அத்தியாயம் – 4

சத்தம் கேட்டு மிக வேகமாக விஜயா அக்காவின் வீட்டை நோக்கி ஓடினாள் இளவரசி. விஜயா அக்காவின் வீட்டின் சமையலறைக்குள் நான்கு பேர் நின்று கொண்டிருந்தார்கள்.

இரண்டு பேரின் காலுக்கு இடையில் தலையை விட்டுப் பார்த்த இளவரசிக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது.

அங்கே விஜயா அக்கா படுத்திருந்தார். அவரின் நாக்கு வெளியே இருந்தது. மூக்கிலிருந்து சளி ஒழுகி இருந்தது. “ஐயோ விஜயா அக்கா.. அக்காவுக்கு என்ன ஆச்சு?” என்று இளவரசி சத்தமிட்டாள்.

“உன்னை யார் இங்க வரச் சொன்னது. போ போ நீ வீட்டுக்குப் போ” என்று விஜயா அக்காவின் மாமா இளவரசியை வெளியே அழைத்து வந்தார். இந்தச் சின்னப் பிள்ளையை யாரு உள்ளே விட்டது. வீட்டுக்கு அனுப்பிச்சு விடுங்க” என்று கூறினார்.

இளவரசி வேகமாக அழுது கொண்டே தன் வீட்டை நோக்கி ஓடினாள்.

அங்கு அம்மாவைத் தேடினாள். அம்மா அங்கு இல்லாததால் தொண்டுப் பட்டியை நோக்கி ஓடினாள் இளவரசி. அங்கு மாடுகளுக்குத் தீவனம் வைத்துக் கொண்டிருந்த அம்மாவிடம் ஓடிச் சென்று “அம்மா விஜயா அக்காவுக்கு என்ன ஆச்சு? செத்துப் போய்ட்டாங்களா? ஏன் செத்து போயிட்டாங்க?” என்று கேட்டாள்.

“யார் சொன்னது?” என்று கஸ்தூரி அதிர்ச்சியோடு கேட்டார். இப்பதான் விஜயா அக்கா வீட்டுக்குப் போயிட்டு வந்தேன். நாக்கெல்லாம் வெளியில தொங்க போட்டுட்டு சளி எல்லாம் ஒழுக்கி விஜயா அக்காவப் பார்க்கவே எனக்கு பயமா இருந்துச்சு” என்று அழுதாள் இளவரசி.

இளவரசி சொன்னதைக் கேட்டு “உன்னைய யாரு அங்க போகச் சொன்னது?” என்று இளவரசியிடம் கோபமாகக் கேட்டுவிட்டு, கொண்டையாக போட்டு இருந்த முடியை அவிழ்த்து கைகளால் தலையை நீவினார். வேக வேகமாக விஜயாவின் வீட்டை நோக்கி நடைபோட்டார் கஸ்தூரி.

அன்றிரவு அம்மாவிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தாள் இளவரசி.

“அம்மா விஜயா அக்கா ஏன் செத்து போனாங்க?”

“அவங்களுக்கு ரொம்ப நாளா வயித்து வலி. அதனால வயித்து வலி தாங்க முடியாம செத்து போயிட்டாங்க. இப்ப நீ கம்முனு படுத்துத் தூங்கு. தூங்குற நேரத்துல அதப் பத்தி எல்லாம் பேசக்கூடாது” என்று அதற்றினார் கஸ்தூரி.

“இல்லம்மா வள்ளிம்மா பாட்டி சொன்னாங்க”

“என்ன சொன்னாங்க”

“விஜயா அக்கா யாரோவோ கல்யாணம் பண்ணிக்கிறேன்னு அவங்க அம்மா கிட்ட கேட்டுச்சாமா. அவங்க அம்மா வேற சாதி பையன கல்யாணம் பண்ண கூடாதுன்னு சொல்லிட்டாங்களாம். அதனால விஜயா அக்கா செத்துப் போச்சாமா”அப்படின்னு சொன்னாங்க. 

“இதையெல்லாம் அந்தக் கெழவி உன்கிட்டச் சொல்லுச்சா?”

“இல்லம்மா நம்ம ராசா மணி சித்தி கிட்டச் சொல்லிட்டு இருந்துச்சு. நான் கேட்டுக்கிட்டு இருந்தேன்”

“அதெல்லாம் ஒன்னும் இல்ல. உடம்பு சரி இல்லாம தான் செத்துப்போச்சு. நீ இதப் பத்தி எல்லாம் எங்கேயும் பேசிட்டுத் திரியாத சரியா?”

“சரிம்மா ஜாதினா என்ன?”

“அதெல்லாம் இப்ப நீ தெரிஞ்சுக்க வேண்டியது இல்லை. கம்முனு படுத்து தூங்கு” என்றார் கஸ்தூரி.

அன்று இரவு இளவரசி தூங்கிப் போனாலும் அது பற்றிய நினைவுகள் அவள் மனதில் இருந்து அகலவே இல்லை.

அன்றிலிருந்து ஜாதினா என்னனு தெரிஞ்சுக்கணும் ஆர்வம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. யாரிடம் கேட்பது என்று அவளுக்குத் தெரியவில்லை. அப்பாவிடம் கேட்டாள் இதைப் பத்தி எல்லாம் பேசக்கூடாதுன்னு சொல்லிட்டாரு. அம்மாவிடம் கேட்டாள் இத பத்தி எல்லாம் பேசினா அடி பிச்சுப் போடுவேன்னு சொல்லிட்டாங்க. யாரிடம் தான் கேட்பது என்று யோசித்துக் கொண்டு இருந்தாள் இளவரசி.

விஜயமங்கலம் சந்தைதான் சுத்துப்பட்டுக் கிராமங்களுக்கு சூப்பர் மார்க்கெட். அங்கு கிடைக்காத பொருளே இல்லை எனலாம்.

ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் அந்தச் செவ்வக வடிவச் சந்தையில் செவ்வாய்க்கிழமை காலை கோழி வியாபாரத்தில் இருந்து தொடங்கும்.

பள்ளிக்கூடத்துக்குச் செல்ல சந்தையைக் கடந்து தான் செல்ல வேண்டும்.

இளவரசியும் அவளுடைய தோழி சுபாவும் மற்ற நாட்களை விட, சந்தை நாட்களில் சந்தையைப் பற்றி பேசிக்கொண்டே செல்வார்கள்.

அன்று இளவரசி எதுவுமே பேசவில்லை. “என்ன ஆச்சு உனக்கு? எதுவுமே பேச மாட்டேங்கற” என்று கேட்டாள் சுபா.

“நான் தான் சொன்னேனே”

“என்ன?”

“விஜயா அக்கா செத்துப் போனதுக்கு ஜாதி தான் காரணம் சொல்றாங்கனு”

“சரி அதுக்கு என்ன இப்ப?”

“ஜாதினா என்னனு கேட்டேன். யாருமே சொல்ல மாட்டேங்கிறாங்க”

“ஊர்ல இருந்து மிலிட்டரிப்ப வந்ததும் அவர்கிட்ட கேட்டுக்கலாம் ” என்றாள் சுபா.

சரி என்று வாய் தான் சொல்லியது. வழக்கமான பேச்சு இளவரசியிடம் இல்லை.

அவளை எப்படியாவது கலகலப்பாக வேண்டும் என்று சுபா பேசிக் கொண்டே வந்தாள்.

“இளவரசி பாரேன் துண்டை போட்டு இரண்டு பேரும் கைகளை பிடித்துக் கொண்டு இருக்காங்க எதுக்கு இப்படி பிடிக்கிறாங்க?” என்று கேட்டாள் சுபா.

“எனக்கு என்ன தெரியும்? நானும் உன்கூடத் தனே இருக்கேன்” என்றாள் இளவரசி கோபமாக.

“அட உங்க வீட்ல தான ஆடு மாடெல்லாம் இருக்குதே. உனக்குத் தெரியுமோனு கேட்டேன்”

“என்னது?” என்றாள் கோபமாக இளவரசி.

“இல்ல இளவரசி பாரு பக்கத்துல கோழி இருக்கு. ஒருவேளை கோழிக்கு வெலை பேசுவாங்களோ? உங்க வீட்ல தான் கோழி இருக்கே. உங்க அப்பாவும் இப்படித்தானே விலை பேசி இருப்பாங்க. அதனால தான் கேட்டேன்” என்றாள் சுபா.

“எனக்கு இந்த ஆடு மாடு கோழி எல்லாம் பார்த்தாலே பத்திகிட்டு வருது. பிடிக்கவே பிடிக்காது. நீ வேணும்னே எப்பப் பாத்தாலும் அதப் பத்தி கேட்கிறே. நான் உன்கூட பேசவே மாட்டேன் போ” என்று முகத்தை திருப்பிக் கொண்டு கையில் வைத்திருந்த மஞ்சள் பையை தோளில் மாட்டியபடி விடுவிடுவென்று பள்ளியை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

“சரி சரி மன்னிச்சுக்கோடி தெரியாம சொல்லிட்டேன். இனி சொல்ல மாட்டேன்” என்று கூறி இளவரசியின் பின்னாடியே ஓடினாள் சுபா.

பள்ளி மணி அடிக்கவும் இருவரும் பள்ளியை அடையவும் சரியாக இருந்தது.

அன்று மாலைவரை இளவரசி சமாதானம் அடையவில்லை. மாலை பள்ளியில் இருந்து கிளம்பும்போது “இளவரசி இன்னைக்கு முழுசும் நீ என்கூட பேசவேயில்ல. பேசுவியா பேசமாட்டியா? தெரியாம சொல்லிட்டேன். இனிமேல் நான் அதைப் பத்தி பேசவே மாட்டேன். உன் கூட பேசாம என்னால எப்படி இருக்க முடியுமா?

சின்னச் சின்னப் புள்ள

அழகு அழகு புள்ள

குட்டிக் குட்டிப் புள்ள

யார் அந்தப் புள்ள

எங்க இளவரசி புள்ள

ராசாத்தி புள்ள”

என்று சுபா கூறக் கூற இளவரசியின் கண்கள் முதலில் சிரிக்க ஆரம்பித்தன. உதடுகள் பிளந்து வெடிச்சிரிப்பு ஒன்றை சிரித்துவிட்டு சுபாவைக் கட்டி அணைத்துக் கொண்டாள்.

“எப்படித்தான் சாயங்காலம் வரைக்கும் பேசாம இருந்தேன்னு தெரியல” என்றாள் இளவரசி.

“உனக்கு அழுத்தம் அதிகம்”

“அப்படி இல்ல. எனக்குப் பிடிக்காதுன்னு உனக்குத் தெரியும் தானே. தெரிந்து கொண்டே நீ ஆடு கோழியை பற்றிக் கேட்டால், எனக்குக் கோவம் வரத்தானே செய்யும்”

“சரி சரி விடு இப்ப கோவம் எல்லாம் தீர்ந்துச்சா. வா போலாம்” என்று சுபா கூறினாள். இருவரும் கைகோர்த்தபடி பள்ளியை விட்டு வெளியே வந்தார்கள்.

சந்தை நாள் என்றாலே இளவரசிக்குக் கொண்டாட்டம் தான். சந்தைக்கு வெளியிலும் உள்ளேயும் இருக்கும் கடைகளை ரசித்துப் பார்த்துக் கொண்டே செல்வாள். என்றேனும் ஒருநாள் சந்தைக்குள் செல்ல வேண்டும் என்ற ஆசை இளவரசிக்கு இருந்தது.

“சுபா எனக்கு சந்தைக்குள்ள போயி என்னென்ன இருக்குன்னு பார்க்கணும் போல இருக்கு”

“வேணா இளவரசி சந்தைகுள்ள போனா தொலைஞ்சு போய்டுவோம். அதுமட்டுமில்லாம புள்ளை புடிக்கிறவன் புடிச்சிட்டு போயிருவான் தெரியுமில்ல”

“தெரியும்! தெரியும்! ஆனா ஒரு நாளாச்சும் போகணும். வெளிலையே பூவு, பிஸ்கோத்து, முட்டாயி, ஆப்பிள், ஆரஞ்சு, பொரிகடலை எத்தன தெரியுது பாரு. இன்னும் உள்ளுக்குள்ள எப்படி இருக்குமோ” என்றாள் இளவரசி.

“எனக்கும்தான் ஆசையா இருக்குது. நான் மட்டும் போயா பாத்து இருக்கேன். ஆனா புதுத்துணி கூட கிடைக்குமுனு எங்க அம்மா சொல்லி இருக்காங்க”

“இதுக்கு வேண்டியே சீக்கிரமாக பெரிய புள்ளையாவனும். பெரியபுள்ளை ஆயிட்டா சந்தைக்கு போலாம்”என்றாள் இளவரசி.

சந்தையின் வாயிலின் இடது புறத்தில் பெரிய பாத்திரத்தில் செக்கச் சிவந்த நிறத்தில் ஜிலேபிகள் இருந்தன. தேவைப்படுவோருக்கு ஒரு பேப்பரில் எடுத்துக் கட்டித் தருவார்கள். ஜீரோ அதில் ஒழுகிக் கொண்டிருக்கும். இரண்டு முறை இளவரசியின் அப்பா சந்தையில் இருந்து வாங்கி வந்து கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு வாரமும் இளவரசியும் சுபாவும் அதைப்பார்த்து எச்சில் விழுங்கிக் கொண்டே செல்வார்கள்.

வலது புறத்தில் பூக்கடை. பூக்கூடையில் ரோஜா, டேலியா, மல்லிகை, முல்லை, ஜாதி மல்லி மற்றும் கனகாம்பரம் என்று விதவிதமான பூக்களை அழகாக அடுக்கி வைத்திருப்பார்கள். அந்தப் பூக்களை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே செல்வார்கள் இருவரும். வலதுபுறமும் இடதுபுறமும் சந்தைக்கு முன்பு செருப்புப் கடை மாடுகளுக்கு தேவையான மூக்கணாங்கயிறு மற்றும் பாத்திர கடை என்று இருக்கும்.

உள்ளிருந்து சத்தம் காதைக் கிழித்துக் கொண்டிருக்கும். கூறே ரண்டு ரூவா. கிலோ நாலுரூவா. வா வா போனா வராது. நேரம்போனா கிடைக்காது. வா வா வா என்று சத்தத்தைக் கேட்டுக் கொண்டே செல்வார்கள்.

சந்தையை ஆரம்பித்த இடத்திலிருந்து முடியும் இடம் வரை பல்வேறு வாசனைகள் மாறி மாறி நுகர்ந்து கொண்டே வருவார்கள். சந்தை முடியும் இடத்தில் வந்தவுடன் மூக்கைப்பொத்திக் கொள்வார்கள்.

சந்தையின் எதிர்ப்புறம் மலையாங்குட்டை என்ற பெரியகுட்டை. அந்தக் குட்டையின் மேட்டில் கட்டைகளில் கறிகள் தொங்கிக் கொண்டிருக்கும்.

இந்த வாசனைதான் இளவரசியும் சுபாவையும் மூக்கைப் பொத்த வைத்தது. சந்தை தாண்டி சிறிது தூரம் சென்றவுடன் தான் கையை மூக்கிலிருந்து எடுப்பார்கள்.

“இளவரசி இந்தக் கறிய வாங்கி எப்புடி ஆக்கித் திங்கறாங்க?”

“ஆமா சுபா இந்த நாத்தம் நாறுது” என்றாள் இளவரசி.

இருவரும் பேசியபடியே சுபா வீட்டை அடைந்தார்கள். இளவரசியின் வீட்டுக்கு ஐந்தாறு வீடு முன்பே சுபாவின் வீடு இருந்தது. சரி நான் வரேன் என்று வீடு நோக்கி நடை போட்டாள் இளவரசி.

“இளவரசி நில்லு நில்லு” என்றாள் சுபா.

“என்ன என்று கேட்டபடி சுபாவை நோக்கி ஓடினாள் இளவரசி.

“குங்ஃபூ கிளாசுக்குக் கேட்டியா உங்க அம்மா என்ன சொல்லுச்சு?”

“போடி எங்க அம்மா விட மாட்டேன்னு சொல்லிடுச்சு.அப்பா கூட ஒன்னும் சொல்லல”

“அப்ப நீ வரமாட்டியா? நீ வந்தா ரொம்ப நல்லா இருக்கும். அடிக்கிறதுக்கு எல்லாம் சொல்லித் தர்றாங்க. அடிக்கிறத எப்படித் தடுப்பதுன்னு கூடச் சொல்லிக் கொடுக்குறாங்க. ஆனா கை கால் வலிக்குது”

“எனக்குக் கை கால் வலிச்சாலும் பரவாயில்லை. வந்து சேந்தரோனுமின்னு இருக்குது. இன்னைக்கு போய் எப்படியாவது எங்க அம்மாட்ட கேட்டுட்டு வர்றேன்” என்றாள் இளவரசி.

“கண்டிப்பா எப்படியாவது சேர்ந்துடு. நீ இல்லாம குங்ஃபூ கிளாஸ் எனக்கு ரொம்ப போர் அடிக்குது” என்றாள் சுபா.

“சரி மில்ட்ரிப்பா எப்ப வராரு?”

“அடுத்த வாரம்” என்றாள் சுபா

எங்கே சென்றாலும் எத்தனை நாள் ஆனாலும் ஜாதி என்றால் என்ன? என்று தெரிந்து கொள்ளும் எண்ணம் மட்டும் மறக்கவே இல்லை.

மிலிட்ரிப்பாவின் வருகையை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தாள் இளவரசி.

00

-வளரும்

சரிதா ஜோ

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சரிதா ஜோ தமிழிலும் உளவியலிலும் முதுகலை பட்டமும் கல்வியியலில் நிறைஞர் பட்டமும் பெற்றவர். கதை சொல்லியாக தமிழ் இலக்கியத்திற்குள் பயணத்தை தொடங்கிய இவர் ஏராளமான சிறார் புத்தகங்கள் எழுதியுள்ளார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *