இன்றோடு பத்து நாட்களாயிற்று குமார் பள்ளிக்குச் சென்று!
மூன்று நாட்கள் காய்ச்சல்! தொடர்ந்து கடுமையான இருமல், தலைவலி, உடல்வலி, சோர்வு… பலமிழந்து படுக்கையிலேயே கழிந்தன பொழுதுகள்!
சொற்ப வருமானத்தில் வாழும் எளிய குடும்பம்! அவனது மருத்துவச் செலவுகளைச் சரிக்கட்ட அம்மா இன்னும் சற்று கூடுதலாக வேலை செய்யக் கூடும்!
குமார் எழுந்து மேசையின் இழுப்பறையில் இருந்து தன் கைபேசியை எடுத்தான். எந்தப் பழுதும் இல்லாத அந்த கைபேசியை குமாருக்கு அவனது தமிழ் ஆசிரியை போன மாதம் அளித்தார்.
நான்கு வருடங்களுக்கு முன் அவர்கள் வீட்டில் கைபேசி கிடையாது.
கொரோனா காலச் சூழலில் ஊழியர்களுடன் தொடர்பு கொள்வதற்காக அம்மா வேலை செய்யும் நிறுவனத்தில் ஒரு கைபேசியைத் தந்தனர். ஒரு பழைய கைபேசி தான் அது. ஸ்மார்ட் போன் எனப்படும் திறன் கைபேசி எதுவும் வீட்டில் அப்போது கிடையாது.
இப்போது தமிழ் ஆசிரியை தந்த திறன் கைபேசி அவன் கையில்!
குமார் தன் திறன்பேசியை ஆசையாகத் தடவிக் கொடுத்தான்.
முதன்முறையாக அவன் ஒரு திறன்பேசி பற்றி அறிந்ததும் கொரானா காலத்தில் தான்.
கிராமத்தில் இருந்த பாட்டி வீட்டில் தான் அப்போதெல்லாம் அவன் தங்கி இருந்தான். அவனது பள்ளியில் இணைய வழியில் வகுப்புகள் நடத்தப்படும் என்ற செய்தியை அம்மாவுக்குத் தெரிவித்து இருந்தார்கள்.
குமாரின் சின்ன மாமா, தனது படிப்புக்காக ஒரு திறன்பேசியை அப்போது தான் வாங்கியிருந்தார். குமாரும் அதிலே தனது பள்ளி நடத்தும் இணையவழி வகுப்புகளில் கல்வி கற்றான்.
ஆனால், கிராமத்தில், வீட்டுக்குள் இருந்தால், சரியான வலைச் சேவை கிடைக்காது. பரந்த நெல்வயல்களுக்கு நடுவே, ஏதாவது மரநிழலில் தான் குமாரின் மாமாவும் குமாரும் சென்று தங்கள் வகுப்புகளைக் கவனிப்பார்கள்.
பாட்டிக்கு ரொம்ப பெருமை அதில்! இந்த செலவுக்காக அவளது காதுத்தோடுகள் அடகுக்கடைக்குப் போனதை, தலையை வழிச்சு வாரி, தளர்வாக விட்டு, காதுகள் வரை இழுத்து விட்டும், இப்படி பெருமை பேசியும் தானே மூட முடியும்.
கைபேசியில் பாடங்கள் படித்தாலும், திறன்பேசி பற்றி வேறு ஏதும் தெரியாது குமாருக்கு! மாமா கறாராக உடனே வாங்கிக் கொண்டு விடுவார்.
இப்போது அப்படி அல்ல! ஒரு திறன்பேசியை எப்படி பயன்படுத்த வேண்டும் என நன்றாகவே தெரிந்து கொண்டு இருந்தான்.
இணைய இணைப்பும் திறன்பேசியும் கற்றலின் முக்கிய கருவிகளாக ஆகிவிட்டனவே!
வகுப்பில் முன்னணி மாணவனாகிய குமார், திறன்பேசி இல்லாத காரணத்தால், இணைய வழி தேடுதல் மற்றும் தகவல் சேகரிப்பு வீட்டுப்பாடங்களில் பின் தங்கி இருப்பதைப் பார்த்து, அவனது தமிழ் ஆசிரியை இந்த திறன் பேசியைத் தந்தார்.
“அம்மா, நா நல்லா படிக்கிறேன் சொல்லி என்னைப் பாராட்டி, என் தமிழ் ஆசிரியை எனக்கு பரிசு கொடுத்தாங்க!“ ஓடி வந்து அம்மாவைக் கட்டிக் கொண்டு சொன்னான் குமார்.
“ம்ம்… எல்லாப் பிள்ளைங்களும் இதால கெட்டழிஞ்சு போறதால்ல சொல்றாங்க“
“அப்படில்லாம் ஒண்ணும் இல்லம்மா “
“மாசாமாசம் காசு வேற கட்டணும் இல்ல“
“அம்மா, முதல்ல இதுக்கு ஒரு சிம் வாங்கணும்”
”அந்தம்மா கிட்டயே திருப்பிக் கொடுத்துடு கண்ணு! நீ தான் நல்லாப் படிக்கறயே! இது இல்லாமயே படி!”
“அம்மா, இன்னும் நல்லா படிப்பேன் அம்மா! எதுனா சந்தேகம் இருந்தா தேடிப் பாத்துக்கலாம்!“
“இதுனால பசங்க நாசமாப் போறாங்கன்னு கூடத் தான் சொல்றாங்க“
“இல்லம்மா! கல்விக்காக மட்டும் பயன்படுத்துணும் அப்படிங்கறதுல உறுதியா இருந்தா, எந்த ஆபத்தும் இல்லம்மா! எங்க ஆசிரியையே அது பத்தி எடுத்துச் சொல்லி இருக்காங்க!“
வட்டி வனஜாக்காவும் வீட்டுக்கு ஒரு திறன்பேசியாவது இருக்க வேண்டும் என்று அம்மாவிடம் அடித்துப் பேசினார். ம்ம்… சில பல மாதங்கள் வட்டி வருமே! பணம் கட்டாவிட்டால், சிம்மையும் செல்லையும் பிடுங்கிக் கொள்ள வேண்டியது தானே!
படிப்புக்கு மட்டுமே தன் திறன்பேசியை உபயோகித்தான் குமார்.
இப்போது காய்ச்சல் வந்தவுடன், கண்டிப்பாக அதைப் பார்க்கக் கூடாது என அம்மா சொல்லிவிட்டாள்.
சில பல நாட்களுக்குப் பின் அவன் கைகள் கைபேசியில்!
ஆசிரியையிடமிருந்து குறுஞ்செய்திகள் வந்து இருந்தன.
ஒரு பேச்சுப் போட்டிக்கு அவனது பெயர் தான் பரிந்துதுரைக்கப்பட்டு இருந்தது.
மாவட்ட அளவிலான போட்டி! இன்னும் ஐந்து நாட்கள் தான் இருக்கின்றன.
அதற்குள் அவனது உடல்நிலை தேற வாழ்த்துகளும், பேச்சுப் போட்டிக்குத் தயார் படுத்திக் கொள்ளுமாறும் தான் குறுஞ்செய்திகள்!
போட்டிக்காக ஏழு தலைப்புகள் கொடுக்கப்பட்டு இருந்தன. போட்டி துவங்குவதற்கு பத்து நிமிடங்கள் முன் தான் ஒவ்வொருவரும் எந்த தலைப்பில் பேச வேண்டும் என்பது குலுக்கல் முறையில் தரப்படும்.
குமாருக்கு வந்த தலைப்பு “திறன்பேசி : மாணாக்கர்களின் வரமா? சாபமா?”
சரியான உச்சரிப்பு, நயமான சொற்கள், மேற்கோள்கள், முகபாவம், உடல்மொழி, உண்மையான மனதின் குரலாக அமைந்த அவனது பேச்சு அனைவரையும் ஈர்த்தது.
“எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பிலும் சில ஆபத்துகள் இருக்கலாம். அத்தகைய ஆபத்தைத் தடுத்து, அழிசெயலையும் இழிசெயலையும் தவிர்ப்பதில் அல்லவோ இருக்கிறது நம் பகுத்தறிவு?“ என முழங்கினான்.
திறன்பேசிகளின் நற்கூறுகளையும், மாணவ சமுதாயம் இணையத்தையும் கைபேசி போன்ற தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்தியே ஆக வேண்டிய தருணத்தில் இருப்பதையும் சொல்லி,
“நம் மாணவர் கையில் இருப்பது அணுசக்தி போன்று! இதை ஆக்க சக்தியாக பயன்படுத்துவோம். மாணவர்களை ஆற்றுப்படுத்த வேண்டிய கடமை, ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மட்டுமல்ல இந்த சமுதாயத்துக்கும் உள்ளது.”
நடுவர்களும் சிறப்பு விருந்தினர்களும், ரசித்துக் கேட்டனர். காணொளி எடுப்பவர்கள் அதிகமாயினர்.
“கைபேசி நம் கையில் இருக்கிறது. நாம் அதைக் கையாள்கிறோம். அப்படித்தான் இருக்க வேண்டும். கைபேசியின் கட்டுப்பாட்டுக்கு நாம் சென்று… கைபேசியின் பிடியில் நாம் சிக்கி, அதன் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு அடிமையாகக்கூடாது. என் கையில் கைபேசி! உங்களுக்கும் அப்படித்தானே! வரமாகவே வைத்துக் கொள்வோம்!“
கைத்தட்டல்கள் விண்ணைப் பிளந்தன.
போட்டியில் முதல் பரிசு கிடைத்தது. ரொக்கப்பரிசும் உண்டு.
பள்ளிக்குப் பெருமை சேர்த்ததோடு அல்லாமல், வனஜாக்கா கடனையும் வட்டியுடன் தீர்க்க முடிந்தது.
++
கமலா முரளி
கமலா முரளி எனும் பெயரில் தமிழில் கதை, கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புப் படைப்புகளை எழுதி வரும்,இவரது இயற்பெயர் திருமதி.கே.வி.கமலசுந்தரம் ஆகும்.
ஆங்கில இலக்கியம் மற்றும் கல்வியியலில் முதுகலைப்பட்டம் பெற்ற கமலா முரளி,சென்னை, பெரம்பூர்,விவேகானந்தா பள்ளியில் சில வருடங்கள் பணியாற்றிய பின், கேந்திரிய வித்யாலயா சங்கதனில் ஆங்கில ஆசிரியையாகப் பணியேற்றார். சென்னை, மேக்ஸ்முல்லர்பவன், ஜெர்மன் கல்வியகம், கேந்திரிய வித்யாலயாவுடன் இணைந்து அளித்த திட்டத்தின் கீழ் ஜெர்மன் மொழி பயின்று, ஜெர்மனி, மேன்ஹெய்ம் நகரில் ஜெர்மன் பயின்றார்.கேந்திரிய வித்யாலயாவின் தேசிய அளவிலான “சீர்மிகு ஆசிரியர்” விருதினை 2009 ஆண்டு பெற்றார்.
கமலா முரளியின்,கதை கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழியாக்கப் படைப்புகள் தினசரி, மஞ்சரி, கலைமகள்,குவிகம் மின்னிதழ் நமது உரத்த சிந்தனை, மலர்வனம், பூஞ்சிட்டு சிறார் மின்னிதழ், இந்து தமிழ்திசையின் மாயாபஜார் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன. அவரது “மங்கை எனும் மந்திர தீபம்” (“எ லேடி வித் த மேஜிக் லேம்ப்”)எனும் மொழிபெயர்ப்பு நூல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இவர் எழுதிய, “இந்துமதி கல்யாணம் எப்போ ?” என்ற சிறுகதைத் தொகுப்பு சமீபத்தில் வெளிவந்துள்ளது.