என்னுடைய சொந்த அனுபவத்தில்  இருந்து கதைகளே எழுத முடியாது -குமாரநந்தன் நேர்காணல்

இரண்டாயிரத்திற்குப் பிறகு எழுத வந்த புதிய தலைமுறை சிறுகதையாளர்களில் கவனிக்கப்பட, அதிகம் பேசப்பட வேண்டியவர்களில் எழுத்தாளர் குமாரநந்தனும் ஒருவர். இதுவரை பதிமூன்று மீன்கள், பூமியெங்கும் பூரணியின் நிழல், நகரப் பாடகன், மகா மாயா ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் பகற்கனவுகளின் நடனம் என்னும் கவிதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளன. இவரின் கதைகள் ஆரவாரமற்றவை. ஆனால் ஆழம் நிரம்பியவை. கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தீவிரமாக தமிழ் இலக்கியப் பரப்பில் செயல்பட்டு வந்தாலும், அவருக்கான அங்கீகாரம் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை. அவரும் அதை பொருட்படுத்தாமல் மிகுந்த ஈடுபாட்டோடு தன் படைப்புச் செயல்பாட்டில் இயங்கி வருகிறார். நடுகல் இணைய இதழுக்காக எடுக்கப்பட்ட நேர்காணல் இது.

இலக்கியத்தின் மீதான ஆர்வம் உங்களுக்கு எப்போது ஏற்பட்டது? வாசிப்பின் தொடக்கத்தில் உங்களைப் பாதித்த எழுத்தாளர்கள் அவர்களின் படைப்புகள் குறித்து முதலில் சொல்லுங்கள்?

எங்கள் குடும்பத்திற்கும் இலக்கியத்திற்கும் சம்பந்தமே இல்லை. என் உறவினர்களிலோ, எங்கள் சுற்றுப்புறத்தில் உள்ளவர்கள் யாருமோ இலக்கியப் பரிச்சயம் அற்றவர்கள். என் அம்மா வார வாரம் குமுதம் வாங்குவார். நான் வெகுகாலம் அதை படித்துக் கொண்டிருந்தேன். அப்புறம் மாதம் ஒருமுறை வரும் ராணிமுத்து, மாலை மதி போன்ற புத்தகங்களின் மீது கவனம் திரும்பியது. பிறகு காமிக்ஸ் புத்தகங்கள் லைப்ரரியில் அம்புலி மாமா, க்ரைம் நாவல் என்றுதான் என் வாசிக்கும் பழக்கம் உருவாகியிருந்தது. குமுதத்தில் வரும் சிறுகதைகளை ஆர்வமுடன் படிப்பேன்.

சிறுகதைகளை அப்படி ஆர்வமுடன் படிக்கும் மனநிலை எங்கிருந்து வந்ததென்றால், என் அம்மாவின் அம்மா ஒரு கதை சொல்லி, அந்த நாளில் இருந்த பாட்டிகள் எல்லோருமே கதை சொல்லிகள் தான். ஊருக்குப் போகும்போதெல்லாம் அவரிடம் கதை சொல்லச் சொல்லி நச்சரிப்போம். அவரிடம் கதை கேட்க வேண்டும் என்பதற்காகவே ஊருக்குப் போவோம். அவர் கதை சொல்லும் விதத்தில் எங்களைப் போன்ற சிறுவர்களை மட்டுமல்ல பெரியவர்களையும் கட்டிப் போட்டுவிடுவார். அக்கம் பக்கத்தில் உள்ள ஆண்கள், பெண்கள் எல்லாம் அப்படி அப்படியே கதை கேட்க உட்கார்ந்துவிடுவார்கள். பாட்டி தன் கதை சொல்லல் வழியாக மற்றவர்களை மட்டுமல்ல தன்னையே கட்டிப் போட்டுக் கொள்வார். கதை சொல்லி முடித்த ஒன்றிரண்டு நாட்களுக்குப் பிறகும் கூட அவர் அந்தக் கதையிலேயே வாழ்ந்து கொண்டிருப்பார்.

இப்படியான நிகழ்வுகள் தான் தற்கால கதைகளை வாசிக்கும் ஆவலை எனக்குள் கொழுந்துவிட்டு எரியச் செய்தது. ஆனால் குமுதத்தில் வாசித்த கதைகள் முழுத் திருப்தியைத் தந்தன என சொல்ல முடியாது. கதையைப் படிக்கத் துவங்கும்போது இருக்கும் ஆர்வம் முடிக்கும் போது ஏமாற்றமாய் மாறி இருக்கும். என்றாலும் அடுத்தடுத்து நான் அந்தக் கதைகளையே தொடர்ந்து படித்து வந்தேன்.

அந்த சமயத்தில் நாங்கள் கிழக்கு வலசு என்னும் கிராமத்தில் சாலையோரமாக உள்ள ஒரு குடிசை வீட்டில் சிறிய டீக்கடை நடத்தி வந்தோம். கடைக்கு எதிரில் சாலைக்கு அந்தப் பக்கம் ஒரு ஜவ்வரிசி ஆலை இருந்தது. அந்த ஆலை அதிபரின் அலுவலகத்திற்கு சோவியத் யூனியன் புத்தகம் வந்து கொண்டிருந்தது. நான் ஒருமுறை அந்த அலுவலகத்திற்குப் போனபோது அந்தப் புத்தகங்களைப் பார்த்து வியப்படைந்தேன். பழைய புத்தகங்களை படிக்கத் தருவீர்களா என அச்சத்துடன் கேட்டு வாங்கி வந்து படிக்கத் துவங்கினேன்.
அதிலிருந்த படங்கள் எழுத்துகள் தாளின் வழுவழுப்பு எல்லாமே என்னை பிரமிப்புக்குள் ஆழ்த்தின. அதில் இருக்கும் எல்லாவற்றையும் படிக்க முயற்சித்தேன். அதில் இடம்பெறும் ஒரு கதையைப் படிப்பதென்பது என் வாழ்நாள் சாதனைகளில் ஒன்று என்பதைப் போல அத்தனை கடினமாக இருந்தது. அப்போது நான் ஐந்தாவதோ ஆறாவதோ படித்துக் கொண்டிருந்தேன். ஒரு வார்த்தை கூட புரியாவிட்டாலும் நான் அத்தனை ஆர்வத்துடன் அதைப் படித்துக் கொண்டே இருந்தேன்.

அந்த சமயத்தில் நாங்கள் மல்லூருக்கு இடம்பெயர்ந்தோம். அங்கே எனக்கு ஆனந்த விகடன் பரிச்சயமானது. அதில் சுஜாதா எழுதும் பத்திகளைப் படிப்பதில் ஆர்வம் கூடியது. அவர் சொல்லும் எழுத்தாளர்களுடைய கதைகள் எங்காவது கிடைக்குமா எனத் தேட ஆரம்பித்தேன். சுஜாதாவை ஆசிரியராகக் கொண்டு குமுதம் ஸ்பெஷல் என்றொரு மாத இதழும் வர ஆரம்பித்தது. அதில் அவர் நிறைய இலக்கிய விஷயங்களைச் செய்தார்.

தோப்பில் முகமது மீரான் அவர்களுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்போடு, அவருடைய சிறுகதை குமுதம் ஸ்பெஷலிலோ அல்லது இந்தியா டுடேவிலோ வந்தது. அந்தக் கதையை வாசித்தபோது, இவரைப் போன்றவர்கள் தான் நாம் தேடிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் என்ற பொறி தட்டியது. குமுதம் ஸ்பெஷலுக்குப் பின் குமுதம் ஜங்ஷன் வந்தது. அதில் ஒரு இதழில் எழுத்தாளர் ஜெயமோகனின் பேட்டி வெளிவந்திருந்தது. அது ஒரு தீபாவளி மலர் அதில் இன்னொரு புத்தகமாக பிரபஞ்சனின் வானம் வசப்படும் நாவலின் சுருக்கப்பட்ட வடிவம் வெளியாகியிருந்தது.

தோப்பில் முகமது மீரானின் நாவல் ஒன்றை புத்தகக் கண்காட்சியில் சொந்தமாக வாங்கியிருந்தேன். இதனிடையே சுஜாதாவின் கட்டுரைகள் வழியாக கேள்விப்பட்டிருந்த கணையாழி, காலச்சுவடு போன்ற இதழ்களை சேலத்தில் விற்கும் கடைகளை நான் கண்டுபிடித்து அவற்றை வாங்கி வாசிக்கவும் ஆரம்பித்துவிட்டேன். இவற்றுக்கான காலம் கிட்டத்தட்ட பத்தாண்டுகள் இருக்கும் என நினைக்கிறேன். கணையாழியெல்லாம் வாசிக்க ஆரம்பித்தபோது, என் கல்லூரி ஆண்டுகள் முடிந்துவிட்டிருந்தன.

நீங்கள் எப்போது எழுதத் துவங்கினீர்கள்?

கதைகளை எழுத வேண்டும் என்ற உந்துதலும், நம்மால் எழுத முடியும் என்ற நம்பிக்கையும் சின்ன வயதிலேயே ஏற்பட்டுவிட்டது.
குமுதம் கதைகளை உதாரணமாகக் கொண்டு, கதைகளை எழுத ஆரம்பித்துவிட்டேன். அவை எங்கும் எதிலும் வெளியாகவில்லை என்றாலும் பள்ளி நாட்களில் கதை கதையாய் எழுதிப் பார்ப்பதும், அவற்றை நண்பர்களுக்கு சொல்வதும் என கதைகளைப் பற்றியே அதிகம் சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஆனால் அந்தக் கதைகள் எல்லாம் எந்த முதிர்ச்சியும் எந்தப் பார்வையும் இல்லாதவை. சரியாக எழுதத் துவங்குமுன்பே, ஒரு எழுத்தாளன் மனநிலைக்கு முதலில் பழகிவிட்டேன்.

பதின் பருவம் முடிந்த காலத்தில் என்னுடைய கதைகள் உஷா, உங்கள் ஜூனியர், தமிழரசி போன்ற இதழ்களில் வெளிவர ஆரம்பித்தன. விகடன் வெள்ளிவிழாவை முன்னிட்டு நடத்திய குறுங்கதைப் போட்டியில் நூறு கதைகள் தேர்வு செய்யப்பட்டு வெளியாகின. அதில் இருபத்தி ஆறோ அல்லது ஏழாவது கதையாகவோ என்னுடைய கதையும் வெளியானது. அப்போது நான் அடைந்த பரவசத்துக்கு அளவே இல்லை. விகடனில் இருந்து வந்த கடிதத்தை எடுத்து எடுத்து பார்த்துக் கொண்டிருந்தேன். கடைக்கு வருபவர்களிடம் எல்லாம் அந்தக் கதையைக் கொடுத்துப் படிக்கச் சொன்னேன். என்னை நானே ஒரு பெரிய எழுத்தாளராக அங்கீகரித்துக் கொண்டேன்.

கணையாழி இதழ் அறிமுகத்துக்குப் பின், கதையில் நம்மைச் சுற்றியுள்ள எதார்த்தத்தை பிரதிபலிக்கும் கதைகளை எழுத வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. கணையாழியில் என்னுடைய முதல் கதை ஆன்மாவின் பயணம் வெளியானது. அதற்கடுத்த ஒன்றிரண்டு மாதங்களிலேயே பதிமூன்று மீன்கள் கதை கணையாழியில் வெளியானது. அது வந்தபின், நான் ஒரு வணிக எழுத்தாளன் இல்லை. வேறு மாதிரியான எழுத்தாளன் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. என்றாலும் பழைய பாதிப்பிலும் தொடர்ந்து கதைகளை எழுதிக் கொண்டிருந்தேன். என்னுடைய முதல் தொகுப்பில் அந்த சாயலில் நிறைய கதைகள் இருக்கும். பின் சட்டென நான் அதிலிருந்து மீண்டுவிட்டேன்.

மல்லூருக்கு அருகில் இருக்கும் சந்தியூரைச் சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர் மற்றும் எழுத்தாளரான கோவிந்தனின் அறிமுகம் மூலம் நிறைய சிற்றிதழ்களைத் தெரிந்து கொண்டேன். சுந்தர சுகன், கல்வெட்டு பேசுகிறது போன்ற இதழ்களுக்கு கதைகளை அனுப்பத் துவங்கினேன். கோவிந்தனோடு சேர்ந்து, சேலத்தில் நடக்கும் இலக்கிய நிகழ்வுகளுக்கு போக ஆரம்பித்தேன். இது எழுத வேண்டும் என்ற முயற்சித்த காலத்திலேயே நடந்துவிட்டது. ஹைக்கூ கவிஞனாகவும் கொஞ்சநாள் உலவிக் கொண்டிருந்தேன். என்னுடைய கல்லூரி ஆண்டு மலரில் என்னுடைய கவிதைகள் சில பிரசுரமாகின. அந்தப் பருவத்துக்கே அந்த சிந்தனைக்கே உண்டான கவிதைகள் அவை.

தீவிரமாக வாசிக்கத் தொடங்கிய காலகட்டத்தில் உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள் யார்?இப்போது உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள் யார்?

வாசிக்கத் துவங்கிய காலத்தில் என்றால் தோப்பில் முகம்மது மீரான் தான் பசுமையாக நினைவில் இருக்கிறார். நூலகத்தில் இருந்து, கு. அழகிரிசாமி, கு.பா.ரா., தி.ஜா., சி.சு.செல்லப்பா,வா.ரா., என கல்கி, தேவன் என கேள்விப்பட்ட எழுத்தாளர்களின் கதைகளை எல்லாம் எடுத்துப் படிக்கத் துவங்கினேன்.

புதுமைப்பித்தன், ஜி. நாகராஜன், சுந்தரராமசாமி, அசோகமித்திரன் போன்ற எழுத்தாளர்களை குறிப்பிடுவது ஒரு சடங்காக இப்போது மாறிவிட்டது. அவர்கள் எனக்கும் பிடித்தமானவர்கள் தான். ஆனாலும் அவர்களை விட்டுவிடுவோம்.

அதற்கடுத்த நிலையில் ஜே.பி. சாணக்யா, பெருமாள் முருகன், தேவிபாரதி, என் ஸ்ரீ ராம். ஷோபா சக்தி, யுவன் சந்திர சேகர் ஆகியோருடைய சிறுகதைகளை எதிர்பார்ப்புடன் வாசிக்கிறேன்.
பா வெங்கடேசன், பாலசுப்ரமணியன் பொன்ராஜ், எஸ். செந்தில் குமார் ஆகியோருடைய விவரிப்பு முறைகளில் உள்ள வசீகரம் பிடிக்கும். அஜயன் பாலா, ஜி. முருகன் ஆகியோர் சமீபமாக சிறுகதைகள் எழுதவில்லை என்பது சிறுகதை உலகிற்கு ஒரு வகையில் இழப்புதான் அவர்களுடைய எழுத்துகளும் பிடிக்கும்.

தமிழ் கதைகளைப் போலவே அல்லது அதைவிடவும் மொழிபெயர்ப்பு கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த வகையில் இடாலோ கால்வினோ, போர்ஹே, மார்க்வஸ் போன்றவர்களுடைய கதைகளை சமகால எழுத்தாளர்கள் யாரும் இன்னும் மிஞ்சவில்லை என நினைக்கிறேன். மொழிபெயர்ப்பில் நான் முதலில் படிக்க ஆரம்பித்தது ரஷ்ய எழுத்தாளர்களைத்தான் டால்ஸ்டாய், தாஸ்தாயேவ்ஸ்கி, துர்கனேவ், மாக்சிம் கார்க்கி போன்றவர்களையெல்லாம் திரும்ப திரும்ப வாசித்ததில் நான் என்னை பூர்வகுடி ரஷ்யனாக கூட சில சமயம் கற்பனை செய்து கொண்டிருக்கிறேன்.

உங்களுடைய கல்வித் தகுதி குறித்துத் தெரிந்துக் கொள்ளலாமா?

படிப்பில் எனக்கு நல்ல ஆர்வம் இருந்தது. ஆனால் அந்த கால கட்டத்தில் படிப்பின் மீதெல்லாம் யாருக்கும் எந்த நம்பிக்கையும் இல்லை. அல்லது என்னைச் சுற்றி இருந்தவர்கள் அப்படியான நம்பிக்கையில் இல்லை. பொதுப்புத்தியில் இருந்த, வரும் காலத்தில் வேலையின்மை பெறும் அச்சுறுத்தலாக சவாலாக இருக்கும் என்பது போன்ற மனநிலைகள் என்னைப் பாதித்தன. இப்போது யோசித்துப் பார்த்தால் அப்படியெல்லாம் எதுவும் இல்லை. நன்றாகப் படித்திருந்தால் நல்ல பணியில் சேர்ந்திருக்க முடியும். அதைச் சுட்டிக்காட்டும்படியான நபர்கள் என்னுடைய உலகில் இல்லாமல் போனதுதான் என் துரதிருஷ்டம். படிப்புக்கு ஏற்ற மனநிலை உருவாகி வராததால் கடையில் வேலை செய்து கொண்டே சுமாராகத்தான் படித்தேன்.

நாமக்கல் அரசு கல்லூரியில், பி எஸ்சி தாவரவியல் சேர்ந்தேன். இரண்டு ஆண்டுகள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. மூன்றாம் ஆண்டில் படிப்பின் மீது கொஞ்சம் கவனமும், சிரத்தையும் உண்டானது. ஆனால் வீட்டில் அம்மா எப்போதும் பேசும் கடும் சொற்களை என்னால் சகிக்க முடியவில்லை. மூன்றாம் ஆண்டின் பாதியில், மதிப்பெண் சான்றுகளை தீ வைத்துக் கொளுத்திவிட்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டேன். ஆறு மாதங்களாக சென்னையில் சுற்றிக் கொண்டிருந்தேன். ஓட்டல் கடைகளில் வேலை செய்தேன். அதற்கு முன்பே பிளஸ் டூ முடித்த கையோடு என்று நினைக்கிறேன். நான் வீட்டை விட்டு வெளியேறி பத்து நாட்கள் போல கழித்து வீட்டுக்கு வந்தேன்.

தினம் பத்து ரூபாய் பஸ்சுக்கு கொடுப்பதையே சொல்லிச் சொல்லி குத்திக் காட்டி என்னைப் படித்து முடிக்க முடியாமல் கை விடும் நிலைக்கு தள்ளியவர்கள் நான் திரும்பி வந்ததும் பத்தாயிரம் ரூபாய் பணம் கட்டி, என்னை மெரைன் ரேடியோ ஆபிசர் கோர்ஸில் சேர்த்து விடுவதாக சொன்னார்கள். திருச்சியில் ஒரு இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்தேன். வாழ்க்கை படிப்பு பற்றிய கனவுகள் மீண்டும் உயிர்பிடித்தன. ஆனால், அடிப்படையில் போதிய ஆங்கில அறிவு இல்லாத நிலையில் என்னால் அந்த கோர்ஸில் எந்த பட்டயமும் வாங்க முடியாது என்பதை ஒரு சில தேர்வுகளுக்குப் பிறகே கண்டு கொண்டேன். கனவுகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு, டீக்கடையைப் பார்த்துக் கொள்ளத் துவங்கினேன்.

ஆனால் ஒரு டிகிரி முடித்திருந்தால் எதாவது ஒரு அரசு தேர்வு எழுதி ஏதோ ஒரு வேலையில் சேர்ந்துவிடலாமே என்ற நப்பாசையில் தபால் மூலம் பிஏ தமிழ் படித்து முடித்தேன். ஆங்கிலம், தமிழ் டைப்பிங் கற்றுக் கொண்டேன். அரசு தேர்வுகளை எழுதினேன். ஒரு சில ஆண்டுகளில் அதிலும் நம்பிக்கை இழந்துவிட்டேன். திருமணத்திற்கு முன்பு இருபத்தொன்பதாவது வயதில் பள்ளிக் கூடங்களில் வெளி நபர்களுக்கு கம்ப்யூட்டர் கற்றுத் தரும் NIITயின் கோர்ஸ்சில் சேர்ந்தேன். வீட்டில் அதற்கும் கடுமையான எதிர்ப்பு. அதற்கான கட்டணத்தைக் கூட அவர்கள் தரவில்லை. வெளியே கடன் வாங்கித்தான் கட்டினேன். இப்போது கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட வேலைக்கு எங்காவது போகலாம் என்றால் நான் படித்த டிப்ளமோ கோர்ஸ்சுக்கு மிகக் குறைந்த சம்பளத்தில் தான் வேலை கிடைக்கும். என்றாலும் அப்படி ஒரு வேலை செய்து கொண்டே என் வாழ்க்கையை பார்த்துக் கொள்கிறேன் என்ற என் குரல் வீட்டில் எடுபடவில்லை. அதற்கேற்றபடி, நான் சேர்ந்த பிபிஓ நிறுவன இரவு ஷிப்ட் வேலையும் என்னை அந்த எண்ணத்தைக் கைவிடும்படி செய்தது. திருமணத்திற்கு பிறகு, எம்ஏ முடித்தால் பேராசிரியர் தேர்வு எழுதி பேராசிரியராகி விடலாம் என மீண்டும் எம் ஏ தமிழ் சேர்ந்து அதையும் முடித்தேன். அதை முடித்த கையோடு படிப்பு, வேலை எல்லாவற்றின் மீதும் சலிப்பு வந்துவிட்டது. இப்படி தான் நான் என்னென்னவோ படித்தேன்.

உங்கள் முதல் சிறுகதைத் தொகுப்பான “பதிமூன்று மீன்கள்” எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களின் அணித்துரையோடு வெளிவந்தது. புதிதாக எழுதவருகிறவர்கள் செய்வதைப் போல உங்கள் சொந்த பணத்தில் புத்தகம் வெளியிட்டிருந்தீர்கள். அந்த அனுபவத்தைப் பகிர்ந்துக் கொள்ளுங்கள்?

பதிமூன்று மீன்கள் சிறுகதைத் தொகுப்பை 2004ல் கொண்டு வந்தேன். அதில் இடம்பெற்ற கதைகளில் சில மட்டும் தஞ்சையில் இருந்து வெளிவரும் சுந்தர சுகன் இதழில் வெளிவந்தது. இரண்டு கதைகள் கணையாழியில் வந்திருந்தன. பதிப்பகத்தை அணுகி புத்தகம் போடுவது பற்றிய அறிவோ நம்பிக்கையோ இல்லாத நிலையில் நானே தொகுப்பை போடுவது என முடிவு செய்தேன். அப்போது எனக்கு வயது 31. இப்போது அந்தக் கதைகளைப் பார்க்கும்போது, அந்த வயதிற்குரிய பக்குவத்தை எட்டாமல் அக்கதைகள் இருப்பதைப் போலத் தோன்றுகிறது.

அக்கதைகள் வெளியான சமயத்தில் குழந்தைத்தனமான நம்பிக்கைகள், அகங்காரங்கள், ஆசைகள், எதிர்பார்ப்புகள் என இருந்திருக்கிறேன். அப்போது கடை நிர்வாகம் அம்மாவின் கையில் இருந்தபோதும், அம்மாவின் கடுமையான எதிர்ப்பையும் மீறி பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கி அந்தத் தொகுப்பைப் போட்டேன்.
புத்தகம் வந்த சூட்டோடு, கொஞ்சம் பிரதிகளை எடுத்துக் கொண்டு சென்னைப் புத்தகங் கண்காட்சிக்குப் போய்விட்டேன். ஒவ்வொரு கடையாய் ஏறி என்னுடைய புத்தகங்கள் சிலவற்றை வைக்க அனுபதிப்பீர்களா எனக் கேட்டுக் கொண்டிருந்தேன். சேலத்தை சேர்ந்த நண்பர் பூங்காற்று தனசேகர் ஒரு கடையில் இருந்தார். அவர் மட்டும் சில பிரதிகளை பார்வைக்கு வைக்க அனுமதித்தார். அதில் ஒரு பிரதியை வாங்கிய பாவண்ணன். காலச்சுவடில் வெளியான இளம் எழுத்தாளர் அறிமுகம் பகுதியில் அந்தப் புத்தகத்தைப் பற்றியும் என்னைப் பற்றியும் ஒரு சிறு அறிமுகம் செய்தார்.

புத்தகத்திற்கு அணிந்துரை யாரிடம் கேட்பது என யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது சேலத்தில் அடிக்கடி நடக்கும் கூட்டங்கள் மூலமாக பெருமாள் முருகன் அறிமுகமாகியிருந்தார். பெரும் தயக்கத்தோடு தான் அவரை அனுகினேன். அந்தப் புத்தகத்துக்கு அவர் அணிந்துரை தராமல் மறுத்திருக்கலாம். அவர் இடத்தில் நான் இருந்திருந்தால் அப்படித்தான் செய்திருப்பேன் என நினைக்கிறேன். ஆனால், அவர் உள்ளன்போடு அதற்கு ஒத்துக் கொண்டு, எழுதித்தந்தார்.

பதிமூன்று மீன்கள் தொகுப்பு வெளியான காலக்கட்டத்தில் காலச்சுவடு நிறுவத்தில் சில காலம் பணி செய்தீர்கள். அது என்ன மாதிரியான பணி. உங்கள் படைப்பாக்கத்திற்கு பயனுள்ளதாக இப்பணி அமைந்திருந்ததா?

2006ல் வீட்டில் நிலவிய கொந்தளிப்பான நிலையில் நான் வெளியே எங்காவது வேலைக்கு செல்லலாம் என நினைத்தேன். அந்த வேலை இலக்கியத்தோடு சம்பந்தப்பட்டதாய் இருந்தால் நன்றாய் இருக்குமே என நண்பர்களிடம் ஆலோசனை கேட்டுக் கொண்டிருந்தேன். உயிர்மையில் பணிக்கு ஆட்கள் தேடிக் கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டு, அஜயன் பாலாவை சந்தித்து, உயிர்மை அலுவலகம் வரை போய்விட்டு என்ன காரணத்தாலோ திரும்பி வந்துவிட்டேன். அல்லது அங்கே அப்போது யாரையும் வேலைக்கு எடுக்கும் திட்டம் இல்லை என நினைக்கிறேன்.

பெருமாள் முருகனிடம் என் நிலைமையை சொல்லி உதவுமாறு கேட்டபோது, காலச்சுவடு அலுவலகத்தில் சுந்தர ராமசாமியின் புத்தகங்களை ஒழுங்கு செய்து நூலகமாக மாற்றும் திட்டத்தை துவங்க இருக்கிறார்கள். நீங்கள் அங்கே வேண்டுமானால் போய் கொஞ்ச நாளைக்கு வேலை செய்து கொண்டிருங்கள் என்றார். சரி என நாகர்கோவில் போய் கண்ணனை சந்தித்தேன். நான் வெளியிட்டிருந்த புத்தகத்தை கொண்டுவந்திருக்கிறீர்களா? எனக் கேட்டு வாங்கிப் பார்த்தார். என்னை அங்கே வேலைக்கு சேர்த்துக் கொண்டார்.

அதற்கு முந்தைய ஆண்டுதான் சுந்தர ராமசாமி மறைந்துவிட்டிருந்தார். அவர் இருக்கும்போதே இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதே என ஏக்கமாய் இருந்தது. குமுதம் தீராநதி இதழை துவக்கிய போது, அதில் அவர் வாசகர்கள் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போதுதான் அவருடைய ஆளுமையை பற்றிய சித்திரம் எனக்குள் வளரத் துவங்கியது.

சேலத்தில் ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளுக்கு அவர் வந்திருக்கிறார் என்றாலும், நான் அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை என்பதால் அவரை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு ஏற்படாமலேயே போய்விட்டது. அவருடைய பிரமாண்டமான புத்தக சேகரிப்பை பார்த்தபோது, அவரை நேரே சந்தித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. யாருமற்ற அந்த இடத்தில் நானும் அவரும் இயல்பாய் பேசிக் கொண்டிருப்பதைப் போன்ற தீவிர உணர்வுகள் ஏற்பட்டு பயந்து போயிருக்கிறேன். தொலைவு மற்றும் பொருளாதார பற்றாக்குறை காரணமாக என்னால் அங்கே தொடர்ந்து நீடிக்க முடியவில்லை. ஆறேழு மாதங்கள் போல நீடித்த அந்த ஒழுங்கு படுத்தும் வேலை முடிந்து சுந்தர ராமசாமி நூலகம் திறப்பு விழாவுக்குப் பின் நான் ஊருக்கே திரும்பிவிட்டேன்.

அங்கே பல ஆளுமைகளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. தோப்பில் முகமது மீரான், குளச்சல் யூசுப், ராஜ மார்த்தாண்டன், அ.கா. பெருமாள், மொழிபெயர்ப்பாளர் எம்.எஸ் போன்றோரின் அறிமுகம் கிடைத்தது. எம்.எஸ். அவர்களின் வீட்டில் தான் தங்கியிருந்தேன். அங்கிருந்து பக்கத்தில் இருந்த ஜெயமோகன் வீட்டுக்குப் போய் ஒருமுறை அவரை சந்தித்தேன். அப்போது சரியாக பேசமுடியவில்லை என்பதால், எம்.எஸ்., சாரை கூட்டிப்போகும்படி தொல்லை செய்து அவரோடு ஒருமுறை ஜெயமோகன் வீட்டுக்குப் போனேன்.
நான் அங்கே இருந்தபோது, மீண்டும் காகங்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கேதான் நான் ஜே.பி. சாணக்யாவை சந்தித்தேன்.

இரண்டாம் தொகுப்பான “பூமியெங்கும் பூரணியின் நிழல்” பதினைந்து சிறுகதைகளோடு வெளிவந்துள்ள தொகுப்பு. இதில் உங்கள் அனுபவப் பரப்பிற்கு அப்பால் வெவ்வேறு விதமான கதைக்களங்களைத் தேர்வு செய்து எழுதியிருக்கிறீர்கள். ஆனால் நம் தமிழ் சூழலில் புதிதாக எழுத வரும் இளம் எழுத்தாளர்கள் தங்கள் அனுபவத்திலிருந்து எழுதும் போது தான் உயிரோட்டமான படைப்பைத் தர முடியும் என்ற நம்பிக்கை நிழவுகிறதே. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

என்னுடைய வாழ்க்கை முறையை ஓரளவு அருகில் இருந்து பார்ப்பவர் என்பதால்,இந்தக் கேள்வியை கேட்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.
உலகின் பரந்த பரப்பிற்குள் விதவிதமான மனிதர்களோடு பழகும் வாய்ப்பில்லாத இந்த நிலை எனக்கு எப்போதும் சோர்வளிப்பதாகவே இருக்கிறது. தினமும் ஒரே மாதிரியாக செல்லும் என்னுடைய வாழ்க்கை முறை ஒருவாரத்தில் அல்லது ஒரு மாதத்தில் வாழ்ந்து முடித்துவிடக் கூடியதாகத்தான் இருக்கிறது. அதையே தான் காலம் பூராவும் திரும்பத் திரும்ப வாழ்கிறேனோ என பெரும் சலிப்பாய் இருக்கிறது.

இந்த நிலையில் என்னுடைய சொந்த அனுபவத்தில் இருந்து கதைகளே எழுத முடியாது என்பதே என் நம்பிக்கை. ஆனால் அதற்காக நான் எழுதுவதெல்லாம் முழு கற்பனை என்று சொல்லிவிட முடியாது. அவை எனக்கோ நான் பார்த்தோ நடக்காமல் இருக்கலாம். ஆனால் அவையெல்லாம் உண்மைக் கதைகளே. இந்த உலகத்தை நான் ஓரளவு புரிந்து வைத்திருக்கிறேன். அதனால் பலவித நிஜங்களை என்னால் கற்பனை செய்ய முடிகிறது.

அதே சமயம் நீங்கள் சமீபத்தில் வெளிவந்த மகாமாயா தொகுப்பின் கதைகளை அப்படி சொல்லிவிட முடியாது. அவற்றில் சில கதைகள் நீங்கள் சொல்பவை போல இருந்தாலும் பெரும்பாலானவை என் வாழ்க்கையில் இருந்து எடுக்கப்பட்டவை. பொதுவாக, கதைகளை சொந்த அனுபவத்தில் இருந்துதான் எழுத வேண்டும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

“பூமியெங்கும் பூரணியின் நிழல்” தொகுப்பின் பெரும்பாலான கதைகளை, குறிப்பாக “மெய்பிம்பம் மாயபிம்பம்”, “மழையை இயக்குபவன்”, “திரும்புதல்” முதலான அதிகம் கவனம் பெற்ற கதைகளை வாசிக்கும் போது உங்கள் கதை உலகம் என்பது அகவயமானதாகத் தோன்றுகின்றது. கதைமாந்தர்களின் நடத்தைகள் புதிரும், கொந்தளிப்பும் மிக்கதாக இருக்கிறது. மனித மனதின் உளவியலை ஆராய்வது தான் உங்கள் படைப்பின் மையம் என்று வரையறுத்துக் கொள்ளலாமா?

மனித மனங்களின் உளவியலை ஆராய்வது என்ற வரையறை அந்தத் தொகுப்பைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட சரிதான். ஆனால் நான் அதை மட்டுமே நோக்கமாக கொண்டிருக்கவில்லை. என்னுடைய அடுத்த தொகுப்பின் கதைகளில் சில நகர்வுகளை உங்களால் அனுமானிக்க முடியும் என்று நினைக்கிறேன்.

ஆனாலும் மனித உளவியல் என்பது எல்லையற்ற வெளி. அவற்றைக் கண்டுபிடிப்பதன் மூலம் புதுப்புதுக் கதைகளை சொல்ல முடியும் என்பது என் நம்பிக்கை.

முதல் தொகுப்பில் பாலமுருகன் என்ற உங்கள் சொந்த பெயரிலேயே எழுதினீர்கள். அதற்கு பிறகு குமாரநந்தன் என்ற புனைபெயரில் எழுத தொடங்கிவிட்டீர்கள். இந்த பெயர் மாற்றத்திற்கான காரணம் என்ன?

புனைப்பெயரில் எழுதவேண்டும் என திட்டமெல்லாம் இடவில்லை. எழுதுபவர்களில் நான்கைந்து பாலமுருகன்கள் இருந்தார்கள். இருந்தாலும் குழப்பம் வராது என நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் குழுப்பங்கள் வரத் துவங்கிவிட்டது. காலச்சுவடில் வெளியான என் முதல் கதையே ச. பாலமுருகன் பெயரில் வெளிவந்துவிட்டது. இனி குழப்பத்துக்கு இடமளிக்க வேண்டாமே என புனைப்பெயர் வைத்துக் கொள்ளத் தீர்மானித்தேன். எந்தப் பெயரைத் தேர்வு செய்தாலும் அதைப் பயன்படுத்த ஒரு தயக்கம் ஏற்படுவதையும் அதைத் தவிர்த்துவிட்டு வேறு பெயரை சிந்திக்கத் துவங்கிவிடும் என் மன ஓட்டத்தை சீக்கிரமே புரிந்து கொண்டு, குமாரநந்தன் என்ற பெயரைத் தேர்வு செய்துவிட்டேன்.

இந்தப் பெயரில் என்னுடைய முதல் கதை புதிய கோடாங்கி இதழில் வந்தது.

இதே காலகட்டத்தில் சில ஆண்டுகள் காலைக்கதிர் நாளிதழில் வேலை பார்த்தீர்கள். வெகுசன நாளிதழின் இயங்கு தளத்தில் நவீன இலக்கிய படைப்பாளியான உங்களால் பொருந்திப் போக முடிந்ததா? அங்கு உங்களுக்கு என்ன மாதிரியான அனுபவம் கிட்டியது?

எழுதுபர்கள் எழுத்து சம்பந்தப்பட்ட துறை என பத்திரிகைத் துறையை நம்பிவிடக் கூடாது. ஆனால், பெரும்பாலும் அப்படி நம்பிவிடுவது இயற்கையாகிவிடுகிறது. இதனால் அவர்கள் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் போல ஆகிவிடுகிறார்கள். நானும் அப்படி எதிர்பார்த்து ஒரு தாக்குதலுக்கு உள்ளாவனைப் போலவே அங்கு உணர்ந்தேன். படைப்பை செம்மை செய்வதில் பெரும் ஆற்றல் கிடைப்பது அங்கு நமக்கு கிடைக்கும் அறிய வரம். அதற்காக வேண்டுமானால் அந்த கொடூர தாக்குதலுக்கு உள்ளாகலாம்.

உங்கள் மூன்றாவது தொகுப்பு “நகரப் பாடகன்”. இதில் கனவுகளும் அதன் பலன்களும், மறந்து போன நாளை தேடி, சக்தி அழைப்பு, நிழல் படர்ந்த வீடு முதலான கதைகளில் “கனவு” முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது. உங்கள் கதைமந்தர்கள் அந்த கனவுகளை நம்பி மிகுந்த துன்பத்திற்கு ஆளாகிறார்கள். கனவுகள் குறித்து உங்களுக்கு இருக்கும் நம்பிக்கை என்ன? கனவுகளை உங்கள் கதைச்சொல்லல் முறைக்கான ஓர் யுக்தியாக பார்க்கிறீர்களா?

கனவு என்பது நம் ஒவ்வொருவருக்குமே வசீகரமானது. அதில் நம் சிந்தனைப் போக்குக்கு ஏற்றது போன்ற கனவுகளை மட்டும் கான மாட்டோம். நமக்கு உவப்பில்லாத பிடிக்காத விஷயங்களைச் செய்வது போல அல்லது நமக்கு நடப்பது போல கனவு காண்போம். அப்படியான கனவுகள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன என்பதை நான் பலமுறை கவனித்திருக்கிறேன்.

ஒருவர் நேற்று நான் ஒரு கனவு கண்டேன் என சொல்ல ஆரம்பிக்கும்போதே அவர் அதனால் எந்த அளவுக்கு கேள்விகளுக்கு உள்ளாகியிருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளலாம். நம் வாழ்க்கையில் நமக்கு வரும் கனவுகளுக்கும் ஒரு பாத்திரம் இருக்கிறது. மேலும் கனவுகள் நமக்கே புரியாத நம் இயல்புகளை நம் அச்சங்களைப் பிரதிபலிக்கக் கூடியது எனவே, நான் சில கனவுகளை கதையில் விவரிப்பதன் மூலம் அந்தக் கதையின் தர்க்கத்தை மீறிய ஒரு புரிதலுக்கு வாசகனை கொண்டு செல்ல முயற்சிக்கிறேன்.

மகா மாயா தொகுப்பில் 22 கதைகள் உள்ளன. ஒரு தொகுப்பில் இவ்வளவு கதைகள் வேண்டுமா?

அவை எல்லாமே ஏதோ ஒன்றைப் பற்றி வாசகர்களுடன் உரையாடும் தன்மையோடு இருப்பவை தானே? அப்படி இருக்கும்போது எண்ணிக்கையைப் பற்றி ஏன் கவலைப் பட வேண்டும்.
ஒரே தொகுப்பில் 22 கதைகள் வாசகர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கும் என்றே நான் நம்பியதால் அதை ஒரு மைனஸாக நான் நினைக்கவில்லை.

மற்ற தொகுப்புகளைக் காட்டிலும் மகா மாயா தொகுப்பில் பத்து கதைகளுக்கு மேல் விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை எழுதியிருக்கிறீர்கள். இந்த எழுத்துப் பயணத்தில் உங்களுக்கான கதையுலத்தை தீர்க்கமாக கண்டுபிடித்து விட்டீர்கள் என இதை புரிந்துக் கொள்ளலாமா?

விளிம்பு நிலை மக்களின் மத்தியில் தான் நான் வாழ்கிறேன். எச்சில் கிளாஸ் கழுவறவனோட பையன் என்கிற பிரயோகம் அல்லது எச்சில் கிளாஸ் கழுவறவன் என்கிற மதிப்பீடு என்னை மிகத் தாழ்மையாக உணர வைத்திருக்கிறது. எனவே, எதன் காரணமாகவும் ஒரு மனிதனை தாழ்வானவனாக என்னால் கருத முடியாது. அவன் அறிவுக் கூர்மையில் கொஞ்சம் குறைந்தவனாக இருந்தாலும் மனிதன் என்கிற மதிப்பில் இருந்து அவன் குறைந்து போக மாட்டான். எனவே அத்தகைய மக்களின் வாழ்க்கையை உணர்வுகளை நான் கவனித்துக் கொண்டே இருக்கிறேன்.

என்னுடைய கதைகளில் விளிம்பு நிலை மக்கள் அவர்களின் வாழ்க்கை என்பது அதிகம் இருந்தாலும் அவற்றினூடாக மானுட மனங்கள் இயங்கும் விந்தைகளை அல்லது அபத்தங்களை சொல்ல முயற்சிக்கிறேன்.

உதாரணமாக, மழையை இயக்குபவன் கதையில் அவர்கள் ஒரு சக மனிதனின் உளறல் காரணமாகத்தான் மழை அதிகரிப்பதும் குறைவதும் நடக்கிறது என்பதை நம்புவதற்கு பெரிதாக ஒன்றும் நடந்துவிடவில்லை.

மகா மாயா தொகுப்பில் உள்ள “ஈர்ப்பு விசை விலக்கு விசை” என்னளவில் சிறந்த கதையாக உணர்கிறேன். இதேபோல மற்ற மூன்று தொகுப்புகளில் இடம் பெற்ற “மெய் பிம்பம் மாய பிம்பம்” “கனவுகளும் அதன் பலங்களும்”, “வெளிறிய அந்தி மாலை” முதலான கதைகளில் காமம் சார்ந்த ஆண் பெண் சிக்கலை சிறப்பாக கையாண்டிருப்பீர்கள். குறிப்பாக பெண்களின் தரப்பு பிரதானமாக விவரிக்கப்பட்டிருக்கும். அதிகம் பாதிக்கப்பட்ட தரப்பின் குரலைப் பதிவு செய்ய நினைக்கிறீர்களா?

பெண்களின் மீதான ஒடுக்குமுறை, வன்முறைகள் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு வாழ வேண்டும் என்கிற நிர்ப்பந்தம் எனக்கு தொந்தரவாக இருக்கிறது. பல பெண்களுடன் தொடர்பு கொண்டிருக்கும் ஒரு ஆண் கூட ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்களுடன் உறவில் இருக்கும் பெண்ணை மதிப்புடன் குறிப்பிடுவதில்லை.
பெண்களின் மீதான மதிப்பீடுகளில் பார்வைகளில் நாம் இன்னமும் மாற வேண்டியது எவ்வளவோ இருக்கிறது என்றே நினைக்கிறேன். அதனால் தான் என்னுடைய கதைகளில் பெண்களின் நிலை அவர்களின் சிந்தனைகளை முடிந்தவரை விரிவாக கையாள்கிறேன்.

மனப்பிரழ்வு கொண்ட மனிதர்களை மையமாக கொண்ட ” மலையை இயக்குபவன்”, “நோய்”, ” பைத்தியக்காரனின் வீடு” முதலான கதைகளில் அவர்களின் உலகத்தை நெருக்கமாக பதிவு செய்திருப்பீர்கள். அதை குறித்து….

இக்கதைகளோடு அர்த்தமற்ற மூன்று சம்பவங்கள் கதையையும் சேர்த்துக் கொள்ளலாம் நாங்கள் கடைவீதியில் இருப்பதால் அத்தகைய மனதர்களை நான் அதிகம் சந்திக்கிறேன். இவ்வளவு சக்தி வாய்ந்த மனம் எப்படி பிறழ்வடைகிறது என்ற கேள்வி என்னைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறது. மனப் பிறழ்வு என்பது உண்மையில் என்ன என்பதை நான் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். அவை என்னுடைய கதைகளில் பிரிதிபலிக்கின்றன.

“புத்தரின் ராஜா வேடம்”( இது தான் நீங்கள் குமாரநந்தன் என்ற பெயரில் எழுதிய முதல் கதை), சூன்ய நநி, மகான்கள் முதலான கதைகள் ஆன்மீகமும் தத்துவமும் சார்ந்த பின்னனியில் எழுதப்பட்டவை. ஆன்மீகம், தத்துவங்கள் சார்ந்த உங்கள் புரிதல்களை பகிர்ந்துக் கொள்ள முடியுமா?

அறிவியல் சார்ந்த அறிவு தான் நம்முடைய அறிவு என்ற திசை நோக்கி நம்முடைய நகர்வு இருக்கிறது. ஆனால் அப்படி எல்லாவற்றையும் அறிவியல் என்கிற தளத்துக்குள்ளாக அடைக்க முடியாது.

எல்லா கேள்விகளுமே முதலில் அறிவுக்கு அப்பாற்பட்ட தளத்தில்தான் இருந்தன. பிறகு அவை விடை கண்டுபிடிக்கப்பட்டு, அறிவுக்குட்பட்டவையாக ஆன பின், அந்த இடத்தில் இருந்து நகர்ந்துவிட்டன. அதுபோல இப்போது அறிவியலுக்கு அப்பாற்பட்டவையாக இருக்கும் கேள்விகளும் பிற்காலத்தில் அறிவியலால் கண்டுபிடிக்கப்பட்டுவிடும் என, அறிவியலாலர்கள் இதற்கு பதில் சொல்வார்கள்.

ஆனால் அறிவியலால் வரையறுத்துவிட முடியாத எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. உதாரணமாக முன்பெல்லாம் இங்கே அர்ச்சுனன் தபசு என்கிற கூத்து நடத்துவார்கள். அதில் அர்ச்சுனனாக வேடம் புனைந்திருப்பவர் தபசு மறத்தில் ஏறி அமர்ந்து பாட்டுப் பாடும் போது, கழுகு வந்து வானத்தில் அவரைச் சுற்றி வட்டமிட்டுச் செல்லும். அப்படி நடந்தால் தான் அவர் அந்த மரத்தை விட்டு கீழே இறங்க முடியும். அறிவியல் ரீதியாக நீங்கள் இதற்கு பதில் சொல்லிவிட முடியாது.

ஆன்மீகம் என்பது கடவுள் வழிபாடு மட்டும் அல்ல. கடவுளை மறுப்பவர்கள் கூட ஒருவகை ஆன்மீகத் தன்மை கொண்ட சிந்தனை கொண்டவர்களாக இருக்க முடியும். திருமூலரின் உளன் எனின் உளன் இலன் எனின் இலன் என்கிற அறிவிப்பை அறிவியல் ரீதியாக நாம் எப்படி புரிந்து கொள்வது. கடவுள் உண்டு என்பவர்களுக்கு கடவுள் உண்டுதான். கடவுள் இல்லை என்பவர்களுக்கு கடவுள் இல்லை தான்.
ஆசையை அறுமின் ஆசையை அறுமின் ஈசனோடாயினும் ஆசையை அறுமின் என்பதையும் நாம் ஆழ்ந்து புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. நீங்கள் கடவுள் நம்பிக்க உள்ளவர் என்றால் கடைசியில் அந்த கடவுளின் மீதான நம்பிக்கையை, பற்றுதலை கைவிட வேண்டிய நிலையில் இருக்கிறீர்கள். இதுதான் ஜென்னிலும் சொல்லப்படுகிறது. புத்தர் சிலையை எரித்து குளிர் காய்கிறவர் ஒரு விதத்தில் முதிர்ந்த ஆன்மீகவாதி. இன்னொரு விதத்தில் அவர் நாத்திகவாதி. தேடல் எல்லோருக்குமே இருக்கிறது. சிலர் அறிவியலோடு திருப்திப் பட்டுக் கொள்கிறார்கள். சிலருக்கு அது போதுமானதாக இல்லை. சிலர் அறிவியல் பக்கமே செல்லாமல் நேராக மீ மெய்மையை நோக்கி சென்றுவிடுகிறார்கள்.

தாய்லாந்து ஜப்பான் சீனா போன்ற நாடுகளில் உள்ள புத்த மடாலயங்களில் தியானம் செய்து கொண்டிருக்கும் மில்லியனர்களை நாம் பிசகானவர்களாக கணிக்க முடியாது. ஆன்மீக தேடலில் எந்த நிலையையும் அடைய முடியாவிட்டாலும் அதில் ஒரு ஆத்ம திருப்தி காண்பவர்கள். அந்த தேடலை ஒரு லௌகீக பாணியில் செய்பவர்கள் அதைக் கொண்டு மந்திரவாதிகள் படத்தில் வருவதைப் போல உலகையே ஆட்டுவிக்க நினைப்பவர்கள் என எல்லோருக்குமே அவரவர்களுக்கான பெருமதி உண்டு. துறவு மூலலே ஒருவன் தேடுதலுக்கு தகுதி உடையவனாகிறான். தேடுதல் நடக்கிறதோ இல்லையோ ஒருவன் துறவு என்கிற நிலைக்கு வந்துவிட்டான் என்றாலேயே அவன் நம்மை அல்லது தன்னைக் கடந்து செல்வதற்கு தயாரிப்பு உள்ளவனாகிவிடுகிறான். அத்தகையவர்களின் மீதுள்ள ஆர்வமே இம்மாதிரியான கதைகளுக்கான விதை.

உங்கள் கதைகளுக்குள் குழந்தைப் பாத்திரங்கள் மிகக் குறைவாகத் தான் இருக்கிறது. சில கதைகளில் வரும் குழந்தைகளும் கூட பெற்றோர்களின் உறவு சிக்கலில் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக, கைவிடப்பட்டவர்களாக இருக்கிறார். அதை குறித்து சொல்ல முடியுமா?

குழந்தைகள் பெற்றவர்களின் கருத்துகளை, சந்தோஷங்களை பிரச்னைகளை அப்படியே பிரதிபலிப்பவர்கள். பெற்றவர்கள் சிக்கல் நிறைந்தவர்களாக இருக்கும்போது பிள்ளைகளும் அப்படியே ஆகிவிடுகிறார்கள். அப்படியான பிரச்னைகளை நானும் பால்யத்தில் சந்தித்திருக்கிறேன். பெற்றவர்களுக்கிடையே கடும் சண்டை நடக்கும்போது, பிள்ளைகளின் நிலை என்னவாய் இருக்கும் யோசித்துப் பாருங்கள். அந்த வயதிலேயே அவர்கள் அவ்வளவு அச்சத்தையும் மன உளைச்சலையும் சந்தித்து விடுகிறார்கள். குழந்தைகளுக்கு அப்படி நேரக் கூடாது என்பதே என் எண்ணம். இந்தப் பின்னனியில் தான் நான் குழந்தைகளை கதைகளுக்குள் கொண்டு வருகிறேன்.

இந்த கேள்வியிலிருந்து இன்னொரு கேள்வியும்தோன்றுகிறது.. பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் கதைகள் எழுதி, அதற்கென ஒரு வலைதளம் உருக்கி வெளியிட்டீர்கள். அது எந்த நிலையில் இருக்கிறது. குழந்தைகள் கதை எழுத வேண்டும் என்ற ஆர்வம் எப்படி உண்டானது

சிறுவர் கதைகள் என்கிற என்னுடைய முகநூல் பக்கத்தில் அவ்வப்போதாக பதினைந்து கதைகள் வரை பதிவு செய்தேன். கடந்த சில ஆண்டுகளாக அதில் கதைகளை பதிவேற்றவில்லை.
சிறுவர் கதைகள் மூலமாகத்தான் நான் உருவாகி வந்தேன். இப்போது சிறுவர்களுக்கான கதை சொல்லும் பாட்டிகள் இல்லை என்பதால் அவர்களுக்கான அந்த வெளி இல்லாமல் போய்விடக் கூடாது என்ற எண்ணத்தில் நான் அந்தப் பக்கத்தை உருவாக்கினேன்.

ஆனால் இப்போது அப்படி இல்லை. சிறுவர்கள் கதை கேட்கும், கதை படிக்கும் தளத்தில் இருந்து விசுவல் மீடியாவுக்கு அதாவது வீடியோவாக எதையும் பார்க்கும் மனநிலைக்கு மாறிவிட்டார்கள். நாம் விழுந்து விழுந்து படித்த காமிக்ஸ் புத்தகங்கள் இப்போது அவர்களை எந்த வகையிலும் கவர்வதில்லை. அதில் ஒரு பக்கத்தைப் படிக்கும் அளவுக்கு கூட அவர்களின் மன அமைப்பு இல்லை. ஆனால் டிவியில் சிறுவர் சேனல்களை அவர்கள் நாள் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கவும் தயாராய் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் சிறுவர் கதைகள் எழுதிக் கொண்டிருப்பது சரிதானா என்கிற குழப்பத்தால் நான் சில ஆண்டுகளாக அதில் கதைகள் எதுவும் பதிவேற்றவில்லை. ஆனால், அப்படியான கதைகள் எழுதுவதில் எனக்கு எப்போதும் ஆர்வம் உண்டு.

அறிவியல் புனை கதைகள் எழுதுவதிலும் உங்களுக்கு இருக்கும் ஆர்வத்தை அறிய முடிகிறது. இந்த வகைமையிலும் சில கதைகளை எழுதியிருக்கிறீ்ர்கள். அறிவியல் புனைக்கதை எழுத்தாளர்களில் உங்களுக்கு பிடித்தவர்கள் யார்?

நான் இயற்பியலைப் படிக்கவில்லை என்றாலும் இயற்பியல் விஷயங்கள் மீது எனக்கு எப்படியோ ஆர்வமும் நாட்டமும் ஏற்பட்டுவிட்டது. குவாண்டம் தியரி, ஐன்ஸ்டீன் தியரி என கொஞ்ச நாள் அவற்றைப் புரிந்து கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தேன். அதற்காக சிக்கலான கணித தியரிகளைக் கூட கற்றுக் கொள்ள வேண்டும் என நினைத்திருந்தேன். ஒரு கட்டத்தில் எனக்கும் அறிவியலுக்கும் உள்ள உறவு வெறும் அபத்தமாக தோன்றிவிட்டதால் அவற்றையெல்லாம் நிறுத்திவிட்டேன். நம் உலகம் அறிவியலைப் பின்பற்றிதான் சென்று கொண்டிருக்கிறது. தமிழில் அறிவியல் சிறுகதைகளுக்கு சொல்லிக் கொள்ளும்படியான இடம் இல்லாவிட்டாலும் உலக அளவில் அவ்வகை கதைகளுக்கு ஒரு வரலாறும் வளர்ச்சியும் இருக்கிறது. எனக்கு அறிவியல் கதைகள் பற்றிய சிந்தனையும் சுஜதாவிடம் இருந்துதான் கிடைத்தது. ஆனால், ரஷ்ய மொழிபெயர்ப்பு அறிவியல் சிறுகதைகளான பாறைச் சூறாவளித் துறைமுகம் படித்தபின் அறிவியல் கதைகள் பற்றிய என் கண்ணோட்டம் மாறிவிட்டது.

பகற்கனவுகளின் நடனம் என்ற கவிதை தொகுப்பு வெளியிட்டியிருக்கிறீர்கள். முகநூலில் அவ்வப்போது கவிதைகள் எழுதி வருகிறீர்கள். கவிதைக்கான மனநிலையும் புனைக்கதைக்கான மனநிலையும் வேவ்வேறானது. இதை எப்படி எதிர்கொள்கிறீர்கள்.

குமுதத்திலிருந்து விகடனுக்கு நகரும்போதே கவிதை பற்றிய ஓர்மையும் உண்டாகிவிட்டது. விகடனில் ஒரு பக்க அளவில் வெளியான கவிதைகளை பைண்டிங் செய்யும் அளவுக்கு சேகரித்து வைத்திருந்தேன். அப்போது நான் படித்த எஸ். வைத்தீஸ்வரன், தாமிரா, ரமேஷ் வைத்யா போன்றவர்களின் கவிதைகள் ஏற்படுத்திய பறத்தல் உணர்வு இன்றும் எனக்கு நினைவிருக்கிறது.

அந்த பறத்தல் உணர்வை சிறுகதைகள் தரமுடியாது. சிறுகதைகள் மெய்ம்மை என்றால் கவிதைகள் மீ மெய்மை சிறுகதைகளுக்காக இதழ்களை தேடித் தேடி வாங்கும்போதே அவற்றில் உள்ள கவிதைகளையும் கவிஞர்களையும் நான் கவனித்துக் கொண்டே இருந்தேன். ஒரு கட்டத்தில் கவிதை எழுதாமல் இருக்க முடியாது என, எழுத ஆரம்பித்துவிட்டேன்.

என்னுடைய கவிதைகள் வனம், புது எழுத்து, உயிர் எழுத்து, காலச்சுவடு போன்ற இதழ்களில் வரத் துவங்கியதும், கவிதைத் தொகுப்பு போட வேண்டும் என்ற உத்வேகம் ஏற்பட்டது. புது எழுத்து மனோன்மணி மூலமாக அது சாத்தியமாகியது. போகப் போக கவிதைகளில் என்னுடைய சுய துக்கங்களை சொல்வது எனக்கு தத்துவ சிந்தனைகள் என்று ஏதேனும் இருந்தால் அதை சொல்ல முயற்சிப்பது என ஆரம்பித்துவிட்டேன். இனி கட்டாயம் அதைப் போன்றவற்றை செய்யாமல் தான் கவிதை எழுத வேண்டும் என இருக்கிறேன். பார்ப்போம்.

தேநீர் கடை நடத்துவது என்பது அதிகாலைத் தொடங்கி இரவு வரை தொடர்ச்சியாக வேலை செய்து கொண்டே இருக்க வேண்டியத் தொழில். அதிலும் நீங்கள் டீ மாஸ்டர், பலகாரம் போடுபவர், கல்லாவில் காசு வாங்குபவர் என்று ஒற்றை ஆளாக பல வேலைகளைப் பார்ப்பதை அறிவேன். இந்த கடும் உடலுழைப்பிற்கும், அசதிக்கும் மத்தியில் எழுதுவதற்கும் வாசிப்பதிற்குமான நேரத்தை எப்படி திட்டமிட்டுக் கொள்கிறீர்கள்?

நீ இன்று வாழும் வாழ்க்கைக்கு முழுக்க முழுக்க நீயேதான் காரணம் என தம்மபதத்தில் சொல்லப்பட்டுள்ளதன் அர்த்தத்தை நான் இப்போதுதான் புரிந்து கொள்கிறேன். எனவே இந்த வாழ்க்கை என்னுடைய அறிவின் அளவாலும், மனதின் நிலையாலும் எனக்கு கிடைத்தது என்றே நினைக்கிறேன். தேநீர் கடை நடத்துபவனாக இருப்பதில் உள்ள அசூயை, தாழ்வுணர்வு போன்றவற்றை இப்போது கடந்துவிட்டவனாகவே என்னை நினைத்துக் கொள்கிறேன். அப்படி நம்ப முடியாது ஒருவேளை நான் முற்றிலும் இன்னும் மீளாதவனாகக் கூட இருக்கலாம்.

உங்கள் கேள்விக்கு வருகிறேன். கடையில் வேலையில் கவனமாக இருந்தாலும், மனதில் மனிதர்களின் அல்லது கற்பனைப் பாத்திரங்களின் பேச்சுகள் செயல்பாடுகள் உணர்வுகள் என இலக்கின்றி ஓடிக்கொண்டே இருக்கும். அதுதான் கதை உருவாவதற்கு முன்னால் நடக்கும் செயல்பாடு. அதில் எதாவது ஒன்று சட்டென திரள ஆரம்பிக்கும். அதைப் பிடித்துக் கொள்வேன். பின் அது மளமளவென வளர ஆரம்பித்துவிடும். இரவு பதினோரு மணிக்கு வீட்டுக்குப் போனாலும் உட்கார்ந்து கதையை டைப் செய்ய ஆரம்பித்துவிடுவேன். தீர்மானமான கதையாய் இருந்தால் தூக்கம் வராது. டைப் செய்து கொண்டே இருப்பேன். பிறகு நேரத்தைப் பார்த்து என்னை நானே அதிலிருந்து கட்டாயமாக விடுவித்துக் கொண்டு படுக்கப் போய்விடுவேன். இதனால், ஒரு சில கதைகளின் போக்கு மாறிக் கூட இருக்கிறது. எப்படியோ அந்த வாரத்துக்குள் அல்லது இரண்டு வாரத்துக்குள் அந்தக் கதையை எழுதி முடித்துவிடுவேன்.
பின் ஒருவாரம் பத்து நாட்கள் கழித்து எடிட் செய்ய உட்காருவேன். அப்போது எந்த சமரசமும் இல்லாமல் எடிட் மட்டுமே செய்து கொண்டிருப்பேன். அதில் அது ஒரு கதையாக தேறாவிட்டால் கைவிட்டுவிடுவேன். நம்பிக்கை தரும் விதமாக இருந்தால் இரண்டு முறை மூன்று முறை திருத்தங்களை மேற்கொண்டு கதையை இறுதி வடிவத்துக்கு கொண்டு வருவேன்.

உங்களுக்கு கிடைத்திருக்கும் விருது, நீங்கள் மதிப்பு மிக்கதாக உணரும் பாராட்டுகள், விமர்சனங்கள் பற்றி சொல்லுங்கள்.

சொல்லிக் கொள்ளும்படியாக இதுவரை எந்த விருதும் வாங்கவில்லை. என்னுடைய நகரப்பாடகன் தொகுப்பு குறித்து, எழுத்தாளர் நண்பர் மு. குலசேகரன் ஒரு விமர்சன உரையை தமிழ் இந்துவில் எழுதி இருக்கிறார். அது தவிர குறிப்பிடும்படியாக விரிவான விமர்சனங்கள் எதுவும் என்னுடைய புத்தகங்கள் குறித்து இதுவரை யாரும் எழுதவில்லை.

இரண்டாயிரத்திற்குப் பின் தமிழ் சிறுகதைகள், எழுத்தாளர்கள் எனப் பல விமர்சகர்கள் ஆய்ந்து எழுதிய பல கட்டுரைகளில் என்னுடைய பெயர் கூட இடம் பெற்றதில்லை. சமீபத்தில், மோகனரங்கன், சுனில் கிருஷ்ணன், கே.ஜே. அசோக்குமார் ஆகியோர் எழுதிய கட்டுரைகளில் தான் என் பெயர் இடம்பெற்றிருக்கிறது.
எமுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஒரு முறை பட்டியலிட்டுச் சொன்ன எதிர்பார்க்க வைக்கும் பத்து எழுத்தாளர்கள் பட்டியலில் என் பெயரையும் குறிப்பிட்டிருந்தார்.

மதிப்பு மிக்கதாக கருதும் பாராட்டு அல்லது நிகழ்வு என்றால், பூமியெங்கும் பூரணியின் நிழல் தொகுப்பில் உள்ள வெளிறிய அந்திமாலை கதை, கலை இலக்கிய மேடை அமைப்பாளரான விசாகனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. பிடித்துவிட்டது என்பதைவிட ஒரு தாக்கத்தை உண்டாக்கிவிட்டது என்றே சொல்லலாம். அதற்காகவே அந்தப் புத்தகத்துக்கு சேலத்தில் ஒரு விமர்சனக் கூட்டம் வைத்தார். கலை இலக்கிய மேடையின் விருது ஒன்றையும் வழங்கினார். அந்த கதையை குறும்படமாக இயக்குவதற்கான முயற்சியிலும் இறங்கினார்.

பின், அந்தப் புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் போவதாக என்னிடம் அனுமதி கேட்டார். நான் ஏதோ வேகத்தில் கேட்கிறார். ஆனால் நடக்காது என்று நினைத்து, சரி என்றேன்.
ஆனால் திடீரென்று ஒருநாள் புத்தகம் தயாராகிவிட்டதாகச் சொன்னார். தற்போது நல்லி திசையெட்டும் விருது வாங்கியுள்ள இல வின்சென்ட் அந்த கதைகளை மொழிபெயர்த்திருந்தார். வெளிறிய அந்திமாலை கதையின் ஆங்கில தலைப்பான, பேல் ட்வ்லைட் (pale twlight) என்ற பெயரிலேயே அந்தப் புத்தகம் வந்தது. அதற்கான வெளியீட்டு விழாவை மதுரையில் வைத்திருந்தார்.

அதில் கவிஞர் சமயவேல் மற்றும் ஆங்கிலப் பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று எப்போதேனும் சோர்ந்து போயிருக்கிறீர்களா? அந்த மாதிரியான மனநிலையைக் கடந்து எழுதும் உற்சாகத்தை எப்படி ஏற்படுத்திக் கொள்கிறீர்கள்?

எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று ஏக்கத்திலும் மன உளைச்சலிலும் உழழ்வது ஒரு மனநோய். அந்த நோய் முன்பு என்னையும் பீடித்திருந்தது. மேலும் இது ஏறக்குறைய எல்லோருக்குமே இருப்பதால், மனநோய் என்ற வார்த்தையை உபயோகிக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். அது ஒரு மன அமைப்பு.

அங்கீகாரம் என்பது சக மனிதர்கள் நமக்கு வழங்குவதல்ல. அது நமக்கு காலம் வழங்கும் ஒரு கொடை. சரியான ஒரு நபரை காலம் எப்போதுமே வஞ்சிக்காது அல்லது காலத்தின் முன் நின்று கொண்டிருப்பவனுக்கு அங்கீகாரம் நிராகரிப்பு எல்லாமே கொடை தான்.

எழுதுவதற்கான மனநிலையை எப்படிப் பெறுகிறேன் என்றால் நான் எப்போதும் எழுதுவதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பதில்லை. என் வாழ்க்கை முறை சிந்தனையை சார்ந்ததல்ல. உடலைச் சார்ந்தது என்பதால், ஒரு மாதம் இரண்டு மாதம் ஆறு மாதம் போல எழுதாமல் இடைவெளி ஏற்படும்போது, ஏக்கமும் மனச்சோர்வும் மெல்ல என்னைச் சூழும். அப்போது இதிலிருந்து மீள கட்டாயம் எதையாவது எழுதியே ஆக வேண்டும் என, என் மனதுக்கு வலியுறுத்திவிடுவேன். அதற்குப் பிறகு மனமும் பதட்டமடைந்து அடுத்தபடைப்பு குறித்து சிந்திக்க ஆரம்பித்துவிடும். இதில் பெரும்பாலும் ஒரு கதை உருவாகிவிடும் அதிலும் உருவாகவில்லை என்றால் வாழ்க்கையே பாலைவனம் போல சூனியமாக இருப்பதைப் போன்ற ஒரு வெறுமை உணர்வுக்குள் நான் திரும்பத் திரும்ப விழுந்து கொண்டிருப்பேன். அப்போது அநேகமாக ஒரு கதை உருவாகிவிடும். மீண்டும் என் உலகம் நம்பிக்கையும் குளிர்மையும் மிக்கதாய் ஆகிவிடும்.

சொற்சுனை என்ற அமைப்பில் நீங்கள் இருக்கிறீர்கள். ஒரு எழுத்தாளனாக உங்கள் படைப்புச் செயல்பாடுகளுக்கு சொற்சுனை அமைப்பின் விவாதங்கள் ஏதேனும் தாக்கத்தை உண்டு பண்ணியிருக்கிறதா?

நீங்களும் நானும் அதில் இருப்பதால் சொற்சுனை அமைப்பைப் பற்றி கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அது அவ்வளவு பெரிய அமைப்பெல்லாம் இல்லை என்பதை வாசகர்களுக்கு முதலிலேயே தெரிவித்துவிடுவோம். நண்பர்கள் மது விருந்துக்கு கூடுவதைப் போல நாம் அங்கு கூடுகிறோம். மதுவைப் போல இலக்கியத்தைக் கையாள்கிறோம். அந்த கிரக்கம் நமக்கு அவ்வப்போது தேவையாய் இருக்கிறது. ஒரு கதையின் பல முகங்களை பல கூறுகளை நம்மால் அங்கே கண்டடைய முடிகிறது. எழுதுவதற்கு உந்து சக்தியாக இருப்பதோடு, படைப்பை கூர்மையாக கவனிப்பதற்கான திறன் சொற்சுனை மூலம் கூடியிருப்பதை கண்கூடாக அறிந்திருக்கிறேன்.
உதாரணமாக, சம்பத்தின் இடைவெளி நாவல் மீதான பிம்பம் அங்கே தான் கலைந்து போனது. அந்த நாவலுக்கு அவ்வளவு பெரிய இடம் தேவையில்லை என்பதை நாம் சொற்சுனை விவாதத்தில் தான் கண்டு கொண்டோம்.

உங்கள் எழுத்து வாழ்க்கையில் எதிர்காலத் திட்டம் ஏதேனும் இருக்கிறதா?

திட்டமிடுவது, கனவு காண்பது அதற்காக உழைப்பது என்பதெல்லாம் இளைஞர்கள் செயல்படும் முறை. நான் என் இளமைக்காலத்தைக் கடந்துவிட்டேன். நிகழ் கணம் மட்டுமே நிதர்சனம் என்ற புரிதலுக்கு வந்துவிட்டேன்.

மிகச் சமீபத்தில் தான் நான் என் எதிர்காலம் பற்றிய நம்பிக்கைகளை இழந்தேன். வீடு கட்டுவது பற்றி எனக்கொரு சின்ன கனவு இருந்தது. அது கை நழுவிப் போனபின், என் எதிர்காலத் திட்டங்கள் என நான் நினைத்து வைத்திருந்த விஷயங்கள் எல்லாம் மாயக்காட்சிகள் போல மறைந்துவிட்டன.

எதிர்காலத்தில் நான் இன்னும் சில நல்ல கதைகளை எழுதலாம். நான் நாவல் எழுத வேண்டும் என்பதை வலியுறுத்தாத நண்பர்களே இல்லை. ஆனால் என்னவோ ஒன்று என்னை அதிலிருந்து தள்ளியே வைத்திருக்கிறது. காலம் அனுமதித்தால் நாவல் எழுதலாம் அல்லது எழுதுவதையே முற்றிலும் நிறுத்திவிட்டு வெறும் ஒரு உயிரியாக என்னை சுருக்கிக் கொள்ளலாம்.

இலக்கியம் தாண்டி வேறு என்ன விஷயங்களில் உங்களுக்கு ஈடுபாடு உள்ளது?

இலக்கியம் தாண்டிய என்றால், எனக்கு துறவு, தேடுதல்களில் ஆர்வம் உண்டு. சித்தர் யோக ஞான சபை என்ற அமைப்பின் சத்சங்கத்திற்கு பத்தாண்டுகள் போல தவறாமல் சென்று கொண்டிருந்தேன். அதன் குரு ராம சுந்தரம் உருவ வழிபாட்டிற்கு எதிரான கருத்துகளை தீவிரமாக பேசிக் கொண்டிருப்பார். அதனால், அது வெளிப்பார்வைக்கு ஒரு ஆன்மீக சங்கம் போல தெரிந்தாலும், உள்ளே வேறு மாதிரி இருக்கும். பெரியாரையே கூட, அவர் காசியில் இருந்தபோது ஞானம் பெற்றவர் என்றும் அதனாலேயே அவரால் உருவ வழிபாட்டு முறைகளை அவ்வளவு தீவிரமாக எதிர்க்க முடிந்தது என்றும் அவர் சொல்வார்.
பின் அது போன்ற அமைப்பில் இருப்பவர்களின் செயல்பாடுகளில் இருக்கும் லௌகீக முறைகள் அல்லது அதி நம்பிக்கைகள் அல்லது அதி கனவுகள் ஆசைகள் என்னை அங்கிருந்து விலக வைத்தது. இப்போது மீண்டும் அந்த ஆர்வம் தலை தூக்கி இருக்கிறது. வாழ்க்கை செல்லும் நிலையற்ற நம்பிக்கையற்ற திசையின் காரணமாக ஒருவேளை அது ஏற்பட்டிருக்கலாம்.

நீங்கள் முன்பு இலக்கியத்தில் உங்கள் எதிர்கால திட்டம் என்ன என்று கேட்டிருந்தீர்கள். இலக்கியம் இல்லாமல் பொதுவாக எதிர்கால திட்டம் என்ன என்றால், தாய்லாந்தில் உள்ள புத்த மடலாயங்களையும் அதன் பிக்குகளையும் யு டியூபில் பார்க்கும் போது, நாமும் அப்படிப் போய் இருந்து தியானத்தின் மூலம் கரைந்து காணாமல் போய்விடலாம் என்று தோன்றுகிறது. இதை வேண்டுமானால் எதிர்காலத் திட்டம் என்பதை விட எதிர்காலக் கனவு என்று சொல்லலாம்

உங்கள் குடும்பத்தைப் பற்றி சொல்லுங்கள். அவர்கள் உங்கள் படைப்புச் செயல்பாடுகளை எவ்வாறு உணர்கிறார்கள்?

குடும்பத்தைப் பற்றிச் சொல்லுங்கள் என்ற கேள்வியின் முப்பரிமாணத்திறுகுள் செல்லாமல் ஒரு தகவலுக்காக என்பதாக மேலோட்டமாக இதைக் கடந்து விடுகிறேன்.

என் மனைவி கவிதா எங்களுடையது ஏற்படுத்தப்பட்ட திருமணம். எங்களுக்கு வாசிகா, ரேவா சாம்பவி என இரண்டு மகள்கள், மகிழ் வண்ணன் என ஒரு மகன் ஆக, மூன்று வாரிசுகள்.
வாசிகா கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் முடித்துவிட்டு தற்போதைக்கு பள்ளி ஆசிரியராக வேலை பார்க்கிறார். ரேவா கிரியேட்டிவ் லிட்டரேச்சர் என்று பாரதியார் பல்கலையில் இணைந்துள்ள கோவை குமரகுரு கல்லூரி அறிமுகப்படுத்திய புதிய பட்ட வகுப்பில் இரண்டாம் ஆண்டு படிக்கிறாள். மகன் இப்போது ஆறாவது படிக்கிறான்.

என்னுடன் பிறந்த தம்பி மகேஷ் உடன் அம்மா தனலட்சுமி வசிக்கிறார். அப்பா இருபது ஆண்டுகளுக்கு முன்பே காலமாகிவிட்டார். அவர் பெயர் கண்ணன். அப்பாவின் காலத்தில் கூலித் தொழிலாளிகளின் குடும்பமாகத்தான் எங்கள் குடும்பம் இருந்தது. அம்மாவின் ஆளுமையால் நாங்கள் அடுத்த பொருளாதார நிலைக்கு நகர்ந்தோம்.

என்னுடைய கதைகளை கவிதா வாசிப்பார். சில கதைகளைப் பற்றி என்னுடன் உரையாட முயற்சிப்பார். என்னுடைய பிள்ளைகள் வாசிகாவுக்கு வாசிப்பு பழக்கத்தை என்னால் ஏற்படுத்த முடியவில்லை. ரேவாவும் பிளஸ் டூ வரை புத்தகம் எதுவும் படிக்காதவராகத்தான் இருந்தார். ஆனால் இந்தப் பட்ட வகுப்பில் அவள் சேர்ந்தது ஒரு மேஜிக் போல நடந்துவிட்டது. மற்றபடி ஒரு எழுத்தாளனாக நான் அவளை இதற்காக கட்டாயப் படுத்தவெல்லாம் இல்லை. சு வேணுகோபால் தான் அவளுடைய துறைத் தலைவர் ஒரு எழுத்தாளர் குழுவே அவளுக்கு பாடம் நடத்திக் கொண்டிருக்கிறது. இப்போது அவள் ஆர்வமுடன் புத்தகங்களைப் படித்துக் கொண்டிருக்கிறாள்.

அம்மா என்ன எழுதினாய் என்றெல்லாம் கேட்கமாட்டார். நான் இப்படி எழுதிக் கொண்டிருப்பதன் காரணமாக வாழ்க்கையையே நாசமாக்கிக் கொண்டேன் என்பது அவர் முடிவு. அவர் சில சமயங்களில் என்னுடைய கதைகளைப் படிப்பார். பின் அவருடைய அதி மேதாவித் தனத்தைக் கொண்டு எனக்கு சில புத்திமதிகளை சொல்ல முயற்சிப்பார்.

கவிதா நான் எழுதுவதையோ படிப்பதையோ எப்போதுமே குறை சொல்லியது இல்லை. குறையாக நினைத்தது கூட இல்லை. ஒரு பெருமை கூட அவருக்கு உண்டு என நினைக்கிறேன். நான் ஒரு இலக்கிய நிகழ்வுக்குப் போக கடையை லீவ் விட வேண்டும் என்று சொன்னால் அவர் அதை ஆட்சேபிக்கவே மாட்டார் என்பது எனக்கு ஒரு ஆசீர்வாதம்தான்.

சிவபிரசாத்

பள்ளி ஆசிரியராக பணிபுரியும் இவர் சேலத்தில் வசிக்கிறார். இவருடைய சிறுகதைகளும் விமர்சனங்களும் தமிழின் முக்கிய சிறுபத்திரிக்கைகளில் வெளிவந்துள்ளன. மறைந்த எழுத்தாளர் நஞ்சுண்டனின் கட்டுரைத் தொகுப்பான ‘காற்றின் நிழல்’ என்கிற புத்தகத்தின் தொகுப்பாசிரியர். சொற்சுனை இலக்கிய அமைப்பின் முக்கியமானவர்களில் இவரும் ஒருவர்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *