‘தேவவிரதன்’
கதைகள் படிக்கும் பழக்கம் வந்தவுடன் நான் எழுத்தாளர் அசோகமித்திரனின் கதைகளை படித்ததில்லை. பிரபல எழுத்தாளர்களே அந்த நாட்களில் என் கவனத்தை ஈர்த்தவர்கள்.
நான் அசோகமித்திரனின் கதைகளை படித்ததும் எனக்குத் தோன்றிய இரண்டு சமாச்சாரங்கள்; 1. படிப்பதற்கு எளிதான சுலபமான நடையில் ஏறத்தாழ அன்றாட வாழ்க்கையின் நிகழ்வுகளை பதிவு செய்திருப்பது. 2. அதை படித்தபிறகு அதன் உள் அர்த்தத்தையோ, கருவையோ புரிந்து கொள்வது…
எனக்கு அவர் கதைகளை மேலும் படிக்கத் தூண்டியது எதிர்பாராமல் நடந்த ஓர் நிகழ்வு. நான் பொறியியல் படித்து விட்டு வேலைக்கான முயற்சிகள் எடுத்துக் கொண்டிருந்த காலத்தில், என் வாழ்க்கையின் அர்த்தமற்ற ஒரு நாளை ‘ஒரு பகல் பொழுது’ என்ற சிறுகதையாக எழுதி ‘கணையாழி’ பத்திரிகைக்கு அனுப்பி வைத்தேன். கதைக்கு பதிலாக எனக்கு ஓர் தபாலட்டை வந்தது. . ஜ. தியாகராஜன் என்பவரின் கையெழுத்தில்… அதில் அவர் என் கதையைப் பாராட்டி விட்டு ‘எழுதுவதை விட்டு விடாதீர்கள்’ என்று அறிவுரை கூறி இருந்தார். அப்போதும் எனக்கு அவர்தான் கணையாழியின் ஆசிரியர் அசோகமித்திரன் என்று தெரியாது. அடுத்த மாத இதழில் என் ‘ஒரு பகல் பொழுது’ பிரசுரமானது. அதைத் தொடர்ந்து இன்னும் இரண்டு மூன்று கதைகள் கூட பின்னாட்களில் கணையாழியில் இடம் பெற்றன.
பல கதைகளையும், நாவல்களையும் படிக்கும் எவருக்குமே ஓர் சில சிறுகதைகள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து விடும். தொடர்ந்து பல எழுத்தாளர்களின் படித்து, ரசிக்க ஆரம்பித்த எனக்கு அந்நாட்களில், ஏன் இந்நாட்களில் கூட அசோகமித்திரனின் கதைகள், கட்டுரைகள், நாவல்கள் மிகுந்த வியப்பைத் தரும். எந்தவிதமான கவர்ச்சியோ, வணிக நோக்கோ, ஓர் வித்தியாசமான நடையோ நான் அவர் கதைகளில் கண்டதில்லை. கிட்டத்தட்ட உள்ளதை உள்ளபடி மேல்பூச்சுகளோ, ஒப்பனைகளோ இல்லாமல் ‘கடுமையாக’ என்ற சொல் ‘கடும் சொல்லாக’ கருதப்பட்டதால், ‘நேர்மை’யாக எடுத்துக்காட்டுவது போல் இருக்கும்,
அதன் பின் நான் அவரது பல கதைகள், கட்டுரைகள், திரைப்பட, குறிப்பாக ஜெமினி நிறுவனத்தைப் பற்றியும் திரு. எஸ்.எஸ். வாசன் அவர்களை பற்றியும் எழுதிய கட்டுரைகள் (சில கதை போலவே இருக்கும்) மிகவும் சுவாரஸ்யமானவை. அவரது எழுத்துக்களுடன் எனக்கு இருந்த தொடர்பையும், நான் படித்து ரசித்த விதத்தையும் இரண்டு முறை ஆங்கிலத்தில் ‘இந்து’ தினசரியின் ‘வெள்ளிக்கிழமை விமர்சனங்களில்’ பதிவு செய்திருக்கிறேன்.
எனது முதல் சிறுகதை தொகுப்பு ‘ஜ்வாலை’க்கு இரண்டு நன்றியுரைகளாக முகமன் வைத்தேன். ஒன்று நான் வேலை செய்த ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் திரு ஜி. தியாகராஜன் எனக்கு பிரத்தியேகமாக அனுப்பிய பாராட்டு கடிதத்தையும் (‘கல்கி சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற சிறுகதை ‘மாயமான் வேட்டை’) அசோகமித்திரனின் அந்த தபால் அட்டை வாழ்த்தையும்தான். ஓர் அசாதாரண ஒற்றுமை. இருவர் பெயரும் தியாகராஜன்.

இந்தக் கட்டுரையை நான் எழுத காரணம் குறிப்பாக நான் படித்த அவரது நான்கு சிறுகதைகள், ஒன்று, சற்று நெடுங்கதை என்று கூடக் கூறலாம். அந்த கதைகளின் உட்கருத்து படிப்பவரின் பொட்டில் அறைவது போன்றோ அல்லது மனதை பிசைவது போன்றொதொரு உணர்வை உண்டாக்கும்; எனக்கு உண்டாக்கியது. நான் முன்னால் சொன்னது போல் அவை இன்னும் என் மனதில் ஆழமாக நிற்கின்றது.
முதல் சிறுகதை ‘புலிக்கலைஞன்‘. இந்தக்கதையையும் அதன் எதிர்பாராத முடிவையும் படித்தபோது எனக்கு மனது நிஜமாகவே கனத்தது. ஒரு சிறுகதையின் முடிவில் எப்போதும் படிக்கும் வாசகன் எதிர்பாராத ஓர் திருப்பம் வேண்டும் என்பதுதான் நியதி. இந்தச் சிறுகதையில் அது மிக்க கூர்மையாகவும், ஆழமாகவும் இருக்கும். நான் அந்த கதையை இங்கு விவரிக்க போவதில்லை.
ஒரு திரைப்படம் தயாரிக்கும் அலுவலகத்திற்கு ஒரு சோம்பலான பிற்பகல் நேரத்தில் குறிப்பாக எந்த விதமான கவர்ச்சியோ, சாதுர்யமோ இல்லாத குள்ளமான, ஒருகாலத்தில் கட்டுமஸ்தான உடல் இருந்திருப்பவன், அவைகள் கிட்டத்தட்ட அழிய பெற்று சற்று பரிதாபமான தோற்றத்தில் இருக்கும் ஒருவன் வருகிறான்.
‘என் பெயர் டகர் பாயிண்ட் காதர்’, என்கிறான். அங்கிருப்பவர்களுக்கு அது புரியவில்லை. அவன் சொல்கிறான். ‘புலிங்க…புலி..புலி பாயிண்ட்’
‘ஓ…புலி பைட்டா..டைகர் பைட்..நீ புலியோட சண்டை போடுவியா?’
‘இல்ல. புலி வேஷம் போடுவேன். அதைத்தான் ‘டகர் பயிட்’னு சொல்வாங்க.’
‘நான் செய்யறது அசல் புலி மாதிரியே இருக்கும். இப்ப பாக்கறீங்களா?’ என்று கூறிவிட்டு அவர்கள் ஒப்புதல் இல்லாமலே ஓர் புலியின் உடல் அசைவுகளையும், சினத்தையும், பலத்தையும், வெறியையும் அங்கும் இங்கும் எவரையும் தீண்டாமல், எந்தப்பொருள் மீதும் படாமல் பாய்ந்து காட்டி திகைக்க வைப்பான். அறையில் இருக்கும் அத்தனை பெரும் திக்பிரமை பிடித்தது போல் அமர்ந்திருப்பார்கள். அதற்குப் பின் நடக்கும் நிகழ்வுகள்தான் திருப்பமும், திடுக்கிடவும் வைக்கும் முடிவும்.
அடுத்தது, ஓர் பிரபலமான கதைதான். தலைப்பு ‘எலி’. அன்றைய காலத்து கீழ் மட்டத்து அந்தணகுலத்து மாந்தர் வசிக்கும் ஓர் உதவாக்கரை வீட்டில் ஓர் சிறு எலி புகுந்து இரவெல்லாம் வீடு முழுக்க நர்த்தனமாடி, பாத்திரம் பண்டங்களைத் தள்ளி விட்டு, எண்ணெயை கொட்டி, பேப்பரை கடித்து அட்டகாசம் செய்யும். மனைவி கணவனிடம் அதை பிடிக்க ஓர் மசால் வடையை வாங்கி வந்து எலிக்கூண்டில் வைக்கச் சொல்லுவாள். அவரும் ஓர் நாள், அந்த எலியின் உபத்திரவம் தாங்காமல் இரவில் வெளியில் சென்று சாலையோரம் தள்ளு வண்டியில் பஜ்ஜி, வடை போட்டு விற்கும் ஒருவனிடம் கால் கடுக்க நின்று இரண்டு வடைகள் வாங்கி வருவார். ஒன்றை தான் தின்று விட்டு மாற்றொன்றை எலிப்பொறியில் மாட்டுவர்.
அன்றிரவு எதிர்பார்த்தது போல் எலியும் மாட்டும். அதை சாக்கடையில் விட்டு சாக அடிக்க மனம் இல்லாமல் ஓர் வெட்டவெளி மைதானத்தில் கொண்டு விட பார்ப்பார்; எங்காவது ஓடி தொலையட்டும் என்று. அவர் நினைத்தது நடக்காது.
பின் என்னதான் நடந்தது? இங்கும் எதிர்பாரத முடிவே.
படித்துப் பாருங்கள்; இந்த கதையும் மனதை அழுத்தும்.
மூன்றாவது சற்று நெடுங்கதை ‘மணல்’.
அந்தக்காலத்தில், நடுத்தர தாரித்ரிய துக்கத்தில் உழலும் ஓர் பெரிய அந்தண குடும்பம். மூன்று பெண்கள், இரண்டு ஆண்கள். கடைசி பெண் சரோஜினி கல்லூரியில் புகுமுக வகுப்பில் படித்துக்கொண்டிருப்பாள். முதல் பெண் பிறந்த வீடு கொண்டாட தன் குழந்தையோடு வந்திருப்பாள். அடுத்தவள் நிறை கர்ப்பிணி. பிரசவத்திற்கு வருவாள். இரண்டு பிள்ளைகளும் வேலைக்கு சென்றாலும் பொறுப்பற்றவர்கள். குடும்பத்தை பெருக்க தெரிந்த தந்தைக்கு வருமானத்தை பெருக்கிக் கொள்ளத் தெரியாதவர். இதில் பெரியவனுக்கு ஜாதகம், மற்றும் பெண் பார்க்கும் படலம் என்று போகும். சரோஜினி நன்றாகக் படித்தாலும் மேல் படிப்புக்கு கல்லூரி செல்ல முடியுமோ என்பது சந்தேகமே. இந்த களேபரத்தில் நடுவில் திடீரென குடும்பத்தலைவி இறந்து விடுவாள். உதவிக்கு வர எவரும் இல்லை. இரண்டாவது மகன் திடீரென்று ஒரு நாள் தான் திருமணம் செய்து கொண்டு விட்டதாக செய்தி சொல்லிவிட்டு தன் பொருள்களுடன் வெளியேறி விடுவான். கதை பெரும்பாலும் உரையாடல்கள் மூலமே விவரிக்கப்படும்.

சரோஜினி மட்டுமே வீட்டு வேலைகள் எல்லாவற்றிலும் சிக்கிக் கொள்வாள். அவள் விரும்பும் மேற்படிப்பு அவளுக்கு கிடைக்கக்கூடும் என்ற நம்பிக்கையின் இழை கூட வீட்டில் தென்படாது. ஒவ்வொருவரும் தங்கள் சௌகரியத்தை பற்றிய பேச்சிலேயே இருப்பார்கள்.
இந்த நிலையில், சரோஜினி திடுக்கிட வைக்கும் ஓர் முடிவை எடுப்பது போன்ற சூசனையுடன் கதை முடியும். நான் அதை சொல்லப்போவதில்லை.
இந்தக் கதையின் தலைப்பு ‘மணல்’ என்பது எதற்காக என்று சற்று விளங்கவில்லை. மணல் காற்றடித்தால் எந்த திசையிலும் செல்லும் என்பதாலா, இல்லை குப்பலாகக் கிடந்தாலும் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளாது என்பதைக் காட்டவா என்று ஊகிக்க முடியவில்லை. ஆனாலும், கதை மனதில் நின்று விட்டது.
வலைத்தளங்களில் அசோகமித்திரனின் பல கதைகள் கிடைக்கின்றன. நீங்களும் படியுங்கள். உங்களையும் சிந்திக்க வைக்கும் இந்த கதைகள். அதை விட என்ன சிறப்பு வேண்டும் ஓர் எழுத்தாளருக்கு?
இதைத் தவிர அவரின் மற்றொரு புத்தகத்தையும் நான் மிகவும் விரும்பி படித்தேன். அதன் தலைப்பு ‘ஒரு பார்வையில் சென்னை நகரம்’. மற்றொரு குறிப்பிடத்தக்க நூல் ‘எரியாத நினைவுகள்’. இதில் உள்ள முக்கியமான செய்தி மூதறிஞர் ராஜாஜி ‘ஒளவையார்’ படத்தை பற்றிய கருத்தை சொன்ன ஓர் கட்டுரை. படித்த பின் நினைத்து ரசிக்க வேண்டிய பல கட்டுரைகள் இந்த நூலின் உண்டு.
நான் சொல்லித்தான் நீங்கள் அசோகமித்திரனின் கதைகளை படிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. உயிரோட்டமுள்ள எழுத்துக்களுக்கு என்றுமே அழிவு கிடையாது என்பதை அவர் எழுத்துக்கள் படிப்பவர்களுக்கு உணர்த்தும். அதுவும் எந்தவிதமான ஒப்பனைகளும் இல்லாமல்.
நான் சொன்ன மூன்று கதைகளையாவது படித்து பாருங்கள்.
நான் சொல்வது உண்மை என்பதை நீங்களும் உணர்வீர்கள் என்பதுடன் அவரது மற்ற கதைகளையும், கட்டுரைகளையும் தேடிச்செல்வீர்கள் என்பதில் எனக்கு ஐயமில்லை.
000
என்னை இந்தக் கட்டுரையை எழுதத் தூண்டிய மற்றொரு விஷயம். மார்ச் 27 (2017), அசோகமித்திரனின் ‘நினைவு நாள்’.

