எனதூர் சரித்திரம் – ஒரு பார்வை

ஆடைகளற்ற ஆசைகளின் நீட்சி எனும் கவிதைத் தொகுப்பை வெளியிட்ட கவிஞரின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது.

தமிழ்த்தாய்க்கான அணிகலன்களைத் தேடிக் கண்டடைந்து தரணியில் ஒளிர வைத்த உழைப்பின் பெருமையை உ.வே.சா வின் என் சரித்திரம் விளம்பியது போல மதுரை மண்ணின் வேளாண் குடிகளின் இயல்பையும் கிராமத்தின் பசுமைகளில் ஒளிந்து கொண்டிருக்கும் எளிய மனிதர்களின் உழைப்பையும் எனதூர் சரித்திரம் பேசுகிறது.

கரைபுரண்டோடும் மடைகளின் திறப்பில் கழனிகளில் மனிதக் கால்கள் வளர்த்திவிட்ட நாகரிகத்தில் கிராமத்தின் உயிர்ப்பும் வெள்ளந்தி மனிதர்களின் உழைப்பின் வீச்சும் நிறைந்திருக்கும் அழகை கிராமத்தின் வாழ்வியலுடன் தன்னைக் கரைத்துக்கொண்ட மனதினில் விளைந்து நிற்கும் அழகியலோடும் கிராமத்து சொல்லாடல்களோடும் நமக்குள் கடத்திச் செல்கின்றன இதில் உள்ள 14 கதைகள்.

ஊர்ச்சரித்திரம் ஒவ்வொருவர் மனதிலும் ஊன்றியிருக்க வேண்டியது அவசியம். ஊர் வளர்ந்த கதையும் ஊரை மக்கள் வளர்த்த கதையும் உணராமல் மனிதர்கள் உயிர்ப்புடன் உலவிட முடியாது.ஊரை உருவாக்கும் உத்தமர்களின் கதைகளில் தியாகங்களும் உழைப்பின் பாடுகளும் வறுமையின் கோடுகளும் கூரைகளில் ஒழுகும் கண்ணீரும் நிறைந்திருக்கக்கூடும். வீசும் மண்வாசத்திலும் விளையும் பயிர் வாசத்திலும் ஓடும் கண்மாய் நீரிலும் உருண்டோடும் வாழ்வின் சித்திரங்களில் நகரும் விசித்திரங்கள் ஒளிந்திருக்கக்கூடும்.

உயிர்களின் தலைவாசலெனக் கொண்டாடப்படும் மகளிர் வாழ்வியலானது கிராமத்துக் காற்றோடும் புழுதி மண்ணோடும் மேய்க்கும் ஆடு மாடுகளோடும் பின்னிப் பிணைந்திருக்கும் அழகை மட்டும் வெளிக்காட்டாமல் அவர்களுக்குள் இயல்பான வீரத்தையும் வெளிக்காட்டும் கதைகள் பழந்தமிழரின் இயல்பை எடுத்துரைக்கின்றன. பெண்ணை தெய்வமாக வணங்கும் மரபை வெளிச்சமிடும் கதைகளில் மண்ணின் ஈரத்தன்மை உலராமல் உயிர்களைக் காக்கிறது

நாகரிகம் எட்டிப் பார்க்காத கிராமத்தின் வீதியெங்கும் விரிந்து கிடக்கும் இயற்கை வனப்புகளை வர்ணிக்கும் பொழுதில் எழுத்தாளருக்குள் இயற்கை மீதான நேசமும் பற்றும் இருமடங்காகிவிடுகின்றன.

*வெண்பனிகள் வடியாறாய் வடித்துக் கொண்டிருக்கும் அதிகாலையில் சுடர் விடும் செவ்வானம்

*கூரை வீடுகளை மாராப்புச் சீலைகள் போர்த்தி கிழிந்த கூரைகளின் நிர்வாணம் மறைக்கப்பட்டிருந்தது.

*நதியிட்ட மணற்மேடுகளில் சிப்பிகளை ஏந்திக் கொண்டிருக்கும் வெய்யில் மழை.

*அதிகாலை இருட்டில் கதிரவன் துப்பியெறியும் வெளிச்சத்தில் கிராமத்தின் வாசல் திறக்கப்படுகிறது.

*குத்தூசிக் காற்றுகள் அவளின் முகத்தைக் குத்துகிறது.

*தங்கள் முகத்தின் இதழ் விரியும் பூந்தென்றல் தெவிட்டியலையும் இளங்காலைப் பொழுது.

*பெரும்பூசணிக் கொடிகள் அப்பிய கூரையின் மேல் காயும் சல்லிக்கெண்டைகள் சிதறிய சில்லறைக் காசுகளாய் பலபலவென பின்னிக் கொண்டிருந்தன.

   என வர்ணனைகளிலும் கிராமத்தை எடுத்துக்காட்டி காட்சிப்படுத்தும் நுட்பம் வியப்பிற்குரியது.

ஊமைக்கும் கனவுகளும் ஆசைகளும் உள்ளத்தில் பூத்திருக்கும்.சராசரி பெண்களுக்கான வாழ்வியலில் தன்னையும் கரைத்துக் கொள்ளத் துடித்து தனது வாழ்வின் நேர்த்தியால் ஜோதிடத்தையும் பொய்யாக்கிவிட்ட கச்சம்மாள் நமக்குள் நம்பிக்கையை விதைக்கும் பண்பைக் கற்றுத் தருகிறாள்

உழைப்பை கால .நேரம் பார்க்காது முதலாளிக்கு ஒப்புக்கொடுக்கும் வறுமையை மேலேற்றிவிட யாருக்கும் சிந்தனை வருவதில்லை.ரத்தத்தை உறிஞ்சும் அட்டையைப் போல மனிதர் உழைப்பை உறிஞ்சும் மனித அட்டைகளை அடையாளமிடுகிறது கருவாயன் கதை.

உணவின் மீதான மனிதனின் ருசி வறுமையைப் பார்ப்பதில்லை வாய்ப்புகள் கிடைக்கையில் இயற்கையை வேட்டையாடியும் உணவை எடுத்துக்கொள்ள மனிதன் தயங்குவதில்லை. தனக்கானவை போக மீதத்தை சிதைக்காமல் பாதுகாத்திடும்போதே இயற்கை நம்மை மேலும் வளப்படுத்தும் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். மீன் வாசம் நாசியைத் துளைக்கையில் இயற்கையை சேதமாக்கிவிடும் எண்ணத்தைத் துறப்பதே நல்லது.

கிராமத்துப் பெண்களுக்கே உரிய தைரியத்தையும் வீரத்தையும் வெளிக்காட்டும் குமராயி ஆளாத்தி கதைகளும் நமது பண்பாட்டின் நீட்சியை விதந்தோதுகின்றன.

பேராசையின் கரங்கள் நீளும் போதெல்லாம் மனங்களில் கருணையும் அன்பும் உறவு முறைகளும் காணாமல் போகின்றன. கல்லறைக்குக் கொண்டுபோவது வெறும் கூடென்றானபின் வாழும்போது மட்டும் எல்லாம் தமக்கே என்ற ஆசையின் உச்சத்தில் மனிதன் ஆடும் பேயாட்டம் உறவுகளையும் சிதைத்து விடுகிறது என்பதை பனைப்போர் விவரிக்கிறது.

மரபணுக்களின் பிறழ்வுகள் மனிதனின் பால் வேறுபாட்டை அதிகப்படுத்துகையில் உடலில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.அதை குடும்பமும் சமூகமும் ஏற்றுக்கொள்ள அச்சப்படுகையில் மனதிற்குள்ளும் பிறழ்வுகள் நேர்கின்றன. திருநங்கையாக / திருநம்பியாக அவர்களை உருமாற்றவைத்து சக உயிரியாக அவர்களை மதிக்காத அவலத்தை சமூகமே அவர்கள் மீது திணித்து விடுகிறது. ஒற்றை மனதில் வீசப்படும் புறக்கணிப்புக் கல்லே ஓராயிரம் குற்றங்களுக்கு அடிகோலிவிடுகிறது என்பதை மீச்சிறுகல் அடித்துச் சொல்கிறது.

மனங்களில் கருணை பெருகாத போது உறவுகளிருந்தும் அனாதையாகிவிடுகிறோம். அன்பு சூரியனாய் ஒளிவீசினால் மண்ணில் எல்லா மனிதரும் உறவுகள் சூழ உயிரை நீட்டித்துக் கொள்ள முடியும்.வாசலைத் துறந்தவர்களுக்கு ஏதேனும் ஒரு சாளரத்தையாவது இயற்கையை விதியோ திறந்து விடும் என்பதை தாய் வாசல் நிரூபிக்கிறது.

பட்டகாலிலே படும் கெட்ட குடியே கெடும் என்பதைப் போல விதி பேயனின் வாழ்வில் சூறாவளியென விளையாடித் தீர்த்து விடுகிறது.சில நேரங்களில் மனிதனின் உழைப்பும் வாழ்வின் மீதான தீராத தாகமும் விதியின் கரங்களுக்குள் நசுங்கிப் போய்விடுகின்றன.கரிசலின் கனல் கடைசிவரை மனிதனுக்கு வாழ்க்கை மீதான நம்பிக்கையை அளிக்கத் தவறிவிடுகிறது.

குறுகிய விவரிப்புகளில் விரிந்து செல்லும் கதைக்களம், இழப்புகளையே முடிவாகச் சொல்லும் கதைகள், மண்ணின் தன்மையை உள்ளது உள்ளபடியே மாந்தர்களோடு எடுத்துரைத்தல், திடீரென நேர்ந்துவிடும் மரணங்கள், சக மனிதனின் வலியை, வேதனையை நமக்குள் உணரும்படியான எழுத்துகளில் விரித்துரைத்தல்,சமூகத்தின் நிகழ்வுகளை அப்படியே வழிமொழிதல் என கதைகளை இயல்பாக படரவிடும் இவர் முடிவு என எதையும் வலுக்கட்டாயமாகத் திணிப்பதில்லை. இப்படியான மண்ணின் ஈரத்தில் மனிதர்களின் மனங்களை காட்சிப்படுத்துதல் மட்டுமே எனது பணி என்பதில் தெளிவாக இருக்கும் எழுத்தாளர் அதன்வழியே கிராமத்தின் சகல வீதிகளையும் திறந்து காட்டுவதில் வெற்றி பெறுகிறார். மரபார்ந்த புதுப்புது கலைச்சொற்களை, அழிந்துவரும் கிராமத்தின் சொல்லாடல்களை மீட்டுருவாக்கி பாரம்பரியத்தை நிலை நிறுத்துவதில் எனதூர் சரித்திரம் எல்லா ஊரின் சரித்திரத்தையும் திரும்பிப் பார்க்க வைக்கிறது.

++

சிறுகதைத் தொகுப்பு – அய்யனார் ஈடாடி – முதல் பதிப்பு ஜூலை 2023 – பக்கம் 96 – விலை ரூ 90 – வெளியீடு யாப்பு

இளையவன் சிவா

கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி ஏழை தாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.  மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *