எட்டு ஜில்லாவுக்கே இளவரசி

அத்யாயம் – 7

தூரத்திலிருந்து தாத்தாவும் அப்பாவும் வருவது தெரிந்தது. ஆனால் அவர்கள் நடந்து வரவில்லை. ஒரு டி.வி.ஸ் 50 வண்டியில் வந்து கொண்டிருந்தார்கள்.

இளவரசிக்கு ஒரு புறம் சைக்கிள் இல்லை என்று கோபமாக இருந்தாலும் இருந்தாலும் மறுபுறம் மகிழ்ச்சியாக இருந்தது.

பக்கத்தில் வரவர துள்ளிக் குதிக்க ஆரம்பித்தாள் இளவரசி.

இளவரசிக்கு நீண்ட நாட்களாக மேரியைப் போல் தானும் தன்னுடைய அப்பாவோடு வண்டியில் செல்ல வேண்டும் என்று ஆசை. ஆனால் தன் அப்பாவிடம் சைக்கிள் மட்டும்தான் இருந்தது. எவ்வளவு முறை மேரியை பார்த்து ஏங்கி இருக்கிறாள்.

அப்பா தாத்தாவின் பின்னால் அமர்ந்து வந்தார் தாத்தா தான் ஒட்டிக்கொண்டு வந்தார். வீட்டின் முன்னால் கொண்டு வந்து வண்டியை நிறுத்தினார் தாத்தா.

வண்டியை தொட்டு பார்த்து மகிழ்ந்தாள். “தாத்தா இந்த வண்டி நமக்கா நமக்கே நமக்கா? அப்பாதான் ஓட்ட போகுதா? இனிமேலு அப்பா கூட நான் வண்டில போலாமா?” என்று குதித்துக் கொண்டே கேட்டாள் இளவரசி.

“ஆமா ராசாத்தி இந்த வண்டி இனி நமக்குத் தான். நீங்க எல்லாம் பொறக்குறதுக்கு முன்னாடி ஒரு பழைய வண்டி வைச்சிருந்தே. அந்த வண்டி ரிப்பேர் ஆகி ரிப்பேர் ஆகி கடைசில ரிப்பேர் செய்ய பண்ண முடியாம வித்துப்புட்டேன். வண்டி வாங்குறதுக்கு அதுக்கப்புறம் காசே சேர்ல. நானும் உங்க அப்பனுக்கு ஒரு வண்டி வாங்கி கொடுக்கணும்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன் அதுக்கு இப்பதான் நேரம் வந்திருக்கு.

“தாத்தா வண்டிய நீங்கதான் ஓட்டிட்டு வந்தீங்க. அப்பா ஓட்டிட்டு வரல?”

“உங்கப்பனுக்கு இன்னும் வண்டி ஓட்ட த் தெரியாது. இனி தான் ஓட்டி பழவோணும்”

“செரி செரி என்னோட சைக்கிள் என்னாச்சு?”

“என்ன பெத்த ராசாத்தி உனக்கு சைக்கிள் வாங்கி கொடுக்காமையா. அதுக்குத்தே வழி பண்ணி இருக்கே. இன்னும் ஒரு வாரத்துல சைக்கிள் வந்து நிற்கும் பாத்துக்கோ”

“அப்போ இன்னைக்கு வாங்கிட்டு வரலையா? நாங் கூட வண்டிக்காரத் தாத்தா வண்டியில போட்டு இருக்கீங்கன்னு நெனச்சேன். நான் உன் கூட பேசவே மாட்டேன்” என்று அழுதபடியே கொல்முகர் மரத்தின் அடியில் போய் அமர்ந்து கொண்டாள் இளவரசி.

“எத்தனை நாளைக்குத்தே இந்த சைக்கிளில லொடக்கு லொடக்குன்னு போயிட்டு திரியுவான்? பாவம் அதனால வண்டியை வாங்கிட்டேன். உனக்கு சைக்கிள் ஒரு வாரத்தில் கிடைக்கும்னு சொல்றேன்ல நீ நம்பனும்”

“நெஜமாலுமே கிடைக்குமா?”

“ராணி மங்கம்மா, உனக்கு இல்லாத சைக்கிளா? ஒரு வாரத்தில் சைக்கிள் வரலைனா தாத்தா சட்டைப் புடிச்சு என்னன்னு கேளு”.

“இத்தனை ஒசரமா இருக்கறே. நான் எப்படி உன் சட்டை பிடிக்க முடியும்? உன் வேட்டியை புடிச்சு கேட்கிறேன் சரியா?” என்று சிரித்துக் கொண்டே மூக்கில் ஒளுகிய சளியை புரங்கையால் துடைத்தபடி அங்கிருந்து நகர்ந்தாள் இளவரசி.

அன்று முதல் தினமும் எங்கு சென்றாலும் எல்லோரிடமும் சைக்கிளைப் பற்றிய பேசிக் கொண்டிருந்தாள். அதுவும் குறிப்பாக தேவியிடம் இந்த மாதிரியே எனக்கு ஒரு சைக்கிள் வரப்போகுது என்று கூறினாள்.

எத்தனையோ முறை தேவியிடம் கெஞ்சி கேட்டிருக்கிறாள். சைக்கிளை ஒருமுறை ஓட்டுவதற்கு. ஆனால் தேவி ஒரு முறை கூட கொடுத்ததில்லை. ‘அடுத்த வாரம் சைக்கிள் வந்துரும். அப்போ நானும் உன்ன மாதிரியே ஓட்டிட்டு போக போறேன் பாரு’ என்று தேவியிடம் ஒரு நாள் கூறினாள்.

“போன வாரம் இப்படித்தான் சொன்னேன் இந்த வாரம் வந்திருச்சா? பாக்கலாம் பாக்கலாம் நீயும் புது சைக்கிள் வாங்கி ஓட்றதை” என்றாள் தேவி.

தேவி கூறியதை கேட்டவுடன் இளவரசிக்கு அழுகை அழுகையாய் வந்தது. அந்த இடத்திலிருந்து அழுது கொண்டே தன் வீட்டை நோக்கி ஓடினாள் இளவரசி.

அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை கிணற்றில் நீச்சல் அடிப்பதற்காக தன் அண்ணா ராசுக்குட்டியோடு கிணற்றிற்கு சென்றாள் இளவரசி.

இளவரசிக்கு நீச்சல் அடிக்க தெரியாது. சொரப்புரொடையை கட்டிக்கொண்டு அடிப்பாள்.

நீச்சல் தெரியாததால் இளவரசியின் அம்மா இளவரசியைக் கிணற்றுப் பக்கமே செல்லக்கூடாது என்று கூறியிருக்கிறார்.

ஆனாலும் அவளுக்கு நீச்சல் அடித்துப் பழகுவதை விட தன் அண்ணனோடும் அவர்கள் நண்பர்களுடன் இருப்பது மிகவும் பிடிக்கும்.

அவர்கள் கிரிக்கெட் விளையாடும் போதும் நீச்சல் அடிக்க செல்லும்போதும் கபடி விளையாடும் போது அவர்களோடேயே இருப்பாள்.

அன்றும் அப்படித்தான் நீச்சல் அடிக்க அண்ணா வீட்டிலிருந்த சொரப்புருடையை எடுத்துக்கொண்டு கிணற்றை நோக்கி சென்றாள்

“என்ன சிட்டுக்குருவி சைக்கிள் வரப்போகுதா உனக்கு? ஊரெல்லாம் இதே பேச்சா பேசிட்டு திரியரையாமா?” என்று கேட்டான் ராசுக்குட்டியின் நண்பன் வெங்கட்.

“ஆமா அண்ணே, எங்க அப்பா சைக்கிள் வாங்கித் தர போவுது. இல்ல இல்ல எங்க தாத்தா சைக்கிள் வாங்கித் தர போவுது. அதுவும் சின்னச் சைக்கிள். நதியா சைக்கிள். சிவப்பு கலர் சைக்கிள். நான் சைக்கிள் வந்ததுக்கு அப்புறம் கிணத்துக்கு வருவதற்குக் கூட சைக்கிள்ல தான் வருவேன். உங்கள மாதிரி நடந்து வர மாட்டேன்” என்றாள் இளவரசி.

அந்த நேரம் உடன் வந்த கேசவன் விசில் அடித்து “ஆஹா சிட்டுக்குருவிக்கு சைக்கிள் வரப்போகுது சிட்டுக்குருவிக்கு சைக்கிள் வரப்போகுது” என்று கத்தினான்.

“அண்ணா எனக்கு விசில் அடிச்சு பழகி விடுறீங்களா எனக்கு ரொம்ப நாளா விசில் அடிக்கணும்னு ஆசை” என்றாள் இளவரசி.

“ஏய் பொம்பள புள்ளையா அடக்கொடுக்கமா இருக்கோணும். விசில் எல்லாம் அடிக்கக் கூடாது. உங்க அம்மாவுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான்” என்றான் ராசுக்குட்டி.

“ஏ விசில் அடிச்சா அடக்கொடுக்கமா இல்லைன்னு அர்த்தமா? ஆனா எனக்கு விசில் அடிக்கணும்னு ஆசையா இருக்கே”

“அட சிட்டுக்குருவி அவங் கெடக்குறான். வா நான் உனக்கு விசில் அடிச்சு பழகிவிடுகிறேன்”.

”அவனுக்கு அடிக்கத் தெரியாது அதனால அப்படி சொல்றானுக” என்றான் கேசவன்.

“சிட்டு உங்க அண்ணன் சொல்றது சரிதான். இதெல்லாம் கத்துக்க கூடாது. இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா அவன் சொல்றானு நீ கேக்காதே” என்றான் ரங்கா.

“அவனுங்க கெடக்குறானுங்க விடு நான் கத்து குடுக்கிறேன்” என்று கூறி இளவரசியை மடியில் அமர வைத்து ஆள்காட்டி விரலையும் பெரு விரலையும் இணைத்து வைத்து வாய்க்கு அருகில் கொண்டு சென்று நாக்கை மடக்கி அந்த விரலை நாட்டின் மேல் வைத்து ஊதியவுடன் விசில் சத்தம் பறந்தது.

இதே போல தான் இளவரசியும் செய்தாள். ஆனால் விசில் சத்தம் வரவில்லை. எவ்வளவு நேரம் போராடியும் வரவில்லை. “இதை நீ தினமும் வீட்டில் செஞ்சு பாரு. அடுத்த வாரம் வந்து செஞ்சு காமி வரல அப்படின்னா நான் எனக்கு வேறொரு டெக்னிக்ல சொல்லிக் குடுக்கிறேன். அதுவரைக்கும் டெய்லி செஞ்சு பார்க்கணும் சரியா?” என்றான் கேசவன்.

“அந்த டெக்னிக்கை இப்பவே சொல்லிக் குடு அண்ணே”

“இல்ல இல்ல நீ ஒரு வாரம் செஞ்சு பாத்துட்டு வா சரியா?”

“இளவரசி வூட்டில் போய் செஞ்சு பார்த்துறாத. அவ்வளவுதான் உங்க அம்மா உன்ன அடிக்குதோ இல்லையோ என்ன அவ்ளோதான் ஒரு வழி பண்ணிரும். வூட்ல போய் விசில் அடிக்கிறேன்னு பண்ணிட்டு திரியாதே சரியா?”

”போ.. ணா.. நான் விசில் அடிக்க கத்துக்குவேன். உனக்கு அடிக்கத் தெரியலைங்கறதுக்காவ நீ சொல்லக்கூடாது” என்றாள் இளவரசி.

“டேய் நீ கெட்டதும் இல்லாம ஏன்டா இளவரசியும் சேர்த்து கெடுக்கிறே. விசில் அடிக்கிறதுக்கு இளவரசிக்கு சொல்லிக் குடுத்த அப்புறம் நடக்கிறதே வேற” என்றான் ராசுக்குட்டி.

“நீ வாடி என் சிட்டுக்குருவி உனக்கு நான் விசில் அடிக்க சொல்லி கொடுக்கிறே. கில்லி விளையாட சொல்லிக் கொடுக்கிறே. கபடியோட சொல்லிக் கொடுக்கிறே. கிரிக்கெட் ஆட சொல்லிக் கொடுக்கிறே. உண்டிவில் அடிக்கிறது கூட நான் சொல்லிக் கொடுக்கிறே எல்லாத்தையும் கத்துக்கணும் சரியா”

“எனக்கு எல்லாமே கத்துக்கணும்னு ஆசைதான். ஆனா எங்க அம்மா தான் வெளையாடுவதற்கு வுடவே மாட்டேங்குது. அது உங்களோட வர்றதுன்னா அந்த தடியினுகளோடு சேர்ந்து சுத்த போறயான்னு கேக்குது?”

“என்னது தடியனுங்களா? நாங்களா?”

“ஏழு கழுதை வயசாகி ஒரு வேலைக்கு போகாமல் சுத்திட்டு இருக்கிறானுங்கனும் சொல்லும்”

”செரி செரி உங்க அம்மா சொல்றதெல்லாம் நீ காதுல போட்டுக்கணும்னு அவசியம் இல்ல. அதெல்லாம் மறந்துரு சரியா?” என்றான் கேசவன்.

கிணறு வந்தது கிணற்றுக்குள் அனைவரும் இறங்கினார்கள்.

கிணற்றுக்குள் நீச்சல் அடித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒரு போட்டி வைத்தார்கள். கிணற்றின் வடக்கு மூலையில் இருந்து தெற்கு மூலை வரை நீசிலடித்து வர வேண்டும் யார் முதலில் வருகிறார்கள் என்று பார்ப்போம் என்றான் வெங்கட். இளவரசியும் போட்டியில் சேர்ந்து கொண்டாள். எல்லோரும் வேகவேகமாக அடித்துக் கொண்டு சென்ற பொழுது இளவரசிக்கு பாதியில் வரும் பொழுது காலை மேலே தூக்க முடியவில்லை. என்ன நடக்கிறது என்று அவளுக்குத் தெரியவில்லை. திடீரென்று அவள் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணிக்குள் சென்று கொண்டிருந்தாள். சுவற்றை தொட்டு விட்டு திரும்பி பார்த்த ராசுக்குட்டி ’டேய் என்னடா எப்பவுமே முதல்ல வர்ற இளவரசியைகா காணோம்’ என்றான். திரும்பிப் பார்க்கும் பொழுது சொரப்புருடை தனியாக மிதந்து கொண்டு இருந்தது. இளவரசி கொஞ்சம் கொஞ்சமாக தண்ணிக்குள் போய்க் கொண்டிருந்தாள் இளவரசியின் தலை மட்டும் தெரிந்தது

”அய்யோ சிட்டு சிட்டு சிட்டு” என்று அலறியபடி அனைவரும் இளவரசியை நோக்கி வேகமாக நீச்சல் அடித்து வந்தார்கள். இளவரசியின் காலை ஒருத்தர் தலைமுடியை ஒருத்தர் இன்று பிடித்துக் கொண்டு இழுத்து வந்து கிணற்றின் மூலையில் தூக்கி அமர வைத்தார்கள்.

பயத்தில் மயக்கம் அடைந்தாள் இளவரசி. சற்று நேரத்தில் கண்விழித்தாள்.

“இளவரசி சத்தம் போட்டு இருக்கலாமே” என்று கேட்டார் கேசவன்.

“அண்ணா எனக்கு வாயே வரல அண்ணா. நான் பயந்து போயிட்டேன்”

”செரி செரி பயப்படாத. அந்த சொரப்புரையில் இருக்கிற கயிறு நழுவிருச்சு. அடுத்த தடவை அதை சரியா கட்டிக்கலாம். நீ இப்படியே உக்காந்து வேடிக்கை மட்டும் பாரு. சரியா?” என்று கூறிவிட்டு கிணற்றுக்குள் மறுபடியும் நீச்சல் அடிக்க ஆயத்தமானார்கள்.

எப்போதுமே ஒருவரை ஒருவர் கிண்டல் கேலி பேசிக் கொண்டிருப்பதை ரசித்து கொண்டிருப்பாள் இளவரசி. அன்றும் அப்படியே செய்தாள் அவர்கள் கூட்டத்தில் வெங்கட் மெக்கானிக் வேலை செய்கிறவன். ஆனால் அவரை மெக்கானிக் என்று கூப்பிட்டால் அவனுக்கு பிடிக்காது.

நண்பர்கள் அவனை மெக்கானிக்கல் மாணிக்கம் மெக்கானிக்கல் மாணிக்கம் என்று கிண்டல் செய்வார்கள்.

அப்பொழுதெல்லாம் கோபப்பட்டு அவர்களை அடிக்க போவான் வெங்கட்.

கிணற்றுக்குள் இருக்கும் வரை சமத்துப் பிள்ளையாக இருப்பாள் இளவரசி. எல்லோரும் நீச்சல் அடித்து முடித்து கிணற்றிலிருந்து மேலே ஏறினார்கள். ஏறியவுடன் “ஏ மெக்கானிக்கல் மாணிக்கம்” என்று சத்தம் போட்டு கூப்பிட்டாள் இளவரசி.

“பாத்தியா சிட்டுக்குருவி. நீ கூட மெக்கானிக்கல் மாணிக்கம் கூப்பிடுறியா” என்று ஓடி வந்து தூக்கி கிணற்றுக்கு அருகில் கொண்டு சென்றான்.

“அண்ணே அண்ணே சும்மா தானே சொன்னேன். இனிமேல் சொல்ல மாட்டேன் இனிமேல் சொல்ல மாட்டேன்”

“சிட்டுக்குருவி சொன்னேனா அப்புறம் எனக்கு கோவம் வந்துரும் சரியா” என்று சொன்னவுடன் “அண்ணே உன்ன இனிமேலு சொல்லமாட்டேன்” என்று கூறி கன்னத்தில் முத்தமிட்டாள்.

கீழே இறக்கி விட்டவுடன் “அதானே பார்த்தேன் நீ என் செல்ல சிட்டு குருவியாச்சே” என்று இளவரசியின் கன்னத்தில் முத்தமிட்டு கீழே இறக்கி விட்டான் வெங்கட்.

எல்லோரும் துண்டை எடுத்து துடைக்க ஆரம்பித்து துணியை மாற்றிக் கொண்டிருக்கும் பொழுது மீண்டும் “மெக்கானிக்கல் மாணிக்கம்” என்று கூப்பிட்டு விட்டு அங்கிருந்த சோளக்காட்டுக்குள் ஓடினாள். பின்னாலேயே துரத்தி சென்ற வெங்கட்டால் இளவரசியைப் பிடிக்க முடியவில்லை.

“வா வா அடுத்த வாரம் நீச்சல் அடிக்க வருவீல்ல அப்ப தண்ணிக்குள்ள வச்சு அமுக்கி வுடரறேன்” என்றான் வெங்கட்.

“ஓஹோ நீ தண்ணிக்குள்ள வச்சு அமுக்குற வரைக்கும் என் கை பூ படிச்சிட்டு இருக்குமா? அசுக்கு புஸுக்கு பார்க்கலாம் பாக்கலாம் அடுத்த வாரம்” என்று கத்திக்கொண்டே ஓடினாள் இளவரசி.

ராசுக்குட்டியின் நண்பர்களுக்கு இளவரசி என்றால் அவ்வளவு பிடிக்கும். இளவரசியின் துருதுருப்பும் சுட்டித்தனமும் அவள் பேசும் அந்த பேச்சும் இவர்களை ஈர்த்துத்தான் இருந்தது. அவ்வப்போது அவள் செய்யும் குட்டிக் குறும்புகளை ரசித்தார்கள்.

தினமும் “அடுத்த வாரம் சைக்கிள் வந்துரும் இல்ல அடுத்த வாரம் சைக்கிள் வந்துரும் இல்ல” என்று கேட்டுக் கொண்டே இருந்தாள் இளவரசி. தாத்தாவும் வந்துவிடும் வந்துவிடும் என்று கூறிக் கொண்டே இருந்தார்.

ஒரு வாரத்தில் அப்பா வண்டியை கீழே போட்டு கால்ல சைலன்ஸ்ல சூடு வச்சு எப்படியோ தக்கி முக்கி ஓட்டி பழகிக் கொண்டிருந்தார். அவர் சைக்கிள் எடுப்பதை நிறுத்திவிட்டார். ஒரு வாரத்திற்கு பிறகு தாத்தாவிடம் கேட்டாள் தாத்தா இன்னும் ஒரு வாரத்தில் வந்து விடும் என்று கூறினார். இளவரசிக்கு கோபம் வந்தது அழுது கொண்டே யாரிடமும் பேசாமல் இருந்தாள். “தாத்தா பொய் சொல்றீங்க. நீங்க உண்மைய சொல்லுங்க. சைக்கிள் வருமா வராதா? நீங்க சைக்கிள் வாங்க வச்சிருந்த காசுல தானே அப்பாவுக்கு வண்டி வாங்கிக் குடுத்துட்டீங்க?” 

“அப்படியெல்லாம் இல்ல சாமி. உனக்கு சைக்கிள் கண்டிப்பா வரும். தாத்தா பொய் சொல்வேனா? என்ன நம்ப மாட்டியா?”

“நம்புறேன் ஆனா இந்த வாரம் வாங்கி தரேன்னு சொன்னீங்க வரலையே.”

“அடுத்த வாரம் கண்டிப்பா வரும் சரியா” என்றார்.

அந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல நீச்சல் அடிக்க அண்ணாவின் நண்பர்களோடு கிளம்பினாள் வெங்கட் அன்று வரவில்லை. கேசவனிடம் விசில் அடிக்க கற்றுக் கொடுக்கும்படி திரும்பவும் கேட்டாள்.

கிணற்றுக்குள் இறங்கி நீச்சல் அடித்து கொண்டிருக்கும் பொழுது,

”பெருவிரலையும் ஆள்காட்டி விரலையும் சேர்த்து வை அப்படியே கொண்டு வந்து என் வாய்க்குள்ள வை” என்றான் கேசவன்.

“தூ கருமாந்திரம் அவன் பீடியல்லாம் குடிக்கிறான். அவன் வாய்க்குள்ள விரலை வைக்காத சிட்டு. அம்மா கிட்ட சொல்லிடுவேன்” என்று அதட்டினான் ராசுகுட்டி.

ஆனால் இளவரசி ராசுக்குட்டி சொன்னதை கேட்கவில்லை. கேசவனின் வாய்க்குள் தன்னுடைய விரலை வைத்தவுடன் அண்ணா விசில் அடித்தான். அப்போது அவளுக்கு சூட்சமம் புரிந்தது. கையை கழுவி விட்டு தானும் அதுபோல் வைத்து அடித்தாள் சத்தம் வந்தது. மிக சுலபமாக கற்றுக் கொண்டாள்.

“ஐ நா விசில் அடிக்கிறே. ஐ நா விசில் அடிக்கிறே” என்று கத்திக் கூப்பாடு போட்டாள். ஆனால் அதை கவனித்துக் கொண்டிருந்த ராசுக்குட்டிக்கு கோவம் வந்தது. பொம்பள பிள்ளைக்கு விசில் அடிக்க கத்து கொடுத்திருக்கே. ஏண்டா நீயே ரவுடி மாதிரி விசில் அடிக்கிறே. ஏன்டா சிட்டுக்குருவிக்கு போய் கத்துக் கொடுத்திருக்கே. அவங்க அம்மாவுக்குத் தெரிஞ்சா அவ்வளவுதான் உண்டு இல்லைன்னு பண்ணிடுவாங்க என்னமோ பண்ணுங்க” என்றான் ராசுக்குட்டி.

“அண்ணே போ உனக்கு ஒண்ணுமே தெரியாது. நீயும் கத்துக்க மாட்ட என்னையும் கத்துக்க வேண்டாம் சொல்லுவே. யாருக்காவது விசில் அடிக்க தெரியுமா? கோவில்ல போய் நீங்க ஆடுவீங்கள்ல அப்ப யாரு விசில் அடிப்பா. உனக்கு அடிக்க தெரியல யாருக்குமே அடிக்க தெரியல. நானாவது விசில் அடிக்கிறேனே. நீங்கள் எல்லாம் ஆடுங்க நான் விசில் அடிக்கிற சரியா”

”எப்படியோ உங்க அம்மாகிட்ட திட்டு வாங்கி வைக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டே. ஆனா ஒன்னு கேசவன் தான் விசில் அடிக்க கத்துக்கொடுத்தான்னு எ சொல்லிடாத சரியா”

கிணற்றில் இருந்து மேலே ஏறும் நேரத்தில் வெங்கட் கிணற்றை நோக்கி வந்து கொண்டிருந்தான். சிட்டுக்குருவி இன்னைக்கு மாட்னியா மவளே என்று ஓடி வந்து…

தொடரும்..

சரிதா ஜோ

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சரிதா ஜோ தமிழிலும் உளவியலிலும் முதுகலை பட்டமும் கல்வியியலில் நிறைஞர் பட்டமும் பெற்றவர். கதை சொல்லியாக தமிழ் இலக்கியத்திற்குள் பயணத்தை தொடங்கிய இவர் ஏராளமான சிறார் புத்தகங்கள் எழுதியுள்ளார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *