கமலா முரளி

பொழுது புலரும் போதே எழுந்து விட்டார்கள் தீபனும் செல்வியும். அதாவது எழுப்பி விடப்பட்டார்கள்.

இருவரும் பல் துலக்கி, முகம் கழுவினார்கள். அம்மா தந்த பனங்கல்கண்டு கலந்த மூலிகைத் தண்ணிரைக் குடித்தார்கள்.

“ம்ம்… விரசலா வாங்க” என்று குரல் கொடுத்தார் வேணியம்மா, அவர்களின் பாட்டி.

அடுத்த ஒரு மணி நேரம் அவர்களுக்குத் தோட்டத்தில் வேலை.

“தீபு நீ அந்தப் பக்கம் போ. செல்வி நீ இந்த சைடு”

அழகான கனகாம்பரப் பூக்கள் பூத்துக் குலுங்கிக் கொண்டு இருந்தன.

“தோட்டமே எவ்ளோ அழகா இருக்கு. பூவ பறிக்கவே மனசு இல்ல” என்றாள் செல்வி.

“உக்கும், நூத்துக் கிழவி மாதிரி பேசிக்கிட்டு நிக்காத. சீக்கிரம் போகலன்னா பள்ளிக்கூடத்தில மணி வாத்தியார் க்ரவுண்டல ஓடச் சொல்வாரு” என்றான் தீபன்.

இருவரும் கிராமத்துப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் படிக்கிறார்கள்.

“வாசம் தூக்குது” என்றாள் செல்வி.

“வேற யாருட்டையும் சொல்லிடாத… சிரிச்சுருவாங்க… கனகாம்பரப்பூ வாசம் தூக்குதாம்” என்று கேலி செய்தான் தீபன்.

“டேய், கனகாம்பரத்துக்கும் வாசம் இருக்குடா, உனக்கென்ன தெரியும்… அது கலரு தான் என்ன சூப்பரு”

“ஏய் செல்வி, போ அந்தப் பாத்திக்கு! ரெண்டு பேரும் சேந்து நின்னா பூவப் பறிக்க மாட்டீங்க” சத்தம் போட்டாள் பாட்டி.

பிள்ளைகள் இருவரும் தங்களுக்கு ஒதுக்கிய பகுதிக்கு ஓடினார்கள்.

“பாத்து பக்குவமா, பூ பிஞ்சிடாம செடிய ஒடைக்காம பறிச்சு போடுங்க” கத்தினார் பாட்டி.

கூடை கூடையாகப் பறித்தார்கள். லேசாகத் தண்ணீர் தெளித்து உர சாக்குக் கோணிகளில் கட்டினாள் பாட்டி.

செல்விக்கு தான் தலை நிறைய கனகாம்பரப் பூ வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசை.

பாட்டி ஒரு பூ எடுத்துக் கொண்டால் கூடக் கத்துவாள்.

“பாட்டி எனக்குக் கொஞ்சுண்டு பூ தாயேன்”

“போடி, நானே கருக்கல்ல போனா, நல்ல கிராக்கி இருக்கும்ன்னு அல்லாடிகிட்டு ஓடறேன்…போ போ”

“ஒரு நாலு பூ குடேன். ஸ்லைடுல குத்தி வச்சுகிறேன்”

“ஆமா, அப்புறம் உங்கம்மாவுக்கு ஒரு ஜாண், உங்கத்தைக்கி ஒரு ஜாண், சித்தப்பன் பொண்டாட்டி, பொண்ணு அப்டின்னு நா தோட்டத்திலேயே ஜாண் ஜாணா குடுத்துட்டு நடையக் கட்ட வேண்டியது தான். அப்புறம் யாரு உங்க தாத்தனுக்கு கஞ்சி ஊத்தறது?”

வேணிப் பாட்டி கையில் இருந்த பிரம்பு சற்றே ஓங்கியது.

செல்வியும் தீபனும் வரப்பு வழியே ஓடி வீட்டுக்கு வந்தார்கள்.

வீட்டு வாசலில் இட்லி சட்டி ஒரு அடுப்பிலும், குழிப்பணியார சட்டி இன்னொரு அடுப்பிலும்! விறகு எரியும் வாசனை, புகையின் வீச்சத்தையும் தாண்டி கம கமவென மணத்தது. சட்னிக்கான தாளிப்பை அப்போது தான் முடித்திருந்தாள் அம்மா வள்ளி.

“அம்மா, எனக்கு ரெண்டு குழிப்பணியாரம் தரீயா?” எனக் கேட்டான் தீபன்.

“ஆஹா ! வாடா ராஜா! அந்த விறகுக் கட்டய எடு! ரெண்டு என்ன நாலாவே தரேன் முதுகிலயே!”

“அம்மா, ஆயா எனக்கு பூ குடுக்க மாட்டேன்ன்னு சொல்லிடுச்சி”

“போம்மா, போம்மா, பூவெல்லாம் பொங்கல் அன்னிக்கி வச்சுக்கலாம். போய், பள்ளிக்கூடத்துக்குக் கிளம்புங்க. கை கால் கழுவுங்க.”

“அம்மா இட்லியும் தக்காளி சட்னியும் தரீயா?”

“இதோ வாடிக்கை காரங்க வந்துருவாங்க…. அதுக்குத்தான் சரியா இருக்கும். உள்ள பழையது கரைச்சு வச்சிருக்கேன். ஆளாக்கு ஒரு லோட்டா குடிச்சிட்டுக் கிளம்புங்க”

யார் முதலில் பள்ளிக்குச் செல்வது என்ற போட்டியில் ஓட ஆரம்பித்த கால்கள் பள்ளியை அடைந்த பின் தான் நின்றன.

பள்ளியைக் கூட்டிப் பெருக்கி, மணி அடிக்கும் சின்னய்யா, கையில் சாக்பீஸ் பெட்டியுடன் நடந்து கொண்டு இருந்தார்.

சிட்டாக அவரை நோக்கிப் பறந்தாள் செல்வி.

“அண்ணே, எனக்கொரு சாக்பீஸ் தாங்கண்ணே! கோலம் போடறதுக்கு”

“என் பேத்தி ரெங்கிக்கே நா வாத்தியாருங்க எழுதிட்டுப் போடற குட்டி சாக்கட்டிகள பொறுக்கிட்டு போறேன், போம்மா போ” விரட்டினார்  சின்னய்யா.

“ஓ அதனால தான் இப்பல்லாம் குட்டி சாக்கட்டியும் கிடைக்கிறதில்லயா” எனத் தனக்குள்ளே சொல்லிக் கொண்டாள் செல்வி.

பள்ளி முடிந்தது. தீபனுக்கு ஜோல்னா பை. அதனை தலையில் இருந்து தொங்க விட்டுக் கொண்டு வந்தான் அவன்.

சடக் சடக் என்ற சத்தம் அவர்கள் கவனத்தை ஈர்த்தது.

பள்ளிக்குப் பின்புறத் தெருவில் புளிய மரம் ஒன்று இருக்கிறது. அங்கே பழுத்த புளியம்பழங்களை அறுத்துத் தள்ளிக் கொண்டு இருந்தார்கள்.

தீபன் ஓடிச் சென்று புளியைப் பொறுக்கினான்.

“தம்பி, யாரு நீ? படிக்கிற புள்ளயா? எங்க வந்த? இதெல்லாம் பொறுக்கக் கூடாது. நாங்க குத்தகைக்கு எடுத்து இருக்கோம். குடு அத” என்று சொல்லி அவன் கையில் இருந்ததைப் பிடுங்கிக் கொண்டார் அங்கே இருந்த ஒரு மீசைக்கார மாமா.

“அண்ணே எனக்கு கொஞ்சம் தாங்களேன்”

“இங்க பாரு, வேணுமின்னா ஒண்ணு செய்யி. இந்த கீழ விழுற புளியெல்லாம் எடுத்து அந்தக் கூடையில போடு, உனக்கு கொஞ்சம் தாரேன்” என்றார் மீசைக்கார மாமா.

தீபனும் செல்வியுமாக மட மடவென பாதி கூடை வரை பொறுக்கிப் போட்டனர்.

“பள்ளிக்கூட பசங்கள பொறுக்கச் சொல்லுற. எதனா கிளை விழுந்தா பொல்லாப்பு ஆயிடும். ஏய், பசங்களா, போங்க போங்க….” என்று விரட்டினார் ஒரு அம்மா.

“மாமா, கொஞ்சம் புளி தரீங்களா?’, தீபன்.

“பாதி கூடை பொறுக்கி போட்டு இருக்கோமே”, செல்வி.

மீசைக்கார மாமா, “இந்தாங்க… அவ்வளவு தான்” என்று சொல்லி ஆளுக்கு மூணே மூணு புளியம்பழங்களைக் கையில் தந்தார். “ஓடிடுங்க… சத்தம் போடாம… அந்தம்மா பாத்தா இதையும் புடுங்கிக்கும்”.

தீபனும் செல்வியும் கிடைத்தவரை லாபம் என நினைத்து அங்கிருந்து வேகமாக ஓடினர்.

தெரு முனையில் அவர்கள் வகுப்பு மகேஷ் அவர்களைப் பார்த்தான்.

“கையில என்ன வச்சு இருக்கீங்க? புளியா?” தீபனும் செல்வியும் பெருமிதத்துடன் புன்னகைத்தனர். “ஆமாடா”

“ஏய், எனக்குக் கொஞ்சம் தருவியா?” எனக் கையை நீட்டினான் மகேஷ்.

செல்வி தன் கையில் இருந்து ஒன்றை எடுத்து மகேஷுக்குக் கொடுத்தாள்.

“செல்வி, உன் கையில இருக்கிறதப் பையில போடு. அம்மாவுக்கு ஒண்ணு, அப்பாவுக்கு ஒண்ணு, பாட்டிக்கி, அப்புறம் நமக்கு. சரியா” என்றான்.

இருவரும் வேறு எங்கும் நிற்காமல் வீட்டுக்கு ஓடினார்கள்.

00

கமலா முரளி

கமலா முரளி எனும் பெயரில் தமிழில் கதை, கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புப் படைப்புகளை எழுதி வரும்,இவரது இயற்பெயர்  திருமதி.கே.வி.கமலசுந்தரம் ஆகும்.

ஆங்கில இலக்கியம் மற்றும் கல்வியியலில் முதுகலைப்பட்டம் பெற்ற கமலா முரளி,சென்னை, பெரம்பூர்,விவேகானந்தா பள்ளியில் சில வருடங்கள் பணியாற்றிய பின், கேந்திரிய வித்யாலயா சங்கதனில் ஆங்கில ஆசிரியையாகப் பணியேற்றார். கேந்திரிய வித்யாலயாவின் தேசிய அளவிலான “சீர்மிகு ஆசிரியர்” விருதினை 2009 ஆண்டு பெற்றார்.

கமலா முரளியின்,கதை கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழியாக்கப் படைப்புகள் தினசரி.டாட் காம், மஞ்சரி, கலைமகள்,குவிகம் மின்னிதழ், கேலக்ஸி தளம், நமது உரத்த சிந்தனை, மலர்வனம், பூஞ்சிட்டு சிறார் மின்னிதழ், சிறுவர் வனம் ,ஆனந்தசந்திரிகை, மங்கையர்மலர், கோகுலம் , இந்து தமிழ்திசையின் மாயாபஜார் , வாசகசாலை, தினமலர் பட்டம் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.

இவரது “மங்கை எனும் மந்திர தீபம்”  (“எ லேடி வித் த மேஜிக் லேம்ப்”)எனும் மொழிபெயர்ப்பு நூல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இவர் எழுதிய, “இந்துமதி கல்யாணம் எப்போ?” என்ற சிறுகதைத் தொகுப்பு மணிமேகலைப் பிரசுர வெளியிடாக மலர்ந்துள்ளது.

மற்றும் இவரது சிறார் கதை நூல், “கிளியக்காவின் பாட்டு” லாலிபாப் சிறுவர் உலகம் வெளியீடாக வந்துள்ளது.

கனவு இலக்கிய அமைப்பு, திருப்பூர் முத்தமிழ் சங்கம் மற்றும் திருப்பூர் மக்கள் மாமன்றம் இணைந்து வழங்கிய ’திருப்பூர் சக்தி விருது’ இந்த ஆண்டு (2024) பெற்றுள்ளார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *