ஆபீஸ் முடிந்து வீட்டுக்குப் போகும்போது, சந்துருவின் ஞாபகம் வந்தது. போகும் வழியில் அவன் வீட்டை எட்டிப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று தோன்றியது. வண்டியை அவன் வீட்டுப் பக்கம் திருப்பினேன்.
வீட்டு சுற்றுச்சுவருக்குள் இருந்த குறைவான இடத்தில் நிறைய செடிகள் வைத்திருந்தான். இதெல்லாம் அவன் வைத்ததுதான். வண்டியை நிறுத்தும்போதே உள்ளே இருந்து வந்து என்னை எதிர் கொண்டான். “வாங்க சார். என்ன திடீர்னு இந்தப் பக்கம்.?”
சும்மாதான் என்று விட்டு வரவேற்பரை சோபாவில் உட்கார்ந்தேன். அவனும் புன்னகையோடு எதிரில் உட்கார்ந்தான். முதத்தில் நேற்றின் தடங்கள் இல்லை. “நேத்து என்னவோ போல இருந்தியே அதான் இப்போ வீட்டுக்கு வரும்போது ஞாபகம் வந்தது பாத்துட்டுப் போகலாம்னு வந்தேன்” என்றேன். அவன் கூச்சமாய் சிரித்தான். “அதுக்கா வந்தீங்க? என்ன சார் நீங்க” என்றான்.
அவன் அம்மா காபி எடுத்துக் கொண்டு வந்து, எப்படி இருக்கீங்க என்று விசாரித்தார்.
திடீரென்று வெளியே என்னவோ வெடித்துச் சிதறுவதைப் போன்ற பயங்கர சத்தம் கேட்டது. வெடியின் அதிர்வில் தரை நடுங்கியது. அந்த நடுக்கம் கால்களின் வழியாக சரேலென எனக்குள் பாய்ந்தது. நான் அனிச்சையாக கால்களைத் தரையில் இருந்து தூக்கியிருந்தேன். அதிர்ச்சியோடு அவர்கள் இருவரையும் பார்த்தேன். சந்துருவின் அம்மா கண்கள் செருகி மயங்கி விழுந்து கொண்டிருந்தார். சந்துரு அவரைத் தாங்கிப் பிடிக்கத் தாவிக் கொண்டிருந்தான். நான் வெளியே வந்து பார்த்தேன். சாலையில் நுற்றுக்கணக்கான வாகனங்கள் போய்க் கொண்டிருந்தாலும் சூழல் மிக அமைதியாக இருப்பதாகவே தோன்றியது. அந்த சத்தம் எங்கிருந்து வந்திருக்கும். நான் திரும்பி உள்ளே வந்து, “சரி நீங்க ரிலாக்ஸ ஆகுங்க நான் போயிட்டு இன்னொரு டைம் வர்றேன்” என்றுவிட்டுக் கிளம்பினேன். அந்த அதிர்வுகள் இன்னும் என் கால்களில் ஒட்டிக் கொண்டிருந்தன.
இந்தியாவுக்கும் அண்டை நாட்டுக்கும் போர் மூழ்வதற்கான சூழல் இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. ஒருவேளை போர் மூண்டுவிட்டதா? ஆனால், இப்படி ஒரு சத்தத்தை கேட்டதாக யாரிடமும் எந்த அறிகுறியும் இல்லையே?
நான் வீட்டுக்கு வந்தபோது, தம்பி டிவி பார்த்துக் கொண்டிருந்தான். “போர் பத்தி எதாவது சொன்னாங்களா?” என்றேன். அவன் கேள்விக் குறியோடு என்னைப் பார்த்தான்.
எனக்கு அப்போது என்ன செய்வது என்றே தெரியவில்லை. இந்த சூழலில் இருந்து தப்பித்தால் போதும் என்று போய் படுத்துவிட்டேன். போர் பற்றிய நினைவுகளில் எனக்கு நீண்ட நேரம் தூக்கம் வரவில்லை என்பது தெரியும். ஆனால் எப்போது தூங்கினேன் என்று நினைவில் இல்லை. காலையில் எழுந்தபோது மிகவும் சோர்வாக இருந்தது. அந்த வெடிச் சத்தம் மீண்டும் என் நினைவில் இருந்து மனதில் ஒலித்தது. என் உடல் மெல்ல நடுக்கம் கொண்டது. நான் தம்பியிடம் “போர் பத்தி ஏதாவது செய்தி சொன்னாங்களா?” என்றேன்.
அவன், “இஸ்ரேல் ஈரான் மேல குண்டு போட்டுகிட்டுதான் இருக்கு” என்றான். எனக்கு ஒன்றும் புரியவில்லை. கொஞ்சநேரம் படுத்தேன். அப்படியே மீண்டும் தூங்கிவிட்டேன். கண் விழித்தபோது, அந்த சத்தம் தான் முதலில் ஞாபகம் வந்தது. அதை நினைக்கும் போதே காது வலித்தது. இப்போது அது ஒரு கனவைப் போல இருந்ததைக் கண்டு எனக்கு வியப்பாய் இருந்தது. அது எப்படி கனவாகும்? நான் சந்துருவுக்குப் போன் செய்ய போனை எடுத்து நம்பரைத் தேடினேன். என்னிட்ம்அந்தப் பெயரில் நம்பர் எதுவும் இல்லை. தம்பியிடம் “சந்துருவின் நம்பர் உன்கிட்ட இருக்கா?” என்றேன். அவன் “எந்த சந்துரு?” என்று திருப்பிக் கேட்டான். நான் ஏதோ சொல்ல வாயெடுத்தேன். ஆனால் எனக்குள் சந்துரு சம்பந்தப்பட்ட நினைவுகள் என்று எதுவும் இல்லை. எனக்கே வியப்பாய் இருந்தது. ஆமாம் யார் இந்த சந்துரு? அவன் முகத்தை அவன் அம்மா முகத்தை நினைவு படுத்திப் பார்த்தேன். ஆனால் அப்படி யாரையும் நான் இதுவரை சந்தித்ததைப் போல எந்த நினைவும் இல்லை.
அதெல்லாம் கனாவா? எனக்கு தூக்கி வாரிப் போட்டது. அவ்வளவு துல்லியமாய் நடந்த ஒரு சம்பவம் எப்படி கனவாகும்? எனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா? சரி இன்னொரு முறை இப்படி நடக்கும் போது கவனமாகப் பார்க்கலாம்.
அப்படி இன்னொரு முறை எப்போதுமே இப்படி நடக்காமல் போய்விட்டால் இது என்ன?
இது என்ன? கனவு தான் அப்படித்தான் வைத்துக் கொள்ள வேண்டும் வேறு வழி?
ஆனால் அது கனவில்லையே? அந்த சத்தம் .. மீண்டும் காது வலிப்பது போல இருந்தது.
எனக்கு என்னவோ நடந்துவிட்டது. எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சுதாகரித்துக் கொண்டேன்.
இரவு பேக்கரியில் மோகனோடு பேசிக் கொண்டிருந்தபோது, “யுவராஜ் இப்ப திருந்திட்டான்” என்றேன். அவன் “எந்த யுவராஜ்?” என்றான். நான் அவனைக் கேள்விக் குறியோடு பார்த்துக் கொண்டே “நம்ம யுவராஜ்தான்” என்றேன். அவன் என்னைக் கூர்மையாகப் பார்த்துக் கொண்டு “நீ என்ன சொல்ற?” என்றான்.
நான் சுதாகரித்துக் கொண்டேன். “ஏன் என்ன ஆச்சு?” என்றேன்.
மோகன் என்னை இன்னும் கூர்மையாகப் பார்த்துக் கொண்டு, “நீ யுவராஜ எப்பப் பார்த்த?” என்றான்.
“நேத்து சாயங்காலம் ஆபீஸ் விட்டு வரும்போது, சந்தைப் பேட்டைப் பக்கம் அவன் வழக்கமா உக்காந்திருக்கிற திட்டு மேல உக்காந்திருந்தான்.”
அவன் இன்னும் என்னைக் கூர்மையாகப் பார்த்தான். பின் பார்வையை விலக்கிக் கொண்டு, தம்ளரில் இருந்த டீயை நான்கு மடக்கில் குடித்து முடித்துவிட்டு வைத்தான். “சரி நான் கிளம்பறேன்” என்றான்.
நான் சரி என்றேன்.
அவன் ஏன் என்னை அப்படி விசித்திரமாய்ப் பார்த்தான் என்று எனக்கு இன்னமும் புரியவில்லை. குழப்பத்தோடே வீட்டுக்குப் போனேன். யுவராஜ்க்குப் போன் செய்தேன். அவன் அண்ணன் குணா எடுத்தான். நான் டேய் யுவராஜ் என்றேன். குணா அழத் தொடங்கினான். நான் போனை வைத்துவிட்டேன்.
அப்படியானால் அப்படியானால் யுவராஜ் இறந்துவிடடானா என்ன? அவன் எப்போது இறந்தான். சமீபத்திலா வெகு நாட்களுக்கு முன்பேவா? நான் அவனை நேற்று பார்த்தேனே? மணியும் கூட இருந்தானே?
நான் மணிக்குப் போன் செய்தேன். “மணி நேத்து சாயந்திரம் அஞ்சு மணிக்கு நான் உன்னை பேக்கரியில பார்த்தனே அப்ப நம்ம கூட யார் இருந்தா?” என்றேன். “என்ன கேக்கற நீ? எனக்குப் புரியல” என்றான்.
“டேய் நாம அங்க யுவராஜ பாத்தமா இல்லையா?”
“யுவராஜா? டேய் உனக்கு என்ன ஆச்சி?” என்றான். நான் டக்கென்று போனை கட் செய்தேன்.
அன்று இரவு பூராவும் மூளையைப் போட்டு கசக்கிக் கொண்டிருந்தேன். யுவராஜ் எப்போது செத்துப் போனான்.
காலையில் யாரோ ஒருவர் போன் செய்தார். பேர் நவநீதம் என்று இருந்தது?
யார் இந்த நவநீதம் என்று யோசித்தபடியே, போனை எடுத்து ஹலோ என்றேன். எதிர்முனையிலிருந்து, “தம்பி நான் என் பையனப் பார்க்க ஆஸ்திரேலியா போறேன். திரும்பி வர ஒன்னு ரெண்டு மாசம் ஆகும். அதுவரைக்கும் நீ வேற எங்கயாவது வேலை பார்த்துக்க” என்றுவிடடு வைத்துவிடடார்.
யார் இந்த நவநீதம்? அது இருக்கட்டும் நான் எங்கே வேலைக்குப் போகிறேன்? நான் வேலைக்குப் போகிறேனா என்ன? நான் அரசுத் தேர்வுக்கு அல்லவா? பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன்?
அப்பாவைக் கூப்பிட்டேன் “இன்னைக்கி கோச்சிங் கிளாஸ் இருக்குதானே? சார் எதுவும் போன் பண்ணாறா?” என்றேன்.
அப்பா “சார் எதுவும போன் பண்ணலயே?” என்றார். நான் நேற்றைய பாடங்களை எல்லாம் மீண்டும் நெட்டுரு போட ஆரம்பித்தேன். சாயந்திரம் கோச்சிங் கிளாஸ் போனபோது, மணி “யுவராஜ் தண்ணி போடறான்டா” என்றான். எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது. “டேய் அவன்லாம் அப்படி பண்ண மாட்டான்டா” என்றேன். மணி என் தலையில் அடித்து டேய் சத்தியமாடா என்றான்.
காலையில் எழுந்தபோது மிகவும் சுறுசுறுப்பாய் உணர்ந்தேன். சின்ன வயதில் பள்ளிக் கூடம் படிக்கும்போது இருப்பது போல உற்சாகமாய் இருந்தது. உண்மையில் நேற்று நான் பள்ளிக் கூடம் விட்டு வந்து தூங்கி, இன்று இந்த வயதில் கண் விழித்ததைப் போல இருந்தது. எங்கே போனது நடுவில் இருந்த நாட்கள்? என் அன்பான துயரங்கள். நான் அவற்றை விட்டுவிட்டேனா? அல்லது அவை என்னை விட்டுவிட்டனவா? இது எப்படி நடந்தது என்றே என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
என்னுடைய பள்ளிக் கூடம் ஒரு ஓலைக் கொட்டகையில் நடந்தது. மார்ட்டின் என்ற வெள்ளைக்காரர் எனக்கு பாடம் நடத்துகிறார். அவர் தெளிவாகப் பேசும் தமிழைக் கண்டு எங்களுக்கு ஆச்சரியமாய் இருக்கிறது. என்னுடைய வயதுக்கும் பள்ளி நினைவுகளுக்கும் சம்பந்தமே இல்லாதது போல இருந்தது மேலும் என்னைக் குழப்பத்தில் ஆழ்த்தியது.
நான் அடுத்தடுத்த நாட்களில் பயணிக்காமல் ஒரு ஒழுங்கற்ற முறையில் பயணிப்பதைப் போல இருந்தது. எழுந்து போய் கண்ணாடியைப் பார்த்தேன். ஒரு நாற்பத்தைந்து வயது மதிக்கத் தக்க அளவில் கண்ணாடியில் தெரியும் தோற்றத்திற்கு உரிய நபர் நானாகத்தான் இருக்க வேண்டும். பரவாயில்லை ஒன்றும் மோசமில்லை. இந்த நடுத்தர வயதில் என்னுடைய தோற்றம் நன்றாகவே இருக்கிறது. நேற்று என்ன நடந்தது என நினைத்துப் பார்த்தேன். நேற்று காலையில் எழுந்தது, சாப்பிட்டது, பேசியது, பள்ளிக்குப் போனது, வகுப்பறையில் நடந்தது எல்லாம் வரிசையாக நினைவுக்கு வர ஆரம்பித்தன. என்னுடைய நேற்றில் ஏன் எல்லாம் பள்ளி நினைவுகளாக இருக்கிறது.
திடீரென எனக்கு ஒரு யோசனை வந்தது. இதையெல்லாம் நான் ஒரு நோட்டில் எழுதி வைத்தால் என்ன? பரபரப்பாய் ஒரு நோட்டைத் தேடி எடுத்து என்னுடைய நினைவுகளை எழுத ஆரம்பித்தேன். சட்டென எனக்கொரு சந்தேகம் வந்தது. இன்று பள்ளிக் கூடம் போக வேண்டுமா? வேண்டாமா? ரேவதியிடம் கேட்கலாம் என அவளைக் கூப்பிட்டேன். ‘நான் இன்னைக்கி பள்ளிக் கூடம் போறதா வேண்டாமா?’ என அவளிடம் கேட்பது பற்றி கற்பனை ஓடியது. அதில் அவள் என்னைப் பார்த்த பார்வையைக் கண்டு பயந்துவிட்டேன். “என்னங்க கூப்டிங்களா?” என்று வந்த ரேவதியிடம், “லேட்டாவுது பசங்க பள்ளிக் கூடம் போக ரெடி ஆயிட்டாங்களா இல்லையா?” என்றேன். அவள் ஆச்சரியமாய் என்னை மேலும் கீழும் பார்த்தாள்.
மீண்டும் தூங்கிவிடுவது நல்லது என்று தோன்றியது. உடம்பு ஒரு மாதிரி இருக்கு என்று பாசாங்கு செய்து கொண்டு படுத்து தூங்க ஆரம்பித்தேன்.
பெரிலின் நகரில் இருந்து வெகு தொலைவில் இருந்தது எங்கள் வசிப்பிடம். நான் என் மகனுடன் ஜெர்மனுக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியிருந்தாலும் இன்னும் என்னால் சரளமாக ஜெர்மன் மொழி பேச முடியவில்லை. என் மருமகள் ஜெர்மன் காரி என்பதால், பேரன் முழு வெள்ளைக்காரன் சாயலில் இருந்தான். அவனுக்கு குழந்தையிலிருந்தே தமிழ் சொல்லிக் கொடுத்திருப்பதால் அவன் மழலை மொழியில் அழகாக தமிழ் பேசுகிறான். அவனோடு இருக்கும்போது பொழுது போவதே தெரிவதில்லை.
இரண்டாம் உலகப் போர் சமயத்தில் என் மகன் லண்டனுக்கு அனுபபப்பட்டபோது, அவனுடன் நானும் வந்துவிட்டேன். அங்கிருந்து நாங்கள் ஜெர்மன் வரும்போது, உலகப் போர் முடிந்திருந்தது. பெர்லின் நகரம் சூரையாடப்பட்டிருந்தது. போர் முடிவடைந்துவிட்டது என தெரிந்தாலும் மீண்டும் போர் மூண்டுவிடுமோ என்ற அச்சத்தில் எங்களுக்கு பைத்தியம் பிடித்துவிடும் போல இருந்தது. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டதாகவும், நாம் மீண்டும் இந்தியாவுக்கே போய்விடலாம் என்றும் என் மகன் வந்து சொன்னான். எனக்கு மகிழ்ச்சியாய் இருந்தது. அன்றிரவு நான் ஆனந்தமாய் தூங்கப் போய்விட்டேன்.
என்னதான் படித்திருந்தாலும் தேர்வுநாளன்று பதட்டமாய் இருந்தது. பரீட்சை எளிதாகவே இருந்தது. கேள்விகளைப் பற்றி நண்பர்கள் நாங்கள் விவாதிக்கும்போது, “கிழக்கு ஜெர்மனியும் மேற்கு ஜெர்மனியும் இணைந்த ஆண்டு எது? என்ற கேள்விக்கு என்ன எழுதி இருந்தாய்?” என மணி கேட்டான். “நான் ஜெர்மன் பிரிந்துவிட்டதா?” என்றேன்.
அவன் “உனக்கு பிரிந்ததே தெரியாதா? 1949ல் இரண்டாகப் பிரிந்து மீண்டும் 1990ல் இணைந்துவிட்டது” என்றான். நான் அப்படியா என்றேன். என்னுடைய புத்தகங்கள் எதிலும் அப்படிப் படித்ததாய் எனக்கு நினைவில் இல்லை.
அந்தத் தேர்வில் நான் பாசாகியிருந்தேன். பெரிய பெரிய கனவுகளோடும், வாழ்க்கையில் என்றுமில்லாத மகிழ்ச்சியோடும் அன்றிரவு நான் தூங்கச் சென்றேன்.
ஜெர்மனியிலிருந்து இந்தியா வந்த கப்பல், நடுக்கடலில் கவிழ்ந்துவிட்டதாகவும், அதில் பயணம் செய்த அனைவருமே இறந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுவதாகவும் செய்தித்தாளில் கண்ட செய்தி என்னை ஏனோ கலக்கமடையச் செய்தது. கப்பலில் நானே போவது போலவும், கடலில் விழுந்து முழுகுவது போலவும், கரைகாணாத பேரிருளில் மீள முடியாமல் மூழ்கிப் போனதைப் போலவும் எனக்குள் கற்பனைகள் என்னை மீறி உருவாகிக் கொண்டே இருந்தன.
000
குமாரநந்தன்
இரண்டாயிரத்திற்குப் பிற்கு எழுத வந்த புதிய தலைமுறை சிறுகதையாளர்களில்
கவனிக்கப்பட, அதிகம் பேசப்பட வேண்டியவர்களில் எழுத்தாளர் குமாரநந்தனும் ஒருவர்.
இதுவரை பதிமூன்று மீன்கள், பூமியெங்கும் பூரணியின் நிழல், நகரப் பாடகன், மகா
மாயா ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் பகற்கனவுகளின் நடனம் என்னும் கவிதைத்
தொகுப்பும் வெளிவந்துள்ளன. இவரின் கதைகள் ஆரவாரமற்றவை. ஆனால் ஆழம்
நிரம்பியவை.