பால்கனியில் நின்று வேடிக்கை பார்த்தவண்ணம் மூன்றாவது சிகரெட்டை ஊதித் தள்ளிக் கொண்டிருந்த அஸ்வினுக்கு வட்ட வட்டமாய் அவன் விடும் புகையின் மீது அத்தனை வாஞ்சை தோன்றியது. தான் பெரிதாக சாதித்து விட்ட எண்ணம் தோன்ற ஒவ்வொரு முறை இழுக்கும் போதும் ‘நான் இப்படித்தான், யாருக்கும் பயப்படமாட்டேன்..’ ‘நான் சுதந்திர பறவை‘  ‘என் வாழ்க்கை என் இஷ்டம்’ என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டான். தவிர்க்க முடியாமல் அப்பாவின் முகம் மனதில் தோன்ற இன்னும் வேகமாக இழுத்தான். அறைக்குள் இருந்து மதன் சத்தம் கொடுத்தான்.

“டேய் எந்த ஃபிகர பாத்திட்டு இருக்கே? ரொம்ப நேரமா அங்கேயே செட்டில் ஆகிட்டே உள்ள வர்றியா அங்க கொண்டு வரவா? ”

திரும்பி பார்த்து சிரித்த அஸ்வின்,

“இங்க ஒருத்தரும் இல்லடா சும்மா அப்படியே யோசனை” என்றான்.

“அதாண்டா அங்க என்ன புடுங்கறே உள்ற வா”

உள்ளே வந்து கண்ணாடி கிளாசில் ஊற்றி வைத்திருந்த திரவத்தை கையில் எடுத்தவன், இன்னும் கொஞ்சம் தண்ணீரை ஊற்றினான்.

வெளியே செல்ல இருந்தவனை வம்பிழுத்தான் மதன்,

“மச்சி உண்மையச் சொல்லு அந்த எதிர் அப்பார்ட்மெண்ட்  மார்வாடி பொண்ணு தானே? அவங்க அப்பன் போம்போது வரும்போது எல்லாம் என்னிய முறைக்கான்டா.. மவனே உன்னால நான் அடி வாங்க முடியாது”.

மெலிதாக சிரித்துக்கொண்டே “போடா கேணையாட்டம்“ என்று சொல்லிவிட்டு மீண்டும் பால்கனிக்கு வந்தான். பால்கனியில் நின்று புகைப்பிடித்தால் தான் சுதந்திரமாக இருப்பது போல் தோன்றியது. யாராவது அவன் புகைப்பதை பார்க்க வேண்டும், இத்தனை பெரிய சென்னையில் அவனை அறிந்தவர்கள் யாரும் இல்லை. யாருக்கும் பயந்து ஒளிய வேண்டாம். தெரிந்த அங்கிள் வருகிறாரோ என்ற ஐயத்தில் சிகரெட்டை தூக்கி தூரவீச வேண்டாம். ஒரு வகையில் அப்பா சென்னைக்கு அனுப்பி தனக்கு நல்லது செய்திருக்கிறார் என்று தோன்ற அப்பா இங்கே இல்லாதது எவ்வளவு ஆறுதல் என்று நினைத்தான். அப்பாவின் நினைவோடே அவளும் ஞாபகத்தில் வந்தாள். உடனே நினைத்துக்கொண்டான். ‘இந்த சுதந்திரம் அப்பா தந்ததல்ல.. நீ தந்தது‘.

“ஜீவிதா… எங்க இருக்கே?” என்று தனக்கு மட்டும் கேட்கும்படியாக பேசினான், ஒரு மிடறு இறக்கினான். தொண்டைக்குழிக்குள் எரிந்திறங்கிய விஸ்கியை ஜீவிதாவுடன் ஒப்பிட்டுக்கொண்டான். 

ஜீவிதாவை மறந்து இன்னொரு பெண்ணை நினைப்பது அத்தனை எளிதா என்ன?

‘என் அன்பே ஜீவிதா எங்கிருக்கிறாய் நீ? இந்த நொடியில் என்ன செய்துக் கொண்டிருப்பாய்?’ இப்படி மனதுக்குள் கேட்டுப்பார்த்து கவித்துவமாக தான் யோசிப்பதாய் நினைத்து சிரித்துக்கொண்டவன் அந்த வேதனையான நாளினை நினைவுக்கூர்ந்தான். ஒரே மடக்கில் குடித்து முடித்தவன் அப்பா செவிலில் விட்ட அறை இன்னமும் வின்னென்று தெறிப்பது போல் தோன்ற தலை சுற்றி சுவரோடு சாய்ந்தான். 

“அஸ்வினு… விழுந்து தொலைச்சிராத” என்று ஓடி வந்து நாற்காலியில் அமர்த்தினான் பிரேம்.

“என்னாச்சிடா?” என்று ஓடி வந்த மதன் முழு கிளாசையும் ஒரே வீச்சில் காலி செய்திருந்த அஸ்வினை நோக்கி,

“என்னடா இப்படி கப்புனு அடிச்சிட்டே?  உனக்கு இன்னைக்கு அவ்ளோதான் கோட்டா. கூவிட்டே அலையாம கம்முனு போய் படுத்துரு” என்றான்.

“அயம் ஒகே மச்சி. ஒரு பீர் எடுத்துட்டு வா” என்றான் அஸ்வின்.

“பீரும் இல்ல மோரும் இல்ல” என்ற மதன்,

“நீ எங்கடா போனே எவன் சமைப்பான்னு நினைச்சே?” என்றான் பிரேமிடம்.

“ஆமால்ல சமைக்காம எங்கடா போன” என்றான் குழறியவாறே அஸ்வின்.

கையில் வைத்திருந்த புத்தகத்தை காண்பித்த பிரேம்,

“குமார் அண்ணா அவங்க லாஸ்ட் இயர் புக்ஸ் தரேன்னு சொல்லிருந்தாங்கல்ல. அத வாங்க போனேன் டா” என்று கூறிக்கொண்டே எதிர் வீட்டை கண்ணசைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

“அங்க என்ன மயிறு லுக்? இங்க பார்த்து பேசுடா..” – அஸ்வின்

“ஓஹோ கத அப்படி போகுதா? நீ தானா அந்த கல்பிரிட். ச்ச.. அஸ்வின சந்தேகப்பட்டுட்டேனே” என்ற மதனிடம்,

“என்னை எப்படி டா அப்படி நினைச்சே? காலேஜ்ல எந்த பொண்ணையாவது திரும்பி பார்த்திருக்கேனா சொல்லு”

“எவளாவது உன்ன பாத்தாதானே மச்சி நீ பாப்பே“ என்று சிரித்துக்கொண்டே கூறினான் பிரேம்.

“நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன், என்னோட பாஸ்ட் எல்லாம் உனக்குத் தெரியும் வீணா கோவத்த கிளப்பாத சொல்லிட்டேன்” என்ற அஸ்வினிடம்,

“சரி சரி டென்சன் ஆவத மச்சி. வாழ்க்கைல ஒரு லவ் தான்னு யார் சொன்னா உனக்கு. மூவ் ஃபார்வார்ட் டா” என்றான் பிரேம்.

பிரேமும், மதனும் ஓராயிரம் முறை கேட்டிருந்த அதே கதையை மீண்டும் சொல்ல ஆரம்பித்தான் அஸ்வின்.

“நான் போய் சமைக்கிறேன் டா, நீங்க பேசிட்டு இருங்க” என்று நழுவ நினைத்த பிரேம், எதிர் பால்கனியில் துணி காயப்போடும் ஊர்மிளாவை கண்டதும் மனம்மாறி..

“சரிடா மச்சி சொல்லு கேட்போம்” என்று அமர்ந்தான். பாட்டிலும் தண்ணியுமாக வெளியே வந்த மதனை “டேய் பப்ளிக் டா இப்படியா பப்பரபேனு கொண்டு வருவே” என்று கடிந்தான்.

மதனுக்கு புரிந்தது. “ஏற்கெனவே ஒரு மெண்டல ரூம்ல வச்சி அழுதுட்டு இருக்கறது போதும்டா நீயும் இன்னொரு சேதுவாகிடாதே” என்றான்.

“ஜீவிதா எவ்வளவு அழகு தெரியுமாடா?” என்ற அஸ்வினிடம், எங்களுக்கு எப்படி மச்சி தெரியும்.. அடுத்தவாட்டியாவது உன் ஸ்கூல் போட்டோ கொண்டு வா என்றான்.

“ம்ம்ம்ம் என் ஆள சைட் அடிக்கலாம்னு பாக்கே.. நெவர்..“

“நிஜமாவே அவ உன்ன லவ் பண்ணாளா டா“ என்று நம்பமாட்டாமல் கேட்டான் மதன். இது எல்லாமே அஸ்வினின் கட்டுக்கதையோ என்ற சந்தேகம் அவனுக்கு எப்போதும் உண்டு.

“மதர் ப்ராமிஸ் டா அவ ஓப்பனா சொல்லலியே தவிர என்ன அவளுக்கு ரொம்ப பிடிக்கும். நாங்க ஒன்னா பஸ்ல ஜங்ஷன் வரை போய்ட்டு வருவோம். என் முன்சீட்ல உட்காந்து பேசிட்டே வருவா. காத்துல அவ முடி ஆடிக்கிட்டே இருக்கும். அவ சொல்ற பாதி எனக்கு மண்டைல ஏறாது ஏன்னா நான் அவளையே தான் பார்த்துட்டு இருப்பேன். அவ தெத்துப்பல் அவ்ளோ அழகா இருக்கும். அவளுக்கு திடீர்னு ஆஞ்சநேயர புடிச்சி போச்சி மச்சான். ஒவ்வொரு சனிக்கிழமையும் நானும் கெட்வெல் ஆஞ்சநேயர் கோவிலுக்கு போயி செந்தூரம் வைக்க ஆரம்பிச்சிட்டேன். ம்ம்ம்ம் அதெல்லாம் ஒரு அழகான கனாக்காலம் டா”

“சரி விடு மச்சி எல்லார் லைப்லயும் இப்படி ஏதாவது நடக்கும். எல்லாருக்கும் லவ் சக்ஸஸ் ஆகாது. உனக்கு அட்லீஸ்ட் அவ சம்மதிச்சாளே அதே பெரிசு. அத நினைச்சு சந்தோஷப்படு. மதன் போனவாரம் ப்ரபோஸ் பண்ணான் இல்ல அந்த மலையாளி பொண்ணு செருப்ப தூக்கி காமிச்சிட்டா.. ஒரே அசிங்கமா போயி லவ் பெயிலியருக்கு அழறதா இல்ல செருப்ப காமிச்ச அசிங்கத்த நினைச்சு அழறதான்னு தெரியாம குத்துமதிப்பா அழுதுட்டு இருந்தான்” என்று சிரித்த பிரேமிடம்,

“அதான் இன்னைக்கு பர்ஸ்ட் இயர் படிக்கற அந்த நார்த் பொண்ணுக்கு ரூட் விட்டுட்டு இருந்தானே, இதெல்லாம் லவ் இல்லடா.. கிடைச்சவரை லாபம்னு அனுபவிக்க ட்ரை பண்றான், ஆனா என் லவ் உண்மையான லவ் டா. ஜீவிதா தான் என் வாழ்க்கை. இப்ப நாங்க பிரிஞ்சிருக்கலாம். ஆனா என்னைக்காருந்தாலும் அவ தான் டா என் வைப்.”

சிரிக்க ஆரம்பித்த மதன் வாயை மூடிக்கொண்டே “டேய் உனக்கு ஜாஸ்தி ஆகிட்டு போய்டு ஜீவிதாவ கட்டிபுடிச்சிட்டு தூங்கு” என்றான்.

“அசிங்கமா தான் டா நீ நினைப்பே ஏன்னா உன் புத்தி அப்படி.. எங்க காதல் அப்படி இல்ல”

“நீ ஜீவிதாவ கிஸ் பண்ணிருக்கியாடா?” என்று ஆர்வமாய் கேட்ட பிரேம் தலையை கோதி ஒரு ஸ்டைலான போஸை ஊர்மிளாவுக்கு கொடுக்க அவள் வெக்கத்தோடு உள்ளே போய் விட்டாள்.

கண்ணை மூடி யோசித்த அஸ்வின் என்ன சொல்ல போகிறான் என்று கேட்க ஆவலாய் இருந்தனர் நண்பர்கள் இருவரும்.

“இல்லடா. கிட்ட உட்காந்திருக்கோம், அவ என் தோள்ள சாய்ஞ்சிருக்கா.. ஆனா முத்தமெல்லாம் கொடுத்துக்கிட்டது இல்ல. அவ போட்டோக்கு நிறைய வாட்டி கொடுத்துருக்கேன்” என்று அரைமயக்கத்தில் சிரித்தவனை,

“தூ இதெல்லாம் ஒரு லவ்வு… நீ எல்லாம் எங்க பிரெண்ட்னு வெளிய சொல்லாத” என்றான் பெண்களை பாகுபாடு இல்லாமல் கவர முயற்சிக்கும் மதன். தன்னை மன்மதனாக பாவித்துக்கொண்டு ஒவ்வொரு பெண்ணாக முயற்சி செய்வான். எப்பொழுதும் அவன் சைட் அடிக்கும் பெண்கள் அவனோடு வெளியே சுற்றும் அளவு நெருக்கமாகி விடுவார்கள். இரண்டு பெண்களை டீ குடிக்க என்று வீடு வரை கூட்டி வந்திருக்கிறான். அவனுக்கு தன் தெய்வீக காதல் எல்லாம் புரிய வாய்ப்பேயில்லை என்று நினைத்தான் அஸ்வின்.

“டேய் அவங்க அப்பா வந்தத உங்க அப்பா அடிச்சத சொன்னே எப்படி மாட்டினேனு சொல்லவேயில்லையே” என்ற பிரேமை ‘ஏண்டா’ என்பதுபோல வேதனையாக பார்த்தான் மதன்.

“இல்ல மச்சான் உனக்கு இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல. கேட்டுக்கிட்டா எனக்கு உபயோகமா இருக்குமேன்னு தான்“ என்றவனிடம் சிகரெட்டை நீட்டினான் மதன், கையில் வாங்கியவன் எதிர்வீட்டை பார்த்துக்கொண்டே நாற்காலியில் இருந்து குனிந்து புகைத்தான்.  

“அது ஒரு பெரிய கதைடா” என்று மதனை கெஞ்சலாய் பார்த்து க்ளாசை நீட்டினான் அஸ்வின்.

“இத்தோட அவ்ளோதான் உனக்கு. நீ வாந்தி பண்ணி வைச்சா நீயே தான் க்ளீன் பண்ணனும் சொல்லிட்டேன்” என்றவாறு விஸ்கியையும், தண்ணீரையும் கிளாசில் ஊற்றினான் மதன்.

அடுத்த மிடரை கண்கள் மூடி இறக்கியவன் “நான் ஒரு ராசி இல்லாதவன்டா. என் வாழ்க்கைல சந்தோஷமே இல்ல. என் ஸ்கூல் டேஸ் எல்லாமே எப்போ அங்க அப்பா அடிப்பாரு, திட்டுவாருன்ற டென்ஷனோடேயே போச்சு. என் லைப்ல எனக்கு கிடைச்ச பொக்கிஷம் மச்சி என் ஜீவிதா. விதி நாங்க பிரியனும்னு இருந்திருக்கு. ஆனா என் லைப்ல ஜீவிதா மட்டும் தான் டா. பத்து காதல் எல்லாம் வராது டா. ஒரு இதயம் ஒரு காதல் தான் டா. அது என் ஜீவிதா மட்டும் தான். “

“என்னடா நீ இப்ப போயி பாகவதர் காலம் மாதிரி ஒரு இதயம் ஒரு காதல் கத்திரிக்கானு சொல்லிட்டு இருக்கே?, அப்போ கிளாஸ்ல அந்த நித்யாவ அப்போ அப்போ பார்க்கியே அதுக்கு பேரு என்ன மச்சி?” என்ற மதனிடம்,

“அது சும்மா டைம்பாஸ் மதனு. நீ பாக்கல ஒரே நேரத்துல பத்து ஃபிகர? நான் சும்மா சைட் தான் அடிச்சேன். லவ் எல்லாம் பண்ணல. லவ் ஜீவிதா மட்டும் தான்”.

“போடா பா… பெரிய மயிராட்டம் பேசறான் பாரு. எனக்கு என்னமோ ஜீவிதான்னு ஒரு பொண்ணு இருக்காளான்னே சந்தேகமா இருக்கு டா” என்ற மதனை முறைத்த அஸ்வின்,

“என் ஸ்கூல்மேட் ரவி வருவான் ல அவன்ட கேளு.. ஆங் வேணாம் அவன்ட கேட்ராதே டா.. எல்லாரும் நம்ம சிஸ்டர்ஸ்னு என்னத்தையாது பேசி என்ன கில்டி ஆக்கிடுவான். இந்த வாட்டி கண்டிப்பா எங்க ஃபேர்வெல் போட்டோ கொண்டு வரேன்.”

2.

“சரி மச்சி நீ சொல்றதெல்லாம் பாத்தா உன் லவ் கிளாஸ்ல யாருக்கும் தெரியாது அப்படித்தானே?”– பிரேம்

“ம்ம்ம்ம் தெரியாது. ஒரே ஒரு ப்ரண்ட்க்கு தெரியும் அவன் பேரக் கேட்காதே இப்போ. திடீர்னு இங்க வந்துட்டான்னு வையி நீ அவன கேட்டு வைப்பே அப்புறம். ப்ரபோஸ் பண்ணாம சொல்லிக்காம எப்படி லவ் பண்ணோம்னு உங்களுக்கு டவுட் அப்படித்தானே”

ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டவர்கள் “டவுட்னு இல்லடா… அந்த பொண்ணு லவ் பண்ணுச்சான்னே தெரியாம எப்படினு தான்…“ என்றான் பிரேம்.

“லவ் பண்ணாமதான் எல்லாரும் தூங்கினப்புறம் 12 மணிக்கு மேல எனக்கு போன் பண்ணுவாளா? அவ கஷ்டத்த எல்லாம் என்ட்ட சொல்லி அழுவாளா? எங்கூட பேசனும்னு எக்ஸ்ட்ரா கிளாஸ்னு வீட்ல பொய் சொல்லிட்டு பஸ்ல சுத்த வருவாளா? எனக்கு ப்ளட்ல லெட்டர் எல்லாம் எழுதி இருக்கா தெரியுமா? இன்னமும் அந்த லெட்டர் என்ட இருக்கு. நெக்ஸ்ட் டைம் ஊருக்கு போய்ட்டு வரும் போது அதையும் கொண்டு வாரேன்”.

“ப்ளட்லயா…? என்னடா ப்ரபோஸ் பண்ணிக்கலன்னு சொன்னே அப்போ லெட்டர்ல என்ன எழுதியிருந்தா?”– பிரேம்

“அதுவா மச்சி, என்ன எவ்ளோ பிடிக்கும், எங்கூட பேசாம அவளால இருக்க முடியாது. அந்த நரகத்துல வாழ்ற அவளுக்கு நான் தான் துணை. இப்படி நிறைய எழுதியிருந்தா. காலம்பூரா எங்கூட பேசிட்டே இருக்கனும்னு சொன்னா”

“நீயாவது ஐ லவ் யுனு சொல்லிருக்கலாம்ல டா?” – மதன்

“ஏண்டா சொல்லனும். நம்ம மனசுக்கு தெரிஞ்ச விஷயத்த நமக்கே ப்ரூவ் பண்ணனுமா என்ன? அவளுக்கும் தெரியும், எனக்கும் தெரியும். எப்போ அவங்க அப்பனுக்கு தெரிஞ்சிதோ அன்னைக்கு போச்சி எல்லாம். அதும் கரெக்ட்டா காலேஜ் சேர்ற டைம்ல டா.. இல்லனா இந்நேரம் என் மத்த பிரண்ட்ஸ் கூட சிவந்தி ஆதித்தனார் ல தான் எஞ்சினியரிங் படிச்சிட்டு இருந்திருப்பேன். இப்படி குடிச்சி, தம் அடிச்சி நாசமா போயிருக்க மாட்டேன், ஜீவிதா என்ன இதெல்லாம் செய்ய விட்டிருக்க மாட்டா”

“மச்சி நீ என்ன சொல்ல வர்றே.. எங்களால நீ நாசமாய்ட்டே… டேய் எங்க அப்பா எனக்கு குடுக்கற காசுல உங்களுக்கு சரக்கு, சைடிஷ் எல்லாம் வாங்கி கொடுக்கறேன் இல்ல. என்ன செருப்பால அடிக்கனும்டா…” என்றான் மதன்.

“இந்தா அடிச்சிக்கோ…” என்று காலை நீட்டியாவாறு சிரித்தான் அஸ்வின். 

“வேண்டாம் டா, ஜீவிதா நினைப்புல அடிச்ச மப்புல ஓவரா போறே… காலைல மன்னிப்பு கேட்டுக்கலாம்னு நினைக்காத. மவன அவ்ளோ ஃபீல் ஆனா நல்லவனுங்க இருக்கற வேற ரூம் பார்த்துட்டு போடா கம்னாட்டி”

“மதனு அமைதியா இருடா.. உனக்கு தான் அவனப்பத்தி தெரியும்ல. அவன் இங்க இல்லனா நாம படிச்சு பாஸ் கூட ஆகமாட்டோம்டா. அவன் போதைல இருக்கான். நீ என்ன மயித்துக்கு மூனாவது ரவுண்ட் ஊத்துனே? எதாவது மேட்டர் கதை சொல்வான்னு தானே” என்று சிரித்தான் பிரேம்.

“நீ பொத்து நான் உள்ள போறேன்” என்று எழுந்தவனை உடகார வைத்த அஸ்வின்,

“சரி உங்ககிட்ட சொல்லாத ஒரு ரகசியம் சொல்றேன் இன்னைக்கு…”

“ம்ம் சொல்லி தொலை. உப்பு சப்பில்லாம என்னத்தையாது சொன்னே இருக்கு உனக்கு”

“அன்னைக்கு நைட் காலேஜ் பத்தி தான் டா பேசிட்டு இருந்தோம். எல்லாரும் தூங்கிட்டாங்க.. நைட் ஒரு 12.30 இருக்கும்.”

“நிஜமாவாடா? நீ அவ வீட்டுக்கு போனியா?” – மதன்

“லூசு அதென்ன மெட்ராஸா?  அங்கெல்லாம் அப்படி போகமுடியாது.. போன்ல பேசினோம். அதுக்கே பெரிய பிரச்சனை ஆகிட்டு, அவங்க அப்பன் சும்மாவே சந்தேக பிசாசு. இவ பின்னாடி யார் சுத்துனாலும், நீ கண்ண காட்டாம எப்படி உன் பின்னாடி வருவான்னு திட்டுவாரு. கேட்கவா செய்யனும். நைட் எல்லாம் அவள அடிச்சி டார்ச்சர் பண்ணி, அடுத்தநாள் எங்க வீட்டுக்கே வந்துட்டாரு. எங்க அப்பா கிறுக்காட்டம் அவங்க எல்லாம் அண்ணன் தங்கச்சிய தான் பழகிருப்பாங்கன்னு சொன்னப்போ அவர் மேல அப்படி ஆத்திரம் வந்துச்சு. ‘எந்த அண்ணன் தங்கச்சி ராத்திரி 12 மணிக்கு திருட்டுத்தனமா போன் பேசுவாங்கன்னு’ கேட்டாரு அவங்க அப்பா.. அந்தாக்குல எங்க அப்பா பொளேர்னு ஒரு அறை விட்டாரு பாரு… இன்னும் சௌய்ங்க்னு ஃபீல் ஆகுது மச்சி… அப்பாவாடா அந்தாளு? என்னைக்காது பாசமா பேசியிருப்பாரா? எப்ப பாத்தாலும் எதிரிய பாக்கறாப்ல… நான் தப்பு பண்ணினேனானு கூட கேட்க மாட்டாருடா. உடனே கைய நீட்டிருவாரு. என் வாழ்கையோட சாபம் டா எங்கப்பன்” என்று கண்களை துடைத்தான்.

“அஸ்வினு அழாதடா… அப்பா எல்லாம் நம்ம நல்லதுக்கு தான் சொல்வாங்க. உன் காதல சேத்து வைக்க என்ன செய்யனும்னு மட்டும் சொல்லு நாங்க இருக்கோம்” என்ற பிரேமிடம்

“டேய் அவங்க ஊரு அருவாளுக்கு ஃபேமஸ் டா..” என்றான் மதன்,

“உங்க அப்பா கோயம்புத்தூர்ல எவ்ளோ பெரிய ஆளு மச்சி நீயே இப்படி சொன்னா எப்படி?  நண்பனுக்காக என்னனாலும் செய்யலாம்டா” என்றான் பிரேம்.

“அன்னைக்கு எங்க அப்பா அடிச்ச அடிய லைப்ல மறக்க முடியாதுடா.. எனக்கே இப்படினா அவ பாவம் பொண்ணுடா.. அவங்க அப்பன் பெல்ட்டால அடிச்ச மார்கெல்லாம் காமிச்சிருக்கா தெரியுமா. அன்னைக்கு நைட் என்ன பாடு பட்டாளோ”

“அப்புறமா நீ பாக்கவே இல்லையாடா?” – மதன்

“அந்த வாரத்துலயே எங்க அப்பா என்ன சென்னைக்கு பேக் பண்ணிட்டாரு, அப்புறமா பெருசா யார்கூடயும் டச் இல்லடா. ஊருக்கு போகையில மத்த பிரண்ட்ஸ் மூலமா தான் அவ அங்கயே எஞ்சினியரிங் படிக்கிறான்னு தெரிஞ்சுது. எங்கயாது மீட் பண்ணிட மாட்டோமானு அவ தெரு வழியா கூட போனேன். ப்ச் பார்க்க முடில. ஆனா அந்த காதல் மனசுல அப்படியே தான் இருக்கு”

“இதான் சொல்லாத ரகசியமாடா? இதான் ஏற்கெனவே தெரியுமே டா” என்ற முறைத்த பிரேமிடம்

“அதுவா மச்சி சொன்னா என்ன பைத்தியக்காரன்னு சொல்வீங்க… “

“இல்லன்னா மட்டும்” என்ற மதனை முறைத்த அஸ்வின் தொடர்ந்தான்.

“அவ எனக்கு ஒரு டிஷர்ட் கிப்ட் பண்ணினா டா. அவ ஞாபகம் எனக்குள்ளயே இருக்கனும்னு…”

“இருக்கனும்னு? என்னடா பண்ணே?”

“அந்த டீஷர்ட தீயில பொசுக்கி தண்ணில கரைச்சி குடிச்சிட்டேண்டா”

இரண்டு பேரும் விழுந்து விழுந்து சிரிக்க துவங்கினார்கள். “எப்படிடா மச்சி இப்படி யோசிச்ச? அய்யோ யம்மா முடிலடா” என்று சிரித்த மதனை கோபமாக பார்த்தான் அஸ்வின்,

“ப்ரண்ட்ஸா டா நீங்க? யார்டயும் சொல்லாத சீக்ரெட் உங்க கிட்ட சொன்னேன் பாரு என்ன சொல்லனும்”.

“இந்த நாசமா போன காதல் உன் லைப்ப மாத்தி பேரண்ட்ஸ்ட இருந்து பிரிச்சி உன்ன குடிக்க வைச்சி, கூத்தடிக்க வைச்சி இப்ப புலம்ப வுட்டுருக்கு… நீ தான் மெச்சிக்கனும் அன்பே ஜீவிதா… ஆருயிரே ஜீவிதான்னு” என்றான் பிரேம்.

கண்களை மூடியவனின் மனதுக்குள் ஜீவிதா செல்லம் கொஞ்சினாள்.. ஏதோ பேசிக்கொண்டே இருந்தாள். அப்படியே உறங்கி போய்விட்டிருந்தான் அஸ்வின். சனிக்கிழமை வழக்கமாய் அப்பா அம்மாவுக்கு போன் போட வேண்டிய நாள். அதை ஜீவிதாவோ, மதுவோ மறக்கடித்திருந்தது. விடிகாலையில்  தலையை பிடித்துக்கொண்டு எழுந்தான். கர்ச்சீப்பை எடுத்து தலையில் அழுத்தமாய் கட்டிக்கொண்டான். இரவில் சாப்பிடாமல் உறங்கியது உரைத்தது. பசி வயிற்றைக்கிள்ள என்ன சாப்பிட இருக்கிறது என்று கிச்சனில் சென்று உருட்டினான்.

சத்தம் கேட்டு வந்த மதன் “ஹேங்கோவர் மச்சான். ஒரு பீர் அடி சரியாய்டும்” என்றான்.

ஒரு கையில் பீரை எடுத்துக்கொண்டு பின் பக்க பாலகனிக்கு சென்றவன் புகைக்க ஆரம்பித்தான்.

“டேய் நான் குளிச்சிட்டு கடைக்குப் போயி டிபன் வாங்கிட்டு வரேன்” என்று  பாத்ரூமிற்குள் புகுந்தான் மதன். பிரேம் இன்னமும் உறங்கிக்கொண்டிருந்தான். பொதுவாகவே ஞாயிறுகளில் பத்து மணிக்கு மேல் தான் எழுவான். ஜீவிதாவின் நினைவுகள் இன்னமும் முழுவதுமாய் ஆக்கிரமித்திருந்தது அஸ்வினுக்கு. அவள் நினைவிலேயே மூழ்கியிருந்தவனுக்கு காலிங்பெல் சத்தம் மெதுவாக தான் உரைத்தது. கதவை திறந்தவனுக்கு அவன் வாழ்வின் பேரதிர்ச்சி காத்திருந்தது வாசலில். ஒரு கையில் பீரும் ஒரு கையில் சிகரெட்டுமாய் அப்படியே அசையாமல் நின்றான்… இப்படியா பார்க்க வேண்டும் அவனை? குட்டி ஷார்ட்ஸோடு நின்றவனை மேலும் கீழும் பார்த்தவர் ஒன்றுமே பேசாமல் திரும்பி நடக்கத்துவங்கினார்.

“அப்பா நில்லுங்க” என்றவன் கையில் இருந்ததை கடாசி விட்டு அவசரமாய் ஒரு லுங்கியை அணிந்து , டிஷர்ட்டை மாற்றிக்கொண்டு பின்னோடு ஓடினான். தெருமுனைவரை சென்று விட்டிருந்தார் அவர்.

“அப்பா சாரிப்பா மன்னிச்சிருங்க“ என்றவன் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வடிந்துக்கொண்டிருந்தது. அவர் கொடுக்க போகும் அடியை ரோட்டிலேயே வாங்கிக்கொள்ள ஆயத்தமானான். அவனையே பார்த்துக்கொண்டு நின்றவர்,

“உங்க அக்காக்கு ஒரு வரன். பாத்து பேச இங்க வந்தேன். நேத்து நீ போன் பேசலன்னு அம்மா பயந்து போய்ட்டா. அதான் பாக்க வந்தேன்”.

“அப்பா விளையாட்டா பண்ணிட்டேன் பா. மன்னிச்சிருங்க”

“உங்கண்ணன் பாம்பேல நல்ல வேலைல நல்லா சம்பாதிக்கான். உங்க அக்காவ டாக்டர் மாப்பிள்ளைக்கு கேட்குறாங்க. படிச்சதால தான் ரெண்டு பேரும் கரையேறி இருக்காங்க. உனக்கு இருவது வயசு ஆச்சு. அங்க இருந்தா வம்பா போய்ருவேன்னு தான் உங்க அம்மா அவ்ளோ அழுதும் , சொந்த ஊர விட்டு, என் சக்திக்கு மீறி பெரிய பணக்கார பசங்க படிக்கிற காலேஜ்ல படிக்க அனுப்பினேன். எங்க தப்பு பண்ணினேன்னு தெரியல பா. அப்பா எந்நேரமும் அடிக்காரு, பேசுதாருன்னு நீ நினைக்கலாம். ஆனா அதெல்லாமே உன் நல்லதுக்குன்னு உனக்கு புரியும் போது நான் இருக்க மாட்டேன் பா. உன் வாழ்கைக்கு எது நல்லது, எது கெட்டதுன்னு நீயே முடிவு பண்ணிக்கோ. அம்மாக்கு ஒரு போன் போட்டு பேசிடு. அப்புறம் இதெல்லாம் அம்மாக்கு தெரிய வேண்டாம். ஏற்கெனவே உன்ன பிரிஞ்சி பாதி ஆளா ஆகிட்டா” என்றவர் திரும்பி பார்க்காமல் நடந்து போனார்.

கண்களில் இருந்து கண்ணீர் பெருகி ஓடியது. துடைக்க தோன்றாமல் நடந்தவற்றை ஜீரணிக்க முடியாமல் அப்படியே நின்றான். இப்படி ஒரு சூழ்நிலை உருவாகுமென்று கனவில் கூட நினைத்தான் இல்லை. ரோட்டில் உருள உருள வெளுக்க போகிறார் என்று நினைத்து வந்தவனுக்கு அவரின் சாந்தமான முகம், பேச்சு எல்லாமே தான் வேறு ஏதோ பழக்கமற்ற உலகத்தில் இருப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தியது. அம்மாவை அழைக்க கையில் காசில்லை என்பதை உணர்ந்து அபார்ட்மெண்டை நோக்கி நடந்தான். ஊர்மிளாவின் மொத்த குடும்பமும் வாசலில் நின்று இவன் பால்கனியை பார்த்துக்கொண்டிருந்தது. ஏதும் பிரச்சனையோ என்று அவனுக்கு பதட்டமாக இருந்தது. பின் தான் கவனித்தான் இன்னும் சிலரும் தெருவில் நின்றிருந்தார்கள். இவனைப் பார்த்ததும் ஊர்மிளாவின் அப்பா அவளை முறைக்க அவள் உள்ளே சென்றாள். அவசரமாய் படியேறியவன் வீட்டு வாசலில் மற்ற வீட்டு ஆட்கள் பக்கெட்டும் கையுமாக நின்றனர். துண்டோடு நின்ற மதன் இவனை முறைத்தான்.

“வாடா நல்லவனே” என்றான்.

நாற்காலியில் அமர வைக்கப்பட்டிருந்த பிரேம் நிமிர்ந்தான். ஓடி வந்து இவன் டிஷர்ட்டை பற்றியவன் ‘வாடா கெரசின ஊத்தி எரிச்சிடு என்னை’ என்றான். ஒன்றும் புரியாமல் நின்ற அஸ்வினுக்கு பின்னர் தான் விளங்கியது அவசரத்தில் சிகரெட்டை ஹால் தரையில் பெட் இட்டு உறங்கி கொண்டிருந்த பிரேமின் பெட்டில் வீசியிருக்கிறான் என்று. புகைந்த படுக்கை கொஞ்சத்தில் தீப்பிடிக்க அறை முழுவதும் புகை மூட்டம். குளித்து விட்டு வந்த மதனுக்கும் ஒன்றும் புரியாமல் புகையில் மயக்கம் வர, கதவு திறந்திருந்த படியால் பக்கத்து வீட்டுக்காரர் ஓடி வந்து நீருற்றி அணைத்து அவர்கள் இருவரையும் வெளியே இழுத்துக் கொண்டு வந்து உட்கார வைத்துள்ளார்.

தலையில் கைவைத்துக்கொண்டு உட்கார்ந்தவன் சட்டென சுதாரித்து எழுந்து “எல்லாத்துக்கும் சேர்த்து மன்னிச்சிடுங்க மச்சான், நான் புது பெட் வாங்கி தந்துடுறேன் டா” என்றான்.

“அடிங்க்க்… உசிர் போயிருந்தா? என்னடா பண்ணிருப்பே” என்றான் பிரேம்

“நானும் செத்திருப்பேன்டா உங்கூடவே” என்று குலுங்கி அழ ஆரம்பித்தவனை என்ன சொல்லி தேற்ற என்று தெரியாமல் இருவரும் சூழ்ந்து கட்டிக்கொண்டனர்.

3.

“என்ன அஸ்வின் ஒன்னுமே சொல்லாம மாட்டேன்றீங்க” என்ற சந்தியாவின் கேள்வியில்..

“ம்ம் என்ன சொன்னே?” என்றான்.

“அதா எள்ளும், புண்ணாக்கும் உடம்புக்கு நல்லதுனு சொன்னேன்” என்று பழிப்பு காட்டினாள் சந்தியா.

“ஹே சாரிடா ஆபிஸ்ல செம வேலை என் சீனியர் ஒரு வாரமா லீவ். பெண்ட் நிமிருது போ. விட்டா அப்படியே உன் மடில படுத்து தூங்கிடுவேன்” என்றான் அஸ்வின்.

அமைதியாக அலைகளை பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தவள் என்ன யோசிக்கிறாள் என்று புரியாமல், ஜீவிதா கல்யாண செய்தியை மூளையை விட்டு அகற்ற முனைந்தான். இன்று முழுவதும் எந்த அழைப்பையும் ஏற்காமல் ஜீவிதாவின் கல்யாணத்தைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தான். சந்தியா அவசரமாய் சந்திக்க வேண்டும் என்று குறுந்தகவல் அனுப்பியதால் கடற்கரைக்கு வந்தான். முன்னிரவு முழுவதும் தூங்காதது கண்கள் சிவந்து ஒரு நோயாளியைப் போலக் காணப்பட்டான்.

“ஆர் யு ஒகே அஸ்வின்” என்று இரண்டாவது முறையாக கேட்டாள் சந்தியா.

“சொல்லுமா“ என்றான்.

“என்னாச்சு உங்களுக்கு? நான் பேசறது எதும் காதுல விழுந்தாப்லயே இல்ல, எங்க வீட்டுக்கு வந்து பேசறீங்களா“ என்றாள் சந்தியா.

“நான் முதல்ல எங்க வீட்ல சொல்லிக்கறேனே சந்தியா”

“என்ன பேசறீங்க நீங்க என்னைக்கு சொல்லி, என்னைக்கு என்னை கல்யாணம் பண்ண? இப்போ பாத்துட்டு போன வரன் ஒகேன்னு சொல்லிட்டாங்க. நானும் தனியா பேச ட்ரை பண்ணினேன். எங்க அப்பா அதுக்கு சான்ஸே குடுக்கல. எங்க வீட்ல எல்லாருக்கும் புடிச்சிருக்கு. கல்யாணம் பண்ணிக்கட்டுமா அப்போ? நீங்க பொறுமையா வீட்ல பேசிட்டு வாங்க” என்று பொரிந்து தள்ளினாள்.

‘ஒரே நேரத்தில் இரண்டு ஏமாற்றாங்களா எனக்கு’ என்ற சுயபச்சாதாபம் மேலோங்க மனசாட்சி அவனை காரித்துப்பியது.. ‘ஜீவிதா மேல் உனக்கு என்ன உரிமையடா இன்னமும் என்று’.

‘ஜீவிதா எப்படி சம்மதித்திருப்பாள்? லவ் இல்லை. அரேஞ்ட் மேரேஜ் என்று கனி கூறியிருந்தான். பள்ளி தோழமைகள் அத்தனை பேரையும் அழைத்திருக்கிறாளாம். அஸ்வின் நம்பர் கேட்டாளாம். வீட்டிற்கு போய் பத்திரிக்கை வைத்திருக்கிறாள். தொலைபேசியில் அம்மா கொஞ்சம் அதிக அக்கறையோடு பேசிய போதே வித்தியாசமாக தோன்றியது. ஜீவிதா தான் காரணம் என்று பின்னர் புரிந்தது. ‘ஜீவிதா உனக்கு என்னிடம் பேச எதுவுமே இல்லையா? ம்ம்ம் நான் தான் நம்பர் கொடுக்க வேண்டாம் என்றேனே எப்படி பேசுவாய். ஒருவேளை அம்மாவிடம் நம்பர் வாங்கி போன் செய்தால் என்ன சொல்வேன். எப்படி சந்தியா பற்றி சொல்லமுடியும். என்ன நினைப்பாள் என்னைப்பற்றி. ச்சே சந்தியாவை பார்த்தே இருக்கக் கூடாது. சந்தியா தானே ப்ரபோஸ் செய்தாள், நானாக விரும்பவில்லையே. இப்படி சொன்னாலும் ஜீவிதா என்னை கேவலமாகத்தான் நினைப்பாள். ஜீவிதா என் காதலை, கல்யாணத்தை உன்னிடம் எப்படி சொல்வேன். சந்தியாவை அறிமுகப்படுத்தியபோது மதனும் பிரேமும் சிரித்த சிரிப்பு இன்னமும் நினைவிருக்கிறது. ‘டேய் மச்சி இட் ஹேப்பன்ஸ் டா‘ என்று மதன் இவனை சரி செய்து சிரிக்க வைத்தான்.

“பை அஸ்வின்” என்று மண்ணை உதறிவிட்டு நடக்கத்துவங்கியிருந்தாள் சந்தியா.

“சந்தியா ஒரு நிமிஷம் நில்லுடா…” என்று ஓடி சென்று அவள் கையை பற்றினான். உதறியவள் “நீங்க உங்க ஆபிஸ் பத்தி யோசிச்சிட்டே இருங்க நான் கிளம்பறேன். அப்புறம் அடுத்த மாசம் நிச்சயதார்த்தம் அவசியம் வந்திடுங்க” என்றாள்.

“சந்தியா ப்ளீஸ்… நாளைக்கு வீட்டுக்கு வரேன்” என்றதை காதில் வாங்காமல் நடந்து போய் கொண்டே இருந்தாள்.

4.

அஸ்வினுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. ‘அது ஜீவிதா தானே. பார்த்து எழு வருடம் இருக்காதா? அப்படியே தான் இருக்கிறாள். இல்லை.. இல்லை இன்னும் அழகாக இருக்கிறாள். சரியாக ஏழு வருடம் ஆறு மாதம் ஆகிறது அவளைப் பார்த்து. கணவனின் கைகளில் தொங்கிய வண்ணம் அவனிடம் ஏதோ வாங்கிதர கேட்டு சினுங்கிக்கொண்டிருந்தாள். அதே சினுக்கம் அவனிடம் பஸ்சில் சினுங்குவாளே அதே சினுக்கம் தான். அடிப்பாவி ஜீவிதா. இத்தனை சுலபமாய் மறந்து விட்டாயா? இப்பொழுது அவள் எதிரே போய் அவள் ரத்தத்தில் எழுதிய கடிதத்தை காண்பித்தால் எப்படி இருக்கும். அதெல்லாம் கூட வேண்டாம் அவள் முன் போய் நின்றால் என்னவென்று கணவனிடம் சொல்வாள். வேண்டாம் அவள் நன்றாக இருக்கட்டும் என்று முன்னேறிப் போகாமல் திரும்பியவன் அங்கிருந்த காபி ஷாப்பில் நுழைந்தான்.

வியர்த்திருந்தது. ஏசியின் குளுமை சட்டென என்னவோ செய்தது. காய்ச்சல் கண்டவனைப் போல குளிரத்துவங்கியது. சந்தியா விடாமல் கால் பண்ணினாள்.

“சொல்லு சந்தியா… வெளில இருந்தேன் அதான் எடுக்கல” என்றவன் அத்தனை மகிழச்சியான செய்தியை கேட்டு என்ன சொல்வதென்று தெரியாமல் ‘ம்ம்ம்ம்’ என்றான்.

“என்ன ம்ம்ம்.. எவ்ளோ ஹேப்பியான நியுஸ் சொல்றேன் இப்படி ப்ளண்டா பேசறீங்களே. பக்கத்துல அப்பா இருக்காரோ” என்றாள்.

அவளே எடுத்துக் கொடுத்ததை பிடித்துக்கொண்டவன் ”ம்ம்ம் ஆமா… இன்னைக்கே பேசிடறேன் இப்ப வைக்கிறேன்” என்று வைத்து விட்டான்.

தண்ணீரைக்குடித்து விட்டு நிமிர்ந்தவன் எதிரே நின்ற ஜீவிதாவைக் கண்டு உறைந்து போனான். தன்னையறியாமல் எழுந்தவன் “ஜீவிதா…” என்றான்.

படு உற்சாகமாக அருகில் வந்தவள் “ஹை அஸ்வின் எப்படிடா இருக்கே?” என்று கைக்கொடுத்தாள். அஸ்வினுக்கு வியர்த்து கொட்டி, கையெல்லாம் ஈரப்பசையோடு இருந்தது. கை குலுக்கியவன் ‘ஜீவிதா எப்பொழுது இவ்வளவு மாறினாய்‘ என்று நினைக்க

“மீட் மை ஹஸ்பண்ட் குணா” என்றவள்,

“குணா மீட் மை ஸ்கூல் மேட் அண்ட் வெரி க்ளோஸ், குட் ப்ரெண்ட் ஆப் மைன் லைக் எ பிரதர் ஃபிக்” என்ற போது முழுவதுமாய் அதிர்ந்து போனான். கால் தரையை விட்டு நழுவுவது போல தோன்ற “ப்ளீஸ் சிட்” என்று சொல்லிவிட்டு சட்டென அமர்ந்தான். அவனால் தன் காதையே நம்பமுடியவில்லை. எத்தனை முறை மதன் கேட்டான் அவள் வாய் திறந்து சொன்னாளா? ஐ லவ் யு சொன்னியா என்று. நான் இத்தனை முட்டாளா? இல்லை, இல்லவே இல்லை ஜீவிதா பொய் சொல்கிறாள். பாவம் என்ன செய்வாள். எந்த பெண் தான் கணவனிடம் என் முன்னாள் காதலன் என்று அறிமுகப்படுத்துவாள். போன் வருகிறது என்று பேச ‘எக்ஸ்கியூஸ்’ என்று விட்டு குணா எழுந்து போனார். இப்பொழுது உடைந்து அழப்போகும் அவளை என்ன சொல்லி தேற்றுவேன் என்று யோசித்தான்.

“ஏண்டா எருமை கல்யாணத்துக்கு வரல, நான் எவ்ளோ எதிர்பார்த்தேன் தெரியுமா?” என்று அவள் வழக்கமான செல்ல சினுங்களில் வினவிய போது விதிர்விதிர்த்து போனான் அஸ்வின்.

‘சத்தியமாய் இது ஜீவிதாவே தானா? ஏய் இங்கே நீயும், நானும் மட்டுமே இருக்கிறோம். தோளில் சாய்ந்து அழ வேண்டாம் ஆனால் ஒரு வார்த்தை அட்லீஸ்ட் ‘வேற வழி தெரில அஸ்வின் / அப்பா போர்ஸ் பண்ணினார் / அம்மா செத்துடுவேன்னு சொன்னாங்க / உன்ன கண்டுபிடிக்க முடில / ஐ மிஸ்ட் யு டா’ இப்படி இதில் ஏதேனும் ஒன்றை சொல்வாள் என்றே நினைத்தான். ஆனால் அவள் படு கேஷூவலாக சிரித்து பேசினாள்.

“என் அப்பாக்கு பயந்து தானே நீ வரல? ஐ நோ… பத்திரிக்கை கொண்டு போனப்போ கூட ஆண்ட்டி பயங்கர ஷாக். உன் நம்பர் கேட்டேன். என் நம்பர வாங்கிட்டு உன்ன கூப்பிட சொல்றேன்னு சொன்னாங்க. இன்பாக்ட் அந்த டைம்ல புது லேண்ட் லைன் நம்பரும் கொடுத்துட்டு வந்தேன். நீதான் போனே பண்ணல”.

என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்த அஸ்வின்,” குணா வர்றார்” ஜீவிதா என்றான்.

திரும்பி பார்த்தவள் “குணா நான் சொல்லல அப்பாக்கு பயந்து தான் அஸ்வின் வந்திருக்க மாட்டான்னு”  என்று சிரித்தாள்.

அஸ்வினுக்கு நடப்பது எதையுமே நம்ப முடியவில்லை. திக்பிரமை பிடித்தவன் போல் அமர்ந்திருந்தான். ஆர்டர் எடுக்க வந்தவனிடம் ‘மூனு கப்பசினோ’ என்று கேட்காமலே ஆர்டர் செய்தாள் ஜீவிதா.

“எப்படி இருக்கீங்க? ஜீவிதா எப்பவும் உங்க எல்லார பத்தியும் சொல்லிட்டே இருப்பா. ஸ்கூல்லயே உங்க செட் தான் பெஸ்ட்னு சொன்னா. உங்களுக்கு கல்யாணம் ஆகிட்டா மிஸ்டர். அஸ்வின்” என்ற குணாவிடம்,

“அஸ்வின்னே கூப்பிடுங்க சார்” என்றவன் “கல்யாணம் பத்தி பேச தான் ஊருக்கு வந்தேன்” என்றான்.

“வாவ் பொண்ணு யாருடா? அழகா இருப்பாளா? லவ் வா? எனக்கு தெரியும் நீ எங்கயாது விழுவேன்னு… உன்ன மாதிரி பையன யாருக்கு தான் பிடிக்காது. எனிவே ஷி ஸ் சோ லக்கி டு ஹேவ் யு” என்றவள் “போட்டோ இருந்தா காமியேன்” என்றாள்.

‘உனக்கு ஏன் ஜீவிதா அப்போ புடிக்கல’ என்று மனதுக்குள் நினைத்தவன் தைரியமாய் அவனும் சந்தியாவும் ஒரு மாலைப்பொழுதில் கடற்கரையில் அணைத்தவாறு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை போனில் இருந்து  காண்பித்தான்.

“ஷி லுக்ஸ் சோ சோ பிரிட்டி. குட் பேர் இல்லங்க” என்று குணாவிடம் காண்பித்தாள்.

+++

வீட்டிற்குள் நுழைகையில் ஏமாற்றமா சந்தோஷமா என்று சொல்லமுடியாத கலவையான மனநிலையில் இருந்தான் அஸ்வின். அவனுக்கு அறைக்குள் சென்று அழ வேண்டும் போல இருந்தது. பாத்ரூமிற்குள் ஷவரோடு சேர்ந்து கரைந்தவன் அம்மாவிடம் அன்று இரவு சந்தியாவை பற்றிக்கூறினான். அம்மாவால் நம்பவேமுடியவில்லை. சந்தோஷப்பட்டாள்.

“எங்க கல்யாணமே பண்ணாம அப்படியே இருந்துடுவியோன்னு பயந்துட்டேன் டா” என்றாள்.

“அம்மா நீ தான் அப்பாட்ட பேசி சம்மதம் வாங்கனும்”.

“அப்பா என்னடா சொல்லப்போறார். அந்த காலத்துலயே என்ன விரும்பிதானே கட்டிக்கிட்டார், நீங்க நல்லபடியா வளரனும்னு கொஞ்சம் கண்டிப்பா இருந்தார். இன்னமும் பயந்துட்டே அவர்கிட்ட பேசக்கூட மாட்டிக்கே.. அவருக்கும் உன் காதல பிரிச்சிட்டோமோன்னு வருத்தம் இருக்குடா. மனசுல வைச்சுக்காதே. நீ அந்த பொண்ண மறந்து சந்தியாவ விரும்பினது எனக்கு தான் டா ரொம்ப சந்தோஷம்” என்றாள்.

அஸ்வினுக்கு தான் நினைத்த எதுவுமே தன் வாழ்க்கையில் நடக்காது என்று தோன்றியது. எல்லாமே எதிர்மறையாக தான் நடக்கிறது. தன் நினைப்பு, யூகம், எண்ணம் எல்லாமே தவறா என்று குழப்பமாக இருந்தது.

அம்மா அவசரமாக உள்ளறையில் இருந்து ஜீவிதாவின் கல்யாண பத்திரிக்கையை கொண்டு வந்து கொடுத்தாள்.

“சாரிடா ஆறுமாசம் ஆச்சு நீ தாங்க மாட்டேன்னு தான் சொல்லல” என்றவளின் கையில் இருந்து பத்திரிக்கையை வாங்கியவன்

“ஓ ஜீவிதாவ நினைச்சு பேசறியா மா…” என்றான்

“ஆமாடா… உன் மனச புரிஞ்சிக்காம உன்ன கஷ்டபடுத்தி வெளிய அனுப்பி, அவ்ளோ அடி உதை, நீ டிப்ரெஸன்ல இருந்தேன்னு மதன் அப்பாட்ட சொன்னப்போ எதாவது பண்ணிப்பியோன்னு எல்லாம் எவ்ளோ பயந்தோம் தெரியுமா? அதப்பத்தி பேசாத நாளே இல்ல. அப்பா எவ்ளோ அழுந்தி அழுந்தி கஷ்டப்பட்டாங்க தெரியுமா? உன்ன பத்தி பேசாத நாள் இல்ல. கவலைப்படாத பொழுது இல்ல. அந்த பொண்ணுகிட்ட கூட என்ன சொல்லன்னே தெரியாம ஆசிர்வாதம் பண்ணி அனுப்பி வைச்சேன் டா.” என்றாள்.

அம்மா அப்பா தன்னால் எத்தனை துன்பப்பட்டிருக்கிறார்கள் என்று நினைத்து கண்ணீர் பெருகியது. கஷ்டப்பட்டு அடக்கி தண்ணீரைக் குடித்தவன்,

“யம்மா, யம்மா… என்னம்மா விட்டா சொல்லிட்டு போய்ட்டே இருக்க. ஒரு படம் எடுக்கற அளவுக்கு சொல்லிட்டேம்மா.. என் மனசுல எல்லாம் ஒன்னும் இல்லம்மா”

“என்னடா சொல்றே?” என்று வியந்த அம்மாவிடம் தன்னறை நோக்கி நகர்ந்துக் கொண்டே கூறினான்

“அம்மா அது ஜஸ்ட் இன்பாக்சுவேஷன் மா… எப்பவோ போய்ட்டு. சந்தியா தான் என்னோட ட்ரூ லவ்”

“நாளைக்கே சென்னை போகலாம் டா. சந்தியா வீட்ல போய் பேசலாம்” என்று அவள் கூற கூற அறையினுள் சென்று கதவை அடைத்தவன் படுக்கையில் விழுந்து பத்திரிக்கையை பார்த்து கதறி அழுதான். அவன் கண்ணீரால் குளித்துக் கொண்டிருந்தாள் ஜீவிதா தன் கல்யாணப் பத்திரிக்கையில்.

000

ராணி கணேஷ்

திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்து பப்புவா நியுகினியாவில் தற்போது வசிப்பவர். பப்புவா நியு கினி தமிழ்சங்கத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர்.

தமிழ் இலக்கியம் மீது தீராத ஆர்வம் கொண்ட இவர் தொடர்ந்து நூல்களை வாசிப்பதிலும் படைப்பு நுட்பங்களை, மொழியின் புதிய வண்ணங்களைக் கற்பதிலும்  உற்சாகமாக ஈடுபடுகிறார். தற்போது கவிதைகள், சிறுகதைகள்,

நாவல் என்று பலவகை முயற்சிகளைத் தொடங்கியிருக்கிறார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *