
போட்டியில் தோத்த கோபம், சாக்கு தொலைந்தது எல்லாம் ஒன்று கூடி அந்தக் கோபம் மொத்தமாக மல்லிகாவின் மீது திரும்பியது இளவரசிக்கு. அருகில் நின்று கொண்டிருந்த மல்லிகாவை ஓங்கி ஒரு உதை விட்டாள் இளவரசி.
வாங்கிய உதையில் பக்கத்தில் இருந்த மரத்தில் மோதி பொத்தெ ன்று கீழே விழுந்தாள் மல்லிகா. வலது கை முட்டியிலும் கால் முட்டியிலும் சிராய்ப்பு ஏற்பட்டு இருந்தது. கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி மெதுவாக எழுந்து பாவாடை சட்டையில் ஒட்டி இருந்த மண்ணை இடது கையால் தட்டிவிட்டு விட்டு இன்னும் பெரும் குரல் எடுத்து அழ ஆரம்பித்தாள் மல்லிகா. சற்று நேரம் அழுதுவிட்டு தேம்பியப்படியே மெதுவாக இளவரசியைப் பார்த்தாள் மல்லிகா.
அவளின் கோபம் இன்னும் குறையவில்லை. அடி வாங்கியதால் மல்லிகாவிற்கும் அவள் மீது பெரும் கோபம் வந்தது. மல்லிகாவும் இளவரசியின் சட்டையைப் பிடித்து இழுத்தாள். இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருப்பதை பார்த்த வயதான மனிதர், ’என்ன ஆச்சு? வுடு அந்தப் புள்ளையே அடிபட்டு கெடக்குது. கையெடு அடிச்சுப்புடுவேன் பாத்துக்கோ’ என்று இளவரசியை பார்த்து சத்தம் போட்டு இருவரையும் சமாதானப்படுத்தினார்.
அழுது கொண்டே நடந்ததையெல்லாம் கூறினாள் மல்லிகா. அப்போது கூட இளவரசி எதுவும் பேசாமல் கோபத்தோடு மல்லிகாவை முறைத்துக் கொண்டிருந்தாள்.
”அடப் புள்ளைகளா ஒரு சாக்குப் பைக்கு இத்தனை சண்டையா? சாக்கு பை இல்லைன்னா உங்க அம்மா அடிப்பா அப்படித்தானே? இதோ எதுத்தாப்ல இருக்குது பாரு அது நம்ம கடதே. வாங்க ஒன்னு எடுத்து தரேன்” என்றார் அந்த முதியவர்.
“வாண்டா வாண்டா. இது தெரிஞ்சா எங்க அம்மா இன்னும் அடிக்கும். தாரு கிட்டயும் எதுவும் வாங்க கூடாதுன்னு சொல்லி இருக்குது” என்றாள் கோபத்தோட இளவரசி.
“அதெல்லாம் அடிக்காது. நான் கொடுத்தேனு எப்படித் தெரியும்?நான் சொன்னாத் தெரியும். இல்ல நீங்க சொன்னால்தான் தெரியும். இல்லைனா தாருக்கும் தெரியாது” என்று கூறினார் . இருவரையும் கடைக்கு அழைத்துச் சென்று உள்ளிருந்து ஒரு சாக்கு பையை எடுத்து வந்தார். கடைக்கு முன்னால் நின்றிருந்த இளவரசி கடையை சுற்றிலும் ஒரு நோட்டம் விட்டாள். வலது புறம் புண்ணாக்கு மூட்டையும், இடதுபுறம் தவிட்டு மூட்டையும் அடிக்கி வைக்கப்பட்டிருந்தன. கடையின் முன் புறம் ஒரு பெரிய தராசு தொங்கவிடப்பட்டிருந்தது.
“இந்தாங்க புள்ளைங்களா” என்ற சத்தம் கேட்டு பெரியவரை பார்த்தாள் இளவரசி. “அம்மா கண்டுபிடிச்சா அப்புறம் நீ தான். எனக்கு ஒன்னும் தெரியாது” என்று குசுகுசுவென்று மல்லிகாவின் காதில் கூறினாள் இளவரசி. “அதெல்லாம் ஒன்னும் கண்டுபிடிக்காது. கண்டுபிடிக்கிறப்ப பாத்துக்கலாம் வுடு. இப்போதைக்கு சாக்கு கொண்டு போய் அம்மாவுக்கு தெரியாம வச்சிடலாம்” என்று கூறிவிட்டு மகிழ்வோடு சாக்கு பையை வாங்கிக்கொண்டாள் மல்லிகா. அங்கிருந்து இருவரும் கிளம்பினார்கள். போகும் போது மல்லிகாவின் காயங்களை பார்த்த இளவரசி “என்னாலதானே இது. சரி வா இங்க உட்காரு” என்று இளவரசி கூறினான். வழியில் இருந்த ஒரு ஆலமரத்தடியில் இருவரும் உட்கார்ந்தார்கள். கைமுட்டியிலும் கால் முட்டியிலும் ஏற்பட்டிருந்த சிராய்ப்புகளைப் பார்த்தபோது இளவரசிக்கு அழுகை வந்தது. “எனக்கு ஏந்தே இத்தன கோவம் வருதுன்னு தெரியல. அம்மா அடிச்சுருன்னு பயந்து போய் உன்ன அடிச்சிட்டேன். வலிக்குதா?” என்று கேட்டபடி தனது எச்சிலை வலது கையால் தொட்டு ஏற்பட்டிருந்த சிராய்ப்பின் மீது வைத்து தடவினாள். “ஷ் ஷப்பா ஷ்ஷ் ஐயோ வலிக்குது” என்று காலை பின்னால் இழுத்தாள் மல்லிகா. காலைப் பிடித்து “அதெல்லாம் சரியாப் போயிரும் இரு” என்று கூறி கீழே கிடந்த மண்ணை அள்ளி கையில் கொழித்து கற்களை அகற்றி சிராய்ப்பின் மீது பூசினாள். “ஐயோ வலிக்குது வலிக்குது” என்று கத்தினாள் மல்லிகா. “இன்னும் என்ற மேல கோவமா?” என்று கேட்டாள் இளவரசி. “இல்லையே உன்ற மேல ஒரு கோவமும் இல்லையே” என்று வழிந்து கொண்டிருந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு கூறினாள் மல்லிகா. எத்தனை சண்டை போட்டாலும் ஏனோ இளவரசி மீது அவளுக்கு அவ்வளவு பெரிய கோபம் வந்ததே இல்லை. சண்டை முடிந்து “என்ற மேல கோவமா?” என்று கேட்டுவிட்டால் அத்தனை கோபம் எங்கு போகும் என்றே தெரியாது மல்லிகாவுக்கு. மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்த அந்த சம்பவமே அதற்கு காரணமாகக் கூட இருக்கலாம்.
ஒரு நாள் பள்ளி விட்டு மாலை இருவரும் வீடு கொண்டிருந்தார்கள்.
வீட்டின் முன்பு நிறையப் பேர் கூட்டமாக நின்று கொண்டிருந்தார்கள். என்ன இவ்வளவு கூட்டமா இருக்குது. ஏதாவது நோம்பினாதான இவ்வளவு கூட்டம் வருவாங்க. கெடா விருந்து போட்டா தான் வருவாங்க. மாரியம்மம் பொங்கலுக்கு இன்னும் நாளிருக்கு. எதுக்கு இவ்வளவு கூட்டம் தெரியலையே, எதுக்கு இத்தன பேரு வந்திருக்காங்கன்னு தெரியலையே. என்று மல்லிகா கூறினாள். யோசித்தவாறு வீட்டை நோக்கி வேகமாக ஓடினாள்.
வீட்டிற்குள் நுழைந்த நுழையும் முன்பே தூரத்தில் கேட்ட “ஐயோ பேயிட்டயே” என்ற அம்மா குரல் இருவரையும் பேரதிர்ச்சி அடையச்செய்தது.
அம்மாவின் சத்தம் இருவரின் மனதில் பேர் இடியாய் இறங்கியது. வேகவேகமாக வீட்டை அடைகிறார்கள். ஆண்கள் வெளியில் தோளில் வெள்ளை துண்டோடு சோகம் பூசிய முகத்தோடு நின்று கொண்டிருந்தார்கள்.
கூட்டத்தின் இடையே அப்பா தோளில் போட்டிருந்த துண்டில் ஒருமுனையில் முகத்தைப் புதைத்து அழுது கொண்டிருந்தார். அவர் அருகில் மணி மாமாவும் அவருடைய முகத்தை அவர் துண்டின் ஒரு முனையில் புதைத்து அழுது கொண்டிருந்தார்.
ஏனோ அப்பாவை பார்த்ததும் தன்னை ஒரு விதமாக ஆசுவாசப்படுத்திக் கொண்டு உள்ளே நுழைகிறான் இளவரசி.
திண்ணையில் சரசு சித்தி அமர்ந்திருந்தார். சித்தியின் தோளில் சாய்ந்து கைகளை இறுகப் பற்றி கண்களை மூடி அருகில் அமர்ந்து கொண்டாள் மல்லிகா. அவளது முகத்தில் பயத்தின் ரேகைகள் படர்ந்திருந்தன. திண்ணையைக் கடந்து உள்ளே போகும் பொழுது தலைவிரிகோலமாக மார்பிலும் வயிற்றிலும் அடித்தபடி “என்னப் பெத்த மகராசியே! என்ன வுட்டுப் போயிட்டியே..இனி எங்கே உன்னோடு சிரிப்ப பாப்பேனோ..
உன்னோட செக்கச்சிவந்த ரோசாப்பூ முகத்தைப் பார்ப்பேனோ…
போயிட்டியே..
என்ற தலையிலும் மார்பிலும் அடித்து அழுது கொண்டிருந்த கஸ்தூரி உள்ளே நுழைந்த இளவரசியைப் பார்த்தவுடன்,
“அட வந்துட்டியா எலவரசி பாத்திய நம்ம பாப்பாவ. நம்மள வுட்டுப் போயிட்டாளே. என்னப் பெத்த மகராசி” என்று கதறிக்கொண்டு அழுதார். அம்மாவின் அருகில் வெள்ளைத் துணியால் மூடப்பட்டிருந்த உருவத்தை திறக்கிறாள் இளவரசி.
செக்கச் சிவந்த நிறத்தில் கொள்ளை கொள்ளும் அழகில் பனியில் உறங்கும் தேவதை போல் படுத்துக் கிடந்தாள் இளவரசியின் தங்கை சங்கீதா.
அந்த தூக்கம் மிக நீண்ட தூக்கம் துயில் எழ முடியாத தூக்கம். “அம்மா என்னாச்சு பாப்பாவுக்கு” என்று கதறுகிறாள் இளவரசி.
“ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கிட்டு போனோமே. கோழகட்டி மூச்சு வரலையாமா எந்தங்கத்துக்கு மூச்சு வரலயாமா” என்று பாட்டாப் பாடி அழுதார் கஸ்தூரி.
இளவரசியை வாரி அணைத்து “நம்ம பாப்பா போயிட்டா. இனி நம்ம பாப்பாவை நாம பார்க்கவே முடியாது” என்று தலையில் அடித்துக்கொண்டு அழுதார்.
அருகில் அம்மத்தா சித்திகள் அத்தைகள் எல்லோரும் மார்பிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தார்கள்.
எதிரில் தாமரை அக்கா “ஐயோ ரேணு போயிட்டியே. இனி நான் எங்கே பார்ப்பேனோ உன்னை” என்று கதறிக் கொண்டிருந்தாள்.
தாமரை இளவரசியின் பெரியப்பா மகள் 15 வயது சிறுமி. சங்கீதா பிறந்தது முதல் யாரைத்தான் கவரவில்லை. எல்லோரையும் விட தாமரை அக்காவை அதிகமாகவே கவர்ந்து இருந்தாள்.
தாமரை சங்கீதாவிற்கு வைத்த செல்லப்பெயர் தான் ரேணுகா. தினமும் வந்து பார்த்து. அவளைக் கொஞ்சி அவளை அலங்கரித்து மகிழ்வாள்.
இளவரசி சற்று நிறம் குறைவாக இருப்பாள். மல்லிகாவும் மாநிறம் தான். ஆனால் சங்கீதாவோ செக்கச் சிவந்த நிறம். அவள் பிறந்த போதே வந்து பார்த்தவர்கள் “புள்ள இப்படி ஒரு செவப்பா இருக்கு. அவிங்க அப்பத்தா மாதிரி” என்றார்கள். மூன்றும் பெண் என்றாலும், இது சொக்கத்தங்கமாவே வந்து பிறந்திருக்கு என்றார்கள்.
மூன்றாவது பையனாக பிறக்கும் என்று எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில் வந்து பிறந்தவள்தான் சங்கீதா. அதனால்தானோ என்னவோ ஒரு நாளும் சங்கீதாவை கஸ்தூரி கொஞ்சியது இல்லை. “சாவறதுக்குத்தான் இத்தன அழகா பொறந்துச்சா” என்று கத்தி அழுதாள் பாட்டி சின்னம்மா.
திடீரென்று வெளியில் ஒரே பரபரப்பு “அட போங்கடா” என்று சத்தம் கேட்டு அழுது கொண்டே இளவரசி வெளியே வந்தாள். மல்லிகாவைக் காணவில்லை. அனைவரும் வீட்டின் பின்புறம் போக இளவரசியும் போகிறாள். மல்லிகாவின் பின்னால் கூட்டமே ஓடிக்கொண்டிருக்கிறது.
பொதுவாகவே மல்லிகா பயந்த சுபாவம் கொண்டவள். ஒருமுறை இளவரசியின் இரண்டாவது சித்தி தன் கணவனை இழந்து வெள்ளைச் சேலையுடன் வந்த போது பயந்து நடுங்கி ஓடிப் போய் எங்கேயோ பாறையின் பின்னால் பதுங்கிக் கொள்ள, தேடிக் கண்டுபிடித்து அழைத்து வந்தும் பத்து நாட்கள் காய்ச்சல் விடவே இல்லை. இன்றும் சங்கீதா மீது மூடி வைக்கப்பட்டிருந்த வெள்ளை துணியை பார்த்தது முதல் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தாள். அந்த வெள்ளைத் துணி ஏனோ மல்லிகாவின் பயத்தின் உச்சிக்கே கொண்டு சென்று கொண்டிருந்தது.
ஒரு வழியாக மல்லிகாவைப் பிடித்து வந்து பெரியம்மா வீட்டில் வைத்து இரண்டு பேர் அவளை கவனித்துக் கொண்டார்கள்.
திரும்பவும் கூட்டம் வீட்டிற்குள் நுழைந்ததும். “என்னப் பெத்த மகராசி. ஆம்பள புள்ள வேணுமுன்னு மூனாவதும் பொம்பளப்புள்ள பெத்தப்போ இன்னொன்னு இருக்கட்டுமுன்னு சொன்னேனே. நானு நாலு பெத்து அதுக்கப்புறம் ஆம்பளப் புள்ள பெத்தேனே..அடுத்தது உனக்கு ஆம்பள புள்ளைய பொறந்திருக்குமே அதுக்குள்ள ஆபரேஷனை பண்ணிட்டியே”
என்று தலையில் அடித்து படி அழுது கொண்டே வந்தார் இளவரசியின் அப்புச்சி. தன் மகளுக்கு ஒரு மகன் இல்லையே என்ற ஏக்கம் வார்த்தைகளில் அழுகையின் ஊடாக வெளிப்பட்டது.
சடங்குகள் தொடங்கின. முறம் ஒன்றை எடுத்து பழனிசாமி பெரியப்பாவின் கைகளில் ஏந்தி நிற்க. பட்டுப்பூப் போன்ற சங்கீதாவை எடுத்து அதில் வைக்க. அம்மா அழுத அழுகை என்றுமே இளவரசியினால் மறக்க முடியாது.
மெதுவாக காடு நோக்கி சங்கீதாவோடு பெரியப்பா நடக்க. ஆண்கள் கூட்டம் அவரின் பின்னே சென்றது.
அதைப் பெரியம்மாவின் வீட்டுச் ஜன்னலில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தாள் மல்லிகா.
அதிலிருந்து இளவரசிக்கு சிறியதாக உடல்நிலை சரியில்லாமல் போனாலும் எங்கே சங்கீதாவைப் போல் இவளும் நம்மை விட்டு சென்று விடுவாளோ என்று பயப்பட ஆரம்பித்தாள் மல்லிகா.
அந்த நிகழ்வுதான் அவளை இளவரசி மீது பெரும் பாசம் கொள்ள அன்பு கொள்ள காரணமாக இருந்தது.
இருவரும் வீட்டை அடைந்தார்கள். வீட்டின் வலது புறம் கொல்மொகர் மரமும் இடதுபுறம் ஆலமரமும் இவர்களை வரவேற்றது. அவர்கள் வீடுதான் அந்தத் தெருவிலேயே மாடி வீடு. அதில் எப்பொழுதுமே இளவரசிக்கும் மல்லிகாவிற்கும் பெருமை. அதைவிட பெருமை யார் வீட்டின் முன்பும் இல்லாத கொல்மொகர் மரமும் ஆலமரமும் இவர்கள் வீட்டின் முன்பு இருந்ததுதான். காலை நேரத்தில் கொல்மொகர் மரத்தின் பூக்கள் வாசல் முழுவதும் செக்கச் சிவந்து கிடக்கும். பார்க்க ரத்தத்தைத் தெளித்து விட்டது போல் ஆங்காங்கே கிடக்கும். சில நேரங்களில் வாசலில் சிவப்புக் கம்பளம் போர்த்தியது போல இருக்கும். தினமும் காலையும் மாலையும் வாசலைக் கூட்டும் போது “இந்தக் கருமாந்திரம் புடிச்ச மரத்தை வெட்டினால் தான் நிம்மதி. சர்க்கார் மரமாமா வெட்டக் கூடாதாமா. கூட்டிப் பாத்தாத்தே தெரியும். எத்தனை பூ வுழுந்து தாரால முடியும். ஒருத்தியே எத்தனை வேலைதே செஞ்சு சாவுறது. கருமாந்திரம் இடுப்பே உடஞ்சிடும் போல இருக்குது” என்று கூறியபடியே வாசலை கூட்டுவார் கஸ்தூரி.
ஆனால் மல்லிகாவுக்கும் இளவரசிக்கும் இந்த மரத்தின் மீது கொள்ளை பிரியம். விடுமுறை நாட்களில் நண்பர்களோடு அதிக நேரம் அங்கே தான் விளையாடுவார்கள். இவர்கள் போடும் சத்தத்தினால் துளசியிடம் என்னதான் திட்டு வாங்கினாலும் அந்த இடம் அந்தத் தெரு குழந்தைகளுக்கு மிகப் பிடித்த இடம். அதுபோன்ற பூக்கள் நிறைந்த இடம் அந்தத் தெருவிலேயே கிடையாது. பூக்களை பறித்து அதில் இருக்கும் வெள்ளையும் சிவப்பும் கலந்த நிற பூக்களை தேங்காய் பூ தேங்காய் பூ எனக்கு கிடைச்சிருக்கு என்று கூறி சந்தோஷப்படுவார்கள். அதை சாப்பிட கூடச் செய்வார்கள். பூக்களின் அடியில் இருக்கும் காம்புகளை கண்ணாடியாகவும் இதழ்களுக்கு அடியில் இருக்கும் இதழ்களை நகங்களாகவும் வைத்து விளையாடுவார்கள். ஒவ்வொரு நாளும் தினமும் பள்ளி விட்டு வந்ததும் மரத்தை கட்டிக்கொண்டு “இன்னைக்கும் அம்மா உன்ன பேசுச்சா? பேசிட்டுப் போவுது வுடு. அதுக்கு உன்ன பத்தி என்ன தெரியும்? நீ தான் என்ற பட்டு என்ற முத்து என்ற செல்லம்” என்று கொஞ்சுவாள் இளவரசி.
ரேடியோ ரூமில் இருந்து அவர்கள் வருவதைப் பார்த்த இரண்டு மரங்களும் அவர்களை வரவேற்பது போல தலையசைப்பதாக உணர்ந்தாள் இளவரசி.
’பாரே நம்மளப் பாத்ததும் ஆலாவும் ரோசாவும் குஷில எப்புடித் தலையாட்டுது’ என்று மல்லிகாவிடம் கூறினாள் இளவரசி. ஆலமரத்துக்கு ஆலா என்றும் கொல்மொகர் மரத்திற்கு ரோசா என்றும் பெயர் வைத்திருந்தாள் இளவரசி. வேகமாக கொண்டு வந்திருந்த சாக்கை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு அம்மாவைத் தேடினார்கள். அம்மா வீட்டில் இல்லை என்றால் கண்டிப்பாக தொண்டுபட்டியில் தான் இருப்பார். தொண்டு பட்டியை நோக்கி இருவரும் சென்றார்கள். அப்பொழுதுதான் எருமை மாடுகளுக்கு தண்ணீர் வைத்து வைக்கோல் போட்டு கை கால்களைத் தண்ணீரால் கழுவி முந்தானையால் முகத்தையும் கைகளையும் கழுத்து முதுகையெல்லாம் துடைத்துக் கொண்டு தொண்டுப் பட்டியிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தார் கஸ்தூரி.
“அம்மா அம்மா சாக்கு பைய பத்திரமா கொண்டு வந்துட்டோம். அங்கேயே கொண்டு போய் வச்சிட்டம்மா” என்றாள் இளவரசி.
“சேரிச் சேரி தொலைக்காம கொண்டாந்தா செரித்தே. பாத்து பத்திரமா இருந்துக்கோணும் எதக் கொண்டு போனாலும் பத்திரமா கொண்டு வந்துரோனும்” என்று கஸ்தூரி கூறினார்.
இளவரசியும் மல்லிகாவும் ஒருவரை ஒருவர் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்துக் கொள்கிறார்கள்.
”என்ன சோறே திங்காம போயிட்டீங்க. சரி வாங்க சோறு தின்னுங்க என்று கூறியபடி மல்லிகாவின் கைகால் சிராய்ப்பைப் பார்த்தவுடன் பதறிப் போய் “என்ன ஆச்சு? எங்க போனே? எங்க விழுந்தே? எப்பவுமே எலவரசிதே வுழுந்து வாரிட்டு வருவா. உனக்கு என்ன ஆச்சு?” என்று பதட்டத்தோடு கேட்டதோடு வேக வேகமாக உள்ளே சென்று வெள்ளை நிற களிம்பை எடுத்து வந்து தண்ணீர் விட்டு கழுவியபின் மெதுவாகக் களிம்பைப் போட்டபடி இருவரையும் பார்த்தார்.
“என்ன சத்தத்தையே காணோம் என்ன ஆச்சு? என்ன திருட்டுத்தனம் பண்ணுனீங்க?” என்று மறுபடியும் மல்லிகாவை பார்த்து கேட்டார் கஸ்தூரி. “அது.. வரும்போது ரெண்டு பேரும் ஓட்டப்பந்தயம் வச்சோமா. ஓடி வரப்போ மணல்ல சரிச்சுவுட்டு விழுந்துட்டேம்மா” என்று கூறியபடியே மல்லிகா இளவரசி பார்த்தாள். இளவரசி சிரித்துக் கொண்டே தலையை ஆட்டினாள்.
“எப்பப் பாரு வெளையாட்டு வெளையாட்டு. ரோட்ல லாரி பஸ்சு வருது. பார்த்து வரோனும்னு தெரியாதா? அங்க வுழுந்தவ ரோட்டுல வுழுந்துருந்தா என்ன ஆயிருக்கும். ஏதாச்சும் ஆய் இருந்தா. எங்க போறது சொல்லு? ஒன்னப் பறிகுடுத்துட்டே இன்னைக்கு வரைக்கும் தெனம் தெனம் அழுதுட்டு இருக்குறே” என்று கூறி இருவரையும் வாரி அணைத்துக் கொண்டார் கஸ்தூரி. எவ்வளவுதான் அம்மா திட்டினாலும் அந்தக் கோபத்தோடு அம்மா வாரி அணைத்துக் கொள்வது அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் அவர்களுக்கு. அந்த நேரத்தில் அம்மா நீ எப்பவுமே இப்புடியே இருக்கக்கூடாதா? நீ அடிக்கடி பெரிய சூனியக்காரி மாதிரியே தெரியறே அம்மா எப்பவாச்சு தேவதை மாதிரி தெரியறே. இப்படியே இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும் உன்னை எல்லாருக்கும் பிடிக்கும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் இளவரசி. இருவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு வெளியே வந்தார்கள்.
ஜோசப் மேரி அன்னக்கொடி சங்கர் விஜயா அருண் எல்லோரும் அவர்கள் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். ஜோசப் மேரி ரேடியோ ரூம்ல இருந்து எங்கள வுட்டுட்டு வந்துட்டீங்க. எங்க சாக்குப்பை தொலைஞ்சு போச்சு தெரியுமா?” என்று கேட்டாள் இளவரசி.
“நாங்க வெளியில வந்து உங்களைத் தேடிப் பாத்தோம். உங்கள காணோமா. அப்புறம் நீங்க போயிட்டீங்கனு நெனைச்சு வந்துட்டோம். எப்படித் தொலைந்து போச்சு அப்புறம் என்ன ஆச்சு? உங்க அம்மா போகும்போதே திட்டுச்சு. நல்லா மாட்டீட்டீங்களா?” என்று கேட்டான் ஜோசப்.
“பக்கத்துல ஒரு கடை இருந்துச்சு இல்லையா! அந்தக் கடைக்காரர் தாத்தா ஒரு சாக்குக் குடுத்தார். வாங்கிட்டு வந்துட்டோம். இல்லனா அவ்வளவுதான் எங்க அம்மா எங்களத் தொலைச்சுப் போட்டு இருக்கும்” என்று சிரித்தபடியே கூறினாள் மல்லிகா.
“சரி வாங்க விளையாடலாம்” என்று அன்னக்கொடி கூறினாள். இளவரசியின் வீட்டை ஒட்டி இருந்த தாஜ்மஹால் மண்டபத்திற்கு முன்பு இருந்த திண்ணையில் சென்று அமர்ந்தார்கள். அவர்கள் மட்டுமல்ல அந்த தெருவில் இருக்கும் அனைத்துக் குழந்தைகளும் விளையாடுவதற்கான இடம்தான் தாஜ்மஹால் மண்டபத்தில் முன்பு இருந்த திண்ணையும் அதற்கு முன்னால் இருந்த பந்தலும் தான்
முதலில் கபடி விளையாட ஆரம்பித்தார்கள். விளையாட விளையாடவே சண்டை வந்துவிட்டது. எப்போது தோற்றாலும் இளவரசி ஒத்துக் கொள்ள மாட்டாள். இது எல்லோருக்கும் தெரிந்ததுதான் ஆனால் இதை மற்றவர்கள் ஒத்துக் கொள்வார்கள்.
ஜோசப் ஒரு நாளும் ஒத்துக்கொள்ள மாட்டான். இளவரசியோடு சண்டை போட்டுக் கொண்டே இருப்பான். அன்றும் அப்படித்தான் சண்டை வந்தது. இளவரசி கோபித்துக் கொண்டு அவர்கள் வீட்டில் முன்பு இருந்த கொல்மொகர் மரத்தின் அடியில் போய் அமர்ந்து கொண்டாள்.
“உனக்கு மட்டும் ஏன் இளவரசி இவ்வளவு கோவம் வருது” என்று கொல்மொகர் மரம் அவளிடம் கேட்டது.
“நான் அவுட்டே ஆகாமயே அவுட் ஆகுறன்னு சொன்னா எப்படி கோவப்படாம இருக்க முடியும்?” “எல்லாருமே அவுட்டுன்னு சொல்றாங்க. அது எப்படி எல்லாருமே பொய் சொல்லுவாங்களா? வுட்டுக் குடுத்துப் போகணும்”
“அப்படி எல்லாம் வுட்டுக்குடுத்துப் போக முடியாது. நான் அவுட் ஆகல அவ்வளவுதான். அது மட்டும் இல்லாம எப்பப் பார்த்தாலும் ஜோசப் என்ன திட்டிக்கிட்டே இருக்கிறானே”
“எதுக்குத் திட்டுறான்?”
“நானு அவுட் ஆனா ஒத்துக்க மாட்டேங்கிறேனா. புடிவாதம் புடிக்கிறனா அதுக்குத் தான்”
“அவன் சொல்றதும் சரிதானே. ரொம்பப் புடிவாதம் புடிக்கிறே. கொஞ்சமாவது புடிவாதத்தை வுட்டுக் கொடுக்கணும். என்னை எல்லாம் உங்க அம்மா தினமும் திட்டிக்கிட்டே இருக்குது. நான் எதாவது கண்டுக்கிறனா பாரு. ஒன்னும் இல்லாததுக்கு நீ சண்டப் போட்டுக்குற” என்று கூறியது கொல்மொகர்.
“சேரிச் சேரி இனிமேல் கோவப்படல. அவங்க வந்து கூப்பிட்டாங்கன்னா வேணாப் போறேன். ஆனா நானே போவ மாட்டேன் சரியா?” என்று கொல்மொகர் மரத்திடம் பேசிக் கொண்டிருந்தாள் இளவரசி.
“சரி இன்னொரு தடவ மொதல்ல இருந்து வெளையாடலாம்” என்று ஜோசப் தன்னுடைய கோபத்தையும் பிடிவாதத்தையும் விட்டு விட்டு இளவரசியிடம் வந்து கேட்டான்.
சற்று நேர அமைதிக்குப் பின் இளவரசி எழுந்து கொல்மொகரைப் பார்த்து கண்ணடித்தபடி வந்து விளையாட ஆரம்பித்தாள். எல்லோரும் சேர்ந்து நொண்டி விளையாடிக் கொண்டிருந்தார்கள். “ஓடுங்க! ஓடுங்க! ஓடுங்க!” என்ற அன்னக்கொடியின் சத்தத்தைக் கேட்டு எல்லோரும் கிழக்குப் பக்கமாக திரும்பிப் பார்த்தார்கள்.
எப்போதும் ’ஓடுங்க’ என்று சத்தம் கேட்டாலும் அனைவரும் கிழக்குப் பக்கம் தான் திரும்பிப் பார்ப்பார்கள். கிழக்குப் பக்கத்தில் வெள்ளை நிறச் சேலையோடு வேகமாக …
-வளரும்
சரிதா ஜோ
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சரிதா ஜோ தமிழிலும் உளவியலிலும் முதுகலை பட்டமும் கல்வியியலில் நிறைஞர் பட்டமும் பெற்றவர். கதை சொல்லியாக தமிழ் இலக்கியத்திற்குள் பயணத்தை தொடங்கிய இவர் ஏராளமான சிறார் புத்தகங்கள் எழுதியுள்ளார்.