மலையாளத்தில் நளினி ஜமீலா அவர்கள் எழுதிய சுயசரிதையை, பேராசிரியை ப.விமலா அவர்கள் ‘எனது ஆண்கள்’ எனத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
பாலியல் தொழிலாளியான நளினி ஜமீலா, ஒரு பேட்டியில் இருபத்தைந்து வருட பாலியல் தொழிலில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்களுடன் உறவு வைத்துக் கொண்டதாகச் சொல்லும் போது இத்தனை ஆண்களில் இந்த எட்டுப் பேரைப் பற்றி மட்டும் உங்களுடைய புத்தகத்தில் எழுதக் காரணம் என்ன எனக் கேட்டபோது, எனக்கு கூடுதல் பிரியம் கொண்ட ஆண்கள் பலர் உண்டு, அவர்களில் இவர்கள் முக்கியமானவர்கள் என்பதாய் சொல்வார். இந்த நூலை வாசித்தால் இவர்களை ஏன் இந்தப் புத்தகத்தில் எழுதினார் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
இச்சுயசரிதை நம்மையும் அவர் வாழ்க்கைக்குள் அவருடனே இணைத்துப் பயணிக்க வைக்கிறது; அருகில் அமர்ந்து கதை சொல்லும் கதை சொல்லியாகி, அவர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் நம்மையும் அழைத்துச் செல்கிறது; பகற்பொழுதுகளில், இரவுகளில், நடுநிசிகளில் அவருடன் சேர்ந்து பயணிக்கும் ஒரு உணர்வைத் தருகிறது என்று தனது முன்னுரையில் விமலா எழுதியிருக்கிறார்.
தனது பதினேழு வயதில் மண்மடையில் வேலைக்குப் போனபோது ஜோணியுடன் ஏற்பட்ட பழக்கம், அவன் கொடுத்த முதல் முத்தம், மாலை வேலை முடிந்து செல்லும் போது அவனுடன் நெருக்கம், அதன் பின் அவன் நினைவில் தவிப்பு என உடல் உறவைப் பற்றி யோசிக்காததொரு காதலாய், ஆம் பகலில் மட்டுமே மலர்ந்து மறையும் காதலாய் இருந்ததை ரவுடிக் கட்டும் வரப்பு முத்தமும்’ என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார். ‘தட்டான் தொட்டால்…’ என்னும் கட்டுரையில் ஆசிரியை வேலை பார்த்தாலும் தனது தேவைகளுக்காக ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் ஒருவரை அழைத்துக் கொண்டு பாலக்காட்டு இத்திருவம்மா – இத்திரு என்பது நாயர் சமூகப் பெண்களை மரியாதையாக அழைக்கும் சொல் – வீட்டுக்கு வரும் ஆசிரியையுடனும், அவருடன் வந்த மனிதருடனும் தனக்கு எப்படிப் பழக்கமானது என்பதைச் சொல்லியிருக்கிறார்.
இதேபோல் ‘சிற்றிலஞ்சேரி கதை’யில் தான் வீதியில் நின்று தொழிலுக்கு ஆட்களை அழைக்கும் நிலை வந்தபோது தனக்கு அடைக்கலம் கொடுத்த லைலாவைப் பற்றியும், ஒரு கட்டத்தில் தனக்கும் லைலாவுக்கும் பிரச்சினை வரக்காரணமாய் இருந்த காட்டிலாகா அதிகாரி, தனக்கு ஆட்களை ஏற்பாடு செய்து கொடுத்த பாலன், கடைக்கார ராஜண்ணா, நாராயணன், கரீம் எனப் பலரைப் பற்றியும் பேசி, காவல் நிலையம் சென்றது வரைச் சொல்லியிருக்கிறார். ‘மசாலா தோசையும் கூறைப் பேனும்’ என்னும் தலைப்பில் தனக்கும் கண்ணாடி விற்கும் பாபுக்கும் இடையில் தியேட்டரில் ஆரம்பித்த பழக்கம் மூன்று மாதங்கள் வரை மூட்டைப் பூச்சி கடிக்கும் நாலாந்தர ஹோட்டல் அறைகளில் தொடர்ந்ததைப் பற்றிப் பேசியிருக்கிறார். தன் மீது பாபுக்கும், பாபு மீது தனக்கும் காதல் இருந்ததையும் அவனிடமிருந்து தான் ஏன் வெளியில் வந்தேன் என்பதையும் சொல்லியிருக்கிறார்.
‘இடைச் சந்துகளில் காதல்’ என்னும் தலைப்பில் தனக்கும் சுனிலுக்குமான கதையைச் சொல்லியிருக்கிறார். அவனுடன் வயல் வரப்புக்களில் இரவு நேரத்தில் பயணித்ததையும், எதிரே தீவட்டி பிடித்து யாராவது வந்தால் தென்னை மரங்களுக்குப் பின்னே ஒளிந்து கொண்டதையும், பெரும்பாலும் கருப்புப் பாவாடை கட்டிக் கொண்டு போவதன் காரணத்தையும் சொல்லியிருக்கிறார். இதில்தான் ரவுடி ‘சில்வண்டு’ அபு, தோட்டி தங்கப்பன், சுனிலுக்கு நெருக்கமான கருணன் போன்றோரைப் பற்றியும் இதில் பேசியிருக்கிறார். தங்கப்பனுடன் போக ஆரம்பித்த பின் சுனில் விலகிச் சென்றதையும் அவனுடன் இருந்த அந்த சில மாதங்கள் தனக்கு வாழ்வில் வசந்தத்தைக் கொடுத்த நாட்கள் என்பதையும் சொல்லியிருக்கிறார்.
‘சாராயமும் ஆணும் மங்களூரும்’ என்னும் தலைப்பில் மங்களூரில் கோயாக்காவை விட்டு விலகியபின் கேரளா வந்து சில நாட்கள் இருந்து விட்டு மீண்டும் மங்களூர் போய் அலீசாபாய் காம்பவுண்டில் தங்கியதையும், வேலாயுதத்துடனான நெருக்கத்தையும், மாத்தூஸூடனான பிரச்சினையையும், ஹமீது உடனான பழக்கத்தையும், அவன் தன்னைக் காதலிக்க ஆரம்பித்திருக்கிறான் என அறிந்து விலகி வந்ததையும் அதன் காரணமாக அவன் பைத்தியம் பிடித்தவனாக மாறிப் போய் மீண்டதையும் சொல்லியிருக்கிறார்.
‘விஜயா லாட்ஜில் மூன்று காதலர்கள்’ என்னும் தலைப்பில் தான் மங்களூரில் இருந்து திருச்சூருக்குப் போனபின் அசீஸூடன் சேர்ந்து விஜயா லாட்ஜில் தங்கியதையும், அசீஸ் ஆட்களைக் கொண்டு வருவதையும் சொல்லிச் செல்கிறார். அசீஸை விடுத்து ஹோட்டலில் வேலை பார்த்த சந்திரன், ஜோஸூடனான பழக்கமும் அவர்கள் மூலமாகவும் பெரிய ஆட்கள் வர ஆரம்பித்ததையும், பெரிய மனிதரான வேணு கோபாலன் நாயருடன் தான் நெருக்கமானதையும், அங்கு ஏற்பட்ட பிரச்சினையில் இவர்கள் மூவரும் தனக்கு உதவியதையும் போலீஸ் பிடியில் சிக்கித் தப்பி வந்ததையும் சொல்லியிருக்கிறார்.
‘பாரிஜாதம் பூத்துக் குலுங்கிய…’ என்னும் தலைப்பில் மெடிக்கல் ரெப் ஒருவனுடன் ஏற்பட்ட பழக்கத்தைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். அவனுடன் பெரும்பாலும் பேருந்துப் பயணத்தில்தான் இருந்திருக்கிறார். புத்தகம் எழுதப் போறேன் என்று சொன்னபோது என் பெயரைத் தவிர்த்து மற்றவற்றை எழுதிக் கொள் என அந்த மெடிக்கல் ரெப் சொன்னதாகவும் எழுதியிருக்கிறார்.
புத்தகத்தின் இறுதிப் பக்கங்களில் சில கேள்வி பதில்களையும் பகிர்ந்து இருக்கிறார். இறுதிக் கட்டுரையை ‘உண்மையான காதலன்’ என்னும் தலைப்பில் எழுதியிருக்கிறார். அதில் கணவனின் இறப்புக்குப் பின் ஒருத்தனுடன் சென்றால் ஐம்பது ரூபாய் கிடைக்கும், அதை வைத்து பத்து நாளைக்கு குழந்தைகளைக் காப்பாற்றலாம், அதன் பின்பு வரும் நாட்களைப் பற்றி பின்னர் யோசிக்கலாம் என்ற எண்ணத்தோடு முதன் முதலில் ஒரு போலீஸ்காரனுடன் போய்த்தான் இந்த பாலியல் வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறார். அந்த போலீஸ்காரனின் உருவம், உடை எல்லாம் வைத்துப் பார்த்து அவனை மனதுக்குப் பிடித்தவனாக்கி அன்றிரவைக் கழித்திருக்கிறார், ஆம் காதலுடன் கழித்திருக்கிறார். அவனோ விடிந்ததும் தன் போலீஸ் புத்தியைக் காட்டி இருக்கிறான். ஆமாம் போலீஸில் பிடித்துக் கொடுத்திருக்கிறான். போலீஸாரின் அடி வாங்கித்தான் அன்றைய தினம் வெளியில் வந்ததாகவும், அதன் பிறகு அந்தாளைப் பார்க்கவே இல்லை என்றும் அப்படிப் பார்க்க நேர்ந்தால் ‘எதுக்கு அப்படிச் செஞ்சீங்க’ எனக் கேட்பேன் என்றும், ஒருவேளை நான் படம் எடுத்தால் இதைத்தான் எடுப்பேன் என்றும் எழுதியிருக்கிறார்.
ஜமீலா இந்தப் புத்தகத்தில் ஒவ்வொரு தலைப்பின் கீழும் பல ஆண்களைப் பற்றிப் பேசியிருந்தாலும், அக்கட்டுரையில் பிரதானமாய் ஒருவரைப் பற்றியே சொல்லியிருக்கிறார். அதனால்தான் எட்டு ஆண்களைப் பற்றி மட்டுமே பேசியிருப்பதாய் பலரும் சொல்லியிருக்கிறார்கள். தான் சொல்லியிருக்கும் ஆண்களைக் குற்றவாளிகளாகக் காட்டவில்லை. பலருடன் பணத்துக்கான ஒரு இரவு உறவு என்றாலும் இந்தப் புத்தகத்தில் சொல்லியிருப்பவர்களைப் போல் சிலருடன் மாதக் கணக்கில் உறவில் இருந்துள்ளார். இவர்களில் சிலர் ஜமீலாவைத் தனது காதலி போலோ, மனைவி போலோ தாங்கள் செல்லும் இடமெல்லாம் கூட்டிக் கொண்டு பயணித்திருக்கிறார்கள். சிலர் ஆட்களைப் பிடித்துக் கொடுப்பதுடன் அவ்வப்போது தாங்களும் ஜமீலாவைத் தங்கள் இச்சைக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இவர்கள் எல்லாமே ஜமீலா சொல்வதையும் கேட்டிருக்கிறார்கள், ஜமீலாவும் சிலர் மீது மெல்ல மெல்லக் காதல் வயப்பட்டு, ஒரு கட்டத்தில் இது நமக்குச் சரிவராது என அந்த இடத்தை, ஊரை விட்டே விலகிப் போய் தனது காதலைக் கொன்றிருக்கிறார்.
அவரைப் பொறுத்தவரை கணவனின் இறப்புக்குப் பின் தனது மகள்களைக் காப்பாற்றவே இதற்குள் இறங்கியிருக்கிறார். பணத்துக்காக இறங்கிய தொழில் என்பதால் பணத்தைப் பெறுவதில் குறியாக இருந்திருக்கிறார். பணம் கொடுத்தால் மட்டுமே அவர்களுடன் பயணித்திருக்கிறார். அம்பது ரூபாய்க்கு குறைவாய் கொடுத்தால் முடியாது என்று அடித்துச் சொல்லியிருக்கிறார். சில இடங்களில் கொஞ்சம் குறைத்தும் பெற்றிருக்கிறார். மாதக் கணக்கில் வைத்திருந்தவர்கள் கூட ஒவ்வொரு முறையும் அவருக்கான அம்பதைக் கொடுத்துத்தான் கூடியிருக்கிறார்கள், கூட்டிக் கொண்டு பயணித்திருக்கிறார்கள்.
தான் கடந்து வந்த, அனுபவித்த வாழ்க்கைக் கதையை எந்தக் கலப்பும் இல்லாமல், மறைக்காமல் இந்தப் புத்தகத்தின் வழி நம் முன்னே இறக்கி வைக்கிறார் ஜமீலா. இதை வாசித்து விட்டுப் பணத்துக்காக உடலை விற்றுவிட்டு இப்போது என்ன நல்லவளைப் போல பேசுகிறாள் என்றோ, இப்படியான வாழ்க்கையில் பல மனிதர்களைக் கைக்குள் வைத்துக் கொண்டு, தனது கடினப் பாதையைக் கடந்து வந்து இன்று சமூகத்தில் நான் பாலியல் தொழிலாளிதான் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்ட மன தைரியமும், சமூகம் கற்பிக்கும் எதையும் தாங்கும் திடமும் இருக்க வேண்டும், இவள் சாதித்திருக்கிறாள் என்றோ நினைப்பது அவரவர் மனநிலையைப் பொறுத்தது.
தான் ஒரு நிறை குடிகாரி என்பதையும், பகலிலேயே குடிப்பேன் என்பதையும், ஊரே பயப்படும் ரவுடியாக இருந்த பலரைத் தன் மனசுக்குள் பயமிருந்தாலும் எதிர்த்து நின்றிருக்கிறேன் என்பதையும், மனசுக்குள் இவனுடன் வாழலாம் எனத் தோன்றும் போது தனக்கான வாழ்க்கை தினமும் அம்பது ரூபாய் வருமானம் பார்ப்பதில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்து அவர்களை விட்டு விலகி வந்ததையும், தனது குழந்தைகளை வளர்க்கவே தான் இப்படி ஒரு பாதைக்கு வந்தேன் என்பதையும் இந்த நூலில் மறைக்காமல் மறுக்காமல் சொல்லியிருக்கிறார்.
ஜமீலா, பாலியல் தொழிலாளிகளுக்கான ‘Sex Workers’ அமைப்பில் செயல்பட்டு வருகிறார். ஜூவாலா முகிகள், A peep into the Silenced என்ற ஆவணப் படங்களைத் தயாரித்திருக்கிறார். தொடர்ந்து எழுதி வருகிறார்.
வாசிக்க வேண்டிய புத்தகம் என்றாலும் விருப்பமிருந்தால் வாசிக்கலாம்.
***

பரிவை சே.குமார்.
இதுவரை எதிர்சேவை, வேரும் விழுதுகளும், திருவிழா, பரிவை படைப்புகள், வாத்தியார், காளையன், சாக்காடு என்கிற புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. எதிர் சேவைக்கு தஞ்சை பிரகாஷ் வளரும் எழுத்தாளர் விருது , கேலக்ஸி மண்ணின் எழுத்தாளர்களுக்கான பாண்டியன் பொற்கிழி விருது பெற்றிருக்கிறார்.